காதல் கணவன் 30

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கீர்த்தனாவை இங்கேயே விட்டுவிட்டு பணிக்கு கிளம்பினான் பாலாஜி.

"சோசியர் வேற என்ன சொன்னாங்க கீர்த்தனா.?" வளர்மதி கவலையோடு விசாரித்தாள்.

என்ன பதில் சொல்வாள் அவள்.? அவளுக்கே புதிதாய் இருந்தது அனைத்தும்.

"நான் போகல அத்தை.. அவர் மட்டும்தான் சோசியர்கிட்ட போய்ட்டு வந்தாரு.." என்றவள் மற்றவர்களின் அருகே இருக்க தயங்கினாள்.

தனது அறைக்கு வந்து முடங்கி விட்டாள். கணவன் தன்னிடம் எதையோ மறைக்கிறான் என்று புரிந்தது. தான் காதலித்து மணந்தவன்தானா இவன் என்று அவளுக்கே சந்தேகமாக இருந்தது.

மாலை பள்ளி முடிந்து வந்ததும் கீர்த்தனாவை தேடி ஓடி வந்தாள் கனிமொழி.

"என் ரூம்க்கு வா கீர்த்தனா.." என்று அழைத்தாள்.

"அப்புறம் வரேன் கனி‌. நீ போ.." என்றவள் முடங்கியபடியே இருந்தாள்.

இரவு வீடு வந்தான் பாலாஜி. கீர்த்தனாவின் உடைகளையும் அணிகலன்களையும் கனிமொழியிடம் தந்தான். அவள் தன் அறையில் அதை பத்திரப்படுத்திக் கொண்டாள்.

இரவு உணவு உண்ணும்போது மனைவியின் முகம் பார்க்கவில்லை பாலாஜி. அவளுக்கு இதயமே உடைந்தது போலிருந்தது. இத்தனை நாள் பேசிய காதல் வசனங்களும் கொஞ்சல்களும் இன்று மறைந்து போனது போல இருந்தது. அவளால் நம்பவே முடியவில்லை.

"சோசியக்காரன் ஆயிரம் சொல்வான். அதையெல்லாம் நீ நம்புறியா பாலா.?" பாட்டி உணவை உண்டபடியே கேட்டாள்.

கனிமொழியை மனதில் நிறுத்தி பார்த்தவன் "நம்புறேன் பாட்டி. இல்லன்னா இங்கே வந்திருப்பேனா.?" எனக் கேட்டான்.

கீர்த்தனாவால் உண்ணவே முடியவில்லை. தொண்டையில் கயிறு இறுகுவது போலிருந்தது. உணவை தள்ளி வைத்துவிட்டு எழுந்தாள்.

"எனக்கு போதும்.." என்று விட்டு மாடி ஏறினாள். அவளின் வாடிய முகம் கண்ட பாட்டிக்கு பேரன் மீதுதான் கோபம் வந்தது. மனைவியின் மனதை புரிந்துக் கொள்ளாதவன் எதற்காக காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்தாள்.

சக்தியின் அறையிலிருந்த கட்டிலில் விழுந்தான் பாலாஜி. கூரையை பார்த்தான்.

சக்தி தான் கொண்டு வந்திருந்த பேப்பர்களை திருத்திக் கொண்டிருந்தான்.

"அவ இனி உன்னை தேடி வர மாட்டாதானே.?" என்றான் கவலையாக‌ பாலாஜி.

"வர சான்ஸ் இல்ல.. ஆனா கீர்த்து பாவம்.. முகம் ரொம்ப வாடி போச்சி.. நீ உண்மையை சொல்லியிருக்கலாம் அவக்கிட்ட.."

இடம் வலமாக தலையசைத்தான் பாலாஜி. "உனக்கு எங்களை பத்தி தெரியாது. என்னால அவளை விட்டு இருப்பது ரொம்ப கஷ்டம். அவளுக்கும் உண்மை தெரிஞ்சதுன்னா அப்புறம் இது வேற மாதிரி வில்லங்கமா போகும்.." என்றவன் தலையணையை அணைத்துக் கொண்டான்.

சக்தி மொத்தமாக உதடு பிதுக்கினான்.

மறுநாள் காலையில் அனைவருக்கும் உணவுக்காக கூடியிருந்த வேளையில் மகனை குழப்பத்தோடு பார்த்தார் கதிரேசன்.

"திருமண தகவல் மையத்துல இருந்து கால் பண்றோம்ன்னு சொல்லி காலையில் எனக்கு ஒரு கால் வந்தது.." என்றார்.

சக்தி இட்லியை பிட்டு வாயில் போட்டுக் கொண்டு நிமிர்ந்தான்.

"என்னப்பா சொன்னாங்க.?" என கேட்டான். அவனை முறைத்தாள் கனிமொழி. முகம் கறுத்து விட்டது அவளுக்கு.

"ஏதோ ஒரு பொண்ணு வீட்டுல உன்னை ஓகே பண்ணியிருக்காங்களாம். பேசி பார்க்க சொல்லி அவங்க அட்ரஸ் போன் நம்பர் தந்திருக்காங்க.." என்ற கதிரேசன் "ஒரு வேலை செய்றதா இருந்தா முதல்ல எனக்கு சொல்லுடா.. திடீர்ன்னு அவங்க கால் பண்ணா எனக்கு எப்படி தெரியும்?" என்றார் கோபத்தோடு.

"சரி விடுங்க.. அவங்களுக்கு கால் பண்ணி பேசுங்க.. ஓகேவா இருந்தா வர ஞாயித்து கிழமை பொண்ணு பார்க்க போகலாம்.." என்றவன் பாதி சாப்பாட்டில் எழுந்து ஓடிப் போன கனிமொழியை எரிச்சலோடு முறைத்தான்.

கல்லூரியில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த சக்திக்கு கனிமொழியின் நினைவுதான் அதிகம் வந்தது.

'ஒருநாள் சாப்பிடலன்னா அவ செத்துட மாட்டா..'‌ என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொண்டான்.

மதிய உணவு இடைவெளியில் உணவு பையை எடுத்துக்கொண்டு உணவு மேஜையை நோக்கி நடந்தவனை "சார்.." என அழைத்து நிறுத்தினார் கல்லூரி வாட்ச்மேன்.

"என்னங்க அண்ணா..?" என்றவனிடம் "உங்களை பார்க்க ஒரு பாப்பா வந்திருக்கு சார்.." என்றார்.

பாப்பா யாரென்று பார்க்காமலேயே யூகிக்க முடிந்தது. கோபத்தில் பற்களை அரைத்தவன் "நான் இன்னைக்கு காலேஜ் வரல.. லீவ் போட்டுட்டேன்னு அவக்கிட்ட சொல்லிடுங்க.." என்றான்.

வாயில் காப்பாளர் இவனை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு நகர்ந்தார்.

"இவளையெல்லாம் திருத்த ஆண்டவனால கூட முடியாது.." என்று திட்டினான்.

மாலையில் கல்லூரியை விட்டு கிளம்பியவன் கேட்டை தாண்டியதும் சட்டென்று காரை நிறுத்தினான். சாலையோரத்து மரத்தடி ஒன்றில் நின்றிருந்தாள் கனிமொழி. பள்ளி பையை காலோரத்தில் வைத்தபடி மரத்தில் சாய்ந்து‌ நின்றிருந்தாள்.

எரிச்சலோடு இறங்கினான்.

"இங்கே என்னடி பண்ற.?" அவனின் அதட்டலில் துள்ளி விழுந்தாள். சாலையில் நடந்துச் சென்ற மாணவ மாணவியர் சிலர் சக்தியின் அதட்டலை கண்டு ஆச்சரியத்தோடு அங்கேயே நின்றனர்.

"உங்களை பார்க்க வந்தேன் மாமா.." என்றவளின் தலையில் ஓங்கி கொட்டினான். மாணவர்களின் கூட்டம் சேர தொடங்குவதை கண்டவன் "வா வீட்டுக்கு போலாம்.." என்றபடி அவளின் கல்லூரி பையை எடுத்துக் கொண்டு காரை நோக்கி நடந்தான்.

பேக்கை காரின் பின் சீட்டில் வீசினான். கனிமொழி காரில் ஏறியதும் காரை வேகமாய் இயக்கினான். கார் செல்லும் வேகம் கண்டு பயந்து போனாள் கனிமொழி.

"கொஞ்சம் மெதுவா போங்க மாமா.."

மெயின் ரோட்டில் ஒரு புளியமரத்தின் கீழே காரை கொண்டு வந்து நிறுத்தினான். கொஞ்சம் விட்டிருந்தால் கார் புளியமரத்தின் மீது மோதியிருக்கும். பயத்தில் இதயம் இரு மடங்காய் துடித்தது அவளுக்கு.

சப்பென்று ஒரு அறையை தந்தான். திரும்பி பார்த்தவள் "சும்மா சும்மா ஏன் அடிக்கிறிங்க.?" எனக் கேட்டாள்.

"உன்னை கொல்லாம விடுறது பெரிய விசயம்டி.." என்று கத்தியவன் "மதியத்துல இருந்து காலேஜ் வாசல்ல தவம் கிடந்திருக்க.. ஸ்கூல் லீவ் போட்டதே தப்பு. இதுல நாலு மணி நேரம் ரோட்டுல நின்னிருக்க.." என்றான். அவனுக்கு ஆத்திரம் தீர மறுத்தது.

"உண்மையிலேயே கல்யாணம் பண்ணிக்க போறிங்களா நீங்க.?"

"ஆமா.." குரைத்தான்.

"ப்ளீஸ் மாமா.. கல்யாணம் பண்ணிக்காதிங்க.." என்றவளை முறைத்தான்.

"ஏன்.?"

"வெயிட் பண்ணுங்க.. என்னை கல்யாணம் பண்ணிப்பிங்க.."

ஓங்கி விட்டான் ஒரு அறையை.

தலையை பிடித்துக் கொண்டான்.

"என்னை மிருகமா மாத்துற கனி.. உன்னை அடிச்சே கொன்னுடுவேன் போல.. உன் மூளை ஏன் கெட்டுப் போச்சின்னு எனக்கு சுத்தமா புரியல.."

"கொஞ்ச வருசம் வெயிட் பண்ணுங்க‌ மாமா.. நான் என் பர்ஸ்ட் டிகிரியை முடிச்சதும் உங்களை மேரேஜ் பண்ணிக்கிறேன்.. உங்களுக்கு அவசரம்ன்னா எனக்கு இப்ப கூட ஓகே.. ஆனா வேற பொண்ணை தேடாதிங்க.."

நெற்றியை பிடித்தவனுக்கு தலைவலி கொன்றது.

"ரொம்ப கஷ்டமா இருக்கு மாமா.. வேற பொண்ணை நீங்க கல்யாணம் பண்ணா என்னால தாங்கிக்கவே முடியாது.." கெஞ்சலாக சொன்னாள்.

"நான் வேணா செத்துட்டட்டுமா கனி.?"

"ஐயோ மாமா.." பதறியவள் "உங்களுக்கு ஏதாவது நடந்தா நானும் செத்துடுவேன் மாமா.." என்றாள்.

தலையில் அடித்துக் கொண்டான்.

"என் மேல உனக்கு இருப்பது லவ் கிடையாது.."

"சத்தியமா லவ்தான் மாமா.."

"முடியலடி.. சாகடிக்கற என்னை.." என்றவன் "உன்னோட கெட்டுப் போன புத்தியை சரி பண்ண வழி கிடைக்காமதான் நான் மேரேஜ் பண்ண போறேன். உனக்கு மனசு உடைஞ்சா என்ன இடிஞ்சா என்ன? நான் உன்கிட்டயிருந்து தப்பிச்சா போதும்.." என்றான்.

கனிமொழி விம்மினாள். அவளை கண்டுக் கொள்ளாமல் காரை எடுத்தான்.

வீட்டு வாசலில் காரை நிறுத்தியவன் "இன்னொரு முறை என்னை தொந்தரவு பண்ணாத. அப்புறம் வீட்டுல சொல்லிடுவேன். உங்க அப்பா உன் படிப்பை நிறுத்தி யாராவது ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணி அனுப்பி வச்சிடுவாரு.. அந்த மாதிரி நடக்க கூடாதுன்னு நினைச்சா மரியாதையோடு நடந்துக்க.." என்றுவிட்டு காரிலிருந்து கீழே இறங்கினான்.

கீர்த்தனா வாசலிலேயே அமர்ந்திருந்தாள். இருள் சூழும் நேரத்தில் வந்து சேர்ந்தான் பாலாஜி. கீர்த்தனாவை கண்டவன் புன்னகைத்தான். அவள் பதில் புன்னகை தரவில்லை.

"கீர்த்தனா.." அவன் அருகில் வருவது கண்டு எழுந்தவள் அங்கிருந்து நடந்தாள்.

"கீர்த்தனா.." அழைத்தவனை திரும்பிப் பார்க்கவில்லை அவள்.

அறைக்கு வந்தவன் அவளுக்கு கைபேசியில் அழைத்தான். ரிங் ஆனது. அவள் போன் அழைப்பை ஏற்கவில்லை.

அவளிடமிருந்து விலகி இருக்க விரும்பினானே தவிர சண்டை போட்டுக் கொள்ள விரும்பவில்லை. அவளின் வாடிய முகம் இப்போதேதான் பளிச்சென்று அவனின் மூளையில் பதிந்தது. அவளை தேடி ஓடினான்.

கனிமொழி ஒருபுறம் கவிழ்ந்து படுத்திருந்தாள். கீர்த்தனா போனை வெறித்தபடி அமர்ந்திருந்தாள். அறையின் வாசல் படியில் வந்து நின்றவன் "கீர்த்து.." என்றழைத்தான்.

நிமிர்ந்தவள் உணர்ச்சிகளை மொத்தமா விழுங்கிவிட்டு அருகே வந்தாள்.

"என்ன பாலா.?"

அவளின் கையை பற்றினான். சட்டென்று கையை பின்னால் இழுத்துக் கொண்டாள்.

"கீர்த்தனா.."

"தொடாத பாலா.." மெதுவாக சொன்னாள். தலை குனிந்து நின்றிருந்தவளின் தாடையை பற்ற முயன்றான். ஓரடி பின்னால் நகர்ந்தாள்.

"நிஜமா தொடாத.." என்றாள்.

"கீர்த்து ப்ளீஸ்.." என்றவனை நிமிர்ந்து பார்த்தாள். அவளின் விழிகள் கலங்கி இருந்தது. அவனின் இதயம் நொந்தது.

"லவ் மேரேஜ்ன்னு நினைச்சேன். அரேஞ்ச் மேரேஜா இருந்தா கூட பொண்ணு பார்க்க வந்த நாள்ல இருந்து மேரேஜ் நாள் வரைக்கும் பேசி புரிஞ்சிட்டு இருந்திருப்பேன். ஆனா லவ் பண்ணியும் இப்ப வேஸ்ட். நீ‌ ரொம்ப அன்னியமா தெரியற.. உன்னை என்னால கணிக்க முடியல. பயமா இருக்கு. உன்னோடு எப்படி வாழ்க்கை முழுக்க வாழ போறோம்ன்னு நினைக்கும்போதே உடம்பு நடுங்குது.."

"ரொம்ப யோசிக்கற.." என்றவன் கனிமொழியை பார்த்தான். இவர்களின் உரையாடலை பற்றி கவலை இல்லாதவள் போல வேற்று உலகில் சக்தியின் நினைவில் இருந்தாள்.

"நைட்க்கு அவ தூங்கிய பிறகு உன் ரூமுக்கு வா. நாம பேசிக்கலாம்.."

கசப்பாக நகைத்தாள்.

"பேச எதுவும் இருப்பதா எனக்கு தெரியல. உன் லைஃப்ல நான் தடையா இல்லன்னு நினைக்கிறேன். நீ உன் இஷ்டபடி எல்லா முடிவையும் தனியாவே எடுக்கலாம். லவ் பண்ணி, என் அப்பா பேச்சை மீறி ஓடி வந்ததுக்கு அருமையா என் மனசை வாழ வச்சிட்ட.." என்றவள் உள்ளே சென்று கதவை சாத்தினாள்.

பாலாஜி சோகமாய் திரும்பினான். இவளை எப்போது சமாதானம் செய்வதோ என்று கவலையாக இருந்தது.

இரண்டு நாட்களில் சக்திக்காக பெண் வீட்டாரோடு பேசி முடிவு செய்தார்கள். பெண் லட்சணமாக இருந்தாள். தனியார் பள்ளி ஆசிரியை. எல்லா விதத்திலும் ஒத்து போவது போல இருந்தது. சக்தி சரியென்று வீட்டில் சொன்னான்.

ஞாயிற்றுக்கிழமை பெண் பார்க்க கிளம்பினார்கள். பெண் அலங்கரித்து இருக்கவில்லை.

இவர்களை வரவேற்று தண்ணீர் தந்தார்கள். தாத்தாவும் பாட்டியும் வீடு வெகு சாதாரண சூழ்நிலையோடு இருப்பது கண்டு குழம்பினார்கள்.

"சாரி.. முன்னாடியே போன் பண்ணியிருக்கணும்.." என்று இழுத்தார் பெண்ணின் தந்தை.

"என்னாச்சிங்க.?" சந்தேகத்தோடு கேட்டார் தாத்தா.

"இன்னைக்கு காலையில் எங்க வீட்டுக்கு லெட்டர் ஒன்னு வந்தது. உங்க பேரன் யாரோ ஒரு பெண்ணை காதலிச்சி ஏமாத்திட்டதாவும் அந்த பொண்ணு தற்கொலை செஞ்சி செத்து போனதாவும் அந்த பொண்ணோட கேஸ்ல இருந்து தப்பிக்கணும்ன்னுதான் நீங்க அவசர அவசரமா இவருக்கு கல்யாண ஏற்பாடு செய்றதாவும் அதுல எழுதி இருந்தது.."

சக்திக்கு கோபத்தில் முகம் சிவந்தது. மற்றவர்களுக்கோ குழப்பமும் அவமானமும் ஒன்று சேர்ந்து வந்திருந்தது.

"என்னடா சக்தி இது.?"

பதில் சொல்ல முடியவில்லை அவனால். கனிமொழியின் திசை பார்த்தான். தரை பார்த்து அமர்ந்திருந்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN