கணவன் 6

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கேன்டினை விட்டு வெளியே செல்லும் வெற்றியின் முதுகை வெறித்தபடி இருந்த நண்பனின் கையில் தட்டினாள் அம்ருதா.

"அவனை பார்க்காதே விடு.." என்றவள் எழுந்து சென்று இரண்டு காப்பிகளை வாங்கி வந்தாள்.

பாலாஜி காபியைப் பருகினான். "இருந்தாலும் நீ ஒரு நல்ல பையனை மிஸ் பண்ணிட்டியோன்னு தோணுது.." என்றான் கவலையாக.

"எனக்கு இப்போதுதான் விடுதலை கிடைச்சிருக்கு. எதுவும் புரியாம பேசாதே.." நண்பனிடம் கோபித்து கொண்டவள் காப்பியை அருந்தினாள்.

"என்னை இன்னைக்கு பொண்ணு பார்க்க வராங்க.." என்றாள் சில நிமிடங்கள் கழித்து.

அவள் சொன்ன செய்தி கேட்டு ஆச்சரியப்பட்டான் அவன். "நீ நிஜமா இவனை மறந்துட்டியா.?"

"சுத்தமா பிடிக்கல பாலாஜி. ரொம்ப அழுத்தம் தரான்.."

தோழியின் கையைப் பற்றிய பாலாஜி "கவலைப்படாதே.. எல்லாம் சரியா போயிடும். ஆனா இவன் மேல இருக்கிற கோபத்துல எந்த அவசர முடிவும் எடுக்காதே.." என்று எச்சரித்தான்.

சிரித்தாள் அம்ருதா. "நான் இந்த திருமணத்துக்கு முழுசா சம்மதிக்கிறான். இவனை என் மனசுல இருந்து தூக்கி எறியறதுக்கு இதை தவிர வேற ஆப்சனே கிடையாது.."

"அவ்வளவு டீப்பா லவ் பண்ணிட்டு உடனே பிரியறது சுலபமில்ல அம்ருதா. குளிருக்கு பயந்து நெருப்பில் குதிச்ச அதே கதை ஆகிட போகுது உன்னோடது. எதுக்கும் பார்த்து பத்திரமா முடிவு பண்ணு. உன்னோட பிரெண்டா நெனச்சி‌ இதை சொல்றேன். நீ நாளைக்கு உடைஞ்சி அழுவதை நான் பார்க்க விரும்பல.."

"ஏற்கனவே நிறைய அழுதுட்டேன் பாலாஜி. இதுக்கு மேலயும் இவனை காரணம் காட்டி அழுக விரும்பல.. மாப்பிள்ளை பிடிச்சிருந்தா கண்டிப்பா நான் அவனை கல்யாணம் பண்ணிப்பேன்..." என்றவள் மாலையில் கிளம்பும்போது அவளோடு சேர்ந்து ஹோட்டலுக்கு வந்தான் பாலாஜி.

ஹோட்டலின் வாசலில் நின்று கொண்டவன் "நான் இங்கேயே வெயிட் பண்றேன். நீ பார்த்து பேசிட்டு வா.." என்று அனுப்பி வைத்தான்.

இரண்டாவது ஹாலில் நுழைந்தாள் அம்ருதா. நீண்டிருந்த மேஜையை சுற்றி அமர்ந்திருந்தார்கள் இவளைப் பெண் பார்க்க வந்தவர்களும், இவளின் பிறந்த வீட்டாரும்.

அம்ருதா புன்னகைத்தபடி அம்மாவின் அருகே வந்து நின்றாள். ஆரவ் தனக்கு முன்னால் அமர்ந்திருந்த இளம்பெண்ணை ஓரக்கண்ணால் ரசித்துக் கொண்டிருந்தான். தம்பியின் விழிகள் போன திசை கண்டு மனதுக்குள் சிரித்தாள் அம்ருதா.

"இப்படி உட்கார் பாப்பா.." என்றாள் எதிரே இருந்த பாட்டி.

புன்னகைத்தபடியே நாற்காலியில் அமர்ந்தாள்.

பெண் பார்க்க வந்திருந்த கூட்டத்திலிருந்த இளம் பெண்கள் இருவர் இவளைப் பார்த்து விட்டு தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

"நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க.." என்று இளம் பெண் ஒருத்தி சொல்லவும், "தேங்க்ஸ்.." என்று வெட்கப்பட்டு தலை குனிந்தாள் அம்ருதா.

பெண்பார்க்க வந்தவர்கள் இவளிடம் பொதுவாய் விசாரித்தார்கள். அவர்களின் பேச்சும் உபசரிப்பும் அம்ருதாவுக்கு பிடித்திருந்தது. அவர்களின் கூட்டுக் குடும்பமும் அவளுக்குப் பிடித்திருந்தது. அவர்களைப் பார்க்கையில் எங்கோ பார்த்த முகசாயல் என்று தோன்றியது. ஆனால் எங்கு பார்த்தோம் என்றுதான் அவளுக்கு நினைவில் இல்லை.

அவள் வெற்றியின் தந்தையைத் தவிர வேறு யாரையும் இதுவரை பார்த்ததில்லை. இந்தப் பெண் பார்க்கும் படலத்திற்கு வெற்றியின் அப்பாவும் வந்திருக்கவில்லை. ஏதோ ஒரு குடும்பம் என நினைத்து அமர்ந்திருந்தாள் அவள்.

மாலை வேளையில் தனது பணியை முடித்துக் கொண்டு கிளம்பினான் வெற்றி.

தனது கை கடிகாரத்தை பார்த்த மாப்பிள்ளையின் தாத்தா, "சாரிம்மா இப்ப வந்துடுவான் அவன்.." என்றார்.

கே.எம் ஹோட்டலின் பார்க்கிங்கில் பைக்கை நிறுத்தியவன் கீழே இறங்கினான். கலைந்திருந்த தலையை கண்ணாடி வழியே பார்த்தான். அந்த தலையைக் கோதிக் கொள்ள வேண்டுமென்று தோன்றவில்லை.

போனை எடுத்தவன்‌ கீர்த்தனாவுக்கு அழைத்தான்.

"உன் அண்ணன் வந்துட்டாராம் தேன்மொழி.." என்று கீர்த்தனா சொல்லியவுடன் அங்கிருந்து துள்ளிக் கொண்டு ஓடினார்கள் தேன்மொழியும் கனிமொழியும்.

ஹாலினை நோக்கி நடந்து கொண்டிருந்த வெற்றி எதிரே வந்து நின்ற தங்கைகளை கண்டு முகம் மலர்ந்தான்.

"அண்ணா எனக்கு அண்ணியை ரொம்ப பிடிச்சிருக்கு.." என்றாள் கனிமொழி.

அவளின் காதை பற்றி செல்லமாக கிள்ளியவன் "எனக்கு இந்த பெண் பார்க்கும் படலத்தையே பிடிக்கல. நீ அதுக்குள்ள அண்ணின்னு சொல்றியா.?" என கேட்டான் கேலியாக.

"வந்து பொண்ணை பாரு. அப்புறம் நீயே சொல்லுவ அவங்கதான் எங்களோட அண்ணின்னு.."

"உனக்கு சொன்னா புரியாது செல்லம். அது.. லவ் இருக்கு இல்லையா.? அது இங்கே உருவாகும்.." என்ற தன் நெஞ்சை சுட்டிக் காட்டினான். "இந்த மனசுக்கு எல்லாரையும் பிடிச்சிடாது.. அந்த மனசுக்குன்னு ஒருத்தங்க இருப்பாங்க. அவங்களோட மட்டும்தான் அது அந்த லவ்வை உணரும்.." என்று கனிமொழிக்கு பாடம் எடுத்தான்.

அவன் ஹாலுக்குள் நுழையும் முன் அவனை நிறுத்தினாள் தேன்மொழி. அவனது கழுத்தில் சங்கிலி ஒன்றை அணிவித்தாள்.

"என்ன இது.?" என்றவனிடம் "இது பெரியம்மாவுடையது.. இதை நீ கழுத்துல போட்டிருக்கும் வரை யார்கிட்டயும் கோபப்படக் கூடாது.." என்றவள் அவனது வலது கையை எடுத்து தன் தலை மீது வைத்தாள். "இன்னைக்கு இந்த ஹோட்டலை விட்டு வெளியே போகும் வரை நீ கோபமே படக்கூடாது. இது என் மேல சத்தியம்.." என்றாள்.

வெற்றி அவளை விசித்திரமாக பார்த்தான். அவனது பார்வையை கண்டு கொள்ளாதவள் அவனை இழுத்துக் கொண்டு உள்ளே நடந்தாள்.

ஹாலுக்குள் நுழைந்த நொடியிலேயே அம்ருதாவின் சிரிப்பு சத்தத்தை கேட்டு விட்டான் வெற்றி.

சந்தேகத்தோடு பார்த்தான். அவனுக்கு முதுகு காட்டி அமர்ந்திருந்தவள் அவனது குடும்பத்தாரோடு சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள். குழப்பமாக இருந்தது அவனுக்கு.

அவனை பிடித்து இழுத்துக்கொண்டு நடந்த தேன்மொழி "மாப்பிள்ளை வந்துட்டாரு.." என்று சொன்னாள்.

அம்ருதா திரும்பிப் பார்த்தாள். இவனைக் கண்டதும் குழம்பிப் போனாள். கொஞ்சம் அதிர்ந்து போனாள்.

"இப்படி வந்து உட்காரு அண்ணா.." என்று அவனை நாற்காலியில் தள்ளினாள் தேன்மொழி. அவனது பக்கத்திலேயே அமர்ந்து கொண்டவள் அவனது கையை இறுக்கமாக பற்றிக்கொண்டாள்.

வெற்றி வாய் பேசும் நிலையில் இல்லை. அதிர்ச்சியில் இருந்தவனை பார்த்துக் கொண்டிருந்த அம்ருதாவுக்கும் அங்கே நடக்கும் விசயம் புரியவில்லை.

"உன் குழப்பம் எனக்கும் புரியுதும்மா.." என்று பேச ஆரம்பித்தார் தாத்தா.

"சின்ன பிள்ளைங்க உங்களுக்கு இந்த வாழ்க்கையை பத்தி சரியா தெரியல. என் பேரன் ரொம்ப நல்ல பையன். இவனை கல்யாணம் பண்ணிக்க. உன்னோட வாழ்க்கை ஹேப்பியா இருக்கும். அதுக்கு நான் கேரண்டி தரேன்.." என்றார்‌

வெற்றியை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்த அம்ருதா தாத்தாவை இளக்காரமாக பார்த்தாள். இது வெற்றியின் குடும்பம் என அறிந்த பிறகு அவளால் அங்கு நிற்க கூட முடியவில்லை.

அவளின் பார்வை கண்டு எதிரே இருந்த அனைவருக்கும் ஒரு மாதிரி ஆகி போனது. இவ்வளவு நேரமும் கலகலப்பாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவளால் இப்படி வெறுப்பாக கூட பார்க்க முடியுமா என்று சந்தேகமாக இருந்தது.

வெற்றி கண்களை மூடினான். கைவிரல்களை இறுக்கிக் கொண்டான். தேன்மொழியின் மீது செய்திருந்த சத்தியம் நினைவிற்கு வந்தது. இந்த ஒற்றை நாளை மௌனத்தோடு கடந்து விட்டால் போதும் என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டிருந்தான்.

"என் பேரன் என்ன தப்பு செஞ்சிருந்தாலும் அவன் சார்பா நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்ம்மா.." என்றாள் பாட்டி.

'பாட்டி நான் எந்த தப்பும் செய்யல..' என்று மனதுக்குள் அலறினான் வெற்றி.

நிச்சயமற்ற பார்வை பார்த்துக் கொண்டிருந்த அம்ருதாவினுடைய கையைப் பற்றினார் அப்பா.

"குடும்பம் ரொம்ப நல்ல குடும்பமா இருக்கு. மாப்பிள்ளையும் நல்லவனாதான் இருக்கான். உங்களுக்கிடையில ஏன் சண்டை வந்ததுன்னு எனக்கு தெரியல அம்ருதா. ஆனா இவன் உனக்கு பொருத்தமானவனா இருப்பான்னு தோணுது.." என்றார்.

அம்ருதா பதில் பேசாமல் தன் கையை உருவிக் கொண்டாள். அவளின் முகம் மாறியதை பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்குமே சங்கடமாக இருந்தது.

இருக்கையிலிருந்து எழுந்து நின்றாள் அமிர்தா. "எனக்கு மாப்பிள்ளையை பிடிக்கல‌‌.." என்றாள்.

"உன் கோபத்தை கொஞ்ச நேரம் ஒத்திப்போடு அக்கா. உங்களுக்குள்ள என்ன நடந்திருந்தாலும் அதுல உன் தப்பும் இருக்கும்.." என்றான் ஆரவ்.

கசப்பாக சிரித்தாள் அம்ருதா.

"நான் ஒன்னும் சின்ன குழந்தை கிடையாது.." என்றாள்.

"அம்ருதா இது நான் பார்த்து முடிவு செஞ்சிருக்கேன்.." என்ற அப்பாவை கோபத்தோடு பார்த்தவள் "உங்களுக்கு இவனைப் பத்தி சரியா தெரியாதுப்பா. இவன் சுத்தமான ராட்சசன்‌ எதிரில் இருக்கும் ஒரு மனுசனை கூட மதிக்க மாட்டான். உங்க முன்னாடியே என்னை அத்தனை அடி அடிச்சான். அப்படி இருந்தும் எப்படி இவனை நம்புறிங்க.?" எனக் கேட்டாள்.

"இவன் உன்னை அடிச்சது தப்புதான். அதுக்கு நான் மன்னிப்பு கேட்கறேன்.." என்று எழுந்து நின்ற தாத்தா தன் கையை கூப்பினார்.

வெற்றிக்கு அவமானமாக இருந்தது.

"சாரி கேட்டா எல்லா விசயமும் முடிஞ்சிடாது தாத்தா.." என்றவள் இமையோரம் உருவான ஈரத்தைத் துடைத்துக் கொண்டாள்.

"தயவுசெஞ்சி உங்க பேரனைக் கூட்டிப் போய் ஒரு நல்ல மெண்டல் ஹாஸ்பிடல்லா பார்த்து சேர்த்துங்க. இவனுக்கு பொண்ணு தேடி எங்கேயும் போகாதிங்க. அப்படி போனா உங்களுக்குதான் அவமானம். அவன் மனுசனே இல்ல தாத்தா. சுத்தமான மிருகம்.. ஒரு சைக்கோ.. அவனோடு நான் மட்டுமில்ல எந்த பொண்ணுமே வாழ மாட்டா.. காதலிச்ச பொண்ணோட மனசை கூட புரிஞ்சிக்க தெரியாதவன்.."

பாட்டிக்கும் வெற்றியின் அத்தை சித்திக்கும் முகம் கறுத்துப் போய் விட்டது. வெற்றி எத்தனையோ இடங்களில் பிரச்சினையை இழுத்துக் கொண்டு வந்துள்ளான். ஆனால் யாருமே இப்படி அவனை குறை சொன்னதில்லை. நடுத்தெருவில் நிற்க வைத்து உடைகளை உருவுவது போல மானத்தை வாங்கி கொண்டிருந்தாள் அம்ருதா.

அம்ருதா தன் அண்ணனை அவமானப்படுத்துவது கண்டு தேன்மொழிக்கு கண்கள் கலங்கியது.

தாத்தா பரிதாபத்தோடு அவளைப் பார்த்தார். "நடந்ததை மறந்துடலாம்மா.." என்றார் சிறு குரலில்.

அம்ருதா இடம் வலமாக தலையசைத்தாள்‌. தன்னைச் சுற்றி இருக்கும் அனைவருமே பைத்தியக்காரர்களோ என்று நினைத்தாள்.

"இவன் யார் கிடைச்சாலும் கண்மண் தெரியாம அடிக்கிறவன். அதையும் மீறி நான் இவனை கல்யாணம் பண்ணா இவனோட கோபத்துக்கு கண்டிப்பா என்னையும் ஒரு நாள் கொன்னுடுவான். எனக்கு பயமா இருக்கு தாத்தா.. உங்களுக்கு நான் சொல்றது புரியலையா?" என கத்தலாக கேட்டாள்.

"அமைதியாய் இரு அம்ருதா.." என்ற அம்மாவை திரும்பி பார்த்து முறைத்தாள்.

"நீங்க யாரை கல்யாணம் பண்ணிக்க சொன்னாலும் நான் பண்ணிக்கறேன் அம்மா. ஆனா இவன் மட்டும் வேண்டாம். இவனை தவிர வேறு யாரை வேணாலும் கை காட்டுங்க. உடனே கழுத்தை நீட்டுகிறேன்.." என்றாள்.

அவள் சொன்னதை கேட்டு வெற்றிக்கு முகம் கறுத்தது. யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்வேன் என்று அவள் சொன்னதை அவனால் நம்பவே முடியவில்லை.

"என் அண்ணன் ராட்சசன்னு உங்களுக்கு காதலிக்கும் முன்னாடியே தெரியாதா.?" அழுகையை அடக்கியபடி கோபத்தோடு கேட்டாள் கனிமொழி.

"தெரியாம காதலிச்சிட்டேன் போதுமா.. எனக்கு இனி இவன் வேண்டாம்.." என்றவள் அங்கிருந்து திரும்பிச் செல்ல முயன்றாள்.

"என்னமா இப்படி சொல்ற.? என்ன இருந்தாலும் நீ எங்க குடும்ப வாரிசு வயித்துல சுமந்தவள் இல்லையா.?" பாட்டி எழுந்து நின்று கேட்டாள்.

நின்ற இடத்திலேயே திரும்பினாள். வெற்றியை முறைப்போடு பார்த்தாள். பின்னர் பாட்டியை பார்த்தாள்.

"உங்களுக்கு எப்படி புரியவைக்கறதுன்னு தெரியல. இவன் குழந்தையை வயித்துல சுமந்ததுக்காக நான் அவமானப்படுறேன்.. இவனை காதலிச்சது பாவம். இவனை கல்யாணம் பண்ணிக்க நினைச்சது என் வாழ்க்கைக்கு நான் செய்யயிருந்த துரோகம். அதைவிட முக்கியமாக குழந்தை.. நினைச்சிக் கூட பார்க்க விரும்பல. இவனோட நிழலைக் கூட பார்க்க விரும்பல. தயவு செஞ்சி விட்டுடுங்க. இனி எப்பவும் என்னை தேடி வராதிங்க. அதையும் மீறி இவனுக்காக என்னை கேட்டு வந்திங்கன்னா நான் உங்களை அவமானப்படுத்தவும் தயங்க மாட்டேன்.. பைத்தியக்கார பேரனுக்காக பொண்ணு கேட்டு எங்கேயும் போயிடாதிங்க.. என்னை மாதிரியே எல்லாரும் மரியாதையோடு பேச மாட்டாங்க.."

வெற்றி பற்களைக் கடித்தபடி எழுந்து நின்றான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN