கணவன் 4

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இரவு உணவு உண்ணுகையில் அம்ருதாவை முறைத்துக் கொண்டு இருந்தனர் பெற்றோர்.

அம்ருதா அமைதியாக சாப்பிட்டுவிட்டு மீண்டும் தனது அறைக்கு வந்து விட்டாள். என்ன செய்வதென்று தெரியவில்லை. காதலனை பிடிக்கவில்லை என்று சொல்லி கைவிட்டு வந்தவளுக்கு இப்போது வாழ்க்கையில் எந்த வேலையுமே இல்லாதது போல இருந்தது.

அன்று இரவு தனது நண்பர்களோடு இணைந்து பிறந்தநாள் விழா ஒன்றுக்கு கிளம்பினால் ஆரவ்.

அன்றைய நாளில் தனது பிறந்தநாளினை கொண்டாடிக் கொண்டிருந்த கல்லூரி தோழி தேன்மொழி இரவையும் அவனது நண்பர்களையும் தனது வீட்டிற்குள் வரவேற்றாள்.

தேன்மொழியை ஒருதலையாய் காதலித்துக் கொண்டிருந்தான் ஆரவ். அதுவும் கடந்த இரு மாதங்களாகதான். அவளிடம் தன் மனதில் உள்ளதை அவன் இன்னும் சொல்லவில்லை. அவளோ இவனிடம் நட்பாகதான் பழகிக் கொண்டிருந்தாள். நண்பர்களோ இன்று இவளின் பிறந்தநாள் விழாவில் அவனுடைய காதலை சொல்லிவிட வேண்டும் என்று சொல்லி அழைத்து வந்திருந்தார்கள். இந்த வீட்டிற்கு வரும் பொழுதே அவனுக்கு கை கால்கள் நடுங்கி கொண்டுதான் இருந்தது. அவள் என்ன பதில் சொல்வாள் என்ற அச்சத்தில் உறைந்து இருந்தான்.

பெரிய வீடு அது. நிறைய சொந்தங்கள் நடமாடிக் கொண்டிருந்தனர்.

வீட்டுக்குள் பலூன்கள் பல பறந்துகொண்டிருந்தன. உறவினர்களும் நண்பர்களும் ஆங்காங்கே நின்றபடியும் அமர்ந்தபடியும் பேசிக் கொண்டிருந்தனர்.

அந்த ஹாலின் ஒரு ஓரத்தில் கிடந்த இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்த வெற்றியை பார்த்தவுடன் அடையாளம் கண்டுக் கொண்டான் ஆரவ்.

இவன் இங்கே என்ன செய்கிறான் என்ற குழப்பத்தோடு அவனை வெறித்து கொண்டிருந்தவன் தனக்கு குளிர்பானம் கொண்டு வந்து தந்த தேன்மொழியிடம் "அது யார்.?" என சுட்டிக் காட்டி கேட்டான்.

வெற்றியை திரும்பிப் பார்த்த தேன்மொழி "அவன் என் அண்ணன்.. பெரியப்பா மகன்.." என்று பதில் சொன்னவள் மற்றவர்களுக்கு குளிர்பானம் வழங்க கிளம்பி விட்டான்.

வெற்றியை முறைத்தபடியே நின்று கொண்டிருந்தான் ஆரவ். அப்பாவியான தன் அக்காவை காதல் வலையில் சிக்க வைத்ததற்காக அவனை வெறுத்தான்.

தனது கைப்பேசியில் இருந்த அம்ருதாவின் புகைப்படத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான் வெற்றி. அவளைப் பிரிந்து வந்த நாட்களில் இருந்தே அவன் செய்யும் முக்கிய வேலை இதுவாகத்தான் இருந்தது. அவளை தன் மனதிலிருந்து தூக்கி எறிய முடியவில்லை அவனால். எப்போதுமே எதையுமே சாதாரணமாக கடந்துவிட முடியாது அவனால். அப்படி இருக்கையில் உயிருக்குள் கலந்த காதலை மட்டும் எப்படி உடனே மறப்பான்.?

"வெற்றி.." இளம் பெண் ஒருத்தியின் இசை குரலில் நிமிர்ந்தான். அவனின் அத்தை மகள் கீர்த்தனா நின்று கொண்டிருந்தாள். தன்னிடமிருந்த பலகார தட்டை அவனிடம் நீட்டினாள்.

"பாட்டி இதை உன்கிட்ட கொடுத்துட்டு வர சொன்னாங்க வெற்றி.."

இந்த வீட்டிற்கு வந்தாலே இப்படித்தான். பாட்டிக்கு இவன் எப்போதும் உண்டு கொண்டே இருக்க வேண்டும். தாத்தாவுக்கு இவன் எப்போதும் புன்னகைத்தபடி அவரின் கண் முன்னால் இருக்க வேண்டும். சித்திக்கும் சித்தப்பாவுக்கும் இவன் முகத்தில் கோபம் இருக்கக்கூடாது. அத்தைக்கும் மாமாவுக்கும் இவன் கலகலப்போடு மற்ற அனைவரோடும் பேசிக் கொண்டிருக்க வேண்டும்.

பலகார கட்டிலில் இருந்ததை சாப்பிட ஆரம்பித்தான் வெற்றி. அதே நேரத்தில் "அண்ணா உன்னை தாத்தா கூப்பிடுறாரு.." என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் தேன்மொழி.

வெற்றி பலகார தட்டை வைத்துவிட்டு எழுந்து நின்றான். தாத்தாவின் அறை நோக்கி நடந்தான்.

வழியில் நின்றிருந்த சொந்தங்கள் அனைவருக்கும் பதில் சொல்லிவிட்டு தாத்தாவின் அறையை அடைவதற்கே பத்து நிமிடங்கள் பிடித்து விட்டது அவனுக்கு.

"எத்தனை நாளா சொல்லிட்டு இருக்கேன்? ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் செய்றதுல உனக்கு என்ன கஷ்டம்.?" வெற்றி அறைக்குள் நுழைந்த அதே நொடியில் காட்டமாக கேட்டார் தாத்தா.

"நான் வேணா இப்படியே திரும்பிப் போய்டட்டுமா.?" என்றான் பாதி திரும்பியபடி.

"உன்னை யாரும் எதுவும் சொல்லிடக் கூடாதே.. உடனே ரோசம் பொத்துக்கிட்டு வந்துடும்.." என்றார் தாத்தாவின் அறைக்குள் அமர்ந்திருந்த மாமா கதிரேசன்.

அம்ருதாவை திருமணம் செய்யதான் நினைத்தான். ஆனால் அதுதான் நடக்கவில்லையே அவன் மட்டும் என்ன செய்வான்?

"தாத்தா நான் மெதுவா கல்யாணம் கட்டிக்கிறேன். இப்ப என்ன அவசரம்.?" என்றவன் அறைக்குள் இருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்தான்.

"உன் வயசுல எனக்கு உன் அப்பாவும் சித்தப்பாவும் பிறந்துட்டாங்க.." என்றார் தாத்தா.

வெற்றி நெற்றியை பிடித்துக் கொண்டான். இதற்கு என்னவென்று பதில் சொல்வது.?

வெற்றியின் மௌனம் கண்ட மாமா "சரி விடு வெற்றி. தாத்தா இப்படித்தான் ஏதாவது சொல்லுவார். நீ டென்சன் ஆகாதே.." என்றார் அவனை சமாதானப்படுத்தும் விதமாக. அவனின் பிரச்சனையை அந்த வீட்டிலிருந்த அனைவரும் அறிவர்.

எட்டு வருடங்களுக்கு முன்பு வெற்றியின் தாயார் இறந்து போனாள். அதுவரையிலும் மொத்த குடும்பமும் இதே வீட்டில்தான் மகிழ்ச்சியோடு இருந்தது.

அம்மா இறந்த பிறகு வெற்றிக்குள் பல மாற்றங்கள். அவனால் யாரிடமும் அதிகம் கலகலப்பாக பேச முடியவில்லை. முன்பு போல வெளிப்படையாக பழக முடியவில்லை. எதற்கெடுத்தாலும் கோபம் கொண்டான். யாரை வேண்டுமானாலும் அடித்து வைத்தான். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலமது. தினமும் ஏதோ ஒரு சண்டையை இழுத்து வந்தான். அவனால் வீட்டில் இருந்த அனைவருமே மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.

இவனால் வீட்டிலும் பிரச்சனை ஏற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாத அப்பா இவனை மட்டும் அழைத்துக் கொண்டு தனி வீட்டிற்கு சென்றுவிட்டார். வெற்றியும் அப்பாவும் தனிக்குடித்தனம் சென்றதில் இந்த வீட்டில் இருந்த யாருக்குமே விருப்பமில்லை. ஆனால் இது வெற்றியின் நலனுக்காக என்று சொல்லி பிடிவாதமாக அவனோடு அங்கேயே தங்கிவிட்டார் அப்பா.

அவ்வப்போது ஏதாவது விசேச நாட்களில் இந்த வீட்டிற்கு வந்து செல்வார்கள் அப்பாவும் மகனும். வெற்றியின் மீது அந்த வீட்டில் இருந்த அனைவருமே பாசம் கொண்டிருந்தார்கள். அவனின் கோபத்தை சரிசெய்ய எத்தனையோ மருத்துவமனைகள் சென்று பார்த்தாகி விட்டது. ஆனால் எதுவும் கை கொடுக்கவில்லை.

"அக்கா கேக் வெட்ட போறா.. உங்களையெல்லாம் வர சொன்னா.." என்று அறையின் வாசலில் வந்து நின்று அழைத்தாள் தேன்மொழியின் தங்கை கனிமொழி.

தாத்தா அவசரமாக தனது தலையை வாரிக் கொண்டார்.

மூன்று ஆண்களும் வெளியே நடந்தனர். ஹாலின் நடுவே இருந்த மேஜையின் மீது மெழுகுவர்த்தி அலங்காரத்தோடு காத்திருந்தது கேக்.

வாழ்த்து பாடலுக்குப் பிறகு கேக்கை வெட்டினாள் தேன்மொழி. தன் தாய் தந்தைக்கு ஊட்டிய பிறகு வெற்றிக்கு ஊட்டினாள்.

"நல்லாரு தங்கம்.." அவளின் தலையை தடவி தந்தவன் அங்கிருந்து நகர்ந்தான். நடந்தவனின் பார்வையில் ஆரவ் விழுந்தான்.

மறக்க நினைத்தவளின் முகம் மீண்டும் நினைவிற்கு வந்தது. காயங்களை எவ்வளவு தாங்குவது என்று தெரியவில்லை.

கண்கள் கலங்கி விடக்கூடாது என்ற எச்சரிக்கையோடு அங்கிருந்து நகர்ந்தான். இல்லையேல் இதற்கு வீட்டில் இருக்கும் பலருக்கும் பதில் சொல்லவேண்டி வரும்.

தோட்டத்திற்கு நடந்தவனைப் பின்தொடர்ந்து வந்திருந்தான் ஆரவ்.

"நில்லுங்க.." என்று அழைத்தவன் அவன் திரும்பி பார்த்ததும் "நீங்க என்ன பைத்தியமா.?" எனக் கேட்டான்.

பற்களை கடித்த வெற்றி "அப்படி இருந்தாதான் உனக்கு என்ன போச்சி.?" என்றான் எரிச்சலோடு.

"சைக்கோ மாதிரி நடந்துக்கறிங்க.. என் அக்கா மேல சுடு காபியை ஊத்தி, அவளை என் கண்ணு முன்னாடியே அத்தனை அடிச்சிங்க.. இது கொஞ்சமும் சரி கிடையாது.. அன்னைக்கு அவ மேல இருந்து கோபத்துல உங்களை எதுவும் செய்யல. இல்லன்னா கை காலை உடைச்சி விட்டிருப்பேன்.." என்று எச்சரித்தவனின் சட்டையை சட்டென்று பிடித்தான் வெற்றி.

கொஞ்சம் அசந்து விட்டான் ஆரவ்‌. ஆனாலும் தனது தடுமாற்றத்தை அவனிடம் காட்ட விரும்பவில்லை.

"உனக்கு எதுவும் தெரியாது. அவ என்னோடு வாழ்ந்த வாழ்க்கை என்னன்னு உங்க யாருக்கும் தெரியாது.. பாசத்தையும் காதலையும் போதை மாதிரி தந்து என்னை அவளுக்கு அடிமையாக்கி வச்சிட்டா.. நான் அவளுக்கு முழுசா அடிக்டான பிறகு கை விட்டு போயிட்டா.. என் வலி, கோபம், வருத்தம் எதுவும் உனக்கு தெரியாது. உயிரில்லா பிணம் போல சுத்திட்டு இருக்கேன் நான். தூரமா இருந்து பார்க்கும் உனக்கு என்னைப் பத்தி எதுவும் தெரியாது.." என்றவன் இடது கையால் தனது முகத்தை தேய்த்து கொண்டான்.

"சரி விடு.. என்னோடு அவ்வளவு பழகிய உன் அக்காவே என்னை புரிஞ்சிக்கல.. நீ எல்லாம் யாரு.?" என கேட்டபடி அவனின் சட்டையை விட்டான்.

ஆரவ்வின் கண்களுக்கு இவன் என்னவோ முழு பைத்தியக்காரன் போலதான் தெரிந்தான்.

"ஆரவ்.." தேன்மொழியின் குரலில் இருவரும் திரும்பினர்.

அருகில் வந்தவள் தன் கையில் இருந்த சிறு தட்டை அவனிடம் நீட்டினாள். துண்டு போடப்பட்ட கேக் இருந்தது.

"உன்னை உள்ளே காணல. அதனாலதான் வந்தேன்.." என்றாள்.

"தேங்க்ஸ்.." என்றவன் அவசரமாக தனது பாக்கெட்டில் இருந்து வண்ணத் தாள் சுற்றிய சிறு பெட்டியை எடுத்து அவளிடம் நீட்டினான்.

"என்னப்பா கிப்டெல்லாம் வாங்கிட்டு வந்திருக்க.?" என்று வெட்கப்பட்டாள் தென்மொழி.

ஆரவ் பதில் சொல்லாமல் புன்னகைத்தான்.

வெற்றி அவர்கள் இருவரையும் விட்டுவிட்டு வீட்டிற்கு நடந்தான்.

"அண்ணா இன்னைக்கு நைட் இங்கேயே இரு.. நாளைக்கு அந்த வீடு போகலாம்.." என்று கட்டளையிட்டாள் தேன்மொழி.

திரும்பிப் பார்த்து சரி என்று தலையசைத்துவிட்டு நடந்தான் வெற்றி.

"சரியான திமிர்.." ஆரவ்வின் முணுமுணுப்பை கேட்டு கோபம் வந்தது தேன்மொழிக்கு.

"அவன் என் அண்ணன்.. அவன் எவ்வளவு நல்லவன்னு எனக்கு தெரியும். அவனுக்கு திமிர் இருந்தா கூட காரணத்தோடுதான் இருக்கும்.." சிடுசிடுப்போடு சொன்னவள் கோபத்தோடு அங்கிருந்து கிளம்பினாள்.

நடந்தவளின் கை பற்றி நிறுத்தினான் ஆரவ்.

"அவனும் என் அக்காவும் லவ் பண்ணிட்டு இருந்தாங்க. ஆனா பிரேக்அப் பண்ணிட்டாங்க.. என் கண் முன்னாடியே என் அக்காவை எத்தனை அடி அடிச்சான் தெரியுமா? இவ மேல எனக்கு எவ்வளவு கோபம்ன்னு சொன்னா உனக்கு புரியாது.." என்று தன் பக்க நியாயத்தை விளக்கிச் சொன்னான்.

யோசித்தாள் தேன்மொழி. "சாரிப்பா அவன் அவ்வளவு சீக்கிரத்தில் கை நீட்டிட மாட்டான். ரொம்ப கோபம் வந்தா மட்டும்தான் அடிப்பான். அவனுக்காக நான் சாரி கேட்கறேன்.."

"பரவால்ல விடு.. இன்னொரு முறை அவன் என் அக்காவை நெருங்காம இருந்தா போதும்.." என்றவன் தன்னிடம் இருந்த கேக்கை எடுத்து அவளுக்கு ஊட்டி விட்டான்.

வெட்கமாக இருந்தது அவளுக்கு.

"தேன்மொழி.." தயக்கமாக அழைத்தவன் அவள் நிமிர்ந்ததும் "என்னை உனக்கு பிடிச்சிருக்கா.?" என கேட்டான்.

மீண்டும் தரை பார்த்தாள் தேன்மொழி.

"நான் யோசிச்சி சொல்றேன்.." சிறு குரலில் சொன்னாள்.

"ஓகே.."

அன்று இரவு தேன்மொழியின் பிடிவாதத்தால் வெற்றி அங்கேயேதான் தங்கினான்.

மறுநாள் காலையில் அவசரமாக உணவை முடித்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.

டைனிங் ஹாலில் அமர்ந்திருந்த மற்ற அனைவரும் அவனைக் கண்டு சலித்துக் கொண்டனர்.

"ஒருநாள் சேர்ந்து தங்குவதால் இந்த பையன் என்ன குறைஞ்சிட போறான்.?" என்று திட்டினாள் பாட்டி.

"நானொரு ரகசியம் சொல்லட்டுமா.?" என்று கேட்ட தேன்மொழியை அனைவரும் குறுகுறுப்பாக பார்த்தனர்.

"வெற்றி அண்ணா ஒரு பொண்ணை லவ் பண்ணியிருக்கான். இப்ப பிரேக்அப்பும் பண்ணியிருக்கான்.."

சுற்றி இருந்தவர்கள் சந்தேகத்தோடு தேன்மொழியை பார்த்தனர்.

"யார் அந்த பொண்ணு.?" என விசாரித்தார் தாத்தா.

விவரத்தை சொல்ல ஆரம்பித்தாள் தேன்மொழி. ஆனால் தான் உளறிக்கொட்டி விஷயத்தால் எவ்வளவு பிரச்சினைகள் வரும் என்று அறியாமல் போய்விட்டாள் அவள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN