காதல் கணவன் 18

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
"தாரை வார்த்து தர வாங்க.." மற்றொரு முறை கதிரேசனை அழைத்தார் ஐயர்.

நகராமல் நின்றிருந்தார் அவர். அவர் முகத்தில் ஒரு களையும் இல்லை.

"அப்பா ப்ளீஸ்.. ரெஜிஸ்டர் ஆபிஸ் போகாம நான் உங்களை தேடி வந்திருக்கேன்.. உங்க மகளுக்கு கல்யாணம் இன்னைக்கு. உங்க கடமையிலிருந்து தவறாதிங்க.. உங்களை நம்பி வந்திருக்கேன். என்னை கஷ்டப்படுத்தாதிங்க.." கெஞ்சலாக கேட்டாள் கீர்த்தனா.

"போங்க.. என்ன இருந்தாலும் நம்ம பொண்ணு.." கீர்த்தனாவின் அம்மா தன் கணவனிடம் கெஞ்சிக் கேட்டாள்.

கடித்த பற்களின் இடையே தனது கோபம் மறைத்தவர் மகளின் அருகே சென்றார். ஐயரிடம் அவருடைய கையை நீட்டினார்.

தாத்தாவும் பாட்டியும் மற்றவர்களும் மணபந்தலில் வந்து நின்றார்கள். மணமக்களை ஆசையோடு பார்த்தார்கள். அவர்களின் கழுத்தில் மாலையிட்டார்கள். பாலாஜியின் தாய்மாமன் நரசிம்மன் கலங்கும் கண்களோடு மணமக்களை பார்த்தார். தன் சகோதரி இன்று மனம் நிறைவாள் என்று நம்பினார்.

கதிரேசனின் கைப்பிடித்து பாலாஜியின் தந்தையின் கையோடு பிணைத்தார் ஐயர். மந்திரம் சொல்லியபடி பாலை விட ஆரம்பித்தார்.

மிடறு விழுங்கியபடி மகளை பார்த்தார் கதிரேசன்.

"இதுக்காக நீ நிஜமா பீல் பண்ண போற கீர்த்து.. இவனை கட்டிக்க ஆசைப்பட்டதால நீ எதையெல்லாம் இழக்க போறன்னு இதுக்கு மேலதான் நீ புரிஞ்சிக்க போற.. நீ நல்லா இருக்கணும். கஷ்டப்படாம இருக்கணும்ன்னு நினைச்சேன் நான். ஆனா என்னை புரிஞ்சிக்கல நீ. எனிவே ஒருநாள் கண்டிப்பா நீ இந்த முடிவுக்காக பீல் பண்ணி இந்த அப்பாவை தேடி வருவ. சாபம் கிடையாது இது. உன் தவறை கடைசி நொடியிலும் சுட்டிக் காட்டுறேன் நான். சொந்த அம்மா வாழ்ந்த வீட்டை பயத்தோடு பார்க்கறவன் கண்டிப்பா சுயமான, தைரியமான மனநிலையில் இல்ல.. இந்த பைத்தியக்காரன்தான் வேணும்ன்னு நீயே முடிவு பண்ணிட்ட.." என்று மகளிடம் முணுமுணுத்தவர் கலங்கும் விழிகளை துடைக்க வழி இல்லாமல் ஐயர் சொல்வதை செய்துக் கொண்டிருந்தார்.

பாலாஜிக்கு குற்ற உணர்வாக இருந்தது. சுற்றி இருந்த குடும்பத்திற்கோ வருத்தமும் கோபமுமாக இருந்தது. கதிரேசனை எதுவும் சொல்ல முடியாத சூழல்.

"வருசமெல்லாம் உன்னை என் பக்கத்துலயே வச்சிருக்க ஆசைப்பட்டேன்.." என்ற கதிரேசன் மூக்கை உறிஞ்சிக் கொண்டார்.

சக்தி தன் தங்கையை முறைத்தான். அவனுக்கும் உண்மையிலேயே இந்த பாலாஜியை பிடிக்கவில்லை. பெரியோர் சொல் மதிக்காதவன் தன் தங்கையையும் மதிக்க மாட்டான் என்று நம்பினான் அவன்.

கனிமொழி மாமனின் அருகே அமர்ந்தாள். அவரின் கண்ணீரை துடைத்து விட்டாள். ஐயர் புறம் பார்த்திருந்த கதிரேசனால் இவள் புறம் திரும்ப முடியவில்லை.

"என் அண்ணா அவளை நல்லா பார்த்துப்பான் மாமா.‌. அவன் அவளை ரொம்ப லவ் பண்றான்.." என்று‌ சமாதானம் சொன்னாள்.

சக்திக்கு உடம்பு முழுக்க எரிந்தது அவள் சொன்னதை கேட்டு.

'குட்டி சாத்தான்.. குரங்கு பேய்.. ஊர்ல உலகத்துல இல்லாத அண்ணன். அவனுக்கு கூஜா தூக்கிட்டு திரியறா..' என்று மனதுக்குள் கடுகடுத்தான். அவளை அங்கேயே நாலு சாத்து சாத்த வேண்டும் போல இருந்தது அவனுக்கு.

கதிரேசன் வாய் பேசவே இல்லை. ஐயர் சொன்னதை செய்து விட்டு அங்கிருந்து தள்ளி வந்து நின்றுக் கொண்டார்.

மந்திரங்கள் முடிந்து தாலியை எடுத்து தந்தார் ஐயர்.

பாலாஜியின் முதுகு பின்னால் அமர்ந்திருந்த‌ சித்தி "யோசிக்காம கட்டுடா.. கதிரேசன் அண்ணா மனசு மாறி கல்யாணத்தை நிறுத்திட போறாரு.." என்று கிசுகிசுப்பாக எச்சரித்தாள்.

தயங்கினான் அவன். கதிரேசன் சொன்னது காயம் போல நெஞ்சில் விழுந்து விட்டது.

கீர்த்தனா அவன் முகம் பார்த்தாள்.

"உன்னால என்னை லவ் பண்ண முடியாதுன்னு நினைச்சாவோ, என்னை கவனிச்சிக்க முடியாது, காலம் முழுக்க கூட வர முடியாதுன்னு நினைச்சாவோ இப்போதே கூட போயிடு.." என்றாள்.

"மனசார நேசிக்கிறேன் கீர்த்தனா.." என்றவன் கலங்கும் விழிகளோடு அவள் கழுத்தில் தாலியை கட்டினான்.

"மனசு நிறைஞ்சது.." பாட்டி ஆனந்த கண்ணீரோடு சொன்னாள். கதிரேசனையும் சக்தியையும் தவிர மற்ற அனைவரும் அட்சதை தூவினர்.

கனிமொழிதான் அதிக சந்தோசப்பட்டாள். அவளின் ஆசை அண்ணன் இன்று குடும்பஸ்தன் ஆகிவிட்டது அவளுக்கு அதிக சந்தோசத்தை தந்திருந்தது. கனிமொழியின் மகிழ்ந்த முகம் கண்டு மேலும் எரிந்தது சக்திக்கு.

கதிரேசனை தவிர மற்ற அனைவரும் தங்களின் காலில் விழுந்த ஜோடிக்கு ஆசீர்வாதம் செய்தார்கள். கதிரேசனை தவிர மற்ற அனைவரும் உணவு உண்டார்கள். தந்தையின் முகம் பார்த்த பிறகு கீர்த்தனாவுக்கு சரியாய் உணவு இறங்க மறுத்தது.

இருவரும் திருமணம் ஆன செய்தியை வெற்றிக்கு போன் செய்து சொன்னாள் தேன்மொழி. அவனுக்கும் இப்போதுதான் நிம்மதியாக இருந்தது. ஆனால் தோழியின் திருமணத்தை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைக்காமல் போனதற்காக வருந்தினான்.

சொந்தங்கள் தந்த பரிசு பொருட்களை வாங்கி தேன்மொழி கனிமொழியிடமே தந்தார்கள் மணமக்கள்.

சக்தி கடைசி கடைசியாக வேண்டா வெறுப்பாக தங்கையின் அருகே வந்தான். தனது கிப்டை நீட்டினான்.

"உனக்கு ரொம்ப செல்லம் கொடுத்து கெடுத்துட்டோம். அதான் உனக்கு சீரியெஸ்னெஸ் தெரியல.." என்று தங்கையை திட்டினான்.

அவன் தந்த கிப்டை வாங்குவதா வேண்டாமா என்று குழப்பமாக இருந்தது‌‌ கீர்த்தனாவுக்கு.

"ரொம்ப சீன் போடாத சக்தி. என் அண்ணன் மாதிரி ஒருத்தன் இந்த ஜில்லாவுல எங்கே தேடினாலும் கிடைக்க மாட்டான். உன் தங்கச்சிக்கு லவ் அடிச்சிருக்கு. பொறாமைபடாம அமைதியா‌ இரு.." என்று அவன் கையில் இருந்த கிப்டை பிடுங்கினாள் கனிமொழி.

"ச்சீ போடி.." என்ற சக்தி அவளை கோபத்தோடு பார்த்து விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

கனிமொழிக்கு முகம் கறுத்து விட்டது. சக்தியின் முதுகை வெறித்தாள். அவனை கொல்ல வேண்டும் போல இருந்தது.

பத்து மணியை தொட இருந்த நேரத்தில் வெற்றியும் முத்துராமும் அங்கே வந்து சேர்ந்தார்கள். தோழியை கண்டு நெஞ்சம் நிறைந்தது அவனுக்கு. ஓடி சென்று அவளை அணைத்துக் கொண்டான்.

"உன் முகத்துல தெரியும் இந்த சந்தோசத்துக்காக எதை வேணாலும் ஈடா தரலாம்.." என்றான்.

"தேங்க்ஸ் வெற்றி. நீ என் கூட இல்லன்னா நான் என்ன ஆகியிருப்பேன்னே தெரியாது.." என்றவளுக்கு இப்போதுதான் கண்ணீரே எட்டிப் பார்த்தது.

மணமக்கள் அங்கிருந்து கிளம்பினார்கள். யாரும் வீட்டிற்கு வர சொல்லி அழைக்கவில்லை. மண்டபத்தை விட்டு வெளியே வந்தார்கள் இருவரும். துணையாக வந்த குடும்பம் இருவருக்கும் நிறைய அறிவுரைகளை சொன்னது.

"மாமன் முன்னாடி சந்தோசமா வாழ்ந்து காட்டணும் பாலா.." என்று எச்சரித்தார் சித்தப்பா.

இவர்கள் வாசலுக்கு வந்தபோது சாலையில் நிறுத்தியிருந்த தன் காரில் சாய்ந்து நின்றிருந்த அம்ருதா நேராக நின்றாள். அவளின் காரில்தான் இருவரும் வந்திருந்தார்கள்.

பாலாஜி அவளை உள்ளே அழைத்ததற்கு வர மறுத்து விட்டிருந்தாள்.

பாலாஜியை பார்த்து புன்னகைத்தவள் அந்த குடும்பத்தை பார்த்து தயங்கினாள். பாலாஜியின் புன்னகைக்காக தயங்கி முன்னால் வந்தாள்.

"இவ இங்கே என்ன செய்றா?" வெற்றியின் சித்தியும் அத்தையும் ஒரே நேரத்தில் கேட்டார்கள்.

"அவ இவனோட பிரெண்ட் அத்தை.." என்று சொன்ன வெற்றியை ஆச்சரியத்தோடு பார்த்தார்கள் அனைவரும்.

"அப்புறம் ஏன்டா வேணாம்ன்னு சொன்னா?" பாட்டி குழப்பத்தோடு கேட்டாள். பாட்டியின் கேள்வி கண்டு அம்ருதா விழிகளை சுழற்றினாள்.

அவளை பார்க்கையில் வெற்றிக்கு எரிச்சலாக வந்தது.

"அவ அவனுக்குதான் பிரெண்ட். எனக்கு எதிரி மட்டும்தான்.. காதலனையே செகண்ட்ல கழட்டி விட்டவ. பிரெண்டெல்லாம் எம்மாத்திரம்.?" தம்பியை பார்த்தபடி நக்கலாக கேட்டவன் தோழியிடம் "அவக்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருந்துக்க கீர்த்தனா.." என்று சொன்னான்.

அம்ருதா அவனை ஆத்திரம் தீராமல் பார்த்தாள்.

"அடிச்சி கொல்ற உன்னை மாதிரி நான் இல்ல.." என்றாள்.

வெற்றி முகம் சிவந்தான். பற்களை அரைத்தான். அவசரமாக அண்ணனின் கையை பற்றினாள் தேன்மொழி.

"வேணாம்ன்னா.." என்றாள் பயத்தோடு. அவளின் கண்கள் நொடியில் கலங்கி விட்டது. வெற்றி வலது கையால் அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான்.

"இங்கிருந்து போயிடலாம் அண்ணா.." என்றாள் நடுங்கும் குரலோடு.

அவளை அழைத்துக் கொண்டு வாகனம் நிறுத்துமிடத்துக்கு நடந்தான் வெற்றி.

தாத்தா அம்ருதாவின் முன்னால் வந்து நின்றார். கையெடுத்து கும்பிட்டார்.

"போதும்மா.. என் பேரன் தெரியாம உன்னை காதலிச்சிட்டான். காதலை நம்பி நாங்களும் தெரியாம பொண்ணு கேட்டு வந்துட்டோம். தப்புதான். எங்க எல்லோர் மேலயும் தப்புதான். அதுக்காக பார்க்கற இடத்துலயெல்லாம் என் பேரனை அவமானப்படுத்தாத. அவன் ரொம்ப நொந்து போயிருக்கான். உனக்கு அவனை பத்தி எதுவும் தெரியாது. கை மீறிப் போன கோபத்துல ஒரு அடியை தந்துட்டு அதுக்காக மனசுக்குள்ள ஆயிரம் முறை அடிப்பட்ட வலியை அனுபவிப்பான் அவன். கோபம் வரலன்னாவே என் பேரன் சீக்கிரம் குணமாகிடுவான்னு டாக்டர் சொல்லி இருக்காங்க.. அவனுக்கு கோபத்தை ஏற்படுத்தும் எந்த செயலையும் செய்யாம இருக்கோம் நாங்க. பாலா ஒருத்தன் மேல இருக்கும் கோபம் தீர்ந்தா போதும். என் பேரன் முழுசா குணமாகிடுவான். தயவுசெஞ்சி என் பேரனுக்கு இரண்டாம் எதிரியாய் நீ வந்துடாத. அவனோட கோபம் இரண்டு மடங்கா மாறுவதுல எங்க யாருக்கும் இஷ்டம் இல்ல.. தயவுசெஞ்சி மனசு வச்சி அவனை விட்டு விலகிடு.." என்றார் கெஞ்சலாக.

அம்ருதாவின் முகத்தில் ஈயாடவில்லை. அன்று எதிர்த்து பேசிவள்தான். ஆனால் இன்று அவரின் குரலில் இருந்த தணிவும் கெஞ்சலும் அவளை வாய் பேச விடவில்லை.

"வீட்டுக்கு போனதும் போன் பண்ணு கீர்த்தனா.." என்ற மற்றவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள்.

காரில் ஏறி அமர்ந்த பாலா "வடக்கு கொடிக்கால்ல இருக்கும் மூனாவது ரோட் சுடுகாட்டுக்கு போ அம்ருதா.." என்றான்.

"லூசாடா நீ?" என்றபடி திரும்பிப் பார்த்த அம்ருதா அவனின் கண்களில் இருந்த அமைதி கண்டு குழம்பினாள்.

"கோவிலுக்குதான்டா முதல்ல போகணும்.."

"என் கோவில் அங்கேதான் இருக்கு அம்ரு.." என்றவன் தனது மாலையை சரி செய்துக் கொண்டான். கீர்த்தனாவின் கைப்பற்றிக் கொண்டான்.

அம்ருதா தலையை அசைத்தபடி காரை இயக்கினாள்.

"உங்க அப்பாவை பார்த்து கொஞ்சம் பயமாக இருக்கு கீர்த்தனா.." சிரிப்போடு சொன்னான் பாலாஜி.

"அவருக்கு ரொம்ப பாசம். அதனாலதான் இப்படி பேசிட்டாரு. நீ எதையும் மனசுல வச்சிக்கால பாலா.." என்றவள் அவனின் தலையில் இருந்த அட்சதை அரிசியை சுத்தம் செய்ய முயன்றாள். அவளின் கைப்பற்றி தடுத்தவன் "இருக்கட்டும் கீர்த்தனா.. பிடிச்சிருக்கு.." என்றான்.

கீர்த்தனா சிறு புன்னகையோடு தன் கையை இறக்கிக் கொண்டாள்.

பூங்கொத்து ஒன்றை வாங்கிக் கொண்ட பாலாஜி சுடுகாடு வந்ததும் கீர்த்தனாவின் கைப்பிடித்து உள்ளே நடந்தான்.

இவர்கள் சென்ற நேரத்தில் வெற்றியும் தேன்மொழியும் அங்கே இருந்தார்கள்.

"தம்பிக்கு கல்யாணம் ஆகிடுச்சிம்மா.. கீர்த்தனாவுக்காகவாவது இனி அவனை அடிக்க மாட்டேன்னு நம்புறேன்.. அவனை பார்க்கும் போது வரும் கோபத்தை அடக்கும் வழியை தயவுசெஞ்சி சொல்லிக் கொடும்மா.." என்று கல்லறையின் முன்பு மண்டியிட்டு வேண்டிக் கொண்டிருந்தான் அவன்.

"கனவுலயாவது ஒரு முறை வாம்மா.. கீர்த்தனா மனசு வேதனைப்பட்டா ரொம்ப வலிக்கும் எனக்கு. ப்ளீஸ் எப்படியாவது ஹெல்ப் பண்ணுங்க.." என்றுக் கண் மூடிக் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

பாலாஜிக்கு கண்களை கலங்கியது.

புதுமண ஜோடியை தேன்மொழிதான் முதலில் பார்த்தாள்.

வெற்றியின் தோளில் கைப்பதித்தாள்.

"பாலா அண்ணா வந்திருக்கான் அண்ணா.." என்றாள்.

வெற்றி சட்டென்று எழுந்து நின்றான். தூரமாய் பார்த்தபடி கண்களை துடைத்துக் கொண்டான். தங்கையின் கைப்பிடித்து அழைத்தபடி அங்கிருந்து நடந்தான்.

"நல்லா நடிக்கற வெற்றி.." நாக்கை சுழற்றியபடி சொன்னாள் அம்ருதா. அடிக்கும்‌வரை அடித்து சாகடித்து விட்டு இங்கே வந்து நடித்துக் கொண்டிருக்கிறான் என்று நினைத்தாள் அவள்.

இரு விரல்களால் நெற்றியை பிடித்தான் வெற்றி. தலைவலிப்பது போலிருந்தது.

"என் அண்ணன் நடிச்சா கூட உங்களுக்கு எதுவும் நஷ்டம் கிடையாது. சும்மா வார்த்தையால கஷ்டப்படுத்தாதிங்க.." சீற்றமாக சொன்னாள் தேன்மொழி.

வருங்கால நாத்தனாரை பகைத்து கொள்வது சரியா என்றுதான் அப்போதைக்கு யோசிக்காமல் போனாள் தேன்மொழி.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN