அத்தியாயம் 53

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
யஷ்வந்த் தன் கை சேர்ந்த பயண சீட்டுகளை பார்த்தான்.

"ஹனிமூன்க்கா.?" என்றவன் தன் மனைவியின் புறம் திரும்பிப் பார்த்தான். தரை பார்த்து நின்றிருந்தாள். இப்போது சென்றால் இரண்டு டிக்கெட்டுகள் அல்லவா வீணாய் போகும்?

"தேங்க்ஸ் யவனா.. ஆனா நீ டிக்கெட் புக் பண்ணும் முன்னாடி என்கிட்ட கேட்டு இருக்கலாம்.. நாங்க இன்னொரு நாள் போறோம்.." என்றான்.

யவனா அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தாள்.

"ஏன் அண்ணா.? நான் ஆசையா‌ புக் பண்ணேன்.." என்றவளின் தலையை வருடி‌ விட்டவன் "சாரி.." என்றான்.

தனது அறை நோக்கி நடந்தவனின் பின்னால் ஓடினாள் தாரணி.

"ஏன் வேணாம்ன்னு சொன்னிங்க.?" என்றவளை அதிர்ச்சியோடு‌ பார்த்தவன் "சிம்லாவுக்கு போய் பனிமலையில் தவம் செய்யலாம்ன்னு திட்டம் போட்டியா.?" எனக் கேட்டான்.

"ஐயே.. அதெல்லாம் இல்ல.. ஹனிமூனுன்னு நினைச்சேன்.."

ஹார்ட் அட்டாக் வராத குறையாக அவளை பார்த்தவன் "நிஜமாவா.? நீயா தாரு.?" எனக் கேட்டபடி அவளின் கன்னம் தொட்டான்.‌ பயத்தோடு விழிகள் நகர்ந்தது.

"பயப்படுற இல்ல.. அப்புறம் ஏன் உனக்கு இந்த பேராசை.?" எரிச்சலாக கேட்டவன் "போ.. போய் காயத்ரி மந்திரம் படி.. அதுதான் உனக்கு லாயக்கு.." என்று திட்டினான்.

"தப்பு உங்க மேலதான்.." என்றவளை குழப்பமாக பார்த்தான்.

"நீங்கதான் ஸ்டெப் எடுக்கணும்.. சிம்லா போனா ஏதாவது ஒரு டைம்ல ஏதாவது ஒரு ஆசை வரும் இல்லையா.? இந்த வீட்டுல எப்பவும் ஆட்கள் இருக்காங்க.. நீங்களும் அந்த பொண்ணோடவே ஜோடி போட்டுட்டு சுத்திட்டு இருக்கிங்க.. கொஞ்சம் கூட என்னை கண்டுக்க மாட்டேங்கிறிங்க.." என்று குறை சொன்னாள்.

"அ.." தடுமாறியவன் "இங்கே எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு.." என்றான்.

லிப்ட் விபத்து செய்ய முயன்றவர்கள் யாரென்று கண்டுபிடிக்க வேண்டிய நிலையில் இருந்தான். இந்த நேரத்தில் குந்தவியை தனியாக விட்டு செல்வதா என்று தயங்கினான்.

"நீங்க என்னை லவ் பண்ணலையா யஷூ.? ஒருவேளை அந்த குந்தவியே பெட்டுக்கு போதும்ன்னு.."

முறைத்தவனின் பார்வையில் அடங்கினாள்.

"சாரி.. ஆனா எனக்கு கண்டதும் தோணுது.. நீங்க என்னோடு டைம் செலவழிக்காத வரை எனக்கு இப்படிதான் ஏதாவது தோணும்.." என்று தலை குனிந்தாள்.

"நானும் மனுஷிதான் யஷூ.." என்று சிறு குரலில் சொன்னாள். முகம் வாடி‌ நகர்ந்தவளை கை பிடித்து நிற்க வைத்தான். அவளின் தாடையை நிமிர்த்தினான். கண்கள் இரண்டும் ஈரத்தால் மின்னிக் கொண்டிருந்தது.

அவள் சொல்வது சரிதானோ என்று தோன்றியது.‌ இவளோடு எந்த நேரத்தையும் செலவழிப்பது போல தெரியவில்லை.

"ஐ யம் சாரி." என்றான்.

"நாம ஹனிமூன் போய்ட்டு வரலாம்.." என்றான்.

கலங்கிய விழிகளில் லேசாக புன்னகை எட்டிப் பார்த்தது.

"அழாதே.." என்றான். அவளின் இமைகளின் மீது முத்தமிட்டான். அணைத்துக் கொண்டான். ஐந்து நிமிடத்திற்கு அவளின் வாசம் பிடித்தான். பயந்து நின்றிருந்தவளின் முதுகை தடவி விட்டான்.

"பயம் வேணாம் தாரு.. நான்‌ விலகி போக இதுவும் காரணம்.. நீயே என்னை நம்பல. உன்னை ஏதாவது செஞ்சிடுவேனோன்னு பயப்படுற.. அப்படின்னா உனக்கு பயம் வராம இருக்கணும்ன்னாவது நான் விலகி நின்னுதானே ஆகணும்.?" எனக் கேட்டான்.

தாரணி மௌனமாய் இருந்தாள். அவன் சொன்னது உண்மையோ என்று தோன்றியது. ஏனிந்த பயம் என்று தன்னையே கேட்டுக் கொண்டவள் நடுங்கும்‌ கரங்களோடு அவனின் முதுகை வளைத்தாள். அவனின் நெஞ்சில் நன்றாக சாய்ந்துக் கொண்டாள். இதயம்‌ அதிகமாக துடிக்கதான் செய்தது. தன்னையே அமைதிப்படுத்திக் கொண்டாள்.

மறுநாள் காலையில் தயாரானான் யஷ்வந்த். குந்தவி லேசான காய்ச்சலோடுதான் இருந்தாள். தனது காப்பாளர்களில் பாதி பேரை இங்கேயே நிறுத்தி விட்டான்.

"இவளை விட்டு எங்கேயும் நகர கூடாது.." என்றவன் குந்தவியிடம் "வேலைக்கு போக வேணாம். ரெஸ்ட் எடு.." என்றான்.

குந்தவி சரியென்று தலையசைத்தாள். சூர்யா தன்னோடு மீண்டும் ஊடல் கொண்டு விட்டதை அவனிடம் சொல்லவில்லை.

அவளை விட்டு விலகி வந்தவன் போனை எடுத்தான். விபத்தை விசாரித்துக் கொண்டிருந்த மாதவனுக்கு அழைத்தான்.

"குந்தவியை டார்கெட் பண்ணது யார்ன்னு சீக்கிரம் கண்டுபிடிச்சி சொல்லுங்க.." என்றான்.

"டிரை பண்ணிட்டுதான் இருக்கேன். அந்த லாரி ஆக்ஸிடென்டும் கூட யாரோ குறி வச்சதுன்னுதான் தோணுது. நான் சீக்கிரம் கண்டுபிடிக்கிறேன்.." என்றான்.

யஷ்வந்த் தாரணியோடு கிளம்பினான்.

சங்கவி கைபேசியை பார்த்தபடியே அமர்ந்திருந்தாள். ஆதீரனின் செய்திகளை படித்துக் கொண்டிருந்தாள். எவ்வளவு பேசினாலும் தீராமல் இருந்தது. அருகில் இருக்கையில் பார்வை போதும் என்கிற அதே மனம் தூரத்தில் இருக்கையில் இப்படி சதிராட்டம் ஆடிக் கொண்டிருந்தது.

மோகன் அரை குறையாக நடமாட ஆரம்பித்தார். அவரின் சேமிப்பை முழுக்க அவரின் உடல் நலம் பெறவே செலவழித்து விட்டாள் சங்கவி. இப்போது செய்யும் செலவுகள் அனைத்தும் ஆதீரனின் பணம் என்பதை அப்பாவிடம் சொல்லவில்லை அவள். அவன் தப்பு செய்தான். அவன் இப்போது செலவு செய்கிறான் என்று சொல்லி‌விட்டாலும் கூட விசயம் தந்தைக்கு தெரிய வரும்போது வருத்தப்படுவார் என்று அறிந்து வைத்திருந்தாள்.

மோகன் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் எப்போது தூங்குவார் நாம் எப்போது ஆதீரனை பார்க்க செல்வோம் என்று காத்திருந்தாள்.

மனம் காலையிலிருந்து படபடவென அடித்துக் கொண்டே இருந்தது.

மோகன் அவளின் அலைபாயும் விழிகளை கண்டும் காணாமல் இருந்தார். மகள் ஏதோ ஒரு திருட்டுத்தனம் செய்கிறாள் என்று மட்டும் அவரால் யூகிக்க முடிந்தது.

"உடம்பு வலிக்குது.. நான் போய் தூங்கறேன்.." என்றவர் எழுந்து நின்றார்.

சங்கவி உடன் வந்தாள். அவரை படுக்க வைத்து பெட்சீட்டை போர்த்தி விட்டாள். தண்ணீரையும் அவரின் போனையும் அருகே இருந்த மேஜையில் வைத்தாள்.

அவர் கண்களை மூடி சீராக மூச்சு விட ஆரம்பித்த பிறகு வெளியே நடந்தாள். ஆதீரனுக்கு அழைத்தாள். ஐந்தாம் நிமிடத்தில் வாசலுக்கு ஓடினாள். ஆதீரனை கண்டு முகம் மலர்ந்தாள். அவனை அணைத்துக் கொண்டாள்.

"எங்கேயாவது போகலாமா.?" எனக் கேட்டவனிடம் "ஆமா.. போகணும்.." என்றவள் அவனை இழுத்துக் கொண்டு காரில் ஏறினாள்.

இருவரும் அங்கிருந்து கிளம்புவதை ஜன்னல் வழியே பார்த்தபடி நின்றுக் கொண்டிருந்தார் மோகன். அவருக்கு அடிவயிறு பற்றி எரிவது போலிருந்தது.

"என் மகளையும் பொண்டாட்டியையும் கொன்னுட்டு என் இன்னொரு மகளோடு கொஞ்சிக்கிட்டு திரியறியா நீ.?" என்று ஆத்திரம் கொண்டார். மகள் மீதும் அவருக்கு ஆத்திரமாக வந்தது.

தனது போனை எடுத்தவர் தனக்கு தெரிந்த வக்கீல் ஒருவருக்கு அழைத்தார்.

ஆதீரன் மனைவியின் முகத்தை திரும்பிப் பார்த்தான்.

"ரோட்டைப் பார்த்து ஓட்டுங்க மாமா.." என்றவளிடம் "எதுக்கு ஹாஸ்பிட்டல் போறோம்ன்னு நீ முதல்ல சொல்லு.." என கேட்டான்.

"அங்கே போய் சொல்றேன்.." என்றவள் ஜன்னல் புறம் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அவளின் கையை பற்றினான். திரும்பினாள்.

"உடம்புல என்ன பிரச்சனை.? எங்க வலி.?" கவலையாக கேட்டான்.

அவளின் வியர்த்திருந்த கரத்தை பயத்தோடு பார்த்தான்.

"ரொம்ப பிரச்சனையா சங்கவி.?" குரல் நடுங்க கேட்டான்.

"அதெல்லாம் இல்ல மாமா.. என்கிட்ட கேட்காதிங்க.. நான் ஹாஸ்பிடல் போன பிறகு சொல்றேன். எனக்கு எந்த நோயும் இல்லை. இது வேற மேட்டர்.." என்றவள் அவனின் முகம் பார்க்க தயங்கினாள்.

ஒன்னரை மணி நேரம் கடந்தது. ஹாஸ்பிட்டல் வராண்டாவில் நிலை இல்லாமல் நடந்துக் கொண்டிருந்தவனின் போனுக்கு அழைத்தாள் சங்கவி.

"எங்கே போன சங்கவி.? எவ்வளவு நேரம் வெயிட் பண்றது.?" என்று கோபத்தோடு கத்தினான்.

"நேரா வந்து செகண்ட் லெஃப்ட் கட் பண்ணி உள்ளே வாங்க மாமா.. டாக்டர் ரேகா.. அவங்க கேபினுக்கு வாங்க.." என்றவள் அழைப்பை துண்டித்து கொண்டாள்.

ஆதீரன் வேகமாய் உள்ளே நடந்தான்.‌ அவள் சொன்ன மருத்துவரின் அறை கதவை அடையாளம் கண்டு திறந்தான். குழந்தை ஒன்று சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படம் சுவரில் பெரியதாக ஒட்டப்பட்டு இருந்தது.

மருத்துவர் ரேகாவின் முன்னால் அமர்ந்திருந்த சங்கவி கணவனின் புறம் திரும்பினாள்.

"வாங்க மாமா.." என்றாள். அவள் முகத்தில் ஒரு டன் வெட்கமும் இரண்டு டன் கவலையும் இருந்தது.

கண்ணை கட்டி காட்டில் விட்டது போன்ற ஒரு மனநிலையோடு சங்கவியின் அருகே அமர்ந்தான்.

"வாழ்த்துகள்.. நீங்க அப்பாவாக போறிங்க.." என்ற மருத்துவரின் வார்த்தைகளில் அதிர்ந்தவன் மனைவியின் புறம் பார்த்தான். கை விரல் நகங்களை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

ரேகா ஒரு பைலை நீட்டினாள்.

"டெஸ்ட் ரிப்போர்ட்ஸ்.. ஸ்கேன் ரிப்போர்ட்ஸ் இதுல இருக்கு‌. கரு உருவாகி நாலரை வாரம் ஆகியிருக்கு. பத்து நாள் கழிச்சி மறுபடி வாங்க.." என்றாள்.

கை நடுங்க ரிப்போர்ட்டை வாங்கிக் கொண்டான்.

"கொஞ்ச நாளுக்கு கேர்புல்லா இருங்க.. ஒரு டென் டேஸ்க்கு மட்டும் தாம்பத்தியம் வேண்டாம்.." என்று சொல்லி அனுப்பினாள்.

ரேகா எழுதி‌‌ தந்த மருந்துகளை வாங்கிக் கொண்டு வந்து காரில் ஏறினான் ஆதீரன். சங்கவி அருகில் அமர்ந்தாள்.

"இ.. இது சாப்பிடும் முன்னாடி.. இது நைட் ஒன்னு காலையில் ஒன்னு.." என்று மாத்திரைகளை அடையாளம் காட்டி கவரில் வைத்தான்.

சங்கவி தலையை அசைத்தாள்.

"உங்களுக்கு விருப்பம் இல்லையா மாமா, குழந்தை பெத்துக்கறதுல.?" தயக்கமாக கேட்டவளை அதிர்ச்சியோடு‌ பார்த்தவன் "ஐயோ அப்படி இல்ல சங்கவி.. அது.. அது எப்படி சொல்றது மனசு முழுக்க ரொம்ப சந்தோசம். பேச வர மாட்டேங்குது.. ஏதோ ஞான நிலைக்கு போயிடுச்சி மூளை. பரவசம் அதிகம்ன்னு நினைக்கிறேன்.." என்றவன் பெருமூச்சோடு முகத்தை தேய்த்துக் கொண்டான்.

"நம்பவே முடியல.. புது சொந்தம்.." என்றவனுக்கு இன்னமும் கூட கைகள் நடுங்கிக் கொண்டேதான் இருந்தது. தன் மடியிலிருந்த ரிப்போர்ட்டை எடுத்து பிரித்தான். மொத்தமாக பார்த்தான். முகத்தோடு அணைத்துக் கொண்டான். பின்னர் நெஞ்சோடு அணைத்தபடி மனைவியின் புறம் பார்த்தான்.

"தே.. தேங்க்ஸ் சங்கவி.." என்றான் தளுதளுத்த குரலில்.

"முன்னாடியே சொல்ல மாட்டியா.? போன்ல கூட நான் உன்னை திட்டிட்டேன்.." சங்கடப்பட்டான்.

"சந்தேகமா இருந்தது மாமா.. டாக்டர் சொன்னாதானே உண்மை தெரியும். அதனாலதான் சொல்லல.. காலையில் லேசா தலை சுத்தல்.. அப்புறம்தான் டேட் பார்த்தேன். எதுக்கும் டாக்டர் சொன்ன பிறகு சொல்லிக்கலாமேன்னு விட்டுட்டேன்.." என்று தன் தரப்பு நியாயத்தை சொன்னாள்.

அவளின் முகம் பற்றியவன் நெற்றியில் முத்தமிட்டான். பூவை கை கொள்வது போல அணைத்துக் கொண்டான்.

நேரம் நகர்ந்துக் கொண்டிருந்தது.

"வீட்டுக்கு போலாமா மாமா.. அப்பா எழுந்துடுவாரு. இப்பவே நிறைய நேரம் ஆகிடுச்சி.." என்றாள் கவலையாக.

சரியென தலையசைத்தபடி காரை கிளப்பினான்.

அவள் வீட்டின் முன் காரை நிறுத்தினான்.

"உன்னை விட்டுட்டு போக மனசே இல்ல சங்கவி.." என்றவன் அவளின் வயிற்றில் தன் உள்ளங்கையை பதித்தான். கண்கள் மீண்டும் ஈரமானது.

"பத்திரமா பார்த்துக்க.." என்றவன் மோகனின் மனதை மாற்ற தான்தான் செயலில் இறங்கியாக வேண்டும் என்று முடிவெடுத்தான்.

ரிப்போர்ட் இருந்த கவரோடு வீட்டுக்குள் வந்தாள் சங்கவி. மோகன் அவளிடம் பேப்பர் ஒன்றை நீட்டினார்.

தயக்கமாக வாங்கி பார்த்தாள். முறைப்படி விவாகரத்துக்கு முறைப்படி செய்ய வேண்டிய மனு பேப்பர் அது. நடுங்கிய கரத்திலிருந்த பேப்பர் நழுவி விழுந்தது.

மோகன் பேப்பரை கையில் எடுத்தார்.

"அவனை டிவோர்ஸ் பண்ணிடு.." என்றார்.

கண்கள் கலங்க தந்தையை பார்த்தவள் "நா.. நான் அவரை லவ் பண்றேன்ப்பா.." என்றாள். பளீரென ஒரு அறையை விட்டு விட்டார். கன்னத்தை பிடித்தபடி தந்தை முகம் பார்த்தாள்.

"அவனை விவாகரத்து செய்ற.." என்றார்.

தன் வாழ்வில் விதியாட போகும் சதிராட்டம் பற்றி தெரியாத சங்கவி இதுவே பெரிய பிரச்சனை என்று இப்போதைக்கு நினைத்து விட்டாள்.

நாளைக்கு ஒருநாளைக்கும் இந்த கதையோட யூடி வராது நட்புக்களே

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN