காதல் கணவன் 25

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காதை பிடித்தபடி நின்றிருந்தவளை ஆத்திரத்தோடு பார்த்தவன் "உன்னை கொல்லணும் போல இருக்கு.." என்று கைகள் இரண்டையும் கழுத்தை நெரிப்பதை போல கொண்டு போனான்.

"இந்த வயசுல லவ்வு, கிஸ்ஸு முக்கியமா.? பிச்சிடுவேன் உன்னை.. மரியாதையா போய் வேலையை பாரு. இப்படி கிறுக்குதனமா சுத்திட்டு திரியாதே.." என்றான்.

நிமிர்ந்தவள் கலங்கும் விழிகளை கொண்டு அவனை பார்த்தாள். என் காதல் புரியவில்லையா என்பது போல இருந்தது அந்த பார்வை. அந்த விழிகளை பார்க்க முடியவில்லை அவனால். வேறு திசைக்கு முகத்தை திருப்பினான்.

அமைதியாக நடந்தாள். அவள் நின்ற இடத்தில் கிடந்தது கம்மல் தொங்கட்டான். கையில் எடுத்தான்.

"மெண்டல்.." என்று திட்டி தீர்த்தான். பதறிக் கொண்டிருந்தது நெஞ்சம். இவளிடமிருந்து இப்படியொரு காதலை எதிர்பார்க்கவில்லை அவன். அவனை பொருத்தவரை அவள் குட்டிப்பாப்பா.

"காலையிலேயே மூட் அப்செட்.." நெற்றியை தேய்த்துக் கொண்டவன் காரை துடைப்பதை விட்டுவிட்டு வீட்டுக்குள் போனான்.

"அத்தை.." இவனது அழைப்பில் திரும்பினாள் வளர்மதி.

"கனி அவளோட தோட்டை தொலைச்சிட்டாளாம். கொஞ்சம் கூட பொறுப்பு இல்ல அவளுக்கு. தங்கம் விக்கிற விலையில இவளுக்கு எதுக்கு இவ்வளவு அசால்ட்.?" என்றவன் வெற்றி புன்னகையை மனதுக்குள் மறைத்தபடி தனது அறைக்கு கிளம்பினான்.

"அடி வாங்கி சாவு.." என்றபடி தொங்கட்டானை மேஜை டிராவில் வைத்து பூட்டினான்.

வளர்மதி மகளை தேடி வந்தாள். மகளின் ஒரு காதில் தொங்கட்டான் இல்லை.

"எப்படி தோடு உடைஞ்சது..‌ மீதி எங்கே?" மகளிடம் விசாரித்தாள்.

காதை தொட்டுப் பார்த்த கனிமொழி "தெரியலம்மா.. எங்கேயோ விழுந்துடுச்சி போல.." என்றாள்.

மகளின் தலையில் நான்கைந்து கொட்டுகளை வைத்தாள் வளர்மதி. அவள் நடந்து போய் வந்த இடங்களை சோதித்தாள். எங்கேயும் மீதி தோடு கிடைக்கவில்லை.

"அந்த தொங்கட்டான் முக்கால் பவுனுக்கு மேல வரும்.." என்று புலம்பினாள். மொத்த வீட்டாரும் தேடி பார்த்தார்கள். ஆனால் தொங்கட்டான் இருக்கும் இடம் தெரியவில்லை.‌

கூட்டத்தோடு கூட்டமாக கலந்து தேடிய சக்தி "பாப்பாவுக்கு திமிர் அதிகம் அத்தை.. அவ வேணும்ன்னு தொலைச்சிருப்பா.." என்றான்.

கனிமொழி நிமிரவேயில்லை. அவன் பேசுவதை காதில் வாங்கியும் வாங்காததுமாக இருந்தாள்.

"தோடுதானே.. போனா போகுது.." என்றான் வெற்றி.

"இன்னைக்கு தோட்டை தொலைச்சவ நாளைக்கு வேறு எதையும் கூட தொலைப்பா.. அத்தை நீங்க அவளை நல்லா கண்டிச்சி வைங்க.." என்றுவிட்டு பணிக்கு கிளம்பினான் சக்தி.

வாய்ப்பு கிடைத்திருந்தால் வளர்மதி திட்டியிருப்பாள். ஆனால் வெற்றியும் பாலாஜியும் அவளை பேசியே சமாதானம் செய்து விட்டானர். வளர்மதி தன் மகளுக்கு வேறு தோட்டை போட்டு விட்டாள்.

கனிமொழி அதிகம் பேசவில்லை. குடிசைக்குள்ளேயே முடங்கி போனாள். கொண்டு வந்த இனிப்புகளை கூட அவள் உண்ணவில்லை.

"தோடு போனா என்ன.? விடு.. பரவால்ல.." என்று சமாதானம் சொன்னாள் கீர்த்தனா. பதில் பேசவில்லை அவள்.

வெற்றிக்கு மனம் கனத்து போனது. அவளின் மற்றொரு தோட்டை பார்த்து விட்டு போனவன் வேலை முடிந்து வருகையில் அதே போல ஒரு ஜோடி தோடு வாங்கி வந்தான்.

தனது கட்டிலில் அமர்ந்தவன் கனிமொழியை வெளியே வர சொல்லி சைகை காட்டினான். வந்தவளிடம் தோட்டை தந்தான்.

மௌனமாய் வாங்கிக் கொண்டாள்.

"அம்மா திட்டியதுக்கெல்லாம் முகம் வாடுவாங்களா.? நான் உனக்கு புதுசு வாங்கி‌ தந்துட்டேன் இல்ல.? பழையபடி இரு.." என்றான்.

"தேங்க்ஸ் வெற்றி.." என்றவள் பெரியதாக முகம் மலராமல் மீண்டும் குடிசைக்குள் போய் விட்டாள்.

அரை மணி நேரம் கழித்து கனிமொழியிடம் வந்த கீர்த்தனா தன் கையிலிருந்த காதணிகளை தந்தாள்.

"பாலா வாங்கிட்டு வந்திருக்கான் உனக்காக.." என்றான். தங்கை கேட்டால் உயிரையே தருபவன். இந்த தோடெல்லாம் அவனுக்கு சாதாரணம் என்று அறிவாள். அண்ணன்களின் பாசம் கிடைத்தும் மனம் ஏனோ உற்சாகம் கொள்ளவில்லை.

வெற்றி அம்ருதாவை திரும்பி பார்க்கவில்லை. அவள் இருக்கும் திசையில் தலை வைத்தும் படுக்கவில்லை. அவள் நேர்கொண்டு வந்தால் கூட அவளை தாண்டி பார்வை பார்த்தான்.

மதிய உணவுக்கு பாலாஜியோடு சேர்ந்து அமர்ந்தாள் அம்ருதா.

"ரொம்ப ஹேப்பியா இருக்க போல.." சந்தேகமாக கேட்டாள் அவள்.

"ம்ம்.. கீர்த்தனாவை நினைச்சா ஹேப்பிதானே.? அதுவும் இல்லாம எங்க பாப்பா கனி பெரிய பொண்ணாகிட்டா.. நாளைக்கு அவளுக்கு மஞ்சள் நீராட்டு விழா.. நீயும் வந்துடு.." என்றவன் அப்போதுதான் நினைவு வந்தவனாக உணவு பையில் இருந்த அழைப்பிதழில் ஒன்றை எடுத்து அவளிடம் நீட்டினான்.

விசித்திரமாக பார்த்தபடியே வாங்கிக் கொண்டாள்.

"நிஜமா விஷேசம் பண்ண போறிங்களா.? ஊரே கேலி பண்ண போகுது. அவ ஸ்கூல்ல கூட கிண்டல் பண்ண போறாங்க.. உங்க குடும்ப பெருமை பேச இந்த விழா நடத்துறிங்க.. சொந்தம் வந்துட்டு போயிடும். ஆனா அந்த பொண்ணு அவமானமா பீல் பண்ணுவா.."

அவளை அறைய தோன்றியது அவனுக்கு.

"வாயை மூடுறியா கொஞ்சம்.? உனக்கு என்ன வெங்காயம் தெரியும்.? அவளோட உள்ளாடை சைஸ் கொஞ்சமும் மாறலன்னு அவங்க ஸ்கூல்ல அவ கூட படிக்கற பிரெண்ட்ஸே எத்தனை பேரு கிண்டல் பண்ணியிருக்காங்க தெரியுமா.? எங்க பாப்பாவை பார்க்கும்போது அதை செய் இதை செய்ன்னு அட்வைஸ் பண்ணவங்க எத்தனை பேர் தெரியுமா.? வீட்டுக்கு வந்தா அமைதியா தின்னுட்டு போகாம வயசுக்கு வராத பொண்ணு என்னவோ கொலை குத்தம் பண்ணவளை போல சாடை பேசிட்டு போனவங்க எத்தனை பேர் தெரியுமா.? தனக்குதான் ஏதோ குறை இருக்கோன்னு நினைச்சி எங்க பாப்பா எத்தனை நாள் பயந்திருப்பா தெரியுமா.? அவளை குற்ற உணர்வுல சிதைச்சி வச்ச சமூகம் நாளைக்கு என்ன கேலி பேசினா எங்களுக்கு என்ன.? நாங்க தம்பட்டம்தான் போடுவோம்.. எங்க வீட்டுல மூனு பொட்ட பிள்ளைகள் இருந்தும் கூட எங்க குடும்ப பெருமை பேச இவளுக்கு மட்டும் கண்டிப்பா பங்ஷன் நடத்துவோம்.." என்றவன் அதற்கு மேல் சாப்பிட பிடிக்காமல் எழுந்து கொண்டான்.

அவளை முறைத்தபடியே நகர்ந்தான்.

அன்றைக்கு மாலையிலிருந்தே சொந்தங்கள் வீட்டிற்கு வர ஆரம்பித்து விட்டனர். பந்தலும் தோரணமும் தயாராகி விட்டிருந்தன. பணி முடித்து வந்த வெற்றியும் பாலாஜியும் போட்டிப் போட்டுக் கொண்டு வேலையை செய்தனர்‌.

கனிமொழிதான் இன்னமும் சரியாகாமல் அமர்ந்திருந்தாள். சக்தி அவளைக் கண்டும் காணாமல் இருந்தான்.

இரவு வந்தது. விருந்தாளியாய் வந்த அனைவரையும் அமர வைத்து உணவு பரிமாறினார்கள்.

"புள்ளை நிஜமாவே வயசுக்கு வந்துச்சா.? இல்ல ஊர்ல பதில் சொல்ல முடியலன்னு பொய்யா விஷேசம் நடத்துறிங்களா.?" கேலியாக கேட்டாள் விருந்துண்டுக் கொண்டிருந்த ஒரு பாட்டி.

குடும்பத்தில் இருந்த அனைவருக்குமே முகம் கறுத்து விட்டது.

வெற்றியும் பாலாஜியும் பற்களை அரைத்தார்கள்.

சக்தி நல்லதாக கேட்க வேண்டும் என்று வாய் திறந்த வேளையில் "தேனு.. இந்த கிழவியை அந்த பக்கமா கூட்டிப் போ.." என்றாள் வெற்றியின் பாட்டி தாயம்மா.

தேன்மொழி புரியாமல் பார்த்தாள்.

"ஏன்.?" தயக்கமாக கேட்டாள் கேள்வி கேட்ட கிழவி.

"அட அந்த பக்கமா போ கெழவி.. என் சின்ன பேத்தியை வர சொல்லி பாவடையை கழட்டி காட்ட சொல்றேன்.. பார்த்து சந்தேகம் தீர்த்துப்ப.." என்ற தாயம்மா இலையில் இருந்த அப்பளத்தை நொறுக்கினாள்.

கேள்வி கேட்ட பாட்டிக்கு முகம் செத்து விட்டது. குடும்பத்தாருக்கோ பாட்டியின் பதில் கேட்டு ஒரு பக்கம் சங்கடமாகவும் மறுபக்கம் சமாதானமாகவும் இருந்தது.

"இந்த புள்ளை இன்னுமா வயசுக்கு வரல.?" மொத்த குடும்பமும் கடந்த மூன்று வருடங்களாக கடந்து வந்த கேள்வி அது. அதுவும் அவள் பன்னிரெண்டாம் வகுப்பு போக ஆரம்பித்த பிறகு கேலி கிண்டலாக கேட்கப்பட்டது இதே கேள்வி. கேட்டுவிட்டு போவோருக்கு ஒரு நொடி. வீராப்பாய் பதில் சொல்லி வந்தாலும் மனதுக்குள் சுமந்த பாரம் இவர்களுக்கு சொந்தமானது.

உணவை முடித்து கொண்டு வழக்கம்போல தங்கையின் அருகே வந்தான் வெற்றி. அவளின் வாடிய முகம் பார்த்தபடியே கட்டிலில் சாய்ந்தான்.

"என்னாச்சி பாப்பா.? யாராவது ஏதாவது சொன்னாங்களா.?"

இல்லையென தலையசைத்தவள் கால் முட்டியை கட்டிக் கொண்டு அதன் மீதே தலை சாய்த்தாள். திண்ணைக்கு கீழே போட்டிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்த சக்தி கனிமொழியை வெறித்துப் பார்த்தான். அவளின் முக வாட்டத்தை காணும்போதெல்லாம் சப்பென்று ஒன்று தர வேண்டும் போல இருந்தது.

"வயசுக்கு வந்த புள்ளை பக்கத்துல ஆம்பள பையன் இவனுக்கு என்ன வேலை.?" எனக் கேட்டாள் தாயம்மாவின் சின்ன அக்கா.

"நாங்க என்னவோ பண்றோம்.. உங்களுக்கு என்ன போகுது.?" என எரிந்து விழுந்த வெற்றி கையை தலைக்கு தந்தபடி மல்லாந்து படுக்கையில் சாய்ந்தான்.

"லேட்டா வயசுக்கு வந்த புள்ளை இது.. உடம்புலதான் ஏதோ கோளாறு.. சீக்கிரம் கல்யாணத்தை முடிச்சி வச்சிடுங்க.. இல்லன்னா புள்ளை பெத்துக்கறதுல ஏதாவது கோளாறு வந்துடும்.." தாயம்மாவின் அண்ணியார் கிழவி ஒருத்தி வெற்றிலையை மென்றபடியே சொன்னாள்.

வெற்றி பற்களை கடித்தபடி தலையை தூக்கினான்.

ஆனால் அவன் பேச தொடங்கும் முன்பே "பொம்பள புள்ளைன்னா வயசுக்கு வருவதும், புள்ளை பெத்துக்கறதும்தான் ஒரே வேலையா.. அவ புள்ளை பெத்துக்கலன்னா இப்ப என்ன கெட்டு போச்சி.? நீங்க புள்ளை பெத்ததால மட்டும் ஆயிரம் வருசம் சேர்ந்து வாழும் ஆயுளா கிடைச்சிருச்சி‌.?" என்று பொரிந்தான் சக்தி.

கிழவி வாயை கோணினாள்.

"பொம்பள புள்ளன்னா வேற எதுக்கு பிறக்கணும்.? பொம்பளன்னாவே புள்ளை பெத்துக்கறதுக்கு மட்டும்தான்.. அதுதான் இயற்கை நியதி.."

"வெங்காய நியதி.." என்றபடி வெளியே வந்தாள் தாயம்மா.

அண்ணியின் கையில் இருந்த வெற்றிலையில் ஒன்றை பிடுங்கி காம்பு கிள்ளி எறிந்து விட்டு இலையை வாயில் போட்டு மென்றாள்.

"ஆட்டு மாட்டுக்கும் மனுசனுக்கும் நடுவுல ஒரு வித்தியாசம் இருக்கு. ஆடு மாடுதான் குட்டி போட தகுதியில்லன்னா கசாப்பு கடைக்கு போகும். ஆனா மனுசன் அப்படி கிடையாது. ஆயிரத்தெட்டு வேலை இருக்கு. குறையே இருந்தாலும் கூட அதை கவனிக்க நேரம் இல்ல. நீயும்தான் ஒன்பதை பெத்த.. ஆனா இன்னைக்கு இரண்டுதான் இருக்கு. மீதி ஏழும் என்ன சாமி கணக்கா.? எழுபது மாசம் சுமந்தும் வீண்தான். அதுக்கு நீ அந்த ஏழையும் பெத்துக்காமலே இருந்திருக்கலாம்.. மனுசனுக்கு குறை இருக்கலாம். அது தப்பு கிடையாது. ஏனா நாமதான் மனுசங்களாச்சே. யார்கிட்ட குறை இல்லாம இருக்கு.? என் பேத்தி குழந்தை பெத்துக்காமதான் போகட்டுமே.. வாழ்க்கையில குழந்தை பெத்துக்க விருப்பம் இல்லாம, எவளாவது ஒருத்தியை கல்யாணம் பண்ணி உலகம் முழுக்க டூர் போகணும்ன்னு ஆசைப்படுற ஒருத்தனுக்கு இவளை கட்டி வச்சிட்டு போறேன்.. உலகம் செவ்வாயை நோக்கி போயிட்டு இருக்கு.." என்றாள் கையை விரித்து.

சக்தி பாட்டியை பார்த்து புன்னகைத்தான். கனிமொழியின் புறம் பார்த்தான். அவள் இங்கே நடந்த உரையாடலுக்கும் தனக்கும் நடுவில் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல அமர்ந்திருந்தாள். எரிச்சலாக இருந்தது அவனுக்கு.

உறங்கலாமா இல்லை இந்த புது வரவு பாட்டிகளின் கேள்விகளுக்கு பதில் தரலாமா என யோசித்துக் கொண்டிருந்த வெற்றி போன் அதிரவும் எடுத்துப் பார்த்தான்.

"மாடிக்கு வா.." என்று அனுப்பியிருந்தாள் கீர்த்தனா.

போனை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு நடந்தான். மாடிக்கு வந்தவன் தன் அம்மாவின் அறை முன்னால் கையை பிசைந்தபடி நின்றுக் கொண்டிருந்த கீர்த்தனாவை குழப்பமாக பார்த்தான்.

"என்னாச்சி கீர்த்தனா.? இன்னும் நீங்க வீட்டுக்கு போகலையா.?" எனக் கேட்டான் சந்தேகமாக.

"சாப்பிட்ட உடனே கிளம்பிடலாம்ன்னுதான் சொன்னான்.. ஆனா திடீர்ன்னு பார்த்தா ஆளை காணோம்.. தேடி பார்த்தா இந்த ரூம்ல இருக்கான்.. அழுதுட்டு இருக்கான். நான் கூப்பிட்டா நிமிர கூட மாட்டேங்கிறான்.. பயமா இருக்கு வெற்றி.." என்றவளுக்கு கை கால்களோடு சேர்த்து குரலும் நடுங்கியது.

"நான் பார்க்கறேன்.. நீ இரு.." என்றவன் எச்சில் விழுங்கியபடி கதவை திறந்தான். கரங்கள் இரண்டும் தானாய் நடுங்கியது.

கட்டிலின் குத்துக்கால் ஒன்றை கட்டியபடி முட்டிக்காலிட்டு அமர்ந்திருந்தவன் சிறு ஒலியாய் அழுதுக் கொண்டிருந்தான்.

வெற்றி முகத்தை தேய்த்தான்.

"பாலா.." தம்பியின் தோளைப் பற்றினான்.

"வெற்றி நான் அம்மாவை கொன்னுட்டேன்டா.." என்று தலையில் அடித்தபடி கதறியவனின் முன்னால் அவசரமாக மண்டியிட்ட வெற்றி அவனின் வாயைப் பொத்தினான்.

வீட்டில் உறவினர்கள் இருந்தார்கள். இந்த நேரத்தில் இவனின் அழுகையை வெளிக்காட்ட விரும்பவில்லை வெற்றி.

சகோதரனின் கையைப் பற்றியபடி கதறிக் கொண்டிருந்தான்.

"அம்மா உடம்பெல்லாம் ரத்தம் வெற்றி.. அவங்க தலை கூட உடைஞ்சி போச்சி.. அம்மாவுக்கு ரொம்ப வலிச்சிருக்கும் வெற்றி.." என்று அழுதவனை சில நொடிகள் பார்த்தவன் இடம் வலமாக தலையசைத்தான்.

எழுந்து நின்றவன் அவனின் நெஞ்சில் ஓங்கி உதைத்தான். மடங்கி விழுந்தான் பாலாஜி.

"செத்து தொலை.." என்றவன் அவனின் வயிற்றில் இரண்டு உதைகளை தந்தான். வாசலில் நிற்கும் கீர்த்தனா கண் முன் வந்தாள்.

பற்களை கடித்தபடி தம்பியின் சட்டை காலரை பிடித்து தூக்கினான். அவனை எழுப்பி நிற்க வைத்தான். வாங்கிய அடியில் அழுது கதறும் சக்தியை இழந்து விட்டான் பாலாஜி.

"கீர்த்தனா.." இவனின் அழைப்பில் ஓடி வந்தாள்.

"இவனை முகத்தைத் துடைச்சி கூட்டிப் போ.." என்றான் அம்மாவின் கட்டிலின் மீது அமர்ந்தபடி.

கீர்த்தனா கலங்கும் விழிகளோடு தன் முந்தானை எடுத்து பாலாஜியின் முகத்தை துடைத்து விட்டாள்.

"வீட்டுக்கு போலாமா.?" அவனின் கன்னங்களில் கைப்பதித்து சோகமாக கேட்டாள்.

அவளின் கண்கள் பார்த்தவன் சரியென தலையசைத்தான். நடக்க சிரமமாக இருந்தது. கீர்த்தனா கை தந்து அழைத்துப் போனாள்.

அறையின் வாசலில் நின்றிருந்தார் கதிரேசன்‌. மகளை இளக்காரமாக பார்த்தார்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN