கணவன் 7

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வெற்றியின் கையை பற்றினாள் இந்த பக்கத்தில் அமர்ந்திருந்த சித்தி. திரும்பி பார்த்தான். வேண்டாமென்று தலையசைத்தாள் அவள். அவளின் விழிகளும் கலங்கிதான் இருந்தது.

"உங்க பையனை ஏன்டா காதலிச்சோம்ன்னு நினைச்சி தினம் அழுதுட்டு இருக்கேன். இதுல கல்யாணம் ஒன்னுதான் குறைச்சலா? சீரியஸா ஒரு மேட்டர் சொல்றேன்.. அவனுக்கு யாரையுமே கல்யாணம் பண்ணி வைக்காதிங்க.. அந்த பொண்ணு கண்டிப்பா இரண்டே நாள்ல சூஸைட் பண்ணி செத்து போயிடுவா. அந்த அளவுக்குதான் இவன் டார்ச்சர் இருக்கும்.. இவனை எப்படிதான் நீங்க வீட்டுல வச்சிருக்கிங்களோ.. எனக்கு புரியவே இல்ல. நீங்க தூங்கும்போது கல்லை தூக்கிப் போட்டு கூட கொன்னுடுவான். சுத்தமான பைத்தியக்காரன். அடிக்கறது மிதிக்கறது தவிர வேற எதுவுமே தெரியாது அவனுக்கு.. ஹீ ஹேஸ் எ மெண்டல் ப்ராப்ளம். சீக்கிரம் ஹாஸ்பிட்டல் பாருங்க.. இல்லன்னா சைக்கோ கொலைக்காரனா மாறிடுவான்.." தனது கோபம் அத்தனையையும் வார்த்தைகளாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள் அம்ருதா.

தலை குனிந்து நின்றிருந்த வெற்றியின் கையை இன்னமும் சித்தி பிடித்துக் கொண்டுதான் இருந்தாள். கோபத்தை அடக்கியதாலும், இயலாமையின் வலி தந்த ரோசத்தாலும் விழிகள் கலங்கியது அவனுக்கு.

"போதும் அம்ருதா. இவ்வளவு பேச வேண்டிய அவசியம் என்ன? பிடிக்கலன்னா லீவ் ஹிம். ஏன் இப்படி பேசி வைக்கிற?" ஆரவ் கோபத்தோடு கேட்டான்.

அம்ருதா நெற்றியை தேய்த்தாள்.

"என்னை கெட்டவளை போல சித்தரிக்கறான் அவன்‌. அதுக்கு நானும் ஒத்து போறேன்.." என்றாள் தனக்கு தானே குறை சொல்பவளை போல.

"நீ ஜெயிச்சிட்ட வெற்றி‌. உன்னோட கோபம் யாருக்கும் தெரியல. நீ செய்த சேதாரம் யாருக்கும் தெரியல. ஆனா நான் வாயால இரண்டு வார்த்தை பேசுவது அவ்வளவு கஷ்டமா இருக்கு.." என்றவள் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டாள்.

"போதும். நீங்க பார்த்த மாப்பிள்ளை எனக்கு பிடிக்கல அப்பா. அதையும் மீறி இவனை கல்யாணம் பண்ணிக்க சொன்னா நான் செத்து போவேன்.." என்றவள் தனது கைப்பையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.

தேன்மொழியின் விழிகள் இரண்டும் கண்ணீரோடு பளபளத்தது கண்டு ஆரவ்க்கு சங்கடமாக இருந்தது.

"அவ சார்ப்பா நாங்க உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கறோம்.." என்று எழுந்து நின்றார் ராமன்.

"அவங்களோட பிரச்சனை புரியல. ஒட்டாத கொடியை ஒட்ட வைக்க நினைச்சது நம்ம தப்புதான். உங்களோட ஆசைக்காக நானும் முயற்சி செஞ்சேன். ஆனா அவளுக்கு விருப்பம் இல்லை.. விட்டுடலாம்.." என்ற ராமன் இவர்களுக்கு கடைசி வணக்கத்தை வைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தார். அம்மாவும் ஆரவ்வும் இவர்களை பார்த்துக் கொண்டே அங்கிருந்து சென்றார்கள்.

அவர்கள் நால்வரும் சென்ற பிறகு தேன்மொழியின் விசும்பல் சத்தம் கேட்டது. எழுந்து நின்றவள் அண்ணனை கட்டிக் கொண்டாள்.

"அவங்க உனக்கு வேணாம் அண்ணா.. கெட்டவங்களா இருக்காங்க.. நீ நல்ல பையன்தான்.. அவங்க சொன்னதை நம்பாதே.." என்றாள் அழுதபடி.

வெற்றி வாய் திறக்கவில்லை. தலையும் நிமிரவில்லை.

"உனக்கு ஒன்னும் இல்லடா.. நீ மென்டலி ஹெல்தியா இருக்க.. அவ சொன்ன எதையும் மனசுல போட்டுக்காத.." அத்தை ஆறுதல் சொன்னாள்.

"பஜாரி மாதிரி நடந்துக்கறா.. அவளை போய் காதலிச்சி வச்சிருக்க.. உனக்கு ஒரு நல்ல பொண்ணு கூடவா கிடைக்கல.." என்று எழுந்தாள் கீர்த்தனா.

"நிஜமா சொல்றேன் கேளு.. இதுவரைக்கும் உனக்கும் எனக்கும் நடுவுல எந்த அபக்ஷெனும் கிடையாது. ஆனா அவளை விட நான் உனக்கு பொருத்தமா இருப்பேன். லவ் கிடையாதுதான். ஆனா எதுவும் சாத்தியம் இல்லாம இல்ல.. உனக்கு ஓகேன்னா சொல்லு. நாம மேரேஜ் பண்ணிக்கலாம்.." என்றாள் அவள்.

வெற்றி மிடறு விழுங்கினான். தொண்டை வலித்தது. எங்காவது சென்று கத்தி அழ வேண்டும் போல இருந்தது.

இடம் வலமாக தலையசைத்தான்.

கீர்த்தனாவுக்கும் அவனுக்கும் இடையில் நல்ல நட்பு இருந்தது. அம்ருதாவை காரணம் காட்டி அந்த நட்பு உடைவதில் அவனுக்கு துளியும் விருப்பம் இல்லை. அதை விட முக்கியமாக அவளின் மனதுக்குள் வேறு ஒருவன் இருந்தான்.

"சாரி.." என்றான் தலை குனிந்தபடியே.

"நீ ஏன்டா." பாட்டி பேசும் முன் "உங்களுக்கு பெரிய அவமானத்தை தேடி தந்துட்டேன்.. என்னால மொத்த குடும்பத்துக்கும் கெட்ட பேர்.. சாரி.." என்றவன் தேன்மொழியை விலக்கி நிறுத்தினான். சித்தியின் கையை விலக்கினான்.

"வெற்றி.." தாத்தா அவனுக்கு ஆறுதல் சொல்ல முயன்றார்.

"நான் அப்புறம் போன் பண்றேன்.." என்றவன் தலை நிமிராமலேயே அங்கிருந்து சென்றான். அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் நெஞ்சுக்குள் திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருந்தது.

***

வெற்றியை வேண்டாமென்று சொல்லி விட்டு வெளியே வந்தாள் அம்ருதா. ஹோட்டலின் வாசலில் நின்றிருந்த பாலாஜி இவளை கண்டதும் அருகில் வந்தான்.

கைக்கடிகாரத்தை பார்த்தவன் "அதுக்குள்ள மாப்பிள்ளை பார்த்துட்டியா?" என்றான் சந்தேகத்தோடு.

"உள்ளே இருந்தது வெற்றி. அவனோட குடும்பம் வாரிசை சுமந்தவள்ன்னு பிணாத்திக்கிட்டு என்னை பொண்ணு கேட்டு வந்திருக்காங்க.. ஆனா எனக்குதான் அவனை சுத்தமாவே பிடிக்கலையே.. அதையே சொல்லிட்டு வந்துட்டேன்.." என்றவள் தனது காரினை நோக்கி நடந்தாள்.

அவளின் பின்னால் ஓடியவன் அவள் தனது காரின் கதவை திறக்கும் முன் அவளது தோளை பற்றி திருப்பினான்.

"என்ன சொன்ன? என்ன வாரிசு?" எனக் கேட்டான் குழப்பத்தோடு.

அம்ருதா நெற்றியை தேய்த்தபடி இவன் புறம் திரும்பினாள்.

"நான் பிரகனென்டா இருந்தேன்.."

அவள் சொன்னது கேட்டு அதிர்ச்சியில் விழி விரித்தான் அவன்.

"ஆனா அபார்ஷன் பண்ணிட்டேன்.."

"அது வெற்றியோடதா.?" என கேட்டவனை முறைத்தாள். "பின்ன நான் என்ன ஏழு பேர் கூடவா சுத்திட்டு இருந்தேன்?" என்று கோபத்தோடு கேட்டாள்.

"ஏன்?" புரியாமல் கேட்டான் அவன்.

"ஏனா எனக்கு அவனை பிடிக்கல.." கத்தலாக சொன்னவளை கோபத்தோடு பார்த்தவன் "வெங்காயம் மாதிரி சொல்லாத.. அவனை காதலிச்சி, கட்டில் வரை போய், குழந்தை ஒன்னும் உருவாகும் வரை அவனை பிடிச்சிருந்ததா?" என்றான்.

அம்ருதா விழிகளை சுழற்றினாள்.

"அதே சராசரி ஆண்.."

மேலே பேசும் முன் அவளின் கன்னத்தில் ஒரு அறையை விட்டான்.

"சராசரி ஆணாவே இருந்துட்டு போறேன் நான்.. ஆனா நம்பி காதலிக்கறவங்களை பாதியில் கை விடுறது என்ன உயர்வு?" என்றான் பற்களை கடித்தபடி.

அவனை போலவே அவளும் பற்களை கடித்தாள்.

"உன்னை ரொம்ப நல்லவன்னு நம்பிட்டு இருந்தேன் நான்.. இவ்வளவு சீப்பா இருக்க.. சீட்டரா நடந்துக்கற.. உன்னை போல ஒருத்தி அவனுக்கு கிடைக்காதது அவன் செஞ்ச புண்ணியம்.. ஏதோ சாதாரண பிரேக்கப்.. இன்னைக்கு சண்டை. நாளைக்கு சேர்ந்துப்பிங்கன்னு நினைச்சேன். ஆனா அவனோட குழந்தையை அபார்ஷன் பண்ணியிருக்க நீ.. அவனுக்கு எப்படி வலிச்சிருக்கும்ன்னு யோசிச்சியா? அதை விட முக்கியமா உனக்கு எப்படி மனசு வந்தது அம்ருதா? அவ்வளவு லவ் பண்ணியே அவனை.." என்றான் அவள் செய்த செயலை நம்ப முடியாதவனாக.

கோபம் வரலாம். தவறில்லைதான். ஆனால் இந்த அளவுக்கு கூட செய்ய தோன்றுமா என்று குழம்பினான் அவன்.

யோசனையோடு அவனை பார்த்தவன் "ஒன் லாஸ்ட் கொஸ்டீன்.. நீ எனக்காக அவனை பிரேக்கப் பண்ணியான்னு காலையில் கேட்டதுக்கு எதுவும் சொல்லல நீ.. உண்மையில் எனக்காகதான் பிரேக்அப்.. அதை விட.. என்னை காரணம் காட்டிதான் உன் குழந்தையை அபார்ட் பண்ணியா?" என்றான்.

கேள்வியை கேட்டு முடித்தவனுக்கு வியர்த்தது. இதயம் ஓட்டமாய் ஓடியது.

மௌனம் காத்தாள் அவள்.

"சொல்லி தொலை சனியனே.." திட்டினான். அவளின் மௌனத்தை சுமந்த ஒவ்வொரு நொடியும் அவனை கொன்றது.

"ஐயோ.. அம்ருதா.. ஏன் இப்படி செஞ்ச? நான்.. எனக்கும் அவனுக்கும் நடுவுல நீ வராதேன்னு எத்தனை ஆயிரம் முறை சொல்லி இருக்கேன்.." என்று அங்கும் இங்குமாக நடந்தவன் தலையை பிடித்தபடி அவளருகே வந்து நின்றான்.

அவளின் சரிந்திருந்த தலையை பார்த்தவன் "தயவு செஞ்சி இந்த வாயை திறந்து சொல்லு.. நீ பண்ண தப்புக்கான பாவ கணக்கை என் பேர்லதான் எழுதி தொலைஞ்சி இருக்கியா.?" என்றான் கெஞ்சலாக.

உதட்டை கடித்தபடி நிமிர்ந்தாள் அம்ருதா.

"நீ மட்டுமே காரணம் கிடையாது.. அவனோட திமிர், அவன் என்கிட்ட நடந்துக்கிட்டது, அவனோட அணுகுமுறை.." என்று அடுக்கிக் கொண்டே போனவளின் முன்னால் கையை காட்டி நிறுத்தினான்.

"ஆக நானும் ஒரு காரணம். ரைட்?"

மௌனமாய் இருந்தாள்.

"தயவு செஞ்சா போய் செத்து தொலைஞ்சிடு அம்ரு.. உனக்கும் எனக்குமான பிரெண்ட்ஷிப் இந்த செகண்ட்ல இருந்து கட். இனி எப்பவும் என்னை தேடி வராத. நானும் உன்னை தேடி வர மாட்டேன். அதையும் மீறி வந்தா செருப்பால கூட அடி‌.." என்றவன் காரின் பின் இருக்கையில் இருந்த தனது தோள்பையை எடுத்து மாட்டிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

"பாலா.."

திரும்பி வந்து அவள் முன் நின்றவன் "சத்தியமா முடிஞ்சிடுச்சி எல்லாமே. இனி என் பேர் கூட சொல்லி கூப்பிடாதே.." என்றான் எச்சரிக்கும் விதமாக.

அவன் நகரும் முன் அவனின் கையை பற்றினாள்.

"அவன் உன்னை அப்படி அடிச்சிருக்கான்டா.. ஆனா நீ அவனுக்கு சப்போர்ட் பண்ற. நீ நியாயமா என் பக்கம் நின்னு என்னை பாராட்டி இருக்கணும்.."

தலையை கோதிக் கொண்டவனுக்கு விழிகள் நிலை கொள்ளாமல் அலைந்தது.

"நான் எப்படி சொல்லுவேன்.? அவன் என்னை அடிச்சான். இல்லன்னு நான் சொல்லலையே.. ஆனா வீ ஹேவ் ரீசன் அம்ரு. என் வாழ்க்கையில் நடக்கும் எல்லாத்தையும் உன்கிட்ட சொல்ல முடியாம போறதுக்கு சாரி. ஆனா உன் முட்டாள்தனமான முடிவுக்கெல்லாம் எப்போதுமே என் மேல சாக்கு ஓட்டாத.. அவன் உன் லவ்வர். இது உன் லவ். நீதான் பிரச்சனையை ஸ்பேஸ் பண்ணணும்.. ஆனா நீ என்னை காரணம் காட்டி.." மீண்டும் கோபம்தான் வந்தது அவனுக்கு.

"நாம நம்ம நட்பை பிரேக்அப் பண்ணிக்கலாம். இனி நீ யாரோ நான் யாரோ‌.." என்றவன் அவள் குழம்பி நின்ற வேளையிலேயே அங்கிருந்து போய் விட்டான்.

தயங்கி நின்றாள். அவனின் கோபம் புரியவில்லை. இத்தனை ஆண்டுகால நட்பை ஏன் முறித்துக் கொண்டான் என்று புரியவில்லை. நாளை பேசிக் கொள்ளலாம் என எண்ணியவள் காரில் ஏறி அமர்ந்தாள். காரினை இயக்க இருந்தவள் எதிரே பார்த்தாள். தூரத்திலிருந்த பைக்கில் அமர்ந்துக் கொண்டிருந்த வெற்றி முகத்தை மூடியபடி இருந்தான்.

அவனை கண்டதும் இவளுக்கு உள்ளம் கொழுந்து விட்டு எரிந்தது.

"சைக்கோ.." என திட்டியவள் அங்கிருந்து சென்றாள்.

வெகுநேரம் பைக்கில் அப்படியேதான் அமர்ந்திருந்தான் வெற்றி. அரை மணி நேரத்திற்கு பிறகு அவனாகவே தேறி நிமிர்ந்தான். கழுத்தில் இருந்த அம்மாவின் சங்கிலியை பார்த்தான். அடுத்து டாலரில் முத்தமிட்டான்.

"லவ் யூம்மா.." என்றவன் பைக்கை கிளப்பினான்.

நேராய் சுடுகாட்டில் கொண்டு வந்து பைக்கை நிறுத்தினான். வழியில் வாங்கி வந்திருந்த பூங்கொத்தை எடுத்துக் கொண்டு நடந்தான்.

அம்மாவின் கல்லறை வந்தது. கல்லறையின் மீது பூங்கொத்து ஒன்று ஏற்கனவே இருந்தது. கோபத்தோடு அதை கீழே தள்ளி விட்டான். தனது பூங்கொத்தை வைத்தான்.

"ஐ மிஸ் யூம்மா.." என்றான். கல்லறையின் மீது அமர்ந்தான். தலை சாய்த்து படுத்தான். கண்களில் இருந்து ஆறாய் பெருகியது கண்ணீர். வாயை மூடியபடி குலுங்கி அழுதான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN