காதல் கணவன் 32

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இரவு உணவின் போதும் கீர்த்தனா வரவில்லை. பாலாஜிக்கு பயமாக இருந்தது. அவசரமாக உணவை முடித்துக் கொண்டு அவளை தேடி ஓடினான்.

கனிமொழியின் அறை கதவை படபடவென தட்டினான். நொடிகள் சில கழிந்த பிறகு கதவை திறந்தாள்‌ கீர்த்தனா. அவளை கண்டவன் அதிர்ந்து போனான். உள்ளூறும் ஆசையில் எச்சில் விழுங்கினான்.

"இ.. இது என்ன டிரெஸ்.?" அவளை மேலும் கீழுமாக பார்த்தபடி கேட்டான். திறந்திருந்த கதவின் மீது முதுகை சாய்த்தவள் "ஏன் உனக்கெப்படி தெரியுது.?" எனக் கேட்டாள்.

அலைபாயும் கண்களை தடுத்து நிறுத்தும் வழியே தெரியவில்லை அவனுக்கு. 'கொல்றாளே..'

"இப்படி டிரெஸ் பண்ண கூடாது கீர்த்தனா.. பேமிலி இருக்கும் வீடு.." என்றவனை நக்கலாக பார்த்தவள் "இது என் பேமிலி.. இந்த டிரெஸ் ஒன்னும் தப்பு கிடையாது.. நீ போய் உன் வேலையை பாரு.." என்றாள்.

உள்ளே செல்ல திரும்பியவள் யோசனையோடு மீண்டும் கதவின் மீது சாய்ந்தாள். "என் டிரெஸ் எப்படி இருக்கு பாலா.?" எனக் கேட்டாள்.

உதட்டை கடித்தபடி அவளை பார்த்தவன் "கண்ணுல பார்க்க முடியல.. போய் மாத்தி தொலை.." என்றான். ஸ்லீவ்லெஸ் ரவிக்கையை அணிந்து இருந்தாள். புடவையை இடுப்பில் கீழ் இறக்கி கட்டியிருந்தாள். ரவிக்கையின் கீழிறிருந்து ஆறேழு அங்குலத்திற்கு அவளின் இடுப்பு அப்படியே தெரிந்தது.

"நான் ஏன் மாத்தணும்.?" கண்களை சாய்த்து கேட்டவளை தயக்கமாக‌‌ பார்த்தான்.

"சத்தியமா இது தேவையா.?"

"ஏன்ப்பா.? என் கை.. நான் ஸ்லீவ்லெஸ் போடுவேன். என் இடுப்பு.. லோ ஹிப்ல புடவை கட்டுவேன்.. உனக்கென்ன வந்தது.?" எனக் கேட்டவள் அவனின் முகத்திலிருந்து படபடப்பை கண்டு உள்ளூர திருப்தி அடைந்தாள்.

"இதை கேட்காம போனேன் பாரு.? இந்த புடவை எனக்கு எப்படி இருக்கு.?" என்றவள் வலது கையால் தன் தோளிலிருந்து இடுப்பு வருடிக் கொண்டு வந்தாள்.

"பேட் கேர்ள் மாதிரி பண்ணாத.." என்றவனை கேலியாக பார்த்தவள் "நான் பேட் கேர்ள் மாதிரி இல்ல.. உனக்குத்தான் ஏதோ பிரச்சனை.." என்றாள். அவனை தாண்டி வெளியே நடந்தாள். வேண்டுமென்றே அவன் மீது முழுதாய் மோதி விட்டு சென்றாள்.

கண்களை மூடி பற்களை கடித்தவன் ஓடிச்சென்று அவளின் கையைப் பற்றி நிறுத்தினான்.

"இங்கே நான் பார்க்க வந்த வேலையை மறந்து உன் பின்னாடி சுத்திட கூடாதுன்னுதான் உன்கிட்டயே பொய் சொன்னேன்.. நான் இந்த விசயத்துல எவ்வளவு வீக்ன்னு உனக்கே தெரியும். தயவு செஞ்சி என்னை பழி வாங்காத.. எப்பவும் போல சாதரணமா இரு.. மூனு மாசம்.. ப்ளீஸ்.."

அவன் சொன்னதை காதிலேயே வாங்கவில்லை அவள்.

"என் கையை விடு.." என்றவள் "நான் உன்னை பழி வாங்கல.. நான் எனக்கு பிடிச்ச மாதிரி டிரெஸ் பண்ணியிருக்கேன். அவ்வளவுதான். உன்னை மயக்க நினைக்கிறேன்னு நீயா கற்பனை பண்ணிக்காத.. கையை விட்டுட்டு போனவனை மயக்க வேண்டிய அவசியம் இல்ல எனக்கு. அதை விட முக்கியமா நீயா கூட எப்பவும் என் பக்கத்துல வந்துடாத.. உன்னை காதலிச்ச பாவத்துக்கு நீ காட்டுற ஓரவஞ்சனையெல்லாம் மறந்து உடனே இடம் கொடுத்துடுவேன்னு நினைக்காத.. இனி நீ யாரோ‌ நான் யாரோ.." என்றாள். தன் கையை உருவிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

பாலாஜி நெற்றியில் அடித்துக் கொண்டான். நடந்து சென்றவளை பார்க்க முடியவில்லை அவனால்‌. அவளை பார்க்கும்போதே எங்காவது கடத்தி சென்று விட வேண்டும் போல இருந்தது.

இரவில் சுத்தமாக உறக்கம் வரவில்லை அவனுக்கு. புரண்டுக் கொண்டிருந்தவனை எரிச்சலாக முறைத்தான் சக்தி.

"கொஞ்ச நேரம்‌ தூங்க விடு.." என்று சிடுசிடுத்தான்.

'உன் தங்கச்சி என் தூக்கத்தை முழுசா திருடிட்டாடா பாவி..' என்று மனதுக்குள் சொல்லியவனுக்கு கீர்த்தனாவின் உருவம் மட்டுமே நெஞ்சில் இருந்தது.

மறுநாள் கணவனுக்கு உணவை பரிமாறினாள் கீர்த்தனா. நேற்று போலவேதான் இன்றும் புடவையை அணிந்திருந்தாள். குட்டி குட்டியாக புடவையின் முந்தானை மடிப்பை எடுத்து அணிந்திருந்தாள். அவள் அணிந்திருந்த ரவிக்கையை எந்த பக்கத்திலிருந்து அந்த புடவை மறைக்கிறது என்று அவனுக்கு சுத்தமாக தெரியவில்லை. அவளை பார்க்க பார்க்க பசியை விட தாகம் அதிகமாவது போலிருந்தது அவனுக்கு.

"வாவ்.. கீர்த்தனா செமையா இருக்க.." என்றாள் தேன்மொழி. அவளை பார்த்து புன்னகைத்தாள் கீர்த்தனா.

"கேவலமா புடவை கட்டியிருக்கா.. நீ இதை வாவ்ன்னு வேற சொல்றியா.?" தங்கையிடம் எரிந்து விழுந்தான் பாலாஜி.

"இந்த காலத்துல நிறைய பேர் இப்படிதான் புடவை கட்டுறாங்க.." உணவை உண்டபடியே சொன்னாள் பாட்டி.

"நீங்க சீரியலை பார்த்துட்டு அதேதான் உலகம்ன்னு இருக்காதிங்க.. இவளை போல யாரும் சேலை கட்டுறது இல்ல.." என்று பாட்டியிடமும் எதிர்வாதம் புரிந்தான் அவன்.

கதிரேசன் உணவை முடித்துக் கொண்டு எழுந்தார்.

"இதுக்குதான் அப்பவே தலையில அடிச்சிக்கிட்டேன்.. பேஷனுக்கு தகுந்த மாதிரி அப்டேட் ஆக கூட தெரியாத இவனை போய் துரத்தி துரத்தி காதலிச்சி கல்யாணம் பண்ணி வச்சிருக்க.. எல்லாம் தலையெழுத்து.." என்றபடியே நகர்ந்தார் அவர்.

பாலாஜிக்கு முகம் சிவந்து விட்டது. 'பேஷன்.. உதவாத பேஷன்..' என்று மனதுக்குள் கரித்து கொட்டினான்.

கல்லூரி கிளம்ப அவசரமாக தயாராகி வந்த சக்தி தங்கையை கண்டு ஆச்சரியப்பட்டான்.

"வாவ்.. கீர்த்தனா.. மாடல் மாதிரியே இருக்க. இந்த புடவை உனக்கு பர்பெக்டா இருக்கு.." என்றவன் நினைவு வந்தவனாக அவசரமாக சுற்றும் முற்றும் பார்த்தான். கனிமொழியை காணவில்லை. இப்போதுதான் நிம்மதியாக இருந்தது. இல்லையேல் அவள் தான் சொன்னதற்காக இதே போல ஏதாவது உடை அணிந்து தன் முன் வந்து விடுவாளோ என்று பயந்து போனான்.

"இரு நான் ஒரு போட்டோ எடுத்துக்கறேன்.. என் தங்கச்சி ஒரு பேய் பிசாசுன்னே மனசுல பதிஞ்சிடுச்சி.. இன்னைக்குதான் அதிசயமா அழகா இருக்க.." என்றவன் தன் கைபேசியில் அவளை நான்கைந்து புகைப்படங்கள் எடுத்தான்.

வயிறு கபகபவென்று எரிந்தது பாலாஜிக்கு.

"உன் தங்கச்சியை மாடலிங் பீல்டுக்கு அனுப்பி வைக்க போறியா.? இவ்வளவு புகழுற.." என்றான் ஆத்திரத்தோடு.

"குட் ஐடியா.." என்ற சக்தி தங்கையை பார்த்தான்.

"நீ ஏன் மாடலிங் பத்தி யோசிக்க கூடாது.?" எனக் கேட்டான்.

பற்களை அரைத்தபடி எழுந்து நின்றான் பாலாஜி. மனைவியின் புறம் பார்த்தான். "அவன் சொன்னான்னு ஏதாவது டிரை பண்ணிடாதே.. சாகடிச்சிடுவேன்.. மரியாதையா இந்த கருமத்தை கழட்டி வீசிட்டு ஒரு நல்ல குடும்ப பொண்ணு மாதிரி சேலை கட்டு.." என்றவன் தனது பேக்கை எடுத்துக் கொண்டு வெளியே நடந்தான்.

சாப்பாட்டு மேஜையிலிருந்த மொத்த பேரும் அதிர்ந்தனர். கீர்த்தனா தலை குனிந்து நின்றிருந்தாள்.

"சைக்கோவை கல்யாணம் பண்ணிகிட்ட நீ.." என்ற சக்தி தன் தட்டில் உணவை பரிமாறிக் கொள்ள ஆரம்பித்தான்.

"இந்த வீட்டுல இருக்கும் எல்லோருமே ஏன் இப்படி ஒன்னு மாத்தி ஒன்னா பிரச்சனையை கொண்டு வராங்கன்னு புரியல.. இந்த டிரெஸ்ல என்ன குறை இருக்குன்னு இவன் இப்படி கத்திட்டு போறான்.?‌ என் பேத்தியை விடவும் வேற எந்த குடும்ப பொண்ணை பார்த்துட்டானாம் இவன்.?" என்று கேட்ட தாத்தா சோகத்தோடு சாப்பிட ஆரம்பித்தார்.

"அவன் கிடக்கறான்.. நீ விடு‌ கீர்த்தனா.. இந்த புடவை உனக்கு அழகா இருக்கு.. உனக்கு பிடிச்சிருந்தா நீ கட்டு. அவனுக்கு இஷ்டம் இல்லன்னா கண்ணை கட்டிக்கிட்டும்.." என்றாள் பாட்டி.

கீர்த்தனா தனக்குள் புன்னகைத்தாள்.

கனிமொழி பள்ளி வளாகத்திற்குள் வேகமாக ஓடினாள். நேரம் கடந்துக் கொண்டிருந்தது. இன்று முதல் பரிட்சை. பொது தேர்வு. தாய்மொழியினை தரவாக‌ தரமாக எழுதிவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு மரத்தடியில் அமர்ந்தபடி புத்தகத்தில் மூழ்கி இருந்தவள் தாமதமாகதான் கைக்கடிகாரம் பார்த்தாள். தேர்வுக்கு இன்னும் கால் மணி நேரம்தான் இருந்தது‌.

நேரத்தை வீணாக்கியதற்காக தன்னையே திட்டிக் கொண்டு ஓடினாள்.

மூன்றாம் தளத்தில் அவளுக்கான தேர்வு அறை ஒதுக்கப்பட்டு இருந்தது. மூச்சு வாங்க ஏறியவளின் மீது வேகமாக வந்து மோதினாள் சுப்ரியா. கனிமொழி அவசரமாக விலகிக் கொண்டாள். எதிரில் இருந்தவள் கையை ஓங்கினாள்.

"என்னடி பார்த்து வர தெரியாதா.? ஆளையும் அவளையும் பாரு.. ஆம்பள மரம்.." என்றவள் அவளை தாண்டிக் கொண்டு நடந்தாள்.

கனிமொழி உதட்டை கடித்தாள். முன்பாயிருந்தால் பயங்கரமாக அழுதிருப்பாள். இப்போது அழுகை வர காரணம் இல்லைதான். ஆனாலும் கண்ணீர் தளும்பியது. அவள் பெரிய பெண்ணானதை தோழிகளிடம் சொல்லிய அம்மா இவளிடமும் சொல்லியிருக்கலாம் என்று எண்ணினாள். அப்போதேனும் இந்த பட்ட பெயர் மாறியிருக்கலாம். தனக்கு தோழியாய் வாய்த்தவர்கள் யாரும் இவளிடம் விசயத்தை சொல்லாமல் போன காரணம் அவளுக்கு புரியவில்லை.

தோழிகள் சொல்லி‌ இருந்தார்கள். ஆனால் சுப்ரியாவுக்குதான் நம்ப மனமில்லை.

'ஆண் மரம்.. ஆம்பள மரம்..' கடந்த ஒரு வருடமாக கனிமொழியின் பெயர் அதுதான். சென்றவளை நிறுத்தி தான் ஆண் மரம் இல்லையென்று சொல்லி இருக்கலாமோ என்று யோசித்தாள். ஆனால் அவளின் முன்னால் தலை நிமிர தைரியம் வரவில்லை. அளவுக்கு அதிகமான ராகிங் கனிமொழியை பள்ளியில் மௌன சாமியாரினியாக மாற்றி வைத்திருந்தது.

தேர்வை எழுதும்போது கூட கண்ணீர் தேர்வு தாளை அவ்வப்போது நனைத்தது. மனதின் குழப்ப மிகுதியில் 'நான் ஆண் மரம் இல்லை' என்று ஓரிடத்தில் எழுதி விட்டாள். அதை அழித்து விட்டு பதிலை எழுதுவதற்குள் மீண்டும் கண்ணீர் வந்து விட்டது.

ஆசையாய் எழுத ஆரம்பித்த தாய்மொழி தாளை அழுதபடி எழுதிவிட்டது மனதிற்கு பாரத்தை தந்துவிட்டது. தேர்வு அறையை விட்டு வெளியே வந்தவள் கழிவறை சென்று முகம் சுத்தம் செய்து வந்தாள். அழுததால் கண்கள் எரிவது போலவே இருந்தது. தனது பேக்கை எடுத்துக் கொண்டு நடந்தாள்.

இரண்டாம் தளத்திலிருந்த வராண்டாவில் நடந்தவளின் முன்னால் வந்து நின்றாள் சுப்ரியா. அவளின் அருகில் வசந்தகுமார் நின்றிருந்தான். இருவரும் ஒன்றாய் சுற்றி வருகிறார்கள். பலராலும் அறியப்பட்ட காதலர்கள் அவர்கள்.

"உன் மேலயே இடிச்சிருக்கா.. கொழுப்பு அதிகம்தான் இவளுக்கு.." கனிமொழியின் பின்னாலிருந்து குரல் வந்தது. ரத்னாவின் குரல் அது. அப்படியானால் அவளருகில் மேனகாவும் இருப்பாள் என்று இவள் அறிவாள்.

இருவரும் வந்து கனிமொழியின் இரு பக்கத்திலும் நின்றனர். கனிமொழிக்கு கால்கள் நடுங்க ஆரம்பித்தது.

"தெரியாம இடிச்சிட்டேன் சாரி.." என்றவளின் புஜத்தில் கிள்ளினாள் சுப்ரியா.

"சாரி.. ப்ளீஸ்.. விட்டுடு சுப்ரியா.." வலியில் அழுதாள் கனிமொழி.

"ஆம்பள மரம் நீ.. உனக்கு அவ்வளவு கொழுப்பா.?" என்றுக் கேட்டவள் மீண்டும் கிள்ளினாள்.

இல்லையென்று சொல்ல விரும்பினாள். ஆனால் எதிரில் ஒரு ஆண் மகனும் நிற்பதால் 'நான் பெரிய பெண்ணாகி விட்டேன். நான் ஆண் மரம் இல்லை' என்று வெட்கம் நாணம் மறந்து சொல்ல மனம் வரவில்லை அவளுக்கு.

"இவ வயசுக்கு வந்துட்டான்னு சொல்றாங்கப்பா.." கனிமொழியின் தோளில் தனது கை முட்டியை வைத்து அழுத்தியபடி சொன்னாள் மேனகா. தோள் வலித்தது கனிமொழிக்கு.

"சும்மா.. ஊருக்காக சொல்லி இருப்பாங்க.. இவளாவது வயசுக்கு வருவதாவது.." என்ற சுப்ரியா கனிமொழியை மேலும் கீழுமாக பார்த்தாள். "அப்படி இருக்க வாய்ப்பு இல்ல.. இதுக்கு மேல நடக்க வாய்ப்பு இருக்கான்னு தெரிஞ்சிப்போம்.." என்றவள் கனிமொழியின் டாப்பின் கழுத்து பகுதியை பிடித்து இழுத்தாள். பயத்தில் கைகளால் நெஞ்சை மூடிக் கொண்டாள் கனிமொழி. அருகில் ஒரு ஆண்மகன் இருந்தான். அப்படி இருக்கையில் எப்படி இவர்களால் இப்படி நடந்துக் கொள்ள முடிந்தது என்று வருந்தினாள். அதே சமயம் அந்த ஆண் மகனின் மீதும் அவளுக்கு கோபம் வந்தது. ' உன் வீட்டில் ஒரு பெண் இல்லையா.? ஒரு தங்கையோ அக்காவோ இல்லையா.? அவளுக்கு இது போல நடந்தால் இப்படித்தான் பற்களை காட்டியபடி நின்றிருப்பாயா.?' எனக் கேட்க தோன்றியது. அதே சமயம் ' பெண்கள் இவர்களே ஒரு பெண்ணான எனக்கு எதிரியாக இருக்காங்க.. இதுல அவனை சொல்லி என்ன பிரயோஜனம்.?' என்றும் நினைத்தாள்.

"பார்றா.. காய்க்காத ஆம்பள மரமா இருந்தாலும் வெட்கம் மானமெல்லாம் இருக்கும் போல.." என்ற சுப்ரியா டாப்பின் மேலிருந்த கையை எடுத்துக் கொண்டாள்.

"உன்னை இப்படியே விட்டா ரொம்ப கெட்டுப் போயிடுவ.. வா.." என்று அவளின் கையை பிடித்துக் கொண்டு அருகே இருந்த காலி வகுப்பறை ஒன்றை நோக்கி நடந்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN