காதல் கணவன் 31

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தாத்தா தயக்கத்தோடு "என் பேரன் அப்படிப்பட்டவன் இல்ல.. யாரோ தப்பா தகவல் அனுப்பி இருக்காங்க.." என்றார்.

பெண்ணின் வீட்டார் நம்ப தயாராக இல்லை.

"தப்பா நினைக்காதிங்க.. உங்க பையன் மேல எந்த தப்புமே இல்லாம இப்படி ஒரு கம்ப்ளைண்ட் வந்திருக்காது. ஒன்னுதான் ஒன்பதாகும். ஜீரோ ஒன்பதாகாது. உங்க பேரன் மனசை மாத்தி அந்த பொண்ணோட வீட்டுல போய் பேசுங்க. அந்த பொண்ணோட சாபத்தை வாங்கிக்காதிங்க.." என்றுச் சொன்னார் பெண்ணின் அப்பா.

"அந்த லெட்டரை நான் பார்க்கலாமா.?" சக்தி எழுந்து நின்றுக் கேட்டான்.

பெண்ணின் தந்தை தன் பாக்கெட்டிலிருந்த தாளை நீட்டினார். பிரித்துப் பார்த்தான். அறிமுகமான கையெழுத்தான்.

"லெட்டரை இங்கே கொடு.." கதிரேசன் கையை நீட்டினார்.

காகிதத்தை நான்கைந்தாக கிழித்தவன் தன் பேண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.

"உங்களுக்கு எதுக்குப்பா.?" என்றான்.

"உங்க பையன் செயலே சொல்லுது வில்லங்கம் இருக்குன்னு.. கொஞ்சம் நல்லா விசாரிங்க.." என்று கையை கூப்பினார் பெண்ணின் தந்தை.

அனைவரும் முகம் வெளுத்து வெளியே நடந்தனர். அதற்கு மேலே அங்கே இருந்தால் மரியாதை இருக்கும் என்று தோன்றவில்லை அவருக்கு.

வீட்டிற்கு வந்ததும் சக்தியை நடு கூடத்தில் நிற்க வைத்து முறைத்தனர் அனைவரும்.

"யார் அந்த பொண்ணு.?" எனக் கேட்டார் அப்பா.

"அப்படி யாரும் இல்லை.." என்றவனை கனிமொழியையும் பாலாஜியையும் தவிர வேறு யாரும் நம்பவில்லை.

"திடுதிப்புன்னு கல்யாணம் வேணும்ன்னு நீ கேட்கும்போதே நான் புரிஞ்சிட்டு இருந்திருக்கணும்.." என்ற தந்தையை வருத்தமாக பார்த்தவன் "நான் யாரையும் லவ் பண்ணி ஏமாத்தல.." என்றான்.

"அட போடா.. இதுக்கு மேல உன்னை யார் நம்புவா.? வெற்றியும் இப்படியேதான் செஞ்சான். இப்ப நீயும். ஒருத்தரும் பெத்தவங்க பேச்சை கேட்க மாட்டிங்களா.? லவ் பண்ணா எங்ககிட்ட வந்து சொல்லலாம்.. நீயே உன் வாழ்க்கைக்கு ராஜாவா இருக்கணும்ன்னு நினைச்சா இப்படி பொண்ணு பார்க்க கூட்டிப் போய் எங்களை அவமானப்படுத்த கூடாது.." என்று திட்டினார் தாத்தா.

அவமானத்தில் முகம் கறுத்து நின்றான் சக்தி. சுவரில் சாய்ந்தபடி நின்றுக் கொண்டிருந்த கனிமொழி கொஞ்சமும் கவலை இல்லாமல் நின்றுக் கொண்டிருந்தாள்.

"யார் அந்த பொண்ணுன்னு சொல் சக்தி.. நாங்க மறுக்கவா போறோம்.?" ஆதங்கமாக கேட்டாள் அர்ச்சனா.

"அப்படி யாரும் இல்லம்மா.. சத்தியம்.. அந்த லெட்டர் பொய்.. நான் இதுவரைக்கும் என் மனசுல ஒருத்தியையும் நினைச்சது இல்ல.." என்றவன் எரிச்சலோடு மாடி ஏறினான். அவன் சொன்னது கேட்டு கனிமொழிக்கு கொஞ்சம் குளுகுளுவென்று இருந்தது‌.

"யாரை நம்புறதுன்னே தெரியல.. எல்லாமே எதிர்பாராத விதமா இருக்கு.." என்று முனகியபடியே தனது வேலைகளை கவனிக்க புறப்பட்டாள் தாயம்மா.

"சக்தி.." பாலாஜி அறையின் கதவை சாத்திவிட்டு வந்தான்.

"இது எங்க பாப்பாவா.?" சந்தேகமாக கேட்டவனிடம் கிழிந்திருந்த கடிதத்தை எடுத்து நீட்டினான்.

கடிதத்தின் கையெழுத்து கண்டவன் வருத்தமானான்.

"எங்க பாப்பா ரொம்ப பீல் பண்றா போல.." என்றவனை எரிச்சலோடு பார்த்த சக்தி "அவளுக்கு கொழுப்பு.. ஒரு பீலிங்கும் கிடையாது.." என்று கத்தினான்.

"சின்ன பொண்ணு.. பொறுமையா சொல்லி புரிய வச்சிக்கலாம்.." என்றான்.

சக்தி அவனை திட்ட தொடங்கும் முன் அறையின் கதவு தட்டப்பட்டது. திறந்தவன் தன் முன் நின்றிருந்த கனிமொழியை கொலைவெறியோடு பார்த்தான்.

"பாப்பா நீ இங்கே என்ன பண்ற.?" எனக் கேட்டவனிடம் பாட புத்தகம் ஒன்றை காட்டினாள்.

"மாமாக்கிட்ட சந்தேகம் கேட்டுட்டு போகலாம்ன்னு‌ வந்தேன் அண்ணா.."

"நான் சொல்லி தரேன்.." என்று புத்தகத்திற்காக கையை நீட்டியவனை யோசனையோடு பார்த்தவள் "கீர்த்தனா உன்கிட்ட என்னவோ பேசணும்ன்னு சொன்னா. நீ போய் அவளை பாரு..‌‌ நான் மாமாக்கிட்ட விவரம் கேட்டுக்கறேன்." என்றாள்.

பாலாஜி பெருமூச்சி விட்டான். சரியென தலையசைத்துவிட்டு வெளியே நடந்தவன் நேராய் கீர்த்தனாவை தேடி வந்தான்.

கனிமொழியை உள்ளே இழுத்த சக்தி கதவை பூட்டினான்.‌ அவள் புறம் திரும்பினான்.

"நீ பண்ற தப்பு தெரியுதா பாப்பா.? உன் மனசு ரொம்ப கெட்டதா மாறிட்டு இருக்கு. நீ செய்ற எல்லாமே தப்பு மட்டும்தான்." என்றவனை நிதானமாக பார்த்தவள் "வேற பொண்ணோடு உங்க கல்யாணத்தை என்னால அனுமதிக்க முடியாது மாமா.. என்னை காதலிக்க வழி பாருங்க.." என்றாள்.

சக்தி நெற்றியில் அடித்துக் கொண்டான்.

"உனக்கு ஏன் என்னை பிடிச்சிருக்கு.? ஒரு நல்ல காரணத்தை உடனே சொல்லு.." என்றான்.

"காரணமே இல்லாம பிடிச்சிருக்கு.." என்றவளை வெறித்தவன் "சினிமா பார்த்து கெட்டுப் போயிட்ட சனியனே நீ.. அதனாலதான் இப்படி உளறிட்டு இருக்க.." என்றுக் கத்தினான்.

"நீங்க என்ன நினைச்சாலும் எனக்கு பிரச்சனை கிடையாது.. நீங்க என்னை காதலிக்கணும்.. முடியாதுன்னா வெயிட் பண்ணுங்க.. நான் பெரிய பொண்ணா வளர்ந்துடுவேன். உங்களுக்கு என்னை நிச்சயமா பிடிக்கும்.. இன்னொரு முறை பொண்ணு பார்க்க கிளம்பாதிங்க.. நான் வேற ஏதாவது கூட செய்வேன்.. உங்க மேல இருக்கும் பைத்தியம் எனக்கு அப்படி.." என்றாள்.

அறைய கூட முடியவில்லை அவனால்‌. "எந்த காலத்துல பாவம் பண்ணேனோ.? உன்கிட்ட மாட்டிட்டு சித்திரவதை படுறேன்.." என்று புலம்பினான்.

"நான் உங்களை நல்லா பார்த்துப்பேன்.. இந்த உலகத்துல இருக்கும் எந்த பொண்ணாலுமே என்னை போல உங்களை காதலிக்க முடியாது.." என்றாள் தீர்மானமாக.

"ச்சீ போடி.." என்றவன் முறைத்தபடியே கதவை திறந்தான்.

மேஜையில் தலைசாய்ந்தபடி இருக்கை ஒன்றில் அமர்ந்திருந்தாள் கீர்த்தனா.

"கீர்த்தனா.." பாலாஜியின் குரலில் நிமிர்ந்தவள் அவனை நேராய் பார்க்கவில்லை.

"என் மேல கோபமா கீர்த்தனா.?" அருகில் வந்து அவளின் தாடையை உயர்த்தியபடி கேட்டான். அவனின் கையை தட்டி விட்டவள் "நான் யார் உன் மேல கோபப்பட.?" எனக் கேட்டாள்.

"கீர்த்தனா.."

"விட்டுடு பாலா.. நீ என் வாழ்க்கையில் ரொம்ப முக்கியம். ஆனா நான் உன் வாழ்க்கையில் முக்கியம் கிடையாது.."

"இப்படி சொல்லாதே கீர்த்தனா.. உன்னை ரொம்ப பிடிக்கும் எனக்கு.. என் உயிர்‌ நீ.." என்றவனை வெறித்தவள் "அப்புறம் ஏன்டா இங்கே வந்த.? சோசியக்காரன் என்னவோ சொன்னான்னு சொல்ற.. அங்கே நைட்டெல்லாம் தூங்க‌விட மாட்ட.. பகல்லயும் வீட்டுல இருக்கும் ஒவ்வொரு செகண்டும் என்னை இம்சை பண்ணிட்டேதான்‌ இருப்ப.. வேற ஒரு உலகத்துல இருந்துட்டு இப்ப இங்கே கூட்டி வந்திருக்க.. எனக்கும் பீலிங்ஸ் இருக்கு பாலா.. ஐ லவ் யூ.. உன் மேல எனக்கும் அபெக்சன் இருக்கு.." என்றாள். கலங்கியிருந்த விழிகளை அவனிடம் காட்டாமல் இருக்க முயன்றாள்.

பாலாஜிக்கு இதயம் உடைந்து விட்டது. "ஐயம் சாரி கீர்த்து.." அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான்.

அவனை தள்ளி விட்டாள். "சோசியர் சொன்னாங்கன்னு நீதானே சொன்ன.? அப்புறம் ஏன் பக்கத்துல வர.?" எனக் கேட்டாள் எரிச்சலாக.

"சோசியர்ன்னு பொய் சொன்னேன் கீர்த்து.. கனிக்கு சக்தி மேல ஏதோ அபெக்சன்.. அவளை சரி பண்ண வழி தெரியல. அவளோடு நாம டைம் ஸ்பென்ட் பண்ணி அவளோட மனசு மாறும்ன்னு நினைச்சேன். அவளையும் சக்தியையும் பிரிச்சி வைக்கதான் நான் உன்னை பிரிஞ்சேன். சோசியர்ன்னு சொன்னாதான் இந்த வீட்டுல இருப்பவங்களும் நம்மை பிரிச்சி வைப்பாங்க.. இல்லன்னா என்னால என்னை கன்ட்ரோல் பண்ண முடியாது‌ கீர்த்து.."

கீர்த்தனாவின் முகம் மாறி விட்டது.

"என்னை வெற்றிக்கு கல்யாணம் பண்ண இருந்தாங்க. கடைசி நேரத்துல கூட நீ வரல. ஆனா இன்னைக்கு உன் சிஸ்டருக்காக உன் பிரச்சனைகளை மறந்து இங்கே வந்திருக்க.." என்றவள் இடம்‌ வலமாக தலையசைத்தாள்.

"ரொம்ப‌ நல்லா புரிஞ்சிக்கிட்டேன் உன்னை. உன் லைஃப்ல என்னை தவிர மத்த எல்லோரும் இன்பார்டன்ட்.. லேட்டா புரிஞ்சிக்கிட்டேன். உன்னை லவ் பண்ணதுக்காகவும், உனக்காக ஓடி வந்ததாகவும் இந்த செகண்ட் நிஜமாவே பீல் பண்றேன்.." என்றவளை புரியாமல் பார்த்தான்.

"கீர்த்தனா.." என்றான் சந்தேகமாக.

"உண்மைதான் பாலா.. எனக்கும் தன்மானம் இருக்கு. லவ் பண்ற எனக்காக நீ ரிஸ்க் எடுக்கல. உன்னால இன்னைக்கு இங்கே வர முடியும்ன்னா அன்னைக்கும் வந்திருக்க முடியும். ஆனா நீ‌ வரல. நீ எனக்காக எந்த முயற்சியும் எடுக்கல. என்னோடது ஒன் சைட் லவ் போல.." என்றவள் "போதும் பாலா.. மனசு ரொம்ப வலிக்குது.. தயவு செஞ்சி போ.. உன் தங்கச்சி வந்துடுவா. நான் அவளுக்கு பாடிகார்டா இருந்துக்கறேன்.. நீ போய் நிம்மதியா இரு..." என்றாள்.

"கீர்த்து.." கெஞ்சினான். ஆனால் அவள் சொன்னதற்கு தன்னால் மறுப்பு சொல்ல முடியவில்லை என்ற விசயம் புரிந்து வருத்தப்பட்டான்.

"போ.." என்றவள் முகத்தை திருப்பிக் கொண்டாள். "சாரி." என்றவன் அங்கிருந்து கிளம்பி போனான்.‌ கீர்த்தனாவால் தாங்கவே முடியவில்லை. அழுகையாக‌ வந்தது. தன் காதலின் மொத்த தூண்களும் இடிந்து விழுவது போலிருந்தது.

வெற்றிக்கு அழைத்தாள். விசயத்தை சொன்னாள்.

"அவன் உண்மையை சொல்லல கீர்த்தனா. அவன் ஒரு லூசு.. அவனையெல்லாம் ஒரு மேட்டரா நினைக்காத. விட்டுடு.. பீல் பண்ணாத.." என்றான் அவன். இந்த விசயத்தில் இவனும் திட்டமிட்டு பழி வாங்குவது போல இருந்தது. ஏன் அழைத்தோம் என்றிருந்தது.

சக்தியும் பாலாஜியும் அன்று இரவு முழுக்க யோசித்தனர்.

"இதுக்கு ஒரே வழி நீ வீட்டை‌ விட்டுப் போறது மட்டும்தான்.." என்றான் பாலாஜி.

"ஆமா. அதுவரைக்கும் உன் தங்கச்சி என்‌ நிழல் பக்கத்துல கூட‌‌ வர கூடாது.." கடுப்போடு சொன்னான் சக்தி.

பாலாஜிக்கு இரவெல்லாம் உறக்கமே வரவில்லை. கீர்த்தனாவின் அழுத முகம் கண்ணில் வந்து நின்றது. முதலிலேயே உண்மையை சொல்லி இருக்க வேண்டுமோ என்று நினைத்தான். ஆனால் இப்போது அவள் சண்டையிட காரணமே வேறு என்ற விசயம் புரிந்த பிறகு சோகமும் வேறாக இருந்தது.

வெற்றி தான் பயிற்சியெடுக்கும் வங்கியின் தரை தளத்தில் பைக்கை நிறுத்தினான். அவனருகில் வந்து நின்றது மஞ்சள் நிற ஸ்கூட்டி ஒன்று. பளீர் புன்னகையோடு இளம்பெண் ஒருத்தி இருக்கையில் இருந்தாள். பாரதி அவள் பெயர். இரண்டு மூன்று முறை பார்த்திருக்கிறான்.‌ பேசிக் கொண்டதில்லை.

"ஹாய்.." என்றான்‌ அவனே.

"ஹாய்.." என்று புன்னகைத்தவளை பார்த்துக் கொண்டே இருக்க தோன்றியது அவனுக்கு. வசீகரமான கண்களை கொண்டிருந்தாள். புதிதான ஒரு உலகத்திற்கு அவள் தன்னை கூட்டி செல்லும் நடைப்பாதை என்பதை போல உணர்ந்தான்.‌ அவளுடனான முதல் அறிமுகமே சில்லென்ற காற்றையும் மென்னிசையையும் சேர்த்து அனுப்பி வைப்பது போலிருந்தது.

"நான் வெற்றி.." கையை நீட்டினான்.

"தெரியும்.." என்றவள் "நான் பாரதி.." என்று கையை குலுக்கினாள். அவளின் மென்மையான கரத்தை மீண்டும் குலுக்கலாம் என்றிருந்தது அவனுக்கு.

"ப்ரியா‌‌ இருந்தா வெளியே போலாமா.?" தயக்கமாக கேட்டான்.

"ஞாயிறு ஓகேவா?" அவளும்‌‌ தயக்கமாக கேட்டாள்.

"ம்.." என்றவன் புன்னகைத்தபடியே அவளிடமிருந்து விடைப்பெற்று நடந்தான்.

அவளின் முகத்தை நினைவுகளில் நிரப்பிக் கொண்டான். அவளுடைய குரலை செவிகளை விட்டு அகல விடாமல் பார்த்துக் கொண்டான். அம்முவை தவிர்த்து வேறு யாரையும் காதலோடு பார்க்கவே முடியாது என்று நினைத்திருந்தவன் இப்போது தனக்குள் புதிதாய் உருவான இந்த நேசத்தை மகிழ்வோடு ஏற்றுக் கொண்டான்.

மறுநாள் காலையில் வேலைக்கு கிளம்பிய பாலாஜியின் பார்வைக்கு தென்படவே இல்லை கீர்த்தனா. மாலையில் வீடு வந்து பார்த்தான்.‌ அப்போதும் அவளை பார்க்க முடியவில்லை. அவள் தன்னை அளவுக்கு அதிகமாகவே வெறுக்கிறாள் என்பதை புரிந்துக் கொண்டான். அவளை சமாதானம் செய்வது எப்படியென்று யோசித்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN