காதல் கணவன் 38

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அம்ருதா கனிமொழியை ஏற்ற இறக்கமாக பார்த்தாள். தன் நண்பனின் புறம் திரும்பினாள். இவளை ஏன் அழைத்து வந்தாய் என்ற கேள்வி அவளின் பார்வையில் இருந்தது.

தங்கையின் தோளில் கை போட்டு அணைத்த பாலாஜி "கனி எனக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்கோயேன்.. இன்னைக்கு ஒருநாள் மட்டும்.." என்றான்.

கனிமொழி அவனின் கையை தட்டி விட்டாள். "உனக்கு சூடு சொரணையே இல்லையா அண்ணா.?" என்று கேட்டாள் ஆத்திரத்தோடு.

அவன் மௌனமாக நின்றான். அவனிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்று அறிந்துக் கொண்டாள். கீர்த்தனாவின் புறம் திரும்பினாள்.

"நீ நிஜமா சாப்பிட போறியா.? உனக்கு என் வெற்றி அண்ணா முக்கியம் இல்லையா.?" எனக் கேட்டாள். கேட்கும்போதே அழுகை வந்தது அவளுக்கு. "உங்க காதலுக்காக அவன் எவ்வளவு விட்டு தந்தான். அவனை ஒரு மனுசனா கூட மதிக்கல நீங்க.." என்றவளுக்கு அளவுக்கு அதிகமான கோபத்தில் கண்ணீர்தான் புறப்பட்டது. சக்தியை பார்த்தாள்.

"நீங்க கூட எதுவும் சொல்ல மாட்டிங்களா மாமா?" எனக் கேட்டாள். அவளின் கன்னத்திலே அறைந்த தடம் அப்படியே இருக்க தன்னிடம் ஏக்கமாக கேட்கிறாளே என்று அவனுக்கே ஒரு மாதிரியாக இருந்தது. அவளின் ரோசம் கொஞ்சம் வியப்பை‌ தந்தது.

கீர்த்தனா பாலாஜியை முறைத்தாள். அதே சமயம் அவளால் அம்ருதாவை மறுத்து வெளியே நடக்க முடியவில்லை. திருமண நாளின் போது அவள் தங்களுக்காக செய்த சிறு சிறு உதவியை நினைவில் வைத்திருந்தாள்.

"இவ என் பிரெண்ட் கனி.. எனக்காக நிறைய நேரத்துல கூட நின்னிருக்கா. கஷ்டத்துல உடன் நின்னவங்களை மறக்க கூடாது. அதையெல்லாம் விட இவ‌ என் பெஸ்ட் பிரெண்ட்.. இன்னைக்கு ஒரு நாளைக்கு மட்டும்.." கெஞ்சலாக‌ சொன்னான் பாலாஜி.

கீர்த்தனாவும் பாலாஜியும் சொல்வதில் அவளுக்கு துளியும் உடன்பாடில்லை. சக்தியை பார்த்தாள். மரம் போல நின்றிருந்தான்.

"நான் வீட்டுக்கு போகட்டா.?" பாலாஜியை பார்த்துக் கேட்டாள்.

"அவன்தான் அவனோட பிரெண்டுன்னு சொல்றான் இல்ல.. வா.." என்ற சக்தி உள்ளே நடந்தான். கனிமொழிக்கு கண்கள் கலங்கியது. வேறு வழியில்லாமல் ‌அவனை பின்தொடர்ந்து நடந்தாள்.

"சாரிப்பா.." தோழியிடம் சொன்ன பாலாஜி மனைவியை அழைத்துக் கொண்டு நடந்தான்.

ஐவரும் அரை இருளாக இருந்த அறை ஒன்றிற்குள் நுழைந்தனர். மெல்லிய இசை ஒலித்துக் கொண்டிருந்தது. மெழுகுவர்த்திகள் எரிந்துக் கொண்டிருந்த மேஜையை சுற்றி அமர்ந்தார்கள். நடுவில் பூங்கொத்துகள் இருந்தன. எட்டு பேர் அமரும் இருக்கைகள் இருந்தன. சக்தியை விட்டு ஒரு நாற்காலி விலகியே அமர்ந்துக் கொண்டாள் கனிமொழி. இதற்கும் அவன் ஏதாவது சொல்லி விட்டால் என்ன செய்வது என்று பயந்தாள்.

மேஜையில் வைக்கப்பட்டிருந்த வண்ண மெழுகுவர்த்திகளை வெறித்த கனிமொழி இந்த இடம் தனக்கு மட்டும் அன்னியமாக தோன்றுவதை போல உணர்ந்தாள்.

சக்தி செல்போனை நோண்ட ஆரம்பித்தான். கீர்த்தனாவும் பாலாஜியும் அம்ருதாவோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள்.

"நீ உங்க வீட்டுக்கே போனதுல எனக்கு ரொம்ப சந்தோசம் பாலா.." என்றாள் அம்ருதா.

கீர்த்தனா தண்ணீரை எடுத்து குடித்தாள். அவளின் காலோடு கால் உரசினான் பாலாஜி. எரியும் மெழுகுவர்த்தியை எடுத்து அவனின் முகத்தில் தேய்க்க தோன்றியது கீர்த்தனாவுக்கு.

வெயிட்டர் வந்தார். "பத்து நிமிசம்.." என்று சொல்லி அனுப்பி வைத்தாள் அம்ருதா.

"உன்னால அந்த வீட்டுல இருக்க முடியும் பாலா.. யூ ஆர் பர்பெக்ட்.. அந்த பைத்தியக்காரன் சொல்ற எதையும் காதுல போட்டுக்காதே.." அம்ருதா சொன்னது கேட்டு பற்களை நரநரவென்று அறைத்தாள் கனிமொழி.

"என் அண்ணன் பைத்தியம் இல்ல.." என்று அவள் சொல்லிய வேளையில் அந்த அறையின் கதவு திறக்கப்பட்டது. திரும்பி பார்த்தனர் அனைவரும். கவினும் ரத்னாவும் உள்ளே வந்தார்கள்.

அம்ருதா எழுந்து நின்றாள். அருகே வந்த கவின் அவளை அணைத்துக் கொண்டான்.

ரத்னாவை கண்டதும் வழக்கமான நடுக்கம் வந்து சேர்ந்தது கனிமொழிக்கு. உள்ளே வந்த ரத்னாவின் பார்வையும் கனிமொழியை அளந்தது. தலை குனிந்துக் கொண்டாள் கனிமொழி.

"இது கவின்.. என் லவ்வர்.." என்று கீர்த்தனாவிடம் அறிமுகப்படுத்தினாள் அம்ருதா. கீர்த்தனாவிற்கு முகம் வெளுத்து விட்டது. தனது நண்பன் ஆசையாய் காதலித்த பெண் அவனை மறந்து வேற்று ஆணை நேசிக்கிறாள் என்பதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. விருந்துக்கு வந்த இடத்தில் முகத்தை காட்டுவது சரியில்லை என நினைத்து கவினை பார்த்து தலையசைத்தாள். பாலாஜியின் முகம் பார்த்தாள். அவன் இயல்பாக இருந்தான்.

'எருமை.. முன்னாடியே சொல்லி இருந்தா இங்கே வந்திருக்கவே மாட்டேன்.. வீட்டுக்கு போய் இருக்கு இவனுக்கு கச்சேரி..' என்று மனதுக்குள் பொரிந்தாள்.

கனிமொழியின் முகமோ முழுதாய் மாறி விட்டது. அம்ருதாவை அளவுக்கு அதிகமாக வெறுத்தாள். அவளின் புது காதலனையும் வெறுத்தாள்.

"இது என் சிஸ்டர் ரத்னா.." கவின் பாலாஜியிடம் அறிமுகப்படுத்தினான்.

"இது சக்தி. என் கசின். அவ கனி. என் பாப்பா.." என்று பாலாஜி சொல்லவும் உதட்டை சுளித்தபடி கனிமொழியை பார்த்தாள் ரத்னா.

கனிமொழி இடையில் அமர்ந்திருந்தால் கவினும் ரத்னாவும் அமருவது பற்றி யோசித்தார்கள்.

"பாப்பா இங்கே வந்து உட்கார்.." தன் அருகில் இருந்த இருக்கையை கை காட்டினான் சக்தி.

'இவனை நம்பி பக்கத்துல உட்காரலாமா.? பைத்தியம் போல அடிக்கறான்..' என மனதுக்குள் நொந்தபடியே எழுந்து இவனருகே வந்து அமர்ந்தாள். ரத்னாவை தவிர்க்க நினைத்தாள். ஆனால் கடைசியில் அவளின் மறுபக்கம் ரத்னாதான் அமர்ந்தாள். கனிமொழியின் மீதிருந்த விழிகளை எடுக்கவேயில்லை அவள்.

சர்வர் வந்தார். அவரவருக்கு என்ன வேண்டுமோ அதை சொன்னார்கள்.

மேஜை மேல் இருந்த பழத்தட்டிலிருந்த திராட்சை கொத்தை எடுத்த சக்தி நான்கை பறித்து வாயில் போட்டுக் கொண்டான். இரண்டை பறித்து தன் இந்த பக்கத்தில் அமர்ந்திருந்த தங்கையின் கையில் தந்தான். இன்னும் இரண்டை பறித்து கனிமொழியிடம் நீட்டினான். பழத்தை வாங்காமல் அவனின் முகத்தை வெறித்தாள் கனிமொழி. கன்னத்தை தொட்டுக் கொண்டாள். அவனை முறைத்தபடியே பழங்களை பிடுங்கினாள்.‌ அவள் பிடுங்கிய வேகத்தில் அவளின் கை விரல் நகங்கள் பட்டு அவனின் கையில் சிறு சிராய்ப்பு உண்டானது. அதை இருவருமே கவனிக்கவில்லை.

உணவு வந்தது. கனிமொழியை தவிர அனைவரும் உரையாடினர்.

ரத்னாவுக்கு கனிமொழியின் இயல்பான முகம் பார்த்து என்னவோ போல இருந்தது. எரிச்சலாக வந்தது. தன் தட்டிலே இருந்த சிக்கன் குழம்பு கிண்ணத்தை எடுத்து வெளியே வைத்தாள். கொதித்துக் கொண்டிருந்தது குழம்பு. எடுத்து வைத்த அவளுக்கே விரல்கள் சுட்டு விட்டது.‌

சக்தி கனிமொழியின் தட்டை கவனித்தான். குழம்பு, குருமா, கீரை பொரியல், கிச்சடி, ஊறுகாய், கத்தரிக்காய் கூட்டு என்று அனைத்தையும் ஒன்றாய் சேர்த்து உணவில் பிசைந்துக் கொண்டிருந்தாள். சக்திக்கு சிரிப்பு வந்தது. அப்பளத்தை நொறுக்கி அதையும் பிசைந்தாள்.

"சாப்பிட ஆசையா.? இல்ல அப்படியே விட்டுட்டு போக போறியா.?" எனக் கேட்ட சக்தியை கவனிக்காதவள் யோசனை வந்தவளாக நிமிர்ந்தாள்.

"பாலா அவங்க ரசம் தரல.." என்றாள். அங்கிருந்த அனைவருமே அசைவத்தை ஒரு பிடி பிடித்துக் கொண்டிருந்தார்கள். இவளோ பருப்பு சாதம் வாங்கி வைத்துக் கொண்டு ரசம் இன்னும் வரவில்லை என்றுச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

"ரசம் இல்ல.. இந்தா ஆட்டுக்கால் சூப்.. வேணும்ன்னா கலந்து அடி.." என்று தன் தட்டில் இருந்ததை எடுத்து கனிமொழியின் அருகில் வைத்தான் சக்தி.

"நல்லாருக்குமா மாமா.?" சந்தேகமாக ‌கேட்டாள் சூப்பை பார்த்தபடியே.

அவளின் தட்டிலிருந்த கலவையை பார்த்தவன் "அந்த மிக்ஸிங்கே நல்லாருக்கும்போது இது கூட சேருவதால ருசி ஒன்னும் குறையாது.." என்றான் குத்துமதிப்பாக யூகித்து.

கனிமொழி சூப்பை தட்டில் ஊற்றினாள். அதையும் பிசைந்தாள். ஒரு வாய் உண்டாள்.

"நல்லாருக்கு மாமா.." என்றாள் அவனை பார்த்து.

அதே நேரத்தில் ‌தன் தட்டின் மறுப்பக்கத்தில் இருந்த தயிர் கப்பை எடுக்க முயல்வது போல கையை நீட்டிய ரத்னா குழம்பு கிண்ணத்தை கனிமொழி அமர்ந்திருந்த இடம் நோக்கி தள்ளி விட்டாள். குழம்பு கிண்ணம் நேராய் சென்று கனிமொழியின் தொடையில் விழுந்தது.

"அம்மா.." சுடிதாரையும் பேண்டையும் தாண்டி சுட்டு விட்டது குழம்பு.

பதறியபடி எழுந்து நின்றாள் கனிமொழி.

"சாரி.." என்று விரல்களை அசைத்தாள் ரத்னா.

கண்ணீர் கொட்டியது கனிமொழிக்கு. பாலாஜியும் கீர்த்தனாவும் எழுந்து ஓடி வந்தனர். சக்தி மேஜையிலிருந்த தண்ணீரை எடுத்து கனிமொழியின் தொடை மீது ஊற்றினான்.

"எரியுது பாலா.." விம்மியவளின் முகம் பார்த்த சக்தி "ஹாஸ்பிட்டல் போலாமா.?" எனக் கேட்டான்.

அழுதபடி சரியென்று தலையசைத்தாள்.

"வெறும் குழம்பு கொட்டியதுக்கு இவ்வளவு சீனா.?" என கேட்ட ரத்னாவை முறைத்தனர் சக்தியும் பாலாஜியும்.

"கவனமா இருக்க தெரியாதா.? சுடு குழம்பை இப்படி ஊத்தி விட்டுட்டு சீன்னுன்னு பேசுற.." என்று அதட்டினான் சக்தி.

"வேணாம் மாமா.. விடுங்க.." என்ற கனிமொழி ஒற்றை காலை மட்டும் உயர்த்தியபடி நின்றாள். எரிச்சல் அதிகமாகிக் கொண்டே இருப்பது போலிருந்தது.

"நீங்க சாப்பிட்டு வாங்க.. நான் இவளை ஹாஸ்பிட்டல் கூட்டி போறேன்.." என்ற‌ சக்தி கனிமொழியை அழைத்துக் கொண்டு நடந்தான்.

"ஒரு நிமிசம் மாமா.." என்று அவனின் பிடியிலிருந்து விலகி வந்த கனிமொழி தனது தோளோடு இருந்த சிறு கைப்பையிலிருந்து இருநூறை ரூபாய் நோட்டை எடுத்து பாலாஜியிடம் தந்தாள்.

"உனக்காகதான் நான் இந்த ஹோட்டலுக்குள்ள வந்தேன். ஆனா அவங்க வாங்கி‌ தரும் சாப்பாட்டை என்னால சாப்பிட முடியாது. இந்த சாப்பாட்டு விலை இதை விட அதிகமா இருந்தா‌ ‌நீ கொடுத்துடு..‌ நான் உனக்கு அப்புறமா திருப்பி தந்துடுறேன்.." என்றவள் அவனின் கையில் பணத்தை திணித்து விட்டு வெளியே நடந்தாள்.

நொண்டியபடி நடந்த கனிமொழிக்காக காரின் கதவை திறந்து விட்டான் சக்தி.

"உன் தங்கச்சிக்கு உன் அண்ணனை விடவும் திமிர் அதிகம்.." அம்ருதா சிக்கனின் எலும்பை மென்றபடியே சொன்னாள்.‌

"இது திமிர் இல்ல.. தன்மானமா இருக்கலாம்.." என்ற கீர்த்தனா நிமிர்ந்தாள். "நானும் கூட இவனுக்காகதான் வந்தேன் அம்ருதா.. ஒரு குடும்பம்ன்னா ஒருத்தர் இன்னொருத்தரோட இன்ப துன்பத்தை உணர்ந்தாகணும். அப்படி பார்த்தா எங்க வெற்றியோட வலியை உணர்ந்த எங்களால நிச்சயம் உன் செலவை சந்தோசமா ஏத்துக்க முடியாது. இவனுக்கான மட்டும் இருக்கேன்.." என்றாள்.

அம்ருதாவின் முகம் சோர்ந்தது. பாலாஜி ‌‌அவளை கெஞ்சலாக பார்த்தான். நண்பனுக்காக என்று நினைத்து அவளும் அமைதியாகிக் கொண்டாள்.

கார் சென்றுக் கொண்டிருந்தது. லேசாக விம்மிக் கொண்டே இருந்தாள் கனிமொழி.

"பாப்பா.. ரொம்ப வலியாடி.?" பயத்தோடு கேட்டான் சக்தி.

"ம்ம்.." என்றவளின் கன்னங்களில் நிற்காமல் கொட்டிக் கொண்டிருந்தது கண்ணீர்.

"காயத்தை காட்டு.." என்றவனை குழப்பத்தோடு பார்த்தாள்.

"பேண்டை கழட்டு.." என்றான்.

"எதுக்கு.? அதுக்கும் அடிச்சி வைப்ப.." என்று அழுதவளை கண்டு நெற்றியில் அடித்துக் கொண்டான். "உனக்கு அகங்காரம் ஏறியிருந்தா அடிக்கதான் செய்வாங்க.. இப்ப டிரெஸ்ஸை கழட்டு.." என்றான்.

கால்சட்டையை கொஞ்சமாக கழட்டி டாப்பை கொஞ்சமாக மேலே உயர்த்தினாள். சிவந்திருந்த தொடையில் சின்ன சின்னதாக கொப்புளங்கள் இருந்தன.

"அந்த பொண்ணோட கையை உடைச்சி விட்டிருக்கணும்.." என்று பற்களை கடித்தவன் சாலையோரம் காரை நிறுத்தினான். எதிரே இருந்த கடைக்கு ஓடினான். சற்று நேரத்தில் திரும்பி‌ வந்தவன் ஐஸ் கட்டியாய் மாறி இருந்த தண்ணீர் பாக்கெட்டை நீட்டினான். "இதை கொஞ்ச நேரம் வை.. ஹாஸ்பிட்டல்ல மருந்து போட்டுக்கலாம்.." என்றவன் காரை வேகமாக ஓட்டினான்.

கனிமொழியிடம் காட்டப்பட்ட பாசத்தை பற்றி நினைத்துக் கொண்டிருந்த ரத்னா கனிமொழியை எப்படி பழிவாங்குவது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN