அத்தியாயம் 49

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வெளியே இருள் சூழ ஆரம்பித்தது. புகை மண்டலமாய் காட்சியளித்த ஜன்னலை வெறித்தபடி அமர்ந்திருந்தார் காத்தவராயன்.

உள்ளே குளிர் தாக்கியது. ஹீட்டரை அதிகம் செய்தவர் எழுந்து சென்று தேனீர் தயாரித்தார். சுட சுட எடுத்து வந்து பருகினார்.

மனதுக்குள் நெருடிக் கொண்டே இருந்தது. "அமைதியா இரு.." என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டார்.

தேநீரை முழுதாய் பருகினார். பருகினார் என்பதை விட வாய்க்குள் கொட்டிக் கொண்டார் என்றுச் சொல்லலாம்.

பொறுக்க முடியாமல் எழுந்தார். வெளியே வந்து கதவை திறந்தார். வாசலில் தன்னை தானே அணைத்தபடி நின்றிருந்தாள் காந்திமதி.

"சாக வேற இடம் கிடைக்கலையா.?" எனக் காய்ந்தார். பதில் சொல்லவில்லை அவள்.

"உன்னை தெரியாம லவ் பண்ணிட்டேன்.. இதுக்கு மேல ஏமாற விரும்பல.. போய் தொலை‌.." என்றவர் கதவை சாத்தினார்.‌ கதவின் மீதே சரிந்தார். தரையில் அமர்ந்தார்.

"ஏன் காத்தவராயா.. நம்மோடது களவின் வழி வரும் காதலா.?" காத்தவராயனின் மடியில் படுத்துக் கொண்டிருந்த காந்திமதி கேட்டாள்.

அவளின் இதழை வருடியவன் "நீ என்ன பேர் வேணாலும் வச்சிக்க.. ஆனா என்னை பொறுத்த வரை காதல்ன்னாவே புனிதம்தான். அது கற்பின் வழி வந்தா என்ன.? களவின் வழி வந்தா என்ன?" எனக் கேட்டான்.

"நீ எப்ப எங்க வீட்டுல வந்து பொண்ணு கேட்ப.?" என்றவளின் உதட்டில் சிறு முத்தமிட்டவன் "நாளைக்குன்னாலும் எனக்கு சம்மதம். உனக்கு எப்ப சம்மதம்ன்னு சொல்லு.." என்றான்.

"என் அக்காவுக்கு கல்யாணம் ஆன பிறகு நாம பண்ணிக்கலாம்.." என்றவள் அவனின் மீசையை தொட்டு‌ தடவினாள்.

"என்னை எவ்வளவு பிடிக்கும் உனக்கு.?"

"ரொம்ப.." என்றவள் அவனின் கழுத்தை அணைத்த காட்சி இப்போதும் காத்தவராயனின் நினைவில் இருந்தது.

'எப்படி ஏமாந்து போயிருக்கேன்.. காதலின் அடிப்படையான நம்பிக்கை கூட இல்லாதவளுக்காக இத்தனை வருசம் அனாதையா வாழ்ந்திருக்கேன்..' புலம்பியவர் எழுந்து நின்றார். படுக்கையறை நோக்கி நடக்க இருந்தவர் தன்னை தானே கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் கதவை திறந்தார்.

காந்திமதி அதே நிலையில் நின்றுக் கொண்டிருந்தாள். பற்களை கடித்தபடி சென்றவர் அவளை இழுத்துக் கொண்டு உள்ளே வந்தார். ஹாலில் அமர வைத்தவர் கனமான போர்வையை கொண்டு வந்து அவளுக்குப் போர்த்தி விட்டார். ஜில்லென்று இருந்த அவளின் கைகளில் தேய்த்து விட்டார். தனது கைகளை தேய்த்து அவளின் கன்னத்தில் வைத்து செயற்கை சூடு தந்தார்.

கொதிக்க கொதிக்க தேனீரை வைத்து கொண்டு வந்தார். அவளின் நடுங்கும் விரலை கண்டு எரிச்சலடைந்தவர் அவளுக்கு தேனீரை குடிக்க செய்தார். அவள் குடித்து முடித்த டம்ளரை கொண்டு போய் சுத்தம் செய்து வைத்து வந்தார்.

அவளை தூக்கிக் கொண்டு படுக்கையறை சென்றார். அவளுக்கு முழுதாய் போர்த்தி விட்டார். அவளை அணைத்தபடி உறங்க ஆரம்பித்தார். அவரின் கை அணைப்பில் இருந்த காந்திமதி அவரின் சட்டையை இறுக்க பற்றிக் கொண்டிருந்தாள். அப்படியே உறங்க முயன்றாள்.

சங்கவி தந்தையின் அருகில் தலை வைத்து படுத்திருந்தாள். உறக்கமில்லை. ஏதோ சில நினைவுகள். அதில் மூழ்கி இருந்தாள்.

தன்னருகே ஏதோ அசைவை உணர்ந்து எழுந்தாள். மோகனின் கை விரல்கள் அசைந்துக் கொண்டிருந்தது.

"அப்பா..." ஆனந்த கண்ணீரோடு அழைத்தாள்.

மோகன் கண்களை மெள்ளமாக திறந்தார். சங்கவிக்கு அழுகை பொங்கியது. மருத்துவரை அழைத்து வர ஓடினாள்.

மருத்துவர் முழுதாய் சோதித்தார்.

"இனி பிரச்சனை இல்ல.." என்றார்.

சிரமப்பட்டு எழுந்த அமர்ந்திருந்தார் மோகன்.

"அப்பா.." அவரை அணைத்தபடி அழுதாள்.

அவளின் முதுகை வருடி தந்தார். பழையவை அனைத்தையும் நினைவில் கொண்டு வருவதற்கு சற்று சிரமமாக இருந்தது. அதற்குள் ஆதீரன் அங்கே வந்து விட்டான். அவனை கண்டதும் ஆத்திரத்தோடு எழுந்து நேராய் அமர்ந்தார்.

"தயவு செஞ்சி வெளியே போங்க.." என்று கத்தினார்.

"அப்பா.." சங்கவியின் அழைப்பில் திரும்பினார்.

"அவர் என் புருசன்ப்பா.." என்றவளை நம்ப முடியவில்லை அவரால்.

"உன் கழுத்தை நெரிச்சிருக்கான். அவன் உனக்கு புருசனா.?" என்றார் பழைய நினைவில்.

சங்கவி தயக்கமாக ஆதீரனைப் பார்த்தாள்.

"நீங்க கோமாவுக்கு போய் மூனு மாசம் ஆகுது. அவராலதான் இன்னைக்கு நீங்க குணமாகியிருக்கிங்க.. இவர் மேல தப்பு இல்லப்பா.." என்றவளுக்கு அதை சொல்லும்போது நெஞ்சு கரித்தது.

"உன் அம்மா.?" என்றவர் கீழே இறங்க முயன்றார்.

சங்கவி விம்மியழுதாள். அவளின் அழுகை புதிராக இருந்தது அவருக்கு.

"அம்மா இறந்துட்டாங்கப்பா.." என்றவளின் தோளை பற்றியவர் "என்ன சொல்ற.?" எனக் கேட்டார்.

"அந்த ஆக்ஸிடென்ட் நடந்ததுல அம்மா ஸ்பாட் அவுட்.." என்றாள் அழுகையின் இடையே. நெஞ்சம் உடைந்து போனது அவருக்கு‌. சிலையாய் அமர்ந்து விட்டார். இத்தனை ஆண்டுக்கால மணவாழ்க்கை இப்போது இல்லாமல் போனதை அவரால் நம்ப முடியவில்லை. அவரின் மறுபாதியாக இருந்தவள் இனி இல்லை என்பது நெஞ்சத்தை வதைத்தது. வாழ்க்கையின் எதிர்காலம் கேள்விக்குறியாய் மாறியது போலிருந்தது.

"உங்களை மட்டும்தான் என்னால காப்பாத்த முடிஞ்சது.." என்ற மகளை பார்த்தார். "என்னை காப்பாத்த மறுபடியும் இவனுக்கு அடிமையா மாறிட்டியா.?" எனக் கேட்டார். "இதுக்கு பதிலா நீ என்னை அப்படியே சாக விட்டிருக்கலாம்.."

ஆதீரன் உதட்டை கடித்தபடி கதவோரத்திலேயே நின்றான். என்ன சொல்வதென்று தெரியவில்லை. எதிராய் நிற்கையில் எது வேண்டுமானாலும் பேசிவிடும் அதே மனம் இப்போது அவரின் மகளை காதலித்த வேளையில் திருப்பி பேச வார்த்தையாக கூட வரவில்லை.

"இவன் ஒரு சைக்கோன்னு தெரிஞ்சே இவன்கிட்ட மறுபடியும் வாழ போயிருக்க.. போதும். இதோடு‌ முடியட்டும். நீ திரும்பிடு. கொஞ்சமாவது மனிதாபிமானத்தோடு நடந்துப்பான்னு நம்பி உன்னை தெரியாம இவன்கிட்ட விட்டுட்டேன். இனி முடியாது. வந்துடு. நாம போலிஸை பார்த்துக்கலாம்.." என்றார்.

"இ.. இல்லப்பா.. நான் இவரை ல.. லவ் பண்றேன்.." என்றாள் தலைகுனிந்தபடி. ஆதீரன் அவளை ஆச்சரியத்தோடு பார்த்தான். அவளை அணைத்துக் கொள்ள சொல்லி ஏங்கியது மனம். அவள் சொன்ன வார்த்தைக்காக அவளை கொண்டாட சொன்னது.

"உன் அக்காவும் அந்த கருமத்தை பண்ணிட்டுதான் நம்மை இப்படியொரு ராட்சசன்கிட்ட சிக்க வச்சா.. இப்ப நீ பாக்கியா.?" என்றார் வேதனையாக.

"அ‌.. அக்கா இறந்துட்டாப்பா.." தயங்கி‌ தயங்கி சொன்னாள்.

மோகன் நம்பிக்கை இல்லாமல் பார்த்தார். "என்ன சொல்ற நீ.? எப்படி.?" எனக் கேட்டார்.

"அ.. அக்கா ஓடி போகல.. இவங்க அம்மாதான் மிரட்டி கடத்தல்காரன் மூலமா அவளை கடத்தி அனுப்பிட்டாங்க.. இவருக்கும் எனக்கும் மேரேஜ் ஆயிடுச்சிங்கற சேதி கேட்டு சூஸைட் பண்ணி செத்து போயிட்டாளாம்.."

மோகன் எழுந்து நின்றார்.

"பொய் சொல்லலதானே நீ.?" தயக்கமாக கேட்டார்.

"அக்கா செத்துட்டாப்பா.." கதறி அழுதபடி சொன்னாள். ஆதீரன் கலங்கும் விழிகளை மறுபக்கம் திரும்பித் துடைத்துக் கொண்டான்.

தலையை பிடித்தார் மோகன். மனைவியும் மகளும் இறந்தார்கள் என்ற செய்தி அவரை துயரத்தில் ஆழ்த்தி விட்டது.

வெகுநேரம் அப்படியே நின்றிருந்தார்.

"போனது போகட்டும் விடு.. இறந்தவர்களை என்னால மட்டும் திரும்ப கொண்டு வரவா முடியும்.? தனிமை கிடைக்கும் பொதெல்லாம் அழுதுதானே ஆகணும்.." என்றார். மகளின் தலையை வருடி விட்டார்.

"இந்த ராட்சசன் கையில் இருந்தும் நீயாவது பத்திரமா‌ இருந்தியே.. சரி வா.. நாம நம்ம வீடு போகலாம்.." என்றார்.

அதிர்ச்சியோடு அப்பாவை பார்த்தாள்.

"அப்பா.. நா.. நான் இவரோட மனைவி.." என்றவளின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறையை விட்டார். நெடுநாள் மயக்கத்திலிருந்து எழுந்திருந்தவர் என்பதால் அடி அவ்வளவா வலிக்கவில்லை. ஆனால் தன் தந்தை அடித்து விட்டாரே என்று மனம் கலங்கி போனாள் சங்கவி.

ஆதீரன் அருகில் வந்தான். மனைவியின் தோளை அணைத்தான். அவள் வாங்கிய அடி அவனுக்கு வலியை தந்துவிட்டது.

"மரியாதையா வெளியே போங்க.. இல்லன்னா நான் போலிஸ்க்கு போன் பண்ணுவேன்.." என்றவரை கெஞ்சலாக பார்த்தாள் சங்கவி.

"இவர் திருந்திட்டாருப்பா.." என்றவளை வெறித்தவர் "உன் அம்மாவையும் உன் அக்காவையும் உன்னால் திருப்பிக் கொண்டு வர முடியுமா.?" எனக் கேட்டார் ஆத்திரத்தோடு.

தலை குனிந்தபடியே மறுப்பாக தலையசைத்தாள் சங்கவி.

"நீங்க வெளியே போங்க.. இப்பவே.." என்றார் ஆதீரனிடம்.

சங்கவி கணவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.

"போ.. போங்க ப்ளீஸ்.." என்றாள். ஆதீரன் நம்பிக்கையில்லாமல் பார்த்தான்.

"என் அப்பா இப்பதான் எழுந்திருக்காரு.. அவரோட நிலையில் இருந்து ஒரு நிமிசம் யோசிச்சிப் பாருங்க.. அவரோட கோபம் தீரும் வரைக்காவது.. ப்ளீஸ் போங்க.." என்றாள் கெஞ்சலாக.

அவளை சில நொடிகள் பார்த்தவன் எதுவும் பேசாமல் வெளியே நடந்தான்.

இரண்டு மணி நேரங்கள் கடந்து விட்டது. தங்கள் வீட்டின் கதவை திறந்தார் மோகன். வீடு சுத்தமாக இருந்தது. சங்கவி அடிக்கடி வந்து சுத்தம் செய்து போயிருந்தாள்.

உள்ளே நுழைந்தவர் மாலையிட்ட புகைப்படத்தோடு இருந்த மனைவியையும் மகளையும் விழிகள் கலங்க பார்த்தார். கதறி அழ சொன்னது இதயம்.

அப்பாவுக்காக பத்திய சாதம் சமைக்க முயன்றாள் சங்கவி. கேஸ் அடுப்பை பற்ற வைத்தாள். பாத்திரத்தை வைத்தாள். தண்ணீரை எவ்வளவு ஊற்றுவது என்று தெரியவில்லை. அரிசி எவ்வளவு எடுப்பது என்றும் தெரியவில்லை. இந்த மூன்று மாதத்தில் காய்கறி நறுக்கவும் சுடு தண்ணீர் வைக்கவும் தேனீர் தயாரிக்கவும்தான் கற்றுக் கொண்டிருந்தாள் அவள்.

என்ன செய்வது என்று தவித்தவளின் காதில் ஆதீரனின் கார் சத்தம் கேட்டது. ஓடி வந்து வாசலை பார்த்தாள். ஆதீரனின் கார் சாலையில் நின்றிருந்தது. காரிலிருந்து பவளம் இறங்கினாள். சங்கவியின் முகத்தை சில நொடிகள் பார்த்த ஆதீரன் காரை திருப்பினான். அங்கிருந்துப் போனான்.

"அக்கா.." பவளத்தை தயக்கமாக வீட்டுக்குள் விட்டாள். ஹால் நாற்காலியில் அமர்ந்தபடி புகைப்படத்திலிருக்கும் மனைவியின் முகத்தை வெறித்துக் கொண்டிருந்த மோகன் திரும்பிப் பார்த்தார்.

"உங்களுக்கு சமைக்க தெரியாதுன்னு நான் வந்தேன்ம்மா.. கையை ஏதும் சுட்டுக்கலதானே.?" எனக் கேட்டவள் சங்கவியின் கையை சோதித்தாள். சுட்டு வைத்திருக்கவில்லை. இப்போதுதான் அவளுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது

பவளம் சமைக்க சென்றாள். சங்கவி தந்தையின் முன்னால் வந்து அமர்ந்தாள்.

"உன் அக்கா இறந்து போனதுக்கு உன்கிட்ட கருணை காட்டிட்டு இருக்கானா அவன்.?" கட்டைக் குரலில் கேட்டார். அப்படி ஒன்று இருக்கிறதோ இல்லையோ, ஆனால் அப்படி நினைக்க பிடிக்கவில்லை அவளுக்கு. அவனின் காதலை முழுதாய் நம்ப நினைத்தாள். தன் காதலை முழுதாய் தர நினைத்தாள்.

"அ.. அவரை எனக்கு பிடிச்சிருக்குப்பா.." என்றவளின் கண்களைப் பார்த்தார்.

விழிகளை மூடியபடி தலையை இருக்கையில் சாய்த்தார்.

"சொரணை கெட்டுப் போச்சி உனக்கு.." என்றார்.

சங்கவியின் கண்கள் கலங்கியது. அப்படி கெட்டுப் போயிருந்தாலும் சம்மதம், ஆனால் அதை யாரும் நினைவுப்படுத்த கூடாது என்று ஆசைப்பட்டாள்.

"அவன் வேணாம்.. அவன் நம்ம குடும்பத்தோட சாபம். அவனை விலக்கி தள்ளுறதுதான் நமக்கு நல்லது.." என்றார் ஒரு முடிவோடு.

அவரோடு இப்போது பேசுவது சரியென்று தோன்றவில்லை அவளுக்கு. பொறுமையாக சொல்லிப் பார்க்கலாம் என நினைத்தாள்.

இரவு உணவை பவளம் பரிமாறினாள்.

"சம்பளம் நானே தரேன்.." என்றார் மோகன். பவளம் ஏதும் பேசவில்லை.

சங்கவியால் உண்ண முடியவில்லை. ஆதீரன் என்ன செய்கிறானோ என்ற யோசனை மட்டுமே மனதில் இருந்தது. அவனை தேடி ஓட சொன்னது மனம். ஆனால் இப்போது அப்படி செய்தாள் அது தனது தந்தைக்கு செய்யும் துரோகமாக போய் விடும் என்று அறிவாள் அவள். அதனால் அமைதி காத்தாள்.

"அவனை டைவர்ஸ் பண்ணிடு.." என்றார் மோகன் மறுநாள் காலையில்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN