கணவன் 23

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வெற்றி வங்கி மேனேஜரின் முன்னால் வந்து நின்றான்.‌ தன்னிடமிருந்த கடிதத்தை நீட்டினான். ஆச்சரியத்தோடு அவனை பார்த்தார் அவர்.

"டிரெயினிங் போக எனக்கு சம்மதம் சார்.." என்றான்.

"இத்தனை‌ நாளா வேண்டாம்ன்னுதானே சொன்ன.?" சந்தேகமாக கேட்டார் அவர்.

'என் அம்முவை பிரிஞ்சி போகணுமேன்னு கவலைப்பட்டு போகாம இருந்தேன் சார்.. இப்பவும் அவளோட நிம்மதிக்காகதான் போறேன். நான் போன பிறகாவது அவ நிம்மதியா இருக்கட்டும்.' என மனதுக்குள் சொல்லியவன் "இந்த வேலை எனக்கு எந்த அளவுக்கு முக்கியம், இந்த வேலையை நான் எந்த அளவுக்கு நேசிக்கிறேன்னு இப்பதான் புரிஞ்சிக்கிட்டேன் சார்.. அதனாலதான் டிரெயினிங் போக முடிவு பண்ணியிருக்கேன்.." என்றான்.

"குட் டிசிஸன்.. நான் லெட்டரை பாஸ் பண்றேன்.. இரண்டு மூனு வாரத்துல நீ டிரெயினிங் கிளம்பலாம்.. வாழ்த்துகள்.." என்றார்.

"தேங்க்ஸ் சார்.." என்று விட்டு வெளியே நடந்தவன் தனது தளம் நோக்கி‌ நடந்தான்.

கடன் பிரிவிற்கு அசிஸ்டென்ட் மேனேஜராக இருந்தவனை மேனேஜராக மாற்றுவதற்கு ஆறு மாத டிரெயினிங் வர சொல்லி பல மாதங்கள் முன்பே கடிதம் அனுப்பி இருந்தார்கள் வங்கியின் முக்கிய நிர்வாகிகள்.‌ இப்போதுதான் கடிதத்திற்கு வேலை தந்தான் இவன். பணி உயர்வை காட்டிலும் காதல் முக்கியம் என்று இருந்தவன் இப்போதும் அந்த காதலின் மீதுதான் சாக்கு ஓட்டியிருந்தான்.

தனது தளத்திற்கு வந்து சேர்ந்தவன் தனது கேபினுக்கு செல்லாமல் முத்துராமின் அறைக்கு சென்றான். வாடிக்கையாளரிடம் சிரித்த முகமாக உரையாடிக் கொண்டிருந்தவனின் முன்னால் வந்து பெஞ்சை தட்டினான்.‌

"என்ன வெற்றி.." நிமிர்ந்துப் பார்த்துக் கேட்டான் அவன்.

"நைட்டுக்கு‌ வரியா.?" எனக் கேட்டான் நண்பனை சோக பார்வை பார்த்து.

"ச்சீ.. ச்சீ..‌ நான் அந்த மாதிரி பையன் இல்ல.. நீ வேற யாரையாவது பாரு.." என்றவனை கண்டு பற்களை கடித்தவன் "டேய் மண்ணாங்கட்டி.. உன்னை கொஞ்ச கூப்பிடல.. சரக்கடிக்க கூப்பிட்டேன்.." என்றான் எரிச்சலாக.

சட்டென்று எழுந்து நின்றான் முத்துராம். நண்பனை காதல் கண்களோடு பார்த்தவன் "இதுக்கெல்லாம் பர்மிஷன் கேட்கறியா ராஸ்கல்.? வாடான்னா வர போறேன்.." என்றான். நண்பனை அணைத்துக் கொள்ள முயன்றான். அவனை தள்ளி‌ நிறுத்தினான் வெற்றி.

"த்தூ.. ஈவினிங் மறக்காம வந்து சேரு.." என்றுவிட்டு தனது கேபினுக்கு வந்தான்.

கண்களை மூடியபடி சற்று நேரம் அமர்ந்து இருந்தவன் தன் முன்னே இருந்த கணினியை உயிர்ப்பித்தான். தன் அருகே அடுக்கப்பட்ட காகிதங்களை உயிரோட்டம் இல்லாமல் வெறித்தான்.

நேரம் அதுவாய் சென்றது. வெற்றியின் இதயம் கொஞ்சம் கொஞ்சமாக பஞ்சு பொதியில் நீர் நிரம்பியது போல பாரமாகிக் கொண்டு இருந்தது. இடையில் ஏழெட்டு முறை கண்ணீர் தானாய் வழிந்தது. அவ்வப்போது துடைத்துக் கொண்டான். வாடிக்கையாளர்களிடம் பேசும் முன் தொண்டையை செருமிக் கொள்ள வேண்டியதாக இருந்தது. இல்லையேல் தன் குரலில் இருக்கும் கரகரப்பு அவர்களுக்கு தெரிந்து விடுமோ என்று பயந்தான்.

மதிய உணவுக்கான நேரம் நெருங்கியதும் எழுந்து நின்றான். அம்ருதாவின் அறை நோக்கி கிளம்பினான். அவளின் அறையிலிருந்த வாடிக்கையாளர் வெளியே வந்தார். இவன் உள்ளே நடந்தான்.

மேஜையின் மீதிருந்த பொருட்களை சரிபடுத்திக் கொண்டிருந்தவள் இவனை கண்டதும் விழிகளை சுழற்றினாள். அறையின் கண்ணாடி கதவோடு சேர்ந்து இருந்த மரக்கதவை இழுத்து சாத்தி உள் தாழிட்டான்.

அம்ருதா சந்தேகத்தோடு அவனின் முகம் பார்த்தாள்.

"என்ன செய்ற நீ.?" எனக் கேட்டாள்

"உன்கிட்ட கொஞ்சம் பேசணும் அம்மு.." அவனின் அம்மு என்ற அழைப்பை கேட்டு எரிச்சலடைந்தாள்.

"சாரி சார் எனக்கு வொர்க் இருக்கு.." என்றவள் அவனை துரத்தும் வழி தேடினாள்.

அறையின் கேமராவை பார்த்தான். அருகே இருந்த நாற்காலியை இழுத்து போட்டு கேமராவின் ஒயரை பிடுங்கினான். முன்பெல்லாம் காதலுக்காய் செய்த அதே திருட்டு வேலைதான். ஆனால் இப்போதுதான் காதல் இல்லாமல் போய் விட்டது.

"என்னதான் உன் பிரச்சனை.? எதுக்கு இப்ப கேமராவை ஆஃப் பண்ணி இருக்க.? மரியாதையா வெளியே போ.. இல்லன்னா நான் மொத்த பேரையும் கூப்பிடுவேன்.." என்று கத்தியவளின் முன்னால் வந்து நின்றான்.

பற்களை கடித்து பெருமூச்சை இழுத்து விட்டுக் கொண்டான். மேஜையின் ஓரத்தில் உணவு பாத்திரத்தின் அருகே இருந்த தண்ணீர் பாட்டிலை கையில் எடுத்தான்.

"என் தண்ணீர்.." கத்தியவளின் வார்த்தைகள் செவி சேரவில்லை.

முழு தண்ணீரையும் குடித்து விட்டு பாட்டிலை தூக்கி எறிந்தான். சுவரில் நங்கென்று மோதி விழுந்தது.

"வெற்றி.." அவளை பேச விடாமல் கை காட்டி தடுத்தான்.

"என்னை பேச விடு அம்மு.. லாஸ்டா உன்கிட்ட பேசிட்டு போயிடுறேன்.." என்றவன் அவளை அவளுடையை நாற்காலியில் தள்ளினான். நாற்காலியில் சாய்ந்து விழுந்தவள் சட்டென்று எழ முயன்றாள். அவளை தோள் பற்றி எழ விடாமல் தடுத்தான்.

இந்த பக்கமாக இருந்த ஒரு நாற்காலியை எடுத்து அவள் முன்னே போட்டு அமர்ந்தான். அம்ருதா கண்களில் பயம் தெரிந்தது. முகத்தை தேய்த்துக் கொண்டான் வெற்றி.

"ஐயம் சாரி அம்மு.." என்றவனை புரியாமல் பார்த்தாள்.

"உன்னை ஒரு செகண்ட் கூட கஷ்டப்படுத்தணும்ன்னு நினைக்கல நான்.. எனக்கு எக்கச்சக்கமா கோபம் வரும். அது எனக்கே தெரியும். ஆனா முழுசா கன்ட்ரோல் பண்ணிட்டுதான் உன்னை லவ் பண்ணிட்டு இருந்தேன். உன்னை காரணமா வச்சி எனக்கு எந்த கோபமும் வந்துட கூடாதுன்னு நிறைய முயற்சி பண்ணேன்.. எப்படி ஏன் பிரிஞ்சோம்ன்னு சுத்தமா புரியல அம்மு.." என்றான் வருத்தமாக.

"இந்த கான்வர்ஷேசனை விட்டுட்டு போய் உன் வேலையை பாரு வெற்றி.. முடிஞ்சதை பேசுவதை போல முட்டாள்தனம் வேற இல்ல. எனக்கு அலுத்து போச்சி.."

அவளின் கன்னத்தில் அறைய சொன்னது மனம். அந்த கையை அப்படியே கீழே வைத்திருக்க வெகுவாக சிரமப்பட்டான்.

"குடிக்காரன், பொறுக்கியை கூட கல்யாணம் பண்ணிக்க சம்மதம்ன்னு சொல்லியிருக்க.."

"உனக்கு எப்படி தெரியும்.?" அதிர்ச்சியாக கேட்டாள்.

"உன் தம்பியும் நானும் வாட்சப்ல பேசிப்போம்.. அவன்தான் நேத்து நைட் இதை சொன்னான்.." ஆரவ் தேன்மொழிக்காகதான் இவனோடு பழக ஆரம்பித்தான். பழகிய பிறகு அவனுக்கு இவனை பிடித்து விட்டது.

"என் வீட்டுல இருப்பவங்களை உன் கைக்குள்ள போட்டுக்க பார்க்கறியா.?" சந்தேகமாக கேட்டவளிடம் மறுப்பாக தலையசைத்தான். "நம்மோட பிரச்சனை என்னன்னு தெரிஞ்சிக்க வந்திருக்கேன் நான். அப்படி என்னதான் கொடுமை பண்ணேன்.?" எனக் கேட்டான்

"கொடுமைன்னா அடிச்சி உதைச்சாதானா.?" என்றவள் சுவர் பக்கம் முகத்தை திருப்பினாள்.

அவளின் தாடையை பற்றி தன் புறம் திருப்பினான்.

"நான் உன்னை விட்டு போக முடிவு பண்ணிட்டேன். இனி உன் முகத்துல விழிக்க மாட்டேன்.." என்றவனை நம்பிக்கையில்லாமல் பார்த்தாள்.

"நீ என்னை நம்பினாலும் நம்பலன்னாலும் என் உண்மை அழிஞ்சிடாது. நான் உன்னை நேசிக்கிறேன். என்னால நீ ஒரு குடிக்காரனையோ பொறுக்கியையோ கட்டிக்க வேணாம். இவ்வளவு நாளுமே மனசுக்குள்ள காதல் அழியாம இருந்தது. இப்ப அந்த காதலை முழுசா அழிச்சிக்க முடிவு பண்ணிட்டேன். என் காதல் மேல சத்தியம் இது. உன் மேலயிருக்கும் என் காதலை திருப்பிக்கிட்டேன். இனி நீ எப்படி என்ன செஞ்சாலும் எனக்கு அது பிரச்சனை கிடையாது. தயவுசெஞ்சி நல்லவனா ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்க.." என்றவன் அவளை நெருங்கினான்.

விழிகளை அனிச்சையாக மூடியவளை வலியோடு பார்த்தான். அவளின் இதழ்களை கண்டு பெருமூச்சு‌ விட்டவன் அவளின் கழுத்திலே இருந்த சிறு சங்கிலியை கழட்டினான்.

அவன் விலகியது உணர்ந்து குழப்பமாக விழிகளை திறந்தாள்.

"இது எனக்கு பொண்டாட்டியா வர போறவளுக்காக நான் வாங்கியது அம்ருதா. இதை உன்கிட்ட தர முடியாது என்னால சாரி.." என்றவன் சங்கிலியை சட்டை பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.

"அபிசியலா நான் உன்னை பிரேக்கப் பண்ணிட்டேன் அம்ருதா. மூனு வாரங்களுக்கு பிறகு உன்னை எப்பவுமே பார்க்க கூடாதுன்னு நினைக்கிறேன். நீ ஹேப்பி லைஃப் வாழ என் வாழ்த்துகள்.." என்றவன் இருக்கையை விட்டு எழுந்தான்.

உதட்டை கடித்தபடி திரும்பி பார்த்தான்.‌ அம்ருதா தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்.

"நீ ஏன் என்னை வேண்டாம்ன்னு சொன்னன்னு நான் தெரிஞ்சிக்கலாமா.? கடைசி வரை ப்ளாக்காவும் ப்ளாங்காவும் இருக்கு எனக்கு.. நான் எப்பவும் போலதான் இருந்தேன்.‌ நீதான் என் பொசசிவ்னெஸ் எவ்வளவு அழுத்தமானதுன்னு தெரிஞ்சும் உன்னை மாப்பிள்ளை பார்க்க ஆட்களை வர சொல்லியிருந்த.." என்றான் வருத்தமாக.

"காரணம் சொல்லவே மாட்டியா.?" அவள் வெகுநேரம் அமைதியாக இருப்பதை கண்டு கேட்டான்.

"ஏனா எனக்கு பயமா இருந்தது வெற்றி.. அழகான பசங்க யார் முன்னாடி வந்தாலும் நான் சைட் அடிப்பேன். சைட்டுக்கும் லவ்வுக்கும் வித்தியாசம் தெரியாது உனக்கு. ஆண் நண்பர்களோடு கலகலப்பா இருப்பேன் நான். உனக்கு‌ அது எதுவும் புரியாது.‌ உன் கோபம் கண்டு பயம். நான் தப்பு செஞ்சா நீ அடிப்ப.. நான் தப்பு செய்ய சான்ஸ் இருக்கு வெற்றி.." என்றவளை உணர்ச்சிகளற்றவனாக வெறித்தான்.

"நான் ப்ரீடமை விரும்பற பொண்ணு.. உன்னோட அடக்குமுறை எனக்கு செட் ஆகாது. உன் பொசசிவ்னெஸ், உன் கோபம் எதுவும் ஆகாது.."

எச்சில் விழுங்கினான். இதயத்தின் மீது கோணி தைக்கும் ஊசியை வைத்து குத்துவதை போல வலித்தது.

"நீ எப்படி திரிஞ்சாலும் உன்னை கண்டுக்காம விடுறவன்தான் வேணும்ன்னா என்னை ஏன்டி காதலிச்ச.?"

நெற்றியை பிடித்தபடி நிமிர்ந்தவள் "ஏனா எனக்கு உன்னை பிடிச்சிருந்தது. பிடிச்சவனை காதலிச்சி பார்த்தாதானே அவனோடு வாழ முடியுமான்னு கண்டுபிடிக்க முடியும். உன்னோடு இருப்பது பிடிச்சிருந்தது. உன் கேரிங், உன் லவ், உன் அபெக்சன் எல்லாமே பிடிச்சிருந்தது. அதுக்காக மேரேஜ் பண்ணியிருக்கலாம்தான்.. ஆனா நீ பாலாவை அப்படி அடிச்சிட்ட.. எந்த தப்பும் செய்யாத அவனுக்கே அவ்வளவு அடி. என் மேலயே நம்பிக்கை இல்ல எனக்கு. அப்படின்னா எனக்கு எத்தனை அடி விழும்.? உன்கிட்டயிருந்து ஷேப்பா நகருவதுதான் எனக்கு முக்கியமா பட்டது. குழந்தையை கலைச்சதுக்கு சாரி. ஆனா என் முடிவை என்னாலேயே மாத்திக்க முடியல. உனக்கு ஏத்த ஒருத்தி கிடைப்பா.. என்னை விட்டுட்டதுக்கு தேங்க்ஸ்.."

சப்பென்று அவளின் கன்னத்தில் ஒரு அறையை விட்டான். அவள் திரும்பும் முன்னால் மீண்டும் மறு கன்னத்தில் அறைந்தான்.

"நீ உன் இஷ்டப்படி காதலிச்சி கழட்டி விட நான்தான் கிடைச்சேனா.? உன் சோதனை முயற்சிக்கு நான் என்ன நாய்குட்டியா சிக்கினேனா.? லவ்ன்னு இந்த செகண்ட் வரை நம்பினேன்டி.. செகண்டுல சிதைச்சிட்ட.. இரண்டு வருசமா காதலிச்சி ஏமாத்தணுமா.? உனக்கு என்னை பார்த்து பாவமா கூட இல்லையா.?" எனக் கேட்டவன் தன் தலையை பிடித்துக் கொண்டான்.

"அம்மு அம்முன்னு உன் காலை சுத்தி வந்தேன்.. ச்சை.." என்று நெற்றியில் அடித்துக் கொண்டவன் "அந்த குழந்தையாவது நிஜமா எனக்குதான் உருவாச்சா.? இல்ல வேற எவனாவது காரணமா.?" என்று காரமாக கேட்டான்.

முறைத்தாள் அம்ருதா.

"நான் இதுவரை உன்னை மட்டும்தான் காதலிச்சேன்.." என்றவளை கண்டு கால் ஷுவை கழட்ட போனான்.

"செருப்பு பிஞ்சிடும் பார்த்துக்க.. லவ்வுன்னு சொல்லாத.. உன் கூட மட்டும்தான் கட்டில் வரை வந்தேன்னு கூட சொல்லு.. காதலை அசிங்கப்படுத்தாத.." என்றவன் ஆத்திரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினான்.

"செத்தாலும் உன் முகத்துல விழிக்க கூடாதுன்னு நினைக்கிறேன்.." என்று கையெடுத்து கும்பிட்டுவிட்டு வெளியே நடந்தான்.

உதட்டை நெளித்தபடி அவனை பார்த்தவள் டிபன் பாக்ஸை கையில் எடுத்தாள். ஆனால் அதற்குள் நேரம் முடிந்து விட்டிருந்தது.

"இவனால இன்னைக்கு பட்டினி.." என்று எரிந்து விழுந்தபடி தன் முன் இருந்த பைல்களை எடுத்து பிரிக்க ஆரம்பித்தாள்.

இன்னைக்கு இப்படி சொல்லும் தான்தான் வருங்காலத்தில் அவனை துரத்தி துரத்தி காதலிக்க போகிறோம் என்பதை அறியாமல் போய் விட்டாள் அவள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN