காதல் கணவன் 39

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வெற்றியின் வீட்டின் முன்னே வந்து நின்றது பாரதியின் ஸ்கூட்டி.

அவள் கதவை தட்டும் முன்பே பாய்ந்துக் கொண்டு கதவை திறந்தான் வெற்றி. "வாங்க பாரதி." என்று புன்னகையோடு அவளை உள்ளே அழைத்தான்.

பாரதி தயக்கத்தோடு வீட்டுக்குள் வந்தாள். சிறிய வீடு. ஒரு சமையலறையும் படுக்கையறையும் ஹாலும் மட்டுமே இருந்தது.

"உட்காருங்க.." என்று நாற்காலியை கை காட்டினான். "மூனு நாலு மாசம்தானே ட்ரெய்னிங்.? அதனால பர்னிச்சர்ஸ் எதையும் வாங்கி வைக்கல.." என்றவன் ஓடிச்சென்று கண்ணாடி குவளை நிறைய தண்ணீரைக் கொண்டு வந்து தந்தான்.

"டீ காப்பி சாப்பிடுறிங்களா.?" என்று உபசரிப்போடு கேட்டான்.

"ஐயையோ வேணாங்க நான் இப்பதான் சாப்பிட்டு வந்தேன்.."‌ என்றவள் எழுந்து நின்றாள். "வெளியே போகலாமா.?" எனக் கேட்டாள்.

"என் பைக்ல போலாமா.? இல்ல உங்க ஸ்கூட்டியில் போலாமா.?" என்று தன் பின்னங்கழுத்தை தேய்த்தபடி கேட்டான்.

யோசித்தவள் "நானே ஸ்கூட்டி ஓட்டுறேன்.." என்றபடி முன்னால் நடந்தாள்.

ஸ்கூட்டியை இயக்கியவள் "உங்ககிட்ட கார் இல்லையா சார்.?" என கேட்டாள்.

காரைப் பற்றிய பேச்சு ஆரம்பித்ததும் தானாய் முகம் மாறியவன் "என்கிட்ட இல்ல பாரதி.." என்றான் சோகமாக.

'ஒருவேளை இவருக்கு நிறைய கடன் இருக்குமோ?' என நினைத்த பாரதி அதை அவனிடம் கேட்கவில்லை.

"லெப்ட்ல போனா ஒரு அணைக்கட்டு.. ரைட்ல போனா வாட்டர் பார்க்.." என்றவளிடம் "நேரா போனா.?" எனக் கேட்டான் அவன்.

"எங்க‌ வீடு‌ வரும்.." என்றாள் கேலியாக.

"அப்படின்னா அங்கேயே போகலாம்.." அவன் கேலி இல்லாமல் சொன்னான். ஆனால் அவளோ இடது பக்கமாக ஸ்கூட்டியை திருப்பினாள். சிரித்தான் வெற்றி. வெட்கத்தில் சிவந்தது அவள் முகம்.

அவளின் தோளை பற்றினான். நட்பின் தொடுகைதான். ஆனாலும் அவனுக்கே ஏதோ போலதான் இருந்தது.

"மகனே.. என்னை தவிர வேற எந்த பொண்ணோட கையையாவது பிடிச்ச உன் கை விரல் எல்லாத்தையும் வெட்டி போட்டுவேன்‌‌.." அம்ருதா என்றோ சொன்னது இப்போது நினைவில் வந்து நெஞ்சில் தீயை வந்தது.

அவள் அவ்வளவு திட்டியும் கூட அவளின் நினைவுதான் வந்தது. அவளின் கொஞ்சல் மொழிகளையும், மிரட்டும் பார்வையையும், நெஞ்சத்தில் நேசத்தை நிரப்பி தரும் அவளின் வாசத்தையும், தனக்குள்ளும் பல உணர்வுகளை பிறப்பெடுக்க வைத்த அவளின் மேனியையும் மறக்க முடியவில்லை அவனால். அவனில் பாதியாய், அவனின் மீதியாய், அவனின் மனம் முழுக்க அவளாய் மட்டுமே இருந்தாள். பொழுதுபோக்கிற்காக பழகினாள் என்று நம்பவே முடியவில்லை அவனால்.

எவ்வளவு காதலை அவளிடம் கொட்டினான்.! எவ்வளவு காதலை அவளிடமிருந்து பெற்றான். அத்தனையும் பொய் என்று கனவில் கூட நம்ப முடியவில்லை.

ஆனால் நம்பினாலும் நம்பாவிட்டாலும் உண்மை அதுதான் என்று சூழ்நிலை செருப்பால் அடித்துச் சொன்னதே! நான்கு நாட்கள் முன்பு கூட முத்துராம் போன் செய்து அம்ருதாவின் புது காதலன் பற்றி சொன்னானே. நம்பவே முடியவில்லை. இப்போது வரையிலும் அந்த உண்மையை ஜீரணித்து கொள்ள முடியாமல் இருக்கிறான்.

அவளை மறக்க வேண்டும் என்று எத்தனையோ விசயங்களுக்கு கவனத்தை திருப்பிப் பார்த்தான். ஒன்றும் வேலைக்காகவில்லை. கடைசியில் தன் கோபம் மீதுதான் அவனுக்கு கோபம் வந்தது. தான் கோபப்படாமல் இருந்திருந்தால் அவள் தன்னோடு இருந்திருப்பாள் என்று நினைத்தான். தனது கோபத்திற்கு காரணமான தனது சகோதரன் மீது கொலைவெறி கொண்டான்.

அணைக்கட்டின் முன்னால் ஸ்கூட்டியை நிறுத்தினாள் பாரதி.

"இறங்குங்க சார்.." என்றாள் சில நிமிடங்கள் காத்திருந்து விட்டு.

"சாரி.. வேற ஏதோ ஞாபகம்.." என்றவன் இறங்கினான்.

"அடிக்கடி இப்படிதான் காணாம போயிடுறிங்க.? என்ன சார், ஏதும் லவ்வா.?" கேலியாக கேட்டாள் ஸ்கூட்டிக்கு‌ ஸ்டேன்ட் போட்டபடி.

"ம்ம்.. லவ்தான்.. வேணாம்ன்னு சொல்லி ப்ரேக்அப் பண்ணிட்டா.." என்றவன் இறுகிய முகத்தை மாற்றிக் கொண்டு அவளை பார்த்து புன்னகைத்தான். அதிர்ச்சியின் பிடியிலிருந்தவள் அவனின் முக மாற்றம் கண்டு வியந்து போனாள்.

"சாரி சார்.."

"அவளை மறக்கதான் இவ்வளவு தூரம் ஓடி வந்திருக்கேன்.. அவளை விடுங்க.. வாங்க உள்ளே போகலாம்.." என்றவன் பைக் ஒன்றின் ஹாரன் சத்தம் கேட்டு திரும்பினான்.

நரேஷ் சற்று தள்ளி தனது பைக்கை நிறுத்தினான். அன்று பார்த்தது போல க்ரீஸ் கையும் அழுக்கு உடையுமாக இல்லாமல் அம்சமாக இருந்தான். ஏகப்பட்ட குட்டி வளையங்கள் மாட்டி இருந்த ஜீன்ஸையும், காலர் இல்லாத கை இல்லாத சட்டையையும் அணிந்து இருந்தான். அவனோடு சேர்ந்து அன்று பார்த்த குட்டி பையனும் வந்திருந்தான். பாரதியை பார்த்து கையை ஆட்டினான்.

"ஹாய் அக்கா." என்றான்.

பாரதி அவர்கள் இருவரையும் கேள்வியாக பார்த்தாள்.

"என்ன மேடம்.? சார் கூட அவுட்டிங்கா?" என கேட்டபடி முன்னால் வந்தான் நரேஷ்.

"எங்களை பாலோவ் பண்றியா நீ?" கோபத்தோடு அவனை நெருங்கினான் வெற்றி.

"ஹலோ பாஸ்‌. இது பொது இடம். இங்கே யார் வேணாலும் வந்து போகலாம். உங்களை பாலோவ் பண்ண நீங்க என்ன கேத்ரினா கைப்பா.?" என கேட்ட நரேஷ் "நீ வாடா வண்டு, நாம உள்ளே போய் சுத்தி பார்க்கலாம்.." என்று அந்த சிறுவனை அழைத்துக் கொண்டு உள்ளே நடந்தான்.

"அவனை இக்னோர் பண்ணிடுங்க.." என்ற பாரதி அவனின் கையை பற்றினாள். உள்ளே நடந்தாள். தீண்டப்பட்ட கரங்களில் குட்டி குட்டி ஸ்பார்க் உண்டாகி இருக்கலாம் என்று தோன்றியது அவனுக்கு. 'அதுக்கு நீ கரண்டு கம்பியில்தான் கையை தரணும்..' என்று கற்பனையில் வந்து சொல்லிச் சென்றான் முத்துராம்.

இருவரும் அணைக்கட்டின் அருகே இருந்த மீன் அருங்காட்சியத்திற்குள் நுழைந்தனர்.

இவர்களுக்கு முன்பே அங்கிருந்தனர் நரேஷூம் வண்டும்.

"டேய் வண்டு.. இந்த மஞ்ச மீன் ஓவர் அழகா இருக்கு இல்ல.?" நரேஷ் மீனை பார்க்காமல் பாரதியை பார்த்துக் கேட்டான்.

'தெரிஞ்சிருந்தா மஞ்சளுக்கு பதிலா கருப்பு டிரெஸ் போட்டு வந்திருப்பேன்..' என்று நினைத்த பாரதி தண்ணீருக்குள் இருந்த குட்டி ஆமையை பார்த்து கையை ஆட்டினாள்.

"க்யூட்டா இருக்கு.." என்றாள் ஆமையின் நீச்சலை கண்டு. அவளின் புன்னகை முகத்தை பார்த்தபடியே போனை காட்டினான் நரேஷ்.

புகைப்படம் எடுக்கிறான் என்பதை புரிந்துக் கொண்ட வெற்றி வேகமாய் சென்று அவனின் முகத்தில் ஓங்கி குத்தினான். ஒரே குத்தில் மூக்கில் ரத்தம் வந்து விட்டது. சுற்றி இருந்தவர்கள் இவர்களை கண்டு அருகில் வந்தனர்.

"போனை கொடுடா.." என்று பிடுங்கியவன் கைபேசியை ஆராய்ந்தான். பாரதியின் புகைப்படம் இருந்தது. மறுபடியும் ஒரு குத்து விட்டான். புகைப்படத்தை அழித்தான். மற்ற புகைப்படங்களை பார்த்தான். பாரதிதான் இருந்தாள். நூறு ஆயிரமென்று புகைப்படமாய் இருந்தாள்.

"ஸ்டாக்கிங் பண்ணிட்டு இருக்கான் பாரதி.." என்று போனை காட்டினான்.

புகைப்படங்களை கண்டவள் அதிர்ந்துப் போனாள்.

"நா.. நான்தான்.. ஆனா ஏன் இத்தனை போட்டோ எடுத்து வச்சிருக்கிங்க.?" அப்பாவியாய் அவனைப் பார்த்து கேட்டாள்.

"சாரி.. தெரியாம எடுத்துட்டேன்.." என்றவனின் கன்னத்தில் அறைந்தான் வெற்றி.

"சும்மா சும்மா அடிக்காதிங்க அண்ணா.. இவர்தான் சாரி சொல்லிட்டாரு இல்ல.. அதுவும் இல்லாம அந்த போட்டோவெல்லாம் அவர் எடுக்கல. நான்தான் எடுத்தேன்.." என்ற வண்டுவை முறைத்தான் வெற்றி.

"போட்டோ நீ எடுத்தியா.? கொழுப்பாடா உனக்கு?" என்று அவன் தலையில் கொட்ட போனான். வெற்றியின் கையை தடுத்தான் நரேஷ்.

"டோன்ட் டச் ஹிம்.." சிறு குரலில் எச்சரித்தான்.

"இவனையெல்லாம் போலிஸ்ல பிடிச்சி தரணும்ப்பா.." என்றார் அருகில் இருந்த ஒருவர்.

"வே.. ‌வேண்டாம்.." என்ற பாரதி "விட்டுடுங்க சார்.." என்றாள் வெற்றியிடம். நரேஷின் புறம் பார்த்தவள் "ப்ளீஸ் அந்த போட்டோஸை அழிச்சிடுங்க.. எங்க வீட்டுல தெரிஞ்சா பிரச்சனையாகிடும்.." என்றாள் சிறு பயத்தோடு.

வெற்றியே அனைத்து புகைப்படங்களையும் அழித்தான். பிறகுதான் பார்த்தான். போனின் முன் திரையிலும் பாரதிதான் புன்னகைத்தபடி இருந்தாள். பாரதிக்கு முகம் வெளிறி விட்டது. வியர்வை அரும்பியது.

"ஏ.. ஏன் என் போட்டோவை வச்சிருக்கிங்க.?" என்றாள்.

நரேஷ் பதில் சொல்லாமல் தரை பார்த்தான்.

"முழுசா உங்க போட்டோதான் இருக்கு பாரதி.." என்று நரேஷிடம் போனை நீட்டியவன் "முழுசையும் அழி.." என்றான்.

நரேஷ் முகம் வாடி போனான். புகைப்படத்தை அழிப்பது கூட பெரும் வருத்தமாக இருந்தது அவனுக்கு.

பாரதியின் கலங்கிய கண்களை கண்ட நரேஷ் "சாரி.." என்றான்.

நரேஷூம் வண்டும் அங்கிருந்து கிளம்பி போனார்கள்.

"இதை மறந்துடுங்க.." என்ற வெற்றி அவளை அழைத்துக் கொண்டு அருங்காட்சியகத்திற்குள் நடந்தான்.

"அண்ணிக்கு உங்களை பிடிக்கல.." என்ற வண்டு வண்டியின் முன்னால் ஏறி அமர்ந்தான்.

"பரவால்ல விடுடா.. அந்த சார் அவளுக்கு பொருத்தமா இருப்பாரு.. ஜோடி பொருத்தம் கூட நல்லா இருக்கு.." என்ற நரேஷ் வண்டுவின் முதுகை அணைத்தபடி வண்டியை இயக்கினான். வண்டி நகர ஆரம்பித்ததும் வண்டு வண்டியை ஓட்ட ஆரம்பித்தான்.

"பார்த்து ஓட்டு.." என்றபடி வழியிலேயே அவனுக்கு பயிற்சி தர ஆரம்பித்தான் நரேஷ்.

அழகழகான மீன்கள் நிறைய இருந்தன. ஆனால் எதிலும் கவனம் வர மறுத்தது பாரதிக்கு.

வெற்றி அவளின் மனம் மாற்றலாம் என நினைத்த நேரத்தில் அவனின் போன் ஒலித்தது. சக்தி அழைத்திருந்தான்.

"வெற்றி.." கனிமொழியின் அழைப்பில் சிறு கலக்கம் இருந்தது.

"கனி.. என்னாச்சி.? குரல் ஏன் ஒரு மாதிரியா‌‌ இருக்கு.?" என்றான் இவன்.

"லேசா கோல்ட் பிடிச்சிருக்கு‌‌.." என்றவள் தயக்கத்தோடு "அண்ணா அந்த அம்ருதா உனக்கு வேணாம்.." என்றாள்.

'வேணாம்ன்னுதானே இங்கே வந்திருக்கேன்..' என்று மனதோடு சொன்னவனிடம் "அம்ருதாவுக்கு புது லவ்வர் இருக்கான் அண்ணா.. அவளுக்கு கொஞ்சம் கூட லவ் பெயிலியர் பீல் கூட இல்ல.. ரொம்ப சகஜமா அவனோடு பழகிட்டு இருக்கா.. மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சி எனக்கு.." என்றாள்.

அவனுக்கு கஷ்டம் வந்ததோ இல்லையோ அவளின் மன கஷ்டம் கண்டு வருத்தம் வந்தது‌.

"பீல் பண்ணாத கனி.. அவ வேணாம் நமக்கு. அவளுக்கு லவ்வர் இருந்தா என்ன இல்லன்னா என்ன.?" என்றவன் பாரதியை பார்த்துவிட்டு "என் சிஸ்டர்.. பேசுறிங்களா.?" என்று போனை நீட்டினான்.

அவள் கையை நீட்டவும் ஒரு நொடி என்று சைகை காட்டிவிட்டு போனை காதில் வைத்தான். "என் பிரெண்ட்.. பாரதி.. அவங்களோடு பேசு கனி‌‌" என்று போனை நீட்டினான்.

"ஹலோ.." தயங்கினாள் கனிமொழி.

"ஹாய் சிஸ்டர்.. சாப்பிட்டிங்களா.? என்ன பண்றிங்க.? என்ன வொர்க் பண்றிங்க.?" என்று கேள்விகளை அடுக்கினாள் பாரதி.

"சாப்பிட்டேன் சிஸ்டர்.. நான் இப்ப சும்மா இருக்கேன்.. நான் வொர்க் பண்ணல. டுவெல்த் ஸ்டேன்டர்ட்.." என்றாள்.

"குட்டிப் பாப்பாவா நீங்க?" என்று எதிர்முனையில் அவள் கேட்க இங்கே கனிமொழிக்கு மூக்கு சிவந்தது. "நான் குட்டிப் பொண்ணு இல்ல.." என்றாள் காரை ஓட்டிக் கொண்டிருந்தவனை முறைத்தபடி.

சக்தி அவளை நக்கலாக பார்த்துவிட்டு பார்வையை திருப்பிக் கொண்டான்.

"ஓ. ஓகே..? நான் பாரதி. உங்க அண்ணா டிரெயினிங் வந்திருக்கும் பேங்க்ல வொர்க் பண்றேன்‌.."

"சூப்பர் சிஸ்டர். என் அண்ணா ரொம்ப நல்லவன்.. அவனுக்கு கூச்ச சுபாவம் அதிகம். அவனா எதையும் வாய் திறந்து சொல்ல மாட்டான். அவன் ரொம்ப சாஃப்ட் டைப்.‌ பட்டாம்பூச்சியை கூட கூட்டு புழுவா பார்க்கும்போது பயந்துடுவான். அது சிறகடிச்சி பறந்தாதான் அது பட்டாம்பூச்சின்னு நம்பி ரசிக்கவே ஆரம்பிப்பான்.. யாராவது சத்தமா பேசினா கூட அவனுக்கு ஆகாது.." என்று தனது பொய்களை வாரி வழங்கிக் கொண்டிருந்த கனிமொழியை ஆச்சரியத்தோடு வாய் பிளந்துப் பார்த்துக் கொண்டிருந்தான் சக்தி.

எதிர் முனையில் இருந்தவளும் சக்தியின் நிலையில்தான் இருந்தாள். கைபேசியில் புகைப்படம் வைத்திருந்தவனையே அந்த புரட்டு புரட்டி எடுத்தவன் எப்படி அமைதியானவனாக இருக்க முடியும் என்ற சந்தேகம் அவளுக்கு.

"நீங்க என் அண்ணாவை பத்திரமா பார்த்துக்கங்க.. நான் அப்புறமா கால் பண்றேன்.." என்ற கனிமொழி அழைப்பை துண்டித்து போனை சக்தியிடம் நீட்டினாள். "தேங்க்ஸ் மாமா.." என்றாள். அதே நேரத்தில் கிளினிக் ஒன்று பார்வைக்கு வந்து விட்டது.

காரை கிளினிக் முன்பு நிறுத்தினான் சக்தி. அவனின் திடீர் நிறுத்ததால் அவளின் கையிலிருந்த போன் கீழே விழுந்தது. அவள் குனியும் முன் அவனே குனிந்து போனை எடுத்து விட்டான். ஆனால் நிமிர்ந்தவனின் நெற்றியோடு பதிந்து விட்டது போனை எடுக்க முயன்றவளின் இதழ்கள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN