காதல் கணவன் 34

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
"இங்கே ஏன்ம்மா அழுதுட்டு இருக்க.?" வருத்தமாக கேட்டான் பாலாஜி.

"வேற எங்கே போறதுன்னு தெரியல பாலா.." என்றவளுக்கு அந்த வகுப்பறையின் நினைவில் இன்னமும் உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது.

"சரி வா.. நாம நம்ம வீட்டுக்கு போகலாம்.." என்றவனிடம் மறுப்பாக தலையசைத்தாள்.

"நான் வரல.." என்றவள் அவனின் தோளை விட்டு முகத்தை நகர்த்தாமல் இருந்தாள். இப்படி அழுத முகமாய் வீட்டுக்கு சென்றால் அனைவரும் கேள்வி கேட்பார்கள். பிறகு சுப்ரியாவை பற்றி அவர்களிடம் சொல்ல வேண்டி வரும். பிரச்சனைகள் உண்டாகும். அம்மா திட்டுவாள் என்று பயந்தாள்.

அவளின் தலையை வருடி தந்தவன் வீட்டை திறந்தான். அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.

"நீ இரு.." என்றவன் கடைக்குச் சென்று தண்ணீர் வாங்கி வந்தான். அவளிடம் நீட்டினான். தண்ணீரை குடித்த பிறகு ஓரளவுக்கு அழுகை நின்றது.

"என்னாச்சி கனி.?"

"கிண்டல் பண்றாங்க அண்ணா.." என்று தலைகுனிந்தவளை கவலையாக பார்த்தவன் "இனி எதுக்கும்மா செய்யணும்.? நீதான் இப்ப பெரிய பொண்ணாகிட்டியே.." என்றான்.

"நம்ப மாட்டேங்கிறாங்க அண்ணா.." என்றவள் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

பாலாஜிக்கு கோபமும் வருத்தமுமாக இருந்தது.

"நான் ஸ்கூலுக்கு வந்து பேசட்டா.."

"ஐயோ வேணாம்ண்ணா.. பிரெண்ட்ஸ்தான்.. சும்மா கிண்டல் பண்ணிட்டாங்க.. என்னால்தான் கிண்டலை தாங்க முடியாம போச்சி. சரியா போயிடுவேன் அண்ணா.." என்றவள் முகத்தைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்தாள்.

"இன்னும் கொஞ்ச நாள்.. பரிட்சை முடிஞ்சிடும். சரியா.? அப்புறம் அந்த பிரெண்ட்ஸை முழுசா கழட்டி விட்டுடு.. அப்படி மோசமான பிரெண்ட்ஸ் உனக்கு வேணாம்.." என்றான்.

சரியென்று தலையசைத்தாள்.

இருள் சூழ்வது கண்டவன் அவளுக்கும் தனக்குமாக கடையில் உணவு வாங்கி வந்தான். இருவரும் உண்டார்கள். கனிமொழி அதற்குள் தேறி விட்டிருந்தாள். இருவரும் இரண்டு சுற்று தாயம் விளையாடினார்கள்.

மூன்றாம் சுற்றுக்கு தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில் பாலாஜியின் கைபேசி ஒலித்தது. சக்திதான் அழைத்திருந்தான்.

"ஏன் சக்தி.?" என இவன் கேட்கவும் கனிமொழியின் இதயம் பந்தய குதிரையின் ஓட்டத்திற்கு ஓட ஆரம்பித்தது.

"வீட்டுக்கு வரலையா.? அவ ஏன் அங்கே போனா.?" என்றுச் சந்தேகமாக கேட்டான் சக்தி.

"அவளுக்கு படிக்கணுமாம்.. அங்கேயிருந்தா சரியா படிக்க முடியலன்னு இங்கே வந்துட்டா.. நாளைக்கு காலையில் வந்துடுறோம்.." என்றவன் இணைப்பைத் துண்டித்தான். தங்கையைப் பார்த்தான். பார்வையை திருப்பிக் கொண்டாள் அவள்.

மூன்றாம் சுற்றை விளையாடி முடித்துவிட்டு இருவரும் உறங்க ஆரம்பித்தனர்.

கீர்த்தனா தலையணையை அணைத்தபடி படுத்திருந்தாள். கண்ணீர் தானாய் இறங்கிக் கொண்டிருந்தது. மனம் அதிகமாக வலித்தது. பாலாஜி தனக்கு முன்னுரிமை தரவில்லை, அவன் தனக்காய் எந்த முடிவையும் எடுக்க முன்வரவில்லை என்ற விசயம் அவளை பாதித்துவிட்டது. அவன் வந்து தன் தந்தையிடம் ஒருமுறை கூட பேசாமல் இருந்துவிட்டான் என்று நினைத்து கூட கவலைப்பட்டாள். காதல் மட்டும் இருந்தபோது எதெல்லாம் ஒரு விசயமாக கூட தோன்றவில்லையோ அதேதான் இந்த ஊடலின் போது பெரிய பிரச்சனையாக தோன்றியது.

அவனை பற்றி நினைக்கும் போதெல்லாம் கோபமாக வந்தது. அழுகையாக வந்தது. அவனை நேசித்தது தவறு என்று புலம்பியது மனம். ஆனால் அவனை விடுத்து வேறு யாரை நேசிப்பது என்றும் அவளிடமே கேட்டது.

கைபேசியை எடுத்தாள். அவனின் புகைப்படத்தை பார்த்தாள். மீண்டும் கண்ணீர் கொட்டியது. "ஏன் பாலா நீ என்னை லவ் பண்ணல.? லவ் பண்ணியிருந்தா எனக்காக ரிஸ்க் எடுத்திருப்பதானே.? உனக்கு உண்மையிலேயே என் உடம்பு மேல மட்டும்தான் ஆசையா பாலா.? என் மேல கொஞ்சம் கூட நேசம் இல்லையா.?" கண்ணீரோடு கேட்டாள்.

மறுநாள் காலையில் பாலாஜியும் கனிமொழியும் வீடு வந்துச் சேர்ந்தனர்.

"அங்கே என்ன வேலை.?" என்று ஆரம்பித்தாள் வளர்மதி.

"சும்மாதான் தாயம் விளையாடிட்டு இருந்தோம் அம்மா.." என்று பதில் சொல்லிவிட்டு உள்ளே போனாள் கனிமொழி.

"தாயம் விளையாடினிங்களா.?" சக்தியின் அதட்டலில் துள்ளி விழுந்தாள். எங்கிருந்து குரல் வருகிறது என்றுப் பார்த்தாள். அவளுக்கு பின்னால் இருந்தான்.

"உனக்கு பரிட்சைதானே.? அதுக்கு படிக்க வேண்டியதுதானே.? உனக்கென்ன விளையாட்டு.? உருப்படுற பொண்ணா நீ.?" என்றுத் திட்டிவிட்டுப் போனான்.

"இவனுக்கு என்ன பைத்தியம் பிடிச்சது.? இந்த வீட்டுல ஒருத்தரை கூட கணிக்க முடியல." என்று புலம்பியபடியே தனது வேலையை பார்க்கப் போனாள் அர்ச்சனா.

பாலாஜி அறைக்கு செல்கையில் எதிர்க் கொண்டு வந்தாள் கீர்த்தனா. இவனின் முகத்தை நிமிர்ந்துப் பார்க்கவில்லை.

'சின்ன குழந்தையை போல கோவிச்சிட்டு இருக்கா..' என்று தனக்குள் புலம்பினான். அவளை சமாதானம் செய்ய சொன்னது இதயம். அப்படியே அவளை கொஞ்சி அவளை தன் காதலில் கட்டிப் போட சொன்னது. இப்போதைக்கு இது சரியென்று தோன்றவில்லை அவனுக்கு. விலகி இருத்தலே நலமென்று நினைத்தவன் ஏக்கமாய் அவளை திரும்பிப் பார்த்தான். முதுகில் படர்ந்து அசைந்துக் கொண்டிருந்த கூந்தலும், அவளின் ரவிக்கையின் காரணமாக தென்பட்ட முதுகும் இடுப்பும் அவனின் ஏக்கத்தை மேலும் அதிகப்படுத்தியது. 'ரொம்ப சின்ன புள்ளைத்தனமா செய்றா..'

வெற்றி தனது அறையிலிருந்தான். அவசரமாக தயாராகிக் கொண்டிருந்தான். பாரதியை மனதுக்குள் நினைத்தபடியே தயாராகிக் கொண்டிருந்தான். அவளை நினைப்பது பிடித்திருந்தது. இது வெறும் ஈர்ப்பாக இல்லாமல் காதலாக மாற வேண்டும் என்று ஆசைக் கொண்டான். மேஜை டிராவிலிருந்த வாட்சை எடுத்தவன் தயங்கி நின்றான்.

"வெற்றி.. இது எப்படி இருக்கு.?" அம்ருதா தான் தேர்ந்தெடுத்த கைக்கடிகாரத்தை இவனிடம் காட்டினாள்.

கைக் கடிகார கடையிலிருந்த மற்ற கடிகாரங்களை பார்த்துக் கொண்டிருந்தவன் இவள் புறம் திரும்பினான். "எனக்கு மேட்ச் ஆகுமா.?" எனக் கேட்டான்.

அம்ருதா இவனின் அருகே வந்தாள். கையில் கடிகாரத்தைக் கட்டினாள்.

"செம மேட்ச், நான் உனக்கு மேட்ச் ஆனது போலவே.." என்றாள். வெற்றி புன்னகைத்தான். தனது கையை பார்த்தவன் அவளின் முகத்தை ரசனையோடுப் பார்த்தான்.

கடிகாரத்துக்கான பணத்தை கூட அன்று அம்ருதாதான் தந்திருந்தாள்.

கடிகாரத்தை கண்டதும் வெற்றிக்கு மனம் கனத்தது.

"அம்மு.. என்னை முழுசா உடைச்சிட்ட நீ.." முனகியபடியே வாட்சை கட்டினான்.

வங்கியை நோக்கி சென்றுக் கொண்டிருந்தான் வெற்றி. மனதுக்குள் இருந்தவளின் நினைப்பை அகற்ற இயலாமல் நொந்துப் போயிருந்தான்.

சாலையை பார்த்தபடி‌ விரைந்துக் கொண்டிருந்தவனின் பார்வையில் பாரதி தென்பட்டாள். கால் தானாக பிரேக்கை மிதித்தது. பாரதியின் ஸ்கூட்டியை நோக்கி சென்றான். பஞ்சரான ஸ்கூட்டியை தள்ளியபடி நடந்துக் கொண்டிருந்தாள்.

பைக் ஒன்று அருகில் வந்து நிற்கவும் நிமிர்ந்தாள். "வெற்றி சார்.." என்றவளைப் பார்த்துப் புன்னகைத்தவன் பைக்கை விட்டு இறங்கினான்.

"திடீர்ன்னு பஞ்சராகிடுச்சி சார்.." என்றாள் சோகமாக.

சுற்றும் முற்றும் பார்த்தான்.

"இப்படியே நூறு மீட்டர் போனா பஞ்சர் கடை வரும்.." என்றான். மென்மையாக சிரித்தவள் "தெரியும் சார்.." என்றாள்.

தான் வழிவது போலவே அவனுக்குத் தோன்றியது.

பின்னங்கழுத்தை தடவியபடியே அவளை பார்த்தவன் "ஏதாவது உதவி வேணுமா.?" எனக் கேட்டான்.

"வேணாம்.." என்றவள் தயக்கத்தோடு‌ "பஞ்சர் போட்டு முடிக்கும் வரை கூட இருக்கிங்களா.? அந்த கடைக்கார பையன் என்னை எப்பவும் ஒரு மாதிரியா பார்ப்பான். என் விதி இன்னைக்குன்னு பார்த்து கரெக்டா இங்கேயே பஞ்சர் ஆகியிருக்கு.." என்றாள் கவலையாக.

"நான் வரேன்ங்க.. அவன் உங்களை பார்த்தா அவன் கண்ணைத் தோண்டிடுறேன்.." என்றான்.

வெட்கம் பூசியது அவளின் கன்னங்கள். மௌனங்களையே இடையில் வைத்து நடந்துக் கொண்டிருந்தார்கள் இருவரும்.

"உங்களுக்கு மேரேஜ் ஆகிடுச்சா சார்.?" எனக் கேட்டவளை அதிர்ச்சியோடு பார்த்தவன் "ஐ திங் நாம இரண்டு பேரும் நாளைக்கு வெளியே போக போறோம்ன்னு நினைச்சேன்.." என்றான்.

"போலாம் சார்.." என்றவளை குழப்பத்தோடு பார்த்தவன் "நீங்க நல்லப் பொண்ணுன்னு நினைச்சேன்.." என்றான் பட்டென்று.

பாரதி தலைசாய்த்து அவன் முகம் பார்த்தாள். "நான் ஊசிப் போன பொண்ணு இல்லையே.‌" என்றாள் வெகுளியாக.

"நான் ஊர் சுத்த கூப்பிட்டேன்.."

"நானும் ஊர் சுத்திக் காட்ட வரேன்னுதான் சொன்னேன் சார்.."

மானசீகமாக நெற்றியில் அடித்துக் கொண்டான்.

"டூரிஸ்ட் கைடா நீங்க.?"

பொய் கோபத்தோடுப் பார்த்தாள். "கூட வேலை செய்றிங்க.. ஊருக்கு புதுசு. சும்மா சுத்திக் காட்டலாம்ன்னு நினைச்சா.. டூரிஸ்ட் கைடான்னு கேட்கிறிங்க.. நீங்க யாராவது டூரிஸ்ட் கைடையே பார்த்துக்கங்க.."

"ச்சே.. ச்சே.. அப்படி இல்லைங்க.. நான் ஊர் சுத்திப் பார்க்க கேட்கல.. பிரெண்டா இரண்டு பேரும் வெளியே போகலாமான்னு கேட்டேன்.." என்றான் அவசரமாக.

பாரதி ஆச்சரியத்தோடு அவன் முகம் பார்த்தாள்.

"தேங்க்ஸ்.." என்றாள்.

"போலாமா.? ஞாயித்துக்கிழமை ஊர் சுத்த.?" சந்தேகத்தோடுக் கேட்டான்.

"ம்ம்.." சிறு தயக்கத்தோடு தலையசைத்தாள்.

பஞ்சர் கடை வந்துச் சேர்ந்தது. பஞ்சர் கடையிலிருந்த மூன்று இளைஞர்களில் ஒருவன் பாரதியை கண்டதும் பளீர் புன்னகையோடு எழுந்து நின்றான். பாரதியின் அருகிலிருந்த வெற்றியை கண்டதும் அவனின் புன்னகை மறைந்துப் போனது.

"என்ன மேடம் இப்பவெல்லாம் பஞ்சர் கடை பக்கமே வருவது இல்ல.?" எனக் கேட்டான் எடுபிடிப் பையன் ஒருவன்.

"ஸ்கூல் போக மாட்டியாடா நீ.?" எனக் கேட்டவள் "இந்த ஸ்கூட்டியை கொஞ்சம் சீக்கிரம் பஞ்சர் பார்த்து கொடுங்க.." என்றாள்.

"நரேஷ்ண்ணா அக்கா உங்ககிட்டதான் சொல்றாங்க.." என்று இழுத்த சிறுவன் அடுத்த வண்டிக்கு ஆயில் மாற்ற கிளம்பினான்.

நரேஷ் வெற்றியை வெறித்தபடியே எழுந்து வந்தான். வாசலிலிருந்த ஸ்கூட்டியை கடைக்குள் தள்ளி நிறுத்தினான்.

"சாரி மேடம்.. பஞ்சர் இப்போதைக்கு முடியாது..‌ நீங்க ஈவினிங் வந்து வண்டியை எடுத்துக்கங்க.." என்றான்.

"ஆனா எனக்கு இப்ப வேணுமே.." பாரதிக்கு கவலையாக இருந்தது.

"நோ ப்ராப்ளம் மேடம். நான் கூட உங்களை டிராப் பண்றேன்.." என்றபடியே அருகிலிருந்த பைக்கின் ஆக்ஸிலேட்டரை முறுக்கினான்.

நரேஷை முறைத்த வெற்றி "பாரதி போலாமா.?" எனக் கேட்டபடி தனது பைக்கை இயக்கினான்.

"ஈவினிங்குள்ளாவது பஞ்சர் போட்டு வைங்க.." என்றவள் தயக்கத்தோடு வெற்றியின் பைக்கில் ஏறினாள்.

"ஆள் பார்வை ரொம்ப மோசமா இருக்கு.." என்றுக் குற்றம் சாட்டினான் வெற்றி.

"நானும் அதானே சொன்னேன்.?" எனக் கேட்டு சிரித்தவள் அவனுக்கும் தனக்கும் இடையில் தனது கைப்பையை வைத்தாள்.

"இனி இவன் கடைக்கு வராதிங்க.." என்றான் எரிச்சலாக.

"நானா வர நினைக்கிறேன்.. அதுவா பஞ்சர் ஆகுது.. முன்னையெல்லாம் அடிக்கடி பஞ்சர் ஆகும். இப்ப டயர் மாத்திட்டேன்.‌ மறுபடியும் இன்னைக்கு பஞ்சர்.." என்றாள் சோகமாக.

"அதெப்படிங்க உங்களுக்கு மட்டும் இவ்வளவு‌ பஞ்சர்.?" எனக் கேட்டவன் வங்கியின் வாகன நிறுத்துமிடத்தில் பைக்கை நிறுத்தினான்.

"எங்க வீடு விவசாய வீடு சார்.. எங்க வீடு கொஞ்சம் உள்ளே தள்ளி கட்டியிருக்கோம். வரப்பு மேலயே அரை கிலோமீட்டருக்கும் மேல ஓட்டி வர வேண்டியிருக்கும்.. சரளை கல் ரோடு கொஞ்ச தூரம். மெயின் ரோடு வரும் முன்னாடி வண்டி எங்கேயும்‌ சாயாம இருந்தாலே போதும்ன்னு தோணும்.." என்றாள்.

அவளை பரிதாபமாக பார்த்தான். "எங்க வீட்டுல என்னை வேலைக்கே அனுப்ப மாட்டேன்னு சொல்லிட்டாங்க.. நான் அடம் பிடிச்சி வந்திருக்கேன்.." என்று சிரித்தவள் பேக்கை இறுக்கியபடி படிகளில் ஏறினாள்.

பாரதி தனது கேபினை நோக்கி நடந்தாள். வெற்றி அவளைப் பற்றி யோசனை செய்தபடியே நடந்தான். அந்த பஞ்சர் கடைக்காரன் லிஃப்ட் தருகிறேன் என்று சொன்னது சந்தேகத்தை தந்தது இவனுக்கு. இங்கே வந்து விட்டுச் செல்லும் நேரத்தில் அவன் காத்திருக்கும் வாகனங்களை பழுதுப் பார்க்கலாமே என்று நினைத்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN