அத்தியாயம் 34

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காலையில் கண் விழித்த சங்கவி தனது கையோடு இணைந்திருந்த ஆதீரனின் கையை பார்த்தாள். இரவில் இவளின் இடது கையோடு தன் கை விரல்களை கோர்த்தபடி உறங்கியிருந்தான் அவன்.‌‌ இணைந்திருந்த கரங்களும், பின்னிக் கொண்டிருந்த விரல்களையும் ஓவியத்தை போல பார்த்தாள்.

அவனின் முகம் பார்த்தாள்‌. கள்ளம் கபடம் சொல்ல முடியாது. ரசிக்க நினைத்தால் நாள் முழுக்க ரசிக்கலாம். அந்த அளவுக்குதான் இருந்தான்.

தன் வலது கையை நீட்டினாள். அவனின் கன்னத்தில் கை பதித்தாள். மிருதுவாகவோ கடினமாகவோ இருக்கவில்லை. இரண்டும் கலந்து இருந்தது. கொஞ்சம் சூடாக இருந்தான். காய்ச்சல் என்று சொல்ல முடியாது. சுட்டு விரலால் அவனின் கன்னம் வருடினாள். அதற்கு மேல் எதையும் செய்ய தோன்றவில்லை.

அக்காவின் நினைவில் அவன் அழுததை நினைத்துப் பார்க்கையில் மனம் கனத்தது. பரிதாபமாக இருந்தது அவனை பார்க்கையில். அவனின் முகத்தை அங்குலம் அங்குலமாக ஆராய்ந்துக் கொண்டிருந்தவளின் இடது கரம் சற்று இறுகியது.

கையை பார்த்தாள். இறுக்கமாக பற்றிக் கொண்டிருந்தான். மீண்டும் அவனை பார்த்தாள். மெள்ள விழிகளை திறந்தான்.

"சங்கவி.." என்றவனின் மற்றொரு கரம் அவளின் வலது கரத்தின் மீது பதிந்தது. அவளின் கையை சற்று கீழே நகர்த்தினான். தனது இதழின் மீது கொண்டு வந்து நிறுத்தினான். சின்னதாக முத்தமிட்டான்.

சங்கவிக்கு நாணம் தானாய் வந்து சேர்ந்தது. விழிகளை தாழ்த்திக் கொண்டாள்.

அவளின் உள்ளங்கையில் துளி இடம் இல்லாமல் முத்தம் தந்தான். ஒவ்வொரு முத்தமும் அவளுக்கு வெட்கத்தைதான் கூட்டி தந்தது.

"உன்னை பிடிச்சிருக்கு சங்கவி.." என்றான் நூற்றுக்கும் மேற்பட்ட முத்தங்களை அவளின் கைகளில் தந்துவிட்டு.

இதழ் விரித்து மென் புன்னகை பூத்தாள். தன் இடது கரத்தோடு இணைந்திருந்த அவனின் கரத்தை தன் முகத்தின் அருகே இழுத்தாள். அவனின் புறங்கையின் மீது இதழ் பதித்தாள்.

ஆதீரன் கொஞ்சம் ஆச்சரியப்பட்டான். அவளின் ஒற்றை முத்தத்தில் உடம்பு முழுவதும் பூரித்தது. உடம்பின் ஒவ்வொரு நரம்புகளும் சிலிர்த்தது.

"குட் மார்னிங்.." என்றாள் முத்தமிட்டுவிட்டு.

"குட் மார்னிங்.." என்றபடியே அவளின் கரங்களுக்கு விடுதலை தந்தான்.

குந்தவி தனது வழக்கமான காலை பொழுதை வரவேற்றாள். வேலைக்கு செல்ல தயாராகி வந்தாள்.

"சூர்யா இன்னும் மூனு நாள்ல வர போறான்.." என்று கத்திக் கொண்டே அவளை தாண்டி ஹாலுக்குள் ஓடினாள் யஷ்வந்தின் தங்கை தர்ஷினி.

குந்தவி நடப்பதை மறந்தாள். உறைந்துப் போய் நின்றாள். சூர்யா இங்கே வர போவதை வரவேற்ற அதே சமயத்தில் அவன் முன் நிற்க தயங்கினாள்.

அலுவலகம் வந்த பிறகும் கூட அவளின் முகம் வாடிப் போய்தான் இருந்தது. குழப்பத்தில் இருந்தது. அவளின் முகத்தை கண்டே ஏதோ பிரச்சனை என்பதை யூகித்து விட்டான் யஷ்வந்த்.

"என்னாச்சி?" மதிய வேளையில் அவளின் தட்டில் உணவை பரிமாறியபடி கேட்டான்.

நிமிர்ந்தவள் தயக்கத்தோடு அவனை பார்த்தாள்.

"நான் ஒரு வாரத்துக்கு வெளியே தங்கிக்கலாம்ன்னு இருக்கேன்.. எனக்கு லீவும் வேணும்.." என்றாள்.

அதிர்ச்சியோடு அவளின் முகம் பார்த்தவன் "என்னாச்சி குந்தவி? என் வீட்டுல யாராவது ஏதாவது சொன்னாங்களா? இங்கே யாராவது உங்களை மரியாதை குறைவா நடத்தினாங்களா?" எனக் கேட்டான்.

மறுப்பாக தலையசைத்தவள் "எனக்கு கொஞ்சம் தனிமை தேவைப்படுது. ஒரு வாரம் மட்டும் கிடைக்குமா ப்ளீஸ்.? நீங்க எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணிட்டு இருக்கிங்க. இந்த டைம்ல லீவ் கேட்கறது முட்டாள்தனம்தான். ஆனா எனக்கு லீவ் தேவைப்படுது.." என்றாள் தலையை குனிந்தபடி.

கவலையோடு யோசித்தவன் "நான் யோசிச்சிட்டு சொல்றேன் குந்தவி.." என்றான்.

என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்து பார்த்தவனுக்கு ஒரு காரணமும் கிடைக்கவில்லை. வீட்டிற்கு போன் செய்தான். நேற்று மாலையிலிருந்து என்ன நடந்தது என்று விசாரித்தான். வழக்கமான நாளாகதான் சென்றிருந்தது நேற்றைய நாளும் இன்றைய நாளும்.

"வீட்டுல வேற ஏதாவது மாற்றம் இருக்கா சித்தி?" என்று சித்திக்கு போன் செய்து விசாரித்தான்.

"எந்த மாற்றமும் இல்ல யஷூ.." என்றவள் உடனே "ம்ம். இருக்கு.. சூர்யா வரானாம். அவனது ரூமை க்ளீன் பண்ண சொல்லி இருக்கேன்.." என்றாள்.

அதிர்ந்தவன் "அவன் வருவது உங்களுக்கு எப்படி தெரியும்?" எனக் கேட்டான்.

"பூங்கொடி அக்கா போன் பண்ணி காலையில் சொன்னாங்க.." என்று சித்தி சொல்ல இவன் தலையில் அடித்துக் கொண்டான்.

'சர்ப்ரைஸ் தர மொகரையை பாரு..' என்று மனதுக்குள் சூர்யாவை கரித்துக் கொட்டியவன் சித்தியுடனான இணைப்பை துண்டித்துக் கொண்டான்.

"ஆக இவள் ஒரு வாரம் லீவ் கேட்க சூர்யாவோட வருகைதான் காரணம். ஆனா என்ன காரணமா இருக்கும்? அவனோட கம்பெனி வாசல்ல போய் தினம் தவம் கிடந்தா.‌ ஆனால் இங்கே வருபவனை பார்க்க பிடிக்கலையா?" குழம்பினான்.

அன்று மாலையில் சூர்யாவுக்கு அழைத்து விசயத்தை சொன்னான்.

"ரியலி.. டூ யூ நோ தட் ரீசன்?" கவலையாக கேட்டான் சூர்யா.

"எனக்கு என்னடா தெரியும்? அவளை விபச்சாரியா நினைச்சிட்டன்னு உன் மேல வெறுப்போ என்னவோ?"

"நோ.. நோ.. டோன்ட்.. நான் அவளை அப்படி நெனைக்கல.."

"தம்பிக்கு தமிழ் கூட வந்துடுச்சி போல.." என்று சிரித்த யஷ்வந்த் "அவளோட மனசுக்குள்ள என்ன இருக்குன்னு எனக்கு மட்டும் எப்படி தெரியும் சூர்யா? அவ உன்னை நெருங்க நினைக்கறா.. அதே சமயத்துல உன்னை அவாய்ட் பண்ணவும் நினைக்கறா.. பெண்கள் மனசை படிச்ச பாவி இந்த உலகத்துலயே இல்ல.." என்றான்.

"ஓகே.. ஐ வில் கம்.. தென் ஐ வில் ஸ்பீக் வித் ஹேர். ஐ கேன் அன்டர்ஸ்டேன்ட் ஹேர்.." என்ற சூர்யாவுக்கு குந்தவியை நினைத்து கவலையாகவே இருந்தது.

"அவளுக்கு போன் பண்ணி பாரேன்.."

"வேணாம். அவ எடுக்க மாட்டேன்றா.. நேர்ல பார்த்தாதான் அவளை என்னால முழுசா புரிஞ்சிக்க முடியும்.." என்றவன் போனை வைத்தான்.

அன்று மாலை வீட்டுக்கு திரும்புகையில் "சார் என் லீவ் பத்தி யோசிச்சிங்களா?" என விசாரித்தாள் குந்தவி.

"ம்.. லீவ் தரேன். ஒரு வாரத்தை நல்லா என்ஜாய் பண்ணிட்டு திரும்பி வாங்க‌.." என்றான்.

மறுநாள் மாலையில் அவனுடைய காரில் ஏறாமல் சாலையில் சென்றுக் கொண்டிருந்த ஆட்டோ ஒன்றை கை காட்டி ஏறினாள்.

அவளை கவனித்துக் கொண்டிருந்த யஷ்வந்த் தனக்குள் சிரித்தான்.

அன்று இரவு தனது போனை எடுத்து குந்தவியின் போன் இருக்கும் இடத்தை தேடினான். கண்டறிய முடியவில்லை. போன் செய்தான். ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. நெற்றியில் அடித்துக் கொண்டான். இந்த போனை நம்பிதான் அவளை போக விட்டிருந்தான்.

சூர்யாவுக்கு அழைத்து விசயத்தை சொன்னான்.

"ஆர் யூ மேட்? அவளை பாலோவ் பண்ணியிருக்க கூடாதா?" என்று திட்டினான் அவன்.

"அவ உனக்கு பயந்து ஓடியிருக்கா. நியாயப்படி நான்தான் உன்னை திட்டணும்.. அவளை என்னால கண்டுபிடிக்க முடியும். நீ வரும்போது அவ அட்ரஸ் என்கிட்ட இருக்கும்.." என்றான்.

"ஓகே.." என்ற சூர்யா போனை வைத்தான். கண்ணாடியை பார்த்தான். அழகாய்தான் இருந்தான். தாடையை தடவிப் பார்த்தான். தலைமுடியை கோதி விட்டான். கழுத்தை வளைத்து உடம்பை சாய்த்தபடி கண்ணாடியில் தன் உருவை பார்த்தான்.

"எப்படி பார்த்தாலும் அழகுதான் நீ.. ஆனா ஏன் கண்ணாடி முன்னாடி நின்னு ஃபேஷன் ஷோ காட்டிட்டு இருக்க?" என்றபடி அறைக்குள் வந்தாள் பூங்கொடி.

"சும்மாதான் அம்மா.." என்றவன் பேசுவதை கேட்கையில் காதில் தேன் பாய்ந்தது அவளுக்கு.

அந்த வீட்டில் யாருமே அவளோடு தமிழில் பேசுவதில்லை. வீட்டின் வேலைக்காரி கூட ஆங்கிலம்தான். பிறந்த வீட்டிற்கு போன் செய்தாலும் பாதி பேர் மராத்தியில் பேசுவார்கள். இப்படி நேர் நின்று இவன் தமிழ் பேசுவதை கேட்கையில் உள்ளம் குளிர்ந்தது அவளுக்கு.

"அதுக்குள்ள எதுக்காக இந்தியா போற?"‌ எனக் கேட்டபடி அவனிடம் காப்பியை நீட்டினாள்.

"கொஞ்சம் வொர்க்ம்மா.." என்றவன் அம்மாவிடம் இன்னும் உண்மையை சொல்லவில்லை. அம்மாவிற்கு பெரிய சர்ப்ரைஸாக தர நினைத்தான். குந்தவியிடம் சம்மதம் கேட்காமல் எதையும் முடிவெடுக்கவும் முடியவில்லை. அவள் ஒரு வாரம் விடுமுறை வாங்கியதே இவனுக்கு மனதை உறுத்திக் கொண்டுதான் இருந்தது.

"டார்லிங்.." தனது அறையிலிருந்து அழைத்தார் அலெக்ஸ்.

"என்ன அலெக்ஸ்?" என்றபடி அருகே இருந்த அறைக்குள் நுழைந்தவள் "ஒருநாளாவது பூங்கொடின்னு கூப்பிடுறிங்களா? எவ்வளவு அழகான பெயர் தெரியுமா என்னோடது?" என்றாள்.

"இவங்க சண்டை மட்டும் ஓயவே ஓயாதா?" கவலையாக கண்ணாடியை பார்த்துக் கேட்டான் சூர்யா.

"ஐ ஹேவ் லாட் ஆஃப் வொர்க் டார்லிங்.. டோன்ட் ஃபைட் வித் மீ.." என்றவர் அலமாரியை திறந்து பைல் ஒன்றை கையில் எடுத்தார்.

"ஓ.. அப்படின்னா சண்டை போட வேற எவளையோ செட் பண்ணி வச்சிருக்கிங்களோ?" பூங்கொடி வழக்கமாய் ஆரம்பிக்க அவர் விழிகளை சுழற்றினார்.

"ஐ வாண்ட் யுவர் ஜகசன் அபவுட் அவர் நியூ பிசினஸ்.." என்றவர் ஃபைலை திறந்தபடி மனைவியை நோக்கி வந்தார். மனைவியின் முன் வந்து நின்றவர் அவளிடம் பேச நினைத்த அதே நேரத்தில் நெஞ்சை பிடித்தபடி பின்னால் சாய்ந்து விழுந்தார்.

"அலெக்ஸ்.." தரையில் விழுந்தவரை உலுக்கினாள் பூங்கொடி.

"கால் த டாக்டர்.." என்றவரின் கையும் காலும் கொஞ்சம் கொஞ்சமாக வளைய ஆரம்பித்தது.

"சூர்யா.." பூங்கொடியின் அழைப்பில் ஓடி வந்தான் அவன்.

"டாக்டருக்கு போன் பண்ணு. ஆம்புலன்ஸை வர சொல்லு.." என்றவள் கணவனிடம் திரும்பினாள். அலெக்ஸ் மயங்கி விட்டிருந்தார்.

சூர்யாவுக்கு கைபேசி கையை விட்டு நழுவியது. கெட்டியாக பிடித்து ஆம்புலன்ஸ்க்கு அழைப்பதே பெரிய விசயமாக இருந்தது.

ஒரு நாள் முழுதாய் முடிந்து போனது. பூங்கொடியும் சூர்யாவும் மருத்துவமனை வராண்டாவில் அமர்ந்திருந்தார்கள். ஜேம்ஸ் குடும்பம் இவ்வளவு நேரமும் இருந்து விட்டு இப்போதுதான் கிளம்பியது. ஜேம்ஸ் மட்டும் இவர்களோடு இருந்தார்.

சூர்யா ஏற வேண்டிய விமானம் அந்த நாட்டை விட்டு புறப்பட்டது. அவனுக்கு அந்த நினைவே இல்லை. நேற்று யஷ்வந்த் போன் பண்ணியிருந்த போது அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என்பதை மட்டும் சொன்னான். ஆனால் வேறு சொல்லவில்லை. அவனும் இவனின் நிலை புரிந்து எதுவும் கேட்கவில்லை.

பூங்கொடி அழுதுக் கொண்டே இருந்தாள். அவளுக்கு சமாதானம் செய்யும் நிலையில் கூட இல்லை சூர்யா. பயத்தில் உறைந்து போயிருந்தான். அவனின் நாயகன் அலெக்ஸ். மனைவியிடம் எப்போதும் கத்திக் கொண்டே இருப்பவர்தான். ஆனால் அவனிடம் அன்பை முழுதாய் கொட்டுவார். அவனின் சிறு கவலையும் அவருக்கு பெரிய பிரச்சனையாக தோன்றும். மகன் புன்னகைத்தபடி இருக்க எதையும் செய்யும் தகப்பன் அவர்.

சூர்யாவின் தோளில் கை பதிந்தது. நிமிர்ந்தான். "டாக்டர் கூப்பிடுறாரு சூர்யா.." என்ற ஜேம்ஸ் முன்னால் நடந்தார்.

அரை மணி நேரத்திற்கு பிறகு முகம் வாடியபடி அங்கே வந்தான் சூர்யா.

"என்ன சொன்னாங்க?" கரகரத்த குரலில் மகனிடம் கேட்டாள் பூங்கொடி.

"ஸ்ட்ரோக்.."

பூங்கொடி புடவை முந்தானை வாய் மீது வைத்தபடி விம்மினாள்.

"அவர் குணமாகிடுவார்.. ஆனா நாள் ஆகுமாம்.."

புரிந்துக் கொண்டதாக தலையசைத்தாள். ஆனால் அழுகைதான் நிற்கவேயில்லை.

"அவரோட கை கால் குணமாகி அவர் பழையபடி எழுந்து நடக்க ஒன்னு இரண்டு வருசம் ஆகும்ன்னு சொல்லியிருக்காங்க.." என்றான். அவனின் கலங்கிய விழிகளில் இருந்து கண்ணீர் இறங்கியது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN