அத்தியாயம் 21

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சங்கவியின் மயக்கம் தெளிவதற்கு ஊசி போட்ட மருத்துவர் அந்த ஊசியை அருகே இருந்த மேஜையின் மீது வைத்து விட்டுச் சென்றிருந்தார். அந்த ஊசியை எடுத்துதான் தனது கரத்தில் கோடுகளை போட்டுக் கொண்டிருந்தான் ஆதீரன்.

மயக்கம் தெளிந்து எழுந்த சங்கவி இவனின் செயல் கண்டு அதிர்ந்து போனாள்.

எழுந்தமர்ந்து அவன் கையிலிருந்த ஊசியை பிடுங்கினாள். நிமிராமல் தனது கையை வெறித்துக் கொண்டு இருந்த ஆதீரன் "அந்த ஊசியை கொடு சங்கவி. எனக்கு எவ்வளவு தண்டனை தந்தாலும் என் மேல நான் கொண்ட கோபமே தீராது." என்றான் பைத்தியம் பிடித்தவன் போல.

அவனின் மீது சங்கவிக்கும் கோபம் வந்தது. அவனுக்கு பயங்கர தண்டனை தர வேண்டும் போல இருந்தது. ஆனால் அவளால் அவனின் காயத்தை நேராக பார்க்க முடியவில்லை. அவனின் கண்ணீரை தாங்க முடியவில்லை.

"ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன் சங்கவி. இனி நான் என்ன செஞ்சாலும் என் குந்தவி எனக்கு திரும்ப கிடைக்க மாட்டா.." என்றவன் இரு கைகளாலும் முகத்தை மூடிக் கொண்டு குலுங்கி அழுதான்.

அக்கா இல்லையென்ற இழப்பே இவளுக்கு பெரியதாக இருந்தது. இதில் இவனின் புலம்பல் வேறா என்று மனம் கேட்டது. அதே சமயத்தில் இவனது கஷ்டத்தை காணவும் முடியவில்லை.

'கருமம் பிடிச்ச மனசு‌.. எதுக்கு இப்படி மாத்தி மாத்தி யோசிக்கற.. உன் அக்கா செத்துட்டா.. அதை நினைச்சி பீல் பண்ணு. இவன் கையை அறுத்தா உனக்கென்ன? கழுத்தை அறுத்தாதான் உனக்கென்ன?' என்று தன்னையே திட்டிக் கொண்டாள்.

"குந்தவி‌.." அழுகையோடு புலம்பினான்.

'என் அக்கா செத்துட்டாடா.. தயவு செஞ்சி என்னை அதை நினைக்க விடுடா..' மனதோடு அவள் கெஞ்சிக் கொண்டிருந்த நேரத்தில் அந்த அறைக்குள் வந்தான் வருண்.

'நல்ல நேரத்துல இவனாவது வந்தானே..' என நினைத்த சங்கவி "இவர் அவரோட கையை அறுத்து வச்சி இருக்காரு.." என்று ஆதீரனை நோக்கி கை காட்டி சொன்னாள்.

குழப்பத்தோடு நெருங்கி வந்த வருண் அழுது கொண்டிருந்தவனை கவனித்தான். வலது கையில் ரத்தம் வழிந்துக் கொண்டிருந்தது.

பதட்டத்தோடு அவனின் கையை பற்றினான். பார்த்தான். ஊசியில் ஏகப்பட்ட முறை கீறி வைத்திருந்ததன் காரணமாக கையில் சிவப்பு கோடுகள் நிறைய தென்பட்டன.

"உன்னால ஒரு விசயத்தை கூட உருப்படியா யோசிச்சி செய்ய முடியாதா? எதுக்கு இந்த அவசரம்? கல்யாணம் செஞ்ச அதே அவசரம்தான் இந்த கை அறுக்கும் போதும் இருந்திருக்கு.." சலித்துக் கொண்டவன் அவனை இழுத்துக் கொண்டு வெளியே நடந்தான்.

அந்த அறையை விட்டு தாண்டும் முன் இவள் புறம் திரும்பி பார்த்தான்.

"இவனோட காயத்துக்கு ட்ரீட்மெண்ட் பண்ணி கூட்டி வர போறேன் நான். அதுக்குள்ள நீ ஏதும் ஜன்னல் வழி குதிச்சி வச்சிடாத.. ப்ளீஸ்‌.." என்றவன் சகோதரனை அழைத்துக் கொண்டு சென்றான்.

சங்கவி ஜன்னலை பார்த்தாள். அம்மாவும் இல்லை. அக்காவும் இல்லை. ஏன் வாழ வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அமர்ந்திருந்த கட்டிலை விட்டு கீழே இறங்கினாள். உடனே அமர்ந்துக் கொண்டாள்.

'நீயும் செத்து போனா அப்புறம் அப்பாவை யார் பார்த்துப்பாங்க சங்கவி? உனக்குன்னு இருக்கும் ஒரே சொந்தம் அவர்தான். அவரை அனாதையா விட்டு போக போறியா?' மனசாட்சியின் குரல் கேட்டு தலை கவிழ்ந்து அமர்ந்தாள்.

அக்காவின் முகம் நினைவுக்கு வந்தது. உயிரையே இவள் மீதுதான் வைத்திருந்தாள் குந்தவி. அவள் காட்டிய பாசம் நினைவுக்கு வந்ததும் கண்ணீர் மடை திறந்தது. குந்தவி காதலிக்காமல் இருந்திருந்தால் இந்த மொத்த வாழ்க்கையுமே நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது.

காந்திமதியின் மீது எக்கச்சக்கமாக கோபம் வந்தது. நேரம் கிடைக்கும்போது அவளை பழி வாங்காமல் விட கூடாது என்று நினைத்தாள். தன் அக்காவின் சாவுக்கு காரணமான இந்த ஆதீரனையும் பழி வாங்க நினைத்தாள்.

மனதுக்குள் நெருப்பு கொழுந்து விட்டு எரிந்தது.

'இவன் நடிக்கறான்.. அக்காவை கொன்னுட்டு நாடகம் ஆடுறான்.. ஏமாந்துடாதே சங்கவி..' தன்னை தானே எச்சரித்துக் கொண்டாள்.

காந்திமதி தனது அறைக்குள் உலாவிக் கொண்டிருந்தாள். மகன் இனி தன்னை நம்பவே மாட்டான் என்று அவளுக்கு தெரியும். குந்தவி உண்மையிலேயே இறந்து விட்டாளா என்று புரியவில்லை. அப்படி இறந்திருந்தாலும் நிம்மதிதான் என்று நினைத்தாள். ஆனால் இந்த விசயத்தை மகனுக்கு சொன்னது யாரென்றுதான் அவளுக்கு தெரியவில்லை.

குந்தவியோடு அனுப்பிய ஆளுக்கு போன் செய்தாள்.

"டேய்.. எங்கேடா இருக்க?" என்று அதிகாரமாக கேட்டாள்.

எதிர் முனையிலிருந்து எந்த சத்தமும் வரவில்லை.

"டேய்.. கேட்கறது காதுல விழலையா?" காந்திமதி மீண்டும் கத்தினாள்.

எதிர் முனையில் இருந்த குந்தவி போனை அணைத்தாள். போனை தூக்கி சுவற்றில் அடித்து உடைத்தாள்.

இப்போதுதான் மனம் கொஞ்சம் சமன்பட்டது போல இருந்தது.

குந்தவியை அழைத்து வந்தவன் மும்பையை விட்டு தாண்டு முன்பே பிடித்து விட்டான் சந்தோஷ். அவனை விசாரித்த போதுதான் குந்தவியை பற்றிய விசயங்கள் தெரிந்தது. அவனை அடித்து கேட்டான் சந்தோஷ். குந்தவியை அடைத்து வைத்திருந்த வீட்டை அடையாளம் காட்டினான். இவன் சென்றபோது அந்த வீட்டில் ஏற்கனவே காத்திருந்தாள் குந்தவி. அவள் தன்னை அழைத்து வந்தவன் கையில் கிடைத்தால் குத்தி கொல்லலாம் என்று காத்திருந்தாள். தேடி வந்த சந்தோஷை கண்டு குழம்பி போனாள். அவன் விசயத்தை சொன்ன பிறகு‌ புதிதாய் ஒரு திட்டம் தீட்டினாள்.

"என் குடும்பம் அழிஞ்சதால் நான் செத்துட்டேன்னு அவர்கிட்ட சொல்லிடுங்க.. இல்லன்னா நான் நிஜமாவே செத்துடுவேன்.." என்றாள் விடாப்பிடியாக.

அவளின் முழு கதையையும் தெரிந்து கொண்ட பிறகு சந்தோஷாலும் மறுத்து சொல்ல முடியவில்லை. அவளுக்கு உதவுவதாக சொன்னவன் அவளை கூட்டி வந்த அடியாளை திருட்டு பொய் கேஸ் ஒன்றில் மாட்டி விட்டுவிட்டு கிளம்பி விட்டான்.

அடியாள் ஜெயிலில் இருக்கும் விசயம் தெரியாமல் காந்திமதி அவனுக்கு அழைத்தாள். அவளின் குரல் கேட்ட குந்தவிக்கு ஆத்திரம் அதிகமானது.

"இந்த பொறுக்கி ஏன் போனை எடுத்தும் பேசாம இருக்கான்?" என்றபடி மீண்டும் அழைத்தாள் காந்திமதி. ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது.

"அதுக்குள்ள போனை வேற ஆஃப் பண்ணி வச்சிருக்கான்.. அது சரி.. அந்த கழுதை செத்து போன பிறகு இவன் எதுக்கு? இப்ப பிரச்சனை இந்த பையன்தானே?" என்று வருத்தமாக கேட்டபடி கட்டிலில் அமர்ந்தாள்.

கழுத்தை அவ்வப்போது நீவி விட்டுக் கொண்டாள். தன் மகன் தன் கழுத்தை நெரிக்க வந்ததை இன்னமும் அவளால் நம்ப முடியவில்லை.

"அப்படி என்னதான் சொக்குப்பொடி போட்டாளோ?" என்று கடுகடுத்தாள்.

குந்தவி தனது ஹோட்டல் அறைக்கு திரும்பி வந்தாள். அவனது வாசம் இன்னமும் இருந்தது. புதிதாய் யோசிக்க வைத்தது. இத்தனை நாள் கவலைகளை மறக்க வைத்தது.

ஆனால் தாய் இறந்தாள் என்ற செய்தி அவளை உள்ளம் உடைய செய்தது. அரை மணி நேரத்திற்கு அழுது தீர்த்தாள்.

"எல்லாம் அவங்களாலதான்.. அம்மாவும் மகனும் சேர்ந்து என் குடும்பத்தையே சிதைச்சிட்டாங்க.. ஒரு காதல் செஞ்சது குற்றமா? அது தப்பில்ல.. அவனை காதலிச்சதுதான் தப்பு.. அவன் கேட்டபோது மறுத்திருக்கலாம்.. அவன் சொல்பேச்சு கேட்டு காதல்ல விழுந்து இப்ப மொத்த குடும்பத்தையும் இழந்துட்டியே குந்தவி.." என்று முகத்தை மூடியபடி கதறி அழுதாள்.

"இனி அம்மா எப்பவும் வரவே மாட்டாங்க.. அப்பா எப்போது குணமாகி எழுவாரோ? சங்கவி வாழ்க்கையையும் சேர்த்து நாசம் பண்ணிட்டேன்.. அம்மாவும் மகனும் சேர்ந்து அவளை என்னவெல்லாம் சித்திரவதை செய்ய போறாங்களோ?" என்று கேட்டழுதாள்.

"தூசு படாம வளர்த்திய பொண்ணை இப்படி சிக்க வச்சிட்டேனே.." என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

ஆனால் முன்பை விட இப்போது கொஞ்சம் நம்பிக்கையாக இருந்தது. காதலி இறந்த துக்கத்தில் இருப்பவன் மனைவியாய் வந்தவளை தொல்லை செய்ய மாட்டான் என்று நம்பினாள்.

"நான் வருவேன் சங்கவி.. சீக்கிரம் வருவேன்.. அதுவரை அவனும் அவனோட அம்மாவும் உன்னை எந்த சித்திரவதையும் செய்ய மாட்டாங்கன்னு நம்புறேன்.. ஒரு பொய்யா இருந்தாலும் நான் சொன்ன பொய் அவனை உடைக்கிற அளவுக்கு இருக்கும். இதை நான் முதல்லயே செஞ்சி இருக்கலாம்.. இல்லன்னா நான் அப்போதே செத்திருக்கலாம்.. சங்கவி நல்லா இருந்திருப்பா.. அம்மாவும் உயிரோடு இருந்திருப்பாங்க.." என்று கடைசியில் தன்னையே நொந்துக் கொண்டாள்.

ஆதீரனுக்கு கட்டு போட்டு அழைத்து வந்தான் வருண்.

"போலாமா சங்கவி?" என்று கேட்டான்.

ஐசியூவின் அறை வாசல் கதவில் சாய்ந்து அப்பாவின் முகம் பார்த்து நின்ற சங்கவி இவன் புறம் திரும்பினாள். சரியென்று தலையசைத்து விட்டு அவர்களுக்கு முன்னால் நடந்தாள்.

ஐசியூவின் வழியே பார்த்தான் ஆதீரன். மாமனாரின் நிலை மேலும் சங்கடத்தை தந்தது. தன்னால்தான் அனைத்தும் தன்னால்தான் என்று தன்னையே குறை கூறிக் கொண்டான்.

காலை நொண்டியபடி நடந்தவளை கண்ட ஆதீரன் அருகில் வந்து அவளை தூக்கிக் கொண்டான்.

அதிர்ச்சியோடு அவனை பார்த்தாள்.

"என்னை விடுங்க.." என்றாள்.

"இருக்கட்டும் சங்கவி.." என்றவன் அவளை கீழே விடவேயில்லை‌.

வருண்தான் காரை ஓட்டினான். மற்ற இருவரும் வாயே திறக்கவில்லை.

வீட்டின் முன்னால் காரை நிறுத்தினான் வருண்.

இறங்கி நின்ற சங்கவி தனக்கு முன்னால் நடந்த ஆதீரனின் கை பற்றி நிறுத்தினாள்.

திரும்பி பார்த்தவனிடம் "எல்லாத்துக்கும் காரணம் உங்க அம்மாதான், என் அக்கா இல்லன்னு தெரிஞ்சிடுச்சி இல்லையா.. இனி எதுக்கு நான் இங்கே? எங்க வீட்டு சாவியையும், எங்க அப்பாவோட பணத்தையும் திருப்பி கொடுங்க.. நான் எங்க வீட்டுக்கு போயிடுறேன்.." என்றாள்.

உணர்ச்சிகளற்று அவளை பார்த்தான். மங்கி கொண்டிருந்த வானத்தை பார்த்தவன் "நாளைக்கு போ.. இருட்டாகிடுச்சி.." என்றான்.

வானம் பார்த்தாள். இந்த வீட்டை விட இருளே பரவாயில்லை என்றுதான் தோன்றியது. ஆனாலும் எதுவும் பதில் சொல்லாமல் நொண்டியபடி உள்ளே நடந்தாள்.

அவளது அறைக்கு சென்று முடங்கினாள். இந்த அறைதான் எவ்வளவு கண்ணீரை காணும் என்று கேட்டாள். ஆனாலும் அம்மா இறந்தபோது வந்த மனமுடைவு இப்போது வரவில்லை. அக்கா இறந்தாள் என்பதை அவளின் முழு மனமும் ஏற்றுக் கொள்ளவும் இல்லை.

மனதுக்குள் ஏதோ குழப்பம். அவளின் உள்ளுணர்வோ, உள் மனதோ அது சொன்ன ஏதோ ஒன்றை அவளால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.

செம்மண் சேறும், நீருமாய் இருந்த அக்காவுடனான பந்தம் அவளுக்கு ஏதோ கூற முயன்றது. தன் மனதை படிக்க முடியவில்லை அவளால்‌. அழுகையும் கூட குறைவாகதான் வந்தது. அழுதபடியே உறங்கி விட்டாள்.

ஆதீரன் வீட்டிற்கு வந்த பிறகு தனது அம்மாவையே பார்க்கவில்லை.

"திமிர் இருக்குன்னு உன் காதலியோட மொத்த குடும்பத்துக்கும் தண்டனை தந்த இல்ல.. இப்ப உன் அம்மாவுக்கு தண்டனை கொடு பார்க்கலாம்.." என்றது மனசாட்சி.

இயலாமையும், கோபமும் அவனை வருத்தியது.

ஏதாவது செய்ய வேண்டும் என்று கூப்பாடு போட்டது மனம்.

வருண் சகோதரனை பிரியாமல் அருகிலேயே அமர்ந்து இருந்தான். சங்கவியின் மீது கூட அவனுக்கு கொஞ்சமாக நம்பிக்கை இருந்தது. ஆனால் இவன் மீதுதான் துளியும் நம்பிக்கை இல்லை. ஏதாவது செய்து கொள்வானோ என்று பயந்தான்.

அவனின் பயத்திற்கு ஏற்றார் போலதான் ஆதீரனும் பைத்தியக்காரன் போல அமர்ந்திருந்தான்.

ஆதீரன் சுயபச்சாதாபத்தில் மூழ்கியிருந்த நேரத்தில் அந்த அறையின் கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தாள் பவளம்.

"சாப்பிட வாங்க தம்பி.." என்றழைத்தாள்.

"வேணாம்க்கா.." என்றவனை பரிதாபமாக பார்த்தவள் "சங்கவி பாப்பாவும் சாப்பிட வரல.. பாதத்துலயும், கன்னத்திலேயும் காயம் வேற.. சாப்பிட்டாதானே மாத்திரை மருந்து சாப்பிட முடியும்? நீங்களாவது வந்து பாப்பாவுக்கு சொல்லி புரிய வச்சி கூட்டி வாங்க.." என்றாள்.

முகத்தை துடைத்துக் கொண்டு எழுந்து நின்றான் ஆதீரன்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN