நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

அத்தியாயம் 3

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் 3

ஒய்யாரமாக நாற்காலியில் அமர்ந்திருந்த மகேஷ்வரனை முறைத்த படியே நெருங்கினாள் சிவசக்தி.

அவனை பார்க்கையில் பழைய நினைவுகள் சட்டென கண் முன் வந்து நின்றது.

செல்வாவோடு மகேஷ் வாக்குவாதம் செய்த பிறகு அவன் ஒரு வாரம் சக்தியின் கண்களில் தட்டுப்படவே இல்லை.

மகேஷை காணாத அந்த ஒரு வார காலத்தில் சக்திக்கு தன் வாழ்வே வெறுமையாக தோன்றியது. சக்தி பத்தொன்பது வயது பெண்ணென்றாலும் கூட அவளது அனுபவம் அவளை என்றோ மன முதிர்வு கொண்டவளாக மாற்றியிருந்தது.

சக்தியின் அம்மா அவளை நான்கு வயது குழந்தையிலேயே விட்டு விட்டு இறந்து போனாள். சக்தியின் அப்பா தன் மனைவியின் மீது உயிரையே வைத்திருந்தார். ஊர் உறவு ஆயிரம் முறை எடுத்துக் கூறியும் கூட மறுமணம் செய்துக் கொள்ளவில்லை. அவர் தன் மனைவியின் மீது வைத்த காதல் இன்று வரையிலும் கூட குறையவில்லை.

சக்தி விவரம் தெரிந்த நாளிலிருந்து தந்தையின் அரவணைப்பிலேயே வளர்ந்தாள். சக்தியின் ஒரே ஹீரோ அவளின் தந்தை மட்டுமே. அவர் இன்று வரையிலுமே அவளின் ஹீரோதான். அவர் செய்கிற ஒவ்வொரு வேலையையும் கலை கண்களோடுதான் பார்ப்பாள் சக்தி. அவர் சமையல் செய்கையில் அவர் தான் உலகின் நம்பர் ஒன் குக். அவர் அவளுக்காக கட்டில் செய்து தந்தால் அவரே உலகின் நம்பர் ஒன் தச்சர். அவர் அவளுக்கு அறிவுரை கூறினால் அவரே அவளின் மிக சிறந்த ஞானி.

அவள் பார்த்து வியக்கும் ஒரே மனிதனாக அவளின் அப்பா இருந்து வந்தார். இது வரை அப்பாவை தவிர வேறு எந்த ஆண் மகனையும் பார்த்து அவள் வியந்ததும் இல்லை. யாருடைய செய்கையும் அவளை ஈர்த்ததும் இல்லை.

ஆனால் மகேஷ் விசயத்தில் அவளின் மனதில் குழப்பம் தோன்றியிருந்தது. அவ்வப்போது அவனுக்கு தெரியாமல் அவனை ரசிப்பாள். அவனது சிரிப்பும் பேச்சும் அவளை என்னவோ செய்தது. இது ஏதோ இள வயது ஈர்ப்பு என்று தன் மனதை நம்ப வைக்க போராடிக் கொண்டிருந்தாள்.

அவளின் முயற்சிகளுக்கு தடை போடுவது போல இந்த ஒரு வாரமும் போய்க்கொண்டு இருந்தது. அவனை காணாததால் அவள் தன்னில் எதையோ இழந்ததை போல உணர்ந்தாள். அவளால் சந்தோஷம், துக்கம், விருப்பு, வெறுப்பு எதையும் உணர முடியவில்லை. அவளது இதயம் காலி மைதானமாக அவளுக்கு தோன்றியது.

‌அவளின் மூளை கூறுவதை மனம் ஏற்றுக் கொள்ள மறுத்தது. அவள் கண் மூடும் போதெல்லாம் அவனின் முகம் கண் முன் தோன்றியது. அவள் அவனை பற்றி நினைக்கையில் எங்கோ ஒரு தூரத்தில் அவனது குரல் கேட்பது போலவே இருந்தது.

அன்று திங்கட்கிழமை. வகுப்பறைக்குள் முதல் ஆளாக நுழைந்தவள் அவளின் இருக்கையில் அமர்ந்து ஜன்னல் வழியே தூரத்தில் தெரிந்த புறா கூட்டத்தை பார்க்க ஆரம்பித்தாள்.

ஒரு வாரமாக செல்வாவின் உயிரை எடுத்துக் கொண்டிருந்தான் மகேஷ். பல வருடமாக முறைத்துக் கொண்டும் அருகில் சென்றால் விலகியும் சென்று கொண்டிருந்த நண்பன் தன்னிடம் சில வார்த்தைகள் பேசி விடவும் மனதிற்குள் மத்தாப்பு வெடித்து போல சந்தோசமாக இருந்தது மகேஷிற்கு. அன்று மாலை செல்வா தன் வீட்டிற்குள் நுழைந்ததும் முதலில் கண்டது பல் இளித்துக் கொண்டிருந்த மகேஷைதான்.

பல வருடமாக வீட்டிற்கு வராதவன் திடீரென வரவும் மகிழ்ச்சியில் பூரித்து போன செல்வாவின் அம்மா அவனுக்காக விருந்து தயாரித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு உதவியாக காய்கறிகள் நறுக்கி கொண்டிருந்த மகேஷ் செல்வாவைக் கண்டதும் அசட்டு சிரிப்பு சிரித்தான்.

"இங்கே என்ன செய்ற நீ...?"

‌ மகேஷ் அப்பாவி போல அம்மாவை பார்த்தான்.

"வீட்டுக்கு வந்த புள்ளைக்கிட்ட இப்படியா பேசுவ..?" என்றபடி அம்மா கரண்டி ஒன்றை கையில் எடுத்தாள்.

"இப்படித்தாம்மா இவன் எப்போ பார்த்தாலும் என்கிட்ட எறிஞ்சு விழறான். நான் முட்டாள்தனமா ஏதோ தப்பு பண்ணிட்டேன். ஆனா நான் ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டுட்டேன். இவன் என்னை மன்னிக்கவும் மாட்டேங்கறான்‌. என் கூட பேசவும் மாட்டேங்கறான். இப்போ கூட பாருங்க வந்ததுல இருந்து என்னை முறைச்சிக்கிட்டே நிக்கிறான். இவனுக்கும் என்னை பிடிக்கல. நான் போறேன்ம்மா..." என்றவன் எழ முயற்சிக்க அவனை இழுத்து பிடித்து அமர வைத்த அம்மா "நீ எங்கேயும் போக கூடாது. என் சமையலை சாப்பிட்ட பிறகுதான் வீட்டுக்கு கிளம்பனும்." என்றாள்.

செல்வா தன் அம்மாவின் கோப பார்வைக்கு இன்று வரை பயந்துக் கொண்டுதான் இருந்தான். அது என்னவோ சிங்கம் புலி நேரில் கண்டால் கூட இப்படி பயப்படுவானா என்று தெரியவில்லை. ஆனால் அம்மாவின் கடைக் கண் பார்வைக்கு மிகவும் சக்தி இருப்பது போல் தோன்றியது.

அம்மாவை எதிர்த்து பேச இயலாமல் நண்பனை முறைத்து விட்டு குளிக்க கிளம்பினான்.

அவன் திரும்பி வருகையில் மகேஷ் மட்டும் திண்ணையில் அமர்ந்து இருந்தான். அம்மா உள்ளே சமையல் செய்துக் கொண்டிருந்தாள். அவனை பார்க்காமல் முகத்தை திருப்பியப்படி வீட்டினுள் செல்ல முயன்றான்.

அவனின் கையை பிடித்து நிறுத்தினான் மகேஷ். அடித்த வெயிலுக்கு நெருப்பாக உணர்ந்திருந்தவன் பச்சை தண்ணீர் குளியலில் கொஞ்சம் சாந்தமாகி இருந்தான். அந்த இடைவெளி நேரத்தில் அவனது மனமும் கூட சாந்தமாகி இருந்தது.

தன் கையை பிடித்து நிறுத்தியவனை திரும்பி பார்த்தவன் "என்ன வேணும் மகேஷ்..?" என்றான்.

"என்னோடு உட்கார்ந்து பேசு.."

பெருமூச்சோடு அவனருகே அமர்ந்தவன் "சொல்லு..." என்றான்.

"ஸாரிடா செல்வா" என்றவனின் குரல் கரகரத்தது.

அவனது குரலில் கரக்கரப்பைக் கேட்கவும் இவனுக்கும் தொண்டை அடைத்தது. வேறு புறம் திரும்பி தன் கண்களில் துளிர்த்த நீரை துடைத்தான்.
"பரவாயில்லை...விடு..."

"என்னோடு ‌பிரெண்டா இரு செல்வா பழையபடி...ப்ளீஸ்..."

"ஏன்..? நமக்குள்ள இருக்கற நட்பு அவ்வளவு முக்கியம் கிடையாது... ஒன்னா சேர்ந்து விளையாட நாம ஒன்னும் குழந்தைங்க கிடையாது."

"அப்படி சொல்லாத செல்வா... நீ என் உயிர் நண்பன்டா.. கில்லி விளையாடவோ கோலி குண்டு விளையாடவோ உன்னை கூப்பிடல... என் வாழ்க்கையில் நண்பனா இருக்க சொல்றேன்... உன் வாழ்க்கையில் என்னை நண்பனா ஏத்துக்க சொல்றேன்...நீ என் நண்பன்டா... உன்னையும் சாமிநாதனையும் தவிர வேறு யாரையும் நண்பர்களா நினைக்க முடியல... உங்களை தவிர வேறு யார்க்கிட்டயும் மனசு விட்டு பேச முடியல... உங்களை தவிர வேறு யார்க்கிட்டயும் ஸாரி கேட்க கூட முடியாதுடா..."

மகேஷை பற்றி செல்வாவிற்கு அவன் சொல்லாவிட்டால் கூட புரியும். ஏனெனில் இவன்தான் அவனின் நண்பனாயிற்றே.

மகேஷ் உண்மையில் கூச்ச சுபாவம் கொண்டவன். அவனால் சட்டென அனைவரோடும் நெருங்கி பழக முடியாது. அவன் அபூர்வமாக சிலரோடு நெருங்கி பழகினான் என்றால் அவர்களை அவனுக்கு மிகவும் பிடித்து விட்டது என்று அர்த்தம். அவனுக்கு பிடித்தவர்கள் உடனான உறவை பாதுகாக்க எதையும் செய்வான். இந்த விசயத்தில் அவன் ஒட்டுண்ணியை போல.

ஆனால் செல்வா தன் மனதில் உள்ளதை எப்படி அவனிடம் சொல்வான்?

மகேஷின் மரமண்டைக்கு தன் மனதில் கொதிக்கும் விசயத்தை சொல்ல செல்வாவிற்கும் ஆசைதான். ஆனால் எப்படி?

ஒரு முடிவிற்கு வந்தவனாக நண்பனை பார்த்தான் ‌செல்வா.

"என்னை உன் நண்பனா நினைக்கிறியா?"

"ஆமா செல்வா... உனக்காக உயிரையும் தருவேன்..."

‌செல்வாவிற்கு சிரிக்க வேண்டும் போல இருந்தது.

"உன் உயிரெல்லாம் வேண்டாம்... என்னை ஒரே ஒரு நாள் உன் வீட்டுல தங்க வை..."

மகேஷால் உடனே பேச முடிவில்லை. நண்பனை கலக்கமாக பார்த்தான்.

"செல்வா நீ இன்னும் பழைய ஞாபகத்தோடே இருக்க... நான் அன்னைக்கு வேணும்ன்னு அப்படி பேசலடா..."

"தெரியும்..." என அவன் கூற அதிர்ச்சியோடு அவனை பார்த்தான்.

அவர்களின் நட்பு முறிந்த நாள் மகேஷின் கண் முன்னே வந்தது.

மகேஷ் எத்தனையோ முறை செல்வாவின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளான். ஆனால் செல்வா ஒரே நாள் கூட மகேஷின் வீட்டிற்கு வந்தது இல்லை. மகேஷ் அவனை பல முறை தன் வீட்டிற்கு அழைத்துள்ளான். மகேஷ் கூப்பிடும் ஒவ்வொரு முறையும் ஏதேனும் காரணம் சொல்லி வர மறுப்பான். ஏனெனில் செல்வாவிற்கு தெரியும் மகேஷ் வீட்டிற்கு சென்றால் என்ன நடக்குமென்று. செல்வா எத்தனையோ முறை தீண்டாமை எனும் பிசாசை தன் வாழ்வில் சந்தித்துள்ளான்.

செல்வாவின் அப்பா ஒரு கட்டிட தொழிலாளி. அவர் தன் வேலையில் கில்லி. ஆனால் அவருக்கு கூட தங்கள் வீட்டு சொம்பில் தண்ணீர் தர மாட்டார்கள் அவரிடம் வேலை வாங்குபவர்கள். ஒவ்வொரு கல்லாக எடுத்து வைத்து அவர் கட்டும் வீட்டிலேயே கூட கிரக பிரவேச யாகம் நடத்திய பிறகு உள்ளே விட மாட்டார்கள். கேட்டால் தீட்டு என்பார்கள். அவர் கட்டிய வீட்டில் வசிக்கும் அவர்களை ஏன் தீட்டு பிடிக்கவில்லை என்பது செல்வாவிற்கு சந்தேகம்தான்.
இதை சொன்னால் மகேஷிற்கு புரியாது. பல நாளாக மகேஷின் வற்புறுத்தலுக்கு மசியாமல் இருந்தவன் அன்று மகேஷின் கெஞ்சலுக்காக மகேஷின் வீட்டிற்கு சென்றான்.

அன்று மகேஷின் அம்மா எங்கோ வெளியே சென்றிருந்தாள். மகேஷின் தாத்தா மட்டுமே வீட்டில் இருந்தார். அவர் ஒரு பழமைவாதி. அவரை பொறுத்தவரை ஜாதி என்பது அவரது ரத்தத்தில் இருக்கும் சிவப்பணு போன்றது. அதனால் அவரைக் கண்டதும் பயந்து வெளியிலேயே நின்றான் செல்வா.
"உள்ளே வா செல்வா.."

தாத்தா இவன் குரல் கேட்டு எட்டிப் பார்த்தார்.

"யார்டா அது..."

"என் நண்பன் தாத்தா..."

"நண்பனா... இவனை நான் இந்த ஊருல பார்த்ததே இல்லையே.."

"இவன் துளசி பட்டி தாத்தா..."

தாத்தாவின் முகம் நொடியில் மாறியது.

"உள்ளே வா மகேஷ்... உன்கிட்ட ஒன்னு சொல்லனும்..."

அப்பாவியாக தாத்தாவோடு தனி அறைக்கு சென்றான் மகேஷ். அவன் அறைக்குள் நுழைந்ததும் தாத்தா ஓங்கி அறைந்தார். மகேஷிற்கு கண்ணீர் படபடவென கொட்டியது. மகேஷ் வீட்டில் செல்ல பிள்ளை என்பதால் இது வரை யாருமே அவனை அடித்தது இல்லை.

தாத்தாவிற்கு மகேஷ் என்றால் கொள்ளை பிரியம் என நினைத்திருந்தவனுக்கு கன்னத்தில் விழுந்த அடியை விட நெஞ்சில் பட்ட அடியே அதிகமாக இருந்தது.

"எவன் கூட வேணா கூட்டு வைக்க நீ என்ன நாயாடா? தராதரம் பார்த்து பழகனும்ங்கற புத்தி கூடவா உனக்கு இல்ல? இன்னோரு தடவை அவன் கூட உன்னை பார்த்தேன்னா உன் இரண்டு காலுக்கும் சூடு வச்சிடுவேன் பார்த்துக்க..."

"அவன் என் பிரெண்டு தாத்தா..."

மீண்டும் விழுந்தது ஒரு அறை.

"இன்னொரு முறை அப்படி சொன்ன பல்லை உடைச்சிடுவேன்.."

மகேஷிற்கு பயமாக இருந்தது. ஆனால் தன் நண்பனோடு தன்னை சேர் கூடாது என சொல்லும் தாத்தாவின் நியாயம் அவனுக்கு புரியவில்லை.

"ஏன்? அவன் என் பிரெண்ட். அவன் கூட பேசுவேன், பழகுவேன், வீட்டுக்கும் கூட்டிட்டு வருவேன்..."

"அவன் வேற சாதி. அவன் கூட நீ பேசினா சாமி உன் கண்ணை குருடாக்கிடும். அவனையெல்லாம் நாம வீட்டுல சேர்க்க கூடாது. அவனை நாம தொடக்கூடாது..."

"நீ சொல்வதை கேட்டாதான் கண் குருடாகும். யாராவது தனக்கு பிடிச்சவங்ககிட்ட பேசாம இருப்பாங்களா?"

மகேஷின் பிடிவாதம் பற்றி அறிந்திருந்த தாத்தா அவனை வழிக்கு கொண்டு வரும் வழியைப் பற்றி யோசித்தார்.

"நீ அவன் கூட பேசினால் என்ன நடக்கும் தெரியுமா? ரவுடி பசங்கக்கிட்ட சொல்லி அவன் வீட்டை அடிச்சு உடைக்க சொல்வேன். அவனையும் அவனோட அப்பா அம்மாவையும் அடிச்சு கை கால் உடைக்க சொல்வேன்..."

மகேஷின் கண்களில் பயம் வெளிப்படையாக தெரிந்தது.

"நான் அப்பாக்கிட்ட சொல்வேன்..." அவன் கண்களில் கண்ணீர் குளம் கட்டியது.

"நான் உங்க அப்பனுக்கு அப்பன்... வீராசாமி யாருன்னு தெரியுமில்ல? அவன்கிட்ட காசை கொடுத்தா ஊரையே கொளுத்தவும் தயங்க மாட்டான். என்கிட்ட காசு இருக்கு... அவனை நான் கூப்பிட்டு பேசட்டா...?"

மகேஷ் தன் வாழ்வில் முதல் முறையாக இயலாமை என்றால் என்னவென உணர்ந்தான். தன் தாத்தாவே தனக்கு எதிரியாகவும் துரோகியாகவும் இருப்பதை மிக நன்றாக அறிந்து கொண்டான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே...

கதை பிடிச்சிருந்தா மறக்காம வோட் அன்ட் கமெண்ட் பண்ணுங்க..
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top