பௌர்ணமி 61

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூர்ணிமாவும், ரோசினியும் எதிரெதிரே நின்றிருந்தனர்.

"பாலா சொல்றது சரிதான். இந்த கட்டை நான்தான் உடைக்கணும்.!" என்ற பூர்ணிமா அங்கிருந்த கதவை பிடித்து உலுக்கினாள். அவளுக்கு வெறி வெறியாக வந்தது‌. இந்த ரோசினியிடமெல்லாம் தோற்பதா என்று கோபம் வந்தது‌.

அவள் தப்பிக்க முயல்வதை கண்ட ரோசினி நெருங்கி வந்து பூர்ணிமாவின் கழுத்தை பற்றினாள். அவளை பிடித்து சுவற்றின் மீது வீசி எறிந்தாள்.

"இது எதுவும் பொய் கிடையாது பூர்ணி. உன் மனசு முழுசா உனக்கு சொந்தம். அதை இன்னொருத்தங்க ஆட்கொள்வது ரொம்ப அநியாயம். யாரோ ஒருத்தர் உன்னைய ஆட்டி வச்சா அதை சரின்னு ஏத்துப்பியா? நீ ஒரு சுயமான பெண் பூர்ணி. உன்னால எதுவும் முடியும். உன்னை சுத்தி இருக்கும் கட்டுகள் அனைத்தும் கற்பனை. அந்த கற்பனையை நீதான் உடைக்கணும்.. ப்ளீஸ் பூர்ணி. நீ எனக்கு வேணும். எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் சரி. நீ மட்டும்தான் எனக்கு வேணும். நம்பி கல்யாணம் செஞ்சேன். மனசாட்சியே இல்லாம பாதியில் விட்டுப் போகாதே.!" என்று பாலா பாதி சோகமும், பாதி கோபமுமாக சொன்னது பூர்ணிமாவின் காதுகளில் விழுந்தது.

சுவற்றில் மோதி கீழே விழுந்துக் கிடந்தவள் தடுமாறி எழுந்து அமர்ந்தாள்.

"உன்னையே உன்னால கன்ட்ரோல் பண்ண முடியல. அப்புறம் எப்படி என்னை கன்ட்ரோல் செய்வ? வா பூர்ணி.!"

"பாலா சொல்றதுதான் சரி. இது வெறும் கற்பனை. உன் கற்பனைக்குள்ள என்னை அடைச்சி வச்சிருக்க.." கோபத்தோடு சொல்லியபடி எழுந்த பூர்ணிமா எதிரில் இருந்தவளின் தோளில் கைகளை பதித்து தூர தள்ளினாள்.

"இது கற்பனை. ஆமா இது அத்தனையும் உன் கற்பனை. என் மனசு எனக்கு சொந்தம். அதுக்குள்ள என்னை அடைச்சி வைக்க உனக்கு ஏது உரிமை?" எனக் கேட்ட பூர்ணிமா அங்கிருந்த சிறை கதவின் தாழ்ப்பாளை கழட்டினாள். சிரமமாக இருந்தது.

"என்னை பார்த்தா பாவமா தெரியலையா பூரணி?" என கேட்டபடி எழுந்து வந்த ரோசினியை திரும்பிப் பார்த்து முறைத்த பூர்ணிமா "நான் அவ்வளவு இளிச்சவாய் கிடையாது.." என்றாள் கர்ஜித்தபடி. அவளின் பாவப்பட்ட முகத்திற்கு இவள் எப்போதுமே இறங்கி வருபவள் இல்லை‌. ரோசினியின் வயிற்றில் ஓங்கி உதைத்தாள் பூர்ணிமா. ரோசினி சுவற்றில் மோதி விழுந்தாள். ஆனால் மீண்டும் எழுந்து வந்தாள். பூர்ணிமா கோபத்தோடு ஓடி வந்து இவளை அறைந்தாள். அடித்தாள்‌. முகத்திலேயே ஓங்கி குத்தினாள். ஆனால் ரோசினி கொஞ்சம் கூட முகம் வாடவில்லை.

தனது மொத்த சக்தியையும் திரட்டி பூர்ணிமாவை அடித்தாள் ரோசினி. பூர்ணிமா அதே இடத்தில் தொப்பொன்று விழுந்தாள். மயங்கி போனாள். ரோசினி பேய் போல சிரித்தாள்.

"நானே பாவம்.." என்று முகம் மூடி அழுதாள். அவளின் இதயத்தில் வெறுமை தோன்றியது.

"ரோசினி.. நீ இன்னமும் இங்கேயே இருந்தா, நான் சொல்றதை கொஞ்சம் கேட்டுக்க‌.. நான் பூர்ணியைதான் லவ் பண்றேன். சாகும் வரை அவதான். ஒருத்தரோட அடையாளத்தை திருடி வாழ்றதுல என்ன பிரயோஜனம் இருக்கு? உன்னை நான் எவ்வளவு நேசிச்சேன். சொந்த தங்கை போல நினைச்சேன். இப்படி பண்ணிட்ட. இந்த பாவத்தை எங்கே கொண்டு போய் தொலைப்பேன் நான்? சாகும் வரை என்னை குற்ற உணர்ச்சியில் நிற்க வச்சிட்டியே.! உனக்கு நீயே காதல்ன்னு பேர் வச்சி என்னை துரோகியாக்கிட்ட.. உன்னை நான் நம்பியிருக்க கூடாது. உன்னை என் வீட்டுல கூட சேர்த்தியிருக்க கூடாதுன்னுதான் தோணுது. அந்த அளவுக்கு பண்ணிட்ட நீ. குழந்தை மேல இரக்கப்பட்டிருக்க கூடாது. உன்னை முதல் நாளே உன் குடும்பத்தோடு அனுப்பி தந்திருக்கணும். இப்படியெல்லாம் நான் நினைச்சிருக்கலாமேன்னு எனக்கு தோணுதுன்னா.. என் மனசை எந்த அளவுக்கு நீ வேக வச்சிருக்கன்னு நினைச்சி பாரு. ஐ ஹேட் யூ ரோசினி.." குரல் உடைந்துச் சொன்னான் பாலா.

ரோசினிக்கு அழுகையாக வந்தது. முகத்தை மூடிக் கொண்டு குலுங்கினாள். அவளுக்கே இவ்விசயம் மனதை உறுத்திக் கொண்டுதான் இருந்தது. காதலையும் தாண்டி பாதுகாப்பிற்காகதான் ஆரம்பத்தில் அவனோடு ஒண்டிக் கொண்டிருந்தாள். ஆனால் அதன்பிறகு 'இவ்வளவு தூரம் வந்து விட்டோம், இனி நமக்கு இதுதான் வாழ்க்கை.!' என்று முடிவெடுத்து விட்டாள். ஆனால் அவ்வளவு சீக்கிரம் ஒரு முடிவுக்கு வந்தது, இன்னும் இருந்த இரண்டு பேரின் வாழ்க்கையை சிதைக்கும் ஆரம்ப புள்ளி என்பதை கவனிக்காமல் போய் விட்டாள்.

அழுதுக் கொண்டிருந்தவள் தனக்குள் மாற்றம் ஒன்றை உணர்ந்தாள். தன்னை யாரோ கட்டி இழுப்பது போல உணர்ந்தவள் பயத்தில் குறுங்கினாள்.

பூசாரி மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தார். குறுங்கி படுத்திருந்தாலும் கூட அதற்கு மேலும் ரோசினியால் நிலைத்து நிற்க முடியவில்லை. அவளின் சக்திகள் அவளின் கட்டுப்பாட்டில் இல்லை. அங்கிருந்து மறைந்தாள். கண் மூடி திறந்தவள் தான் ஒரு சிலைக்குள் இருப்பதை உணர்ந்தாள். அந்த சிலையை விட்டு வெளியே வர முயன்றாள். ஆனால் முடியவில்லை.

"என்ன ஆச்சி?" என்று புலம்பியவள் தன் கண்களுக்கு முன்னால் பரவிக் கொண்டிருந்த புகை மறைந்த பின் பார்த்தாள். சாமியார் ஒருவர் அமர்ந்து மந்திரங்கள் சொல்லிக் கொண்டிருந்தார்.

"என்னை வெளியே விடுங்க.." அழுதாள்.

அவள் பேசுவது அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை. அந்த சிலை பயங்கரமா குலுங்கியது. பூசாரியின் பின்னால் நின்றிருந்த பூமாறன் குலுங்கும் சிலையை கலவரமாக பார்த்தான்.

"சாமி என்ன நடக்குது?" எனக் கேட்டார் மரிக்கொழுந்து.

"யாரும் பயப்படாதிங்க.. அந்த சக்தியைதான் இங்கே கொண்டு வந்து சிலையில் அடைச்சி வச்சிருக்கேன். உங்களோட பிரச்சனைகள் கொஞ்ச நேரத்துல தீர போகுது.." என்றார்.

பூமியையும் சேர்த்து அதிரச் செய்துக் கொண்டிருந்த சிலையை நிமிர்ந்துப் பார்த்த பூசாரி எழுந்து நின்றார். தட்டில் இருந்த மாலையை எடுத்து சிலையின் கழுத்தில் அணிவித்தார்.

"உன்னை இந்த சிலைக்குள்ள பிடிச்சி வைக்க காரணம் உன்னை ஒழிக்க இல்ல தாயே! உனக்குன்னு ஒரு இருப்பிடம் தரணும்தான்‌. நீ இங்கே காலம் முழுக்க இருக்கலாம். நீ இந்த குடும்பத்தை எந்த தொந்தரவும் செய்யாம இருந்தா நல்ல நாள் கெட்ட நாள்ல உனக்கு தேவையான மாலை மரியாதை கிடைக்கும். உன்னை அவங்களோட தெய்வமா ஏத்துக்கிட்டாங்க.. நீதான் இனி கருணை காட்டணும். இல்ல நான் ஒரு ராட்சசின்னு சொல்லி நீ கெட்டதையே பண்ணிட்டு இருந்தா உன் ஆன்மாவை அப்படியே அழிச்சிடுவேன் நான்.." என்றார்.

ரோசினிக்கு எதுவும் புரியவில்லை. தன்னை தெய்வமா ஏற்றுக் கொள்ள போகிறார்கள் என்பது அவளின் ஆன்மாவை சிலிர்க்க வைத்தது.

மௌனமாய் கவனித்தாள்.

சிலையின் அதிர்வு நின்றது கண்ட பூமாறன் கையெடுத்து கும்பிட்டான். சிலையின் கால் தொட்டு வணங்கினான்.

"நிஜமாவே என்னையும் தெய்வமா ஏத்துக்கிட்டாங்க‌‌.!" என்று மகிழ்ச்சியோடு ஆர்பரித்தது அவளின் உள்ளம்.

சிலைக்கு பொட்டு வைத்து தீபாராதனை காட்டி‍, ஆளுக்கொரு கும்பிடு போட்டு விட்டு அங்கிருந்து சென்றார்கள் அனைவரும்.

மருத்துவமனை கட்டிலில் கண் விழித்த பூர்ணிமாவின் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டான் பாலா‌.

"பூர்ணி.. ஐ மிஸ் யூ.. உன்னை நான் எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா?" எனக் கேட்டான் அவளின் கன்னம் வருடி.

பூர்ணிமா உதட்டை கடித்தபடி அவனை முறைத்தாள்.

"டேய், அடையாளம் கூட தெரியாம இரண்டு மாசம் குடும்பம் நடத்திட்டு இப்ப வந்து மிஸ் பண்ணதா சீன் போடுறியா? அப்படியே எங்கேயாவது ஓடி போயிடு. இல்லன்னா உன்னை கொன்னுடுவேன் நான்!" என்று சிரமத்தோடு சொன்னாள்.

அவளின் தலையை வருடி விட்ட பாலா "உனக்கு டயர்ட்டா இருக்கும். நீ தூங்கு பூர்ணி.." என்றான்.

பூர்ணிமா முறைத்தாள். விழிகளை அப்படியும் இப்படியுமாக உலாவ விட்டவன் தான் பதில் சொல்ல தெரியாமல் முறைப்பதை கண்டால் இன்னும் திட்டுவாளோ என்று கலங்கினான்.

அவன் அதிகம் கலங்கும் முன் அந்த அறைக்குள் வந்தார் பூசாரி.

பூர்ணிமாவின் நெற்றியில் திருநீறை இட்டு விட்டார். "உன்னை பிடிச்சவளை சிலையில் அடைச்சி வச்சிட்டேன். இனி உனக்கு ஒரு குறையும் வராது தாயி.." என்றார்.

பூர்ணிமா நிம்மதியோடு அவருக்கு வணக்கம் சொன்னாள்.

"இனி எந்த பிரச்சனையும் இல்லையா சாமி?" பாலா சந்தேகத்தோடு கேட்டான்.

"வராது தம்பி. என்னை நம்பு. அந்த பொண்ணோட ஆன்மா இனி எப்பவுமே வெளியே வராது.."

இப்போதுதான் பாலாவுக்கு நிம்மதியாக இருந்தது.

"ஒரு நிமிசம் வந்துடுறேன்.." என்று அங்கிருந்து கிளம்பினான் பாலா.

அவனின் தலை மறைந்ததும் பூர்ணிமா சாமியாரின் புறம் பார்த்தாள்.

"சாமி ஒரு உதவி வேணும்.." என்றாள்.

"சொல்லும்மா.!" என்றவர் அவளருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தார்.

"அவளை முழுசா ஒழிக்கணும். அதுக்கு என் செய்யணும்ன்னு சொல்லுங்க. என்ன வேணாலும் செய்ய தயார் நான்.!" என்றாள். அவளுக்குள் இருந்த கோபம் அவ்வளவு சீக்கிரத்தில் தீராது.

சாமியார் இவளை வியப்போடு பார்த்தார்.

"சிலையில் அடைச்சிட்டோம்மா.. இனி உனக்கு எந்த பிரச்சனையும் இல்ல.." என்றவரிடம் மறுப்பாக தலையசைத்தவள் "அவ அழியணும். எனக்கு அது மட்டும்தான் வேணும்.!" என்றாள் ஒரே முடிவாக.

சாமியார் சுற்றும் முற்றும் பார்த்தார். பிறகு இவளின் அருகே குனிந்தார்.

"ஒரு வழி இருக்கு. ஆனா அதுக்கு ஏகப்பட்ட பூஜைகள் செய்யணும். நீ பணம் செலவழிக்கணும். பொருளாகவும் தரணும். அந்த பூஜைக்கு பலியென உன் ரத்தம் சில சொட்டுகளையும் தரணும். ஆனா அந்த பூஜை தப்பா போயிட்டா ரத்த பலி தந்த உன்னை வந்து கொன்னுட்டுதான் அவ அழிவா‌. உனக்கு சம்மதமா?" எனக் கேட்டார்.

"சம்மதம் சாமி.. என் உயிரே போனாலும் சரி. அவளை அழிக்காம விட மாட்டேன்.!" என்று பற்களை அரைத்தாள்.

மித்ராவின் அறை கதவை தட்டி விட்டு உள்ளே சென்றான் பாலா‌. நிமிர்ந்தவள் என்னவென்பது போல பார்வையால் கேட்டாள்.

"ரொம்ப முக்கியமான விசயம்.!" என்றவனின் முகத்தில் ஓராயிரம் அழுத்தம் இருந்தது.

"என்ன?" என கேட்டவளின் அருகே வந்தவன் அவளின் கைகளை பற்றினான். அவளின் புறங்கையின் மீது தன் கண்களை பதித்தான்.

"இதை உன் காலா நினைச்சி கேட்கிறேன்.."

"ச்சீ.. கையை விடு.. என்ன கருமம்ன்னு சொல்லி தொலை.." என்றவள் தன் கையை பின்னுக்கு இழுத்துக் கொண்டாள். கைகளை உதறினாள்.

"ப்ளீஸ்‌‌.. எப்படியாவது அந்த குழந்தையை அபார்ட் பண்ணிடு.!" என்றவனை அதிர்ச்சியோடு பார்த்தவள் "உனக்கென்ன பைத்தியமா?" எனக் கேட்டாள் மித்ரா.

சுயநினைவு முழுதாய் மங்கி போய் விட்டதோ என்று பயமாக இருந்தது அவளுக்கு.

"பூர்ணிமா வயித்துல அந்த குழந்தை வேணாம்.."

முறைத்தாள் மித்ரா. "மனசாட்சி இருக்கா உனக்கு?"

"என் பிரச்சனை உனக்கு புரியாது மித்ரா. அந்த குழந்தை இருந்தா எங்க எதிர்காலமே முழுசா வீணா போயிடும். உனக்கு பூர்ணியை பத்தி தெரியாது. அவ என்னை திட்டியே கொன்னுடுவா. அபார்ட் பண்ணிட்டா கூட நாலு நாளையில் எல்லா விசயத்தையும் மறந்துடுவா.. ப்ளீஸ் என் கஷ்டத்தை புரிஞ்சிக்க.. அந்த குழந்தை பிறக்கவே கூடாது. அது என் சறுக்கலின் அடையாளம். துரோகத்தின் சின்னம். அந்த குழந்தை பிறந்தாலும் கூட அனாதை போலதான் ஆகும். நான் கை தீண்டவே மாட்டேன். நீதான் இந்த விசயத்துல எனக்கு ஹெல்ப் பண்ணணும்.!" என்றுக் கெஞ்சினான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN