அத்தியாயம் 19

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அவனின் தீண்டல் மிகவும் வித்தியாசமாக இருந்தது. அவளின் முகம் மாறுவதை கண்டு தனது கரத்தை பின்னுக்கு இழுத்துக் கொண்டான் ஆதீரன்.

"சாரி" என்றவன் எழுந்தான். அவன் சாரி சொல்லும்போதுதான் அவளுக்கு இன்னும் பயமாக இருந்தது.

எழுந்தவள் அருகே இருந்த மேஜையில் ஓடிக்கொண்டிருந்த கடிகாரத்தைப் பார்த்தாள். மணி ஏழை தாண்டி விட்டு இருந்தது. இதற்கும் காந்திமதி தன்னையே திட்டுவாள் என்று பயந்து அவசரமாக கீழே இறங்கினாள்.

பாதத்தை தரையில் வைத்ததும் "அம்மா.." என கத்தியபடி பாதத்தை மேலே இழுத்தாள். சூடு பட்ட பாதத்தில் வலித்தது.

அந்தப் பக்கம் இருந்து எழுந்து ஓடி வந்தான் ஆதீரன். இவளின் பாதத்தை கைகளில் எடுத்தான். பதறியபடி பாதத்தை பின்னால் இழுத்தாள் சங்கவி.

"சாரி சங்கவி.. எங்க அம்மா பண்ண தப்புக்கு நான் சாரி கேட்கிறேன்.." என்றான்.

"நீ இந்த ரூம்லேயே இரு. நடக்காத எங்கேயும்.." என்றவன் எழுந்து சென்று அங்கிருந்த அலமாரியை திறந்தான். ஒரு செட் சுடிதாரை எடுத்து வந்தான்.

"இது நான் உன் அக்காவுக்காக வாங்கியது.. யூஸ் பண்ணிக்க நீ.. உனக்கு தேவையான சாப்பாட்ட பவளமக்கா எடுத்துட்டு வந்து தருவாங்க.. நீ எங்கேயும் நடக்க வேண்டாம்.." என்றான்.

தயக்கத்தோடு ஒற்றைக் காலால் எழுந்து நின்றாள் சங்கவி. தன் கையிலிருந்த சுடிதாரை கட்டிலின் மீது வைத்தாள்.

"இல்லைங்க வேணாம்.. நான் இந்த வீட்டுக்கு வேலைக்காரியா வந்தேன். நான் எங்கே இருக்கணுமோ அங்கேயே இருந்துக்கறேன். உங்க கருணைக்கு நன்றி.." என்றவள் அவனை தாண்டிக் கொண்டு நடந்தாள்.

சட்டென்று அவளை கையை பிடித்து நிறுத்தினான் ஆதீரன்.

"நிஜமா நீ என்னை மீறி போகப் போறியா.?" சந்தேகமாக கேட்டான். அவனின் குரலில் அளவுக்கதிகமாகவே கேலி கலந்திருந்தது.

"தெரியும் இதுக்கும் நீங்க என்னை பழிவாங்குவிங்க. அந்த பழிவாங்கல் கிஸ், ஹக்.. ஏன் செக்ஸா கூட இருக்கலாம். அப்புறம் உங்க அம்மா.. நீங்க செஞ்சதுக்கு என்னை என்ன பழி வாங்குவாங்க. அடிக்கறது, சூடு வைக்கிறது.. அப்புறம் யாருக்கு தெரியும் என்னை தூக்குல மாட்டினாலும் மாட்டுவாங்க.. என் வாழ்க்கையில் எது வேணாலும் நடக்கும்ன்னு உங்களை கல்யாணம் பண்ண அன்னைக்கே தெரிஞ்சிக்கிட்டேன்.." என்றவள் அங்கிருந்து நடந்தாள். அவனது கரம் சற்று முன்னரே விலகியிருந்தது.

பிரம்மை பிடித்தவன் போல நின்றிருந்தவன் கட்டில் மீது கிடந்த சுடிதாரை வெறித்தான்.

அவன் அலுவலகம் செல்வதற்காக தயாராகி வந்தபோது ஒற்றைக் காலால் நொண்டியபடி சமையல்கட்டில் தனது வேலைகளை செய்து கொண்டிருந்தாள் சங்கவி.

மகன் வந்து கீழே நின்றிருப்பதை காணாத காந்திமதி நேராக சமையல் கட்டுக்கு சென்று சங்கவியின் தலைமுடியை கொத்தாக பிடித்தாள்.

"நேத்து நைட் எங்கேடி போன.?" என்று கேட்டாள் கோபத்தோடு.

பற்களைக் கடித்தபடி வலியைத் தாங்கிய சங்கவி எதுவும் பேசாமல் மௌனமாக நின்றாள்.

"கேட்க கேட்க பதில் சொல்லாம இருக்க.." என்ற காந்திமதி தன் கையை ஓங்கிய நேரத்தில், அவளின் கையை தடுத்து நிறுத்தினான் ஆதீரன்.

அதிர்ச்சியோடு அவனைப் பார்த்த காந்திமதி "என்னடா செய்ற.?" என்றாள் தன் கையை பார்த்தபடி.

"நேத்து நைட் அவ என்னோடுதான் தூங்கிட்டு இருந்தா.." என்றான் அமைதியாக.

காந்திமதியின் முகம் சட்டென்று மாறியது. அவளின் கோபத்தை கண்டு ஆதீரனுக்கு குழப்பமாக இருந்தது.

"என்னடா அதுக்குள்ள அவ‌ உன்னை மயக்கிட்டாளா.?"

"அம்மா.." அழுத்தமாக கர்ஜித்தான். அவனின் கர்ஜனை கண்டு சங்கவியும் கூட துள்ளி விழுந்து விட்டாள்.

"இவ என் பொண்டாட்டி. இவ கழுத்துல நான் தாலி கட்டி இருக்கேன். உங்களுக்கு கோபம் இருக்கும்.. இல்லன்னு நானும் சொல்லல. ஆனா இவளை துன்புறுத்த உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.." என்றான் எச்சரிக்கும் குரலில். காந்திமதி அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.

"நான் செய்றது தப்புன்னு எனக்கே தெரியும். ஆனா என்னால என்னை கண்ட்ரோல் பண்ண முடியல. ப்ளீஸ் புரிஞ்சிக்கங்க. அவை ஏற்கனவே என்னால டார்ச்சரை அனுபவிச்சிட்டு இருக்கா. நீங்களும் சேர்ந்து டார்ச்சர் பண்ணாதிங்க.." என்றவன் "வர வர சீரியல் வில்லியை போல ஆகிட்டீங்க.." என்று சலித்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

சமையலறை வாசலில் நின்றவன் திரும்பிப் பார்த்தான்.

"லாஸ்ட் மார்னிங் மம்மி.. இன்னொரு முறை அவளை அடிச்சிங்கன்னு கேள்விப்பட்டா அப்புறம் நடக்கறதே வேற.." அடிக்குரலில் மிரட்டிவிட்டு நகர்ந்தான்.

காந்திமதி அசையவே இல்லை. சங்கவிக்கும் கூட இவனின் இந்த அவதாரம் ஆச்சரியத்தைதான் தந்தது.

ஹாலின் ஒரு மூலையில் நின்றபடி இவனது செய்கையை பார்த்துக் கொண்டிருந்த வருணுக்கு ஒரு ஆச்சரியமும் இல்லை. அது ஆதீரனின் குணம் என்று அவனுக்கு தெரியும். தனது பொருளை தான் மட்டுமே உடைக்க வேண்டும் என்ற அல்ப எண்ணம் கொண்ட குணம் அது என்று அவனுக்கு தெரியும்.

பவளம் பரிமாறிய உணவை உண்டு விட்டு அலுவலகம் கிளம்பினான் ஆதீரன்.

சங்கவி வழக்கம்போல தனது அறைக்குள் வந்து முடங்கினாள்.

காந்திமதி இடிந்து போனவளாக தனது அறையில் அமர்ந்து இருந்தாள்.

"இவன் என் மகன்தானா? பெத்து வளர்த்த என்னை விட இன்னைக்கு வந்தவ பெருசா போயிட்டாளா?" என்று புலம்பினாள்.

தனியாய் அமர்ந்திருந்த சங்கவியின் அருகே வந்து அமர்ந்தான் வருண்.

அவளைப் பார்த்துப் புன்னகைத்தான். அவள் பதில் புன்னகை தரவில்லை.

"கால் எப்படி இருக்கு.?" என்று விசாரித்தான்.

"பரவாயில்லை.." என்று பதில் சொன்னாள்.

அவளிடம் ஆப்பிள் பழம் ஒன்றை நீட்டினான். தயக்கத்தோடு பழத்தைப் பார்த்தாள்.

"சாப்பிடு.. நீ சாப்பிடுவதால் இந்த வீட்டோட சொத்து ஒன்னும் அழிஞ்சி போயிடாது.." என்றவன் அவளிடம் பழத்தை தந்தான். தயக்கத்தோடே உண்ண ஆரம்பித்தாள்.

"உங்களுக்கு ஏன் என் மேல அக்கறை?" பழத்தை கடித்தபடி கேட்டாள்.

"ஏனா நீ எங்க வீட்டை நம்பி வந்த பொண்ணு.. இவங்க செய்வது பாவம். என்னால இவங்களை தடுக்க முடியல. அட்லீஸ்ட் உனக்கு ஒரு கம்பர்டாவாவாது இருக்கலாமேன்னு நினைச்சேன்.." என்றான் தோளை குலுக்கியபடி.

நண்பனாகதான் பழகினான். கொஞ்சம் இதமாகதான் இருந்தது. ஆனால் பயமாகவும் இருந்தது. இதற்கும் ஏதாவது வம்பு வந்தால் என்ன செய்வது என்று பயந்தாள்.

"நானும் குந்தவியும் கூட பிரெண்ட்ஸ்தான்.." அவன் சொன்னது கேட்டு ஆச்சரியத்தோடு நிமிர்ந்தாள்.

"உன் அக்கா ரொம்ப அமைதி. நீயும்தான்.."

அக்காவை பற்றி அவன் பேசியதும் அவனோடு நெருங்கி விட்டதை போல உணர்ந்தாள்.

"ஆனா அவ ஆதியை உண்மையா விரும்பினா. அவ ஓடி போனதை என்னால நம்பவே முடியல.."

சட்டென்று விம்மல் வந்தது. தன் அக்காவை நம்ப ஒரு ஜீவன் இருப்பது அவளுக்கு நிம்மதியை தந்தது.

அவளிடம் தன் கைக்குட்டையை நீட்டினான்.

"அழாதே விடு.. உன் அக்காவுக்கு ஏதாவது காரணம் இருந்திருக்கும். அவ உன்னை ரொம்ப நேசிக்கிறா.. உன் மேரேஜ், உன் பேரண்ட்ஸ் விபத்தெல்லாம் அவளுக்கு தெரியாமலா இருக்கும்? போனவள் இத்தனை நடந்தும் வராம இருக்கான்னு ஸ்ட்ராங்கான காரணம் இருக்கும்.." என்றான் உறுதியான குரலில்.

அந்த காரணம்தானே அவளுக்கு தெரியவில்லை.

'அக்கா.. உனக்கு என்ன பிரச்சனையா இருந்தாலும் திரும்பி வந்துடு.. நீ வந்தாலே பாதி பிரச்சனை தீர்ந்துடும்..' என்று மனதோடு கேட்டுக் கொண்டாள்.

அதே நேரத்தில் அலுவலகத்தில் இருந்த ஆதீரனின் கைபேசிக்கு வந்தது ஒரு அழைப்பு. டிடெக்டிவ் நண்பன் சந்தோஷ்.

"ஆதீ.." அவன் ஆரம்பிக்கும் முன்பு இவனே ஆவலோடு "குந்தவியை கண்டு பிடிச்சிட்டியா?" எனக் கேட்டான்.

எதிரில் இருந்தவன் சற்று நேரம் மௌனம் காத்தான்.

"உன் லவ்வர் நிஜமா ஓடிதான் போனாங்களா?" தயக்கமாக கேட்டான்.

ஆதீரன் நெற்றியை பிடித்தான். "தெரியலையேடா.." என்றான்.

"நான் சொல்ல போற விசயம் உன்னால நம்ப முடியாம போகலாம்.."

"விசயத்தை சொல்லுடா.." அவசரப்படுத்தினான் இவன்.

"உன் காதலி ஓடி போகல.. விரட்டப்பட்டு இருக்கா.. ப்ளாக்மெயில் மூலமா உன்கிட்டயிருந்து பிரிக்கப்பட்டு இருக்கா.." சந்தோஷ் சொன்னது புது தகவலாக இருந்தது இவனுக்கு. யாராய் இருக்கும் என்று யோசித்துக் குழம்பினான்.

"உன் அம்மா.. அவங்கதான் உன்னை விட்டு அவ பிரியலன்னா அவளோட மொத்த குடும்பத்தையும் கொன்னுடுறதா மிரட்டி இருக்காங்க.. உன்னை விட்டு அவளால பிரிய முடியலன்னு அழுதபோது அவங்களேதான் பிளான் பண்ணி அவ யார் கூடவோ ஓடி போன மாதிரி செட் பண்ணி வச்சிருக்காங்க.. ஆனா அவ அவனோடு விருப்பமில்லாமதான் போயிருக்கா.." அவன் சொன்னது கேட்டு மூச்சே நின்றது போல இருந்தது ஆதீரனுக்கு.

தன் அம்மாவா இப்படி செய்தது என்று அதிர்ந்தான்.

"ஊரை விட்டு துரத்தப்பட்டா அந்த பொண்ணு. நீ அவ குடும்பத்தை பழி வாங்கி இருக்க. அவளோட வீடு அடமானத்துக்கு போனதையும், நீ அவளோட தங்கச்சியை திருமணம் செஞ்சிக்கிட்டதையும் பேப்பர்ல பார்த்த அந்த பொண்ணு சூஸைட் பண்ணி செத்து போயிட்டா.."

நாற்காலியிலிருந்து தானாய் எழுந்து நின்றது அவனின் கால்கள்.

"என்னடா சொல்ற.? என் குந்தவி இறந்துட்டாளா?"

"ம். ஆமா.. அவளோடு பயணம் செஞ்சவன் யார்ன்னு கண்டுபிடிச்சி விசாரிச்சேன். அப்போதுதான் உன் அம்மாவோட ப்ளான் தெரிஞ்சது. அந்த பொண்ணை அவன் விட்டு வந்த இடத்தை தேடி போனேன். ஆனா போன இடத்துல அழுகி போன அவளோட டெட்பாடிதான் கிடைச்சது. அவளை போஸ்ட்மார்ட்டத்துக்கு அனுப்பிட்டு உனக்கு போன் பண்ணேன்.."

ஆதீரனின் கையில் இருந்த போன் நழுவி தரையில் விழுந்தது.

சுற்றும் தலையை பிடித்தபடி அங்கிருந்த மேஜையை பிடித்தான். தண்ணீரை எடுத்து குடித்தான்.

நெஞ்சம் எரிந்தது. மூச்சு விடுவதில் சிரமமாக இருந்தது. தரையில் பொத்தென்று விழுந்தான். நினைவு இருந்தது. அழுகையாக வந்தது.

குந்தவியின் மீது அவன் கொண்ட காதல் நினைவில் வந்தது. மூன்று வருடங்களாக நேசித்த காதல். பார்த்து பார்த்து பழகிய காதல். நினைத்து நினைத்து உருகிய காதல்.

அவள் இறந்தாள், அதுவும் தன்னால்தான் இறந்தாள் என்ற காரணம் அவனை உயிரோடு மென்று தின்றது. அம்மா இப்படி செய்தது கூட அவனுக்கு பெரிதாக படவில்லை. ஆனால் தான் செய்த தவறால்தான் அவள் தற்கொலை செய்துள்ளாள் என்ற விஷயம் புரிந்து தனக்குள் உடைந்தான். காதல் காதல் என்று உருகி கடைசியில் அந்த காதலை முழுதாக தொலைத்து விட்டோமே என்று மனம் வாடினான்.

தான் அவளை பழிவாங்க கிளம்பாமல் இருந்திருந்தால், தான் அவளின் வீட்டாரை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து நிறுத்தாமல் இருந்திருந்தால், அவளின் தங்கையை திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் இன்று அவள் உயிரோடு இருந்திருப்பாள் என்ற விஷயம் புரிந்து கதறினான்.

அழுது தீர்த்து விட்டு வெகுநேரம் கழித்து எழுந்தான். போனை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். கார் சாவியை எடுத்துக் கொண்டு வேகமாக வெளியேறினான்.

"நீங்க ரொம்ப தப்பு பண்ணிட்டிங்க அம்மா.. என் குந்தவியை ப்ளாக் மெயில் செஞ்சிருக்க கூடாது நீங்க. அவ என்னவள். அவளை என்கிட்ட இருந்து பிரிக்க யாருக்கும் உரிமை கிடையாது. உங்களுக்கு கூட.." என்று பற்களை அரைத்தபடி சொன்னவன் காரை வேகமாக எடுத்தான்.

சாலையில் சீறி பாய்ந்தது கார். இருக்கும் கோபத்தை எப்படி தீர்ப்பது என்று தெரியவில்லை.

வீட்டின் முன்னால் காரை கொண்டு வந்து நிறுத்தியதும் புயலாய் வீட்டுக்குள் புகுந்தான்.

"அம்மா.." வீடே அதிரும்படி கத்தினான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN