காதல் கணவன் 19

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அம்ருதா விழிகளை சுழற்றினாள்.

"உன் அண்ணனுக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணாத.. அவன் உனக்கே கூட என்னைக்கு வேணாலும் எமனா மாறுவான்.." ஆத்திரம் நிரம்பிய குரலில் சொன்னாள் அம்ருதா.

கீர்த்தனாவுக்கு எரிச்சலாக வந்தது. சம்பந்தமே இல்லாமல் தேவையே இல்லாமல் அவள் பேசுவது போல தோன்றியது. இந்த விசயத்தில் பாலாஜிக்கும் கூட அம்ருதா மீது வருத்தம்தான். அவள் எப்போது திருந்துவாளோ என்றிருந்தது.

வெற்றி கையை முறுக்கிக் கொண்டு அம்ருதாவை நெருங்கினான். அவளை அறைய கையை ஓங்கினான். பாலாஜி தோழியை நோக்கி செல்ல முயன்றான். ஆனால் அதற்கும் முன் சட்டென்று இடை வந்து நின்றாள் தேன்மொழி.

வேண்டாமெனும் விதமாக தலையசைத்தாள். கோபத்தோடு கையை கீழே போட்டான் வெற்றி. பற்களை அரைத்தான். அருகிலே இருந்த கல்லறை கட்டிட தூண் ஒன்றிலே கையை மோத கொடுத்தான்.

"ஐயோ அண்ணா.." பாய்ந்து அவனின் கையை பற்றினாள் தேன்மொழி. நொடியில் ஆறாய் பெருகி விட்டது கண்ணீர். விக்கியழுதபடி அவன் முகம் பார்த்தவள் "வலிக்குதா அண்ணா.?" எனக் கேட்டாள். அவளை வலது கையால் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.

"வலிக்கல.. நீ அழாதே தேனு..." என்றான் கரகரத்த குரலில்.

அவனின் சட்டையில் தேம்பிக் கொண்டிருந்தவள் "இங்கிருந்து போயிடலாம் அண்ணா.." என்றாள் கெஞ்சலாக.

உதட்டை கடித்து உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டவன் அவளை அணைத்தபடியே அங்கிருந்து நகர்ந்தான்.

சுடுகாட்டை‌ விட்டு வெளியே செல்லும் வரையிலுமே அழுதுக் கொண்டுதான் இருந்தாள் தேன்மொழி.

"நான் முட்டாள் இல்ல.? அன்பு தர என்னை சுத்தி எத்தனையோ பேர் இருந்தும் இவக்கிட்ட லவ்வுன்னு விழுந்துட்டேன்.." இடது கையால் நெற்றியில் அடித்துக் கொண்டான்.

அம்ருதா அவனின் முதுகை முறைத்து நின்றாள்.

"ஏன் அம்ரு இப்படி? அவன் உன்னை ஏதாவது டிஸ்டர்ப் பண்ணானா? இன்னைக்குதான் அவனும் கொஞ்சம் நிம்மதியா இருந்தான். அதையும் கெடுத்துட்ட நீ.." கவலையோடு சொன்னான் பாலாஜி.

நண்பனை திரும்பிப் பார்த்து முறைத்தாள்.

"நான் போய் வாசல்ல நிற்கறேன். நீ வா.. அவனுக்கு நீ கூஜா தூக்காத. அவன் ஒரு மிருகம்.." என்றவள் அங்கிருந்து கிளம்பிப் போனாள்.

கீர்த்தனாவுக்கு ஆத்திரமாக‌ வந்தது. அவள் பற்களை அரைப்பதை கண்டு கையை பிடித்தான் பாலாஜி.

"இவளோடு அப்புறமா பேசிக்கலாம் கீர்த்து.. இன்னைக்கு நமக்கு கல்யாண நாள். நம்ம மூட் ஸ்பாயிலாக வேணாம்.." கெஞ்சலாக கேட்டுக் கொண்டான்.

கீர்த்தனா சரியென்று தலையசைத்தாள்.

இருவரும் அம்மாவின் கல்லறை முன்பே வந்து நின்றனர்.‌ வெற்றி வைத்திருந்த பூங்கொத்தின் அருகிலேயே தான் வாங்கி வந்த பூங்கொத்தை வைத்தான் பாலாஜி. கீர்த்தனாவின் கைப்பிடித்து தரையில் மண்டியிட்டான்.

"அம்மா.. நான் ஆசைப்பட்ட பொண்ணையே நான் கட்டிக்கிட்டேன். இதுக்கு முழுக்க முழுக்க உங்க ஆசிர்வாதம்தான் காரணம்ன்னு நம்புறேன். என் இத்தனை ஆண்டு கால சோகத்துல முதல் புன்னகையா இவளை கண்டுபிடிச்சிருக்கேன். இவ முகத்துல எப்பவும் சந்தோசம் மட்டும் இருக்கணும். அதுக்கு நீங்கதான் ஆசி வழங்கணும். நாங்க இரண்டு பேரும் சந்தோசமா ரொம்ப வருசம் வாழணும். நீங்க எப்பவும் எங்களுக்கு துணையா இருக்கணும்.." என்று வேண்டிக் கொண்டவனுக்கு விழிகள் கலங்கியது.

வீட்டின் முன்னால் பைக்கை நிறுத்தினான் வெற்றி. உயர சுற்றுச்சுவரின் நடுவில் இருந்த இரண்டடுக்கில் அகன்று இருந்த வீடு அது. பல வருடங்களுக்கு முன்பு தாத்தா கட்டிய வீடு. அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கட்டியிருந்தார். ஆனால் இப்போது மூவரோடு சேர்ந்து நால்வராய்‌ வீட்டிலிருந்து நகர்ந்து விட்டார்கள்.

வெற்றியின் முதுகில் முகம்‌ புதைத்திருந்த தேன்மொழி கீழே இறங்கினாள். அவளின் கண் மை அழிந்து போயிருந்தது. அவளுடைய முகத்தை அழுத்தமாக துடைத்து விட்டான்.

"அவ சொன்னதுக்காக அழாத தேனு.. நீ அழுதா எனக்கு கஷ்டமா இருக்கும் இல்லையா?" எனக் கேட்டவன் அவளின் தலையை வருடி விட்டான்.

தேன்மொழி அவனின் கையை பற்றினாள். ரத்தம் உறைந்திருந்த முட்டியை மென்மையாக துடைத்து ஊதி விட்டாள்.

"நீ வேற இடத்துக்கு வேலைக்கு போறியா?" தயக்கமாக கேட்டவளை சந்தேகமாக‌ பார்த்தான் அவன்.

"அவங்களை பார்க்க‌ பார்க்க உனக்கு கோபம் தீராம இருக்கும். தூரமா இருந்தா உனக்கு கோபம் வரும் காரணம் குறையும். அவங்க ரொம்ப மோசமா பேசுறாங்க. அவங்க வெறுப்புக்கு காரணம் புரியல. ஆனா அவங்க இப்படியே பேசினா உனக்கு நெகடிவ் தாட்ஸ்தான் அதிகமாகும். அதனாலதான் சொல்றேன். வேற இடம்‌ பார்த்துக்க.."

தங்கை சொன்னதில் இருந்த அர்த்தம் புரிந்தவன் புன்னகைத்தான்.

"நான் வேற ப்ராஞ்ச்க்கு டிரான்ஸ்ஃபர் கேட்கறேன் தேனு. உனக்காக மட்டும்.." அவளின் நெற்றியில் தன் நெற்றி மோதி சொன்னான்.

இப்போதுதான் அவளின் முகத்தில் நிம்மதி பரவியது.

"தேங்க்ஸ் அண்ணா.." அவனின் கழுத்தை கட்டிக் கொண்டாள்.

"பழைய வெற்றியா நீ வேணும்.." ஆதங்கமாய் சொல்லியபடி அவனை விட்டு நகர்ந்தாள்.

தேன்மொழி வீட்டிற்குள் போனாள்.

பைக்கை ஸ்டார்ட் செய்தான் வெற்றி.

வாசலில் தனது காரை நிறுத்திவிட்டு இறங்கிய சக்தி "வீட்டுக்கு வரலையா மச்சி?" எனக் கேட்டான்.

'எதுக்கு.? உள்ள வந்தா ஆளாலும் நிற்க வச்சி என்னை கேள்வி கேட்டு கொல்லுவிங்க.. எனக்கு தேவையாடா இது தர்பூசணி மண்டையா?' என நினைத்துக் கொண்டவன் "நேரமாச்சி சக்தி. நான் போகணும்.." என்றான்.

சக்தி அருகில் வந்து அவனின் தோளில் கை பதித்தான். வெற்றியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை வெறித்தான். மாப்பிள்ளைக்கென்று அவனது அப்பா போட்டு விட்டது அது.

"பர்ஸ்ட்ல இருந்தே ப்ளான் பண்ணி இருக்கிங்க இல்லையா? நீயும் உன் தம்பியும் நம்ப வச்சி எங்க எல்லோரையும் கழுத்தறுத்திட்டிங்க.." என்றான் ஆத்திரத்தோடு.

வெற்றி புன்னகையோடு அவனின் கையை தனது தோளிலிருந்து எடுத்து‌ விட்டான்.

"அவ சந்தோசத்தை பாருடா.. நீ நிம்மதின்னு நினைக்கற எதுவும் காலம் முழுக்க கூட வராது. நமக்கு பிடிச்சவங்க நம்ம முன்னாடி சந்தோசமா இருக்கணும். அதுதான் கடைசி வரை நிம்மதியை‌ தரும். தெரியாதவனுக்கு கட்டி தந்து அவன் உன் தங்கச்சியை கஷ்டப்படுத்துவானோன்னு பயந்துட்டு இருக்க வேணாம் நீ. என் தம்பி கீர்த்தனாவோட சம்மதத்துக்கு மாறா ஏதாவது செஞ்சா கூட உடனே அவனை பேசியே திட்டியோ மிரட்டியோ கூட சரி பண்ண முடியும்.. என் தம்பி எல்லா வகையிலும் அவளுக்கு பொருத்தம். அவ மனசையும் கொஞ்சமாவது பாரு.." என்றவன் பைக்கை கிளப்பிக் கொண்டு அங்கிருந்து போனான்.

சக்திக்கு இவன் மீதும் இப்போது கோபம் வந்தது.

மனதுக்குள் அவனை‌ திட்டியபடியே வீட்டுக்குள் நுழைந்தான்.

குடும்பத்திலிருந்த பாதி பேர் ஹாலில் அமர்ந்திருந்தார்கள். பாலாஜி கீர்த்தனா திருமணத்தை சொல்லி சொல்லி மகிழ்ந்துக் கொண்டிருந்தார்கள்.

இவர்களை கண்டும் எரிச்சல்தான் வந்தது அவனுக்கு. முகத்தை சுளித்தபடி மாடி ஏறினான்.

"நல்லா தூங்கணும்.." என்று புலம்பியபடியே மாடியின் வராண்டாவில் நடந்தவனின் மீது வேகமாய் வந்து மோதினாள் கனிமொழி.

"உனக்கு கண் என்ன பொடனியிலா இருக்குடி?" எரிந்து‌ விழுந்தவன் அப்போதுதான் அவளை பார்த்தான். சிவந்த கண்களும், பயந்த முகமுமாக இருந்தாள். தான் திட்டியும் அவள் திருப்பி திட்டாதது ஏதோ சந்தேகத்தை தந்தது.

"என்னாச்சி பாப்பா?" அவளின் தாடையை நிமிர்த்திக் கேட்டான். அவளின் முகத்தின் கவலை அவனுக்கு கவலையை‌ தந்தது.

அவசரமாக பின்னால் தள்ளி நின்றவள் தன் முகத்தை அவனிடம் காட்டாமல் இருக்க முயன்றாள். ஆனால் அவனின் கையை தாண்டி முகத்தை தாழ்த்த முடியவில்லை அவளால். விழிகளை மட்டும் தாழ்த்திக் கொண்டாள்.

அவளின் முகம் சூடாக இருப்பது போலிருந்தது. இடது கையால் அவளின் நெற்றி தொட்டுப் பார்த்தான்.

"காய்ச்சல் அடிக்குதுடி.." அதிர்ந்தான். "மண்டபத்துல கூட நல்லாதானடி இருந்த?" சந்தேகமாக கேட்டான்.

"எ.. என்னை விடு சக்தி.."‌ வார்த்தையை வெளி சொல்ல தெரியாமல் திணறினாள்.

"ஹாஸ்பிட்டல் போலாம் வா.." அவளின் கைப்பிடித்து இழுத்தான்.

"நான் வரல விடு.." அவசரமாக கையை பின்னுக்கு இழுத்துக் கொண்டவள் அருகே இருந்த சுவரோடு ஒண்டி நின்றாள்.

"உனக்கு என்ன ஆச்சி.? எதுக்கு இந்த புது நடிப்பு?"

"எங்க அம்மாவை வர சொல்லு.." என்றவள் தரையோடு சரிந்து அமர்ந்தாள். முட்டிக்காலை கட்டியபடி மடியில் முகம் புதைத்தாள்.

கோபமும் அழுகையும் சரிசமமாக வந்தது அவளின் குரலில். இதற்கு முன் இப்படி இருந்ததே இல்லை.

அவனுக்கு இப்போது உண்மையிலேயே பயமாக இருந்தது. ஊசி பட்டாசுக்கு ஏதோ ஆகி விட்டது என்று புரிந்தது.

அவளின் முன்னால் குத்துக்காலிட்டு அமர்ந்தவன் "யாராவது ஈவ்டீசிங் பண்ணாங்களா பாப்பா?" எனக் கேட்டான் அவளின் தோளை பற்றி.

அவனின் கையை தட்டி விட்டவள் "கொல்லாத மாமா.. தயவுசெஞ்சி போய் என் அம்மாவையோ பாட்டியையோ வர சொல்லு.." என்றாள் கெஞ்சலாக. கத்தியழைக்க முடியவில்லை. இல்லையென்றால் எப்போதோ அழைத்திருப்பாள்.

"பேய் பிடிச்சிருச்சா கனி? அதிசயமா மாமான்னு கூப்பிட்டிருக்க.?" அவன் அதிர்ச்சி தீராமல் அவளின் முகம் பார்த்தான்.

கீழுதட்டை கடித்தபடி அவனை பார்த்து கண்களால் கெஞ்சியவள் "ப்ளீஸ் மாமா.." என்றாள். விழிகளில் கண்ணீர் இறங்கியது.

"என்னாச்சின்னு நீ முதல்ல சொல்லு.."

'சித்திரவதை செய்றானே..' உள்ளுக்குள் புலம்பியவள் "வயித்து வலி. தயவுசெஞ்சி என் அம்மாவை வர சொல்லு.." என்றாள்.

"நான் ஹாஸ்பிட்டல் கூட்டிப் போறேன் கனி.." என்று எழுந்தவனை வெறித்தவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். ஒருவரும் அவளின் கண்களுக்கு தென்படவில்லை.

அவளின் கையை பற்றினான்.

"போலாம் வா.."

கையை இழுத்துக் கொண்டவள் கைகளால் முகத்தை மறைத்துக் கொண்டாள்.

"இன்னைக்கு ஒரு நாளாவது என் பேச்சுக்கு மதிப்பு கொடு மாமா. என் அம்மாவை வர சொல்லு.." என்றவள் நிமிரவேயில்லை.

"நடிப்பு ஓவரா இருக்குடி.." எரிச்சலோடு சொன்னவன் அவளை தாண்டி நடந்தான்.

மாடி கைப்பிடியை பிடித்தபடி ஹாலை பார்த்தவன் "அத்தை.." என்று கத்தினான்.

நிமிர்ந்து பார்த்தவளிடம் "கனி உங்களை கூப்பிடுறா.." என்று சொல்லிவிட்டு தனது அறைக்கு திரும்பினான். அவள் அதே நிலையில்தான் அமர்ந்திருந்தாள். ஏனோ எரிச்சலாக இருந்தது அவளின் செய்கை கண்டு.

"கனி.." அழைத்துக் கொண்டே மேலே வந்தாள் வளர்மதி. (வேற எங்காவது இவங்களுக்கு பேர் சொல்லி இருந்தா கொஞ்சம் சொல்லுங்கப்பா. வழக்கம் போல மறந்துட்டேன்.)

அம்மாவை கண்ட பிறகே கனிமொழிக்கு மூச்சு வந்தது.

அரை மணி நேரம் கழித்து தனது அறையிலிருந்து வெளியே வந்தான் சக்தி. வீடே அல்லோகலப்பட்டுக் கொண்டிருந்தது. 'இந்த திமிர்காரிக்கு வயித்து வலி வந்துடுச்சின்னு வீடே தலைகீழா மாறிட்டு இருக்கா?' மனதுக்குள் புலம்பியபடி நடந்தான்.

அம்மா அர்ச்சனா( இவங்களுக்கும் நான் ஏற்கனவே பேர் தந்திருந்தா தயவு கூர்ந்து சொல்லவும்) அவனின் எதிரே வந்தாள்.

"எங்கேடா இருந்த இவ்வளவு நேரம்?" எனக் கேட்டாள்.

"சும்மாதான் பாட்டு கேட்டு படுத்திருந்தேன்.. ஏன்ம்மா?"

"கனி பாப்பா வயசுக்கு வந்துட்டாடா.." என்றவள் மகனின் வாயில் சர்க்கரையை கொட்டினாள்.

திகைத்து நின்றிருந்தவன் வீட்டை நோட்டம் விட்டான். அனைவருமே சந்தோசத்தில் இருந்தார்கள்.

பதினெட்டை தொட இருந்தாள் கனிமொழி. ஆனால் இதுவரையிலுமே சடங்காகாமல் இருந்தாள். தேன்மொழி கூட பதிமூன்றில் பெரியவளாகி விட இவளோ இன்னமும் உடலில் மாற்றம் நிகழாமல் இருந்தாள். வீட்டில் இருந்தவர்களுக்கு பயம் பிடிக்க ஆரம்பித்தது. மருத்துவமனை அழைத்துச் சென்று காட்ட இருந்தார்கள். ஆனால் பாட்டிதான் இன்னும் சிறிது நாள் பார்க்கலாம் என்று‌ தள்ளி போட்டு வந்தாள். சில பெண்கள் பெரிய மனுசியாக கூடுதலாய் நாட்கள் பிடிக்கும் என்று சொன்னாள். எப்படியோ இன்று பாட்டியின் நம்பிக்கை நடந்து விட்டது.

'தேங்க் காட்..' என்று நன்றி சொன்னவன் 'இதுக்கு ஏன் அவ அழுது சீன் போட்டா.?' என்று திட்டியபடி வெளியே நடந்தான். வாயிலிருந்த சர்க்கரையின் இனிப்பின் கொஞ்சம் கொஞ்சமாக அவனின் தொண்டையை நனைக்க ஆரம்பித்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN