பௌர்ணமி 64

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூசாரிகள் எதிர் பார்த்தது போல எதுவும் நடக்கவில்லை. பூர்ணிமா தனது கைப்பையிலிருந்த காசை எடுத்து பூசாரிகளிடம் நீட்டினாள்.

"உதவிக்கு நன்றி.." என்றாள்.

பூசாரிகள் இருவரும் திருதிருவென்று விழித்தனர்.

"ரத்தம் என்னோடது இல்ல.." என்று இவள் சொல்லவும் எதிரில் இருந்த இருவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.

"அம்மா.. என்ன காரியம் செஞ்ச? யாரை பலி தந்திருக்க? இது பாவம். அநியாயம்.. சம்பந்தமே இல்லாதவங்களை கொல்லுவது மனித செயலே இல்ல.." என்றார் பெரிய பூசாரி.

பூர்ணிமா தனது உள்ளங்கைகளை தட்டிக் கொண்டாள்.

"எல்லாம் சம்பந்தம் உள்ளவங்கதான். சனியன் பழி வாங்கறவங்களை பழி வாங்கிட்டு அப்படியே அழிஞ்சி போகட்டும்.." என்று திட்டியபடியே தனது பையை எடுத்துக் கொண்டாள்.

"நான் கிளம்பறேன் சாமி. தேங்க்ஸ்.." என்றவள் அங்கிருந்து கிளம்பினாள்.

சாமியார் இருவரும் அதிர்ச்சியின் பிடியிலேயே இருந்தனர் இன்னமும்.

பூர்ணிமா எதுவும் அறியாதது போல வீடு வந்தாள்‌. பாலாவும் மதிய உணவிற்காக வீடு வந்தான்‌. இருவரும் கொஞ்சியபடி உணவை உண்டு முடித்தனர்‌.

அவர்கள் இருவரும் சாப்பிட்ட கைகளை சுத்தம் செய்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் அந்த வீட்டிற்குள் ஓடி வந்து நின்றான் ஒரு சிறுவன்.

"மரிக்கொழுந்து தாத்தா‌.." என்று கத்தினான்.

சிறுவனின் குரலில் வீட்டின் தோட்டத்திலிருந்த மரிக்கொழுந்து ஓடிவந்தார்.

"என்னடா பையா?" என்றவரிடம் "உங்க சித்தப்பா வீட்டுல இழவாகிடுச்சி.." சிறுவன் சொன்னது கேட்டு பாலாவும் அதிர்ச்சியோடு எழுந்து நின்றான்.

"யார்டா.? யாருக்கு என்ன ஆச்சி?" செண்பகம் கேட்டாள்.

"அந்த தாத்தா, பாட்டி, அப்புறம் ரோசினி அக்காவோட அப்பா, அம்மா, பெரிய அண்ணன், சின்ன அண்ணன், ரோசினி அக்காவோட பெரிய மாமா, மாமா பையன்.." என்றவன் சொன்னது கேட்டு அதிர்ந்தனர் அனைவரும்.

"என்னடா உளறுற?" அதிர்ச்சியில் மரிக்கொழுந்துவுக்கு கால்கள் நடுங்கியது.

அதெப்படி அத்தனை பேரும் ஒரே நேரத்தில் இறந்திருப்பார்கள் என்று சந்தேகம் வந்தது அனைவருக்கும்.

"யாராவது அவங்க வீட்டு சாப்பாட்டுல விஷம் வச்சிட்டாங்களா?" பூமாறன் தன் சந்தேகத்தை கேட்டான்.

"தெரியல.. ஆனா எல்லோரும் ரத்தம் ரத்தமா வாந்தியெடுத்துதான் செத்திருக்காங்க.. விஷம் சாப்பிட்டாங்களான்னு கண்டுபிடிக்க ஹாஸ்பிட்டல் தூக்கி போயிருக்காங்க.." என்றான் அந்த சிறுவன்.

இங்கிருந்த அனைவரும் சின்ன தாத்தாவின் வீட்டிற்கு ஓடினர். பாலாவுக்கு அதிர்ச்சிதான். சட்டத்தையே ஏமாற்றியவர்கள் என்று அவர்கள் மீது கோபம்தான் அவனுக்கும். ஆனால் அத்தனை பேரும் ஒரே நாளில் இறப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை அவனால்.

பிணங்கள் போஸ்ட் மார்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டதால் இழவு வீட்டில் ஆட்கள் மட்டும் அழுதுக் கொண்டிருந்தார்கள். அந்த வீட்டில் எஞ்சி இருந்தது கோபுவின் குடும்பமும், ரோசினியின் சின்ன மாமா குடும்பமும் மட்டும்தான்.

பூர்ணிமாவுக்கு இப்போதுதான் மனதிற்கு சாந்தி கிடைத்தது போல் இருந்தது. இறந்தவர்களின் புகைப்படத்தை மன நிம்மதியோடு பார்த்தாள்.

'நீயே ஒரு சாத்தான்தான் பூரணி. உனக்கும் ரோசினிக்கும் நடுவுல ஒரு வித்தியாசமும் இல்ல..' என்று அவளின் மனசாட்சி சொன்னது‌.

'அதுதான் நல்லது. நான் நல்லவன்னு பேர் எடுத்து என்ன செய்ய போறேன்? அந்த பைத்தியக்காரியை அழிக்கணும். அதை விட முக்கியமா அந்த பைத்தியக்காரி என்னை பிடிக்க காரணமா இருந்தவங்களை அழிக்கணும்.. நான் செஞ்சது எனக்கு நல்லதுதான்.!' என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டாள்.

அன்று இவள் சின்ன தாத்தாவின் வீட்டிற்கு வந்த போதே நர்ஸ் இருவருக்கு பணம் தந்து விட்டுதான் வந்திருந்தாள்.

அருகில் உள்ள மருத்துவமனையிலிருந்து இலவச ரத்த பரிசோதனை செய்து தருவதாக சொல்லி குடும்பத்தில் இருந்து அனைவரின் ரத்தத்தையும் மாதிரி எடுத்துக் கொண்டனர். அதை அவர்கள் பூர்ணிமாவிடம் தர, அந்த ரத்தத்தில் தனக்கு தேவையானவர்களின் ரத்தத்தை மட்டும் எடுத்து ரோசினிக்கு காணிக்கையாக்கி விட்டிருந்தாள் இவள்.

பெரிய தாத்தாவின் வீட்டிலிருந்த அனைவரும் வந்திருந்தார்கள். அழுதார்கள். ஒப்பாரி வைத்தார்கள். இவர்களிலும் சிலரை தேர்ந்தெடுத்து ரத்த மாதிரி எடுத்திருக்கலாம் என்று தோன்றியது பூர்ணிமாவுக்கு.

'என்ன பூரணி.. இப்படி யோசிக்கற? நீ ஒன்னும் ஒரிஜினல் வில்லி கிடையாது. அவங்களை கொல்ல காரணம் ரோசினிக்கு நேர்ந்த கொடூர சாவு. ஆனா இவங்களை கொன்னா அது பழி வாங்கல் ஆகும். நீ என்ன பகையாளிகளையெல்லாம் கொல்லும் ராட்சசியா?' என்று அதிர்ச்சியோடு கேட்டாள்.

அடுத்த நாள் காலையில்தான் போஸ்ட்மார்ட்டம் முடிந்து பிணங்கள் அனைத்தும் வீடு வந்தன. வீடே ஒப்பாரி பாடியது. ஊரே சோகமாக இருந்தது.

போஸ்ட்மார்ட்டத்தில் உருப்படியாய் எந்த தகவலும் கிடைக்கவில்லை. அனைவரும் இதயம் வெடித்து இறந்திருக்கிறார்கள் என்ற செய்தியை மட்டும்தான் அறிய முடிந்தது.

அன்றைய நாளிலேயே அனைவரையும் அடக்கம் செய்தனர்.

பாலாவின் குடும்பத்தினர் வீடு திரும்பினர்.

"எப்படி செத்தாங்களோ?" என்று புலம்பினான் பாலா‌.

"நாம வச்சிருந்த சிலையை காணோம் அண்ணா.." பூமாறன் சிறு குரலில் சொன்னான். இது அந்த வீட்டிலிருந்தவர்களுக்கு இன்னும் அதிக அதிர்ச்சியை தந்தது.

"ஆனா எப்படி? சிலை எப்படி நடந்துப் போகும்?" பாலாவின் கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.

ரோசினிதான் அவர்களை கொன்று உள்ளாள் என்பதை அனைவராலும் ஓரளவு யூகிக்க முடிந்தது.

பூமாறன் பூர்ணிமாவை சந்தேகமாக பார்த்தான்.

"பூரணி, டூ யூ லவ் மீ?" என்றுக் கேட்டான்.

பாலாவும், பிரியாவும் அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தனர். இவன் என்ன குண்டை தூக்கிப் போட போகிறானோ என்று பயந்தனர்.

"லவ் பண்றேன் மாமா.. பிரெண்டா!" அவள் சொன்னதை கேட்ட பிறகுதான் அனைவருக்கும் உயிரே வந்தது. பூர்ணிமாவை அணைத்துக் கொண்டான் பூமாறன்.

"எங்கே மறுபடியும் ரோசினி வந்துட்டாளோன்னு நினைச்சிட்டேன்.!" என்று தன் பயத்தை சொன்னான்.

"இனி வர மாட்டா மாமா.. பயப்படாதிங்க.." அவனின் தோளில் தட்டி தந்தாள்.

நாட்கள் நகர்ந்தது. பாலாவும் பூமாறனும் சென்று ரோசினியின் சிலை பற்றி பூசாரியிடம் விசாரித்தனர்.

"எனக்கு எதுவும் தெரியல. ஒருவேளை அந்த ஆன்மாவுக்கு சாந்தி கிடைச்சிருந்தா அந்த சிலை மண்ணோடு மண்ணா போயிருக்கும்.!" என்றார்.

பூமாறனும் பாலாவும் சரியென்று தலையசைத்து விட்டு அங்கிருந்து கிளம்பினர்.

"அப்படியும் இருக்குமோ?" காரை ஓட்டியபடி கேட்டான் பாலா.

"ம். அவளோட குடும்பத்துல நிறைய பேர் செத்துட்டாங்க இல்லையா? அதனால ஆன்மா சாந்தி கிடைச்சிடுச்சோ என்னவோ?" என்றான்.

அனைவருமே அந்த முடிவுக்குதான் வந்திருந்தனர்.

தினசரி நாட்கள் பாலா பூர்ணிமாவின் காதலோடு சிறப்பாக சென்றுக் கொண்டிருந்தது.

பழைய பூரணியாக கிடைத்தது பாலாவுக்கு பெரிய மகிழ்ச்சியை தந்து விட்டது. இருவரும் சண்டை போட்டுக் கொள்ளும் முன் வாழ்ந்த அதே காதல் வாழ்க்கைக்குள் மீண்டும் நுழைந்து விட்டனர்.

இருவரும் சேர்ந்து ஸ்டெல்லா, உதயாவின் திருமணத்திற்கு சென்றனர். தோழியை இறுக்க அணைத்துக் கொண்டாள் பூர்ணிமா.

"அவளுக்கு நீ தந்த அறைதான் எனக்கு இதுவரை நீ தந்ததுலேயே பெஸ்ட் கிஃப்ட் ஸ்டெல்லா.." என்று தோழியை பாராட்டினாள் பூர்ணிமா.

"அது நீ இல்லன்னு தெரிஞ்சிருந்தா இன்னும் நாலு சேர்த்து விட்டிருப்பேன். மிஸ் ஆகிடுச்சி.." என்று வருந்தினாள் அவள்.

உதயா ஸ்டெல்லாவின் திருமணம் முடிந்து அனைத்து சடங்குகளும் முடியும் வரை கூடவே இருந்தனர் பாலாவும் பூர்ணிமாவும்.

நாட்கள் நகர்ந்தது.

பாலா அந்த சின்ன வீட்டை இடித்து விட்டான். தொழிற்சாலையை விரிவுப்படுத்த வேண்டி இருந்ததால் அந்த வீடு இருந்த இடத்தையும் சேர்த்து உபயோகித்துக் கொண்டு விட்டான். தனது குற்ற உணர்விலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளி வந்துக் கொண்டிருந்தான்.

'ஒருவேளை நாகேந்திரன் மாமாவும் இப்படிதான் பீல் பண்ணி இருப்பாரோ?' என்று கேட்டான்.

"அத்தை கொஞ்சம் பொறுமையா யோசிச்சி இருந்தா அவங்க குடும்பம் நல்லா இருந்திருக்கலாம். மாமா செஞ்சது தப்பு. அவர் செஞ்சது தப்புன்னு குழந்தைக்கு கூட தெரியும். ஆனா அவர் செஞ்சது தப்புன்னு அவர் புரிஞ்சிக்கும் முன்னாடி அத்தை செத்திருக்க கூடாது. அவரை பிரிஞ்சி வந்திருக்கணும். அவருக்கு நியாயமான தண்டனை தந்திருக்கணும்.." என்று சொல்லிக் கொண்டான்.

அந்த மாத கடைசியில் தான் கர்ப்பமாக இருப்பதாக பூர்ணிமா சொன்னாள். பாலாவுக்கு மகிழ்ச்சியில் தலை கால் புரியவில்லை. அவளை தூக்கி சுத்தினான்.

"விடு பாலா.." என்று கெஞ்சினாள் பூர்ணிமா.

"வா நாம ஹாஸ்பிட்டல் போய் செக் பண்ணலாம்.." அவளை இழுத்துக் கொண்டு புறப்பட்டான்.

மித்ரா கர்ப்பத்தை உறுதி செய்தாள். இவன் வானுக்கும் பூமிக்குமாக குதித்தான்.

வீட்டிற்கு செல்லும் வழியில் ஸ்வீட்ஸ் வாங்கினான். கொண்டு சென்று மைதிலியிடம் தந்தான்.

"உனக்கு தம்பி பாப்பா பிறக்க போறாங்க.." என்றான்.

வீட்டிலிருந்த அனைவருக்குமே மகிழ்ச்சி.

அதன் பிறகு பூர்ணிமாவை விழுந்து விழுந்து கவனித்தான் பாலா. அவள் கேட்டது அனைத்தையும் செய்தான். அவள் எவ்வளவு திட்டினாலும் அமைதியாக வாங்கிக் கொண்டான்.

முல்லை மாதம் மும்முறை மகளை பார்க்க வந்தாள். ராஜாவுக்கும் மகளை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தது.

பூர்ணிமா வாரம் ஒரு முறை தன் தாய் தந்தையர் கல்லறைக்கு சென்றாள். அவர்களை வணங்கினாள்.

"நீங்க இரண்டு பேரும் இருந்திருக்கலாம். உங்களை ரொம்ப மிஸ் பண்றேன்.!" என்று கண் கலங்கினாள்.

"சபலத்தை எப்படி கையாளணும்ன்னு அப்பா கத்துக்கிட்டு இருந்திருக்கலாம். அவர் அந்த செகண்ட் அந்த சபலத்தை கொன்னிருந்தா இன்னைக்கு நான் நிம்மதியாக இருந்திருப்பேன். ரோசினி என்னை பிடிச்சிருக்க மாட்டா.." என்று வருத்தத்தோடு நினைத்தாள்.

ஆயிரம் கோடி நாட்கள் வருந்தி என்ன புண்ணியம்? அந்த ஒற்றை நாள் தவறை அல்லவா தடுக்க வேண்டும்?

அதன் பிறகு வந்த நாட்கள் அனைத்தும் நிம்மதியின் பிடியில்தான் இருந்தது பூரணிக்கு.

ஏழாம் மாதம் வளைகாப்பு நடந்தது. ஆனால் அது எட்டாவது மாதம் என்று பூர்ணிமாவுக்கும், மித்ராவுக்கும் மட்டும்தான் தெரியும்.

பூரணியை பிறந்த வீடு அனுப்ப மாட்டேன் என்று மறுத்து விட்டான் பாலா. வேறு வழியில்லாமல் மாமனாரும் மாமியாரும் இங்கே வந்து தங்கிக் கொண்டனர்.

அனைவருமே பூர்ணிமாவை தாங்கினர். மைதிலி நன்றாக பேச கற்றுக் கொண்டு விட்டாள். எப்போதும் பூர்ணிமாவை வளைய வளைய வந்தாள்.

பிரியாவுக்கும் பூர்ணிமாவுக்கும் இடையில் சின்ன சின்ன மனதாங்கல்கள் வந்தது. ஆனாலும் இருவரின் நட்பும் சிறப்பாகதான் இருந்தது.

பாலா தினமும் இரவில் பல முறை எழுந்தான். ஒவ்வொரு முறையும் பூர்ணிமாவை முத்தமிட்டான்.

அன்றைய நாளிலும் அதே போல நடு இரவில் எழுந்தவன் பூர்ணிமாவுக்கு முத்தம் தந்து விட்டு வந்து ஜன்னல் வழியே வானம் பார்த்தான்.

நிலா வானில் தெரிந்தது. ஆனால் அன்று அமாவாசை என்று காலையிலேயே கோவில் ஒன்றுக்கு சென்று விட்டு வந்திருந்தனர் பூர்ணிமாவும் அவனும். முன்பு போல இந்த முறை பயம் ஏற்படவில்லை. தைரியமாக வானம் பார்த்தான்‌. பூரண நிலவை ரசித்தான். அது தன் இறந்த மாமனாரின் வேலை என்று அவனுக்குத் தெரியும். ஆவிகள் உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் ஆன்மா அவர் என்பதை அவனால் யூகித்துக் கொள்ள முடிந்தது. அப்போதும் கூட ரோசினியை நினைத்து வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை.

வானத்து நிலவுக்குள் இதயம் ஒன்று மெள்ள உருவாகியது. அதில் ஆற்று நீர் ஓடுவது போல பிம்பமும் தென்பட்டது. அந்த பிம்பத்தினுள் பாதியாய் மூழ்கியிருந்த நிலவும் தெரிந்தது.

தனக்குள் சிரித்தான். அவனின் வானில் நிலவாய் அவள். அவளின் இதயத்தில் பாலாறாக பொங்கி வழிந்தபடி அவன்.‌ அவனின் பாலாற்று பெரு வெள்ளத்தில் நிலவாய் மூழ்கிய அவள். விவரங்களை படிக்க முடிந்தது. மன நிம்மதியோடு ஜன்னலை விட்டு விலகி வந்தான்.

திரும்பி வந்து பூர்ணிமாவின் அருகே தலை சாய்த்தான். பூர்ணிமாவின் கரங்கள் இவன் நெஞ்சின் மீது விழுந்தது. அவளின் மேடிட்ட வயிற்றை ரசித்துக் கொண்டிருந்தான். வானில் அந்த நிலவும், பாலாறும் அப்படியேதான் இருந்தது.

முற்றும் நட்புக்களே..

கதை எப்படின்னு ஒரு வார்த்தை சொல்லுங்க. நாளையிலிருந்து சாபமடா நீ எனக்கு எனும் ஆன்டி ஹீரோ ஸ்டோரி அப்டேட் ஆகும்.

எம தூதனின் காதலி கதை தினமும் பிரதிலிபியில் அப்டேட் ஆகிட்டு இருக்கு. இங்கே தர முடியாததுக்கு சாரி. சிரமம் இல்லன்னா கதையை நீங்க பிரதிலிபியில் படிச்சிட்டு உங்க கருத்துகளை சொல்லுங்க.. கதையை முழுசா முடிச்சதும் லிங்க் (வாட்பேட்ல) தரேன்.

எங்கேயாவது மிஸ்டேக்ஸ், சொதப்பல்ஸ் இருந்தா தாராளமா சொல்லுங்க. நான் திருத்திக்கிறேன்.

நன்றிகளுடன் உங்கள் crazy writer.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN