காதல் கணவன் 9

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பாலாஜிதான் தனக்கு முத்தம் தருகிறானா என்று குழப்பமாக இருந்தது கீர்த்தனாவுக்கு. தன் காதல் கை சேர்ந்து விட்டதா என்று ஆச்சரியப்பட்டாள்.

கன்னங்கள் வருடிய அவனின் கரங்களும், மெல்ல உராய்ந்து முத்தமிட்டுக் கொண்டிருந்த அவனின் இதழ்களையும் நம்பவே முடியவில்லை அவளால்.

இரண்டு நிமிடங்களுக்கு பிறகு விலகி நின்றான். ஈரமாகவும், சிவப்பாகவும் இருந்த அவளின் இதழ்களை வெறித்தான்.

"கீர்த்தனா.."

விழிகளை மூடி இருந்தவள் மெள்ள திறந்தாள். மீண்டும் கண்ணீர்தான் வந்தது.

"ஏன்?" எனக் கேட்டபடி அவளின் கண்ணீரை துடைத்து விட்டான்.

"உனக்கு என்னை பிடிக்கலையோன்னு நினைச்சி பயந்திருந்தேன்.." என்றவள் கண்ணீரோடு அவனை கட்டிக் கொண்டாள். அவனின் வெற்று மேனி ஏதோ போல இருந்தது. அவளின் முகத்தை உரசிய அவனின் நெஞ்சத்து வடுக்கள் அவளுக்கு பாரத்தை தந்தது.

அவளின் முதுகில் அணைத்து தூக்கியவன் "நீயெல்லாம் என்னை லவ் பண்ணுவியான்னு நினைச்சிட்டு இருந்தேன். என்னாலதான் நீ சொன்னதை நம்ப முடியல.." என்றான்.

விலகி அவன் முகம் பார்த்தவள் "உன்னை நீயோ தாழ்த்திக்காத.. எனக்கு உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும்." என்றாள் அதே ஈர விழிகளோடு.

அவளை தரையில் நிறுத்தியவன் மீண்டும் அவள் விழிகளை துடைத்தான்.

"ரொம்ப அழுதுட்ட.." சிரிப்போடு சொன்னான்.

"நான் வெற்றிக்கிட்ட சொன்னதை உனக்கு யார் சொன்னது?"

"கனி.."

முகத்தை சுளித்தாள் கீர்த்தனா.

"அந்த குட்டி சாத்தானோடு அதிகம் பழகாதே நீ.." என்றவள் சமையலறையை விட்டு வெளியே நடந்தாள்.

"தூக்கம் வருது கீர்த்தனா.."

"வீட்டுல நிறைய இடம் இருக்கு. விழுந்து புரளு பாலா.. ஆனா பெட்ரூம்க்குள்ள மட்டும் என்டர் ஆகாதே.." அவனின் படுக்கையறையை நோக்கி நடந்துக் கொண்டே சொன்னாள்.

"இது அநியாயம். நான் உன் அம்மாவுக்கு போன் பண்ணி நீ இங்கே ஓடி வந்துட்டன்னு சொல்ல போறேன்."

திரும்பி பார்த்தாள்.

"ஓ.. தாராளமா சொல்லேன்‌. அப்போதான் நமக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கும்‌.. உனக்கு இவ்வளவு இன்ட்ரஸ்ட் இருந்தா எனக்கும் ஓகேதான்.." வசீகர புன்னகையோடு சொல்லி விட்டு படுக்கையறைக்குள் நுழைந்தாள்.

பெட்சீட்டையும் தலையணையையும் கொண்டு வந்து வெளியே எறிந்தாள்.

"குட் நைட்.." என்றவள் உள்ளே நுழைந்து கதவை தாழிட இருந்த சமயத்தில் அவளை இடித்து தள்ளிக் கொண்டு உள்ளே ஓடினான் அவன்.

"ஏய் பொறுக்கி.‌."

"சுச்சூ அவசரம்.. அந்த பாத்ரூம்ல தண்ணி வராது கீர்த்து.." அவசரமாய் பாத்ரூமிற்குள் நுழைந்து கதவை தாழிட்டான்.

நெற்றியில் அடித்துக் கொண்டாள் கீர்த்தனா. அதே நேரத்தில் வீட்டின் கதவு மெல்லிய ஓசையோடு தட்டப்பட்டது.

நேரத்தை பார்த்தவள் குழம்பினாள்.

"என்னை தேடி வீட்டுலயிருந்து யாராவது வந்துட்டாங்களா? ஆனா யாரும் எனக்கு போன் கூட செய்யலையே.. ஒருவேளை வெற்றியா இருக்குமோ!?" யோசனையோடு சென்று கதவை திறந்தவள் வெளியே நின்றிருந்த அம்ருதாவை கண்டு குழம்பினாள்.

'இவ இங்கே என்ன செய்றா?' இருவரும் ஒரே நேரத்தில் நினைத்தனர்.

"யார் வேணும்?" கீர்த்தனாவின் கேள்வியில் குழம்பியவள் "பாலாஜி வீடு மாறிட்டானா? சொல்லவே இல்லையே.!" என்று முணுமுணுத்தாள்.

"வீடு மாறல.." என இவள் சொல்லிய அதே நேரத்தில் "இப்பதான் பிரெஷா இருக்கு கீர்த்து.." என்று தன் வயிற்றை பார்த்தபடி கால்சட்டையை மேலேற்றி சரி செய்துக் கொண்டே படுக்கையிலிருந்து வெளியே வந்தான் பாலாஜி.

"இந்த ரூம்ல ஒரு பேய் இருக்கு‌. நீ தனியா தூங்கினா கண்டிப்பா அது உன்னை டிஸ்டர்ப் பண்ணும். நீ ஓகே சொன்னா நான் உனக்கு பாதுகாப்பா இருக்கேன்." என்றபடி நிமிர்ந்தவன் வாசலில் நின்றிருந்த தோழியை கண்டு முகம் மாறினான்.

கடிகாரத்தைப் பார்த்தவன் "இந்த டைம்க்கு வந்திருக்க. ஏதாவது பிரச்சனையா?" எனக் கேட்டான். கோபமும் அக்கறையும் சரிசமமாக இருந்தது அவனிடம்.

"சாயங்காலத்துலயிருந்து அத்தனை முறை கால் பண்ணேன். ஒரு முறை கூட அட்டென்ட் பண்ண தோணல உனக்கு.." என்று ஆரம்பித்தவள் அவனின் உடம்பிலிருந்த தழும்புகள் கண்டு விழிகளை அகல விரித்தாள்.

"என்னாச்சி? எப்படி இவ்வளவு காயம்?" என்று உள்ளே நுழைந்தவளை கை காட்டி தடுத்தாள் கீர்த்தனா.

பாலாஜி அவசரமாக சட்டையை எடுத்து அணிந்துக் கொண்டான். கதவின் அருகே நடந்தான்.

பாலாஜியின் புறம் திரும்பியவள் "இவதான் வெற்றி லவ் பண்ண பொண்ணு. இந்த டைம்க்கு இங்கே ஏன் வந்திருக்கா பாலா?" என்றாள் சந்தேகமாக.

அவன் பதில் சொல்லும் முன் அம்ருதாவின் புறம் திரும்பியவள் "அவனை காதலிச்சி ஏமாத்தியது போதாதுன்னு இப்ப இவனையும் ஏமாத்த வந்திருக்கியா?" என்றாள் கோபத்தோடு.

"அவ என் பிரெண்ட்.." விருப்பு வெறுப்பில்லாத குரலில் சொன்னவனை அதிக சந்தேகத்தோடு பார்த்தாள்.

"வெற்றியை பழி வாங்கிட்டு இருக்கியா?"

கீர்த்தனாவின் கேள்வியால் கண்கள் சுருக்கியவன் இரு கைகளாலும் தலையை பற்றிக் கொண்டான்.

"தயவுசெஞ்சி நீயே இப்படி பழி போடாத.. செத்தாலும் நான் அவனுக்கு துரோகம் செய்ய மாட்டேன். அவன் உன்னை கட்டிக்க ஆசைப்பட்டா சத்தியமா இந்த செகண்ட் கூட நான் உன்னை விட்டுடுவேன்.." என்றவனை கேலியாக பார்த்தாள் கீர்த்தனா.

'நானும் அவனும் உனக்கு அப்படியொரு வாய்ப்பை தருவோம்ன்னு நினைக்கிறியாடா முட்டாள்?' என்று மனதுக்குள் கேட்டவள் "அப்படின்னா இவ ஏன் இந்த டைம்க்கு வந்திருக்கா?" எனக் கேட்டாள்.

நிமிர்ந்தவன் அவளை முறைத்தான். "அதைதான் நானும் கேட்க டிரை பண்ணேன்.." என்றான் மூக்கு சிவக்க.

உதடு சுளித்து பழிப்பு காட்டிய கீர்த்தனா, "என்ன பிரெண்டோ? என்ன பிரெண்ட்ஷிப்போ? நடு ராத்திரியில் வயசு பையன் தனியா இருக்கும் வீடு தேடி வந்திருக்கா.. காதலிச்சவனையே வேணாம்ன்னு சொன்னவளுக்கு பிரெண்டோடு எதுக்கு கொஞ்சலும் குலாவலும்.." என்று புலம்பல் போல திட்டிக் கொண்டு இருக்கையில் சென்று அமர்ந்தாள்.

"அவ சொல்வதை காதுல வாங்காத.. எதுக்கு நீ இந்த டைம்க்கு வந்திருக்க?" தோழியிடம் விசாரித்தான் பாலாஜி.

கீர்த்தனா சொன்னதில் அதிர்ந்துப் போய் இருந்தவள் "போன் எடுக்கவே இல்ல நீ. அதனாலதான் ரொம்ப கோபமா இருக்கியோன்னு நினைச்சி வந்தேன்‌.." என்று தனது காரணத்தை சொன்னாள்.

"உண்மையிலேயே எனக்கு கோபம் அம்ரு. உன்னோட தவறுகளை நீ என் மேல பழியா போடுவதை என்னால துளியும் ஏத்துக்க முடியாது. உன்னுடனான இந்த பிரெண்ட்ஷிப் எனக்கு பாதிப்பை தருமோன்னு பயமா இருக்கு. நீ செஞ்ச தப்புக்கு ஏதோ ஒரு வகையில் நானுமொரு காரணமாகிட்டேன். இனியும் இப்படி எதுவும் நடக்க வேணாம். நம்ம நட்பை முடிச்சிகறதுதான் நமக்கு நல்லது.." பாலாஜி வெகு சீரியஸாக சொல்லிக் கொண்டிருக்க கீர்த்தனா முகத்தில் நக்கல் பரவியது.

கீர்த்தனாவையும், பாலாஜியையும் மாறி மாறி பார்த்தவள் "இந்த பொண்ணு யாரு.? இறந்த கால நட்பின் உரிமையில் கேட்கறேன். உன் வாழ்க்கையில் நடக்கும் எல்லாத்தையும் என்கிட்ட சொல்ல முடியாதுன்னு நீயும் பல முறை சொல்லி இருக்க.. ஆனா வெட்கம் கெட்ட பிரெண்ட்ஷிப் இன்னும் சாகாம இந்த கேள்வியை கேட்குது.." என்றாள்.

"நான் கட்டிக்க போற பொண்ணு அவ. லவ்வரும் கூட.‌."

"கடைசி கேள்வி. உன்னோட இந்த காயத்துக்கும் வெற்றிதான் காரணமா?" கீர்த்தனாவை அங்கே பார்த்த பிறகே இயல்பாய் எழுந்தது இந்த சந்தேகம். இவள் மீது பாலாஜி கொண்ட காதலால்தான் வெற்றி அடித்து துவைத்தானோ என்று சந்தேகம் வந்தது அவளுக்கு.

தயங்கினான் பாலாஜி.

"சொல்லு பாலாஜி. அந்த சைக்கோ மிருகத்தாலதான் உனக்கு இத்தனை காயமா?" கண்கள் சிவக்க கேட்டவளை கண்டு கோபத்தோடு எழுந்து வந்தாள் கீர்த்தனா.

"மரியாதை கெட்டுடும் பார்த்துக்க. எங்க வெற்றி சைக்கோவா? சாயங்காலம் நீ கேட்ட வார்த்தைகளுக்கே நாங்க பொறுத்து வந்தது பெரிய விசயம். மறுபடியும் அவனை பத்தி ஏதும் பேசிடாதே. கடுப்பாகிடுவேன் நான்.." என்று எச்சரித்தவள் பாலாஜியின் புறம் பார்த்தாள்.

"இவ அவனை என்னவெல்லாம் கேட்டா தெரியுமா? அவனை மெண்டல் ஹாஸ்பிடல்ல சேர்த்த சொல்றா.. அவனை எவ கட்டிக்கிட்டாலும் இரண்டே நாள்ல செத்துடுவான்னு சொல்றா.. அவனை நிக்க வச்சி கேட்காத வார்த்தையெல்லாம் கேட்கறா.. அவனை மட்டுமில்ல மொத்த குடும்பத்தையும் வசை பாடுறா. தாத்தாவுக்கும் பாட்டிக்கும் மூஞ்சே செத்து போச்சி இவ கேட்டதை பார்த்து.." கீர்த்தனா சொன்னதை கேட்ட பிறகு சோகமாக அம்ருதாவை பார்த்தான் அவன்.

"ஏன் அம்ரு.?" என்றான் வருத்தமாக.

"சனியனே.." பாலாஜியின் தோளில் அடித்தாள் கீர்த்தனா. திரும்பி பார்த்தான் அவன்.

"அவ குடும்ப மானத்தையே வாங்கிட்டான்னு சொல்லிட்டு இருக்கேன். திட்டி அனுப்பாம ஏன் அம்ருன்னு கொஞ்சிட்டு இருக்க?" என்று திட்டினாள்.

அவனால் அப்படியெல்லாம் திட்ட முடியவில்லை. மாலை நேரத்தில் அவளை அடித்ததே அவனுக்கு இன்னமும் வருத்தத்தை தந்துக் கொண்டிருந்தது.

"லேட்டாகிட்டு இருக்கு நீ போய் தூங்கு.." கீர்த்தனாவை அங்கிருந்து தள்ளினான்.

அம்ருதாவின் கையை பிடித்து அழைத்துக் கொண்டு வெளியே வந்தான். காரின் அருகே கொண்டு வந்து அவளை நிறுத்தினான்.

"டைம் ஆச்சி. நீ வீட்டுக்கு போ. எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம்.." என்றவன் அவளுக்கு காரின் கதவை திறந்து விட்டான்.

"இந்த பொண்ணை நீ லவ் பண்றதால்தான் அவன் உன்னை அடிக்கறானா? அனாதைன்னா அவனுக்கு அவ்வளவு இளக்காரமா? நான் வேணா என் பேரண்ட்ஸை விட்டு அவ வீட்டுல பேச சொல்லட்டுமா?"

அவளின் அக்கறை கண்டு அவனுக்கு துன்பமாக இருந்தது. அவளை அறைந்திருக்க கூடாது என்று நினைத்தான்.

"ஹலோ மேடம்.." வாசற்படியின் வெளியே நின்றிருந்த கீர்த்தனா விரலை சொடக்கிட்டு அழைத்தாள்.

அம்ருதா விழிகளை சுழற்றியபடி அவளை பார்த்தாள்‌.

"இந்த நாய் அனாதை நாயெல்லாம் இல்ல‌.."

"கீர்த்தனா.." இடை புகுந்த பாலாஜியின் அதட்டலை காதில் வாங்கிக் கொள்ளவில்லை அவள்‌

"எல்லா சொந்தமும் இவனுக்கு இருக்கு. இன்னைக்கு ஈவ்னிங் அவமானப்படுத்தவும் தயங்க மாட்டேன்னு ஒரு பேமிலியை பார்த்து சொன்னிங்களே அந்த ஃபேமிலிதான் இவன் ஃபேமிலி. யாரை நீங்க சைக்கோ மிருகம்ன்னு திட்டினிங்களோ அவன்தான் இவனோட உடன் பிறந்த அண்ணன்.." என்றவள் உதட்டை கோணியபடி உள்ளே நடந்தாள்.

"கொடுமை.." முனகியபடியே நெற்றியில் அடித்துக் கொண்ட பாலாஜி தோழியை நிமிர்ந்து பார்த்தான்.

"நான் அனாதைதான். எல்லா உறவும் இருந்தும் நானே ஒதுக்கி வச்சிட்டு அனாதையா வாழ்றேன். இது எனக்கு நானே தந்துக்கற தண்டனை. இந்த உடம்புல இன்னும் ஆயிரம் காயம் பட்டாலும் நான் அவனுக்குதான் சப்போர்ட் பண்ணுவேன். அவன் என்னை கொன்னாலும் நான் அவனுக்கு சப்போர்ட் மட்டும்தான் பண்ணுவேன். நீ செஞ்ச காரியத்துக்கு நானும் ஒரு காரணம்ன்னு தெரியும்போது மறுபடியும் அடிச்சி போடுவான். தடுக்க விருப்பம் இல்ல‌. அடி வாங்கிக்க எனக்கு சம்மதம். நீயாவது இனி நல்ல வாழ்க்கை வாழு.." என்றவன் அவளை விட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பினான்.

அவனும் அவளும் சொன்னது அனைத்தும் மூளையில் பதியவே சில நிமிடங்கள் பிடித்தது அம்ருதாவுக்கு.

வெற்றி அத்தனை முறை முறைத்தும் திட்டியும் கூட பாலாஜி வலிய வலிய சென்று பேசியதன் காரணம் இப்போதுதான் அவளுக்கு விளங்கியது. அவன் அடித்தும் திருப்பி திட்டாத, அடிக்காத காரணம் இன்று விளங்கியது.

அரை குறையாய் விசயம் புரிந்த மறுநொடியே தான் எங்கோ இடறி விட்டது அவளுக்கு தெரிந்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN