காதல் கணவன் 22

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கனிமொழி இருந்த குடிசைக்கு முன்னால் நாற்காலிகளை வரிசையாய் போட்டு வைத்து அமர்ந்திருந்தார்கள் கனிமொழியின் சகோதரர்களும் சகோதரியும்.

"வயிறு வலி ஏதும் இருக்கா பாப்பா..? நான் டாக்டரை வர சொல்லட்டா.?" அக்கறையாய் கேட்டான் வெற்றி.

குடிசையின் வாசல் பக்கத்திலே அமர்ந்து இருந்த கனிமொழி மறுப்பாக தலையசைத்தாள்.

"வயிறு வலி ஏதும் இல்ல அண்ணா.."

"சாப்பிட ஏதாவது வேணுமா.?" எனக் கேட்டான் பாலாஜி.

அவள் பக்கத்திலேயே உணவு பண்டங்கள் ஏகப்பட்டது அடுக்கப்பட்டு இருந்தது. அப்படி இருந்தும் கேட்டான் அவன்.

"வேணாம் அண்ணா.."

"ஏழெட்டு நாளைக்கு உனக்கு போர் அடிக்குமே.." என்று கவலைப்பட்ட வெற்றி "நான் நாளைக்கு வரும்போது என் டேப்லெட்டை எடுத்து‌ட்டு‌ வந்து தரேன்.. நீ கேம் விளையாடுவ.." என்றான்.

"வேணாம்.. அப்புறம் அவ போடுற லீவ்ஸ்க்கும் சேர்ந்து மார்க் குறைஞ்சிடும்.." என்ற பாலாஜி "நான் உன் பிரெண்ட் மாலதிக்கிட்டயிருந்து தினமும் நோட்ஸ் வாங்கி வரேன்.. நீ படிப்ப.." என்றான்.

"இரண்டு பேருமே டேப்லெட்டையும் நோட்ஸையும் கொண்டு வாங்க.. நான் இரண்டையும் யூஸ் பண்றேன்.." என்றவள் தட்டில் இருந்த ஜிலேபி ஒன்றை எடுத்து கடித்தாள். பாகில் ஊறி இருந்தது ஜிலேபி. அவள் கடித்ததும் கடைவாயில் பாகு மட்டும் தனியே வழிந்தது.

நாக்கை வெளியை நீட்டி சுழட்டி பாகை சுவைத்தாள். ஆனால் அப்போதும் தாடையில் நின்று விட்டது பாகு.

"குழந்தை.." ‌தலையை அசைப்படியே அவளின் தாடையை துடைத்து விட்டான் வெற்றி.

கண்களை சுருக்கி சிரித்தாள். மூக்கை பிடித்து ஆட்டியவன் "பொம்மை போல ரியாக்சன் காட்டாதே.." என்றான்.

வேண்டுமென்ற நாக்கை வெளியே நீட்டி முக பாவம் காட்டி கொண்டிருந்தாள் அவள். பாலாஜி கலகலவென சிரித்தான்.

"டெட்டி வேணுமா பாப்பா.? நைட் தனியா தூங்குவியா.? நான் என் பெட்டை தூக்கி வந்து இங்கேயே திண்ணையில் போட்டு நைட்க்கு இங்கேயே தூங்கட்டா.?" கவலையாக கேட்டான் வெற்றி.

அண்ணனின் முகம் பார்த்தவள் "சரி வெற்றி.." என்றாள் பற்களை காட்டி.

"பாட்டி‌ தந்த இரும்பு கத்தி பத்திரமா வச்சிருக்கியா.?" சந்தேகமாக கேட்டவனிடம் காலடியில் இருந்த கத்தியை எடுத்து காட்டினாள்.

"எந்த பேயும் வந்துடாது இல்லையா.?" கவலை போகாமல் கேட்டான்.

"அவளே ஒரு பேய்தான்.. இதுக்கு மேல எந்த பேய் வந்து அவளை தூக்கி போக போகுது.? ஆனாலும் அண்ணனும் தம்பியும் ரொம்ப பண்றிங்கடா.. உங்க தங்கச்சியேதான் அதிசயமா பெரிய மனுசி ஆகியிருக்கா.. ஆளுங்களையும் அவனுங்களையும் பாரு.. இந்த காலத்துல கூட ஊரை கூட்டி இந்த மாதிரி விசயத்துக்கெல்லாம் பங்ஷன் நடத்துறவங்க நீங்களாதான் இருப்பிங்க.." என்று‌‌ திட்டிக் கொண்டே அருகே வந்தான் சக்தி.

அவனும் வெகுநேரமாக தூரமாக நின்று இவர்களை‌ பார்த்துக் கொண்டுதான் இருந்தான். இவர்களின் அலப்பரையும் அவளின் முக ஒழுங்கையும் கண் கொண்டு பார்க்க முடியவில்லை அவனால்.

சக்தி அங்கே வந்ததும் சட்டென்று தலை குனிந்துக் கொண்டாள் கனிமொழி.

"பாப்பா இந்தா கடலை மிட்டாய்.." என்றவன் குடிசைக்குள் நுழைய முயல சட்டென்று அவனின் கை பிடித்து நிறுத்தினான் பாலாஜி.

"எங்கே போற.? நீ உள்ளே போக கூடாது. அவ பக்கத்துல போக கூடாது.." என்றான் கண்டிப்போடு.

"இதென்னடா வம்பா இருக்கு.? இவ்வளவு நேரமும் நீங்க இரண்டு பேரும் அவளை கொஞ்சிட்டு இருந்திங்க. நீ அவளை தொட கூட செஞ்ச.. ஆனா நான் இந்த குட்டிச்சாத்தான் பக்கத்துல போக கூடாதா.?" கோபமாக கேட்டான்.

"இப்ப நீ நாங்க சொல்வதை கேட்க போறியா.? இல்ல நான் வீட்டுல உள்ள பெரியவங்களை கூப்பிடட்டுமா.?" எச்சரிக்கும் விதமாக கேட்டான் வெற்றி.

"போங்கடா போக்கத்தவனுங்களா.." என்று திட்டியவன் கனிமொழியின் பக்கம் பார்த்தான். தரைக்குள் தலையை புதைத்து விடுவது போல அமர்ந்திருந்தாள்.

"பாப்பா உனக்கு‌ இப்ப கடலையும் மிட்டாயும் வேணுமா வேணாமா.?" எனக் கேட்டான் எரிச்சலாக.

தனது தாவணியின் முந்தானையை எடுத்து அவன் முன்னால் விரித்தாள். அப்போதும் அவனை பார்க்கவில்லை.

"ஓவரா நடிக்கறா.." நின்ற வண்ணமே தட்டில் இருந்ததை கொட்டினான். பாதி கீழே சிந்தியது. கொஞ்சம் அவள் மேலே சிந்தியது. அவன் கொண்டு வந்ததில் கால் பங்கு மட்டுமே அவளின் மடியில் சிந்தியது.

"சக்தி.." கோபத்தோடு எழுந்து நின்றான் வெற்றி.

"அண்ணா வேணாம்.." பயத்தில் அவனின் கையை பற்றினாள் தேன்மொழி.

கீர்த்தனா கனிமொழியின் அருகே அமர்ந்து அவளின் தலையிலிருந்த கடலைகளை கீழே தள்ளி விட்டாள்.

"உனக்கு எதுக்கு இவ்வளவு ஆணவம் சக்தி.? எங்க பாப்பா உன்கிட்ட பிச்சையா எடுத்தா.? இப்படி கொட்டுற.? கொஞ்சம் முதுகை வளைச்சிருந்தா குறைஞ்சி போயிருப்பியா.?" என்றும் இல்லாத வழக்கமாக இன்று பாலாஜிக்கும் கோபம் வந்து சேர்ந்தது.

"விடுங்கண்ணா.. மாமா இல்லாத பொண்ணு நான்.. அந்த இடத்துல இவர் செய்றாரு.. அவர் கேவலமா பார்த்தாலும் நான் அமைதியா போய்தானே ஆகணும்.?" கனிமொழி சிறுகுரலில் சொல்லவும், கோபத்தில் தட்டை தூக்கி தரையில் அடித்தான் சக்தி.

தட்டு விழுந்த சத்தத்தில் துள்ளி விழுந்தாள் கனிமொழி.

"நான் உன்னை கேவலமா பார்த்தேனா.? காலையிலிருந்து ரொம்ப பண்ற நீ.. என் முகத்தை கூட நேரா பார்க்க மாட்டேங்கிற.." என்று கத்தி வைத்தான்.

தட்டு விழுந்த சத்தத்தில் வீட்டிலிருந்த மற்றவர்களும் வந்து விட்டார்கள்.

"என்ன நடக்குது இங்கே.?" அர்ச்சனா குழப்பத்தோடு கேட்டாள்.

"உங்க அருமை மகன் எங்க பாப்பா தலையில் கடலை அபிஷேகம் செஞ்சி இருக்கான்.." எரிச்சலாக சொன்னான் வெற்றி.

"என்னடா இது.?" அர்ச்சனா நெற்றியை பிடித்தபடி கேட்டாள்.

"இவ என்னை நேராவே பார்க்க மாட்டேங்கிறா அம்மா.. என்னவோ நான் அவளை கொலை பண்ண போற மாதிரி நடிக்கறா.. நான் பக்கத்துல போக கூடாதாம்.. இவனுங்க இரண்டு பேரும் தடை போடுறாங்க.. இவளை மாமா இல்லாத பொண்ணுன்னு நான் கேவலமா பார்த்தேனாம்.." புலம்பி தீர்த்தான் சக்தி.

கனிமொழி பதில் பேசுவாள், கத்துவாள் என்று எதிர்பார்த்தான். ஆனால் அவளோ செவிடன் காதில் ஊதப்பட்ட சங்காக தரை பார்த்து அமர்ந்திருந்தாள். இன்னமும் அதிக கோபம் வந்தது அவனுக்கு.

"சின்ன பையனை போல குறை சொல்லிட்டு இருக்க.." என்று திட்டினாள் வளர்மதி.

"என்ன இருந்தாலும் அவங்க இரண்டு‌ பேரும் அண்ணனுங்க.. அவங்க என்னமோ பண்றாங்க.. முறை பையன் உனக்கு என்ன அவ பக்கத்துல வேலை.? தூரமா நின்னு தட்டுல இருப்பதை மடியில் கொட்ட முடியாதா.? இப்படி அழிச்சாட்டியம் பண்ணி வச்சிருக்க.." என்று திட்டியபடி அவனை இழுத்து செல்ல முயன்றாள் அர்ச்சனா.

"அதென்னா அண்ணன், முறைப்பையன்.. இத்தனை நாளா இல்லாம இன்னைக்கு புதுசா பாக பிரிவினை போல.." எரிச்சல் தீராமல் கேட்டவனின் ஓரக்கண்ணில் கனிமொழி வாயை பொத்திக் கொண்டு சிரிப்பது தெரிந்தது.

'இங்கே நான் கத்திட்டு இருக்கேன். சனியன் சிரிச்சிட்டு இருக்கு..' மானசீகமாக நெற்றியில் அடித்துக்‌ கொண்டான்.

"இம்சை பண்ணாதடா.. எருமை மாடு மாதிரி வளர்ந்தா மட்டும் போதாது.. கொஞ்சமாவது நாணம் இருக்கணும்.." என்றபடியே அவனை இழுத்துக் கொண்டு போனாள் அர்ச்சனா.

"பாப்பா.." வெற்றி கவலையாய் அழைத்தான்.

முகம் முழுக்க சிரிப்போடு நிமிர்ந்தவளை கண்டு மன கவலை மறந்தான்.

"சாரி கனி. அவனுக்கு கிறுக்கு பிடிச்சிடுச்சி. நீ எதையும் மனசுல வச்சிக்காத.." என்றபடியே புடவை விரித்த தரையில் கிடந்த பொட்டுக் கடலைகளையும் மிட்டாய்களையும் எடுத்து சேகரித்தாள் கீர்த்தனா.

"வேஸ்டா போச்சி.." என்று முனகியவளின் கையில் இருந்ததை வாங்கி தனது மடியிலேயே போட்டுக் கொண்டாள் கனிமொழி.

"அவன் தந்ததை சாப்பிடாதே பாப்பா.. நான் உனக்கு வேற வாங்கி‌ வந்து தரேன்.." என்றான் பாலாஜி ரோசமாக.

"எறும்பு‌ வந்துட கூடாதுன்னு நான் பாதுகாப்பு பண்ணிட்டு இருக்கேன். பன்னாடை குடிசை முழுக்க மிட்டாயை இறைச்சிட்டு போயிட்டான்." கவலைப்பட்டான் வெற்றி.

சக்தி தனது அறைக்குள் பசியோடு இருக்கும் சிங்கம் போல நடந்துக் கொண்டிருந்தான். அவளின் சிறு மாற்றமே இவனுக்கு தாங்க முடியாத‌ வேறு ஒரு தண்டனையை போல இருந்தது. அவள் மீது வெற்றியும் பாலாஜியும் வைத்துள்ள அதே பாசத்தை வைத்துள்ளான் இவனும். இன்று வந்து பிரித்து சொன்னதும் மனதுக்குள் வெறுத்து விட்டான்‌.

இரவு வந்ததும் பாலாஜி அங்கிருந்து கிளம்பினான். கீர்த்தனா வெற்றியிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினாள்.

வெற்றி தனது அறையிலிருந்த கட்டிலை தூக்கி வந்து குடிசையின் அருகில் போட்டுக் கொண்டான்.

"காம்பவுண்ட் அவ்வளவு உயரத்துல இருக்கு. வாட்ச்மேன் இருக்காரு.. நாங்க இத்தனை பேர் இருக்கோம். ஆனா நீ அவளுக்கு பந்தோபஸ்து பண்ணிட்டு உட்கார்ந்திருக்க.." என்று திட்டினார் தாத்தா.

"உங்க தங்கச்சியா இருந்திருந்தா தெரிந்திருக்கும். வெளியே வாசல்ல பாம்பு வந்தா தெரியுமா.? திருடன் வந்தா தெரியுமா.? எத்தனை நாளானாலும் நான் இங்கே துணையாதான் இருப்பேன்.." என்றவன் தங்கை தரையில் தலை சாய்ந்து கிடப்பதை கண்டு மனம் வாடினான்.

"பாப்பாவுக்கு ஏன் கட்டில் தரல.?" என்றுக் கேட்டான் கோபமாக.

"டேய் அவ இப்ப யூஸ் பண்ற எல்லாத்தையும் நெருப்புல போட்டுடுவாங்கடா.. எதுக்கு ஒரு கட்டிலை வேஸ்ட் பண்ணணும்?" என்றாள் அர்ச்சனா.

"யாருமே இந்த வீட்டுல கனி மேல அக்கறையா இல்ல.. நீங்க யாராவது கீழே படுத்து தூங்குவிங்களா.?" என திட்டிய வெற்றியிடம் யாருமே பதில் மொழி பேசவில்லை.

கீர்த்தனா கொட்டாவி விட்டபடியே படுக்கையறையின் கதவை திறந்தாள். படுக்கை முழுக்க சிவப்பு ரோஜா இதழ் நிறைந்து இருந்தது. நடுவில்‌ வெள்ளை ரோஜா இதய வடிவில் இருந்தது. பாலாஜியை தேடினாள். அவனை காணவில்லை.

"நான் வேணா நாலு நாளைக்கு அந்த வீட்டுல இருந்துட்டு வரட்டா.?" பயத்தோடு கேட்டவளின் இடையை வளைத்தது அவனது கரம்.

"கதவு பக்கத்துல நின்னுட்டு இருந்தியா பாலா.?" எனக் கேட்டவள் அவன் நெஞ்சின் மீது தன் தலையை சாய்த்தாள்.

"உன்னை நான் அந்த வீடு போக விட மாட்டேன்.." என்றவன் அவளின் காதோரத்தில் முத்தமிட்டான்.

அம்ருதா தனது உடை அலமாரியை திறந்தாள். மாட்டி வைக்கப்பட்டிருந்த‌ சுடிதார் ஒன்று பிடிமானத்திலிருந்து நழுவி அவளின் காலடியில் வந்து விழுந்தது.

சுடிதாரை கையில் எடுத்தாள். வெற்றி வாங்கி‌ தந்தது அது.

"உனக்கு பிடிச்சிருந்தா எடுத்துக்க அம்மு.." என்று மூன்று மாதங்களுக்கு முன்னால் ஒரு நாள் வாங்கி தந்திருந்தான். அவளிடம் இருந்த உடைகளில் பாதி அவன் எடுத்து தந்ததுதான்.

சுடிதாரை இருந்த இடத்தில் வைத்தாள். அவனை பற்றி நினைக்காமல் இருக்க முயன்றாள்.

ஆனால் எதை யோசித்தாலும் அவன்தான் முன்னால் வந்து நின்றான்.

தனது அறையை விட்டு வெளியே வந்தாள். அப்பா நியூஸை பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

"அப்பா.. எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க.." என்றாள்.

அப்பா நிமிர்ந்து பார்த்தார்.

"எனக்கு மாப்பிள்ளை பாருங்க.. முடிஞ்ச அளவுக்கு சீக்கிரமா மேரேஜ் நடத்தி வைங்க.." என்றாள்.

"வெற்றி மச்சிக்கு நீ சான்ஸே தர மாட்டியா.?" தன் அறையின் கதவின் மீது சாய்ந்து நின்றபடி கேட்டான் ஆரவ்.

"அவன் உனக்கு மச்சி கிடையாது.." விரலை நீட்டி எச்சரித்தவள் "அவனை மறக்கதான் கல்யாணமே கேட்கிறேன்.. யாராவது குடிக்காரன் பொறுக்கியா இருந்தாலும் சரி. எனக்கு சம்மதம்.." என்றாள்.

அப்பா எரிச்சலாக அவளை பார்த்தாள்.

"தரகர்கிட்ட சொல்லியிருக்கேன்.. சீக்கிரம் தகவல் வரும்.." என்றார்.

சரியென தலையசைத்து விட்டு மீண்டும் தனது அறைக்குள்ளே தஞ்சம் அடைந்தாள்.

"அவனை மறக்கணும்.. அதுக்காக எது வேணாலும் செய்வேன் நான்.." என்று புலம்பினாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN