காதல் கணவன் 35

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சக்தியின் அறை கதவு தட்டப்பட்டது. இப்போதுதான் இருவரும் உணவை முடித்து விட்டு வந்திருந்தனர். இந்த நேரத்திற்கு யார் என்ற சந்தேகத்தோடு கதவை திறந்தான் பாலாஜி. கனிமொழி தயக்கத்தோடு நின்றிருந்தாள்.

"என்ன பாப்பா.?" என கேட்டவனின் முன்னால் தனது ஆங்கில நோட்டை நீட்டினாள். "கிராமர் மறந்து போச்சி அண்ணா.. நாளைக்கு எக்ஸாம். பயமா இருக்கு. நீ கொஞ்சம் சொல்லி தரியா.?" எனக் கேட்டாள். எப்போதும் சக்தியிடம்தான் கேட்பாள். ஆனால் இன்று இவனிடம் கேட்டாள். அவன் ஏதாவது மனம் நோகும்படி சொல்லிவிடுவானோ என்று பயந்தாள். அதுவும் அண்ணனின் முன்னால் அவன் அப்படி சொல்லிவிட்டால் பிறகு அவர்கள் இருவருக்கும் இடையில் சண்டை வர வாய்ப்பிருக்கிறது என நினைத்து பயந்தாள். தான் சக்தியை காதலிக்கும் விசயத்தை அண்ணன் அறிந்து விட்டால் பிறகு அண்ணன் தன் மீது வருத்தம் கொள்வான் என்றும் கலங்கினாள்.

பாலாஜி நோட்டை பார்த்தான். முதல் பக்கத்திலிருந்த இரண்டு கேள்விகள் புரிந்தது. நான்கு கேள்விகள் புரியவில்லை.

"நீ கீர்த்தனாகிட்ட கேட்டுப் பார்க்கறியா.?" எனக் கேட்டான்.

"அந்த ஆப்பாயில்கிட்டயா.? அதுக்கு என் அளவுக்கு கூட கிராமர் தெரியாது அண்ணா.. அவ தமிழ் இலக்கியம் முடிச்சிருக்கா இல்லையா.? நீ போய் அவகிட்ட தமிழ் இலக்கணம் பத்தி நாலு கேள்வி கேளு. சத்தியமா நாலுமே தப்பாதான் இருக்கும். இதுல இங்கிலீஸ் கிராமர் கேட்டேன்னா அவ்வளவுதான். தெரியாதுன்னு கூட சொல்ல மாட்டா.. தப்பு தப்பா சொல்லிக் கொடுத்து என்னை பரிட்சையில் பெயிலாக்கி விட்டுடுவா.." என்று சொன்ன கனிமொழியை உள்ளே நின்றபடி முறைத்தான் சக்தி.

'என் தங்கச்சி ஆப்பாயிலாம்.. இந்த அரை வேக்காட்டு கூமுட்டை இதை சொல்லுது..' என மனதில் நினைத்தபடி காது வழியே புகை விட்டவன் அருகே வந்து மச்சானின் கையிலிருந்த நோட்டை பிடுங்கினான்.

"த்தூ.. கேவலமான கையெழுத்து.. இந்த கையெழுத்துல கரெக்டான பதில் எழுதினா கூட மார்க் கம்மியாதான் கிடைக்கும்.." என்றவனை முறைத்தான் பாலாஜி. அவன் வாழ்நாளில் இவ்வளவு அழகான கையெழுத்தை அவன் பார்த்ததே இல்லை எனலாம். இதற்காக அவள் கேட்கும் நேரத்திலெல்லாம் கையெழுத்து நோட்டை வாங்கி தந்துள்ளான். அச்சில் வடித்த எழுத்து போல இருக்கும் அவள் கையெழுத்து.

கனிமொழி கவலையோடு நோட்டைப் பார்த்தாள்.

"அவசரத்துல எழுதினேன் மாமா.. இனி அழகா எழுதுறேன்.." என்றாள்.

சக்தி நோட்டை புரட்டினான். காதலிலும் தன்னோடு போடும் சிறு சிறு சண்டைகளிலும் மட்டும்தான் அவள் சரியில்லை, மற்ற நேரங்களில் முக்கியமாக படிப்பில் அவள் நல்ல பெண் என்று அறிந்திருந்த சக்தியால் அவளை இந்த நேரத்தில் துரத்தியடிக்க மனம் வரவில்லை.

"உள்ளே வா. நான் சொல்லி தரேன்.." என்றவன் மேஜையின் மேலிருந்த பேனாவை கையில் எடுத்தபடி நாற்காலியில் அமர்ந்தான். கனிமொழி மற்றொரு நாற்காலியை இழுத்துப் போட்டு அவனருகில் அமர்ந்தாள். கொஞ்சம் தள்ளியே போட்டுக் கொண்டாள். அங்கிருந்தபடியே எட்டி நோட்டைப் பார்த்தாள். அவனுக்கு எரிச்சலாக இருந்தது. அவளுடைய நாற்காலியை பிடித்து தன்னருகே இழுத்தான்.

"இதை கவனி.." என்றவன் எழுத ஆரம்பித்தான்.

பாலாஜி கொட்டாவி விட்டபடியே கட்டிலில் விழுந்தான்.

சக்தி சொல்லி தருவதை கவனத்தோடு கேட்டுக் கொண்டாள் கனிமொழி. வழக்கம்போல திட்டிதான் சொல்லி தந்தான். நான்கைந்து முறை கொட்டு வைத்தான். அவளுக்கு பயிற்சிக்காக சில வாக்கியங்களை எழுத சொல்லி தந்தான்.

"மாமா போதும். நாளைக்கு எக்ஸாம். அதுக்கு ரிவிஷன் பார்க்கணும். கிராமர்ல இது மட்டும்தான் வரும். இதுவே தெளிவா புரிஞ்சது. எக்ஸாம்பிள்ஸ் எழுத நேரம் இல்ல. நான் போய் தூங்குறேன்.." என்றவள் எழும் முன் அவளின் தோளை பிடித்து அமர வைத்தான்.

"முழுசா முடிச்சிட்டுதான் ரூமை விட்டு போகணும். இல்லன்னா கொன்னுடுவேன்.." என்றான்.

கனிமொழிக்கு அழுகை வராத குறை. தூக்கம் வராத குறையும். கொட்டாவி விட்டபடியே அண்ணனை பார்த்தாள். அவன் அரை கண்களை திறந்தபடி இவர்களை பார்த்துக் கொண்டிருந்தான்.

"சீக்கிரம் எழுது.." சக்தி கட்டளையாக சொல்லிவிட்டு எழுந்தான். பாத்ரூமுக்கு நடந்தான்.

கனிமொழி அரை தூக்கத்திலேயே காலி இடங்களை நிரப்பினாள். வார்த்தைகளை சரியாய் மாற்றி எழுதி திருத்தினாள்.

இரவு உடைக்கு மாறிய சக்தி பத்து நிமிடங்களுக்கு பிறகு வெளியே வந்தான். கனிமொழி மேஜையில் தலையை வைத்தபடி உறங்கி விட்டிருந்தாள்.

அருகில் வந்தவன் நோட்டை எடுத்துப் பார்த்தான். அனைத்தையும் சரியாக எழுதியிருந்தாள். சக்திக்கு இதழ்கள் தானாய் விரிந்தது.

"பாஸ் பண்ணிடுவாளா.?" தலையணையில் சற்று ஏறி படுத்தபடி கேட்டான் பாலாஜி.

"ம். அதெல்லாம் பண்ணிடுவா.." என்றவன் நோட்டை மூடினான். அழகான குழந்தை ஒன்று அட்டைப் படமாக இருந்தது. நோட்டிலிருந்த பார்வையை திருப்பினான். அதே போன்ற இன்னொரு குழந்தையாக தெரிந்தாள் கனிமொழி.

"ஏன் பாலா, நம்ம பாப்பா ரொம்ப க்யூட் இல்ல.?" இவளை வியந்துப் பார்த்தபடியே கேட்டான்.

"ம்ம்.." என்றவன் எழுந்து அமர்ந்தான். அவனுக்கு தங்கையின் முதுகும் பின்னந்தலையும்தான் தெரிந்தது.

"ஒரு அழகான பொம்மை போல இருக்கா.. பெருசா வளர்ந்துட்டா, பதினேழு வயசை தாண்டிட்டான்னு நம்பவே முடியல. முகம் கொஞ்சமும் மாறாத மாதிரி இருக்கு.." என்று வியந்தவன் அவளின் கேசத்தை வருடி விட்டான். அவளை அடித்த பொழுதுகள் நினைவில் வந்தன. மனம் வழக்கமான பாரத்தை சுமக்க ஆரம்பித்தது.

அவளின் கன்னத்தில் உள்ளங்கையை பதித்தான். விரல்களால் மென்மையாக வருடினான். கனிந்த இதயத்தோடு அவளை பார்த்தான். செல்லமாக வளர்க்கும் ஒரு கன்றுக் குட்டியை, ஆசையாய் வாங்கிய ஒரு கார் பொம்மையை பார்ப்பது போன்ற அன்பு பார்வை.

அவளின் கன்னம் கிள்ளி உதட்டில் வைத்துக் கொண்டான்.

"கண்ணு வைக்காதடா.. அவளுக்கு காய்ச்சல் வந்துட போகுது.." என்றான் பாலாஜி.

கனிமொழியின் தோளில் தட்டினான் சக்தி. கண்களை கசக்கிக் கொண்டு எழுந்தவளிடம் "போய் தூங்கு போ.." என்று எரிச்சலோடு விரட்டினான்.

கனிமொழி நோட்டை அணைத்தபடி அங்கிருந்து கிளம்பினாள்.

கதவின் மேல் தாழ்ப்பாள் கையெட்டாமல் திறக்க சிரமப்பட்டவளுக்கு அருகில் வந்து கதவை திறந்து உதவி செய்தான்.

"தேங்க்ஸ் மாமா.." என்றவள் அவனை நிமிர்ந்துப் பார்த்தாள். என்னவோ சொல்ல முயன்றாள். சொல்லாமலேயே கிளம்பிப் போனாள்.

சக்தி கதவை தாழிட்டு விட்டு வந்தான். மச்சானுக்கும் தனக்கும் இடையில் இரண்டு தலையணைகளை வைத்து விட்டு படுத்தான்.

"என் சக்தி.?" எனக் கேட்டவனை ஏற்ற இறக்கமாக பார்த்தவன் "ராத்திரியில் எதுக்குடா அப்படி கட்டிப் பிடிக்கிற.? ஏசியை எவ்வளவு கூட்டினாலும் வேர்க்குது. கருமம். விட்டா பாஞ்சிடுவ போல.." என்றான்.

பாலாஜி அவனை நக்கலாக பார்த்தான்.

"நான் பொய் சொல்ற மாதிரி தெரியுதா உனக்கு.? லூசு மாதிரி எங்கங்கேயோ தொடுற. அரை தூக்கத்துல தடவி வைக்கற.. காதை கடிச்சி வைக்கற.. பயமா இருக்குடா எனக்கு. உன் தங்கச்சி லைப்பை காப்பாத்த வந்து கடைசியில் என் கற்பை களவாடிடாதடா.." என்றான் சக்தி.

"ஏதோ தூக்கத்துல கனவு போல பக்கத்துல வந்திருப்பேன். அதுக்கு இவ்வளவு சீனா.? அமைதியா தூங்குடா.." என்றவன் அந்த பக்கமாக திரும்பிப் படுத்தான்.

"தூக்கத்துல கட்டி பிடிக்கறதோடு கனவை முடிச்சிக்கடா.. வேற எதையாவது கற்பனை பண்ணிடாத.." முனகியபடியே படுத்தான் சக்தி.

அம்ருதா கவினோடு கைபேசி செய்தியில் உரையாடிக் கொண்டிருந்தாள்.

"உங்களுக்கு என்ன பிடிக்கும்.?" என கேட்டு அனுப்பியிருந்தான் அவன்.

"நிலா வானம் நட்சத்திரம்.."

"பக்கத்துல இருப்பவங்களையும் இருப்பதையும் கூட பிடிக்கும்ன்னு சொல்லலாம். தப்பில்ல.."

அவனின் பதிலால் சிரித்தாள்.

மொக்கையாக பல விசயங்களை பேசினர். இருவரும் உறங்கியபோது‌ மணி பன்னிரெண்டை தாண்டி விட்டிருந்தது.

வீட்டின் காலை நேர சலசலப்பில் கண் விழித்த பாலாஜி அறையை விட்டு வெளியே நடந்தான்.

"சித்தி ஒரு காப்பி.." என்றபடியே கிச்சனுக்குள் நுழைந்தவனின் முன்னால் காப்பி கோப்பையை நீட்டினாள் கீர்த்தனா.

கோப்பையை வாங்கியவன் ஒரு விழுங்கு குடித்தான். அவனின் பார்வை தானாய் கீழிறங்கியது

அவளின் வயிற்றை பார்த்தவன் குடித்த காப்பியை துப்பினான். அதிர்ச்சியோடு அவளின் முகம் பார்த்தான். அவளோ தன் மீது சிதறிய ஒன்றிரண்டு காப்பி துளிகளை துடைத்துக் கொண்டிருந்தாள்.

"என்ன கருமம்டி இது.?" அவளின் வயிற்றை கைக் காட்டிக் கேட்டான்.

"வளையம்.. ஏன் நல்லா இல்லையா.?" எனக் கேட்டவளை ஆத்திரத்தோடுப் பார்த்தவன் "அந்த கருமத்தை ஏன்டி பெல்லி‌ பட்டன்ல மாட்டி வச்சி தொலைஞ்சிருக்க.? கேவலமா இருக்கு.. லூசா நீ.." எனக் கேட்டான்.

முறைத்தாள் அவனை.

"அழகா இருக்குன்னு பொறாமை உனக்கு.." என்றவள் உதட்டை சுளித்தபடி தனது வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள்.

"இவ அலும்பலுக்கு ஒரு அளவில்லாம போச்சே ஆண்டவா.. மனுச மக்க நடாமாடுற வீட்டுல கண்ட இடத்திலயும் தோடு குத்தி வச்சிருக்காளே.. வெளியாளுங்க யாராவது பார்த்தா கேவலமா காறி துப்பிட்டு போவாங்களே.." என்றவனை திரும்பிப் பார்த்து முறைத்தவள் "யார் கேவலமா பார்த்தா எனக்கென்ன.? எனக்கு பிடிச்சிருக்கு. நான் குத்தி இருக்கேன். இப்ப கூட உனக்கு இது தப்பாவெல்லாம் தோணியிருக்காது. தள்ளி வச்சிருக்கோமே.. இந்த அழகை இப்போதைக்கு அனுபவிக்க முடியாதேன்னு கடுப்பு. அதனாலதான் கண்டதையும் உளறிட்டு இருக்க.." என்றாள்.

வளர்மதி சமையலறை நோக்கி‌‌ வருவதை கண்டவள் அவசரமாக அடுப்பின் முன்னால் சென்று நின்றாள்.

"நீ என்னை பழி வாங்கற.." என்றவனை நோக்கி கரண்டியை காட்டியவள்‌ "ச்சீ.. உன்னை பழி வாங்கி என் வலையில வீழ்த்தி, நீ என்னையே‌‌ சுத்தி வந்து என் காதலுக்காக மலையையும் கடலையும் தாண்டி உன் காதலை நிரூபிச்சி.." என்று சொல்லி பெருமூச்சு வாங்கினாள்.

"போடா டேய்.. பால் பவுடர் டப்பா மேல இருக்கும் குழந்தையை போல மூஞ்சியை வச்சி நீ என்னை ஏமாத்தியது எல்லாம் இத்தோடு போகட்டும். மரியாதையா இப்ப வெளியே‌ நட.. நான் எப்படி வேணாலும் இருப்பேன். இன்னொரு முறை வந்து அது நொள்ளை இது சொட்டைன்னு சொன்னா நடக்கறதே வேறயா போயிடும்.." என்றாள்.

"ராட்சசி.." என்று திட்டியவன் காப்பி கோப்பையை சமையலறை மேடையில் வைத்துவிட்டு நகர்ந்தான்.

அரை மணி நேரத்திற்கும் மேலாக குளித்தான். அப்போதும் அவளின் புது தோடும் அது குத்தப்பட்டிருந்த இடமும்தான் கண்களில் இருந்தது. தலையை சிலுப்பி சிலுப்பி கழுத்தில் சுளுக்கு வராததுதான் குறை.

"அவளெல்லாம் விளங்கவே மாட்டா.. சாதாரணமா சிரிச்சாவே நாலு நாளைக்கு அவளைதான் குட்டிப் போட்ட பூனையா சுத்தி‌ வருவேன். இப்ப இவ்வளவு கிளாமரா திரியறா.. செக்ஸினெஸ்ல என்னை சாவடிக்கிறா.. எப்படி நான் வேலை பார்ப்பேன்.? எப்படி‌ நான் இங்கே விலகி இருப்பேன்.?" என்று குளித்தபடியே புலம்பி தீர்த்தான்.

நெற்றியில் பட்டையாக திருநீறை பூசிக் கொண்டவன் நமசிவாய சொல்லியபடியே அறையை விட்டு வெளியே நடந்தான்.

தேன்மொழி அவனை ஏதோ ஒரு ஜந்துவை போல பார்த்தாள். "டிப்டாப்பா டிரெஸ் பண்ணிட்டு அவ்வளவு பெரீரீய்ய்ய பட்டை அடிச்சிருக்க.. லூசாடா நீ.?" எனக் கேட்டாள்.

"பேங்க்ல இன்னைக்கு ஒரு ஆடிட்டிங்.." என்றவனை விசித்திரமாக பார்த்தவள் "அதுக்கு ஏன் நீ பட்டை அடிக்கணும்.?" எனக் கேட்டாள். சந்தேகத்தோடு அவனைப் பார்த்தவள் "காசு ஏதும் திருடிட்டியா.?" எனக் கேட்டாள்.

"ஐயோ.. இல்ல தேனு.. நான் நல்ல பையன்.." என்றவன் அவசரமாக அங்கிருந்து ஓடினான். அம்மாவின் அறையை வேகமாக கடந்தான். மாடியிலிருந்து இறங்கிய பிறகு கையை பார்த்தான். நான்கு நகங்களும் இறங்கியதில் உள்ளங்கையில் காயம் தெரிந்தது. அம்மாவின் அறையை தினமும் இப்படிதான் கடந்துக் கொண்டிருக்கிறான் அவன். அந்த அறையின் கதவை திறந்து விட கூடாது என்பதற்காகவும் உடைந்து விழுந்தது விட கூடாது என்பதற்காகவும் சிரமப்பட்டான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN