காதல் கணவன் 16

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அதிகாலை நேரம். மணி நான்கு..

திருமண மண்டபம் சொந்தங்களின் பேச்சு சத்தத்தால் நிறைந்திருந்தது. மணமகன் அறையிலிருந்த வெற்றி நிலைக்கொள்ளாமல் தவித்தான்.

இன்னும் மூன்று மணி நேரத்தில் முகூர்த்தம். இவ்வளவு நேரமும் வாசலில்தான் நின்றுக் கொண்டிருந்தான். தம்பி கண்டிப்பாக வந்து விடுவான் என்று முந்தைய நொடிகள் வரை நம்பினான். ஆனால் அவன் வரவேயில்லை. காத்து காத்து பார்த்து‌பார்த்து இவனுக்கே சலித்து விட்டது. கீர்த்தனா எவ்வளவு உடைவாள் என்பதை அவனால் புரிந்துக் கொள்ள முடிந்தது. அவளை நினைத்து மிகவும் கவலையாக இருந்தது.

"இப்ப கூட அம்ருதா மனசு இளகல வெற்றி. அவ உண்மையிலேயே உன்னை மறந்துட்டா..‌ இல்லன்னா இந்த மேரேஜ் நடக்கும் வரை அமைதியா இருப்பாளா? உன்னை லவ் பண்ணி இருந்தா இன்னேரம் உன் சட்டையை பிடிச்சி உனக்கு எதுக்குடா கல்யாணம்ன்னு கேட்டிருப்பா.." கட்டிலில் அமர்ந்திருந்த முத்துராம் கவலையோடு சொன்னான்.

"அவனவனுக்கு ஆயிரம் கவலை. அதுல இந்த கவலையையும் ஏன்டா சேர்த்துற? ஏற்கனவே நொந்துப் போயிருக்கேன் நான்.. இப்ப அவளையும் சேர்த்து நினைச்சா சல்லடை துணி போல போயிடுவேன்டா. " என்றவன் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு திரும்பினான்.

கனிமொழி உள்ளே வந்தாள். தாவணி ஒன்றில் பொம்மை போலவே இருந்தாள். இரட்டை சடையில் மல்லிகையும் கனகாம்பரமும் இருந்தன.

"காப்பி அண்ணா.." என்று வெற்றியிடம் நீட்டினாள்.

வாங்கி பருகியவனுக்கு இவளின் நினைப்பை நினைத்தும் கவலை வந்தது. "நான் எதையும் செய்யல கனி. அந்த நாய் வரல. அதுக்கு நான் என்ன செய்யட்டும்?" என்றுக் கேட்டான் கவலையாக.

அவனின் பதிலில் கனிமொழிக்கு சம்மதம் இல்லை.

"அவ அவனுக்கானவ. அவங்க இன்னைக்கு கல்யாணம் பண்ணிக்க முடியலன்னா நாளைக்கோ, நாலு வருசம் கழிச்சோ கூட பண்ணிப்பாங்க. நீ ஏன் குறுக்க புகுந்து வண்டி ஓட்டுற?" என்றாள் கோபத்தோடு.

தங்கையின் மூக்கை பற்றி திருகினான்.

"ஆனா நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கலன்னாலும் மாமா வேற எந்த பையனாவது பார்த்து அவளுக்கு கண்டிப்பா கட்சி வச்சிருப்பாரு..." என்று தன் பக்க நியாயத்தை சொன்னான்.

"ஆனா அவளுக்கு யாரை பிக்ஸ் பண்ணியிருந்தாலும் கண்டிப்பா அந்த கல்யாணத்தை நிறுத்தி இருப்பேன் நான்.." ரோசமாகவும் கோபமாகவும் சொன்னாள் கனிமொழி.

தங்கையை கண்டு கொஞ்சம் கர்வமாக இருந்தது அவனுக்கு.

"எவ்வளவு பாசம் அந்த லூசு பையன் மேல.." கேலி போல சொன்னான்.

முறைத்தாள் அவள்.

"உன்னையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா.. அந்த அம்ருதாவோட மூக்குல குத்துற அளவுக்கு உன்னை பிடிக்கும்.." என்றாள்.

புன்னகைத்தவன் அவளின் தலையை வருடி விட்டான். அவனின் கையில் இருந்த காலி கோப்பையை வாங்கிக் கொண்டாள்‌ கனிமொழி.

அவனை அணைத்தாள். "உன்னை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனா எல்லா நேரத்திலும், முக்கியமா பாலா அண்ணாவோட காதலுக்கு நீ எதிரியா வரும்போது பிடிக்குமான்னு தெரியாது.." என்றாள்.

அவளின் அணைப்பு வித்தியாசமாக இருந்தது. அவள் கையிலிருந்த காப்பி கோப்பையை வெறித்தவன் "காப்பியில் விஷம் கலந்துட்டியா கனி?" என்றான் சந்தேகமாக.

நண்பன் கேட்ட கேள்வி கண்டு படக்கென்று எழுந்து நின்றான் முத்துராம்.

காப்பி கோப்பையை பார்த்த கனிமொழி "இல்லன்னா அவ்வளவு தூரம் போகல நான்.‌" என்றாள்.

வெற்றிக்கு இப்போதுதான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ஆனால் அந்த நிம்மதி மறையும் முன்னால் வயிற்றில் சுனாமி வந்தது போல புரட்டியது.

"பேதி மாத்திரை கலந்துட்டேன் அண்ணா.." என்றாள் மெதுவாக.

முத்துராம் தலையில் கையை வைத்தபடி நண்பனை பார்த்தான்.

வெற்றி வயிற்றை பிடித்தபடி தங்கையை பார்த்தான்.

"எத்தனை கலந்த குட்டி?" எனக் கேட்டான். ஆனாலும் அவள் மீது கோபம் வரவில்லை.

"எட்டுதான் அண்ணா.. ஏனா எனக்கு உன் ஹெல்த் மேல அக்கறை இருக்கு.." என்றவளை விசித்திரமாக பார்த்தான் முத்துராம்.

"எட்டா? அதுக்கே அவன் இன்னைக்கு முழுக்க என்ன செய்ய போறானோ?" எனக் கேட்டபடி நண்பனை நெருங்கிய முத்துராம் "வாடா ஹாஸ்பிடல் போகலாம்.." என அழைத்தான்.

"வயித்தை கலக்குதுடா.. பாத்ரூம் போய்ட்டு வந்துடுறேன்.." என்றபடி அருகே இருந்த கழிவறை நோக்கி நடந்தான்.

"பாத்ரூம்லயே இரு அண்ணா. மேடைக்கு வராதே. அவ கல்யாணம் நின்னு போகட்டும். நாலு வருசம் கழிச்சாவது பாலா அண்ணா இவளை கட்டிக்கட்டும்.." என்ற கனிமொழி வெளியே நடந்தாள். போகும் முன் தயக்கமாக நின்றவள் முத்துராம் புறம் திரும்பினாள்.

"உங்களுக்கு காப்பி வேணுமா அண்ணா?" எனக் கேட்டாள்.

தலைக்கு மேல் கையை தூக்கி கும்பிட்டவன் "நான் இரண்டு ஸ்பூன் குழம்பு அதிகமா கலந்து சாப்பிட்டாவே டாய்லெட்டுக்குதான் ஓடிட்டு இருப்பேன். நீ எதையாவது கலந்து தந்து கொடுத்து, அதை நான் குடிச்சேன்னா அப்புறம் ஸ்ட்ரெயிட்டா பாடைதான் எனக்கு.." என்றான்.

"சரி அண்ணா.." என்றவள் தயங்கிவிட்டு அவனருகே வந்தாள். தனது இடுப்பில் சொருகி வைத்திருந்த இருநூறு ரூபாய் தாள் ஒன்றை எடுத்து அவனின் கையில் திணித்தாள். அவளை குழப்பமாக பார்த்தான் அவன்.

"என் அண்ணனை ஹாஸ்பிடல் கூட்டி போயிட்டு மதியம் வரை அங்கேயே இருங்க. கல்யாணம் நின்னு போச்சின்னு நான் போன் பண்ணி சொல்லும்வரை திரும்ப வர வேண்டாம்.." என்றாள்.

அவள் தந்த இருநூறை பார்த்தவன் "ஒத்த இருநூறுக்கா?" எனக் கேட்டான்.

கனிமொழி யோசித்தாள். இன்னும் ஐம்பது ரூபாயை அவனிடம் தந்தாள்.

"எவ்வளவு வேணும்ன்னு சொல்லுங்க.. நான் இன்ஸ்டால்மென்ட்ல செட்டில் பண்றேன்.." என்றாள்.

அவளை பார்க்கையில் அவனுக்கு சிரிப்பாக வந்தது.

"நல்லா இருப்ப நீ.. போ.. யாருக்காவது சந்தேகம் வரும் முன்னாடி போய் உன் மத்த வேலைகளை பாரு.." என்று அனுப்பி வைத்தான்.

பத்து நிமிடத்திற்கு பிறகு வயிற்றை கையால் இறுக்கி பிடித்தபடியே பாத்ரூம் கதவை திறந்து வெளியே வந்தான் வெற்றி.

"நண்பா.. ஹாஸ்பிடல் போலாமா?"

"ம்.." என்றவன் நாலெட்டு வைக்கும் முன் அந்த அறைக்குள் புகுந்தாள் கீர்த்தனா.

மணமகள் கோலத்தில் அழகாய் இருந்தாள். பட்டு சேலை அவளுக்காகவே நெய்தது. ஆபரணங்கள் பூட்டிய அழகு தேவதையாக இருந்தாள்.

அருகில் வந்து வெற்றியை அணைத்துக் கொண்டாள். அவனால்தான் திருப்பி அணைக்க முடியவில்லை. வயிற்றிலிருக்கும் கையை எடுத்தால் வலியால் மயங்கி விடுவோமோ என்று பயந்துக் கொண்டிருந்தான் அவன்.

"சாரி வெற்றி.." என்றாள்.

ஒற்றை கையால் அவளை நேரே நிறுத்தியவன் "உன் விருப்பப்படி எது வேணாலும் செய். உன் பக்கம் நான் முழு சப்போர்ட்டா நிற்பேன்.. அந்த நாயை நேத்து கூட போய் பார்த்து வார்ன் பண்ணிட்டு வந்தேன். பரதேசி கடைசி வரை வராம போயிட்டான். அவனுக்கு இன்னைக்கு சாயங்காலம் கண்டிப்பா மரண அடி உண்டு.." என்றான் பற்களை கடித்தபடி.

கலங்கும் விழிகளோடு அவனை நிமிர்ந்து பார்த்தவள் "நீ எனக்கு பிரெண்டா கிடைச்சது நான் செஞ்ச புண்ணியம் வெற்றி.." என்றாள்.

"சேம் டூ யூ.." என்றவன் மறுபடியும் வயிறு சத்தமிடுவது கண்டு திரும்பினான்.

"உனக்கு உண்மையிலேயே இந்த திருமணத்தில் சம்மதமா?" முத்துராம் சந்தேகத்தோடு கீர்த்தனாவிடம் கேட்டான்.

இல்லையென தலையசைத்தாள். கலங்கும் விழிகளை துடைத்துக் கொண்டாள்.

பாலாஜியின் வீட்டில்தான் அன்றைய இரவு முழுக்க தங்கியிருந்தாள் அம்ருதா. காதலிக்கு திருமணம் நடக்கும் நாளில் அவனை தனியே விட விருப்பமில்லை அவளுக்கு.

வெளிறி போன முகத்தோடுதான் அமர்ந்திருந்தான் அவன். அவனின் சோகம் கண்டு இவளுக்கு மனதை பிசைந்தது.

அவளும் அவளால் முடிந்த அளவுக்கு அவனுக்கு புத்தி சொல்லிவிட்டாள்.

இருதலை கொள்ளி எறும்பாக தவித்துக் கொண்டிருந்தவனால் எதையும் தேர்ந்தெடுக்க முடியவில்லை. கீர்த்தனாவுக்காய் உயிரையும் விட தோன்றியது. ஆனால் மனதில் ஆறா காயமாக இருக்கும் அம்மாவின் நினைவை கொன்று புதைத்து விட்டு அந்த வீட்டிற்கு செல்வது முடியாத காரியமாக தோன்றியது.

அவள் அழைப்பிதழ் தர வந்திருந்த நாள் கண்ணுக்குள்ளேயே நின்றது. அவளின் கலங்கிய கண்கள் உறக்கத்திலும் அவனை விட்டு மறைய மறுத்தது.

"பாலா.." ஹாலில் சோஃபாவில் அமர்ந்திருந்தாள் அம்ருதா.

"இன்னும் இரண்டரை மணி நேரத்துல அவளுக்கு கல்யாணம். அவ இன்னொருத்தருக்கு சொந்தமா ஆக போறா.. உரிமையோடு என் அண்ணனுக்கு மனைவியா ஆக போறா.." என்று தலையை கோதிக் கொண்டவன் தனது இருக்கையில் இன்னும் சற்று சாய்ந்து அமர்ந்தான்.

விடிய விடிய அவன் தூங்கவில்லை. அவளும் தூங்கவில்லை. அவனின் புலம்பலை கேட்டு கேட்டு அவளுக்கு பரிதாபம்தான் வந்தது.

"அவளை கூட்டிட்டு ஓடிடு பாலா.." என்று சொன்னாள் தோழி.

மறுப்பாக தலையசைத்தான் இவன்.

"நான் கூப்பிட்டா வந்துடுவா.. ஆனா வேணாம். அவளாவது நல்லா வாழணும். நான்தான் தப்பு பண்ணேன். நான்தான் உறவுகளை விட்டு தண்டனை அனுபவிக்கணும். அவ ஏஞ்சல். அவளுக்கு எல்லோரும் வேணும். அவளுக்கு எதுக்கு என்னோடு சேர்ந்து கூட்டு தண்டனை.?" என்றவன் முன்னால் இருந்த டேபிளில் ஆறிக் கிடந்த காப்பியை கையில் எடுத்தான்.

"அவ இன்னேரம் என்ன செஞ்சிட்டு இருப்பா அம்ரு? அழகாய் டிரெஸ் பண்ணி மணவறைக்கு கூப்பிடுவாங்களான்னு காத்திட்டு இருப்பா இல்ல?" என்றவன் அந்த காப்பியை குடிக்க மனமில்லாமல் மீண்டும் அங்கேயே வைத்தான்.

முகத்தை பொத்தியபடி குனிந்தான்.

"என்னை கைப்பிடிக்க முடியலன்னு நினைச்சி அழுதபடி அவன் கட்டுற தாலிக்கு தலை குனிவா இல்ல? கடைசி நொடியிலாவது மேஜிக் மாதிரி நான் வந்துட மாட்டேனான்னு அக்னி புகையை தாண்டி என்னை எதிர்ப்பார்த்து காத்திட்டு இருப்பா இல்லையா? அவன் குங்குமம் வச்சி விட்டான்னா கண்டிப்பா அவ அழுவா அம்ருதா.." என்றவன் தன் உள்ளங்கையை கண்ணீரால் நனைத்தான்.

அவன் சொல்வதை கேட்கவே முடியவில்லை அவளால். எவ்வளவு பாரம்? எவ்வளவு சோகம்?

"இப்படி புலம்பாம கிளம்பு பாலா. அந்த மேரேஜை நிறுத்திடு. பிறகு எது வேணாலும் பேசிக்கலாம்.."

மறுப்பாக தலையசைத்தான்.

கைகளை விலக்கிக் கொண்டு தோழியை பார்த்தவன் "அவளோட விருப்பம் இல்லாம அவளை தொட டிரை பண்ணுவானா அவன்? அப்படி ஏதாவது நடந்தா அவ என்ன செய்வா?" எனக் கேட்டான்.

நெற்றியில் அடித்துக் கொண்டாள் அம்ருதா.

"ஏன்டா இப்படி டார்ச்சர் பண்ற? அவன் அப்படி இல்ல.. ஆனா கோபம் வந்தா அவளை அடிப்பான்.."

திடுக்கிடலோடு அவளை பார்த்தான் பாலாஜி.

"உண்மைதான். அவனுக்கு கோபம் வந்தா கண்மண் தெரியாது. பொண்டாட்டி. அவனுக்கு இன்னும் அதிகமான சொந்தம் ஆக போறா.. அதனால அவன் தன்னோட கோபத்தை இயல்பா அவ மேல காட்டுவான். காப்பியில் சர்க்கரை குறைஞ்சாலும் அதிகமானாலும் கூட இரண்டு அறையாவது தருவான். நீ அப்புறம் காலம் முழுக்க அழ போற.. பேசாம இப்பவே கிளம்பு. அவளை மேரேஜ் பண்ணிக்க.." என்றாள்.

பாலாஜிக்கு மனதுக்குள் பாரம் சேர்ந்தது. ஆனால் நகர முடியவில்லை.

"வெ.. வெற்றி அப்படி செய்ய மாட்டான்.." என்றான் தனக்கே அன்னியமாக போன ஒரு குரலில்‌.

அதே நேரத்தில் அந்த வீட்டின் கதவு படீரென திறந்தது. கீர்த்தனா நின்றிருந்தாள். பட்டுச் சேலையில் வந்த பகல் நிலவு போல இருந்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN