கணவன் 14

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சில நொடிகளுக்கு பிறகு கண்களை திறந்தான் வெற்றி. அவளின் முகத்திலிருந்த பயம் இன்னும் தீராமல் இருந்தது.

அம்ருதா மெள்ள தன் விழிகளை திறந்தாள். தன் எதிரில் இருந்தவனை கண்டவளுக்கு கோபம்தான் வந்தது. அவனின் சட்டையிலிருந்த கையை எடுத்தவள் அவனிடமிருந்து திமிற முயன்றாள். வெற்றி பற்களை கடித்தபடி இடையை பிடித்திருந்த அவளின் கரத்தை சற்று தளர்த்தினான். நொடியில் பின்னால் சாய்ந்தாள் அம்ருதா.

கையை முழுதாய் விலக்கி இருக்கலாம்தான். முடியவில்லை அவனால். அவளின் இடையை மீண்டும் பற்றினான். அருகே இருந்த சுவற்றில் அவளை அறைந்து நிறுத்தினான். முதுகு கொஞ்சமாக வலித்தது அம்ருதாவுக்கு. காற்றாய் அவளின் முகத்தருகே நெருங்கினான்.

பற்களை கடித்தபடி அவனை வெறித்தாள் அம்ருதா.

"ரொம்ப ஓவரா பண்ணாதடி. என் உதவியால நிற்கறதை விடவும் படியில் விழுந்து தலையை உடைச்சிக்கிறது உனக்கு அவ்வளவு பிடிச்சிருக்கு.. அவ்வளவு வெறுப்பு என் மேல. காரணம்தான் சரியா தெரியல எனக்கு.." என்றான் கோபத்தோடு.

அம்ருதா அவனை பார்க்காமல் எதிரே இருந்த சுவரை வெறித்தாள்.

"உன் பிரெண்ட்கிட்ட சொல்லு. என் அத்தை பொண்ணு கீர்த்தனா அவனை ரொம்ப லவ் பண்றா. இந்த நாய் அவளை விட்டுட்டானா நான் அவனை இந்த முறை நிஜமா கொன்னுடுவேன். பிரெண்ட் உயிரை காப்பாத்தணும்ன்னு அவ்வளவு அக்கறை இருந்தா அவனை மரியாதையா நடந்துக்க சொல்லு.." என்றவன் அவளை விட்டுவிட்டு கீழே இறங்கினான்.

அம்ருதா நேராய் நின்றாள். முதுகு இப்போது உண்மையிலேயே வலித்தது. முதுகை தேய்த்து விட்டுக் கொண்டவள் பற்களை கடித்து வலியை மறைத்தபடி மேலே ஏறினாள்.

பாலாஜி அதே இடத்தில் நின்றிருந்தான். அருகே இவள் வந்ததும் "அம்ரு." என்றபடி படியில் அமர்ந்தான்.

அம்ருதா முதுகை தேய்த்தபடி அவனருகே அமர்ந்தாள்.

"என்னாச்சி பாலா?" என்றவளுக்கு முதுகு வலியை தாங்கிக் கொண்டு பேசுவதற்கு சற்று சிரமமாக இருந்தது.

நடந்தது அனைத்தையும் சொல்லி முடித்தான் பாலாஜி. நண்பனின் மீது பரிதாபமாக வந்தது அவளுக்கு.

"அந்த பொண்ணு உன்னை லவ் பண்றா பாலாஜி.." தயக்கமாக சொன்னாள்.

தலையை பிடித்தபடி குனிந்தான் பாலாஜி. "நானும்தான் லவ் பண்றேன் அம்ரு. அவ எதிர்பார்க்காத அளவுக்கு, நானே எதிர்பார்க்காத அளவுக்கு லவ் பண்றேன்.. ரொம்ப பிடிக்கும்ப்பா அவளை. அவ என்னை பார்க்க வரும்போதெல்லாம் நேரா நிமிர்ந்து பார்த்ததில்ல நான். ஆனா நான் எப்பவும் ஓரக்கண்ணாலாவாவது அவளை பார்த்துட்டேதான் இருப்பேன். அவளை விட்டு பார்வையை திருப்பிக்கறதா இருந்தா எனக்கு அவ்வளவு கஷ்டம். அவ என் ஏஞ்சல். ரொம்ப வருசமா அவளை ஒன்சைடா லவ் பண்ணிட்டு இருக்கேன். அவ என்னையும் லவ் பண்றான்னு தெரிஞ்சபோது அவ்வளவு சந்தோசமா இருந்தது. என்னால நம்பவே முடியல. மொத்த சொர்க்கமும் கை சேர்ந்தது போல இருந்தது. ஆனா நான் எப்படி அவளை கல்யாணம் செய்ய முடியும் அம்ரு? என்னால அந்த வீட்டுக்கு போக முடியாது. பைத்தியம் பிடிச்சிடும்.."

நண்பனின் தோளில் தட்டி தந்தாள் அம்ருதா.

"நீ எந்த தப்பும் செய்யல பாலாஜி. நீ உன்னை நம்பு. அது ஆக்ஸிடென்ட். உன் தயக்கத்தால உன்னோட மொத்த எதிர்காலத்தையும் தொலைச்சிடாத.." என்று அறிவுரை சொன்னாள்.

யாருக்கு தன் மனதையும், பயத்தையும் புரிய வைப்பான் அவன்?

இரண்டு நாட்கள் நகர்ந்தது. பாலாஜி நடமாடும் பிணம் போலவே தென்பட்டான். அம்ருதாவால் அவனை பார்க்க முடியவில்லை.

இரண்டாம் நாள் மாலை பொழுதில் பார்க்கிங் ஏரியாவில் காத்திருந்தான் வெற்றி. தம்பிக்கு இன்றைக்கு பாடை உறுதி என்று நினைத்து காத்திருந்தவனின் முன்னால் வந்து நின்றாள் அம்ருதா.

அவளை கண்டுக் கொள்ளாதவன் பைக்கின் ஆக்ஸிலேட்டரை திருகினான். தம்பியின் பைக்கை வெறித்துக் கொண்டிருந்தான்.

"நான் உன்கிட்ட பேசணும்.." என்றவளிடம் "சாரி எனக்கு இஷ்டம் இல்ல.." என்றான்.

"உன்கிட்ட கொஞ்சணும்ன்னு கூப்பிடுல. என் பிரெண்டுக்கு உன் ஹெல்ப் வேணும். அதுக்காகதான் பார்க்க வந்தேன். நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்காத.." என்றாள் எரிச்சலோடு.

அவனுக்கு கோபம் கொழுந்து விட ஆரம்பித்தது. 'என்ன வெங்காயத்தை கற்பனை பண்றாங்க? இவளை நினைச்ச பாவம் போதாதா?' என நினைத்தவன் "என் வீட்டு பிரச்சனை உங்களுக்கு அனாவசியம்.." என்றவன் அங்கிருந்து புறப்பட முயன்றான்.

பைக் கொஞ்சம் நகர்ந்தது. சட்டென்று அவனின் பைக்கின் கைப்பிடியை பிடித்தாள் அம்ருதா.

நூலிழை. இல்லையேல் அவள் மீது மோதியிருக்கும் பைக்.

தானாய் பதறி போனான் வெற்றி. பைக்கை அணைத்தவன் ஸ்டான்டை போட்டுவிட்டு கீழே இறங்கினான். இறங்கிய வேகத்தில் அவளை பிடித்து பின்னால் தள்ளினான். அரையடி நகர்ந்து போயிருந்தாள்.

"பைத்தியமாடி நீ? கொஞ்சம் இல்லன்னா பைக் உன் மேல இடிச்சிருக்கும்.. உனக்கு என்ன வந்து தொலைஞ்சதுன்னு இப்படி வந்து விழுற?" என்றான் ஆத்திரத்தோடு.

'கொஞ்சம் முன்னாடி வாங்க போங்கன்னு சொன்னான். இப்ப வாடி போடிங்கறான். சுத்த பைத்தியக்காரன்..' என்று மனதுக்குள் திட்டியவள் "எனக்கு என் பிரெண்ட் நல்லா இருக்கணும். அவன் வாழ்க்கை இப்படி போனதுக்கு நீதான் முக்கிய காரணம். அதனால நீதான் எனக்கு ஹெல்ப் பண்ணியாகணும்.." என்றாள் ஒரு முடிவோடு.

வெற்றி நெற்றியை பிடித்தான். கோபம் தலைக்கேறியது. தன்னால் முடிந்த அளவுக்கு கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றான்.

"அவன் வாழ்க்கை இப்படி போனதுக்கு நான் காரணமா.?" என்றான் ஆத்திரத்தோடு.

வங்கியில் வேலை செய்யும் மற்ற பணியாளர்கள் இவர்களை பார்த்து தங்களுக்குள் பேசிக் கொண்டு சென்றனர்.

"எங்கேயாவது போய் பேசலாம் வெற்றி.." என்றவளை மேலும் கீழும் பார்த்தவன் "எனக்கு இஷ்டம் இல்ல.." என்றான்.

"உன் பிரெண்ட்தானே அந்த பொண்ணு? அவளுக்காவது நீ ஹெல்ப் பண்ணலாமே! இல்ல உண்மையில் நீ அந்த பொண்ணை உசார் பண்ணதான் இவனை இப்படி மாத்தி வச்சிருக்கியா?" எனக் கேட்டாள்.

"அனாவசியமான கேள்வி‌.." சட்டென்று சொல்லி விட்டாலும் கூட அவள் கேட்டது அவனின் இதயத்தை உடைத்து விட்டது.

'நீ என்னை தவிர யாரையும் லவ்வோடு பார்க்க கூடாது. உன் மனசு முழுக்க நான் மட்டும்தான் இருக்கணும்.. என் தலை மேல சத்தியம் பண்ணு..' என்றோ ஒருநாள் அவனின் கைப்பற்றி சத்தியம் செய்ய வைத்த அவளேதான் இன்று இப்படி கேட்டிருந்தாள்.

"பார்க்குக்கு போகலாம்.." என்றவன் தனது பைக்கில் ஏறினான். அவளை விட்டுவிட்டு பைக்கை கிளப்பினான்.

வெற்றியின் முதுகை வெறித்தபடியே சென்று தனது காரை எடுத்தாள் அம்ருதா.

பார்க்கின் வாசலில் காரை நிறுத்தி விட்டு இறங்கினாள். உள்ளே நடந்தாள்.

வழக்கமாய் அமரும் அதே இடத்தில் அமர்ந்திருந்தான். அவ்விடத்தை வெறுத்தாள் அம்ருதா. அவனோடு கொஞ்சி குலாவியதுதான் அவளின் நினைவுக்கு வந்தது.

பெஞ்சில் அவனை விட்டு இரண்டு அடிகள் தள்ளி அமர்ந்துக் கொண்டாள். முன்பென்றால் இருவரின் கால்களும் ஒன்றின் மீது ஒன்றாக இருக்கும்.

"பர்ஸ்ட் விசயம். பாலா எந்த தப்பும் செய்யல. அது வெறும் ஆக்ஸிடென்ட். ஆனா நீதான் அவனை அடிச்சி அடிச்சே அவன் செஞ்சது தப்புங்கற மாதிரி சூழ்நிலையை உருவாக்கி வச்சிருக்க.." அவள் சொன்னது கேட்டு பற்களை அரைத்தான்.

"அவனை அப்படியே விட்டிருந்தா ஒன்னு இரண்டு வருசத்துல சரியாகி‌ இருப்பான். ஆனா நீதான் அவனை மறக்க விடல. டார்ச்சர் பண்ணியிருக்க. பண்ணிட்டு இருக்க. உன்னால பாதிக்கப்பட்ட இன்னொரு அப்பாவி ஜீவன் அவன்.."

வெற்றி குனிந்த தலையை நிமிர்த்தவில்லை. உன்னால் நானும் பாதிக்கப்பட்டேன் என்று அவள் மறைமுகமாக சொன்னதை அவனால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

'அப்படி என்னடி டார்ச்சர் பண்ணேன்?' என கேட்டு அவளின் கன்னத்தில் அறைய தோன்றியது. கதறவும் தோன்றியது.

"இப்ப என்ன சொல்ல வர?" என்றான். அவனின் குரல் கரகரத்து இருந்ததை கண்டு எரிச்சல் வந்தது அவளுக்கு.

'தப்பு முழுக்க அவன் மேல. ஆனாலும் நான் என்னவோ கொடுமை செஞ்ச மாதிரி மூஞ்சியை வச்சிருக்கான். என்னை தவிர வேற எவளா இருந்தாலும் உன்கிட்ட ஏமாந்துடுவாடா!' என நினைத்தவள் "தயவுசெஞ்சி இனி என் நண்பனை அடிக்காத. அவங்க அவனுக்கும் அம்மா. வேணும்ன்னு கொல்ல நினைப்பானா அவன் மட்டும்? கொஞ்சமாவது மனசாட்சியோடு யோசி.. அவன் செஞ்சது கொலையா இருந்து நிரூபிச்சி இருந்தா கூட ஏழு வருசத்துல விடுதலை ஆகி இருப்பான். ஆனா அவன் எட்டாவது வருசமா தண்டனையை அனுபவிக்கிறான். உன்னோட பிரச்சனை என்ன தெரியுமா, உன் பக்கத்துல இருக்கும் யாரும் நிம்மதியா இருக்க கூடாது. அதை மட்டும்தான் செய்ற. ஆக்சிடென்டலா நடந்த விசயத்தை அவன் மேல பழியா போட்டு, அதையும் அவன் மறக்க விடாம டார்ச்சர் பண்ணிட்டு இருக்க. அவனை கொல்வது உன் இஷ்டமா இருந்தா பிரச்சனையில்ல. ஆனா யோசி. உன் பிரெண்ட் வாழ்க்கை நல்லா இருக்க வேணாமா? உன்னாலதான் இப்ப அவளோட வாழ்க்கையும் சேர்த்து கெட்டு போச்சி.." என்றாள் நிதானமாக.

வெற்றி எச்சில் விழுங்கினான். தன் மீது தவறு இருந்தாலும் இல்லையென்றாலும் அதை பற்றி யோசிக்க விரும்பவில்லை. ஆனால் கீர்த்தனாவின் வாழ்க்கை கெட தானும் ஒரு காரணமாய் இருக்க விரும்பவில்லை அவன்.

"அந்த பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்கணும்ன்னு நினைச்சா நீயே அவன்கிட்ட போய் சாரி கேளு. நானும் என்னால முடிஞ்ச அளவுக்கு அவன்கிட்ட பேசுறேன்.." என்றவள் எழுந்தாள்.

"இது என் நண்பனுக்காக.." என்று எச்சரிக்கையாக சொல்லிவிட்டு நடந்தாள். நீச்சல் குளம் வழக்கம்போல காலியாக கிடந்தது. பந்துகள் சில மிதந்துக் கொண்டிருந்தன.

கரையோரம் நடந்துக் கொண்டிருந்தவள் தரையை பார்க்காமல் நடந்ததில் தரையிலிருந்த தண்ணீரில் கால் வைத்து வழுக்கி விழுந்தாள்.

"அம்மா.." கத்தியபடியே தரையில் விழுந்தவளை ஓடி வந்து தூக்கினான் வெற்றி.

"பார்த்து நடக்க மாட்டியா அம்மு?" எனக் கேட்டவன் அவளின் முதுகையும் பின்பகுதியையும் ‌தேய்த்து விட்டான்.

"வலிக்குதா?" அவளின் முகம் பார்த்துக் கேட்டான்.

மௌனமாக அவனை விட்டு விலகி நின்றாள்.

"ப்ளீஸ்.. இனி நான் பாதாளத்துலயே விழுந்தா கூட என்னை தூக்கி விடாதே. உன் ஹெல்ப்ல எழுவதை விட பாதாளத்துல விழுவது எனக்கு ஓகே.." என்றாள் விருப்பு வெறுப்பற்ற குரலில்.

அவளின் முகத்தை சில வினாடிகள் வெறித்தான்.

"அப்படி நான் என்ன பண்ணேன் அம்மு?" என்றவன் இதை கேட்டதற்காக தன் மீதே கோபம் கொண்டான். தலையை கோதிக் கொண்டவன் யோசிக்கவேயில்லை. அவளை பிடித்து குளத்தில் தள்ளி விட்டுவிட்டு தாண்டி நடந்தான்.

தண்ணீரில் மூழ்கி எழுந்தாள் அம்ருதா. தூரத்தில் சென்றுக் கொண்டிருந்தவனை ஆத்திரத்தோடு முறைத்தாள்.

"பைத்தியக்கார பக்கி.." திட்டியபடியே கரையின் மீது ஏறி அமர்ந்தாள்.

வெற்றி பழைய வீட்டிற்கு புறப்பட்டு போனான். உள்ளே நுழைந்தவனின் கையில் திருமண அழைப்பிதழ் ஒன்றை திணித்தாள் தேன்மொழி.

"இந்த டிசைன் நல்லா இருக்கா?" எனக் கேட்டாள்.

அழைப்பிதழை வெறித்தவன் ஹாலில் அமர்ந்திருந்த பெரியவர்களையும் கீர்த்தனாவையும் நோட்டம் விட்டான்.

காலண்டரில் சில தேதிகளை வட்டம் போட்டு வைத்திருந்தார்கள்.

"கீர்த்தனாவுக்கு இந்த மூனு தேதியும் ஓகேவாம். உனக்கு இதுல எது ஓகேன்னு சொல்லு, அன்னைக்கே கல்யாணத்தை வச்சிடலாம்.." என்றார் கதிரேசன்.

அதிர்ச்சியோடு கீர்த்தனாவின் முகம் பார்த்தான். உணர்ச்சிகளை தொலைத்த சிலையை போல அமர்ந்திருந்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN