அத்தியாயம் 24

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மாலை வேளையில் சங்கவி தனது அறையை விட்டு வெளியே வந்தாள். அவள் செல்வதை பார்த்துக் கொண்டிருந்த காந்திமதி தனது அறையை விட்டு வந்தாள்.

"என்னடி நடிப்பு ஓவரா போய்ட்டு இருக்கு ? அடிக்காமலே அடிச்சேன்னு சொல்லிட்டு இருக்க.." என கேட்டாள் ஒரு மாதிரி குரலில்.

"என் அக்காவை கொன்னவங்க நீங்க. உங்களை அவ்வளவு சீக்கிரத்தில் விட்டுடுவேன்னு நினைக்கிறிங்களா.?"

நேருக்கு நேர் நின்று கேட்டவளை ஆச்சரியத்தோடு பார்த்தாள் காந்திமதி.

"எப்படிடி இவ்வளவு தைரியம் வந்தது உனக்கு.? உன் அக்காவை போலவே உனக்கும் திமிர். கவலைப்படாதே! அவளை அனுப்பிய அதே இடத்துக்கு உன்னையும் கூடிய சீக்கிரம் அனுப்புறேன்.." என்றாள்.

சங்கவிக்கு உள்ளுக்குள் நடுங்கியது. ஆனால் தனது பயத்தை வெளிக்காட்டாமல் நின்றாள். காந்திமதி சொல்வதைக் கேட்ட பிறகு மேலும் கோபம் வந்தது அவளுக்கு.

கோபத்திற்கும் பயத்திற்கும் இடையே சிக்கிக் கொண்டிருந்தவளை கேலியாக பார்த்தாள் காந்திமதி.

"பிச்சைக்காரி.. என் அந்தஸ்துக்கு நீயெல்லாம் எனக்கு மருமகளா.? என் பையனுக்கு கிறுக்கு பிடிச்சிருக்கு. உன் அக்கா மேலே பைத்தியம் பிடிச்சிருக்கு. ஆனா அந்த பரதேசி போனவளை மறந்துடுவான் பார்த்தா உன்னை இழுத்துட்டு வந்து வச்சிருக்கான். எல்லாம் தலையெழுத்து.. உன் அக்காவை இங்கிருந்து பேக்கப் பண்ணது தப்பு. அவளை கொன்னிருக்கணும் என் கையாலேயே கொன்னிருக்கணும்.."

சங்கவிக்கு உடனே கண்கள் கலங்கிவிட்டது.

"நீங்க செஞ்ச தப்புக்கு கண்டிப்பா தண்டனை அனுபவிப்பிங்க. உங்களை நான் போலிஸ்ல பிடிச்சி தராம விடமாட்டேன்.." என்றவளுக்கு குரல் உடைந்திருந்தது.

அவளைப் பார்த்து சிரித்த காந்திமதி "நீயா!? என்னையா!? உன் அக்காவை நான்தான் கொன்னேன். இது என் மகனுக்கும் கூட தெரியும். ஆனா அவன் என்ன என்னை போலிஸ்ல பிடிச்சிக் கொடுத்துட்டானா.? ரொம்ப கனவு காணாதடி மானங்கெட்டவளே.." என்றவள் அவளை தாண்டிக் கொண்டு நடந்தாள்.

காந்திமதியின் முன்னால் சென்று தடுத்து நிறுத்தினாள் சங்கவி.

"பணம் இருக்குன்னு இப்படி பண்றிங்க.. உங்க பையனுக்கு அம்மான்னு வந்தவுடனே பாசம் கண்ணை மறைச்சிடுச்சி. உங்களுக்கும் இது வசதியா போயிடுச்சி இல்லையா.? அம்மாவும் மகனும் சேர்ந்து எங்க மொத்த குடும்பத்தையும் சிதைச்சிட்டிங்க.." கோபத்தில் ஆரம்பித்து இயலாமையில் முடித்தாள் சங்கவி.

அவளைப் பார்த்து கலகலவென சிரித்த காந்திமதி "உன்னை என்னால எதுவும் செய்யமுடியும். என் பையன் என்னை எதுவும் செய்ய மாட்டான் பார்க்கிறியா.?" என கேட்டாள்.

சங்கவி குழப்பத்தில் இருக்கும்போதே அவளை பிடித்து பக்கத்தில் இருந்த படிகளில் தள்ளிவிட்டாள். சங்கவி இதை எதிர்பார்க்கவே இல்லை. ஏற்கனவே காலில் சூடு இருந்ததால் நொண்டியபடிதான் நடந்து வந்தாள். இவள் பிடித்து தள்ளி விடவும் தடுமாறி கீழே விழுந்து விட்டாள். "அம்மா.." என கத்தியபடி படிகளில் உருண்டாள் சங்கவி.

படிகளைத் தாண்டி கீழே விழுந்தவளை மேலே இருந்தபடி நக்கலாக பார்த்தாள் காந்திமதி. 'உன்னால் என்னை என்ன செய்துவிட முடியும்.?' என்ற கேள்வி அவளின் பார்வையில் இருந்தது.

சங்கவிக்கு இயலாமையின் காரணமாக கண்ணீர்தான் புறப்பட்டது. நேற்று பொய் சொன்னதன் காரணம் கூட தனியாய் இருக்கும் வேளையில் காந்திமதி தன்னை காயப்படுத்துவாளோ என்ற பயத்தில்தான். ஆனால் காந்திமதி மீண்டும் அதையேதான் செய்தாள்.

அவள் கத்தியபோதே வருணும் மற்றவர்களும் வந்துவிட்டார்கள். கடைசி படியின் பக்கத்தில் அமர்ந்திருந்தவள் சுளுக்கிக் கொண்ட தனது வலது கையை இடது கையால் பிடித்தாள். வலி உயிர் போனது. ஆனால் அந்த வலியை விடவும் நெஞ்சத்தில் இருந்த வஞ்சம்தான் அதிக வலியைத் தந்தது. காந்திமதியை தன்னால் எதுவும் செய்ய முடியாதா என்ற துயரில் மூழ்கி இருந்தாள் அவள்.

அந்த நேரத்தில்தான் அங்கே வந்து சேர்ந்தான் ஆதீரன்.

***

மகன் சொன்னதை காந்திமதியால் நம்ப முடியவில்லை. ஆனால் அம்மாவை திரும்பி பார்க்கும் சூழ்நிலையில் அவன் இல்லை.

சங்கவியை தூக்கிச் சென்று காரில் அமர வைத்தவன் அவசரமாக காரை மருத்துவமனைக்கு விரட்டினான்.

வலியில் துடித்துக் கொண்டிருந்தாள் சங்கவி. அவளைக் காணும் போது பரிதாபமாக இருந்தது.

"சாரி சங்கவி.." என்று நிமிடத்திற்கு ஒரு முறை சொல்லிக் கொண்டிருந்தான்.

"ரொம்ப வலிக்குதுங்க.."

கண்ணீரை அவன் முன் காட்டாமல் இருக்க வெகுவாக முயற்சித்தாள்.

அவள் சொன்ன வார்த்தை அவனை உடைத்து விட்டது. "பத்தே நிமிசம்.." என்றான்.

வருணுக்கு தயக்கமாக இருந்தது. போலிஸ்க்கு அழைக்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தான். மாடியிலிருந்து கீழே இறங்கி வந்த காந்திமதி இவனின் குழப்பத்தை கண்டுவிட்டு கேலியாக சிரித்தாள்.

"என்னை போலிஸில் பிடிச்சிக் கொடுக்க முடியுமா உங்களால.? அவன்தான் பைத்தியக்காரனா இருக்கான். நீயும் ஏன்டா இப்படி இருக்க.?" என்று வருணை பிடித்து திட்டினாள்.

"ஏன் சித்தி இப்படி இருக்கிங்க.? பாவம் அவ.." என்றான் இவன்.

"நான் அவ மேல கொலைவெறியில் இருக்கேன். அவளைக் கொல்லாமல் விட்டதை நினைச்சி சந்தோசப்படு.." என்றவள் அவனை முறைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

மருத்துவமனையில் அவளது கையை ஸ்கேன் செய்து பார்த்தார்கள். கையின் மூட்டு பிசகி இருந்தது. சரிசெய்து கட்டுப் போட்டு விட்டார்கள்.

மணி பன்னிரெண்டுக்கும் மேலாகிவிட்டது. மருத்துவமனை படுக்கையில் படுத்திருந்த சங்கவியின் அருகிலேயே அமர்ந்திருந்தான் ஆதீரன். தூங்கிக் கொண்டிருந்த சங்கவியின் தலையை வருடி விட்டான்.

சங்கவி காலையில் கண்விழித்தபோது தனது இடது கையின் அருகே படுத்துக் கொண்டிருந்த ஆதீரனைதான் முதலில் கண்டாள்.

"என்னங்க.." என்று அழைத்தாள்.

திகைத்து எழுந்தவன் அவளைக் கண்டு விட்டு முகத்தை தேய்த்துக் கொண்டான்.

"இப்ப வலி எப்படி இருக்கு சங்கவி.?" என விசாரித்தான்.

அவள் பரவாயில்லை எனும் விதமாக தலையசைத்தாள்.

"தாகம்.." என்றாள். தண்ணீர் எடுத்து தந்தான்.

மருத்துவரை அழைத்து வந்து அவளை பரிசோதிக்க வைத்தான்.

"பிரச்சனை இல்ல.. ஒரு வாரத்துக்கு கையை ஆட்டாம வச்சிருந்தா போதும். இரண்டு நாளைக்கு ஒருமுறை வந்து கட்டை மாத்திட்டு போங்க.." என்றார்.

ஆதீரன் அவளை அழைத்துக்கொண்டு கிளம்பினான்.

காரில் ஏற முயன்றவள் தயக்கத்தோடு நின்றாள். அவளின் தயக்கம் கண்டு குழம்பினான் ஆதீரன்.

"என்னாச்சி சங்கவி.?" என கேட்டான்.

தரை பார்த்தாள். அருகே வந்து அவளின் தாடையை பற்றி நிமிர்த்தினான் ஆதீரன். "என்னம்மா.?" என்றான்.

"எனக்கு பயமாயிருக்கு. எங்க வீட்டுல அனாதை போல இருக்கணும்ன்னு நினைச்சிதான் உங்க வீட்டுல இருந்தேன். ஆனா உங்க அம்மா தொடர்ந்து இப்படியே செஞ்சிட்டு இருக்காங்க. எனக்கு நான் செத்துப் போறத பத்தி கூட கவலை இல்லை. ஆனா எங்க அப்பா என்ன ஆவார்ன்னு நினைச்சாதான் ரொம்ப பயமா இருக்கு. வாழ்க்கையே முடிஞ்சி போன மாதிரி இருக்கு.." என்றாள் அழுகையோடு.

அவளுக்கு எப்படி சமாதானம் சொல்வதென்று அவனுக்குத் தெரியவில்லை.

"என்னை நம்பு.." என்றான் சில நொடிகளுக்கு பிறகு.

இடம் வலமாக தலையை சேர்த்தவள் "இத்தனை நாளும் கூட நான் உங்களைதான் நம்பினேன்.." என்றாள்.

அந்த இடத்தை தாண்டி நடந்தவர்கள் அவர்கள் இருவரையும் விசித்திரமாக பார்த்துவிட்டு கடந்தார்கள்.

ஆதீரன் நெற்றியை தேய்த்தான். அவளின் இடது கையை பற்றினான்.

"உள்ளே உட்கார்.." என்றான். தயக்கத்தோடு ஏறி அமர்ந்தாள்.

காரை கிளப்பியவன் காவல் நிலையம் சென்று நிறுத்தினான். சங்கவி குழப்பத்தோடு அவனை திரும்பி பார்த்தாள்.

"கீழே இறங்கு.." என்றவன் அவளுக்காக கதவை திறந்து விட்டான். அவளின் கையை பிடித்து உள்ளே அழைத்துச்சென்றான்.

சக்தி அவர்கள் இருவரையும் குழப்பத்தோடு பார்த்தாள்.

சங்கவியின் கையிலே இருந்த கட்டையும் பார்த்தவள் "என்ன ஆச்சிம்மா.?" என கேட்டாள் எழுந்து வந்தபடி.

அவளுக்கு முன்னால் இருந்த இருக்கையில் சங்கவியை அமர வைத்தான் ஆதீரன்.

"ஒரு கம்ப்ளைன்ட் பண்ணணும் மேடம்.." என்றான்.

சக்தி அவனை சந்தேகமாக பார்த்தாள். அவனை விட்டுவிட்டு சங்கவியின் புறம் திரும்பியவள் "என்ன நடந்தது.. நீ சொல்லுமா.." என்றாள்.

தனக்கும் தனது மாமியாருக்கும் இடையில் நடந்த உரையாடலையும் தனது மாமியார் மாடியிலிருந்து தன்னை தள்ளி விட்டதையும் விரிவாகச் சொன்னாள் சங்கவி.

ஆதீரனுக்கு ஆத்திரமாக வந்தது. 'ஏற்கனவே குந்தவியை தொலைத்து விட்டேன். இப்போது இவளையும் ஏன் கொல்ல பார்க்கறிங்க அம்மா.?' என்று மனதோடு புலம்பினான்.

புகார் கடிதத்தை எழுதி வாங்கிக் கொண்டாள் சக்தி.

"நான் இனி பார்த்துக்குறேன்.." என்றாள்.

"தேங்க்ஸ் மேடம்.." என்ற ஆதீரன் சங்கவியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து நடந்தான்.

ஒரு வாரம் முன்பு பார்த்த ஆதீரனுக்கும் இப்போது இருக்கும் ஆதீரனுக்கும் இடையில் இருந்த வித்தியாசம் சக்தியை குழப்பியது.

"இந்த காலத்துல கூட மாமியார் கொடுமை நடக்குது.." என்று சலித்துக்கொண்டாள் அங்கிருந்த ஹெட் கான்ஸ்டபிள்.

"எல்லா காலத்திலும்தான் பிரச்சினைகள் ஓயாம இருக்கு.." என்று அவளுக்கு பதில் சொன்னாள் வனஜா.

சக்தி எழுந்து நின்றாள். ஆதீரனின் வீடு நோக்கி கிளம்பினாள்.

சங்கவி தயக்கத்தோடு வீட்டுக்குள் நுழைந்தாள்.

வருண் எங்கிருந்தோ ஓடி வந்தான். அவளையும் அவளது கையையும் மாறி மாறி பார்த்தான். "இப்போது பரவாயில்லையா.?" எனக் கேட்டான்.

சங்கவி ஆமென்று தலை அசைத்தாள்.

"நான் நைட் எவ்வளவு நேரம் போன் பண்ணினேன்.. ஏன் எடுக்கல நீ.?" என்று ஆதீரனிடம் கோபமாக கேட்டான் வருண்.

"போன் சைலன்ட்ல இருந்தது. நான் பார்க்கல.." என்றவன் சங்கவியை அழைத்துக் கொண்டு நடந்தான். ஏற்கனவே நொண்டி நொண்டி நடந்தாள். இப்போது கையிலும் வலி. எரிச்சலாக இருந்தது. இயலாமை கொன்று தின்றது. இந்த வீட்டை கொளுத்த வேண்டும். காந்திமதியையும், அக்காவின் காதலனையும் கத்தியால் கதற கதற குத்திக் கொல்ல வேண்டும் என்றிருந்தது.

நெஞ்சின் ஆவேசத்தோடு நடந்தவளை எதிர்க்கொண்டு அழைத்தாள் காந்திமதி. அவளின் விழிகளில் இருந்து இளக்காரம் சங்கவியை மேலும் எரிச்சலூட்டியது.

அவள் தன் மகனை திட்ட ஆரம்பிக்கும் முன் வீட்டின் கதவு தட்டப்பட்டது. திரும்பிப் பார்த்தாள் காந்திமதி. சக்தி லத்தியை கதவில் தட்டியபடி நின்றாள்.

மகனை நம்பிக்கை இல்லாமல் பார்த்தாள். உண்மையில் மகன் தன்னை காவல் துறையிடம் ஒப்படைக்க போகிறானா என்று அதிர்ந்தாள்.

அதிர்ச்சியோடு இருந்தவளின் அருகே வந்த சக்தி "உங்களை அரெஸ்ட் பண்ண வந்திருக்கேன்.. விலங்கு தேவைப்படாதுன்னு நினைக்கிறேன்.." என்றாள் காந்திமதியை மேலும் கீழும் பார்த்தபடி.

"நான் என்ன தப்பு செஞ்சேன்?"

"மாமியார் கொடுமை.. உங்க மருமகளுக்கு சூடு வச்சிருக்கிங்க.. அவங்களை கொல்ல நினைச்சி படியில் தள்ளி விட்டு இருக்கிங்க. அட்டெம்ட் மர்டர்.. வரிங்களா இப்போது போகலாம்.." என்றவள் வாசலை நோக்கி கண்ணை காட்டினாள்.

காந்திமதி மகனை முறைத்தாள். அவன் இவளை கண்டுக் கொள்ளாமல் சங்கவியை அழைத்துக் கொண்டு மேலே நடந்தான்.

"இன்னைக்கு அவ உனக்கு.."

"போதும் நிறுத்துங்க.. நான் கெட்டவனா மாறிட்டேன். காதலிக்கே கெட்டவன் நான். அம்மாவுக்கு எப்படி நல்லவனா இருப்பேன்?"

காந்திமதி மேலே பேசும் முன் அவளை அழைத்துக் கொண்டு நடந்தாள் சக்தி.

"இதுக்கு நீ ரொம்ப வருத்தப்படுவ.." என்று சொல்லிவிட்டு கிளம்பினாள் காந்திமதி.

ஆதீரனை நினைத்து ஆச்சரியமாக இருந்தது சங்கவிக்கு.

அடுத்து வந்த நாட்களில் அவளை அவன்தான் கவனித்துக் கொண்டான்.‌ ஸ்பூனில் அவள் சாப்பிடுவதை விரும்பாதவனாக அவனே அவளுக்கு உணவை ஊட்டி விட்டான்.

குந்தவி பெருமூச்சு விட்டபடி தன் முன்னே இருந்த கட்டிடத்திற்குள் நுழைந்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN