காதல் கணவன் 10

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கதவை தாழிட்டு விட்டு உள்ளே வந்தவனை கேலியும் கிண்டலுமாக பார்த்தாள் கீர்த்தனா.

"அனாதை அனாதைன்னு சொல்லிட்டே இருக்காத.. ஒருநாள் உன் வார்த்தை பலிச்சிட போகுது.." எச்சரித்தாள்.

அவள் சொன்னது கேட்டு அவனுக்கு திக்கென்று இருந்தது.

படுக்கையறைக்குள் நுழைந்தவள் கதவின் மீது சாய்ந்து நின்றபடி இவனை நோட்டமிட்டாள்.

"பேய் இருக்குன்னு சொன்னியே.. துணைக்கு வரியா?"

குழப்பத்தோடு நிமிர்ந்தவன் அவள் கேட்டது புரிந்து ஆர்வமானான்.

"நிஜமாவா?"

ஆமென்று கண்சிமிட்டி சைகை காட்டியவளை கண்டதும் வெட்க புன்னகையோடு தரையில் கிடந்த தலையணையை எடுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டு உள்ளே நடந்தான்.

"நோ டச்சிங்.. ஓகே? பேய் வந்தா மட்டும் விரட்டு.." என்றவள் அவனை விட்டு தூர தள்ளி படுத்துக் கொண்டாள்.

முத்துராம் வீட்டின் மொட்டை மாடியில் படுத்திருந்தனர் வெற்றியும் முத்துராமும்.

"இன்னைக்கும் சண்டையா வெற்றி?"

"ம்.." என்றான் அவன் நட்சத்திரம் பார்த்தபடி.

"ரொம்ப கடுப்பேத்துறான். அவன் என்ன டேஷ்க்கு என்கிட்ட பேசணும்? சாப்பிட வரான். விட்டா கொஞ்ச நாள்ல என்னையே அங்கிருந்து துரத்தி விட்டுடுவான்னு தோணுது.." என்று எரிச்சலாக மொழிந்தான்.

'அவன் அப்படி இல்ல..' என்று சொல்ல தோன்றியது முத்துராமுக்கு. ஆனால் சொல்லதான் தைரியம் இல்லை.

"சரி விடு.. நீ தூங்கு.." என்றபடி மறுபக்கம் திரும்பி படுத்துக் கொண்டான் நண்பன்.

வெற்றி தன் கழுத்திலிருந்த சங்கிலியை உள்ளங்கையில் இறுக்கி பிடித்தபடி உறங்க ஆரம்பித்தான்.

மறுநாள் வங்கிக்கு வந்த பாலாஜி நேற்று வங்கிலேயே விட்டு சென்றிருந்த தனது பைக்கை கூட கவனிக்காமல் பணிக்கு புறப்பட்டான். ஆனால் மூன்றாம் தளத்தின் நுழைவாயிலிலேயே அவனுக்காக காத்திருந்தாள் அம்ருதா.

அவளை கண்டதும் காணாதவன் போல தாண்டி செல்ல நினைத்தான்.

"பாலா.." கடின குரலில் அழைத்து நிறுத்தினாள்.

"ப்ளீஸ்.. என்னை விடு.. ஏற்கனவே நிறைய நாள் லீவ் எடுத்துட்டேன். என் வேலையை சரியா செய்ய விடு.." அவளிடம் கெஞ்சி கேட்டு விட்டு நகர்ந்தான்.

பாலாஜியின் முதுகை சோகமாய் பார்த்து நின்றவள் தன்னை நூலளவு இடைவெளியில் கடந்து சென்ற வெற்றியை வெறித்தாள்.

"சொந்த தம்பியையே இந்த அடி அடிக்கறான். சாகடிக்க பார்க்கறான். இவனை கல்யாணம் பண்ணா இரண்டே நாள்ல டெத் கன்பார்ம்.." சிறு குரலில்தான் முனகியிருந்தாள். ஆனால் அவன் காதில் விழுந்து விட்டது. நொடி நேரம் நின்றான். கோபத்தை வெளியேற்ற சொல்லி கட்டளையிட்டது மூளை. உரிமையில்லாதவளிடம் என்ன கோபத்தை காட்டுவது என்ற யோசனையோடு அமைதியாக போனான். அப்போதும் கூட இதயம் வலிக்கதான் செய்தது.

மதிய உணவு இடைவெளியில் பாலாஜியைதான் தேடினாள் அம்ருதா. ஆனால் அவன் இவள் இருக்கும் திசை பக்கம் கூட வரவில்லை.

தனது கேபினிலேயே அமர்ந்து உணவை முடித்தான். "சொந்தமே வேணாம். எந்த உறவும் வேணாம்ன்னு இருந்த மாதிரி நட்பும் வேணாம்ன்னு இருந்திருக்கலாம். எந்த பிரச்சனையும் இருந்திருக்காது.." கவலையோடு முனகினான்.

உணவை வேகமாக முடித்துக் கொண்ட அம்ருதா நண்பனை தேடி வந்தாள். இவளை கண்டதும் உண்ட உணவனைத்தும் ஜீரணமாகி விட்டது அவனுக்கு.

"டார்ச்சர் பண்றா.." என்று கலங்கியவன் "எனக்கு வேலை இருக்கு அம்ரு.." என்றான்.

அவனது அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தவள் "அந்த சைக்கோ நிஜமா உன் அண்ணனா?" என்றாள் கோபத்தோடு.

சலிப்போடு முகத்தை தேய்த்தவன் "இப்படியெல்லாம் திட்டாதே.. அவன் காதுக்கு போனா டென்சன் ஆவான். கோபம் வரும்." என்றான் கவலையாக.

"உனக்கு சூடு சொரணையே இல்லையா பாலா? கூட பிறந்தவன்னு கூட பார்க்காம அப்படி காயம் பண்ணி வச்சிருக்கான். போலிஸ் கம்ப்ளைண்ட் தராம, ஹாஸ்பிட்டல் கூட்டி போய் சேர்த்தாம அவனை கொண்டாட்டி இருக்க.."

அவள் சொல்வதையெல்லாம் கேட்டு பாலாஜிக்கே கோபம் வரும் போல இருந்தது.

"புரியற மாதிரிதானே சொல்றேன் அம்ரு? அவன் இல்லன்னா, அவன் அடிக்கலன்னா நான் செத்துடுவேன் அம்ரு.." விழிகள் கலங்க சொன்னவனை விசித்திரமாக பார்த்தாள்.

"நான் இன்னமும் உயிரோடு இருக்க அவன்தான் காரணம். நான் குற்ற உணர்வுல சாகாம இருக்கேன். அதுக்கு அவன் அடி உதைதான் காரணம். அவனே எனக்கு தண்டனை தருவதாலதான் எனக்கு நானே தண்டனைகள் தந்துக்காம இருக்கேன். ஒரு விதத்துல அவன் என் சேவியர் அம்ரு. இரண்டு வருசம் லவ் பண்ணியிருக்க. அவனை நிஜமா நீ புரிஞ்சிக்கலையா? அவன் அவனுக்கு உரிமைபடாத யார் மேலயும் கை வைக்க மாட்டான். உன்னை நல்லாதானே பார்த்துட்டு இருந்திருப்பான் இந்த இரண்டு வருசமும்.? அப்புறம் ஏன் உனக்கு அவனை பிடிக்காம போச்சி? வருசம் நாலு பசங்களை மாத்தும் சில பெண்களை போல நீயும் மாறிட்டியா?" என்றான். எவ்வளவு முயற்சித்தும் கோபம் மட்டும் குரலில் சேரவே இல்லை அவனுக்கு.

அம்ருதா அவனை யோசனையோடு பார்த்தாள்.

"அப்படி என்னதான் ஆச்சின்னு சொல்லு.. நீ ஏன் உன் வீட்டை விட்டு இருக்க? அவன்தான் உன்னை துரத்தி விட்டிருப்பான். கரெக்டா?"

நெற்றியில் அடித்துக் கொண்டான் பாலாஜி.

"ஆகாத பொண்டாட்டி கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் கணக்கா ஆச்சி உன் பேச்சி. எது நடந்தாலும் அவன் மேல்தான் பழி போடுவியா? நான் நேத்து தெளிவாதானே சொன்னேன்? இது எனக்கு நானே தந்துக்கற தண்டனைன்னு. மறுபடியும் அவனையே திட்டாத.. போய் உன் வேலையை பாரு. எனக்கும் வேலை இருக்கு.." என்றவன் கணினியை இயக்க ஆரம்பித்தான்.

இரண்டு நிமிடங்கள் காத்திருந்தாள். அவன் திரும்பவில்லை. நேரத்தை பார்த்தவள் சாயங்காலம் பார்த்து கொள்ளலாம் என நினைத்து அங்கிருந்து கிளம்பினாள்.

வெற்றி தன் முன் வைக்கப்பட்ட அத்தனை ஆவணங்களையும் சரிபார்த்து கணினியில் பதிவேற்றிக் கொண்டிருந்தான். கடன் அப்ரூவல் ஆனவர்களுக்கு சேதியை தெரிவித்து அவர்களுக்கு அனைத்தையும் விளக்கி, அக்கவுண்டில் இருந்த பணத்தையும் எடுத்து தந்துக் கொண்டிருந்தான்.

பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தவனை கலைத்தது கைபேசி சத்தம். வேலையை பார்த்தபடியே இயர்போன் பட்டனை அழுத்தினான்.

"வெற்றி.." கீர்த்தனா அழைத்திருந்தாள்.

"ம். சொல்லு.." முழு கவனத்தையும் கணினியில் வைத்திருந்தவன் "எங்க அப்பா பாலாவை வேணாம்ன்னு சொல்றாரு.." என்று அவள் அழுகை குரலில் சொல்லவும் சட்டென்று கவனத்தை திசை திருப்பினான்.

"என்ன.? ஏன்?" என்றான் ஒன்றும் புரியாதவனாக.

விசயத்தை முழுதாய் விளக்கி சொன்னாள் கீர்த்தனா. பாலாஜியின் மீதுதான் ஆத்திரம் வந்தது அவனுக்கு.

"விடு. நான் பார்த்துக்கறேன்.." என்று அவளுக்கு சமாதானம் சொன்னான்.

"எனக்கு பயமா இருக்கு.‌." என்று இன்னமும் கலங்கினாள் அவள்.

"அந்த நாய்க்கு இவ்வளவு வொர்த்தெல்லாம் இல்ல.. நீ விடு. நான் பார்த்துக்கறேன்.." என்றவன் இணைப்பை துண்டித்தான்.

மணி நான்கை நெருங்கி கொண்டிருந்தது. சலசலப்பு சத்தம் எங்கிருந்தோ வந்தது.

"வெற்றி சார்.. ஒரு பிரச்சனை.." என்று வந்தாள் ஆதிரா.

"என்ன?" என்றான் நிமிர்ந்து.

"அம்ருதா மேம் செக்சன்ல பிரச்சனை.." அவள் பதட்டமாக சொல்லவும் இவன் மேஜைகளை பூட்டி விட்டு அவசரமாக அங்கிருந்து ஓடினான்.

பாலாஜியின் அறை வரையிலுமே தகவல் போய் விட்டிருந்தது. மாலை வேலை என்பதால் அவனுக்கான வேலையும் குறைந்து விட்டிருந்தது. தோழியை தேடி ஓடி வந்தான்.

"நான் சொல்வதை கொஞ்சமா புரிஞ்சிக்கங்க சார்.. இந்த சொத்து உங்க பேர்ல இல்ல.." எதிரே இருந்த மனிதனிடம் புரிய வைக்க முயன்றுக் கொண்டிருந்தாள் அம்ருதா.

எதிரே இருந்தவனோ எதையும் புரிந்துக் கொள்ளும் நிலையில் இல்லை.

"என் அப்பாவுக்கு ஒரே வாரிசு நான். இந்த சொத்து மேல எனக்கு கடன் கிடைக்காதுன்னு சொல்றியா நீ?" என்று கத்தியவன் கையை ஓங்கினான். அவளை அறைய வந்தான்.

அம்ருதா பயத்தில் கண்களை மூடிக் கொண்டாள். அவளை நோக்கி ஓட இருந்தான் பாலாஜி. ஆனால் அதே நேரத்தில் "அம்மு.." என்று அவசரமாக அம்ருதாவின் முன்னால் வந்து நின்றான் வெற்றி. அவளுக்கு விழ வேண்டிய அறை இவனின் கன்னத்தில் விழுந்தது.

சுற்றியிருந்த அலுவலக பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். பாலாஜி உதட்டை கடித்தபடி அறைந்தவனை வெறித்தான்.

வெற்றி பின்னால் திரும்பி பார்த்தான். அம்ருதா ஒற்றை கையை முன்னால் மறைத்தபடி இன்னும் கண்களை மூடியபடி பயந்து நின்றிருந்தாள்.

எதிரே பார்த்தான் வெற்றி. மதுவின் நெடி அளவுக்கு அதிகமாக வந்தது.

"என் சொத்துதான் இது‌. எனக்கு கடன் வேணும்.." என்றான் அவன் கையிலிருந்த பத்திரத்தை அசைத்து காட்டியபடி.

வெற்றி அவனின் கையிலிருந்த பத்திரத்தை பிடுங்கினான். புரட்டி பார்த்தான். புன்சிரிப்போடு நிமிர்ந்தவன் "சாரி சார்.. எங்களோட சட்டதிட்டத்தின் படி இந்த சொத்துக்கு எங்களால கடன் தர முடியாது. இந்த சொத்தின் உரிமையாளரான உங்க அப்பா வந்து கையெழுத்து போட்டாதான் கடன் கிடைக்கும்.‌" என்றான்.

"அவர் வந்து கையெழுத்து போட்டா போதுமா?" என்றான் எதிரில் இருந்தவன் ஆச்சரியத்தோடு.

"ஆமாங்க சார். அவர் கையெழுத்து போதும்.. மறுமுறை வரும்போது அவரை அழைச்சிட்டு வாங்க.." என்றான்.

எதிரே இருந்தவன் ஆவணத்தை திருப்பி திருப்பி பார்த்தபடி அங்கிருந்து சென்றான்.

வெற்றி தன் கைபேசியை எடுத்து செக்யூரிட்டிக்கு அழைத்தான்.

"இன்னொரு முறை குடிபோதை ஆசாமிகள் பேங்குக்குள்ள வந்தா அப்புறம் உங்க வேலை போயிடும். லாஸ்ட் வார்னிங்.." என்றவன் இணைப்பை துண்டித்தான்.

அவனின் பொறுமை அம்ருதாவை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. வெற்றி தன் கழுத்து சங்கிலியை நினைத்தபடியே திரும்பினான்.

அம்ருதா உணர்ச்சிகளற்று அவனை பார்த்து நின்றாள்.

"சாரி மேடம். பேங்க்ல நடந்த இந்த சம்பவத்துக்கு பேங்க் சார்ப்பா நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்.." என்றவன் அவள் பதில் மொழி பேசும் முன் "உங்களோட வொர்க் இங்கே ரொம்ப சிம்பிள்.. அவருக்கு தெளிவா சொல்லி புரிய வைக்காம இப்படி சண்டையை இழுத்து விட்டிருக்கிங்க. இது பேங்க் பேரையும் சேர்த்து கெடுக்கும்.. கொஞ்சமாவது பொறுப்பா வேலை பாருங்க. இல்லன்னா ரிசைன் பண்ணிட்டு போங்க. இருக்கிறவங்க வொர்க்கையும் சேர்த்து கெடுக்காதிங்க.." என்று சொல்லி விட்டு நகர்ந்தான். அவனின் குரலில் கோபம் இல்லை. ஆனால் வார்த்தையில் வன்மம் இருந்ததே!

கூட்டம் கலைந்தது. பாலாஜியால் நகர முடியவில்லை. தோழியின் அருகே வந்து தோளில் கை பதித்தான்.

"பயப்படாதே.." என்றான்.

"நான் சொல்ல வருவதை அந்த ஆள் முழுசாவே கேட்கல பாலா. சொத்து உங்க பேர்ல இல்ல. உங்களுக்கு கடன் தர முடியாதுன்னு சொன்னேன். மீதியை சொல்லவே விடல. கத்த ஆரம்பிச்சிட்டாரு.." தன் பக்க வாதத்தை சொன்னாள்.

புன்னகைத்தபடி அவளின் நெற்றி வியர்வையை துடைத்து விட்டான்.

"அதை மறந்துட்டு உன் வேலையை பாரு.."

வெற்றிக்கு கன்னம் எரிந்தது. முகத்தை சுளித்தபடியே வேலையை பார்க்க ஆரம்பித்தான். 'அம்மு..' என்று அவனையும் மீறி பதறி விட்டான். அதற்காக அவனுக்கு தன் மீதே கோபம் வந்தது. கழுத்தில் சங்கிலி இல்லாமல் இருந்திருந்தால் அவளை அப்படி அழைத்ததற்காக கையை சுவற்றிலாவது நாலு முறை குத்தி கொண்டு இருந்திருப்பான். வீட்டிற்கு போனதும் சங்கிலியை கழட்டி வைத்து விட வேண்டும் என்று நினைத்தான்.

"பொறுக்கி.. பேங்க்ல இருக்கும் மத்த கஸ்டமர்ஸ் முன்னாடி பேங்க் பேர் கெட்டு போயிட கூடாதுன்னு பொறுத்து போயிருக்கான். மத்தவங்க முன்னாடி தான் மட்டும் நல்ல பேர் எடுக்க டிரை பண்ணியிருக்கான்.." என்று கரித்துக் கொட்டியபடியே வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள் அம்ருதா.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN