காதல் கணவன் 15

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தங்கையின் முகம் பார்த்த வெற்றி "உனக்கு பிடிச்ச ஒன்னை செலக்ட் பண்ணு தேனு.." என சொல்லிவிட்டு உள்ளே நடந்தான்.

தாத்தாவின் முன்னால் வந்து நின்றவன் "உங்களுக்கு எந்த தேதி பிடிச்சிருக்கோ அந்த தேதியில் பிக்ஸ் பண்ணிடுங்க தாத்தா‌‌.." என்றான்.

கீர்த்தனாவின் அறைக்கு வந்தவன் அவள் வருவாளென்று காத்திருந்தான். நேரம் கடந்தது. அவளை காணவில்லை. அந்த அறையை வெறிக்க ஆரம்பித்தான். இருள் கவிய ஆரம்பித்தது. தாமதமாக வந்து சேர்ந்தாள் கீர்த்தனா.

"இங்கே இருக்கியா வெற்றி?" எனக் கேட்டாள். அவனின் அருகில் வந்து அமர்ந்தாள்.

"ஏன் இந்த அவசரம்?" புரியாமல் கேட்டான்.

"நான் இல்ல வெற்றி. அப்பாதான் சட்டுன்னு முடிக்கலாம்ன்னு இருக்காரு. என்னால மறுத்து பேச முடியல.." என்றாள் சோகமாக.

"இரண்டு நாள் முன்னாடியே அவன்கிட்ட பேசினேன் கீர்த்தனா.." என்று ஆரம்பித்தவனை முறைத்தவள் "நான்தான் வேணாம்ன்னு சொன்னேன் இல்லையா?" எனக் கேட்டாள்.

அவளின் கையை பற்றினான்.

"ஒரு விசயம் புரிஞ்சிக்க.. இது உன் லைஃப். உன் காதல். இன்னைக்கு அவசரத்துல முடிவெடுக்க கூடாது. கொஞ்சம் விட்டு தருவதாலோ, நீ கொஞ்சம் இறங்கிப் போவதாலோ நாளை வரும் மொத்த லைப்பும் நல்லாருக்கும்ன்னா நாம அதைதான் செய்யணும்.." என்றான் .

அவன் சொன்னது சரியென்றுதான் தோன்றியது அவளுக்கும். ஆனால் பாலாஜியின் மனம் இளக வேண்டுமே!

பாலாஜி மறுநாள் வங்கிக்கு வரவில்லை. அம்ருதாவுக்கு வெற்றியின் மீதுதான் சந்தேகம் வந்தது. அவனின் கேபினுக்கு சென்றவள் "மறுபடியும் அவனை ஏதாவது பண்ணிட்டியா?" எனக் கேட்டாள்.

"இல்லைங்க மேடம்.." என்றவன் கணினியை விட்டு கண்களை எடுக்கவில்லை.

பொய் சொல்கிறானோ என்ற சந்தேகத்தோடு நண்பனுக்கு அழைத்தாள்‌. இம்முறையும் அவன் எடுக்கவில்லை.

மாலை வரை பொறுத்திருந்தவள் வங்கியின் பணி நேரம் முடிந்ததும் மின்னலாய் வெளியே ஓடினாள்.

பாலாஜியின் வீட்டிற்கு வந்தவள் திறந்திருந்த வீட்டின் உள்ளே நுழைந்தாள்.

பள்ளியுடை அணிந்திருந்த கனிமொழியும் அவனும் சேர்ந்து தரையில் அமர்ந்து தாயம் ஆடிக் கொண்டிருந்தார்கள்.

இவளை கண்ட பாலாஜி "வா அம்ருதா‌.." என அழைத்தான்.

"ஏன் பாலா போன் எடுக்கல?" என கேட்டபடி அருகில் வந்து அமர்ந்தாள். நண்பனுக்கு என்னவோ ஏதோவென்று ஓடி வந்திருந்தாள் அவள்‌.

"என்ன பண்ணிட்டு இருக்க நீ? ஏன் பேங்க்கு வரல?" என விசாரித்தாள்.

"என் காதலிக்கு கல்யாணம் நிச்சயம் ஆகிடுச்சி அம்ரு. அதனால்தான் இன்னைக்கு லீவ் போட்டுட்டேன். வர போற இருபத்தியெட்டாம் தேதி கல்யாணம். பத்திரிக்கை அடிக்க தந்துட்டாங்க.. மண்டபம் புக் பண்ணியாச்சி. அவளுக்கான முகூர்த்த புடவை செலக்ட் பண்ணியாச்சி.." எந்த உணர்வும் இல்லாத ஒரு குரலில் சொல்லிக் கொண்டிருந்தான்.

அம்ருதாவுக்கு கவலையாக இருந்தது.

"பாலா.. கொஞ்சம் யோசி.."

மறுப்பாக தலையசைத்தவன் விழிகளின் ஈரத்தை துடைத்துக் கொண்டான்.

"ரொம்ப ஆசை அவ மேல. அவ எனக்கு கிடைக்கலங்கறதை தாங்கிக்கவே முடியல அம்ரு. அவ அவளோட லவ்வை என்கிட்ட சொல்லாம இருந்திருக்கலாம். ஒன்சைட் லவ்தானேன்னு கொஞ்சமா மட்டும் வலிச்சிருக்கும். ஆனா இப்ப ரொம்ப வலி‌. கிடைக்குமான்னு ஏங்கிய காதல் கை சேர்ந்த மறுநொடியே விட்டுப் போச்சேன்னு செம வலி‌‌.." அவன் பாட்டுக்கு பைத்தியம் போல உளறிக் கொண்டிருந்தான்.

கனிமொழி அண்ணனின் கையைப் பற்றினாள்.

"நீ அழாதே அண்ணா. நான் அந்த கல்யாணத்தை கண்டிப்பா நிறுத்திடுவேன்.." என்றாள் நம்பிக்கையோடு.

சகோதரியின் தலையை வருடி விட்டவன் "அப்படி செய்யாத கனி. அவளுக்கு நல்ல லைஃப் அமையணும். இதுதான் அவளுக்கு சரி. வெற்றி அவளை கண்டிப்பா நல்லா பார்த்துப்பான்." என்றான்.

"உன்னை போல முட்டாள் யாருமே இருக்க மாட்டாங்க.." நண்பனை திட்டி தீர்த்தாள் அம்ருதா.

அவன் பதில் பேசவில்லை. கலங்கிய கண்கள் வற்றவே இல்லை.

திருமண வேலைகள் படபடவென்று நடந்துக் கொண்டிருந்தது. வெற்றி நிலைக்கொள்ளாமல் தவித்தான்.

கீர்த்தனாவிடம் ஒரு முன்னேற்றமும் இல்லை.

ஊரெல்லாம் திருமண அழைப்பிதழை வழங்கவும் ஆரம்பித்தார்கள். வெற்றிக்கு இதயம் இரு மடங்கு வேகத்தில் மட்டும்தான் துடித்துக் கொண்டிருந்தது.

"பேங்க்ல இருக்கும் உன் பிரெண்ட்ஸ்க்கு பத்திரிக்கையை வச்சிட்டு வாடா‌‌.." என்று நூறு பத்திரிக்கைகளை எடுத்து நீட்டினார் அப்பா.

பெருமூச்சோடு இரண்டு அழைப்பிதழ்களை மட்டும் எடுத்துக் கொண்டான்.

சனிக்கிழமை பிற்பகல் வேளையில் தனது வேலைகளை முடித்துக் கொண்டு கிளம்பிக் கொண்டிருந்தாள் அம்ருதா.

அவளின் அறைக்குள் வந்தான் வெற்றி. என்னவென்பது போல பார்த்தவளின் முன்னால் திருமண அழைப்பிதழை வைத்தான்.

"எனக்கு மேரேஜ் நடக்க போகுது. எக்ஸ் லவ்வர் நீ.. உன்கிட்ட சொல்லலாமேன்னு வந்தேன்.." என்றான். எக்ஸ் லவ்வர் என்று சொல்லுக்கையில் அவனுக்கு மனம் வலித்தது.

"இதுக்கு பேரு என்ன தெரியுமா? சொந்த தம்பியோட வாழ்க்கையை பிடுங்கி அனுபவிக்கிறதுக்கு பதிலா ஆத்துல இறங்கலாம்.." என்றவளை நிதானமாக பார்த்தான்.

"இந்த திருமணத்துல எனக்கு விருப்பம் இல்ல. இது உனக்கே தெரியும்.." என்றவன் எச்சில் விழுங்கியபடி அவளை பார்த்தான்.

"உ.. உன்கிட்ட இப்படி கேட்கிறதுக்கு நிஜமா தன்மானம் இடம் கொடுக்கல அம்மு.. அம்ருதா.. ஆனா எனக்கு என் பிரெண்ட் வாழ்க்கை நல்லா அமையணும். உன்னால முடிஞ்சா எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா?" எனக் கேட்டவனை கேள்வியாக பார்த்தாள்.

"என்னை மேரேஜ் பண்ணிக்கிறியா? இந்த கல்யாணம் நின்னுடும்.." என்றான். இதை கேட்க மனமே வரவில்லை. ஆனால் கேட்டுதான் பார்க்கலாமே என்ற மனதின் பிடிவாதத்திற்காக கேட்டான்.

திருமண அழைப்பிதழை கையில் எடுத்து நான்காய் கிழித்து அவன் காலடியில் வீசினாள்.

"நீ செத்து போனா கூடதான் இந்த மேரேஜ் நிற்கும். அதை செய். இந்த மேரேஜை சாக்கா வச்சி என்னை உன் வலையில் விழ வைக்க பார்க்காத.." என்றாள்.

அவள் இதை விட மோசமாக சொல்வாளோ என்று எதிர்பார்த்திருந்தான்.

"ஓ.. ஓகே.." என்றவன் அவளை விட்டு விலகி நடந்தான்.

பாலாஜியின் முன் வந்து நின்றவன் அவனிடமும் அழைப்பிதழை நீட்டினான். தலை குனிந்தபடியே வாங்கிக் கொண்டவன் "கன்கிராட்ஸ்.." என்றான் சிறுகுரலில்.

அவனின் சட்டையை பிடித்து தன்னருகே இழுத்தான் வெற்றி.

"திமிருல ஆடாதடா. மேரேஜ் நாளுக்கும் முன்னாடி நாள் வரை நான் வெயிட் பண்ணுவேன்‌. ஒருவேளை எனக்கும் அவளுக்கும் மேரேஜ் நடந்துடுச்சின்னா அடுத்த நாள் உனக்கு இறுதி மரியாதை நடக்கும். இது மட்டும் கன்பார்ம்.." என்றான் எச்சரிக்கும் விதமாக.

"இப்பவே கொன்னுடு வெற்றி.." என்றவனின் கழுத்தில் ஒரு குத்து விட்டான் அவன்.

"அவளுக்கு மேரேஜ் நடப்பதை பார்க்க என்னாலும் முடியாது வெற்றி. இது வழியே இல்லாத பாதை. செத்துட்டாவே நல்லாருக்கும்.." என்றான் வெறுத்துப் போன குரலில்.

"கோழை.." அவனை விலக்கி தள்ளியவன் வெளியே நடந்தான்.

அவன் அந்த அறையின் கதவை திறந்த நேரத்தில் "அவளை நல்லபடியா பார்த்துக்க வெற்றி‌‌.." என்றான் பாலாஜி.

பற்களை கடித்தபடி திரும்பிய வெற்றி சகோதரனை நெருங்கினான். சகோதரனின் வயிற்றில் ஓங்கி ஒரு குத்து விட்டான்‌. பாலாஜி வலி தாங்காமல் வயிற்றை பிடித்தான்.

வெற்றி அவனை எரிச்சலோடு பார்த்துவிட்டு அங்கிருந்து போனான்.

அன்று இரவு முழுக்க தூங்காத இரவாக போனது வெற்றிக்கு. கட்டிலை விட்டு தூரமாக தரையில் அமர்ந்திருந்தான். சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தவனின் கையில் போன் இருந்தது. அதில் அம்ருதாவோடு அவன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இருந்தது.

"சாக சொல்றியே அம்மு! என்னையே சாக சொல்ற.. புரியவே இல்ல அம்மு. என்னை அப்படி லவ் பண்ணியேடி. அத்தனையுமே நடிப்புன்னு நம்பவே முடியல.. எத்தனை முத்தங்கள்.. எத்தனை அணைப்புகள்.. அத்தனையும் சாதாரணம்ன்னு உன்னால எப்படி கடக்க முடியுது? குழந்தை என்னடி உன்னை பண்ணுச்சி? நீ பிரகனென்ட்ன்னு சொன்னபோது எப்படி சந்தோசப்பட்டேன் தெரியுமா? வானம் சொந்தமான மாதிரி இருந்தது. இரண்டு வாரத்துக்குள்ள வீட்டுல பேசி உன்னை என் பொண்டாட்டியாக்கிக்க நினைச்சேனே.. என் ஆசை முழுக்க மண்ணா போச்சே.." என்று போனை எறிந்துவிட்டு முகத்தை மூடிக் கொண்டு குலுங்கினான்.

"அம்மு.. நான் செஞ்சது தப்புதான் அம்மு. உன் மேல காப்பியை கொட்டி இருக்க கூடாது. உன்னை அறைஞ்சிருக்க கூடாது. வழக்கம் போல என் கோபம் என் கை மீறி போயிடுச்சி‌. ஆனா உன்னை பொண்ணு பார்க்க வந்திருக்காங்கன்னு கேள்விப்பட்டதும் கோபம் தானா வந்துடுச்சி அம்மு.." என்று தனக்கு தானே புலம்பினான்.

ஞாயிற்றுக்கிழமை காலை.

உறங்கிக் கொண்டிருந்த பாலாஜி கதவு தட்டப்படும் சத்தத்தில் எழுந்தான். கொட்டாவி விட்டபடியே வந்து கதவை திறந்தான். கீர்த்தனா நின்றிருந்தாள்‌. அன்றைய நாளை போலவே தரை பார்த்து நின்றிருந்தாள். இவனுக்குதான் அன்று கேட்ட கேள்வியை கேட்க மனம் வரவில்லை.

"உள்ளே கூப்பிட மாட்டியா?"

தானாய் விலகி நின்றான். உள்ளே நடந்தவள் தனது பேக்கிலிருந்து அழைப்பிதழை எடுத்தாள்‌. அவனிடம் நீட்டினாள்.

"எனக்கு மேரேஜ் பாலா..‌" என்றவளிடம் கை நீட்டி அழைப்பிதழைப் பெற்றுக் கொண்டான்.

"தயவுசெஞ்சி நீ வந்துடாத பாலா.." என்றாள்.

"ம்.." என்றவன் தலையை நிமிர்த்தவில்லை.

தனது பேக்கை மீண்டும் திறந்தாள். உள்ளிருந்து சில பொருட்களை எடுத்து அவன் காலடியில் வீசினாள். சில புத்தகங்கள், சில அணிகலன்கள், சில பொம்மைகள். அவன் அவளுக்காக தனது பதினைந்தாம் வயதில் வாங்கி தந்திருந்த ஸ்கெட்ச் பென்சில்கள் கூட இருந்தன. சாயம் போய் இருந்தன அவை. ஆனாலும் அதையும் அதே கவரில் அப்படியே வைத்திருந்தாள்.

"இது அத்தனையும் நீ எனக்கு வாங்கி தந்தது பாலா. எதையும் தூக்கி எறியல நான். லவ் லவ்ன்னு சேர்த்து வச்சிருந்தேன்.." என்றவள் விழிகளை ஒரு முறை துடைத்துக் கொண்டாள்.

பையில் வேறு ஏதேனும் பாக்கி இருக்கிறதா என்று துழாவியவள் கையில் சிக்கிய பொருள் கண்டு சத்தமில்லாமல் விம்மினாள்.

அவனால் பார்க்க முடியவில்லை. அதே சமயம் எதுவும் செய்யவும் முடியவில்லை.

தன் உள்ளங்கையை அவன் முன் விரித்தாள். கையில் கட்டப்படும் கயிறு ஒன்று அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தது.

"இதை ஏன் வாங்கி தந்த பாலா? எல்லோருக்கும் கலர் கலரா வாங்கிட்டு வந்த.. ஆனா எனக்கு மட்டும் மஞ்சள் கலரை தந்த.. ரொம்ப நம்பிக்கையா இருந்தது. ஒன்சைட் லவ்வா இருந்தாலுமே இது எனக்கு புது உத்திரவாதமா இருந்தது.." என்றவள் வாயை பொத்திக் கொண்டு விம்மினாள்.

"நீ நல்லா இருக்கணும் பாலா.. என்னை மறந்துட்டு நீயாவது நல்லா இருக்கணும்.. சாரி.. உன் லைஃப்ல வந்ததுக்கும், தேவையில்லாத பிரஷரை உனக்கு தந்ததுக்கும் சாரி. ஐ கேன் அண்டர்ஸ்டேன்ட் யுவர் சுச்சிவேஷன். அந்த வீடு உனக்கு எந்த அளவுக்கு வலியை தரும்ன்னு தெரியும்.. ரியலி ரியலி சாரி.." என்றவள் திரும்பி நடந்தாள்.

வெளியே வந்து ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்த பிறகுதான் தன் கையில் இருந்த கயிற்றை பார்த்தாள். இதை மட்டும் வருத்தம் மிகுதியில் மறதியாக எடுத்து வந்திருந்தாள். அவனை திரும்பிப் பார்த்தாள். அதே இடத்தில் நின்றுக் கொண்டிருந்தான். கலங்கும் விழிகளை துடைத்தவள் கயிறை கையில் இறுக்கியபடியே ஸ்கூட்டியை இயக்கினாள்.

மஞ்சள் கயிறு?
கீர்த்தனாவின் திருமணம் இருவரில் யாரோடு? அறிந்துக் கொள்ள தினமும் இக்கதையை படிக்க தவறாதீர்கள் நட்புக்களே.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN