கணவன் 12

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வெற்றியின் கோபத்தால் நகர்ந்து போயிருந்த மேஜை ஒன்றை சரியாக இழுத்து விட்டுவிட்டு நிமிர்ந்த பாலாஜி வீட்டுக்குள் நுழைந்த காதலியை கண்டு நேர் நின்றான்.

அவசரமாக வீட்டுக்குள் நுழைந்த கீர்த்தனா பாலாஜியின் காலை கண்டதும் கதவின் மீதே சாய்ந்து நின்றாள்.

"கீர்த்தனா.."

சிவந்த கண்களில் புதிதாய் கண்ணீர் உருவானது.

"அவன் மறுபடியும் உன்னை அடிச்சானா?" என கேட்டவள் நெஞ்சின் பாரத்தோடு அவனது காலினை வெறித்தாள்.

"இதை விடு.." என்றவன் அவளின் அருகே வந்தான்.

"என்னாச்சி? முகம் ஏன் ஒரு மாதிரி இருக்கு? குரல் கூட மாறி போயிருக்கு.." என்றவன் அவளின் கன்னத்தில் தன் உள்ளங்கையை பதித்தான்.

"பாலா.." என்றவள் மேலே சொல்ல முடியாமல் தவித்தாள்.

"என்னாச்சி கீர்த்து?" அவளின் இமைகளின் கீழே துடைத்து விட்டான்.

"வீட்டுக்கு வாயேன்.." கெஞ்சலாக அழைத்தாள்.

அவளை விசித்திரமாக பார்த்தான். இத்தனை வருடத்தில் ஒருமுறை கூட அழைத்ததில்லை இவள். பாலாஜியின் உணர்வுகளை தன் உணர்வாக மதிப்பவள் அவள்.

"ஏன்.?" என்றவனுக்கு கொஞ்சமாக முகம் மாறி விட்டது.

"என் அப்பா எனக்கு வேற இடத்துல சம்பந்தம் பார்க்க முயற்சி பண்ணிட்டு இருக்காரு.." என்றவளின் கண்களில் இருந்து மேலும் வழிந்தது கண்ணீர்.

"ப்ளீஸ் வீட்டுக்கு வாயேன். நீ வீட்டுக்கு வந்தா அப்புறம் அவர் வேற மாப்பிள்ளை பார்க்க டிரை பண்ண மாட்டாரு.."

அவளின் விழிகளை பார்த்தான். ஏற்கனவே நிறைய அழுததற்கான அடையாளம் இருந்தது.

"ஏன் கீர்த்து.?" புரியாமல் கேட்டான்.

கதிரேசனுக்கு வெற்றியை எந்த அளவிற்கு பிடிக்குமோ அதே அளவிற்கு பாலாஜியையும் பிடிக்கும். ஆனால் அவர் ஏன் வேறு மாப்பிள்ளை பார்க்கிறார் என்று இவனுக்கு புரியவில்லை.

"நீ அந்த வீட்டை விட்டு வந்ததாலதான்.." என்றவள் விம்மியழுதாள்.

அவளின் கண்ணீர் தந்த வலியும், அவளின் காரணம் தந்த வலியும் சரிசமமாக இருந்தது.

"அவர் எனக்கு மாப்பிள்ளை பார்க்கும் விசயம் தெரிஞ்ச உடனே தாத்தா உனக்கு என்னை பெண் கேட்டு பேசினார். ஆனா வீட்டை விட்டு ஓடி போனவனுக்கு என் பொண்ணை கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு அப்பா. அவரோட பிடிவாதம் என்னன்னு உனக்கே தெரியும் இல்லையா? அவர் முடிவு எடுத்தா அதை யாராலும் மாத்த முடியாது. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. வேற மாப்பிள்ளையை நிச்சயம் பண்ணா அப்புறம் என்னால தாங்கவே முடியாது பாலா.." என்றாள் அவனின் முகம் பார்த்து.

பாலாஜி உணர்ச்சிகளை தொலைத்து நின்றிருந்தான். வெற்றி இன்றைக்கு வந்து அடித்ததின் காரணமும் இப்போதுதான் புரிந்தது.

கீர்த்தனாவுக்கு ஒன்றென்றால் உலகத்தையே திருப்புவான் வெற்றி. அவள் மீது அவ்வளவு பாசம். அப்படியிருக்கையில் இந்த அடி கூட தர மாட்டானா?

கீர்த்தனாவை விட்டுவிட்டு வந்து சோபாவில் அமர்ந்தான். கீர்த்தனா அவனின் எதிரில் இருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்தாள்.

"ப்ளீஸ்.. வீட்டுக்கு வா பாலா‌‌.." மற்றொரு முறை கெஞ்சினாள்.

"உன் அப்பா சொல்வதை கேளு கீர்த்து.." அவனால் அந்த வீட்டில் தாக்கு பிடிக்க முடியுமென்று தோன்றவில்லை.

கீர்த்தனா உறைந்து போனாள். அவன் சொன்னதை நம்ப முடியவில்லை.

"உனக்கு நான் வேணாமா பாலா?" நம்பிக்கையை தொலைத்தவளாக கேட்டாள்.

பெருமூச்சோடு நிமிர்ந்தான். ஆனால் அவளின் முகம் பாராமல் எதிரே இருந்த சுவரை வெறித்தான்.

"வேணும் கீர்த்தனா. ஆனா அந்த வீட்டுக்கு என்னால வரவே முடியாது. நீ என்னை எவ்வளவு லவ் பண்றன்னு தெரியுது. உன் காதலை அடைய எனக்கு கொடுப்பினை இல்ல. எல்லா விசயத்திலும் துரதிர்ஷ்டசாலி நான். உனக்கு ஏத்த ஒருத்தன் கண்டிப்பா கிடைப்பான்.." என்றவன் தயங்கிவிட்டு "என்னை மறந்துடு கீர்த்தனா.." என்றான்.

கீர்த்தனா எழுந்து நின்றாள். அவனின் முகம் பாராமல் தலை குனிந்தாள்.

"நான்தான் ரொம்ப நம்பிட்டேன். உன் அண்ணனுக்காக என்னை விட்டு தருவேன்னு சொன்ன போதே நான் புரிஞ்சிட்டு இருந்திருக்கணும். நான்தான் பைத்தியம் போல உன்னை நம்பிட்டேன். சாரி‌.." என்றவள் அங்கிருந்து கிளம்பினாள்.

பாலா தலையை பிடித்தான். அவளை அழைத்து நிறுத்த தோன்றியது. ஆனால் நிறைவேறாத விசயத்திற்காக அடித்தளம் இடுவது முட்டாள்தனம் போல தோன்றியது. அவளாவது நன்றாக இருக்கட்டும் என்று நினைத்தான்.

விழிகளில் நிற்காமல் வழியும் கண்ணீரை துடைத்து சலித்தபடி தனது ஸ்கூட்டியை இயக்கினாள் கீர்த்தனா.

அவள் வீட்டிற்கு வந்தபோது தாத்தாவும் கதிரேசனும் ஹாலில் நின்றபடி வாக்குவாதம் செய்துக் கொண்டிருந்தனர்.

"என்னை நம்பி கட்டி வை.. அப்புறம் கொஞ்ச நாள்ல அவனை வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துடுறோம்.." என்றார் தாத்தா.

"அவன் வருவானா? அவனோட திமிருக்கு என் பொண்ணை என்னால பலி தர முடியாது. இதுவரைக்கும் நீங்களே ஆயிரம் முறை கூப்பிட்டு இருப்பிங்க. ஆனா அவன் வரல. காரணம் அவனோட திமிர். என் பொண்ணை அனாதைக்கு கூட கட்டி தருவேன். அது தப்பு கிடையாது. ஆனா சொந்தங்களை அனாதையா விட்டுட்டு போன இவனுக்கு தந்தா கண்டிப்பா தப்புதான். பெரியவங்க பேச்சுக்கு மரியாதை தராத இவனுக்காக என் பொண்ணை வருச கணக்குல காக்க வைக்க முடியாது.." என்றார் கதிரேசன் ஒரே முடிவாக.

பாலாஜி கை விட்ட போதே இற்றுபோய் விட்ட மனம் தந்தையின் பிடிவாதம் கண்டு மேலும் உடைந்தது போலானது.

தனது அறைக்கு வந்தாள். எதிரே இருந்த அறையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த தேன்மொழியும் கனிமொழியும் இவளை திரும்பி பார்த்தனர்.

"மூவி பார்க்கலாமா.?" கனிமொழி கேட்டாள்.

"இல்ல. நீங்க பாருங்க.." என்றவள் தனது அறைக்குள் நுழைந்து கதவை சாத்தினாள். அங்கேயே சரிந்து அமர்ந்தாள். நேற்றைய ஒரே ஒரு நாளை தான் பார்க்காமல் இருந்திருக்கலாம் என்று தோன்றியது அவளுக்கு.

அப்பா நேற்று காலையிலேயே இந்த திருமணம் பற்றி பேசியிருக்கலாம். அவனை சந்திக்காமல் இருந்திருப்பாள். தன் காதலை பற்றி சொல்லாமல் இருந்திருப்பாள். ஒற்றை நாளில் உருவாகி ஒற்றை நாளிலேயே பொசுங்கி போன தன் காதலை நினைக்கையில் அவளுக்கு கண்ணீர்தான் வந்தது. நேற்றைய இரவில் தரப்பட்ட அந்த ஒற்றை முத்தத்திற்கு எத்தனை சத்தியங்கள் ஈடாகியிருக்கும்? அத்தனையையும் தகர்த்தெறிந்து விட்டான். சத்தியமும் இல்லை. காதலும் இல்லை.

அழுகையாய் வந்தது. அதே நேரத்தில் மனதின் வெறுமையும் வலித்தது.

அவளின் இடது கையில் இருந்த போன் ஒலித்தது. நீர் மின்னும் விழிகளோடு பார்த்தாள். வெற்றிதான் அழைத்திருந்தான்.

அவனுக்கு மதியம் அழைத்து வீட்டின் பிரச்சனையை சொன்னது எவ்வளவு பெரிய தவறென்று இப்போது புரிந்தது அவளுக்கு. வெற்றிக்கு அழைத்திருக்க வேண்டாம். அவன் தன்னை காரணம் காட்டி பாலாஜியை அடித்திருக்க வேண்டாம்.

முகத்தை துடைத்துக் கொண்டு அழைப்பை ஏற்றாள்.

"கீர்த்தனா உன் அப்பாக்கிட்ட நான் பேசுறேன்.." என்றான் எடுத்தவுடனே சமாதானம் செய்பவனாக.

"இல்ல வெற்றி.. எதுவும் பேச வேண்டாம்.." என்றவளின் குரலில் ஒரு உணர்வும் இல்லை.

"என்னாச்சி கீர்த்தனா.?"

தான் கேட்ட பிறகும் அவன் வர மறுத்தான் என்று தெரிந்தால் வெற்றி அவனை அடித்து கொல்லுவான் என்று அறிந்திருந்தவளுக்கு விசயத்தை சொல்ல மனம் வரவில்லை.

"ஒன்னும் இல்ல வெற்றி. என் அப்பா சொன்னதுதான் சரின்னு தோணுது. பெரியவங்க இத்தனை முறை கூப்பிட்டும் வராதவன் அவன். அவனை எந்த நம்பிக்கையில் கட்டிக்கறது.?" என்றவள் தனது நெடுநாளைய காதலை பாலாஜியிடம் சொல்லி, அவனும் பதில் தந்தான் என்பதை சொல்ல பயந்தாள்.

காதல் இருதலையாய் மாறிய பிறகும் அவன் வீட்டுக்கு வர மறுத்தான் என்றோ, தனக்கு நம்பிக்கையை தந்த பிறகும் காதலை கை விட்டான் என்றோ சொல்ல தைரியம் வரவில்லை. அந்த விசயங்கள் தெரிந்தால் பிறகு வெற்றியின் கோபம் அடங்காமல் போய் விடும். பாலாஜியை உயிரோடு விடவே மாட்டான் என்று தெரிந்து வைத்திருந்தவளுக்கு வாய் திறக்கவே மனம் வரவில்லை‌.

"உன் காதலை அவன்கிட்ட சொல்லி பாரு கீர்த்தனா. அப்புறம் அவன் வருவான்னுதான் நினைக்கிறேன். அவனுக்கும் உன்னை பிடிச்சிருக்குன்னுதான் நினைக்கிறேன். கண்டிப்பா உன்னை மனம் வருந்த விடமாட்டான்.."

கசப்பாக சிரித்தாள் கீர்த்தனா.

"அவனோட பிடிவாதம் எந்த அளவுக்குன்னு உனக்கும் தெரியும் வெற்றி. இது சரி வராது‌. அவனாவது அவன் போக்குல நிம்மதியா இருக்கட்டும்.." என்றாள் கதவோரத்திலேயே சரிந்து படுத்தபடி.

"கீர்த்தனா, பீல் பண்றியா?" தயக்கமாக கேட்டான் வெற்றி.

"ச்சே.. ச்சே.. இல்ல. அவன் இல்லன்னா எனக்கு வேறு மாப்பிள்ளையே இல்லையா என்ன?" என்றவளுக்கு மௌனமாய் கண்ணீர் வழிந்தது.

"நா.. நான் அவன்கிட்ட பேசட்டா?"

தோழிக்காக எவ்வளவு இறங்கி வருகிறான் என்று நினைக்கையில் மேலும் மனம் உடைந்தது அவளுக்கு. நட்பில் கிடைத்த நம்பிக்கை காதலில் கிடைக்காமல் போனதே என்று வருந்தினாள்.

"வேண்டாம் வெற்றி. அவனோட பிடிவாதத்துக்கு நான் ஒத்து வருவேன்னு தோணல. விட்டுடு இதை.." என்றவள் "டின்னர் ஆச்சா?" என்று விசாரித்தாள்.

"அப்பா என்னவோ சமைச்சிட்டு இருக்காரு. நானாவது உன்னோடு வரட்டான்னு நேத்து இவரும்தான் கேட்டாராம். ஆனா வேணாம்ன்னு சொல்லி இருக்கான். தப்பு முழுக்க அவன் மேல இருக்கு கீர்த்தனா. அப்படியிருந்தும் வீட்டுல உள்ள மத்தவங்களை கெஞ்ச விடுறான் பார்த்தியா, அவனை எவ்வளவு அடிச்சாலும் எனக்கு ஆத்திரமே தீர மாட்டேங்குது.." என்றான் கடுப்போடு.

"அவனை அடிக்காம விட்டுடு வெற்றி. அவனை பார்த்தா உன் கோபம் இயற்கையா உருவாகுதுன்னா, நீ அவனை பார்க்காம இருந்துக்கோ. அதுதான் உன் லைப்க்கு நல்லது. அவனை அடிச்சி நீ ஏன் ஒவ்வொரு முறையும் கெட்ட பேர் வாங்கற?" எனக் கேட்டாள் வருத்தமாக.

"நானா அவனை தேடி போறேன்.? அவன்தான் வந்து தேவையில்லாம கேள்வி கேட்டு கடுப்பேத்திட்டு இருக்கான். இப்ப அந்த ராங்கிக்காரி வேற. இரண்டு பேரும் சேர்ந்து என்னை கொன்னுடுவாங்கன்னு நினைக்கிறேன். அவளை ஏன்டா காதலிச்சோம்ன்னு இருக்கு. அப்படி உருகி வழிவா.. வெற்றி வெற்றின்னு சுத்துவா. இன்னைக்கு நான் சைக்கோ நாயாம்.." என்று கோபத்தோடு திட்டினான்.

"கோபப்படாதே வெற்றி. அவளோட திமிருக்கும் உன்னோட காதலுக்கும் செட் ஆகல.." என்றவள் அவனோடு இன்னும் சற்று நேரம் பேசியிருந்து விட்டு போனை வைத்தாள்.

இரவு உணவின் போது மொத்த குடும்பமும் அமைதியாக இருந்தது.

"என் பிரெண்ட் சிவா ரொம்ப நல்ல பையன்தான்.." என்று இழுத்தான் கீர்த்தனாவின் அண்ணன் சக்தி.

கீர்த்தனா நிமிர்ந்து அண்ணனை முறைத்தாள்.

"வராதவனை நினைச்சி டைம் வேஸ்ட் பண்ண போறியா?" என்று கோபமாக கேட்டான் அவன்.

'நேரம் கொடுங்கள், நான் அவன் மனதை மாற்றுகிறேன்' என்று கேட்க ஆசை வந்தது. ஆனால்‌ எத்தனை வருடமானாலும்‌ பாலாஜியின் மனதை மாற்ற முடியாது என்று அறிந்த பிறகு நேரம் கேட்க துணிவு வரவில்லை.

உணவை முடித்துக் கொண்டு எழுந்தவள் "பாலாவை விட்டுட்டு நான் வேற யாரையாவதுதான் கல்யாணம் செய்யணும்ன்னா பேசாம எனக்கும் வெற்றிக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடுங்க.." என்றாள்.

அனைவரும் அவளை அதிர்ச்சியோடு பார்த்தனர்.

"நேத்து நீ அவனை சமாதானம் செய்ய சொல்றியோன்னு நினைச்சேன்.." ஆச்சரியமாக சொன்னாள் கனிமொழி.

வலியோடு சிரித்தவள் "நேத்து சமாதானத்துக்குதான் சொன்னேன். ஆனா இப்ப இரண்டு பேருமே செத்து போன காதலுக்கு சொந்தக்காரங்களாகிட்டோம். அவனையும் மேரேஜ் பண்ணிக்க சொல்லி டார்ச்சர் பண்ணுவிங்க. என்னையும் டார்ச்சர் பண்ணுவிங்க. அறியாத இரண்டு பேர் எங்ககிட்ட சிக்கி சாகறதை விட நாங்களே கல்யாணம் பண்ணிக்கிட்டா நல்லதாச்சேன்னு நினைச்சேன்.." என்றாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN