அத்தியாயம் 18

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஆதீரன் மாலையில் வீடு வந்து சேர்ந்தபோது வீடு வெகு அமைதியாக இருந்தது.

வழக்கம்போல காந்திமதியும் வருணும் கதை பேசிக் கொண்டிருக்கவில்லை. வீட்டின் வேலைக்காரர்கள் கூட ஓசை இல்லாமல் தங்களது வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்கள். சங்கவியை தேடியது அவனின் கண்கள். ஆனால் அவளை எங்கும் காணவில்லை.

சமையல்கட்டுக்குள் வந்து எட்டிப் பார்த்தான். பவளம் தனியாக சமைத்துக் கொண்டிருந்தாள்.

"அவ எங்கே?"

கேள்வி கேட்டவனைத் திரும்பிப் பார்த்த பவளம் "பாப்பா அவ ரூம்ல படுத்து தூங்கிட்டு இருக்கா தம்பி.!" என்றாள்.

'இந்த நேரத்துல எதுக்கு தூங்குறா?' என்று யோசித்தவனுக்கு காலையில் அவன் அவளுக்கு தந்த முத்தம் நினைவிற்கு வந்தது.

'கிஸ் தந்ததால மனசு கஷ்டப்பட்டு இருப்பாளோ?' குழப்பத்தோடு நினைத்தான்.

'அவளைப் பார்த்து பேசலாமா?' என்று நினைத்த அதே நேரத்தில் 'அவளோடு என்ன பேசுறது' என தனக்குத் தானே சொல்லியபடி தனது அறையை நோக்கி நடந்தான்.

வருண் தனது அறையில் கோபத்தோடு அமர்ந்திருந்தான்.

மதியத்திலிருந்து 'போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்..' என்று சங்கவியிடம் கெஞ்சி கேட்டு பார்த்து விட்டான்.

ஆனால் அவளோ "வேணாங்க.. இப்போதைக்கு எனக்கு என் உயிரை விட எங்க அப்பா உயிர்தான் முக்கியம்.." என்று சொல்லிவிட்டாள்.

"உங்க அப்பாவுக்கு ஹாஸ்பிடல் செலவை நான் செய்றேன்.." என்று சொன்னவனை பார்த்து சிரித்தாள்.

"ஆனா அடுத்து என்ன நடக்கும்.? இவரு மறுபடியும் பழி வாங்க கிளம்புவார். போன முறை நான் பலியானேன். ஆனா இந்த முறை எங்க அப்பா பலி ஆவார். இப்போதைக்கு எனக்கு இருக்கும் ஒரே ஒரு சொந்தமே எங்க அப்பா மட்டும்தான். அவரோட உயிரை வச்சி நான் ரிஸ்க் எடுக்க விரும்பல.. நீங்க என் மேல காட்டுற கருணைக்கு நன்றி. ஆனா இனி காட்டாதிங்க ப்ளீஸ். இல்லனா அதுக்கும் கூட அம்மாவும் மகனும் என்னைதான் பழி வாங்குவாங்க.!" என்றவள் கலங்கும் விழிகளை இவனுக்கு காட்டாமல் மறுபக்கம் திருப்பிக் கொண்டாள்.

"அவனைப் பார்த்து பயப்படுவதை நிறுத்து. என்னை நம்பு.." என்றவன் அவளின் முகத்தை பற்றி தன் புறம் திரும்பினான்.

"யாருங்க நீங்க.? அவரு என் அக்காவோட காதலர். ஆனா என் கழுத்துல தாலி கட்டி இருக்காரு.." என்று தாலிச் சங்கிலியை எடுத்துக் காட்டியவள் "அவராவது ஏதோ ஒருவகையில் உறவு.. ஏதோ ஒரு வகையில் பந்தம்.. ஆனாலும் என்னை பழி வாங்குறார்.. அப்படி இருக்கும்போது முன்பின் கூட தெரியாத உங்களை நான் என்னன்னு நம்புறது? இத்தனைக்கும் நீங்க எனக்கு கூட சொந்தக்காரர் இல்லையே.. அவருக்கு தானே சொந்தக்காரர்.!?" என்று கேட்டாள்.

அவளின் தயக்கமும் பயமும் அவனுக்குப் புரிந்தது. அதே கேள்விதான் அவனுக்குள்ளும் எழுந்தது. ஆனால் இது மனிதாபிமானத்தின் அடிப்படையில் செய்யும் உதவி. இதை சொன்னால் புரிந்து கொள்ளும் நிலைமையில் அவள் இல்லை.

"சரி விடுங்க.. நீங்க போய் உங்க வேலைய பாருங்க.. இந்த காயம் ஆறிடும்.." என்று தன் பாதத்தை பார்த்தபடி அவனை அனுப்பி வைத்து விட்டாள். அவளிடமிருந்து விலகி வந்து விட்டானே தவிர அவளின் காயம் இவன் கண்களிலிருந்து மறையவில்லை. அவளின் கதறல் சத்தமும் செவிகளை விட்டு அகலவில்லை. தனது சித்தி இவ்வளவு பெரிய கொடுமைகாரி என்பதை கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை அவனால்.

இப்படி ஒருவன் தனது மனைவிக்காக புலம்புகிறான் என்ற விசயம் கூட தெரியாமல் மாலை குளியலை சுகமாக அனுபவித்தான் ஆதீரன்.

இரவு உணவின் போது கூட சங்கவி தனது அறையை விட்டு வெளியே வரவே இல்லை. 'ரொம்ப பீல் பண்ணிட்டாளோ..' என்று நினைத்தான் ஆதீரன். இனி அவளின் அனுமதி இல்லாமல் எதையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்று நினைத்தான். ஆனால் அவன் நினைப்பதை அவன் எங்கே கேட்கிறான்?

காந்திமதியும் எதுவும் தெரியாதவள் போல உணவை உண்டாள். வருணுக்கு ஆத்திரமாக வந்தது. அதீரனை பிரித்து மேய வேண்டும் போல இருந்தது.

"அவ சாப்பிட வரலையா.?" மனம் கேட்காமல் கேட்டான் ஆதீரன்.

காந்திமதியைப் பார்த்தாள் பவளம்‌. எப்படி பதில் சொல்வது என்று அவளுக்கு தெரியவில்லை.

"அவ பாதத்துல சூடுபட்டுடுச்சி.." பற்களைக் கடித்தபடி சொன்னான் வருண்‌.

குழப்பத்தோடு வருணை பார்த்த ஆதீரன் "பாதத்துல எப்படி சூடுபடும்.?" என்று சந்தேகமாக கேட்டான்.

"கிச்சன் தரையில சூடான கரண்டி இருந்தது‌‌. அது மேல இவ கவனிக்காம காலை வச்சிட்டா.. உங்க அம்மா அந்த கரண்டியை கை தவறி கீழே விட்டுட்டததான் சொன்னாங்க.. அவ்வளவுதான் எனக்கு தெரியும்.." என்ற வருண் உணவை பாதியிலேயே விட்டுவிட்டு எரிச்சலோடு அங்கிருந்து சென்றான்.

ஆதீரனுக்கு அம்மாவின் செயல் கவலையைத் தந்தது.

"அம்மா ப்ளீஸ்.. இனி எனக்கும் அவளுக்கும் நடுவுல நீங்க வராதிங்க.." என்றான் மென்மையான குரலில். ஆனால் அதுவே காந்திமதிக்கு காயத்தை தந்துவிட்டது. கோபத்தையும் தந்துவிட்டது.

தன் முன் இருந்த உணவை தள்ளி வைத்துவிட்டு எழுந்து நின்றான். தனது அறைக்குச் சென்றான். அன்றைய வேலைகளை முடித்து விட்டு படுக்கையில் விழுந்தான். ஆனால் தூக்கம்தான் வரவேயில்லை. சங்கவியை ஒருமுறை பார்த்து விட்டு வந்திருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் அம்மா செய்த தவறால் அவனுக்கும் குற்ற உணர்வாக இருந்தது. இந்த விசயங்கள் குந்தவிக்கு தெரிந்தால் அதை எப்படி நினைப்பாளோ என்று கவலையாக இருந்தது.

தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தவன் நேரத்தைப் பார்த்தான். மணி பதினொன்றை கடந்திருந்தது. கதவை திறந்து கொண்டு வெளியே நடந்தான்.

வீடு நிசப்தமாக இருந்தது.

சங்கவியின் அறைக்குச் சென்றான். தரையில் படுத்திருந்தாள். ஒரு மூலையில் வருணின் பெட்ஷீட் மடித்து வைக்கப்பட்டு இருந்தது.

"என் தங்கச்சிக்கு ஒரு போர்வையை கூட உன்னால தர முடியாதா.?" என்று குந்தவி காதோரத்தில் வந்து கேட்பது போல இருந்தது. அதே நேரத்தில் "அம்மா.." என்று முனகிய சங்கவியின் குரலும் கேட்டது. தயக்கத்தோடு அவள் அருகே அமர்ந்தான். அழுது அழுது காய்ந்த கன்னங்களில் ஈரம் அப்படியேதான் இருந்தது. அரை மயக்கத்திலேயே இப்போதும் கண்ணீரை சிந்திக் கொண்டு இருந்தாள்.

பாதத்தில் பலமாக பட்டிருந்தது சூடு. பார்க்கும்போதே வருத்தத்தை தந்தது.

'அம்மா ஏன் இப்படி செய்தாள்' என்று அவனால் யூகிக்க முடியவில்லை. மீண்டும் முனகினாள் சங்கவி. சந்தேகத்தோடு அவளின் நெற்றியை தொட்டு பார்த்தான். கொதித்துக் கொண்டிருந்தது காய்ச்சல்.

"சங்கவி.. சங்கவி.." அவளின் தோளை தொட்டு எழுப்பினான். அவளோ கண்களை திறக்க முடியாமல் முனகிக் கொண்டிருந்தாள்.

"எழுந்து வா.. ஹாஸ்பிடல் போகலாம்.." என்று அவளை தூக்கினான்.

"வேண்டாம் ப்ளீஸ்.." அரை மயக்கத்தில் கெஞ்சினாள். "ஹாஸ்பிடல் வேணாம்.." என்றவள் அவனது நெஞ்சிலேயே முகம் புதைத்தாள்.

தயங்கி நின்றான். இந்த நேரத்தில் மருத்துவமனை செல்வதா என்று யோசித்தான். காலை வரை பார்த்துவிட்டு பிறகு செல்லலாம் என்று நினைத்தான். அவளை தூக்கிக் கொண்டு தனது அறைக்குச் சென்றான். கட்டிலின் ஒரு ஓரத்தில் அவளை படுக்க வைத்து போர்வையால் அவளைப் போர்த்தி விட்டான்.

"அம்மா அப்பா.." என்று அனத்தி கொண்டே இருந்தாள்.

பெட்ஷீட்டை கைகளால் இறுக்கி கொண்டவளுக்கு கண்ணீர் இமைகள் தாண்டி வழிந்தது.

கலைந்த கேசம், அழுதழுது கறுத்துப்போன முகம், நான்கே நாட்களில் இளைத்துப் போன தேகம்.

அவளின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தவன் அவளின் கரத்தினை மென்மையாக பற்றி தன் முகம் புதைத்தான்.

"சாரி சங்கவி.." என்றவனுக்கு குரல் உடைந்து போயிருந்தது.

"என்னால்தான் உனக்கு இந்த நிலைமை.." என்று அவளின் கரத்தினை தனது கண்ணீரால் நனைத்தான்.

அவளின் வேதனையை அவனால் காணவே முடியவில்லை. உயிர்வரை வலித்தது.

"சாரி.. சாரி" என்று முனகி கொண்டே இருந்தான்.

எழுந்தவன் காய்ச்சலின் வேதனையில் உழன்று கொண்டிருந்தவளுக்கு மாத்திரை எடுத்து வந்து தந்தான்.

அவள் சிரமத்தோடு எழுந்தமர்ந்து அதை விழுங்கிய பிறகு அவளின் கால் பாதத்திற்கு மற்றொரு முறை மருந்து பூசி விட்டான்.

அந்த அரை மயக்கத்திலும் இவனைக் கண்டு பயமாக இருந்தது அவளுக்கு. இவன் ஏதாவது ஒரு நல்ல விஷயம் செய்தால் பிறகு தனக்கு நூறு விதமான தண்டனைகளை தருவானே என்று பயந்தாள்.

இப்படி ஒரு சைக்கோவை காதலித்த பாவத்திற்கு தனது அக்காவை இந்த நேரத்திலும் திட்டதான் தோன்றியது அவளுக்கு.

அவனின் கண்ணீர் கண்டுதான் கொஞ்சம் வருத்தமாக இருந்தது.

கட்டிலின் மறுபக்கம் ஏறிய ஆதீரன் தலையணையில் தலை சாய்த்தான். காய்ச்சலினால் நடுங்கிக் கொண்டிருந்தவளை தன்னோடு அணைத்துக் கொண்டான்.

சமயம் கிடைக்கும் போது அவனைக் கொல்ல வேண்டும் போல இருந்தது. ஆனால் இப்போது அவன் அணைத்தவுடன் அரை மயக்கத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் அவனது சட்டையை இறுக்கமாக பிடித்துக்கொண்டாள்.

"ஒன்னும் இல்ல சங்கவி. கால்வலி சரியாகிடும்.." என்று ஆறுதல் சொன்னவன் அவளின் நெற்றியில் முத்தமிட்டான்.

இது என்ன மாதிரியான பந்தம் என்று அவனுக்கும் புரியவில்லை. அவளுக்கு புரியவில்லை.

அவனின் அணைப்பில் சற்று நேரத்தில் உறங்கி விட்டாள் சங்கவி. சுயநினைவோடு இருந்தால் நிச்சயம் இதற்கும் அழுவாள் என்று தெரியும். அதற்காக அவளை விட்டு விலகி தூங்க முடியவில்லை அவனால். சிறுவன் கையில் கிடைத்த வண்ண கோழிக்குஞ்சாக அவளை இப்போது பொத்தி பாதுகாத்தான்.

அதே நேரத்தில் குந்தவி ஹோட்டல் அறையில் தனியாய் அமர்ந்திருந்தாள்.

தன்னை ஆட்கொண்ட மாயக்காரன் எந்த அறையில் விட்டு சென்றானோ அதே அறையில் காத்திருந்தாள் குந்தவி.

அவனுக்காக காத்திருக்கவில்லை. அடுத்து எங்கே செல்வது என்று தெரியாமல் காத்திருந்தாள். தற்கொலை செய்யும் எண்ணம் அவளை விட்டு விலகி இருந்தது. ஆனால் அதேசமயம் ஆதீரனை எதிர்கொள்ளும் அளவுக்கு தைரியம் பெற்றிருக்கவில்லை.

தன் தங்கையை காப்பாற்றிவிடலாம். ஆனால் அவனிடம் இருந்து முழுமையாக தப்புவது எப்படியென்று அவளுக்கு புரியவில்லை. காதலி விலகினாளென்று அவளது மொத்த குடும்பத்தையும் பழி வாங்கியவன் மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தாலும் அதைதான் செய்வான் என்று தெரியும். அவன் மீது கொண்டிருந்த மொத்த நம்பிக்கையும் நான்கு நாட்கள் முன்பே அழிந்துவிட்டது.

பணம்தான் முக்கிய காரணம். ஆதீரனின் திமிருக்கும், காந்திமதியின் திமிருக்கும் பணம்தான் காரணம். அவர்களை சரியான முறையில் எதிர்கொள்ள ஆசை கொண்டாள் குந்தவி. கையில் இருக்கும் பணம் அவர்களை வீழ்த்தாது. அவர்களை பழி வாங்கும் அளவிற்கு பதவியும் அவளிடத்தில் இல்லை. யோசித்து யோசித்து பார்த்தாள். கைபேசி‌ எண்ணை தந்து சென்றவனுக்கு நொடியில் அழைத்து விடலாம்தான். ஆனால் அதற்கு மனம் வரவில்லை. பெயருக்குத்தான் அது ஓர் இரவு. ஆனால் யோசிக்கும் நொடி முழுக்க அந்த ஒரு இரவுதான் நிறைந்து இருந்தது.

அவனை மறந்துவிட்டு தனது பிரச்சனைகளை கவனிக்க நினைத்தாள். ஆனால் அவளின் முதல் பிரச்சனையாக அவன்தான் வந்து நின்றான். அவனை மனதுக்குள் இருந்து துரத்துவதுதான் அவளின் பெரிய பிரச்சனையாக இருந்தது.

உறக்கம் கலைந்து எழுந்த சங்கவி தன்னை அணைத்திருப்பவனை ஆச்சரியத்தோடு பார்த்தாள். அரை மயக்கமாக இருந்தாலும் அவன் நேற்று இரவு அழுதது அவளின் நினைவில் இருந்தது.

இவள் அசைந்தது கண்டு கண் விழித்தவன் "கால் வலிக்குதா?" எனக் கேட்டான்.

இவ்வளவு நேரம் தெரியவில்லை. ஆனால் இவன் ஞாபகப்படுத்தியதும் வலித்தது. வலி மறக்க உதட்டை கடித்தாள். அதுவும் வலித்தது. புள்ளி புள்ளியாய் கருத்திருந்த அவளின் உதடுகளை சுட்டு விரலால் வருடி விட்டான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN