அத்தியாயம் 15

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காலையில் கண்விழித்த சங்கவி தன் மீது இருந்த போர்வையை குழப்பமாக பார்த்தாள்‌. யார் தனக்கு இந்த போர்வையை கடன் தந்திருப்பார்கள் என்று யோசித்துப் பார்த்தாள். அவளுக்கு ஆதீரன் மீது சந்தேகம் வந்தது. ஆனால் அவனுக்குள் இந்த அளவிற்கு கூட இரக்கம் இருக்குமா என்று யோசித்தாள்.

போர்வையை ஒரு ஓரமாக மடித்து வைத்தவள் தனது அறையை விட்டு வெளியே வந்தாள். மாற்றுடையை எடுத்துச் சென்று குளித்து விட்டு திரும்பி வந்தாள். அவசர அவசரமாக சமையலறைக்குள் நுழைந்து பவளத்திற்கு உதவி செய்ய ஆரம்பித்தாள்.

அரை மணி நேரம் கடந்த பிறகு "நான் போய் முருங்கைக்கீரை பறிச்சிட்டு வரேன்.." என்று விட்டு வெளியே நடந்தாள் பவளம்.

பவளம் வெளியே செல்வதற்காகவே காத்திருந்தது போல சமையலறைக்குள் நுழைந்தான் வருண். இவனை கண்டதும் முகத்தை சுளித்தாள் சங்கவி. காலை பொழுதிலேயே தலைவலியோடு சுற்ற அவளுக்கு மனம் வரவில்லை.

"சங்கவி.!" என்றவன் அருகில் வந்து அவளின் கையைப் பற்றினான். வெடுக்கென்று தன் கையை பின்னுக்கு இழுத்துக் கொண்டாள் சங்கவி.

"என்ன வேணும் உங்களுக்கு?" என்றாள் தலைகுனிந்தபடி.

"தப்பா எடுத்துக்காதே. உன்கிட்ட கொஞ்சம் பேச வேண்டியது இருக்கு. இந்த வேலை எல்லாம் முடிஞ்ச பிறகு என் ரூம்க்கு கொஞ்சம் வரியா.?" என கேட்டான்.

திகிலோடு நிமிர்ந்தவள் "எதுக்கு?" என்றாள்.

அவள் முகத்தில் தெரிந்த அச்சம் கண்டு அவனுக்கு வியப்பாக இருந்தது.

"நான் தப்பானவன் இல்ல சங்கவி. இன்னும் சொல்லணும்னா ஆதீரனை விடவும் நான் நல்லவன்.."

அவனை நக்கலாக பார்த்தாள் சங்கவி.

"நிஜம்மா.. நான் உண்மையிலேயே நல்லவன்.." என்று தன் நெஞ்சின் மீது கை வைத்து சொன்னான் வருண்.

அவள் நேரடியாக பதில் சொல்லவில்லை. "எனக்கு வேலை இருக்கு.!" என்றவள் வாணாலியின் புறம் பார்வையை திருப்பினாள்.

"ப்ளீஸ் சங்கவி நான் உன்கிட்ட பேசியே ஆகணும். தயவுசெஞ்சு என்ன நம்பு.. உன் வேலைகளை முடிச்ச பிறகு என் ரூமுக்கு வா.." என்றான் கெஞ்சலாக.

அவனை விசித்திரமாக பார்த்தவள் பதில் சொல்லும் முன்பு அங்கு வந்து சேர்ந்தான் ஆதிரன். வரும் பொழுதே வருண் பேசியது அனைத்தையும் கேட்டுக் கொண்டுதான் வந்தான்.‌

ஆனாலும் தன் காதில் எதுவும் விழாதது போல அவளருகே வந்தான்.

"சங்கவி என் ரூம்க்கு கொஞ்சம் வா.." என்றவன் அவளின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே நடந்தான். வாணாலி பாத்திரத்தை பார்த்தவள் "குழம்பு தீஞ்சிடும்.." என்றாள் பதட்டமாக.

அவளை குழப்பமாக பார்த்தான் ஆதிரன்.

"நான் கிளறிவிடுறேன்.!" என்று குரல் தந்தான் வருண்.

அறைக்குள் வந்த பிறகு கதவை தாழிட்டான் ஆதிரன். அவனை தயக்கமாக பார்த்தபடியே இரண்டடி தள்ளி நின்றாள் சங்கவி.

"எ.. என்ன விசயம்?" பயத்தோடு கேட்டாள்.

அவளை அழைத்து வந்து இருக்கையில் அமர வைத்தான் ஆதீரன். அவளின் கையை பற்றியபடி அருகில் அமர்ந்தவன் "நல்லா ஞாபகம் படுத்திபாரு சங்கவி. உன் அக்கா வீட்டை விட்டு போகும் முன்னாடி உங்கிட்ட ஏதாவது சொன்னாளா.? தயவு செஞ்சி அன்னைக்கு நடந்ததை தெளிவா சொல்லு.." என்றான் கெஞ்சலாக.

எத்தனை முறைதான் இதற்கான பதில் சொல்லுவது என்று அவளுக்கு சலிப்பாக இருந்தது.

அன்று நடந்ததை மீண்டும் அவரிடம் விவரித்தாள். 'அக்கா காலையிலிருந்து யாருடனும் பேசவில்லை. டெய்லர் கடை செல்கிறேன் என்று கூறிச் சென்றவள் திரும்பி வரவில்லை.' சிறுபிள்ளை போல இந்த இரண்டு வாரங்களாக இதையேதான் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறாள் சங்கவி.

அவள் சொன்னதைக் கேட்டு அவனுக்கு புளிப்பாக இருந்தது. ஒரு தடயம் கூட உருப்படியாக கிடைக்கவில்லையே என்று வருத்தமுற்றவன் தலையை பிடித்தபடி தரை பார்த்து அமர்ந்தான். அவன் தேர்ந்தெடுத்த டிடெக்டிவ் நண்பனும் கூட உருப்படியாக எந்த தகவலையும் சொல்லவில்லை. குந்தவியை காணாமல் பைத்தியம் பிடித்து விடும் போல இருந்தது.

"நான் ஒரு சந்தேகம் கேட்கட்டா?" பயத்தோடு கேட்டாள் சங்கவி. என்ன விதமாக நிமிர்ந்து பார்த்தான் ஆதிரன்.

"எங்க அக்கா நிஜமாகவே உங்களை காதலிச்சாளா?"

முறைத்தான் அவன்.

"அக்கா ரொம்ப நல்லவ. யாருக்காவது வாக்கு தந்துட்டா அதை உயிரை கொடுத்தாவது காப்பாத்துவா. எனக்குத் தெரிஞ்சு அவ வாக்கு தவறிய ஒரே ஒரு விசயம் இந்த கல்யாணம் மட்டும்தான். உயிரே போனாலும் என் அக்காவை என்னால சந்தேகப்பட முடியாது. இதுல வேற ஏதோ காரணம் இருக்கு. ஒருவேளை நீங்க அவளை கட்டாயப்படுத்தி காதலிச்சு, கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிக்க நினைச்சிங்களா.. அதனாலதான் ஓடிப் போனாளா?"

விரக்தியோடு சிரித்தான் அவன்.

"சாட்சி சொல்ல வேண்டியவளே என்னை விட்டு ஓடிப் போயிட்டா.. நான் உனக்கு எப்படி நிரூபிப்பேன்?" என்று கேட்டான் கூரையை பார்த்த வண்ணம்.

அவனது வலி அவளுக்கும் புரிந்துதான் இருந்தது. ஆனால் தன் அக்காவை விடவும் இவன் முக்கியமானவன் அல்ல என்ற எண்ணமும் கூடவே இருந்தது.

"நான் போகட்டுமா?" என எழுந்து நின்றாள்.

யோசித்தவன் அவளைப் போகச் சொல்லி கைச் சைகை காட்டினான். கதவை நோக்கி நடந்தாள்.

தாழ்ப்பாளை திறக்க இருந்த நேரத்தில் "ஒரு நிமிஷம்.!" என்றபடி எழுந்து வந்தான்.

"அவன் வருண். நல்லவன்தான், அதுவும் என்னை விடவும்.. ஆனாலும் அவன் கூட தேவையில்லாம பேசாதே.!" என்று அடிக் குரலில் சொன்னான். அனது குரலில் பயமுறுத்தல் இருந்ததாகவே பட்டது அவளுக்கு.

அவளின் கைக்கு எட்டாத மேல் தாழ்ப்பாளை திறக்க உதவி செய்தான். அவன் செய்த உதவியால் அவளின் மீது முழுதாய் படர்ந்தது அவனது மேனி.

திகைத்து நின்றவள் என்ன செய்வதென்று புரியாமல் அவன் நகர்வதற்காக காத்திருந்தாள்.

அப்போதுதான் அவளுக்கு இன்னொரு விஷயம் நினைவிற்கு வந்தது.

"நான் என் அப்பாவை பார்க்க இன்னைக்கு போகணும்.." என்றாள்.

அவளின் கூந்தல் ஓரம் தன் நாசியை உலாவ விட்டவன் மூச்சை ஆழ்ந்து சுவாசித்தான். கண்களை மூடினான். குந்தவிக்கும் இவளுக்கும் இடையில் வித்தியாசம் இருந்தது. இவளை விட சற்று உயரமாக இருப்பாள் அவள். அவளின் வாசம் வேறு விதமாக இருக்கும். அவ்வளவாக நெருங்கியது இல்லைதான். ஆனாலும் கூட கோடி பேரை நிறுத்தினாலும் அவளின் வாசத்தை தனியாக கண்டுபிடித்துவிடுவான் ஆதிரன்.

இவளின் வாசத்தில் தன்னிலை மறந்தவன் மெள்ள விழிகளை மூடினான்.

தாழ்ப்பாளின் மேல் இருந்த அவனின் கரம் கீழே இறங்கியது. அவளின் தோளின் மீது வந்து பதிந்தது.

நடுங்கியது அவளுக்கு. கதைவோடு சேர்த்து சிறைபிடித்து வைத்திருந்தான். வெளியே செல்லவும் முடியவில்லை. உள்ளே நகரவும் முடியவில்லை. அவனிடம் பேசவும் தைரியமில்லை.

அவனின் கரம் அவளது தோள்பட்டையை விட்டு இன்னும் சற்று கீழே இறங்கியது. இரு கைகளிலும் சூரியனின் கதிர்கள் உரசுவதை போல உணர்ந்தாள் சங்கவி. அவன் தீண்டும் இடம் கொதிப்பாக இருந்தது. வலியாக இருந்தது. அவனை தூரப் பிடித்து தள்ள வேண்டும் போல இருந்தது.

ஆனால் அவன் அந்த நேரத்தில் குந்தவியை மறந்து விட்டான் என்பதுதான் உண்மை.

ஏதோ ஒரு புது உலகத்திற்குள் நுழைந்தது போல இருந்தது அவளின் அருகாமையில். அவளை மெள்ள தன் பக்கமாக திருப்பினான்.

அவனது கரங்கள் அவளின் இடுப்பின் இருபுறமும் வந்து பதிந்தது.

எதிரில் இருப்பவள் யார் என்பதை கூட மறந்து விட்டான். ஆனால் அவளை ஆட்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவனுக்குள் உருவானது. அவளை இன்னும் கொஞ்சமாக நெருங்கினான். ஆனால் அவளால்தான் நூல் அளவு இடைவெளி கூட பின்னால் நகர முடியவில்லை. கதவில் ஒட்டி கொண்டிருந்தவள் நடுங்கும் கைகளை மறைக்கக் கூட வழிதெரியாமல் புடவையை இறுகப் பற்றினாள்.

அவளுக்கு பேசுவதற்கு நாக்கு எழ மறுத்தது. அதிர்ச்சியின் பிடியில் நின்றிருந்தவளை கவனிக்கும் நிலையில் அவன் இல்லை. அவளின் செவி மடலில் முகம் பதித்தான். அவனின் பற்களுக்கு இடையே செவி மாட்டிக் கொண்டதும் பயத்தில் இறுக்கமாக கண்களை மூடினாள் சங்கவி. அவனை தூர தள்ள சொல்லி கெஞ்சியது உள்ளம். ஆனால் பயத்தினால் கைகால்கள் வேலை செய்ய மறுத்தது.

அவளின் செவிகளின் மீது இருந்த அவனது இதழ்களும் பற்களும் கொஞ்சமாக கீழே இறங்கிக் கொண்டே வந்தன. நடுங்கிக்கொண்டிருந்த அவளின் கழுத்தில் சட்டென்று முகம் புதைத்தான்.

'அக்கா' என்று அரற்றியது அவளின் சிந்தனை.

தன்னை மறந்து இருந்தவனின் கரங்கள் அவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டன. அவளுக்கு நிற்க கூட தெம்பில்லை. அவனின் அணைப்பினால்தான் நிலைபெற்று நின்றுக் கொண்டிருந்தாள். கழுத்தில் புதைந்த அவனது முகம் ஐந்து நிமிடங்கள் ஆகியும் விலகவில்லை. அவன் உதடு பதித்த இடம் முழுக்க செங்காந்தள் பூவாக சிவந்து கொண்டிருந்தது.

அவன் என்னவோ இன்பத்தை சுகித்துக் கொண்டுதான் இருந்தான். ஆனால் அவளுக்குதான் ஒரு உணர்வும் இருக்கவில்லை. நெருப்பின் மீது நின்று கொண்டிருக்கிறோமோ இல்லை நீருக்கடியில் மூச்சு முட்ட இறந்து கொண்டிருக்கிறோமோ என்று அவளுக்கே தெரியவில்லை. அவளின் பவித்திரத்தின் ஒரே ஒரு சாட்சியாக விழிகளிலிருந்து கண்ணீர் மட்டும் கொட்டிக்கொண்டிருந்தது.

"குந்தவி.." என்று மயக்கத்தோடு அழைத்தவன் அவளின் முந்தானையை கைப்பற்ற இருந்தான்.

"நான்.. நான் குந்தவி இல்லை.."என்றவளின் அழுகுரலில் திடுக்கிட்டு விலகி நின்றான்.

இவளின் வாசத்தில் நெருங்கி விட்டது என்னவோ உண்மைதான். ஆனால் அணைப்பின் சுகத்தை உணர ஆரம்பித்த பிறகு அங்கே குந்தவியை தவிர வேறு யாரை யோசிக்கும் அவன் மனம்? தன்னை மறந்து அந்த மயக்கத்திலும் அவளைதான் தேடினான்.

உணர்ச்சிகளை தொலைத்து, பயத்தினால் தனது சக்திகளையும் கூட தொலைத்துவிட்ட சங்கவி தனது உடலின் பாரமே தாங்காதவளாக அவன்மீது சாய்ந்து விழுந்தாள்.

பதறிப்போய் அவளை எழுப்பி நிறுத்தினான் ஆதிரன்.

மொத்த உடம்பும் நடுங்கியபடி நின்று கொண்டிருந்தவளை கண்டு தன்மீதே கோபம் வந்தது அவனுக்கு‌

"சாரி சங்கவி.." என்று கெஞ்சலாக சொல்லியபடி அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான்.

விம்மியழுதாள். அவனின் சட்டையை பிடித்தபடி, அவன் செய்த தவறுக்காக, அவன் நெஞ்சிலேயே முகம் புதைத்து அழுதாள்.

"ப்ளீஸ்.. ப்ளீஸ்.. செல்ஃப் கன்ட்ரோலை இழந்துட்டேன் நான்.." என்றவனுக்கு அவளின் உடல் நடுக்கத்தை எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை. ஒற்றை கையால் நெற்றியில் அடித்துக்கொண்டான். மறு கையால் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

பத்து நிமிடங்கள் கடந்தது.

அவளின் நடுக்கம் ஏதோ ஒரு அளவிற்கு குறைந்திருந்தது.

ஆயிரம் முறை மன்னிப்புக் கேட்டிருப்பான் இந்த பத்து நிமிடத்தில். அவளால் அவனை புரிந்து கொள்ளவே முடியவில்லை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் நினைக்கவில்லை.

அவனிடமிருந்து விலகலாம் என்று அவள் நினைத்த அதே வேளையில், அந்த அறையின் கதவு திறந்தது. ஆனால் எதிரில் நின்றிருந்த சங்கவியின் முதுகின் மீது படீரென்று மோதியது அந்த கதவு.

"அம்மா.." என்று கத்தியபடி இவனையே மீண்டும் கட்டிக்கொண்டாள் சங்கவி.

அவளின் அடிபட்ட முதுகை வருடி தந்தவன் அவளை இந்த பக்கமாக தள்ளி நிறுத்தினான்.

"ஆதி.." என்று காந்திமதி அழைக்கும் குரல் கேட்டது.

அவளை விலக்கி நிறுத்தி விட்டு வந்து கதவைத் திறந்தான். அம்மா அவனையும் அவளையும் வெறித்துப் பார்த்தாள்.

"சாப்பிட வரலையா.?" என்று அவனிடம் கேட்டாள்.

"ஏன்டி உனக்கு கிச்சன்ல வேலையே இல்லையாடி.?" என்று கேட்டு திட்டிய காந்திமதி "போடி போய் வேலையை பாருடி.!" என்று சங்கவியை விரட்டினாள்.

சங்கவி அங்கிருந்து நகர்ந்ததும் மகளின் முகத்தில் வந்து நிலைத்தது காந்திமதியின் பார்வை.

"குளிச்சிட்டு வந்தடுறேன் அம்மா.." என்று சொன்னவன் குளியலறை நோக்கி சென்றான்.

அவன் குளியலறையிலிருந்து வெளியே வந்தபோது கட்டிலில் அவனுக்காக காத்து இருந்தான் வருண். ஆதிரன் வந்ததும் அவனின் முகத்தில் ஒரு குத்து விட்டான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN