அத்தியாயம் 46

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தாரணி தீர்க்கமாக அவனைப் பார்த்தாள்.

"என்னை விட அவ சிறப்பு கிடையாதுன்னா அவளை வீட்டு விட்டு அனுப்பிடுங்க.." என்றாள்.

"எனக்கு வெட்டு விழுந்த போது அவதான் எனக்கு ஹெல்ப் பண்ணா. அவ இல்லனா இந்நேரம் நான் செத்திருப்பேன் தாரணி.." என்று மனைவியிடம் புரிய வைக்க முயன்றான் யஷ்வந்த்.

"ஹெல்ப் பண்ணா பணம் கொடுத்து அனுப்புங்க.. இல்லன்னா வேறு ஏதாவது உதவி செய்ங்க.. இங்கே கூட்டி வந்து தங்க வைக்கணும்ன்னு என்ன அவசியம்.?" அவனிடமிருந்து விலகி நின்றுக் கேட்டாள்.

யஷ்வந்துக்கு கோபம் வந்தது. ஆனால் இவளிடம் கோபப்படவும் தோன்றவில்லை.

"அவ என் பிரெண்ட் தாரணி. அவளை நீ அவமானப்படுத்தும் ஒவ்வொரு முறையும் நீ என்னை அவமானப்படுத்துறதா அர்த்தம்.. என் பிரெண்ட்ஷிப்பை அவமானப்படுத்தாத.. இத்தனை நாள் பழகியிருக்கேன் உன்னோடு. ஆனா உன் விருப்பம் இல்லாம உன் சுண்டுவிரலை கூட தொட்டது இல்ல நான்.. காதலிக்கிட்டயே தள்ளி நின்னு பேசியவன் பிரெண்ட் கூட எவ்வளவு கண்ணியமா இருப்பேன்னு நினைச்சி பாரு.." என்றான்.

தாரணி யோசித்தாள். அவளுக்கு இப்போதும் கூட இவன் மீது நம்பிக்கை வந்ததே தவிர குந்தவி மீது நம்பிக்கை வரவில்லை. விட்டு பிடிக்காவிட்டால் தனது திருமண வாழ்க்கைக்கு பிரச்சனை என்று புரிந்துக் கொண்டாள்.

மௌனமாய் இருந்தவளை காத்திருப்போடு பார்த்தான்.

"அவளுக்கு வீடு இல்லையா.?"

"இல்ல.. அனாதை அவ.." என்றவனை சந்தேகத்தோடு பார்த்தவள் "உங்களோடு பிரெண்டாகும் முன்னாடி எங்கே இருந்தா.?" என்றாள்.

"வாடகை வீட்டுல தனியா இருந்தா.. அவளோட வீடு ஒரு மாதிரி ஏரியாவுல இருந்தது. பொறுக்கி பசங்க அதிகம். தினமும் பயந்து பயந்துதான் வாழ்ந்தா.. நான்தான் நம்ம வீட்டுக்கு வர சொன்னேன். வரவே மாட்டேன்னு சொன்னா. அங்கே தர வீட்டு வாடகையை இங்கே கொடுன்னு சொல்லிதான் அவளை கூட்டி வந்தேன். நான் அவளை தப்பான கண்ணோட்டத்தோடு பார்த்திருந்தா உன்னை விலக்கி வச்சிட்டு அவளை மேரேஜ் பண்ணியிருப்பேன். அப்படியும் இல்லன்னா அவளுக்கு வேற எங்காவது பங்களா எடுத்து தந்து சின்ன வீடா வச்சிட்டு இருந்திருப்பேன்.. எல்லோரும் பேமிலியா இருக்கற வீட்டுல பிரெண்ட்ன்னு அறிமுகப்படுத்தி அவளை தங்க வச்சிருக்க மாட்டேன்.. அவ தங்கச்சி போல. நல்ல பிரெண்ட்.. எவ்வளவு மொக்கை போட்டாலும் தாங்கிக்கிறா.. அவளை போல ஒரு பிரெண்ட் எனக்கு எங்கே கிடைப்பாங்க.?" என்று தனது கதை அளக்கும் திறனை இரண்டாம் முறையாக காட்டினான்.

அவனை ஏற இறங்க பார்த்தவள் "ஏதோ நம்புறேன்.. ஆனா பார்த்து இருந்துக்கங்க.." என்றுவிட்டு வெளியே நடந்தாள்.

'ஏதோ நம்புறாளாம்.. தலையெழுத்துடா.." நெற்றியிலே அடித்துக் கொண்டவன் அவளை பின்தொடர்ந்தான்.

குந்தவி தனது அறையில் கவலையோடு அமர்ந்திருந்தாள். யஷ்வந்த் தாரணி இடையே தன்னால் பிரச்சனை வந்துவிடுமோ என்று பயந்துக் கொண்டிருந்தாள் அவள். மனதுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. தாய் மடி, தந்தை தோள், தங்கை அணைப்பை தேடியது மனம்.

யாரிடம் அழைத்துப் பேசுவாள்.? அப்பாவோ மருத்துவமனையில், அம்மாவோ கடவுள் காலடியில், தங்கையோ எதிரியின் பாசறையில். மனம் கனத்தது. சூர்யாவின் மீதான நம்பிக்கையும் கூட இப்போது குறைந்தது.

தன்னை ஏற்றுக் கொள்ளாத காந்திமதி, தாரணியை ஏற்றுக் கொள்ளாத மனோகரும் அவளின் கண் முன் வந்து நின்றனர். சூர்யாவுடனான உறவு என்னவென்று கூட அறியவில்லை அவள். ஆனாலும் கூட சூர்யாவின் வீட்டிலும் தன்னை ஏற்றுக் கொள்ளாமல் போக வாய்ப்பு உண்டு என்று புரிந்துக் கொண்டாள். கோபமாக வந்தது. அனைவரின் மீதும் கோபம் வந்தது. தன் மீதும் கோபம் வந்தது. தன் வீட்டு நிலமை மீதும் தனது இயலாமையின் மீதும் கோபம் வந்தது.

முடங்கி படுத்தாள். கொஞ்ச நேரத்திற்கு மூளையே வேலை செய்யவில்லை. புரண்டு புரண்டு படுத்தவள் கடுப்போடு எழுந்து அமர்ந்தாள். உடம்பு முழுக்க அவனின் விரல்களே பரவி கிடப்பது போலிருந்தது. உடம்பு முழுக்க அவனின் இதழ்களே பதிந்து நகர்ந்துக் கொண்டிருப்பது போலிருந்தது.

இயலாமையும் கோபமுமாக இருந்தவள் அனிச்சையாக போனை எடுத்தாள். சூர்யாவுக்கு அழைத்தாள்.

"ஹலோ செல்லா.. கொஞ்ச நேரம் கழிச்சி பண்றேன். மீட்டிங்க்ல இருக்கேன்.." வைத்து விட்டான்.

குந்தவிக்கு மனம் உடைந்தது போலிருந்தது. வருத்தமாக கைபேசியை பார்த்தாள்.

இரவு உணவு உண்ணுவதற்கு யவனா வந்து அழைத்துப் போனாள். போனை ஏக்கமாக பார்த்து விட்டு அங்கேயே வைத்துப் போனாள்.

தாரணி இவளின் முகம் பார்க்கவில்லை. அவளின் முகத்தில் புன்னகையும் இல்லை.

யோசனையோடு சாப்பிட்டாள் குந்தவி. இந்த வீட்டை விட்டு கிளம்பி விடலாமா என்று யோசித்தாள்.

யஷ்வந்த் தன் முன் அமர்ந்து உண்டுக் கொண்டிருந்த தந்தையின் முகத்தை வெறித்தான். கடுகடுவென்று இருந்தார் அவர்.

"ஐயா இன்னும் ஒரு சப்பாத்தி.." என்று அருகில் வந்தாள் வேலைக்காரி.

"போதும்.." என்று எழுந்தார்.

"இனி இவங்க இருக்கும்போது என்னை சாப்பிட கூப்பிடாதிங்க. தனியா கொண்டு வந்து கொடுங்க.." என்றவர் எரிச்சலோடு அங்கிருந்துக் கிளம்பினார்.

வேலைக்காரிக்கும் வீட்டிலிருந்த மற்ற அனைவருக்கும் முகம் வாடிப் போனது.

"அவருக்கு அவ்வளவு சீன் கிடையாதுக்கா.. அவரை இதுக்கு மேல அனாதை போல தனியா உட்கார வச்சி சாப்பாடு போடுங்க.. இப்ப எனக்கு ஆறு சப்பாத்தி வைங்க.." தட்டிலிருந்த சப்பாத்தியை எடுத்து வாயில் போட்டுக் கொண்டே சொன்னாள் தாரணி.

யஷ்வந்த் இடது கையால் நெற்றியில் அடித்துக் கொண்டான்.

"எதுக்கு அடிக்கடி நெத்தியில் அடிச்சிக்கிறிங்க.? என்னை பிடிக்கலையா.?" தாரணியின் குறுக்கு கேள்வியில் திரும்பிப் பார்த்தவன் "இனி அடிச்சிக்கல.. தயவுசெஞ்சி அவசியமில்லாத கேள்வி கேட்டு இம்சை பண்ணாத.." என்றான் சிறு குரலில்.

அவனின் பேண்டிலிருந்த போன் ஒலித்தது. இடது கையால் எடுத்தான். சூர்யா அழைத்திருந்தான்.

அழைப்பேற்று பேசியவன் அரை நிமிடங்களுக்கு பிறகு குந்தவியின் திசை பார்த்தான்.

"உன் போன் எங்கே.?" என்று விசாரித்தான்.

"ரூம்ல சார்.." என்றவளிடம் "உனக்குதான் போன் வந்திருக்கு.." என்று தனது போனை நீட்டினான்.

அவன் சொல்லாமலே அது சூர்யா என்று அவளுக்கு புரிந்தது. அதற்கு மேல் உண்ண முடியும் என்று தோன்றவில்லை.

உணவை தள்ளி வைத்தாள். அருகே இருந்த பேஷனில் கையை சுத்தம் செய்தாள். அவசரமாகவும் ஆர்வமாகவும் வந்து போனை வாங்கினாள்.

"ஹலோ.." தந்தியடிக்கும் குரலோடு அங்கிருந்து நகர்ந்தாள். இவர்களின் கண் படாத தூரத்திற்கு சென்றாள்.

"யார் அந்த போன்ல.?" தாரணி சந்தேகத்தோடு கேட்டாள்.

"அவளோட லவ்வர்.." என்றவனை அங்கிருந்த அனைவரும் சந்தேகமாக பார்த்தனர்.

"உனக்கு எப்படி அவளோட லவ்வரை தெரியும்.?" தர்ஷினி அதே சந்தேகத்தோடு கேட்டாள்.

யாரென்று சொன்னால் அது பிரச்சனையை இழுத்து விடும் என்று அறிவான். சூர்யாவின் வீட்டில் கூட குந்தவியை ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் குந்தவி சூர்யாவைதான் காதலிக்கிறாள் என்று அறிந்தால் பிறகு இங்கிருக்கும் அனைவரும் அவளை கட்டம் கட்ட தொடங்கி விடுவார்கள், பூங்கொடி அத்தையின் மனதை மாற்ற தொடங்குவார்கள் என்று அறிவான். அதனாலேயே மறைத்தான்.

"என் பிரெண்ட் அவன்.."

"அதுதான் யார்ன்னு கேட்டேன்.!" தர்ஷினி மீண்டும் கேட்டாள்.

"அது யாருன்னு உனக்கு தெரியாது.." என்றவன் உணவில் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.

"சாரி செல்லா..‌ மீட்டிங் ரொம்ப பிசி. அதனாலதான் என்னால பேச முடியல.. உனக்கு நிறைய முறை கூப்பிட்டேன். நீ எடுக்கல. அதனால கோபமா இருக்கியோன்னு நினைச்சேன்.." என்றான் சூர்யா வருத்தமாக.

ஹால் வராண்டா ஒன்றின் சுவரில் சாய்ந்து நின்றிருந்தாள் குந்தவி.

"போனை ரூம்ல வச்சிட்டு சாப்பிட வந்தேன். நீங்க கூப்பிடுவிங்கன்னு யோசிக்கல.."

பெருமூச்சி விட்டான் அவன்.

"இப்ப மட்டும் நீ நேர்ல இருந்தா அரை மணி நேரத்திற்கு அணைச்சபடி நின்னிருப்பேன்.." என்றான்.

குந்தவிக்கு உடம்பு மொத்தமும் நாணத்தால் சிவந்தது.

"ரொம்ப டென்ஷன் செல்லா.. மேனேஜ்மென்ட்ல அவ்வளவா ஒத்துழைப்பு கிடைக்க மாட்டேங்குது.. நானும் பலரை இன்டர்வியூ பண்ணி பார்த்தேன். ஆனா யாரும் என்னோட மைன்ட் செட்டுக்கு ஒத்து வர மாட்டேங்கிறாங்க.. அப்பா அட்வைஸ்தான் முக்கால்வாசி.. இல்லன்னா மொத்த கம்பெனியையும் இழுத்து மூடியிருப்பேன். பெரியப்பாவும் நானும் எவ்வளவு வேலை பார்த்தாலும் உதவல.." புலம்பிக் கொண்டிருந்தான்.

"எல்லாம் சரியாகிடும்.. உங்களை நம்புங்க.." என்றாள் நம்பிக்கையோடு.

"ம்ம்.." என்றவன் வழக்கமான உரையாடல்களை ஆரம்பித்தான்.

தன் கையில் போன் வந்து சேர்ந்தவுடன் குந்தவியை சந்தேகத்தோடு பார்த்தான் யஷ்வந்த்.

"போன் ஏன் இவ்வளவு சூடா இருக்கு.? எவ்வளவு நேரம்தான் மொக்கை போட்டிங்க.?" என்றான் கேலியாக.

"சாரி சார்.. அதை சொல்லும் நிலையில் நான் இல்லை.." இயல்பான புன்னகையோடு சொல்லிவிட்டு நகர்ந்தாள். சந்தேகத்தோடு திரும்பிப் பார்த்தவள் "போன்ல கால் ரெக்கார்டர் ஆன்ல இல்லதானே.?" எனக் கேட்டாள் சிறு பயத்தோடு.

பற்களை காட்டியபடியே இல்லையென தலையசைத்தவன் "என்னை நம்பலாம் நீ.." என்றான்.

குந்தவி நகர்ந்தவுடன் அவனின் தோளை தட்டினாள் தாரணி.

"நாலு மாசத்துல எத்தனை புது பிரெண்ட்.?" எனக் கேட்டாள் கையை ஆட்டி.

அவள் அறியாதவாறு போனின் அழைப்பு வரலாறை அழித்தான்.‌ இவள் கையில் போன் கிடைத்தால் பிறகு மொத்த வீட்டிலும் சூர்யா குந்தவி புராணம்தான் ஓடும் என்று அறிவான்.

"இரண்டே பேர்தான்.." என்றவன் அவளை அணைத்தபடி அறை நோக்கி நடந்தான்.

அறைக்குள் வந்த தாரணி கட்டிலை கண்டுவிட்டு கதவோரத்திலேயே பயந்து ஒண்டினாள்.

"என்ன.?"

"இது எந்த கேப்ல அலங்கரிச்சிங்க.?" கட்டிலின் பூந்தோரணங்களையும் பூக்களின் படுக்கையையும் கைக் காட்டி கேட்டாள்.

"சாப்பிட்ட கேப்ல இதை பண்ணியிருக்காங்க.." என்றவனை கலவரமாக பார்த்தவள் "எ.. எனக்கு பயமா இருக்கு.." என்றாள்.

அவளை ஏற இறங்க பார்த்தவன் "திறமையை பேசுறதுல மட்டும் காட்டினா போதாது.." என்று நக்கலாக சொல்லியபடி அணிந்திருந்த சட்டையை கழட்டினான்.

"எ.. எனக்கு வெளியே கொஞ்சம் வேலை இருக்கு.." கதவை திறக்க முயன்றவளின் தோளை தொட்டான்.

"ரொம்ப சீனை காட்டாதே.. நான் வேணா சோபாவுல தூங்குறேன்.. வீட்டுல உள்ள யாருக்கும் உள்ளே இருக்கும் இடைவெளி தெரிய வேணாம். அதை மட்டும் பொய் சொல்லி மேனேஜ் பண்ணிக்க.. என் அப்பா உன்னையும் என்னையும் பிரிக்க ஏதாவது கிறுக்குதனம் செய்வாரு.. நமக்குள்ள பிரிவு இருக்குன்னு தெரிஞ்சா அந்த திட்டத்தை இன்னும் அதிகமா செய்வாரு.. அதனால்தான்.." என்றவன் போர்வை ஒன்றை எடுத்தான்.

சோபாவை நோக்கி நடக்க இருந்தவனின் கையை பற்றினாள் தாரணி.

"இல்ல பரவால்ல.. நாம இரண்டு பேரும் இங்கேயே தூங்கலாம்.. எந்த பிரிவும் வேணாம்.." என்றாள். ஆனால் அவளின் பின்னந்தலையில் கூட வியர்த்து விட்டது.

போர்வையை தோளில் போட்டுக் கொண்டவன் அவளின் முகத்தை அள்ளினான்.

"எங்க அப்பாவுக்காகவோ, இந்த பேமிலிக்காவோ நாம நம்மோட முதலிரவை கொண்டாட கூடாது. உனக்கு தோணுற அன்னைக்கு கொண்டாடலாம்.. நான் எங்கேயே ஓடிட மாட்டேன். உன்னையும் ஓட வச்சிட மாட்டேன்.." என்றான்.

காதலே திக்கி திணறிதான் கை சேர்ந்தது. அவளை நேசித்தான் அவன். இதுவரை அதிகம் கொஞ்சிக் கொண்டது கூட இல்லை. உடலால் நெருங்கியதும் அவ்வளவாக கிடையாது. மனைவியாய் வீடு வந்து சேர்ந்து விட்டாள். சிறு கைக் குலுக்கலிலிருந்து, சிறு முத்தத்திலிருந்து இந்த காதலின் அடுத்த படிநிலையை ஆரம்பிக்கலாம் என்று நினைத்தான். நினைத்தால் ஐந்து நிமிடத்தில் சம்மதிக்க வைத்துவிடுவான். ஆனால் அவளுடனான ஒவ்வொரு பொழுதுகளும் கவிதை போல வளர வேண்டும் என்று ஆசைக் கொண்டான்.

தாரணி புன்னகைக்க முயன்றாள். ஆனாலும் முகத்தில் தயக்கமும் பயமும் இருந்தது.

"என்னை நம்பு தாரணி.. நமக்கு மேரேஜ் ஆயிடுச்சி. முழுசா‌ நம்பு.. நமக்கு நிறைய டைம் இருக்கு.‌" என்றவன் அவளின் நெற்றியில் முத்தமிட்டான். அதற்கே கொஞ்சமாக நடுங்கினாள்.

"நிம்மதியா போய் தூங்கு.." அவளின் தலையை வருடி விட்டபடி சொன்னான்.

உதட்டை கடித்தபடி கட்டிலில் அமர்ந்தாள். சோபாவில் அமர்ந்தபடி இவளை பார்த்து புன்னகைத்தான் அவன்.

மனோகர் கோபத்தோடு தனது அறைக்குள் உலாவிக் கொண்டிருந்தார். மகனுக்கு திருமணம் செய்து சொத்தை அதிகரிக்க செய்யலாம் என கணக்கிட்டு இருந்தவர் இப்போது தனது திட்டத்தில் மண் விழுந்த எரிச்சலில் இருந்தார்.

அப்படியும் இப்படியுமாக யோசித்தவரின் மன கண்களில் சூர்யா வந்து நின்றான். தர்ஷினி யவனாவில் யாரோ ஒருத்தரை சூர்யாவுக்கு மணம் புரிந்து வைத்தால் அவரின் திட்டம் நிறைவேறும் என்றுக் கணக்கிட்டார். அலெக்ஸின் இப்போதைய நிலையை பயன்படுத்தினால் சுலபமாக தன்னால் சொத்தை பெருக்கிக் கொள்ள முடியும் என்று திட்டமிட்டார்.

சூர்யாவின் ஜோடி - குந்தவி?? தர்ஷினி?? யவனா?? யாராய் இருக்கும்.?

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN