காதல் கணவன் 20

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கீர்த்தனா டம்ளர் நிறைய பாலை ஊற்றினாள். எடுத்துச் சென்று பாலாஜியிடம் நீட்டினாள். இவர்களை வீட்டில் விட்டுவிட்டு அரை மணி நேரம் முன்பே கிளம்பி விட்டாள் அம்ருதா.

ஹாலில் அமர்ந்து இருந்த பாலாஜி இன்னும் மாலையை கூட கழட்டாமல் இருந்தான்.

"அதை கழட்டி கொடு.."

"போ.." என்று முகத்தை திருப்பிக் கொண்டவன் பாலை பாதி குடித்து விட்டு மீதியை அவளிடம் நீட்டினான்.

"சின்ன குழந்தையை போல அடம் பிடிக்காத பாலா.." என்றவள் தனது மாலையை கழட்டினாள்.

"இன்னைக்கு நமக்கு கல்யாணம்.."

"அதுக்காக நாலு நாளைக்கு மாலையை கழுத்தை விட்டு கழட்டாம இருப்பாங்களா.?" என்றவள் தனது அலங்காரத்தை கலைக்க ஆரம்பித்தாள்.

"ஏன் கீர்த்து இப்படி செய்ற.? இன்னைக்கு ஒரு நாளைக்கு இதே அலங்காரத்தோடு இருக்க கூடாதா.?" அவன் கேட்டது கண்டு நெற்றியில் அடித்துக் கொண்டாள்.

"இம்சை பண்ணாத பாலா. ஏற்கனவே அரை மணி நேரம் செல்பியா எடுத்து வச்சிருக்க.. எனக்கு வேர்க்குது.." என்றவள் படுக்கையறை சென்று முழு அலங்காரத்தையும் கலைத்த நேரத்தில் பூனை போல சத்தமின்றி உள்ளே வந்து கதவை சாத்தினான் பாலாஜி.

"பேய் வரும்ன்னுதானே சொன்ன.? என்ன இன்னைக்கு புதுசா ஒரு திருட்டு பூனை வந்திருக்கு.?" கையை கட்டியபடி திரும்பி நின்றுக் கேட்டாள்.

அவனின் மாலை கழுத்தில் இருக்கவில்லை. 'அடப்பாவி..' என நினைத்தவள் "என்ன.?" எனக் கேட்டாள்.

"இல்ல நமக்கு இன்னைக்கு பர்ஸ்ட் நைட்டு.." கால் விரலால் தரையில் கோலம் போட்டு வெட்கப்பட்டு சொன்னவனை கண்டு ரகசியமாக சிரித்தவள் "ஆனா இன்னும்தான் நைட் ஆகலையே.?" என்றாள் ஜன்னலை பார்த்து விட்டு.

"நிஜமா நைட் ஆகணுமா.?" சோகமாய் கேட்டவனிடம் ஒற்றை கண்ணடித்து நாக்கை நீட்டி ஒழுங்கு காட்டினாள்.

"இந்த புடவையில் நான் எப்படி இருக்கேன் பாலா.?" கண்ணாடியை பார்த்தபடி கேட்டாள். அவனுக்கு பிடித்த சிவப்பு வண்ணத்தில்தான் எடுத்திருந்தாள். அணிகலன் எதுவும் இல்லாமல் கூட அவளுக்கான அழகாய் மாறி நின்றது அந்த புடவை.

"ரொம்ப அழகா இருக்கு கீர்த்தனா.. அதை விட இந்த புடவை அழகா இருக்கும்.." என்றவன் தனது அலமாரியை திறந்து புடவை ஒன்றை வெளியில் எடுத்தான்.

வெள்ளை பட்டு செந்தாழம் பூவின் ஓவியத்தோடு இருந்தது.

"வாவ்.. எனக்கா இது?" ஆச்சரியத்தோடு கேட்டவள் அருகே வந்து புடவையை வருடினாள்.

"போன வருசம் கேரளா போயிருந்த போது இதை வாங்கினேன் கீர்த்தனா. உனக்கு நல்லாருக்கும்ன்னு தோணுச்சி.." என்றவன் புடவையை ரசித்தான். அதை அவளுக்காக தேர்ந்தெடுத்த நேரம் சர்க்கரையின் இனிப்பாய் நெஞ்சில் இருந்தது. பார்த்தவுடன் பிடித்து விட்டது.

"அப்படின்னா ஏன் என்கிட்ட தரல.?" சந்தேகமாக கேட்டாள்.

"கொடுத்தா தப்பா நினைச்சிடுவியோன்னு தரல கீர்த்தனா.. ஐம்பத்தியெட்டாயிரம் இந்த புடவையோட விலை. இதை உன்கிட்ட தந்தா நிறைய கேள்வி வரும். எதுக்கு விலையுள்ள இந்த புடவையை எனக்கு தரன்னு கேட்ப நீ.."

"அவ்வளவு விலையா.?" என்றவளுக்கு புடவையை பார்க்கும்போது இந்த விலை சரிதானென்று தோன்றியது.

அவள் அணிந்திருந்த புடவை வெற்றியின் பணத்தில் எடுத்தது. வளர்மதி புடவையை தேர்ந்தெடுத்ததும் எண்பத்தினான்காயிரத்தை யோசிக்காமல் எடுத்து‌ தந்திருந்தான் அவன். நடக்காத திருமணம் என்று தெரிந்திருந்தும் அவன் பணம் செலவழித்தது ஏதோ போல இருந்தது.

"நான் வராம இருந்திருந்தா இந்த புடவை வேற யாருக்கோ போயிருக்கும் இல்லையா.?" என கேட்டவளிடம் மறுப்பாக தலையசைத்தான்.

"கண்டிப்பா போயிருக்காது. நீ என் தேவதை. உன்னை ஒருதலையா காதலிப்பது கூட சுகம்தான் எனக்கு.." என்றான் அவளின் கண்கள் பார்த்து.

"காலையிலிருந்து அழுதுட்டு இருக்கேன். செண்டிமென்டா பேசி மறுபடியும் அழ வைக்காத.. அந்த புடவை கொடு. நான் நைட்டுக்கு கட்டிக்கிறேன்.." என்று கையை நீட்டினாள்.

புடவையை பின்னால் இழுத்தவன் "நோ.. இப்பவே கட்டு.." என்றான்.

"சரி கொடு.."

மீண்டும் தலையை அசைத்தான்.

"நானும் இங்கேயே இருப்பேன்.." என்றான் குறும்பு சிரிப்போடு.

இடுப்பில் கை வைத்தபடி அவனை ஏறிட்டு பார்த்தவள் "அதானே பார்த்தேன்.!?" என்றாள் கேலியாக.

"நோ ஸ்பீக்கிங்.. உன்னால முடியாதுன்னா நில்லு. நானே கட்டி விடுறேன்.." என்றான்.

யோசனையோடு அவனை பார்த்தவள் "இதையெல்லாம் எங்கே கத்துக்கிட்ட நீ.?" எனக் கேட்டாள்.

"கனிம்மாவை அவளோட ஸ்கூல் பங்ஷன்ல புடவை கட்ட சொல்லி இருந்தாங்க.. அவ இங்கே வந்துதான் பிராக்டிஸ் எடுத்துட்டு இருந்தா. இரண்டு பேரும் வீடியோ பார்த்து கத்துக்கிட்டோம்.."

நெற்றியில் அடித்துக் கொண்டாள் கீர்த்தனா.

"அவளுக்கு நீ கட்டிவிட்டு டிரெயினிங் எடுத்தியா.? என்ன இருந்தாலும் பெண் பிள்ளை அவ.." என்றவளின் நெற்றியில் தட்டியவன் "அவதான் என்னை நிற்க வச்சி கட்டி பழகினா.." என்றான்.

"அடப்பாவி.. ஆம்பள பையன்டா நீ.."

"கனி பிராக்டிஸ் பண்ணா. நான் ஆணா இருந்தா என்ன போச்சி.? என் தங்கச்சிக்கு இந்த ஹெல்ப் கூட பண்ண கூடாதா? நீ வா நான் உனக்கு கட்டி விடுறேன்.." என்றவன் அவளை அருகே இழுத்து நிற்க வைத்து முந்தானையின் பின்னை கழட்ட ஆரம்பித்தான்.

"நீ ஏதும் விளையாடல இல்ல.? டைம் பாஸ்க்கு பொம்மை போல என்னை யூஸ் பண்ணலையே.." என்றவளை கண்டு சிரித்தவன் இல்லையென தலையசைத்தான்.

"ஆனாலும் எனக்கு என்னவோ டவுட்டாவேதான் இருக்கு.." என்றவள் இரு புடவைகளையும் அவன் தராமல் போன பிறகுதான் விசயத்தை புரிந்துக் கொண்டாள்.

"அட பாவி.." என்றபடி சுவரோடு முதுகு சாய்த்து நின்றவள் "நீ நல்ல பையன்னு நினைச்சேன்.." என்றாள் பொய் கோபத்தோடு. கைகள் இரண்டும் அனிச்சையாக கழுத்தின் கீழ் எக்ஸ் மார்க்காக மாறி போனது.

அவளை தலை முதல் கால் வரை எட்டாவது முறையாக அளந்தவன் "கல்யாணமான முதல் நாள்ல நல்ல பையன்னு பேரை வாங்கி நான் என்ன செய்ய போறேன்.?" எனக் கேட்டான் புருவம் உயர்த்தி.

"எனக்கு என்னவோ போல இருக்கு.. கொஞ்சம் பயமா.. நிறைய வெட்கமா.. நாம இதை பத்தி நாளைக்கு பேசிக்கலாம். நீ என் புடவையை கொடு.." என்றாள் ஒரு கையை நீட்டி.

வெள்ளை புடவையை எடுத்துக் கொண்டு அருகே நடந்தவன் அவளருகில் சென்ற பிறகு புடவையை தராமல் தூக்கி கட்டிலின் மீது எறிந்தான்.

நீட்டியிருந்த அவளின் கையை பற்றினான். "நாம நண்டு ஊறுது.. நரி ஊறுது விளையாட்டு விளையாடலாம். சின்ன புள்ளைகளில் விளையாடியது.." என்றவன் அவளின் கையின் மீது இரு விரல்களால் நடை போட்டான்.

முகமும் கழுத்தும் முழு சிவப்பாய் மாறி போயிருந்தது அவளுக்கு. இதற்கு மேல் வெட்கமே பட முடியாது எனும்படி இருந்தது அவளின் நிலை. அவன் கை தீண்டும் இடம் அனைத்தும் புதிதாய் ரத்த செல்களால் நிரம்புவது போலிருந்தது. அவன் ஓரிடத்தில் தீண்டினாலும் உடம்பு மொத்தமும் புல்லரிப்பது போலிருந்தது. கைகள் இரண்டிலும் குத்தி நின்ற ரோமங்கள் அவனின் கண்களுக்கு தென்பட்டாலும் தனது விளையாட்டை நிறுத்திக் கொள்ள விரும்பவில்லை அவன்.

தோள்பட்டையில் பதிந்த அவனின் விரல்கள் அவளுடைய கழுத்தை மெள்ளமாக வட்டம் சுற்றின.

"நீ... நீ ப்ளான் பண்ணிட்டதானே.?" அவள் கேட்டதும் கலகலவென சிரித்தவன் "கரெக்டா கண்டுபிடிச்சிட்ட.." என்றபடி அவளின் கன்னம் நோக்கி கை விரல்களால் நடை போட்டான்.

அம்ருதா பார்க்கில் அமர்ந்திருந்தாள். அவளும் அவனும் அமரும் அதே பெஞ்ச்.

மனம் புது குழப்பத்தோடு இருந்தது. சுடுக்காட்டில் நடந்த விசயம் அவளை குழப்பி விட்டுவிட்டது. அவ்வளவு கோபத்தோடு தன்னை நெருங்கியவன் தேன்மொழியின் ஒற்றை கெஞ்சலில் விட்டு விலகியது எப்படியென்று யோசித்து குழம்பினாள்.

அதன் பிறகுதான் அவளுக்கு அன்று பெண் பார்க்க வந்த போது அவன் அமைதி காத்தது நினைவிற்கு வந்தது. இவ்வளவு நாள் கோபத்தில் இருந்தவளுக்கு அவ்விசயம் நினைவில் வராமல் இருந்து விட்டது.

அன்று அவ்வளவு திட்டியும் அவன் அமைதி காத்தது எப்படி என்று யோசித்தாள்.

"அவனால எப்படி கோபத்தை கட்டுப்படுத்த முடிஞ்சது. அவனால உண்மையிலேயே அவனோட கோபத்தை கட்டுப்படுத்த முடியுமா.?" யோசித்ததில் தலை வலிக்க ஆரம்பித்தது.

"அதுதான் பிரேக்கப் பண்ணியாச்சே.. இனி அவன் எப்படி இருந்தா நமக்கென்ன.?" என்று தன்னிடமே கேட்டுக் கொண்டவள் எழுந்து நடந்தாள். அதே பார்க்கில் அவனின் கைப்பிடித்து தோள் சாய்ந்து நடந்த காட்சிகள் கண் முன் வந்து போனது. தலையை உதறிக் கொண்டாள்.

அவனை நினைக்கவே கூடாது என்று தனக்கு தானே கட்டளையிட்டுக் கொண்டாள்.

"அம்மு நில்லு.."

"மாட்டேன்.." கண்களை கசக்கிக் கொண்டு பார்க்கின் வாசலை நோக்கி ஓடினாள் அம்ருதா.

வேகமாய் ஓடி வந்து அவளை மறித்து‌ நின்ற வெற்றி "சாரி.. இனி கோபப்பட மாட்டேன்.." என்றான் காதுகளை பிடித்தபடி.

"இப்படியேதான் சொல்வ.. ஆனா மறுபடியும் உனக்கு கோபம் வரும். காரணமே தேவையில்ல. எதுக்கெடுத்தாலும் கோபம் வருது உனக்கு.." கரகரத்த குரலில் சொன்னவள் அவனை தாண்டிக் கொண்டு நடக்க முயன்றாள்.

அவள் தன்னை தாண்டி போகாமல் கைப்பிடித்து நிறுத்தியவன் "என் காதலிக்கு ஒருத்தன் ரோஜா பூ நீட்டினா கூட நான் அமைதியா இருக்கணுமா?" எனக் கேட்டான். கோபத்தை மறைக்கதான் பார்த்தான். ஆனால் முடியவில்லை.

"உனக்கு புரியுதா.? நான் அந்த ரோஜாவை வாங்கினாதான் அது தப்பு. அவன் தந்தா தப்பு கிடையாது. அவனுக்கு என்ன தெரியும்‌ நம்மை பத்தி. ப்ராங்ன்னு சொல்லி பூவை நீட்டிட்டான். அதுக்கு அந்த அடி அடிக்கற அவனை. பார்த்த எனக்கே கை கால் நடுங்கிடுச்சி.." இவளும் கோபத்தோடு சொன்னாள்.

"போதும் அம்மு. இதை பத்தி இனி பேச வேணாம். விசயம் முடிஞ்சி போச்சி. விட்டுடு.."

முடியாதென தலையசைத்தவள் "உனக்கு என் பயம் புரியுதா.? உன்னால உன்னை கன்ட்ரோலே பண்ண முடியல. ஒன்னு நீ கொலைக்காரனா ஜெயிலுக்கு போவ.. இல்லன்னா.." மேலே சொல்ல தயங்கினாள்.

"இல்லன்னா.."

"இல்லன்னா நீ அதே கோபத்தோடு என்னையும் ஒருநாள் கொன்னுடுவ.. அந்த பூவை நான் வாங்கியிருந்தா என்னாகியிருக்கும்.? அவனுக்கு விழுந்த அதே அடியும் உதையும் எனக்கு விழுந்திருக்கும். கரெக்டா.?" எனக் கேட்டாள்.

அவளின் முகத்தை ஆராய்ந்துப் பார்த்தவன் "நீ ஏன் பூவை வாங்கணும். உனக்கு ரீசன் கிடையாது.." என்றான். பார்க்கில் அந்த இடத்தை கடந்து சென்றவர்கள் இவர்களை கண்டும் காணாமல் நடந்தார்கள்.

"மனுசங்க எப்போதுமே நல்லவங்க கிடையாது வெற்றி. நாளைய நாள்ல நான் யாரையாவது சும்மா திரும்பி பார்த்தா கூட நீ என்னை அடிப்ப.. என்னால யாரோடும் நண்பரா பழக முடியாது.. எனக்கு பிரைவசிங்கற ஒன்னு இருக்கவே இருக்காது.." தன் நிலையை புரிய வைக்க முயன்றாள்.

பற்களை அரைத்தவன் "உனக்கு யாரையாவது திரும்பி பார்க்கணும்ன்னா என்னை திரும்பி பாரு அம்மு. அதுக்குதானே இந்த லவ் ஒப்பந்தம்.." என்றான் தன் மொத்த கோபத்தையும் மறைத்துக் கொண்டு. "நான் உன் பிரெண்ட்ஸோடு நீ பழக கூடாதுன்னு சொல்லவே இல்லையே.." என்றும் சொன்னான்.

"உனக்கு என் மேல சந்தேகம் வெற்றி. அதனால்தான் நேத்து பாலாவை அடிச்ச.."

நெற்றியை பிடித்துக் கொண்டான் அவன்.

"அவனை‌ பத்தி என்கிட்ட பேசாத.. லாஸ்ட் வார்னிங்.." என்றவன் அவளை விட்டு தள்ளி நின்றான்.

"அவனுக்கும் நம்ம சண்டைக்கும் நடுவுல எந்த காரணமும் கிடையாது. அவனோடு நீ எப்படி பழகினாலும் எனக்கு பிரச்சனை கிடையாது. ஏனா இந்த விசயத்துல உன்னை விட அவன் ரொம்ப நல்லவன்தான்.. முழு மனசா காதலிக்கிறவ எல்லோரும்‌ நல்ல மனுசங்க கிடையாதுன்னு உதவாத காரணம் தேடிட்டு இருக்க மாட்டா.. ஏனா காதல் மனுசுல இருக்கும் வரை எல்லோருமே காதலருக்காவது நல்லவங்கதான்.." என்றவன் அவளை முறைத்து விட்டு வெளியே நடந்தான்.

கலங்கும் விழிகளோடு நின்ற இறந்த கால அம்ருதாவை நினைவிலிருந்து திரும்பி பார்த்தாள் நிகழ்கால அம்ருதா. அன்று கலங்கிய அதே விழிகள்தான் இப்போதும் கலங்கியது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN