காதல் கணவன் 33

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காலி வகுப்பறைக்குள் கனிமொழியை இழுத்து வந்து சுப்ரியா "அந்த கதவையும் ஜன்னலையும் லாக் பண்ணுங்க.." என்றாள்.

தோழிகள் கதவை தாழிட்டனர். கனிமொழிக்கு கை கால்கள் நடுங்க ஆரம்பித்தது.

யாராவது வந்தால் நலமாய் இருக்கும் என்று மனதோடு கடவுளை வேண்டிக் கொண்டாள்.

கதவின் மீது முதுகு சாய்ந்து நின்றிருந்த வசந்தகுமார் கையை கட்டியபடி கனிமொழியை வெறித்தான்.

"இவ டிரெஸ்ஸை கழட்டுங்க.." என்ற சுப்ரியா எதிரே இருந்த மேஜையின் மீது ஏறி அமர்ந்தாள்.

"தெரியாம இடிச்சிட்டேன். சாரி சுப்ரியா. என்னை விட்டுடு.. ப்ளீஸ்.." கெஞ்சியவளை கேவலமாக பார்த்தாள் அவள். தோழிகளை பார்த்து கண் சைகை காட்டினாள். "டாப்பை தாண்டி பார்க்க கூடாதுன்னு மறைச்சா இல்லையா.? இப்ப என்ன செய்றான்னு பார்க்கலாம்.." என்றாள் திமிரோடு.

பயத்தோடு சுவரோடு ஒண்டிக் கொண்டாள் கனிமொழி.

"என்னை விட்டுடுங்க.. எங்க வீட்டுக்கு தெரிஞ்சதுன்னா உங்க மேல போலிஸ் கம்ப்ளைண்ட் தந்துடுவாங்க.." என்றவள் மேனகாவும் ரத்னாவும் அருகில் வருவது கண்டு தரையோடு முட்டிக் காலை கட்டியபடி அமர்ந்து விட்டாள். தன்னால் முடிந்த அளவுக்கு கைகளால் தன்னை அணைத்துக் கொண்டாள்.

"பாருப்பா.. தனக்குதானே லாக் போட்டுக்கறாங்க மேடம்.." என்ற சுப்ரியா மேஜையின் மீதிருந்து கீழே குதித்தாள். தனக்கு பின்னால் இருந்த கரும்பலகையின் அருகே வந்தாள். கரும்பலகை பகுதியின் மேல் திட்டில் இருந்த பிரம்பை கையில் எடுத்தாள். பிரம்பை ஆட்டியபடியே கனிமொழியை நோக்கி நடந்தாள்.

கனிமொழிக்கு உடம்பு மொத்தமும் நடுங்கியது. பயத்தில் வியர்த்து ஊற்றியது. இந்த நேரத்திற்கு ஒரு ஆசிரியரும் இங்கே வர மாட்டார்கள் என்று அவளுக்கும் தெரியும். அதெப்படி தான் மட்டும் இப்படியொரு இக்கட்டான சூழலில் இவர்களிடம் மாட்டுகிறோம் என்று அவளுக்கு சுத்தமாக தெரியவில்லை. தனது விதியே இதுதான்னோ என்று கூட நினைத்தாள்.

பிரம்படி காலின் மீது சுளீரென்று விழுந்தது. "அம்மா.." கத்தியவள் வலி தாங்க முடியாமல் விம்மி அழுதாள்.

"எங்ககிட்டயே சீன் காட்டுறியா நீ.?" எனக் கேட்டவள் கனிமொழியின் தோளில் ஒரு அடியை தந்தாள். அங்கேயும் விசையாய் விழுந்து விட்டது அடி. வலி அதிகமாக இருந்தது. கண்ணீர் தாடையை தாண்டி சுடிதாரை நனைத்தது.

"என்னை விட்டுடுங்க ப்ளீஸ்.." என்று கெஞ்சினாள்.

"டாப்பை கழட்டு.. நீ பொம்பள மரமா மாற சான்ஸ் இருக்கா இல்லையான்னு பார்த்துட்டு விட்டுடுறோம்.." நக்கலாக சொன்னாள் சுப்ரியா.

மறுப்பாக தலையசைத்தாள் கனிமொழி. உயிர் போனாலும் அவளால் இவர்களிடம் உடம்பை காட்ட முடியாது. இன்று அடி வாங்கி சாக போகிறோம் என்று தெளிவாக புரிந்துக் கொண்டாள். தனக்கு நடந்த ராகிங் பற்றி அம்மாவிடம் சொல்லாமல் மற்றவர்களிடம் ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கலாமோ என்று இப்போது நினைத்தாள். பிரபல பள்ளி மாணவி மர்மமாய் மரணம் என்ற செய்தித்தாளின் தலைப்பு மூளைக்குள் வந்து போனது.

"காய்க்காத பூக்காத மரம்.. ஆனாலும் பாரு வெட்கம் மானம் மட்டும் எப்படி டன் கணக்கா இருக்குன்னு.." என்ற மேனகா இடுப்பில் கையை பதித்தபடி தேன்மொழியின் முன்னால் வந்து நின்றாள்.

"நீ இப்ப டாப்பை கழட்டலன்னா அப்புறம் நாங்க கிழிச்சி எறிஞ்சிடுவோம். அப்புறம் நீ இங்கிருந்து வெளியே போகவே முடியாது. நாங்களா பாவம் பார்த்து வேற டிரெஸ் எடுத்துட்டு வந்து தரும்வரை நியூடா இங்கேயே இருக்கணும் நீ.." என்றாள்.

குலுங்கி அழுதாள் கனிமொழி. என்ன செய்வதென்று தெரியவில்லை.

மேனகா கனிமொழியின் முதுகு புறம் இருந்த டாப்பின் பகுதியில் கையை வைத்தாள். பிடித்து இழுக்க இருந்தாள். அதே நேரத்தில் "யாரோ வராங்க.." என்றான் வசந்தகுமார்.

சுப்ரியா பிரம்பை எடுத்துச் சென்று இருக்கும் இடத்திலேயே வைத்தாள். மற்றவர்கள் அவசரமாக ஜன்னல்களை திறந்து விட்டனர். வசந்தகுமார் கதவை திறந்தான். அதே நேரத்தில் அந்த கதவை தட்ட இருந்தார் ஒரு ஆசிரியை. திறந்த கதவையும் அங்கிருந்தவர்களையும் குழப்பமாக பார்த்தவள் "எல்லோரும் இங்கே என்ன பண்றிங்க.?" எனக் கேட்டபடியே அங்கிருந்த செல்பை நோக்கி சென்றார்.

"கனிமொழிக்கு தலைவலின்னு சொன்னா மேம்.. அவளை சமாதானம் செஞ்சிட்டு இருந்தோம்.." என்று பொய் பரிவோடு சொன்னாள் ரத்னா.

ஆசிரியை கனிமொழியை பார்த்தார்.

"தலைவலின்னா ஸ்கூல் நர்ஸ்கிட்ட போக வேண்டியதுதானே.? இங்கே உட்கார்ந்து அழுதா சரியா போயிடுமா.?" எனக் கேட்டவர் அங்கிருந்த மற்றவர்களை பார்த்தார். "அவளுக்குதான் வலி.. நகர முடியல. நீங்களாவது இவளை நர்ஸ்கிட்ட கூட்டிப் போயிருக்கலாம் இல்லையா.?" எனக் கேட்டார்.

அனைவரும் மௌனமாக இருந்தனர்.‌

தான் தேடி வந்த நோட்டை தேடி எடுத்துக் கொண்ட ஆசிரியை "எழுந்து வா கனிமொழி.." என்றார். அவசரமாக எழுந்தாள். ஆசிரியை தொடர்ந்து ஓடினாள்.

விம்மியபடியே கன்னத்தை துடைத்துக் கொண்டு வந்தவளை பரிவோடு பார்த்தார் அவர். "ரொம்ப தலைவலியா.? நான் உன் பேரண்ட்ஸை வர சொல்லட்டா.?" எனக் கேட்டார்.

"வேணாம் மிஸ்.. நான் வீட்டுக்கு போயிடுவேன்.." என்றவள் அழுகையை அடக்க முயன்றாள். ஆனால் பயம்தான் சட்டென்று மறையவில்லை.

பாலாஜி பைக்கை நிறுத்திவிட்டு இறங்கினான். வீட்டிற்குள் நடக்க இருந்தவனை மேகமில்லாத நீல வானை போல பளிச்சென்றிருந்த முதுகு ஒன்று வரவேற்றது. கழுத்தில் ஒரு கயிறும் இடுப்பின் மேலே ஒரு கயிறும் அந்த ரவிக்கையை அவளின் உடம்போடு இணைத்து வைத்திருந்தது. உடம்பை வளைத்தபடி எதிரே இருந்த புகைப்படம் ஒன்றின் தூசியை துடைத்துக் கொண்டிருந்தாள் கீர்த்தனா.

சுற்றி பார்த்தான். ஹாலில் ஒருவரையும் காணவில்லை.

"ஏய்.." அவனின் அழைப்பில் திரும்பினாள். ரவிக்கையின் முன் பகுதியும் கொஞ்சமாக கீழிறங்கிதான் இருந்தது. கீழிறங்கி இருப்பது போலதான் அவனுக்கு தெரிந்தது. பற்களை கடித்தான். அருகே சென்று அவளின் கையை பற்றினான்.

"என்ன கருமம் இது.?" எனக் சீறினான்.

"எது.?" என்றவள் தனது ரவிக்கையை சுட்டிக் காட்டினாள். "இதுவா.?" எனக் கேட்டாள்.

பாலாஜி பதில் சொல்லாமல் முறைத்தான். அவளை இழுத்துக் கொண்டு அருகே இருந்த அறைக்கு சென்றான்.

"குடும்பம் நடக்கற வீடா.? இல்ல வேற ஏதாவது இடமா இது.? இப்படி திரியற.." என்றான் ஆத்திரத்தோடு.

அவனிடமிருந்து கையை விலக்கிக் கொண்டாள். இடுப்பில் கைகள் இரண்டையும் ஊன்றியபடி அவனை பார்த்தாள்.

"இந்த டிரெஸ் இந்த வீட்டுல இருக்கும் யாருக்கும் உறுத்தல.. ஏனா இங்கிருக்கும் எல்லோருக்கும் மகள், பேத்தி, தங்கச்சி.. உனக்கு உறுத்தும். கண்டிப்பா உறுத்தும். ஏனா நான் உனக்கு பொம்பளை ஆச்சே. பொண்டாட்டியும் ஆச்சே.. என்னை பார்த்து உனக்கு ஏதாவது தோணினா உன்னோடு வச்சிக்க.. நீ ஒதுக்கி‌ வச்சன்னு நான் நல்லா டிரெஸ் பண்ண கூடாது, செக்ஸியா மேக்கப் பண்ண கூடாதுன்னு சொல்லாத.." என்றாள்.

பாலாஜியின் முகம் கறுத்து விட்டது.

"ஸோ.. உனக்கு தேவை செக்ஸ் மட்டும்தான் இல்ல.?" எனக் கேட்டவனை சிரிப்போடு பார்த்தாள். சிரித்தாலும் விழிகள் கண்ணீரை சிதற செய்து விட்டது.

"அதுக்காகதானே நீ என்னை மயக்கிட்டு இருக்க.? ஒரு மூனு மாசத்துக்கு உன்னால விலகி இருக்க முடியாது.. அப்படிதானே.?"

மூச்சை இழுத்து விட்டுக் கொண்டாள். "நீ அப்படி நினைச்சா எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது பாலா.. என் மனசுல இருந்த லவ் எப்பவோ என்னை ஏமாத்திட்டு போயிடுச்சி. செக்ஸ் மட்டும்தான் வேணும்ன்னு நான் சொல்லல.. ஆனா நீ இந்த மூனு நாலு வாரமா என்கிட்ட அப்படிதான் நடந்துக்கிட்ட.. லவ்ன்னுதான் கொஞ்சம் முன்னாடி வரைக்கும் நானும் நினைச்சேன். ஆனா உனக்கு தேவை அது மட்டும்தான். உனக்கு தேவைன்னு வரும்போது யூஸ் பண்ணுவ.. அப்புறம் எந்த ஒரு காரணமும் சொல்லாம தூக்கி போட்டுடுவ.. எனக்காக கொஞ்சமும் இறங்கி வராத உனக்கு எப்பவும் என் மனசோட பீலிங் புரியாது. மேரேஜ் ஆனதும் அப்படி உருகின.. ஆனா இப்ப என்னை பார்த்தா கேவலமா தெரியுது உனக்கு.. உன்னை மயக்க நான் இந்த டிரெஸ் போடல.. என்னை பார்த்ததும் உனக்குள்ள எந்த ஹார்மோனாவது வொர்க் செஞ்சா அந்த ஹார்மோனுக்கு காரணமான உன்னை கொளுத்திக்க.. என்னை டிஸ்டர்ப் பண்ணாத.." என்றவள் அவனை தாண்டி போனாள். பறந்துக் கொண்டிருந்த முந்தானை அவனின் முகத்தில் மோதி நழுவியது. அவனின் கழுத்தில் இருந்த சங்கிலியில் மாட்டிக் கொண்டது.

கீர்த்தனா திரும்பிப் பார்த்து முறைத்தாள். அவனின் அருகே வந்தவள் தனது முந்தானையை விடுவித்துக் கொள்ள முயன்றாள். அவளின் முதுகையும் கழுத்தையும் நெருக்கத்தில் பார்த்தவனுக்கு அவனையும் மீறி ஏதேதோ தோன்றியது. அவளருகில் அமைதியாக நிற்பது சிரமமாக இருந்தது. அவளை அணைத்துக் கொள்ள சொல்லி கைகள் பரபரத்தது. அவனின் மொத்த உடம்புமே பரபரத்தது. அவளின் வாசம் கொன்றது. நெற்றியில் தவழ்ந்து கொண்டிருந்த முடிகள் அவனை பழி வாங்கியது. சிறு காதில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்த தோடுகள் அவனை காட்டி பழிப்பு காட்டுவது போலிருந்தது. அவளின் ஒற்றைக் கல் மூக்குத்தி என்னை முத்தமிட்டுப் பார் என்று அழைத்துப் பார்த்தது. சிவப்பு சாயம் பூசியிருந்த அவளின் உதடுகள் அவனை யோசிக்க கூட விடாமல் கால சக்கரம் ஒன்றிற்குள் சிக்க வைத்தது.

முந்தானையை விடுவித்துக் கொண்டவள் அவனை விட்டு விலகி நடந்தாள். நடக்க விடவில்லை அவன். அவளின் கையை பற்றி தன்னருகே இழுத்தான். நெஞ்சில் வந்து விழுந்தவளின் கன்னங்களை பற்றினான். அவளின் இதழ்களை நோக்கி குனிந்தான்.

முகத்தை திருப்பிக் கொண்டாள் கீர்த்தனா.

"கீர்த்தனா.." அதட்டினான் பாலாஜி.

"என்னை அவமானப்படுத்தாத.." என்றவளை கோபத்தோடு வெறித்தான்.

"நீ தரும் முத்தத்தை வாங்கிக்கறது போல ஒரு கேவலம் எதுவும் கிடையாது எனக்கு.." என்றவளை விலக்கி‌ தள்ளினான்.

"போயிடு.." என்றான் கைகளை இறுக்கியபடி. அவனை வெறித்தபடியே வெளியே நடந்தாள். அந்த அறையை தாண்டி பிறகு விழிகளை துடைத்துக் கொண்டாள். ஹாலின் டிவி அருகே இருந்த அவளின் போன் ஒலித்தது.

சமையலறையிலிருந்து வெளியே வந்தாள் வளர்மதி. "கனி இன்னமும் வீட்டுக்கு வராம என்ன பண்றா.?" என்று புலம்பியபடி வாசலை பார்த்தாள்.

"ஏன் சித்தி.?" என்றபடி முன்னால் வந்த பாலாஜியிடம் "எக்ஸாம் சீக்கிரம் முடிஞ்சிடும்மா.. மதியம் வந்துடுவேன்னு சொல்லிட்டு சாப்பாட்டு கூட எடுக்காம போனா.. இன்னமும் காணம்.." என்றாள் கவலையாக.

அதே நேரத்தில் போனை பேசி முடித்துவிட்டு வைத்த கீர்த்தனா "அவ எங்களோட வீட்டு வாசல்ல உட்கார்ந்திருக்கான்னு பக்கத்து வீட்டு அக்கா போன் பண்ணாங்க.." என்றாள்.

பாலாஜி அவசரமாக வெளியே ஓடினான். அவளுக்கு பிரச்சனை இல்லாமல் நிகழ்காலம் மறந்து, தன்னை தேடி அங்கே போயிருக்க மாட்டாள் என்று யூகித்துக் கொண்டவன் அவசரமாக பைக்கை இயக்கினான்.

அவன் செல்வதை வெறித்துக் கொண்டு நின்றிருந்த கீர்த்தனாவுக்கு எங்கள் வீடு என்று சொன்னது கூட வலியாகதான் மனதில் பதிந்திருந்தது.

தனது வீட்டின் முன் பைக்கை நிறுத்தினான் பாலாஜி. கேட் திறந்திருந்தது. வாசல் படியில் அமர்ந்தபடி கதவில் சாய்ந்திருந்தாள் கனிமொழி.

"கனி.." அருகே ஓடி அவளின் முகத்தை அள்ளினான். நிறைய அழுதிருக்கிறாள் என்பது அவளின் முகத்தை காணும் போதே தெரிந்தது.

"என்ன ஆச்சி.?" எனக் கேட்டவனை அணைத்துக் கொண்டாள்.

"பயமா இருக்கு பாலா.." என்றாள். மீண்டும் அழுதாள்.

அவளின் முதுகை வருடி தந்தான்.

"என்ன ஆச்சின்னு சொல்லும்மா.. யாராவது ஏதாவது சொன்னாங்களா.?" எனக் கேட்டான். முன்பெல்லாம் பள்ளியில் கிண்டல் செய்கிறார்கள் என்று அழுதபடி வருபவள் இப்போது ஏன் அழுகிறாள் என்று புரியவில்லை. அவளை கிண்டல் செய்ய இப்போது காரணமில்லையே என்று யோசித்தவனிடம் அவள் இதுவரையிலுமே உண்மையை முழுதாய் சொன்னதில்லை. கிண்டல் செய்கிறார்கள் என்பதை தாண்டி உடல் ரீதியாக பட்ட காயங்களை பற்றியோ, அவளுக்கு நேரும் அவமானகரமான செயல்களை பற்றியோ அவளை அவமானப்படுத்தும் தவறான வார்த்தைகள் பற்றியோ அவனிடம் சொன்னதேயில்லை.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN