பௌர்ணமி 63

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூர்ணிமா எறிந்த பிரேஸ்லெட்டை திரும்பிப் பார்த்த பாலா "டென்ஷன் ஆகாதே.!" என்றான் மென்மையாக.

"ம்ம்.!" என்றவளின் குரல் கொடூரமாக ஒலிப்பது போலிருந்தது பாலாவுக்கு. அவளின் கோபம் நியாயமானதே என்று புரிந்துக் கொண்டான்.

ரோசினி பயன்படுத்தியிருந்த பொருட்களையெல்லாம் திரட்டி வாசலில் கொட்டி நெருப்பு வைத்தாள் பூர்ணிமா. அப்போதும் கூட ஆத்திரம் தீரவே இல்லை.

"அவ மட்டும் உயிரோடு இருந்திருந்தா இந்த நெருப்புல அவளையும் போட்டு எரிச்சிருப்பேன்.!" என்றாள் பற்களை அரைத்தபடி.

"கோபம் போதும். வா நாம போகலாம்.." என்றழைத்தான் பாலா.

"தயவு செஞ்சி இந்த வீட்டை வித்துடு பாலா. இந்த வீடு இருக்கும் வரை நான் தோத்து போனது மட்டும்தான் ஞாபகம் வரும்." என்றாள்.

அவளின் தாடையை நிமிர்த்தி இதழில் மென்மையாக முத்தமிட்டவன் "வித்துடலாம் பூர்ணி. நீ சொன்னா செய்ய மாட்டேனா?" எனக் கேட்டான்.

பூர்ணிமாவின் முகத்திற்கு பழைய புன்னகை திரும்பி வந்தது‌. அவளின் கன்னங்களை வருடி விட்டவன் "நீ தோற்க்கல பூர்ணி.. எல்லாருக்கும் சறுக்கும். அதுக்காக நீ வருத்தப்படாதே.!" என்றான்‌.

"ம்.!" என்றாள். அவளின் தோளில் கைகளை பதித்தான்.

"ஐ லவ் யூ. அது எந்த அளவுக்குன்னு உனக்கே நல்லா தெரியும். மறந்துடாதே!" என்றான்.

அவனின் நெஞ்சில் சாய்ந்தாள். "நானும்தான்.!" என்றாள்.

இருவரும் பழைய வீட்டிற்கே திரும்பினர். அம்மா ஓடி வந்து பூர்ணிமாவை கட்டிக் கொண்டாள். பூர்ணிமாவும் ஆசை தீர அம்மாவை கட்டிக் கொண்டாள் ‌

"நான் நல்ல அம்மாவே இல்ல. சாரி பூரணி.." என்றாள்.

"அம்மா.." முல்லையை விலக்கி நிறுத்திய பூர்ணிமா "உங்க மேல தப்பும் இல்ல. நீங்க பீல் பண்ணாதிங்க.." என்று ஆறுதல் சொன்னாள்.

"என்னவோ போ. எனக்கு மனசுக்கு ஒத்துக்கவே இல்ல. உதயா ஒரே நாள்ல கண்டுபிடிச்சிட்டான். இரண்டு மாசமா கரெக்டா போன் வரல, நேர்ல வந்தாலும் சரியா முகம் கொடுத்து பேசல. உன் முகத்துல இருந்த செயல் வரை எல்லாமே மாறி போய் இருந்தது‌. ஆனா நான் கண்டுபிடிக்காம போயிட்டேன்.." என்றாள் முந்தானையால் மூக்கை துடைத்தபடி.

அம்மாவின் ஆதங்கம் புரிந்திருந்தவள் பெரியதாக எதுவும் சொல்லாமல் அம்மாவின் போக்கிலேயே விட்டாள்.

ராஜா மகளின் தலையை வருடி விட்டார். "அப்பா.." என்று நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். இந்த இரண்டு மாதங்களில் இவரோடு ஒரு வார்த்தை கூட பேசவில்லை இவள். தான் மாற்றாந்தந்தை என்று கூட எண்ணி விட்டார் ராஜா. விசயம் தெரிந்த பிறகுதான் அவருக்கு சற்று நிம்மதியாக இருந்தது.

"ம்மா.!" மைதிலியின் சத்தத்தில் திரும்பிப் பார்த்தாள். அவளை இப்போதுதான் தனது மாமனார் வீட்டிலிருந்து அழைத்துக் கொண்டு வந்திருந்தான் பூமாறன்.

பூமாறன் கீழிறக்கி விட்டதும் ஓடி வந்து பூர்ணிமாவின் கால்களை கட்டிக் கொண்டாள் மைதிலி.

பூர்ணிமாவுக்கு பெரிய கடல் அலை வந்து தன் மீது அடித்து மூழ்கடித்தது போல இருந்தது.

குழந்தையை தூக்கி கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டாள்.

குழந்தையின் சிரிப்பு கண்டு அங்கிருந்த அனைவருக்குமே மனம் லேசானது.

குழந்தை கூட பூர்ணிமாவின் மாற்றத்தை புரிந்துக் கொண்டு விட்டாள். ஆனால் தாங்கள் அறியாமல் போனோமே என்று அனைவருக்குமே வருத்தமாக இருந்தது.

அன்று அனைவருக்கும் விருந்து சமைத்தாள் அல்லி. பூர்ணிமா பேய் பிடித்தவளை போல ஒரு கட்டுக் கட்டினாள்.

"உடம்பு வந்துட போகுது பூர்ணி.!" என்று கிண்டலடித்தான் பூமாறன்.

"பரவால்ல மாமா.. வாயை கட்டிப் போட்டா பாவம் வந்துடும்.!" என்றவள் உணவை முடித்துக் கொண்டு எழுந்து நின்றாள். பெரிய ஏப்பமாக விட்டாள்.

அன்று இரவு பூர்ணிமாவை தன் நெஞ்சில் சாய்ந்திருந்த பாலா "உன்னை எவ்வளவு மிஸ் பண்ணியிருக்கேன்னு இன்னைக்குதான் எனக்கு புரியுது பூரணி.!" என்றான் ஏக்கத்தோடு.

பூர்ணிமா அவனின் கழுத்தில் முத்தமிட்டாள். "நான் உன்னை எவ்வளவு மிஸ் பண்ணேன்னு சொல்ல எந்த மொழியிலுமே வார்த்தைகள் கிடையாது.!" என்றாள்.

அடுத்த இரண்டாம் நாள் ரோசினியின் தாத்தாவையும் அப்பாவையும் பார்க்க அவர்களின் வீட்டிற்கு சென்றிருந்தாள் பூர்ணிமா. அவர்கள் தங்களின் மீது இருந்த வழக்கை வேறு ஒருவனின் மீது மாற்றி விட்டு விட்டார்கள். கண்ணால் பார்த்த சாட்சி இருவர் இருந்தும் கூட வழக்கு ஒன்றும் இல்லாமல் போய் விட்டது. ரோசினி கொஞ்சம் பிழைத்து மரண வாக்குமூலம் தந்திருந்தால் ஏதாவது உதவியிருக்குமோ என்னவோ.. இப்போது அனைவரும் சுதந்திரமாகதான் திரிந்தார்கள்.

பூர்ணிமாவை வேண்டா வெறுப்பாக வரவேற்று ஹாலில் அமர வைத்தார் ரோசினியின் தாத்தா.

"என்னம்மா இவ்வளவு தூரம்?" என்று விசாரித்தார்.

"சும்மாதான் தாத்தா. உங்களையெல்லாம் பார்த்து ரொம்ப நாளாச்சின்னு பார்க்க வந்தேன்.." என்றவளின் அருகே வந்து தோளில் கரம் பதித்தாள் பாட்டி.

"உன் உடம்புல ரோசினி ஆவி இருந்ததாமே உண்மையாவா?" என்று ஆச்சரியத்தோடு கேட்டாள்.

பூர்ணிமா உதடு கடித்தாள். "அப்படிதான் சொல்றாங்க பாட்டி. ஆனா எல்லாராலும் எல்லாத்தையும் நம்ப முடியாது இல்லையா?" இவள் சொன்னது அந்த பாட்டிக்கு சுத்தமாக புரியவில்லை. ரோசினியின் அம்மாவும் அப்பாவும் மாடி வராண்டாவிலிருந்து எட்டிப் பார்த்தனர். ஆனால் கீழே வரவில்லை. இவளோடு முகம் தந்து பேசவும் இல்லை.

வீட்டின் வேலைக்காரி மட்டும் தேனீர் கொண்டு வந்து நீட்டினாள். பூர்ணிமா வேண்டாமென்று தலையசைத்து விட்டு எழுந்தாள்.

"நான் வரேன் தாத்தா.." என்றுவிட்டு கிளம்பினான்.

"வெட்கமே இல்லாம இங்கே வரைக்கும் வந்திருக்கா. இவ மட்டும் அன்னைக்கு பாலாவை கல்யாணம் செஞ்சி வரலன்னா இன்னைக்கு என் பேத்தி அவனை கல்யாணம் செஞ்சி உயிரோடு வாழ்ந்திருப்பா.." என்று பாட்டி முணுமுணுத்தது பூர்ணிமாவின் காதுகளில் கேட்டது.

அப்படியும் கூட நடந்திருக்கலாம் என்றுதான் தோன்றியது. ஆனால் சுலப வழிகளிலேயே வாழ்க்கையை தேடாமல் கடினத்திலும் யார் எப்படி துணை வருவார் என்று காட்டுவதுதான் உண்மை வாழ்க்கை என்ற எண்ணம் தோன்றியது. அங்கிருந்து நடந்தாள்.

அவள் அந்த வீட்டின் கேட்டை தாண்டுகையில் நர்ஸ் இருவர் வீட்டுக்குள் சென்றனர்.

அந்த வாரத்தின் இறுதியில் பூசாரியை சந்தித்தாள் பூர்ணிமா. வீட்டிலிருந்த யாருக்கும் விசயத்தை சொல்லவில்லை. பூசாரி வேறு ஒரு வெள்ளை தாடி பூசாரியோடு அமர்ந்திருந்தார்.

"இவர் என் குரு. இவர்தான் அந்த பூஜையை செய்ய போறவரு.. அந்த பொண்ணோட சிலையை யாருக்கும் தெரியாம எடுத்துட்டு வந்துட்டேன். நீ தயார்ன்னா நாம பூஜையை ஆரம்பிக்கலாம்.." என்றார் பூசாரி.

பெரிய பூசாரி இவளின் முகத்தை நிமிர்ந்துப் பார்த்தார்.

"ரொம்ப சின்ன பொண்ணா இருக்க.. இன்னொரு முறை யோசிச்சிக்க.. இந்த பூசை இதுவரைக்கும் நாலே நாலு முறைதான் ஜெயிச்சிருக்கு. மீதி அத்தனை தடவையும் உயிர் பலிதான் வாங்கி இருக்கு. நீ வாழ வேண்டிய பொண்ணு. அதுவோ சாமிக்கு நிகரான சக்தியை கொண்டது. அதை அழிப்பது ஒரு எல்லை சாமியை கட்டிப் போடுறதை விடவும் கஷ்டமான விசயம்.." என்று எச்சரித்தார்.

"பரவால்ல சாமி. நான் செத்தாலும் பரவால்ல. நீங்க இந்த பூஜையை செய்ங்க.!" என்றவள் அக்னி குண்டத்தின் முன்பே கண்களை மூடியபடி அமர்ந்தாள்.

சின்ன பூசாரி சிலையை கொண்டு வந்து ஒரு கரி கோட்டுக்கு இடையில் நிறுத்தினார். பெரிய பூசாரி பூஜையை தொடங்கினார்.

அவர்கள் முணுமுணுத்த மந்திரங்கள் இவளுக்கு புரியவில்லை. நாட்டில் தடை செய்யப்பட்ட மந்திரங்கள் அவை. இவள் தரும் பணத்திற்காகவும், இவளின் பிடிவாதத்திற்காகவும் இந்த பூஜையை செய்துக் கொண்டிருந்தார்கள் பூசாரிகள்.

***

மித்ரா மருத்துவமனையில் இருந்த தனது இருக்கையில் அமர்ந்திருந்தாள். பாலா கைபேசியில் அழைத்தான்.

"குழந்தை எப்படி காணாம போச்சின்னு கண்டுபிடிச்சியா?" எனக் கேட்டான்.

"எனக்கும் தெரியல பாலா.. வெத்திலையில் மை தடவி பார்க்கும் மேஜிக் எனக்கு தெரியாது.." என்றாள் இவள் எரிச்சலோடு.

"சரி சரி.. ரொம்ப பண்ணாத. நான் போனை வைக்கிறேன்.!" என்று இணைப்பை துண்டித்துக் கொண்டான் அவன்.

போன வாரத்தில் தன்னோடு பூர்ணிமா பேசியது அவளின் நினைவுக்கு வந்தது‌.

"பாலா பைத்தியம். ஆனா அவனுக்காக இந்த குழந்தையை என்னால அழிக்க முடியாது. என்னோட உடம்புல உருவான உயிர் இது. இதை என்னால வெறுக்க முடியாது. நீங்கதான் இதுக்கு உதவி செய்யணும். இது இந்த குழந்தைன்னு தெரியாம நான் குழந்தையை பெத்தெடுக்க போறேன்.!" என்றாள் பூர்ணிமா.

"ஆனா எப்படி பூரணி?"

"அவனுக்கு என்ன கணக்கு தெரிய போகுது? இப்ப குழந்தை இல்லன்னு நீங்க ஒரு நாடகம் ஆடிடுங்க. நான் ஒரு மாசம் கழிச்சி பிரகனென்ட் ஆனதா சொல்லிக்கிறேன். டெலிவரி டைம்ல எட்டாம் மாசத்துல குழந்தை பிறந்துடுச்சின்னு சொல்லி சும்மா இரண்டு நாளைக்கு இன்குபேட்டர்ல பத்திரமா வச்சி பார்த்துக்கங்க. அப்புறம் தந்துடுங்க. பிரச்சனை முடிஞ்சது. செக்கப் எல்லாம் உங்ககிட்டதான் வருவோம். பிறகென்ன கவலை?"

மித்ராவுக்கு இப்போதுதான் உயிரே வந்தது. பூர்ணிமாவை பாய்ந்து அணைத்துக் கொண்டாள்.

"தேங்க்ஸ் பூரணி.. இதை நீ கடைசி வரை பாலாகிட்ட சொல்ல மாட்டியா?" சந்தேகமாக கேட்டாள்.

"ம்கூம். அவனுக்கு குற்ற உணர்வு போகாது. அவனை பீல் பண்ண வைக்க விரும்பல நான். உண்மை தெரிஞ்சா எதிர் காலத்துல அந்த குழந்தையை வெறுப்பான் அவன். எதுக்கு வம்பு? அவன் அப்படியே இருக்கட்டும். குழந்தை இப்படியே வளரட்டும்.."

மித்ராவுக்கு உண்மையிலேயே பூர்ணிமாவை ரொம்ப பிடித்து விட்டது.

***

பூஜையை கவனித்தபடி அமர்ந்திருந்தாள் பூர்ணிமா. இத்தோடு இரண்டு மணி நேரங்கள் கடந்து விட்டது. கருப்பு வட்டத்தின் இடையில் இருந்த சிலை அப்படியும் இப்படியுமாக ஆடிக் கொண்டிருந்தது.

பூஜையில் அமர்ந்திருந்த பூசாரிகளுக்கு தருவதற்காக எடுத்து வந்த பண கட்டுகள் பூர்ணிமாவின் அருகே இருந்த பேக்கில் இருந்தன. அவளுக்கு ஏதாவது ஆகி விட்டால் கூட பணம் அவர்களுக்கு போய் சேரும் என்ற எண்ணத்தில் இருந்தாள் அவள்.

"ரத்தத்தை இந்த அக்னியில் விடும்மா." என்றார் பெரிய பூசாரி.

பூர்ணிமா தனது கைப்பையிலிருந்து ஒரு சிறிய கண்ணாடி குடுவையை எடுத்தாள்‌. அதிலிருந்த ரத்தத்தை அக்னியில் விட்டாள்.

பூசாரிகள் பூஜையை தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தார்கள். அருகில் இருந்த சிலை இன்னும் பயங்கரமாக ஆடியது.

பத்து நிமிடங்கள் கடந்தது.

"பூஜையை நிறுத்திடுங்க சாமி.!" என்றாள்‌ பூர்ணிமா.

பூசாரிகள் இருவரும் இவளை அதிர்ச்சியோடு பார்த்தனர்.

"பைத்தியமாம்மா நீ? பூஜையை நிறுத்தினா நீ செத்துடுவ.." என்று எச்சரித்தார் பெரிய பூசாரி.

"பரவால்ல நிறுத்திடுங்க‌.." என்றவள் எழுந்து நின்றாள். கைகளை தலைக்கு மேல் தூக்கி நெட்டி முறித்தாள்.

பூசாரிகள் இருந்த இடத்தை விட்டு அசையாமல் இருந்தனர். அவர்களுக்கு பயமாக இருந்தது. இவளுக்கு மூளை குழம்பி விட்டதோ என்று கூட சந்தேகித்தனர்.

பூர்ணிமா சிலையின் அருகே சென்றாள். அங்கிருந்த கருப்பு கோட்டை கால்களால் தேய்த்தாள்.

சின்ன பூசாரி எழுந்து ஓடி வந்தார்.

"என்னம்மா பண்ற நீ? அவளோட கட்டை அவிழ்க்க பார்க்கற.. அப்புறம் நிஜமாவே நீ செத்துடுவ.. இரு நான் இப்பவே உன் புருசன்கிட்ட விசயத்தை சொல்றேன்.!" என்றார்.

ஆனால் அதற்குள் அந்த கறுப்பு கோட்டை பெருமளவு அழித்து விட்டாள் பூர்ணிமா. அந்த சிலையை தரையில் தள்ளி விட்டாள்.

பூசாரிகள் இருவரும் பயந்து ஆளுக்கொரு தூணுக்கருகே சென்று நின்றுக் கொண்டனர்.

"இதுக்குதான் சின்ன புள்ளைங்க சவகாசமே வேணாம்ன்னு சொன்னேன். கேட்டியா நீ?" என்று தன் சீடனை திட்டினார் பெரிய பூசாரி.

பூர்ணிமாவின் உடல் நூறாய் பிய்த்து சிதற போகிறது என்று எண்ணியிருந்தனர் பூசாரிகள் இருவரும்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN