காதல் கணவன் 26

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தந்தையிடம் பதில் பேசவில்லை கீர்த்தனா. கணவனை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள். அவனது பைக்கை விடுத்து‌ தனது ஸ்கூட்டியை எடுத்தாள்.

"எங்கே கிளம்பிட்டிங்க.?" உறவுக்கார பெண்மணி ஒருத்தர் கேட்டார்.

"சும்மா வெளியே ஊர் சுத்த.." என்ற கீர்த்தனா பாலாஜியை அமர சொல்லி கண் சைகை காட்டினாள். அவன் யாரையும் கவனிக்கும் சூழ்நிலையில் இல்லை. அமைதியாக ஏறி அமர்ந்தான்.

வீட்டின் காம்பவுண்ட் சுவரை தாண்டிய பிறகு ஸ்கூட்டியை நிறுத்தினாள் கீர்த்தனா.

"கையை கொடு.."

அவன் கைகளை நீட்டியதும் தனது இடுப்பை சுற்றி பிணைத்தாள். அவனின் முன்னந்தலை முடியை பிடித்திழுத்து அவனின் முகத்தை தன் தோளில் பதிய வைத்தாள்.

"உன்னோடு நான் இருக்கேன்.." என்றவள் ஸ்கூட்டியின் ஆக்ஸிலேட்டரை திருகினாள்.

"என்னை எவ்வளவு பிடிக்கும் கீர்த்து.?" வானம் பார்த்தபடி கேட்டான்.

"உனக்கு உன் அம்மாவை பிடிச்சதை விட அதிகமா எனக்கு உன்னை பிடிக்கும்.." என்றவளின் இடுப்போடு இருந்த அவனின் கரம் சற்று அழுந்தியது. அவளின் தோளில் நன்றாக தலையை சாய்த்துக் கொண்டான்.

வீட்டிற்கு வந்ததும் அவனின் சட்டையை கழட்டினாள். நெஞ்சிலும் வயிற்றிலும் கன்றிப் போய் இருந்தது. தானாய் விழுந்தது கண்ணீர்.

மூக்கை உறிஞ்சியவள் மருந்து எடுத்து‌ வர நகர்ந்தாள். நகர்ந்தவளின் கைப்பிடித்து இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டவன் அவளின் முதுகை வருடி தந்தான்.

"சாரி.. என்னாலதான் உனக்கு இவ்வளவு கஷ்டம்.."

மறுப்பாக தலையசைத்தவள் நிமிர்ந்து அவனின் கன்னங்களை பற்றினாள். "எல்லாம் ஒருநாள் சரியாகிடும் பாலா.. எல்லாம் சரியாகும் வரைக்கும் நான் உன்னோடு இருப்பேன். சரியான பிறகும் நான் இருப்பேன்.. உனக்காக இருப்பேன்." என்றாள்.

அவளின் கலங்கும் விழிகளை துடைத்து விட்டான். அவளை மீண்டும் அணைத்துக் கொண்டான்.

மறுநாள் அதிகாலையிலேயே புறப்பட்டு போய் விட்டார்கள் கீர்த்தனாவும் பாலாஜியும்.

வீட்டிற்கு வரும் உறவினர்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டிருந்தது. வெற்றியும் பாலாஜியும் சாப்பாடு பந்தியை விட்டு நகர முடியவில்லை.

கனிமொழிக்கான சடங்குகள் நடந்தது. நாற்காலியில் அமர வைக்கப்பட்டவளுக்கு சந்தனம் பூச சக்தியை அழைத்தாள் அர்ச்சனா.

அம்மா சொல்லி தந்தது போலவே செய்து முடித்தான். குனிந்த தலை நிமிராமல் இருந்தவளின் கன்னங்களில் சந்தனத்தை பூசியவன் "லைஃப் லாங் நல்லா இரு பாப்பா.." என்றான். கனிமொழியின் கண்களை விட்டு துள்ளியோட இருந்தது கண்ணீர். சிரமப்பட்டுப் பிடித்து வைத்தாள்.

சடங்குகள் முடிந்ததும் சீர் வரிசைகள் பெறப்பட்டது. தான் வாங்கி வந்திருந்த அனைத்தையும் சக்தியின் மூலமே கனிமொழியின் கை சேர்ந்தாள் அர்ச்சனா.

"எதுக்கும்மா இத்தனை.?" அவனுக்கே சலிப்பாக இருந்தது.

"நம்ம பாப்பா.. அமைதியா இருடா.." என்றவள் கடைசியாக நெக்லஸ் ஒன்றை பெட்டியிலிருந்து எடுத்து மகனின் கையில் தந்தாள்.

"பாப்பாவுக்கு போட்டு விட்டுடு.." என்றாள்.

நெக்லஸையும் கனிமொழியையும் மாறி மாறி பார்த்தவன் "எதுக்குமா போட்டு விடணும்.? கையில் தந்துடலாமே.. என்ன இருந்தாலும் முறை பொண்ணு.. நாளைக்கு அவளுக்கு ஒருத்தனை மேரேஜ் பண்ணும்போது யாராவது ஏதாவது சொல்லுவாங்க.." என்றான் தயக்கமாக.

உதட்டை கடித்தபடி நின்றாள் கனிமொழி. அழுகை வரும்போல இருந்தது.

"ச்சீ.. குழந்தை பாப்பா.. நீ நெக்லஸ் போட்டா என்ன தப்பு.? அமைதியா போட்டு விடுடா.." என்று கடிந்துக் கொண்டாள் அர்ச்சனா.

'நீங்க நினைப்பிங்க குழந்தைன்னு. ஆனா இவ நினைக்கணுமே..' என்று மனதுக்குள் முனகியபடியே அவளை நெருங்கி நெக்லஸை அணிவிக்க முயன்றான். சிலை போலவே நின்றிருந்தாள் கனிமொழி.

"கனி கேமராவை பாரு.." கேமராமேனின் அருகே நின்றிருந்த கீர்த்தனா சொல்லவும் நிமிர்ந்தாள் கனிமொழி. சட்டென்று இறங்கி‌விட்டது கண்ணீர். சக்தியின் கரங்கள் இரண்டும் அனிச்சையாக நின்று விட்டன.

"என்னாச்சி கனி.?" பயத்தோடு கேட்டார் அவளின் அப்பா சங்கரமூர்த்தி.

"தலைவலிப்பா.." என்றவள் புறங்கையால் கன்னத்தைத் துடைத்துக் கொண்டாள்.

"கூட்டம் வந்துட்டு போயிட்டே இருக்கு.. பாட்டு சத்தம் வேற.." என்று தலைவலிக்கு காரணம் தேடினாள் அர்ச்சனா. தான் தேர்ந்தெடுத்த நெக்லஸ் டிசைன் பிடிக்கவில்லையோ என்று கலங்கி விட்டிருந்தாள் அவள்.

கேமராவை வெறித்தாள் கனிமொழி.

"தம்பி இங்கே பாருங்க.." கேமராமேன் அழைத்தார்.

திரும்பினான். இருவரையும் புகைப்படமாய் எடுத்துக் கொண்டார் அவர்.

நெக்லஸின் கொக்கியை இணைத்தான் சக்தி. "பங்ஷன்ல வந்து சீன் போட்டுட்டு இருக்க.? ஆளையும் மூஞ்சியையும் பாரு.. செல்லம் கொடுத்தது தப்பா போயிடுச்சி.." என்று கிசுகிசுப்பாக திட்டியவன் அவளை விட்டு நகர்ந்து நின்றான்.

"தோட்டை தொலைச்சது போல இதையும் தொலைச்சிடாதே.." என்றுவிட்டு நகர்ந்தான்.

கனிமொழி மீண்டும் தலைகுனிந்துக் கொண்டாள். உறவினர்கள் வந்து போனார்கள். நிறைய சீர் தட்டுகள் வந்தன. மொய் எழுதி எழுதி தேன்மொழிக்கு கைகள் வலித்தது. அவளுக்கு கொஞ்சம் பொறாமையாக கூட இருந்தது.

கனிமொழியின் பள்ளி தோழிகள் வந்தார்கள். நிறைய பேசினார்கள். கனிமொழி எதிலும் கலந்துக் கொள்ளவில்லை.

"பேர் ராமன் மேகலா, ஊர் தெற்கு கொடிக்கால், சீர்வரிசை ஏழு சீர் தட்டு, சுடிதார் ஒன்னு, கால்கொலுசு ஒரு செட்.." ஆரவின் குரலில் நிமிர்ந்த தேன்மொழி அவனின் கையில் இருந்ததை கண்டுவிட்டு "ஆனா ஏன்.?" எனக் கேட்டாள் குழப்பமாக.

"நீங்க ஒன்னும் எங்களுக்கு சொந்தக்காரர் கூட இல்லையே.."

"சொந்தம் பண்ணிக்கணும்ன்னு இப்பவே துண்டு போடுறேன்.. நீ சும்மா கேள்வி கேட்காம நான் சொன்னதை எழுது.." என்றான். இந்த சீர் பொருளை வாங்குவதற்கு தாய் தந்தையரிடம் எவ்வளவு கெஞ்சி பணம் வாங்கினான் என்று அவனுக்குதானே தெரியும்!? தேன்மொழியை காதலிக்கும் விசயத்தையும் கூட சொல்லிவிட்டான். அப்பாவும் அம்மாவும் அவனை ஒரு நாயை பார்ப்பதை போலவும் ஒரு பேயை பார்ப்பது போலவும் பார்த்து இந்த பணத்தை தந்திருந்தார்கள். "சீர் எழுதுறது முக்கியமில்ல.. எங்க பேர்ல எழுதிட்டு வரணும். சரியா.?" என்று கடைசி நேரத்திலும் கட்டளையிட்டு அனுப்பியிருந்தார்கள்.

தேன்மொழி தன் வீட்டார் யாராவது வந்து கேட்டால் என்ன பதில் சொல்வது என்ற பயத்தோடு அவன் சொன்னதை எழுதினாள். அவன் கையிலிருந்த ஐந்தாறு பைகளையும் பக்கத்திலிருந்த உறவுக்கார பெண்ணொருத்தி வாங்கி சீர் பொருட்களோடு வைத்தாள்.

"தட்டையே காணம்.." முனகினாள் தேன்மொழி.

"தட்டுக்கான சீர் இருக்கு.. நீ வேணா தட்டுல நிறைச்சி கூட பாரு.. கடைக்காரர் சொன்ன கணக்கை விட நான் எல்லாத்திலும் சேர்த்து வாங்கிட்டு வந்தேன்.." என்று‌ வாதாடினான் ஆரவ்.

"நீயெல்லாம் நல்லா வருவ.. சரி போய் சாப்பிடு.." என்று அனுப்பினாள்.

அவளின் விழிகளை பார்த்து கண்ணடித்தவன் உணவு பந்தல் இருக்கும் திசை நோக்கி நடந்தான். தேன்மொழி பயத்தோடு சுற்றும் முற்றும் பார்த்தாள். இவளை யாரும் பார்த்து கொண்டு இருக்கவில்லை. தலையை சிலுப்பிக் கொண்டவள் அடுத்து வந்த மொய்யை எழுத ஆரம்பித்தாள்.

பந்தியிலிருந்தோருக்கு குழம்பு பரிமாறிக் கொண்டிருந்த வெற்றி தன்னருகே பொரியல் பரிமாறிக் கொண்டிருந்த கீர்த்தனாவிடம் "அவன் நல்லாருக்கானா.?" எனக் கேட்டான். பல வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக கேட்கிறான். இதுவும் தம்பியின் மீதுள்ள அக்கறையால் அல்ல. தோழியின் மீது கொண்ட அக்கறையால்தான்.

"நல்லாருக்கான். வயித்துல மட்டும் கொஞ்சமா பெயின்.." என்றவள் முகத்திலிருந்து வாட்டத்தை அவனிடம் காட்டாமல் இருக்க முயன்றாள்.

"சாரி கீர்த்தனா.. கோபம் வந்துடுச்சி.. சாரி.."

"ஐ கேன் அண்ட்ரஸ்டேன்ட்ப்பா. பீல் பண்ணாத." என்றவள் அடுத்த இலைக்கு நகர்ந்தாள். வெற்றிக்கு குற்ற உணர்வாக இருந்தது. ஒவ்வொரு முறையும் தன்னையும் மீறி கோபம் வருகிறது.

நிறைய புகைப்படங்கள் எடுத்தாயிற்று. உறவினர்கள் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். இரவு நெருங்கிக் கொண்டிருந்தது.

கனிமொழி தனது அறைக்கு கிளம்பினாள். அறையை மிஸ் செய்வது போல இருந்தது.

அவள் தன் அறைக்குள் நுழைய இருந்த நேரத்தில் "பாப்பா.." என்று அழைத்துக் கொண்டு வந்தான் சக்தி.

"சொல்லுங்க மாமா.." என்று தலைகுனிந்தவளை கவலையாக பார்த்தவன் அவளின் அறைக்குள் அவளை இழுத்துப் போனான். அவளை கட்டிலில் அமர வைத்தவன் நாற்காலி ஒன்றை இழுத்துப் போட்டு அமர்ந்தான்.

"உனக்கு என்ன ஆச்சி பாப்பா.?" என்று அவளின் கன்னம் பற்றினான். "என்னை பாரு.." அன்பாய் சொன்னான்.

நிமிர்ந்தவளின் கண்களில் துளியும் புன்னகை இல்லை.

"பாப்பா பீல் பண்ணாம இரு.. நீ நிஜமாவே குட்டி பாப்பாதான்.. உனக்கு என்னவோ ஆகியிருக்கு. எதுவா இருந்தாலும் சரியாகிடும். நீயும் சரியாகிடுவ.." என்றான்.

"நா.. நான் குட்டிப்பாப்பா இல்ல மாமா.."

கட்டை விரலால் அவளின் கன்னத்தை வருடியவன் "குட்டிப்பாப்பாதான்.. எனக்கு தெரியாதா.? லவ் உனக்கு இப்ப அனாவசியம். படி. சரியா.? எதையும் மனசுல போட்டு குழப்பாத.." என்றான்.

எழுந்தவனின் கைப்பிடித்து அமர வைத்தவள் "என்னை ஏன் மாமா பிடிக்கல.?" எனக் கேட்டாள் அழுகையோடு.

"ம்ப்ச்.. உனக்கு என்னதான் ஆச்சி பாப்பா.? எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்.. பாப்பாவா பிடிக்கும்.! மத்தபடி‌ எதுவும் இல்ல.." அவளுடைய தலையை வருடினான்.

கையை தட்டி‌ விட்டாள். "உயிர் போற வலியில் இருக்கேன் நான்.."

"ச்சீ.. குழந்தை பேசுற பேச்சா இது..?" கிண்டலாக கேட்டான்.

தலையை பிடித்துக் கொண்டவள் "நான் குழந்தை கிடையாது.. ரொம்ப வருசமா உங்களை பிடிக்கும். நிஜமா என்னை புரியலையா.? எப்படி சொன்னா என் காதல் உங்களுக்கு புரியும்.? கவிதை எழுதி தரணுமா.? பூ வாங்கி தந்து சொல்லணுமா.? வெறும் வாயில் சொன்னால் காதல் இல்லன்னு ஆகிடுமா.?" என்றுக் கேட்டாள் குழப்பமாக.

சக்திக்கு கோபம் வந்தது. ஆனால் கோபப்பட முடியவில்லை.

"என் மேல உனக்கு சாதாரண அன்புதான் இருக்கு. அதை நீ தப்பா புரிஞ்சிட்டு இருக்க.."

பற்களை கடித்தாள். அவனை அறைய சொன்னது கை. அவனின் சட்டையை பிடித்து மூக்கில் ஒரு குத்து விட சொன்னது மனசு.

"லவ் யூ மாமா.. காலம் முழுக்க உங்களுக்கு பொண்டாட்டியா இருக்க ஆசைப்படுறேன்.."

"சப்.."

அவன் விட்ட அறையில் கன்னத்தை பிடித்துக் கொண்டாள். கன்னம் பயங்கரமாக எரிந்தது. ஓங்கி அறைந்து விட்டான்.

"பிச்சிடுவேன்.. நான் எவ்வளவு அழகா உட்கார்ந்து உனக்கு புத்தி சொல்லிட்டு இருக்கேன்.? நீ என்னன்னா இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்க.. கல்யாணம்.. காதல்.. இன்னொரு முறை இந்த வார்த்தையெல்லாம் வாயில் இருந்து‌ வந்தா கட்டிங் பிளேட் எடுத்து வந்து ஒவ்வொரு பல்லா பிடுங்கி போட்டுடுவேன்.."

'போடா பன்னி.. நீ அறைஞ்சதுலயே நாலஞ்சி பல்லு ஆடிட்டு இருக்கும் போல.. இதுல தனியா பல்லை பிடுங்குறானாம்..' மனதுக்குள்ளே திட்டியவள் "நீங்க கொஞ்சம் யோசிச்சி பாருங்க மாமா.." என்றாள்.

முகத்தை சுளித்தபடி எழுந்தான்.

"உன் மூஞ்சில கூட இனி விழிக்க மாட்டேன்.." எரிந்து விழுந்துவிட்டு போனான்.

மறுநாள் பணிக்கு கிளம்பிக் கொண்டிருந்தவனை அழைத்து நிறுத்திய வளர்மதி "சின்ன பாப்பாவை ஸ்கூல்ல விட்டுட்டு போயிடு சக்தி.." என்றாள்.

"ஏன்.? அவளோட ஸ்கூல் பஸ் என்னாச்சி.? பஸ் வர டைம் கூட அவளுக்கு தெரியாதா.? அவ்வளவு நேரமும் என்ன பண்ணிட்டு இருந்தா.? ஸ்கூல் படிப்பு மேலயெல்லாம் கொஞ்சமாவது கவனம் இருந்தாதானே ஆகும்.." என்று கத்தினான்.

வளர்மதி அவனை விசித்திரமாக பார்த்தாள்.

"எதுக்குடா இப்படி கத்துற.? அவளும் சீக்கிரம் ரெடியாகதான் இருந்தா. ஆனா அதுக்குள்ள டிரெஸ் பத்தாம போச்சி.." என்றபடி மகனருகில் வந்தாள் அர்ச்சனா.

"டிரெஸ் பத்தலையா.?" என்றவன் வண்ண உடையோடு ஸ்கூல் பேக்கை மாட்டியபடி வந்து நின்ற கனிமொழியை வெறித்தான்.

"ஒருவாரத்துல ஒரு லாரி ஸ்னாக்ஸ் தின்னா இப்படிதான் இரண்டு சுத்து வளர்ந்து நிற்பா.." என்று முனகியவன் "அதுக்கு நான் ஏன் கூட்டிப் போகணும்.?" எனக் கேட்டான் அத்தையிடம்.

"போற வழியில் ரெடிமேட் டிரெஸ் ஒன்னு எடுத்து கொடுத்து மாத்த வச்சி கூட்டிட்டு போடா.. கலர் டிரெஸ் போட்டு போனா இருநூறு ரூபா பைன்.. கூட ஐநூறு போட்டா ஸ்கூல் டிரெஸ்ஸா வாங்கிடலாம்.." என்று பணத்தை இவனிடம் திணித்தாள்.

"லேட்டானதுக்கும், இவ ஒரு வாரம் ஸ்கூல் லீவ் போட்டதுக்கும் நீயே பிரின்சிபால்கிட்ட பேசி விட்டுட்டு வந்துடு‌. இல்லன்னா அதுக்கும் பைன் கட்டணும்.." என்ற வளர்மதி மகளை அனுப்பி வைத்தாள்.

வாசலை நோக்கி நடந்தவளை வெறித்தான் சக்தி. இவளால் வழியில் என்ன துன்பமோ என நினைத்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN