கணவன் 5

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தேன்மொழி சொன்ன விசயம் கேட்டறிந்த தாத்தா அன்று மாலையில் முத்துராமை வீட்டிற்கு வர வைத்தார்.

"என் பேரனுக்கும் அந்த பொண்ணுக்கும் நடுவுல என்னதான் ஆச்சி?"

தாத்தாவின் விசாரணை கண்டு தயங்கினான் முத்துராம்.

'இவர் உட்கார்ந்திருக்கும் ஸ்டைலை பார்த்தாலே பயமா இருக்கு.. விசயத்தை சொன்னா அவன் மிதிப்பான். சொல்லலன்னா இவர் விட மாட்டாரு. வசமா வந்து சிக்கிட்டேன் போலயே..' வருத்தமாக நினைத்தவனை முறைத்தார் தாத்தா.

"கேட்கறவன் கேன பையலாடா.? எவ்வளவு நேரமா காத்திருக்கேன்?" தாத்தா கத்தினார்.

நேரமென்று பார்த்தால் இரண்டு நிமிடங்கள் கூட ஆகியிருக்காது.

பயந்தபடியே விசயத்தை சொல்ல ஆரம்பித்தான் முத்துராம். தனக்கு தெரிந்த அனைத்தையும் சொன்னவன் நான்கு நாட்கள் முன்பு வெற்றி தன்னிடம் கோபத்தில் உளறியிருந்த கர்ப்பம், கரு கலைப்பு விசயத்தையும் சொல்லி விட்டான்.

அவ்விசயத்தை கேட்டவுடன் தாத்தாவின் முகம் முழுதாய் மாறி போனது.

எவ்வளவு பெரிய விசயம். இவ்வளவு சாதாரணமாக கையாண்டு இருக்கிறார்கள் என்று கோபம் வந்தது. சிறு பிள்ளைகள் செயல் இப்படிதான் என்று திட்டினார்.

"குடும்பத்தோட வாரிசை வயித்துல சுமந்த பொண்ணை பிரேக்அப் பண்ணிட்டு வந்திருக்கிறானா அந்த பையன்?" என்று அவர் திட்ட ஆரம்பிக்க, முத்துராம் சோதனையாக வருந்த ஆரம்பித்தான். தான் உளறிக் கொட்டியதை அறிந்த பிறகு வெற்றி தன்னை தூக்கி போட்டு மிதிக்க போகிறான் என்ற விசயம் மட்டும் அவனுக்கு தெளிவாக தெரிந்தது.

"தாத்தா இதை நான்தான் உங்ககிட்ட சொன்னேன்னு அவன்கிட்ட சொல்லிடாதிங்க.." என்று கேட்டு விட்டு அங்கிருந்து கிளம்பினான் முத்துராம்.

தாத்தா அன்று முழுக்க யோசித்தார். மறுநாள் அம்ருதாவின் வீடு தேடி சென்றார். அம்ருதா பணிக்கு கிளம்பி இருந்த நேரத்தில் வந்திருந்த இந்தப் பெரியவரை வரவேற்றனர் அம்ருதாவின் பெற்றோர்.

"யார் நீங்க.?"

தன்னைப் பற்றிய விவரங்களை சொன்னவர் "சின்ன புள்ளைங்க தப்பு பண்ணிட்டாங்க.. அப்படியே விட முடியாது இல்லையா.? அதனாலதான் பேசலாம்ன்னு நானே தேடி வந்து இருக்கேன்.!" என்றார்.

ராமனும் மேகலாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"நாங்க என்னங்க சொல்றது? ஆசையா வளர்த்த பொண்ணு.. இப்படி பண்ணிட்டாளேன்னு இவர் இந்த ஒரு வாரமா சரியா சாப்பிட கூட இல்ல.. அவளோடு சரியா பேசவும் இல்ல.." என்று புலம்பினாள் மேகலா.

"இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிட்டா சரியா இருக்கும்ன்னு நான் நினைக்கிறேன்.. எங்க குடும்ப வாரிசை சுமந்த பொண்ணு.. அவளை விட்டுட எங்களால முடியாது.. நீங்கதான் இனி உங்க விருப்பத்தை சொல்லணும்.." தாத்தா சொன்னது கேட்டு மறுப்பாக தலையசைத்தார் ராமன்.

"உங்க பேரன் ரொம்ப திமிரா நடந்துக்கறாரு.. எங்க முன்னாடியே எங்க பொண்ணை அடிக்கிறாரு. சூடான காபியை அப்படியே தூக்கி தரையில கொட்டிட்டாரு. பார்த்த எனக்கு பக்குன்னு ஆகிடுச்சி. அவரை நம்பி எப்படி எங்க பொண்ணு கட்டித் தருவது.?" என்று கோபத்தோடு கேட்டார் ராமன்.

இரு கை கூப்பி வணங்கினார் தாத்தா. அவரின் செயல் கண்டு மேகலாவுக்கும் ராமனுக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது.

"என்னங்க இப்படி பண்ணிட்டிங்க.?" என்றபடி எழுந்து நின்றார் ராமன்.

"என் பேரனுக்கு அடிக்கடி கோபம் வரும்ங்க. அது என்னவோ உண்மைதான். ஆனா நீங்க என்னை நம்பி உங்க பொண்ணை கட்டி தரலாம். அவ மேல தூசு துரும்பு கூட விழாது. அதுக்கு நாங்க பொறுப்பு. எங்களோடது கூட்டுக் குடும்பம். என் பேரனை மட்டும் அவங்க அப்பன் தனியா கூட்டி போய் வச்சிருக்கான்.. நீங்க உங்க பொண்ணை தந்தா என் பேரனையும் எங்க வீட்டுக்கு திருப்பிக் கூட்டிப்போம். உங்க பொண்ணையும் பத்திரமா பார்த்துப்போம்.." என்றார்.

"கொஞ்சம் யோசிச்சிட்டு பதில் சொல்றோங்க.." ராமன் சொன்னது கேட்டு "சரிங்க.." என்ற தாத்தா தங்கள் வீட்டு முகவரியை அவர்களிடம் எழுதி தந்து விட்டு வந்தார்.

ராமன் அவர்களின் குடும்பத்தை பற்றி விசாரித்தார். விசாரித்து அனைத்த இடத்திலுமே குடும்பத்தை பற்றி நல்ல முறையில்தான் சொன்னார்கள். வெற்றிக்கு மட்டும் கடந்த எட்டு ஆண்டுகளாக அளவுக்கு அதிகமாக கோபம் வந்துக் கொண்டிருக்கிறது என்பதையும் அறிந்துக் கொண்டார். காரணம் உள்ள இடத்தில் மட்டும்தான் அவனுக்கும் கோபம் வருகிறது என்பதையும் புரிந்து கொண்டவர் தனது மனைவியோடு கலந்து ஆலோசித்தார்.

"கோபம்தான் எனக்கு கொஞ்சம் நெருடலாக இருக்குங்க.." என்றாள் மேகலா.

"கொஞ்ச வருசத்துல சரியாகிடும்னு டாக்டர்ஸ்ஸே சொல்லியிருக்காங்க.. நல்ல குடும்பம். வசதி வாய்ப்பு எல்லாமே இருக்கு. அதையும் தாண்டி உன் பொண்ணு ஆசைப்பட்டுட்டா.. பேசி முடிச்சிடலாம்.." என்றார்.

அடுத்த நாள் காலையில் உணவை சாப்பிடுகையில் "உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு இருக்கோம்.." என்று மகளிடம் சொன்னார் ராமன்.

"உங்க இஷ்டம்ப்பா.." என்றாள் நிமிர்ந்து பார்க்காமல்.

ஒரு வாரத்திற்குப் பிறகு தந்தை பேசுகிறார் அதுவே அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவரிடம் மறுத்து பேசி மீண்டும் வெறுப்பை வாங்கிக் கொள்ள விரும்பவில்லை அவள். திருமணம் செய்வதும் தவறாக தோன்றவில்லை. அதனால் உடனே ஒத்துக்கொண்டாள்.

"மாப்பிள்ளை யார்ன்னு தெரிய வேணாமா.?"

"நீங்க யாரை கை காட்டுறிங்களோ அவங்களுக்கு நான் கழுத்தை நீட்டுறேன் அப்பா.." தனது முன்னால் காதல் தந்த வலியில் இருந்தவளுக்கு மாப்பிள்ளை யாரென்று அறிந்து கொள்ளும் ஆசை கூட இல்லாமல் போய்விட்டது.

அடுத்த இரண்டாம் நாள் காலையில் வேலைக்கு தயாராகிக் கொண்டிருந்த மகளிடம் "அம்ருதா இன்னைக்கு சாயங்காலம் உன்னை பொண்ணு பார்க்க வராங்க.. அஞ்சி மணிக்கு கே.எம் ஹோட்டல்ல இரண்டாவது ஹாலுக்கு வந்துடு.." என்று சொல்லி அனுப்பினாள் மேகலா.

"சரிம்மா.." என்றுவிட்டு கிளம்பியவள் வங்கியின் கார் பார்க்கிங்கில் தனது வாகனத்தை நிறுத்தி விட்டு இறங்கினாள்.

"அம்ருதா.." பாலாஜியின் குரலில் திரும்பிப் பார்த்தாள்.

தனது பைக்கை நிறுத்தி விட்டு இறங்கியவன் இவளை நோக்கி வேகமாய் நடந்து வந்தான். ஒரு மாதத்திற்கு பிறகு அவனைப் பார்க்கிறாள் அம்ருதா. மகிழ்ச்சியோடு சென்று நண்பனை அணைத்துக் கொண்டாள்.

"உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன் பாலாஜி.." என்றாள்.

"மீ டூ.." என்றவன் அவளை அழைத்துக்கொண்டு வங்கிக்குள் நுழைந்தான்.

பாலாஜி தங்க நகை கடன் பிரிவில் வேலை செய்து கொண்டிருக்கிறான். அவனும் அம்ருதாவும் கல்லூரி காலத்திலிருந்தே நண்பர்கள்.

"நீயும் வெற்றியும் பிரேக்அப் பண்ணிட்டிங்களாமே, உண்மையா.?" சந்தேகத்தோடு கேட்டான் மாடிப்படிகளில் ஏறியபடியே.

சுவரைப் பார்த்தபடி ஆமென்று தலையசைத்தவள் "உனக்கு இப்போது உடம்பு எப்படி இருக்கு.?" என கேட்டாள்.

"என்னை விடு. நீ ஏன் வெற்றியை பிரேக்அப் பண்ண.? அவன் உன்னை ரொம்ப லவ் பண்றான்.." என்றான் குறையாக.

நண்பனை படியிலேயே நிறுத்தினாள் அம்ருதா. அவனைத் தன் பக்கம் திருப்பினாள்.

அவனது சட்டையின் கையை மேலே மடக்கி விட்டாள். அவனின் வலது கைப்புறத்தில் பன்னிரெண்டு தையல்களோடு இருந்த காயம் இப்போது வடுவாக காணப்பட்டது.

"இதுக்கு என்ன செய்யறது.?" என கேட்டாள் கோபத்தோடு.

"விடுப்பா எனக்கும் அவனுக்கும் செட் ஆகாதுன்னுதான் எல்லோருக்குமே தெரியுமே.." என்றவன் சந்தேகத்தோடு தோழியை பார்த்தான். "நீ எனக்காக அவனை பிரேக்கப் பண்ணியா.?" எனக் கேட்டான்.

பதில் சொல்லவில்லை அம்ருதா. ஆனால் அவளின் மௌனம் அவனுக்கான பதிலை சொன்னது.

"நான் இதுக்காகத்தான் இந்த விசயத்தை உங்ககிட்ட சொல்லவே இல்ல‌‌.." என்று கோபத்தோடு சொன்ன பாலாஜி அவளை அப்படியே விட்டுவிட்டு மேலேறினான். அவனின் கோபம் கண்டு நெற்றியைத் தேய்த்துக் கொண்டாள் அம்ருதா.

அவனை சமாதானம் செய்யலாம் என நினைத்து படியேறினாள். அதே சமயத்தில் அவளின் கைப்பை கீழே விழுந்தது. அதை எடுக்க நினைத்து திரும்பியவளை இடித்துக் கொண்டு மேலே ஏறியது ஒரு ஜீவன்‌. நிமிர்ந்து பார்க்காமலே தெரியும் அது யாரென்று அவளுக்கு.

"காலங்காத்தாலயே இவ முகத்துல விழிச்சிருக்கோம் பாரு.." என்று சலித்துக் கொண்டு அவளைத் தாண்டி நடந்தான் வெற்றி.

அவனின் சலிப்பு கண்டு கடுப்பானாள் அம்ருதா.

வெற்றி தனது கேபினுக்கு சென்று அமர்ந்த வேளையில் அவனின் கைபேசி ஒலித்தது. தாத்தா அழைத்திருந்தார். எடுத்து பேசினான்.

"இன்னைக்கு சாயங்காலம் உனக்கு பொண்ணு பார்க்க போறோம்.." என்றார் அவர்.

"ஏன் தாத்தா இப்படி உயிரை வாங்கறிங்க.? எனக்கு அந்த இழவெல்லாம் என்னத்துக்கு.? நானும் ஒரு வாரமா சொல்லிட்டு இருக்கேன் இல்லையா.? அப்போதும் போன் பண்ணி பொண்ணு பார்க்க போறோம்ன்னு திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டே இருந்தா என்ன அர்த்தம்.?" என்று கத்தி வைத்தான்.

எதிர்முனையில் இருந்த தாத்தா தனது காதுகளை கொஞ்சமாக அசக்கி விட்டுக் கொண்டார்.

"உன் கோபத்தையெல்லாம் என்கிட்ட காட்டாத வெற்றி. அப்புறம் கை காலை முறிச்சி போட்டுடுவேன்.." மிக அமைதியாக சொன்னார்.

வெற்றி ஒற்றை கையால் முகத்தை பொத்திக் கொண்டான். இதுவரை தாத்தாவிடம் மட்டும்தான் தனது கோபத்தைக் காட்டாமல் இருந்தான். ஆனால் இன்று அவரிடமும் காட்டியாகிவிட்டது. அம்ருதாவை பார்த்த கோபத்தில் வந்தவன் அதே மனநிலையோடு தாத்தாவிடம் பேசி விட்டான்.

"சாரி தாத்தா.." என்றான் மன்னிப்புக் கோரும் குரலில்.

"உன் சாரி எனக்கு எதுக்கு.? மரியாதையா சாயங்காலம் கே.எம் ஹோட்டலோட செகண்ட் ஹாலுக்கு வந்து சேரு.." என்றவர் அழைப்பை துண்டித்துக் கொண்டார்.

அன்று முழுக்க வெற்றிக்கு வேலையே ஓடவில்லை.

முற்பகல் வேளையில் கேன்டினில் அமர்ந்து தேநீர் அருந்திய வண்ணம் தனது பிரச்சனையைப் பற்றி நண்பன் முத்துராமிடம் சொன்னான் வெற்றி. இன்று மாலையோ அல்லது நாளை காலையோ தனக்கு கச்சேரி உண்டு என்பதை புரிந்துகொண்ட முத்துராம் "உன் விருப்பப்படி செய்டா. உன்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது இல்லையா.?" என கேட்டான்.

"என் தாத்தாவோட பிடிவாதத்தை பத்தி உனக்கு தெரியாதா.? அதுவும் இப்ப மொத்த குடும்பமும் சேர்ந்து பிளான் பண்ணிட்டு இருக்காங்க. அவங்க முடிவு பண்ணிட்டா எனக்கு நிஜமா கல்யாணம் ஆகிடும் முத்து. எப்படி தப்பிக்கிறதுன்னு எனக்கு தெரியலடா.." என்றான் புலம்பலாக.

"அதுதான் பிரேக்அப் ஆயிடுச்சே. நீ‌ ஏன் கல்யாணம் பண்ணிக்க கூடாது.?" என கேட்டான் நண்பன்.

"பிரேக்அப் பண்ணிட்டா கல்யாணம் பண்ணிக்கணுமா.? முடியலடா என்னால. மறக்க முடியல அவளை.. ஓடிப் போய் அவ கால்ல விழுந்துடலாமான்னு கூட தோணுது‌. அந்த அளவுக்கு அவளுக்கு அடிக்ட் ஆகிட்டேன்டா.." என்று தலையை பிடித்தபடி சொன்னான்.

"சரி விடுடா. எல்லாம் விதிப்படிதான் நடக்கும்.." என்று நண்பனுக்கு சமாதானம் சொன்ன முத்துராம் நாற்காலியிலிருந்து எழுந்து நடந்தான். நண்பனை தொடர்ந்து நடந்த வெற்றி கேன்டினுக்குள் சிரித்துப் பேசியபடி நுழைந்த அம்ருதாவையும் பாலாஜியையும் கண்டு நெஞ்சுக்குள் தீ பிடித்தவன் போலானான்.

இவனைக் கண்டதும் நெருங்கி வந்த பாலாஜி "வெற்றி, நீ ஏன் இவளை பிரேக்அப் பண்ணிட்ட.?" எனக் கேட்டான் வருத்தத்தோடு.

அவனின் மூக்கில் ஒரு குத்து விட்டான் வெற்றி. மூக்கை பிடித்தபடி ஓரடி பின்னால் தள்ளி நின்றான் அவன். முத்துராம் கேன்டினில் இருக்கும் யாராவது தங்களை பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தான். நல்லவேளையாக அந்த நேரத்தில் அங்கு கூட்டம் இல்லை.

அம்ருதா நண்பனுக்கு முன்னால் வந்து நின்றாள். முன்னாள் காதலனை முறைத்தாள்.

"மரியாதையா இருந்துக்க வெற்றி.." என்றாள் விரல் நீட்டி.

அவள் மேலே பேசுமுன் கைகாட்டி தடுத்தான் வெற்றி. "நான் உங்களை டிஸ்டர்ப் பண்ணேன்னா.?‌ அவன் என்னோடு பேசினான். நான் அவனை அடிச்சேன். நடுவுல உங்களுக்கு என்ன சம்பந்தம் மேடம்.?" எனக் கேட்டான்.

"இவனைப் போல ஒரு மிருகத்தோடு உனக்கு என்ன பேச்சி பாலாஜி ?" எனக் கேட்டபடி நண்பனை அழைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள் அம்ருதா.

பாலாஜியை பார்க்கும் ஒவ்வொரு முறையும் தனக்குள் கொலைவெறி உண்டாவதை உணர்ந்தான் வெற்றி.

அப்படி என்னதான் ஆயிற்று வெற்றிக்கும் பாலாஜிக்கும் இடையில்.?‌

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN