அத்தியாயம் 51

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
குந்தவிக்கு அன்று இரவு காய்ச்சல் வந்து விட்டது. பயத்தில் அனத்திக் கொண்டிருந்தவளின் மனம் தாய் மடி வேண்டுமென்றுக் கேட்டது.

"எங்கம்மா இருக்க.? சாமியா போன நீ என் பக்கத்துலதான் இருக்கியா.?" என்று அரை மயக்கத்தில் உளறிக் கொண்டிருந்தாள்.

யஷ்வந்த் மருத்துவரை வர வைத்தான். ஊசி போட்டார்கள்.

வேலைக்காரர் கொண்டு வந்து தந்த கஞ்சியை அவனே அவளுக்கு ஊட்டி விட்டான்.

"இதை நான் பண்றேனே யஷு.." என்றபடி அருகே வந்தாள் தாரணி.

"வேண்டாம் தாரு.. நான் செய்றேன்.." என்றவன் குந்தவிக்கு தண்ணீரை தந்தான்.

"நானே சாப்பிட்டுக்கிறேன் சார்.." என்றவளிடம் மறுப்பாக தலையசைத்தான். "உன்னால முடியாமதானே நீயே சோர்ந்து போய் படுத்திருக்க.?" எனக் கேட்டவன் அவளின் உதடுகளை துடைத்து விட்டான்.

தாரணியால் பார்க்கவே முடியவில்லை. இன்னும் சில நொடிகள் நின்றால் அழுது விடுவோமோ என பயந்து வெளியே நடந்தாள்.

"போதும் சார்.‌." குந்தவி மறுத்தாள். "இன்னும் கொஞ்சம் குந்தவி.." என்றவனின் கெஞ்சல் குரலில் இதயம் வெந்தது வாசல் தாண்டி நடந்த தாரணிக்கு.

யஷ்வந்தின் பிடிவாதத்தால் கஞ்சியை முழுதாக குடித்து முடித்தாள். மாத்திரைகளை விழுங்கினாள்.‌ தலையணையில் சாய்ந்தவளுக்கு கழுத்து வரை போர்வையை போர்த்தி விட்டான்.

"உடம்பு நல்லாகிடும் குந்தவி.. உடம்பு வலிச்சாவோ, வேறு ஏதாவது சங்கடமா இருந்தாவோ எனக்கு போன் பண்ணு.." என்றவன் அவளின் தலையை தொட்டுப் பார்த்தான். காய்ச்சல் இருந்தது. கொஞ்சம் பயமாக இருந்தது அவனுக்கு.

"நல்லாகிடும் சார்.." என்றவள் நடுங்கிய கரங்களோடு பெட்சீட்டை இறுக்கிக் கொண்டாள். கண்களை மூட முயன்றாள்.

யஷ்வந்த் கவலையாக வெளியே நடந்தான்.

பத்து நிமிடங்கள் கடந்தது. குந்தவியால் உறங்க முடியவில்லை. அரை மயக்கத்தில் ஏதேதோ யோசனைகள் வந்தது. போனை எடுத்தாள். நடுங்கும் கரங்களோடு சூர்யாவுக்கு அழைத்தாள்.

"செல்லா.." இப்போதுதான் மீட்டிங் ஒன்றை முடித்து வெளியே வந்திருந்தான். லிப்டிலிருந்து அவள் தப்பித்ததற்காக கடவுளிடம் ஆயிரம் முறை நன்றிச் சொல்லியிருந்தான்.

"சாரி செல்லா.. என்னால உடனே போன் பண்ண முடியாம போனதுக்காக.. பத்திரமா இருக்கதானே.? எங்கேயும் காயம் இல்லையே.." என்றான் கவலையோடு.

"சூர்யா.." அவள் சோர்வாய் அழைக்கவும் திகைத்தான். "என்னாச்சி செல்லா.?" என்றான் அவசரமாக.

"லேசா ஃபீவர்.. ஊசி போட்டாச்சி சூர்யா.." என்றவளின் அருகே ஓடி வர சொன்னது அவனின் இதயம்.

"சாரி செல்லா.. நான் உன் பக்கத்துல இருந்திருக்கணும்.."

சிரித்தாள் அவள்.

"ஏன் சூர்யா.? ஒன் நைட் ஸ்டேன்ட்தானே நாம.?"

அவனுக்கு மனம் வலித்தது.

"அப்படி சொல்லாத செல்லா.. நான் உன்னை நேசிக்கிறேன்.." என்று அவன் சொன்னது கேட்டு சிரித்தவள் "எங்க அம்மா இறந்துட்டாங்க சூர்யா.." என்றாள்.

"சாரி செல்லா.." என்றவனுக்கு உண்மையிலேயே வருத்தமாக இருந்தது. அவன் சொல்லும் ஒவ்வொரு சாரியும் அவளுக்கு ஆச்சரியத்தை தந்தது.

"ஏன் தெரியுமா.? என்னாலதான்.." என்றவளின் விழிகளிலிருந்து கண்ணீர் வழிந்தது. "நான் ஒருத்தரை நேசிச்சேன்.." அவள் சொன்னதை கேட்டதும் கண்களை மூடிக் கொண்டான் அவன். ஏதோ கை நழுவுவது போலிருந்தது.

"நான் ரொம்ப நேசிச்சேன். உண்மையா என் மனசிலிருந்து நேசிச்சேன்.."

எதிரிலிருந்தவன் எதுவும் பேசவில்லை.

"ஆனா அவங்க அம்மாவுக்கு என்னை பிடிக்கல. அவருக்கு தெரியாம என்னை ப்ளாக்மெயில் பண்ணி என்னை ஊரை விட்டே விரட்டிட்டாங்க.." என்றவள் குலுங்கி அழுதாள்.

சூர்யா எச்சில் விழுங்கினான். என்ன செய்வதென்று தெரியவில்லை. தனக்கு உரிய ஒருத்தியின் கண்ணீர் எவனோ ஒருவனுக்கு சொந்தமாகிக் கொண்டிருக்கும் விசயம் அவனுக்கு ஆத்திரத்தைத் தந்தது‌.

"அவரும் என்னை நேசிச்சி இருப்பாருன்னு நம்பினேன் சூர்யா. ஆனா நான் ஊரை விட்டு ஓடிட்டேன்னு நம்பி என்னை பழி வாங்க என் தங்கச்சியை மேரேஜ் பண்ணிட்டாரு.." என்றவள் விம்மினாள்.

"அவ பாவம் சூர்யா. என்னாலதான் அவர்கிட்ட மாட்டிக்கிட்டா.. அவங்க அம்மா அவளை டார்ச்சர் பண்ணுவாங்க.. அவரும் என் மேல இருக்கும் கோபத்தை அவகிட்ட காட்டுவாரு.." நனைந்த கன்னங்களை தலையணையில் தேய்த்தாள்.

"அவர் என் தங்கச்சியை அடிச்சிட்டாரு. அவ ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆன சமயத்துல அவளை பார்க்க போன என் அம்மா ஆக்ஸிடென்ட்ல இறந்துட்டாங்க.." என்றவள் வாயை பொத்திக் கொண்டாள். சில நிமிடங்களுக்கு பேசவே முடியவில்லை. அழுதுக் கொண்டே இருந்தாள். எதிரில் இருந்தவன் அவளின் அழுகையை தொந்தரவு செய்யவில்லை.

"என் அப்பா இப்ப கோமாவுல இருக்காரு சூர்யா. என் அம்மா என்னால இறந்துட்டாங்க. என் அப்பா தங்கச்சி லைப்பையெல்லாம் நானே ஸ்பாயில் பண்ணிட்டேன்.."

"யாரோ பண்ண தப்புக்கு நீ எப்படி காரணமாவ செல்லா.?" என கேட்டவனின் குரலில் கரகரப்பு தெரிந்தது. அவனின் கண்ணீர் துளிகள் அவனது காலின் மீது விழுந்து கால்சட்டையை நனைத்திருந்தது. அவள் அழும் ஒவ்வொரு முறையும் தனக்கு ஏன் கண்ணீர் புறப்படுகிறது என்ற காரணம் அறியவில்லை அவன்.

"நான்தானே லவ் பண்ணேன். அப்ப நான்தானே காரணம் சூர்யா.?" என்று கேட்டு அழுதவள் "மூனு வருசம் லவ்ன்னு சுத்தி வந்த அவரே செகண்ட்ல மறந்துட்டு என்னை மறந்து என் தங்கையை மேரேஜ் பண்ணிட்டாரு.. நாம வெறும் ஸ்ட்ரேஞ்சர்ஸ்தானே சூர்யா.? பணத்துல எங்களை விட சில மடங்குதான் அவங்க வசதியானவங்க. அவங்க அம்மாவே பொருளாத ரீதியா நான் தரமில்லன்னு சொல்லி என்னை விரட்டிட்டாங்க. உங்க பொருளாதார நிலை ரொம்ப அதிகம் சூர்யா. எப்பவும் நான் உங்களுக்கு ஈக்வெல் ஆக முடியாது. நீங்க என்கிட்ட பொய் வார்த்தைகள் சொல்றிங்கன்னு நான் சொல்லல. ஆனா இது சரியா வராது சூர்யா. நீங்க எனக்காக டைம் வேஸ்ட் பண்ணாதிங்க.." என்றாள்.

சூர்யா நெற்றியை பிடித்தபடி இருக்கையில் சாய்ந்தான்‌. பெருமூச்சு விட்டுக் கொண்டான். நன்றாக திட்ட தோன்றியது. ஆனால் உடல் நல குறைவில் உளறிக் கொண்டிருப்பவளிடம் தன் கோபத்தை காட்டுவது சரியென்று தோன்றவில்லை அவனுக்கு.

"கண்ணை மூடி தூங்கு செல்லா.." என்றான்.

"தூக்கம் வரல சூர்யா. பாவம் என் தங்கச்சி.. எனக்கு தூக்கம் வேணாம். என் அம்மா வேணும்.." என்று தேம்பியவள் இறங்கும் கண்ணீரை புறங்கையால் துடைத்தாள்.

"ஒரு நிமிசம் லைன்ல இரு.." என்றவன் ஒரு நிமிடத்திற்கு பிறகு "செல்லா.." என்றான்.

"ம்ம்.." என்றவளிடம் "அம்மா இது செல்லா.. மை லவ்வர். அவங்க அம்மா இறந்துட்டாங்க. என்கிட்ட அம்மா வேணும்ன்னு கேட்டா. அதனால நான் உங்களுக்கு கான்பரன்ஸ் போட்டேன்‌. இப்ப அவளுக்கு காய்ச்சல். நீங்க அவளோட அம்மாவா பேசுங்க.." என்றான்.

தன் திடுக்கிடலை சமாளிக்கவே சில நொடிகளானது பூங்கொடிக்கு. 'அடப்பாவி மகனே.. இப்படியாடா அறிமுகம் செஞ்சி வைப்ப.? அப்பாவும் மகனும் என்னை நடுச்சபையில் நிறுத்தியேதான் பேச சொல்றாங்க..' என்று மகனோடு சேர்த்து கணவனையும் மனதுக்குள் திட்டியவள் "வ.. வணக்கம் செல்லா.." என்றாள்.

குந்தவி சிரித்தாள்‌. அவளின் சிரிப்புக் குரல் கேட்டு அவனுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

"என் பேர் குந்தவி. குந்தவி மோகன்.." என்றாள். அப்பாவின் பெயரை சொல்கையில் மறுபடியும் கண்ணீர் வந்தது‌.

"நல்ல பேர்.." என்ற பூங்கொடி "பீவர் எப்படி இருக்கும்மா.?" எனக் கேட்டாள்.

"நல்லாகிடும்மா.." என்றவள் "உங்க பையன் என் மேல காதல்ன்னு சொல்றாரு. இந்த காலத்துல நட்புக்கு கூட தகுதி தேவைப்படுது. இவர் ஏன் என்னை லவ் பண்ணணும்.? நீங்க உங்க மகனுக்கு புத்தி சொல்லுங்க.." என்றாள். தயங்கியவள் "முடிஞ்சா தர்ஷினியை அவருக்கு மேரேஜ் பண்ணி வைங்க.. இரண்டு பேருக்கும் ரொம்ப பொருத்தமா இருக்கும்.." என்றாள். இதை சொல்ல அவள் பட்ட சிரமம் அவளை விட சூர்யாவுக்கு தெளிவாக தெரிந்தது.

இடையிலிருந்த பூங்கொடிதான் என்ன சொல்வதென்று தெரியாமல் குழம்பினாள். 'லவ் பண்றேன்னு சொன்னானே.. இவ இப்படி சொல்றா.. கண்ணை கட்டி காட்டுல விட்ட மாதிரியான ஒரு சூழ்நிலையில் நிறுத்திட்டானே.. சூர்யா சுத்த மோசம்..' என நினைத்தவளிடம் "அவளுக்கு காய்ச்சல் வந்ததால அத்தோடு சேர்ந்து கொஞ்சமா பைத்தியமும் பிடிச்சிடுச்சி. அவ சொன்னதை பெருசா எடுத்துக்காதிங்க. அவ உங்க மருமக.. மகளும் அவளேதான். எனக்கு வேலை இருக்கு.‌ நான் போனை டேபிள் மேல வைக்க போறேன். நீங்க இரண்டு பேரும் பேசி முடிச்சிட்டு கட் பண்ணிக்கங்க.." என்ற சூர்யா போனை வைத்துவிட்டு பைலை கையில் எடுத்தான்.

இருவரும் சற்று நேரத்திற்கு மௌனமாக இருந்தனர்.

"அம்மா.." குந்தவியேதான் அழைத்தாள்.

"குந்தவிம்மா.."

"அவருக்கு நல்ல பொண்ணா பார்ப்பிங்கதானே.? எனக்கு சத்தியம் பண்ணி கொடுங்க.." என்றாள்.

பூங்கொடி நெற்றியில் அடித்துக் கொண்டாள். 'கடவுள் எப்படிதான் இவங்களை ஜோடியா போட்டாரோ.?'

"உனக்கு தூக்கம் வரலையாம்மா.?" கேள்வியை மடை மாற்றினாள்.

"வரலம்மா.. அம்மா இருந்தா நல்லலாருக்கும்ன்னு தோணுது.." என்றாள் சிறு விம்மலோடு.

"நான் தாலாட்டு பாடுறேன்.. தூங்குறியாம்மா.?" என கேட்டவள் அவள் பதில் சொல்லும் முன்பே சிறு குரலில் பாட ஆரம்பித்தாள்.

குந்தவி இதை எதிர் பார்க்கவில்லை. அன்பாக பாடினாள் பூங்கொடி. ஏதோ ஒரு தாலேலோ பாடல். அவளின் குரலில் கரைந்து விட்டவளுக்கு வரிகளை கவனிக்க முடியாமல் போய் விட்டது. கண்கள் தானாய் மூடிக் கொண்டது. உலகத்தை கொஞ்சம் கொஞ்சமாக மறந்தவள் அப்படியே உறங்கிப் போனாள்.

நேரம் கடந்தது. "குந்தவி.." அழைத்தாள் பூங்கொடி. எதிர் முனையிலிருந்து மூச்சு விடும் சத்தம் மட்டும் சீராக கேட்டது. அழைப்பை துண்டித்துக் கொண்டவள் மகனுக்கு செய்தியை அனுப்பிவிட்டு நிமிர்ந்தாள்.

படுக்கையிலிருந்த அலெக்ஸ் அவளை ஆளை அடிக்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தார். "என்ன லுக்.?" எனக் கேட்டாள் தனது நாணத்தை மறைத்துக் கொண்டு.

"ரொம்ப அழகா பாடுற.. கல்யாணமான புதுசுல பாடுறேன் கேளுங்கன்னு சொல்லி என்னை சுத்தி வருவ.. உன் மொழியை ஏத்துக்க முடியாமலும் நேரம் இல்லாமலும் பாட்டை கேட்காமலேயே விட்டுட்டேன். ரொம்ப வருசமா மிஸ் பண்ணிட்டேன் இல்ல உன்னை.?" எனக் கேட்டவருக்கு வருத்தம் மேலோங்கியது.

பூங்கொடி இருக்கையிலிருந்து எழுந்தாள். கணவரின் அருகில் வந்து அமர்ந்தாள். அவரின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்.

ஒற்றை கையால் அணைத்தார்.

"நீங்க விலகி ஓடும் போதெல்லாம் பீல் பண்ணியிருக்கேன்.. ஆனா நீங்க நிறைய விசயத்துல எனக்கு நெருக்கமாதான் இருந்திங்க. ஒவ்வொரு சின்ன விசயத்தையும் என்னை கேட்டுதான் செய்விங்க. இத்தனை வருசத்துல எனக்கு தேவையான அத்தனையையும் பார்த்து பார்த்து வாங்கி தந்திருக்கிங்க. என் மொழியை படு கேவலமா திட்டிக்கிட்டே கூட என்னை பாசமா பார்த்துக்கிட்டிங்க.. ஒரு சில நெருடலுக்காக விட்டுட்டு முழுசா போயிட முடியாது அலெக்ஸ்.." என்றவள் அவரின் கன்னத்தை வருடினாள். "நீங்க எப்ப பழையபடி நடமாடுவிங்கன்னு இருக்கு எனக்கு.. ரொம்ப பயந்துட்டு இருக்கேன்.." என்றாள் கலக்கமாக.

"அழ ஆரம்பிக்காத.." சிறு எரிச்சலோடு சொன்னவர் "முடிஞ்சா ஏதாவது லவ் சாங் பாடு. கேட்கறேன்.." என்றார்.

யஷ்வந்த் அறைக்குள் வந்தபோது தாரணி படுக்கையில் படுத்திருந்தாள்.

"குட் நைட்.." என்றவன் அவளருகே இருந்த தலையணையை கையில் எடுத்தான்.

மௌனமாக இருந்தவளின் நெற்றியில் தவழ்ந்த முடிகளை ஓரம் ஒதுக்கி விட்டவன் "என்னாச்சி தாரு.?" எனக் கேட்டான்.

"எனக்கு அவளை பிடிக்கல.." என்றாள்.

"யாரை.?"

"உங்க பிரெண்டை.. எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கு. நீங்க அவளோடு பழகறது ரொம்ப பயம் தருது.."

அவளருகே அமர்ந்தான். "தப்பா நினைக்காத தாரு. தர்ஷினியையும் யவனாவையும் போலதான் அவளும் எனக்கு.. சின்ன சின்ன நம்பிக்கைதான் நம்மோட வாழ்க்கையை பிடிச்ச வைக்க காரணமா இருக்கும். அன்னைக்கு செத்துடுவேன்னு பயந்த நேரத்துல அவதான் என் பக்கத்துல வந்தா. என்னை காப்பாத்த வந்தா. அவ இயல்பிலேயே நல்லவ. அவளை தப்பா நினைக்காத.. அவ என்னோட சேவியர் ஏஞ்சல்.." என்றான். அவன் விளக்கிச் சொன்ன பிறகுதான் அவள் மீதான எரிச்சல் அதிகமானது தாரணிக்கு.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN