கணவன் 11

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பாலாஜி தன் பைக்கில் ஏறி அமர்ந்தான். அவன் பைக்கை ஸ்டார்ட் செய்ய இருந்த நேரத்தில் அவனின் எதிரில் வந்து கையை நீட்டி மறித்தபடி நின்றாள் அம்ருதா.

"விட மாட்டா போல.." சலித்தபடியே தோழியை பார்த்தவன் "நான் வீட்டுக்கு போகணும் அம்ருதா.." என்றான்.

"என்கிட்ட நீ இன்னும் பேசல.." என்றாள் அவள் கோபத்தோடு.

"அப்புறமா போன் பண்ணு.." என்றவன் ஆக்ஸிலேட்டரை திருக ஆரம்பித்தான்.

"நீ போனை எடுக்க மாட்ட.. மரியாதையா இப்பவே வா.."

"நிஜமா எடுப்பேன். கால் பண்ணு.." என்றவன் அவள் அசந்து நின்ற நேரத்தில் பைக்கை திருப்பிக் கொண்டு போனான்.

அம்ருதாவுக்கு நண்பனின் மீது கொலைவெறியாக வந்தது. காரை கிளப்பியவள் அவனது வீடு நோக்கி செலுத்தினாள்.

பாலாஜி தன் வீட்டின் முன் பைக்கை நிறுத்திவிட்டு இறங்கினான். வீட்டை திறந்தவன் உள்ளே நுழைந்த அதே வேளையில் பைக் ஒன்று வந்து வாசலில் நின்றது.

"வந்துட்டான்.. இன்னைக்கு ஏன் கோபமோ? நான் எதுவும் செய்ய கூட இல்லையே.." சலித்துக் கொண்டவன் திரும்பிய நேரத்தில் நேராய் பாலாஜியின் முகத்தில் வந்து குத்தியது வெற்றியின் மடங்கிய கை விரல்கள். தன் கழுத்திலிருந்த சங்கிலியை ஏற்கனவே கழட்டி வண்டி கவரில் வைத்து விட்டுதான் வந்திருந்தான் அவன்.

மூக்கை பிடித்துக் கொண்டான் பாலாஜி. ரத்தம் கொட்டியது.

"வெற்றி.." பேச முயன்றவனின் வாயில் விழுந்தது அடுத்த குத்து.

சுற்றும் முற்றும் பார்த்த வெற்றி மர நாற்காலி ஒன்றை கைகளில் தூக்கினான். பாலாஜியின் மீது வீசினான். அதிர்ஷ்டவசமாக தப்பி நகர்ந்துக் கொண்ட பாலாஜி "எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்.." என்றான் கெஞ்சலாக. ஏற்கனவே மூக்கு வலித்தது.

வெற்றி இப்போதைக்கு பேச விரும்பவில்லை. பாலாஜியை தாண்டி நடந்தவன் சுவரில் மோதி உடைந்து விழுந்திருந்த நாற்காலியின் பாகத்தை கையில் எடுத்தான். ஒன்னரை அடியில் ஸ்கேல் போல இருந்தது அந்த மர பலகை. அதன் ஓரத்தில் ஆணி ஒன்று அரையாய் உடைந்து இருந்தது.

பாலாஜியின் அருகே வந்த வெற்றி அவனின் காலில் ஓங்கி ஒரு அடியை விட்டான்.

பாலாஜி சட்டென்று காலை பற்றினான். மடங்கி விழுந்தான். மரக்கட்டையை பிணைத்திருந்த ஆணி‌ பட்ட இடத்தில் காயமாகி ரத்தம் வழிந்தது. எலும்பு நொறுங்கியதா என்று அவனுக்கு தெரியவில்லை. நொறுங்கியிருக்காது என்றுதான் நம்பினான். ஆனால் பயங்கரமாக வலித்தது.

காலை பிடித்தபடி தரையில் அமர்ந்திருந்த பாலாஜியை முறைத்தான் வெற்றி. "வீட்டுக்கு கிளம்பு.." என்றான் அடிக்குரலில்.

பாலாஜி இடம் வலமாக தலையசைக்க முயன்றான். ஆனால் அதற்கும் முன்பே அடிப்பட்ட அதே காலில் அடியை தந்து விட்டிருந்தான் வெற்றி. காலை பிடித்திருந்த கையிலும் சேர்ந்து விழுந்தது அடி.

"அம்மா.." அவனையும் மீறி கத்தினான். பற்களை கடித்த வெற்றி ஆக்ரோஷத்துடன் அடுத்த அடியை தந்தான். மரக்கட்டை இரண்டாய் முறிந்து விழுந்தது. காலில் அடிப்பட்ட இடத்திலிருந்து இன்னும் அதிகமாக ரத்தம் வழிந்தது.

"கொன்னாலும் நான் போக மாட்டேன்.." அரை மயக்கத்திற்கு சென்றபடியே சொன்னான் பாலாஜி.

"அப்படின்னா செத்து போ.." என்றபடியே அந்த பக்கமும் இந்த பக்கமும் பார்த்த வெற்றி மற்றொரு மர நாற்காலியை கையில் தூக்கினான். சகோதரனின் முன்னால் வந்து நின்றான்.

"வீட்டுக்கு போ.." என்றான் கடைசி முறையாக.

"மாட்டேன்.." பாலாஜி சொன்ன அதே நேரத்தில் நாற்காலியை கீழே வீச முயன்றான் வெற்றி. ஆனால் அதற்குள் "ஏய்.." என்ற சத்தம் வந்து அவனை தடுத்து‌ விட்டது.

குரல் கேட்டதும் மேலும் கடுப்பானான். ஆனால் நாற்காலியை திசை மாற்றி வீசி சுவற்றில் அடித்தான். வேகமாய் மோதி பெரும் சத்தத்தோடு கீழே விழுந்தது நாற்காலி.

பாலாஜி நிமிர்ந்து பார்த்தான். அம்ருதா வாசலில் காளி போல கண்களை வைத்து நின்றிருந்தாள்.

"அம்ருதா.." தயக்கமாக அழைத்தான் பாலாஜி. ஆனால் அவள் அவனை கண்டுக் கொள்ளவில்லை.

வேகமாய் உள்ளே ஓடி வந்தாள்.

"சைக்கோ நாயே.. போய் நீ சாவுடா.. கொலைக்கார பிசாசு.. சாத்" என்றவள் மேலே பேசும் முன் அவளின் கன்னத்தில் ஒரு அறையை விட்டான் வெற்றி. அடியின் வலிமை தாங்காமல் தரையில் விழுந்தவளை பரிதாபமாக பார்த்தான் பாலாஜி.

"அவளை விட்டுடு ப்ளீஸ்.‌." என்றான்.

வெற்றி பற்களை அரைத்தபடி அவளை வெறித்தான்.

குனிந்து தன் வலது கையால் அவளின் முடியை பற்றினான். இடது கையால் அவளின் தாடையை பிடித்து தன் புறம் திருப்பினான். வலியில் முகம் சுளித்து இருந்தவள் நேரே பார்த்தாள். கோபத்தை முழுதாக குத்தகைக்கு எடுத்தது போல இருந்தான் வெற்றி. அதை விட அதிக கோபம் அவள் கண்களில் இருந்தது. கோபத்தை காட்ட முயற்சி செய்தாள். ஆனால் அவனை எதுவும் செய்யவில்லை அவள் கண்களில் இருந்த கோபம்‌.

"உனக்கும் எனக்கும் நடுவுல எந்த சம்பந்தமும் கிடையாது. எல்லாம் முடிஞ்சி போச்சின்னு நீதான் சொன்ன. தேவையில்லாம வார்த்தையை விட்டு செத்து போகாத.. உன் வேலை வெங்காயம் என்னவோ அதை மட்டும் பாரு.." என்றான் கர்ஜனையாக.

எவ்வளவோ முயற்சித்தும் கூட அவனின் அதட்டலில் பயந்து விட்டாள் அம்ருதா. இந்த கோபத்தை காணவே கூடாது என்றுதான் பிரிந்தாள். ஆனால் இப்போதும் பிரச்சனை அப்படியேதான் இருந்தது.

"அவளை விடு வெற்றி.." முனகினான் பாலாஜி.

அம்ருதாவின் கண்களில் இருந்த பயத்தை கண்டவன் "இனி என் வழியில குறுக்க வர மாட்டேன்னு நம்புறேன்.." என அடிக்குரலில் மிரட்டி விட்டு அவளை விட்டான்.

சகோதரனின் முன்னால் வந்து குனிந்தவன் அவனின் சட்டையை பிடித்தான். அவனை தூக்கி நிறுத்தினான்.

"வீட்டுக்கு கிளம்பு.."

"மாட்டேன்.." அவனின் சட்டையிலிருந்த கையை விலக்கி விட முயன்றான்.

"என்னை விட்டுடு. எனக்கு அந்த‌ வீட்டுக்கு போக விருப்பம் இல்ல.." என்றவனை முறைப்போடு பார்த்தவன் தனது இடது கையை ஓங்கினான். ஆனால் அவன் அறையும் முன்னால் இருவருக்கும் இடையில் வந்து நின்று வெற்றியை பின்னால் தள்ள முயன்றாள் அம்ருதா.

"தப்பு மேல தப்பு பண்ணாத. ஒரு மேஜரை இங்கேதான் தங்கணும்ன்னு சொல்லி கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமை கிடையாது.." என்று எச்சரித்தாள்.

விழிகளை உருட்டி அவளை பார்த்தவன் "இடையில வராதேன்னு சொன்னேன்.." என்றான்.

"இவன் என் பிரெண்ட்.. இவனை அடிக்க உனக்கு உரிமை கிடையாது. மரியாதையா இந்த வீட்டை விட்டு போ. இல்லன்னா நான் போலிஸ்க்கு கால் பண்ணுவேன்.."

"அம்ருதா நீ அமைதியா போ.." கெஞ்சலாக கேட்டான் பாலாஜி.

"நீ வாயை மூடு பாலா. மிருகம் போல அடிக்கிறான். கொன்னுடுவான் போல. இப்ப தெரியுது நீ ஏன் உன்னை அனாதைன்னு சொன்னன்னு? இவனை மாதிரி மிருகத்தோடு பிறந்தேன்னு சொல்வதை விட.." அவள் மேலே பேசும் முன் அவளின் கழுத்தை பற்றியது வெற்றியின் இடது கரம்.

பதறி போனான் பாலாஜி.

"வெற்றி கூல் டவுன். உன் கோபத்தை உன்னால கட்டுப்படுத்த முடியும். உன்னால வீட்டுல பிரச்சனை வந்தா நல்லாருக்குமா? இவளுக்கு ஏதாவது ஆகிட்டா தாத்தா உன்னை அடி பிச்சிடுவாரு. அப்பாவுக்கும் மனசு கஷ்டமா போகும். அப்புறம் அம்மா உன்னை மன்னிக்கவே.." மீதியை சொல்லும் முன்பே தன் கைவசத்தில் இருந்தவளை பின்னால் தள்ளினான் வெற்றி. பாலாஜியின் மீது மோதி நின்றவள் கண்ணீர் நிறைந்த கண்களோடு எதிரில் இருந்தவனை முறைத்தாள். தொண்டை பகுதி நெருப்பாய் எரிந்தது.

பாலாஜியை முறைத்த வெற்றி "இன்னும் இரண்டு நாளுக்குள்ள வீடு போய் சேருற. இல்லன்னா நான் நிஜமா உன்னை கொன்னுட்டு ஜெயிலுக்கு போவேன். உனக்கும் அதுதானே ஆசை?" என்றுவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

அவனின் பைக் அங்கிருந்து கிளம்பி விட்டது என்பதை அறிந்த பிறகே நிம்மதியாய் மூச்சு விட்டான் பாலாஜி. தோழியை அருகே இருந்த இருக்கை ஒன்றில் அமர வைத்தான். நொண்டிக் கொண்டே சென்று தண்ணீரை கொண்டு வந்து தந்தான்.

"சாரி. அவன் அவனோட கன்ட்ரோலை இழந்துட்டான். நீ எதையும் மனசுல வச்சிக்காத. போலிஸ்க்கு போயிடாதே ப்ளீஸ்‌.." என்றான் கெஞ்சலாக.

தண்ணீரை குடித்தும் கூட தொண்டை எரிந்தது. வெற்றியை அடியோடு வெறுத்தாள் அவள்.

"உன் கால்ல அடிபட்டிருக்கு.." தண்ணீர் பாட்டிலை கீழே வைத்துவிட்டு எழுந்தாள்.

"ஹாஸ்பிட்டல் போகலாம் வா.." என்றவள் அவனை இழுத்துக் கொண்டு வெளியே நடந்தாள்.

வீடே புயல் வந்து போனது போல இருந்தது.

"இவன் உன் அண்ணன்னு என்னால நம்பவே முடியல.." என்றவள் காரை அருகே இருந்த மருத்துவமனை நோக்கி செலுத்த ஆரம்பித்தாள்.

"அண்ணன்தான்.." என்றான் இவன் சிரித்தபடி.

"அவனுக்கு என்ன கேடு வருதுன்னு உன்னை இப்படி அடிச்சி சாகடிக்கிறான்?" கோபத்தோடு கேட்டவளுக்கு வெற்றியின் சிவந்த கண்கள் நினைவை விட்டு அகல மறுத்தது.

"என் அம்மாவை சாகடிச்சிட்டேன் நான்.." கண்ணீரோடு சொன்னவன் "ப்ளஸ் டூ முடிச்சிருந்த டைம். நான்தான் டிரைவ் பண்ணுவேன்னு சொல்லி என் அம்மாவை கூட்டிட்டு எங்க தாய்மாமா வீடு போனேன். போற வழியில் காரோட ஸ்பீடை கன்ட்ரோல் பண்ண தெரியாம கொண்டுப்போய் போஸ்ட் கம்பம் ஒன்னுல மோதிட்டேன். எங்க அம்மா ஸ்பாட் அவுட். என் அம்மா எங்க இரண்டு பேர் மேலயும் உயிரையே வச்சிருந்தாங்க. நான் என் அம்மாவை கொன்னுட்டதால அவனுக்கு என் மேல கோபம். அம்மா செத்த பிறகு அவனுக்கு அளவுக்கு அதிகமா மன உளைச்சல். அன்னைக்கு அவன்தான் அவங்களை கூட்டி போயிருக்க வேண்டியது. நான் கேட்டேன்னு விட்டுட்டான். தான் போயிருந்தா அம்மா செத்திருக்க மாட்டாங்கன்னு அவனுக்கு அவன் மேல கோபம். என்னாலதானே அம்மா செத்தாங்கன்னு என் மேல‌ எனக்கு கோபம். அவனோட குற்ற உணர்வு கோபமா மாறிடுச்சி. என்னோட குற்ற உணர்வு சோகமா மாறிடுச்சி. அப்போதிலிருந்து அடிப்பான். எப்போதெல்லாம் நான் அம்மான்னு கூப்பிடுறேன்னோ, அம்மாவோட போட்டோவை தொடுறேன்னோ அப்பவெல்லாம் அடிப்பான். அவன் அடிக்கும்போது எனக்கு என் மேல இருக்கும் கோபம் கொஞ்சம் குறையுற மாதிரி இருக்கும். அதனால அவன் எவ்வளவு அடிச்சாலும் வாங்கிப்பேன்." என்று விவரித்தான்.

முட்டாள்தனமான தோன்றியது அம்ருதாவுக்கு.

"ஆக்ஸிடென்ட்காக யாரும் ஏதும் பண்ண முடியாது. அவன் பைத்தியமா போனா அதை அவனோடு வச்சிக்கணும்.." என்று அவள் திட்ட ஆரம்பிக்க 'ஆண்டவா' என நினைத்தபடி இருக்கையில் சாய்ந்தான் பாலாஜி.

"இன்னைக்கு எதுக்கு அடிச்சான் அந்த சைக்கோ?" மருத்துவமனையில் கட்டு போட்டு முடித்த பிறகு கேட்டாள் அம்ருதா. நல்லவேளையாக கால் உடைந்திருக்கவில்லை.

"வீட்டுக்கு போக சொல்லி அடிச்சான். அந்த வீட்டை விட்டு நான் வந்துட்டேன் அம்ரு. அங்கே எங்கே பார்த்தாலும் அம்மாவை பார்க்கற மாதிரியே இருக்கு. நானெல்லாம் பாவி‌. சொந்தத்தோடு இருக்கும் அருகதை இல்ல. அவங்களும் ரொம்ப நாள் கூப்பிட்டு பார்த்துட்டு விட்டுட்டாங்க. ஆனா இன்னைக்கு இவன் போக சொல்லியிருக்கான். அந்த வீட்டுக்கு போனா குற்ற உணர்வுல செத்துடுவேன் நான். ஒருத்தருக்கும் புரியல என் கஷ்டம்.." என்றான்.

அம்ருதாவுக்கு வருத்தமாக இருந்தது. நண்பன் மீது பரிதாபமாக வந்தது. அவன் மீது தப்பில்லை என்று அவன் முதலில் புரிந்துக் கொள்ள வேண்டுமென்று நினைத்தாள்.

பேசி பேசிதான் நண்பனை வழிக்கு கொண்டு வர முடியும் என்று நினைத்தாள்.

அவனை வீட்டில் விட்டு செல்லவே மனமில்லை அவளுக்கு. ஆனால் அவன்தான் என்னால் இருந்துக் கொள்ள முடியும் என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தான்.

அவன் அந்த வீட்டை முழுதாய் சரி செய்து முடித்த வேளையில் அங்கு வந்தாள் கீர்த்தனா. அழுதழுது வீங்கிய கன்னங்களோடு இருந்தவளை குழப்பத்தோடு பார்த்தான்.

அவள் அழுத விழிகள் கொண்டு வந்துள்ள சேதியென்ன?

வெற்றியின் கோபம் கண்டு பயப்படும் அம்ருதா எப்போதுதான் அவனின் புன்னகையாய் மாறுவாள்?

என்ன நடக்கும் என்று அறிந்துக் கொள்ள தொடரோடு இணைந்திருங்கள் நட்புள்ளங்களே..

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN