அத்தியாயம் 30

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வீட்டின் வாசலை பார்த்தபடியே அமர்ந்திருந்த ஆதீரனின் அருகே வந்து அமர்ந்தான் வருண்.

"அந்த காத்தவராயன் சொன்னது உண்மைதான் போல. அவன் இனி உங்க அம்மாவை இங்கே வர விடமாட்டான். நீ எதுக்கும் பயப்படாம இரு. இனி உன் அம்மாவால் உனக்கு எந்த பிரச்சனையும் வராது.."

ஆதீரனுக்கு ஆத்திரமாக வந்தது.

"அப்படின்னா என்ன‌ அர்த்தம், அம்மாவுக்கும் அந்த ஆளுக்கும் சம்பந்தம் இருப்பதும் உண்மைதானே?"

சகோதரனின் தோளில் கை பதித்தான் ஆதீரன்.

"நீதான் உன்னை கன்ட்ரோல் பண்ணணும் ஆதீ. அவங்க லைப்பை அவங்க பார்க்கட்டும் விடு. நீ வளர்ந்துட்ட. உன்னால உன்னை கவனிச்சிக்க முடியும்.." என்றவன் திரும்பிப் பார்த்தான். மாடி படியின் ஆரம்பத்தில் அமர்ந்திருந்தாள் சங்கவி. ஆதீரனைதான் கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

"நீ உன்னை மட்டுமில்ல உன்னை நம்பிய இன்னொரு ஆளையும் கவனிச்சிக்கிட்டாகணும்.."

ஆதீரன் குழப்பமாக சகோதரனை பார்த்தான்.

"போதும் ஆதீ. இந்த பழிவாங்கல் பழைய காதலையெல்லாம் மறந்துட்டு இந்த பொண்ணையும் கொஞ்சம் பாரு. அனாதையா நிக்கறா.. பார்க்கும் எனக்கே பாவமா இருக்கு. உன்னை பிரிஞ்சிட சொல்லி சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறா.." என்றவனை அதிர்ச்சியோடு பார்த்தான் அவன்.

"ஏன்?"

"அப்பான்னு காரணம் சொன்னா. நான் காசு தரேன்னு சொன்னேன். அப்பவும் வர முடியாதுன்னே சொல்லிட்டா.. என் அக்காவோட லவ்வர், எனக்கும் இப்ப கணவர்.. இவரே என்னை இவ்வளவு டார்ச்சர் பண்றாரு. உரிமையும், பந்தமும் உள்ள இவரே இப்படின்னா எந்த சொந்தமும் இல்லாத உங்களை ஏன் நான் நம்பணும்ன்னு என்னையே திருப்பிக் கேட்கறா.. ரொம்ப அமைதியான பொண்ணு. நீ செஞ்ச காரியம் எல்லாத்தையும் சகிச்சிக்கிட்டா. கொஞ்சமாவது அவக்கிட்டயும் அன்பா இருடா.. நீ செஞ்ச எல்லா தப்பையும் மன்னிச்சி மறந்துட்டு உனக்குன்னு செகண்ட் சான்ஸ் தரா. கொஞ்சமாவது யோசி. நியாயப்படி பார்த்தா நீதான் அவகிட்ட விழுந்து கிடக்கணும். ஆனா அவ அமைதியா உன் முகம் பார்த்து இருக்கா.."

ஆதீரன் யோசித்தான்.

"ம்ம்.." என்றுவிட்டு எழுந்து நின்றான்.

வாசலை கடைசி தடவையாக பார்த்து விட்டு கதவை பூட்டினான்.

கைபேசியின் அழைப்பு மணி சத்தத்தில் எழுந்து அமர்ந்தாள் குந்தவி. பொழுது விடிந்ததின் சாட்சியாய் ஜன்னலின் வழி வந்து ஒளியை வாரி இறைத்துக் கொண்டிருந்தது வெளிச்சம்.

போனை கையில் எடுத்தாள். சூர்யாதான் அழைத்திருந்தான்.

"யஷ்வந்த்க்கு கால் பண்ணியாருக்கார் போல.." என நினைத்தவள் போனை சற்று நேரம் வெறித்தாள். அழைப்பேற்று விசயம் சொல்ல மனம் வரவில்லை.

தன் குரலை அவன் கண்டுபிடிப்பானோ என்று சந்தேகம் வந்தது. அவன் மனதில் தான் என்னவாக இருப்போமென்று அவளுக்கு தெளிவாக தெரியவில்லை. போன் அடித்து ஓய்ந்தது.

பெட்ஷீட்டால் போர்த்திக் கொண்டவள் வழக்கம்போல இலக்கற்று யோசிக்க ஆரம்பித்தாள்.

மீண்டும் போன் ஒலித்தது. ஆனால் இந்த முறை யஷ்வந்த் அழைத்திருந்தான். சிறு நிம்மதியோடு போனை எடுத்தாள்.

"குந்தவி.."

"ம்ம்.."

"உங்களுக்கு வேலை தரலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்.."

"தே.. தேங்க்ஸ்.." என்றவளிடம் "எட்டரைக்குள்ள நேரு நகர் ஆபிஸ்க்கு வந்துடுங்க.." என்றவன் இணைப்பை துண்டித்துக் கொண்டான்.

நேரு நகர் இவளிருக்கும் ஹோட்டலில் இருந்து பதினைந்து கிலோமீட்டருக்கும் அந்த பக்கம் இருந்தது. இந்தியாவிலிருக்கும் யஷூ நிறுவனங்கள் அனைத்திற்குமான தலைமையகம் நேரு நகரில்தான் இருந்தது.

குளிக்க சென்றாள். அவன் வைத்துவிட்டு சென்றிருந்த சுடிதாரையே அணிந்துக் கொண்டாள். சுடிதாரில் கூட அவன் வாசம்தான் வீசும் போலிருந்தது.

"ஏன் இப்படி முட்டாள்தனம் செய்ற குந்தவி? அவனோட ஒரு நைட் நீ. உன்னை மறந்திருப்பான்‌. நீ எதுக்காக அவனோட கால் தடத்தை தொடர பார்க்கற?" என்று தன்னிடமே கேட்டுக் கொண்டாள்.

அவளின் கேள்விக்கு அவளிடமே பதில் இல்லை. தயாராகி நேரு நகரில் இருந்த யஷூ நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சென்றாள்.

பத்து மாடி கட்டிடம். கேட் திறந்திருந்தது. ஓரம் இருந்த அறையில் அமர்ந்திருந்த செக்யூரிட்டியின் தலைக்கு மேலே இருந்த போர்டில் வெல்கம் என்ற வார்த்தை ஓடிக் கொண்டிருந்தது.

தயக்கத்தோடு உள்ளே சென்றாள். வரிசையாய் நின்றிருந்த மரங்களை தாண்டி நடந்தாள்‌. அலுவலகத்தின் கட்டிடமும் திறந்தேதான் இருந்தது. உள்ளே இருந்த வரவேற்பு கூடத்தில் இருபது பேருக்கும் மேல் காத்திருந்தார்கள். வரவேற்பு மேஜையிலிருந்த பெண் தன் முன் வந்து நின்ற அனைவருக்கும் மராத்தியில் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

இவள் சென்று நின்றதும் "என்ன உதவி வேண்டும்?" என்று மராத்தியில் கேட்டாள்.

"ஐ வாண்ட் டூ மீட் யஷ்வந்த் மனோகர்.." என்ற குந்தவியை ஆச்சரியத்தோடு பார்த்தாள் எதிரில் இருந்தவள்.

"சாரை மீட் பண்ண அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இருக்கிங்களா?" மீண்டும் மராத்தியில் கேட்டாள்.

"நோ.." என்றவள் இடம் வலமாக தலையசைத்த நேரத்தில் "மேம்.." என்று குரல் கேட்டது.

திரும்பி பார்த்தாள். யஷ்வந்தை அன்று ஆம்புலன்ஸில் ஏற்றியபோது இவளோடு பேசியிருந்த அதே சீருடை அணிந்த மனிதன் நின்றிருந்தான்.

"சார் உங்களை கூட்டி வர சொன்னாரு.. இப்படி வாங்க.." என்று அவளை அழைத்தான்.

தயங்கி நடந்தவளை எட்டாவது மாடியிலிருந்த அறை ஒன்றிற்கு அழைத்து சென்றான். கண்ணாடி கதவு ஒன்றை தள்ளினான். பெரிய மேஜைக்கு அந்த பக்கமாக அமர்ந்திருந்தான் யஷ்வந்த். இவளை கண்டதும் பளீரென புன்னகைத்தான்.

"வாங்க குந்தவி.."

அறையை சுற்றும் முற்றும் பார்த்தபடி உள்ளே வந்தாள். ஒரு பக்க சுவர் முழுக்க புத்தகங்கள் அடுக்கப்பட்டு இருந்தது. மறுபக்கத்தில் கோப்பைகள் வரிசையாய் இருந்தது. அவனுக்கு முன்னால் இருந்த நான்கு நாற்காலிகளில் ஓரமாக இருந்த ஒன்றின் அருகே வந்து நின்றாள்.

"உட்காருங்க.."

"பரவாயில்ல.. என்ன வேலைன்னு சொல்லுங்க.." என்றாள்.

அந்த கம்பெனியில் தரை துடைக்கும் வேலை சரியென்றுதான் தோன்றியது. ஆனால் இங்கே இவ்வளவு பேர் வேலை செய்யும் இடத்தில் தரை துடைக்க விடாமல் செடியின் இலைகளை வெட்ட விட்டால் கூட நலமாக இருக்குமென்று தோன்றியது.

அவளின் அலைபாயும் விழிகளை பார்த்தபடி எழுந்து நின்றான் யஷ்வந்த்.

"யாராவது எனக்கு கால் பண்ணாங்களா?" என்று விசாரித்தான்.

மறுப்பாக தலையசைத்தாள்.

தனக்குள் சிரித்துக் கொண்டான் யஷ்வந்த். அவளுக்கு அழைத்த அடுத்த நிமிடத்திலேயே இவனுக்கு அழைத்திருந்தான் சூர்யா.

அவள் தனது அழைப்பை எடுக்கவில்லை என்பதை குறையாக சொல்லியிருந்தான். அவனது போன் எண் அவளுக்கு தெரியும். அப்படி இருந்தும் அவனது அழைப்பை எடுக்க மறுக்கிறாள் என்றால் ஏதாவது காரணம் இருக்குமென்று நினைத்தான்.

"முன்னாடி வேலை செஞ்ச இடம் எதுன்னு சொல்றிங்களா? உங்களை பத்தி விசாரிச்சிக்கிறேன்.."

குந்தவியின் முகத்தில் திகில் பரவியது. அவனுக்கோ குழம்பியது.

"வேணாம்.." என்றாள் அவசரமாக.

"சர்டிபிகேட் இல்ல. அட்லீஸ்ட் உங்க அட்ரஸ், முன்னாடி இருந்த வொர்க் பிளேஸாவது சொல்லுங்க.."

இடம் வலமாக தலையசைத்தாள். "என்கிட்ட எதுவும் இல்ல. எந்த அடையாளமும் இல்ல. நான் முன்னாடி வேலை செஞ்ச இடத்தை சொல்ல விரும்பல. இங்கே தரை துடைக்கும் வேலைக்கு வந்தாலும் அடையாள அட்டை ஏதாவது வேணும்ன்னு புரியுது. நான் வேற இடம் பார்த்துக்கறேன்.." என்றவள் வெளியே செல்ல நினைத்து திரும்பினாள். அவள் நாலெட்டு வைக்கும் முன்னால் பாய்ந்து வந்து அவளின் முன்னால் நின்றான் யஷ்வந்த்.

கொஞ்சம் சுதாரிக்கவிட்டால் அவன் மீது மோதியிருப்பாள். அவசரமாக பின்னால் நகர்ந்துக் கொண்டாள்.

அவளின் விலகலை கண்டும் காணாமல் விட்டவன் "பேசும் முன்னாடியே ஏன் போறிங்க?" எனக் கேட்டான்.

"சாரி சார். என்கிட்ட அடையாளமோ இறந்த காலமோ இல்ல.." என்றாள் தலை குனிந்தபடி.

அவனுக்கு பரிதாபமாக இருந்தது.

"சரி. நாம பேசி தீர்த்துக்கலாம்.." என்றவனின் முகத்தை நிமிர்ந்துப் பார்த்தாள்.

"வந்து உட்காருங்க.." என்றவன் அவளின் கையை பிடித்து அழைத்துச் சென்று இருக்கையில் அமர வைத்தான். அவள் தன் கையை உருவிக் கொள்ள நிறையவே போராடியிருந்தாள்.

அவளுக்கு அருகில் இருந்த மற்றொரு நாற்காலியில் அமர்ந்தவன் அவளின் புறம் திரும்பினான்.

"உங்களோட பாஸ்டை என்கிட்ட சொல்ல விருப்பம் இல்ல ரைட்?"

ஆமென்று தலையசைத்தவள் குனிந்த தலை நிமிரவில்லை.

"உங்க பேராவது உண்மையா?"

அதிர்ச்சியோடு நிமிர்ந்தவள் "உண்மைதான்.." என்றாள் சிறு குரலில்.

"நீங்க படிச்ச காலேஜ் எதுன்னாவது சொல்விங்களா?"

தலை குனிந்தவள் மறுப்பாக தலையசைத்தாள்.

"இப்ப எங்கே இருக்கிங்க?"

ஹோட்டலின் பெயரை சொன்னாள்.

அவளை நக்கலாக பார்த்தான்.

"ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல தங்கி இருக்கிங்க. ஆனா தரை துடைக்க வேலை தேடுறிங்க?" என்றான் கிண்டலாக.

மௌனமாய் இருந்தவளிடம் "கரண்ட் வீட்டு அட்ரஸ் கூட கிடைக்காதா எனக்கு?" என்றான் சோகமாக.

"இன்னும் ஒரு வாரத்துல அங்கிருந்து கிளம்பிடுவேன்.. சீக்கிரம் வீடு பார்த்துட்டு அட்ரஸ் தரேன்.." என்றாள்.

அவளை சில நொடிகள் பார்த்தவன் "ஓகே.. எனக்கும் ஒரு பர்சனல் அஸிஸ்டென்ட் தேவைப்படுது. அதையே பாருங்க நீங்க.." என்றான்.

அவன் சொன்னதும் அதிர்ச்சியோடு நிமிர்ந்தாள்.

"மிஸ் ஷீலா உங்களுக்கு டூ வீக்ஸ் டிரெயினிங் தருவாங்க. அப்புறம் நீங்க வேலையில் ஜாயின் பண்ணிக்கலாம்.."

"இல்ல.." என்றபடி எழுந்தவளை குழப்பமாக பார்த்தான்.

"உங்களுக்கு அஸிஸ்டென்டா இருக்கும் அளவுக்கு எனக்கு திறமை இருக்கும்ன்னு நினைக்கல நான்.." என்றாள்.

"அன்னைக்கு நீங்க என் உயிரை காப்பாத்தியதுக்கு பிரதி உபகாரமா.."

"நான் காப்பாத்தல.." இடை புகுந்து சொன்னாள்.

"அந்த நேரத்துக்கு எனக்கு தேவைப்பட்டது தைரியம் மட்டும்தான். அந்த தைரியமா அப்போது நீங்க இருந்திங்க. மிஸ் ஷீலா தர டிரெயினிங் வேற லெவலா இருக்கும். நீங்க நிச்சயம் எல்லாத்தையும் கத்துக்க முடியும்.."

நம்பிக்கை வார்த்தைகள்தான் சொன்னான். ஆனால் அவளால்தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.‌ ஒருவேளை சூர்யா உதவி செய்ய சொல்லியிருப்பானோ என்று கூட சந்தேகப்பட்டாள். ஆனால் அதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.

"நிஜமா நான் உங்களுக்கு பி.ஏவா? யார் என்னன்னு கூட சொல்ல மாட்டேன்கிறேன் நான்.." என்றாள் சந்தேகத்தோடு.

சிரித்தான் யஷ்வந்த்.

"யார் என்னன்னு கூட தெரியாமலே ஏன் அன்னைக்கு நான் அடிப்பட்டு கிடந்தபோது பக்கத்துல வந்திங்க.?" எனக் கேட்டான்.

பதில் சொல்லாமல் மௌனமாய் இருந்தவளிடம் "அன்னைக்கு என்னை வெட்ட வந்தாங்க இல்லையா சிலர்.?" எனக் கேட்டான்.

"அதுல ஒருத்தன் என் பி.ஏதான். எங்களோட போட்டி நிறுவனம் அனுப்பி வச்ச ஆள் அவன்‌. எங்களோட வியாபர யுக்தியை திருட இருந்தான். என்னையும் கொல்ல பார்த்தாங்க. நீ அப்படி இருக்க மாட்டன்னு நம்பினேன்.."

அவன் சொன்னதை புரிந்துக் கொண்டாள்.

"சரி.." என்றாள்.

"தேங்க்ஸ்.." என்றவன் யோசனை வந்தவனாக "கால் மீ யஷ்வந்த்.. நாட் யஸ்வேந்த்.‌. ஓகே?" என்றான்.

"ஓகே சார்.." என்றாள் கட்டை விரலை காட்டி.

ஷீலாவை வரவைத்து அவளோடு குந்தவியை அனுப்பி வைத்தான்.

மாலை வேளையில் தனது இருக்கையை விட்டு எழுந்தான் யஷ்வந்த். நிறைய வேலைகளை செய்து விட்டது போலிருந்தது.

ஷீலாவின் அறைக்கு சென்றான். அவளுக்கு பக்கத்து மேஜையில் அமர்ந்திருந்த குந்தவி தலை நிமிராமல் கணினியில் ஏதோ வேலையாக இருந்தாள்.

இவன் வந்தது கண்டு எழுந்து நின்றாள் ஷீலா.

"குட் ஈவினிங் சார்.."

ஷீலாவின் வணக்கத்தில் நிமிர்ந்த குந்தவி இவனை கண்டதும் எழுந்து நின்றாள்.

"சார்.." என்றவளின் அருகே வந்தவன் "டைம் ஆச்சி.." என்றான்.

"‌‌ஓஓ.." என்றவளிடம் "உங்களுக்கும் இன்னைக்கான வேலை முடிஞ்சது.." என்றான்.

"இல்ல சார்.. எனக்கு இன்னும் ஒரு மணி நேர வேலை இருக்கு.." என்றவளிடம் மறுப்பாக தலையசைத்தவன் "எடுத்து வச்சிட்டு கிளம்புங்க.." என்றான்.

குந்தவி குழப்பத்தோடு அனைத்தையும் எடுத்து வைத்தாள்.

யஷ்வந்த் அவளின் கைப்பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே நடந்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN