அத்தியாயம் 55

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
யஷ்வந்த் ஹோட்டலின் வரவேற்பறையில் இருந்த பெண்ணிடம் விவரம் சொன்னான். சாவியை தந்தாள் அவள். தரையில் இருந்த சூட்கேஸை இழுத்தவன் மனைவியின் கைப்பிடித்தான்.

"போலாம் தாரு.." என்று அறைக்கு அழைத்துப் போனான்.

குளிரால் அவனை நெருங்கி நடந்தாள். அவனோ உதட்டை பிதுக்கினான். "இவ்வளவு தூரம் வந்ததுக்கு ஒரு லிப் கிஸ்ஸாவது தருவியா.?" வெட்கம் விட்டு அவனாகவே கேட்டான்.

பரிதாபத்தோடு அவனைப் பார்த்தவள் "உங்களை பேமிலி மேனா மாத்தி விடுறேன்.." என்றாள். நம்பிக்கை இல்லாமல் பார்த்தான்.

அறையின் கதவை அவளுக்காக திறந்து விட்டான். அலங்கரிக்கப்பட்டு இருந்தது கட்டிலும் அறையும்.

"இங்கேயுமா.?" என்றவளை பற்களை கடித்தபடி பார்த்தவன் "யவனா ஹனிமூன்க்கு ரூம் புக் பண்ணி இருக்கா.. அதனால இங்கே இப்படிதான் இருக்கும்.." என்றான்.

படுக்கையில் சென்று விழுந்தவள் ரோஜா இதழ்களை கையில் எடுத்தாள். அருகில் வந்தான் யஷ்வந்த். அவனின் முகத்தை நோக்கி பூக்களை ஊதி விட்டாள்.

அவன் முகம் மோதி தரையில் விழுந்தன பூவிதழ்கள்.

அவளை புருவம் உயர்த்தி பார்த்தவன் "மேடம் ரொமான்ஸ் பண்ற டிரை பண்றிங்க போல.." என்றான் கேலியாக.

பற்களை காட்டினாள். கட்டிலில் கிடந்த பூவிதழ்களை அள்ளி அவளின் மீது வீசினான். முகத்தை திருப்பியவளின் கன்னங்களிலும் காதுகளிலும் கவி பாடின பூவிதழ்கள். பூவிதழ்கள் தீண்டிய இடங்களில் தன் இதழ் பதிக்க ஆசை கொண்டான் யஷ்வந்த்.

அவன் வீசிய பூவிழ்களில் ஒன்று அவளின் இதழோடு ஒட்டிக் கொண்டது. பூவிதழின் மீது விரல் பதித்தவன் அவளின் இதழோடு ரோஜாவின் இதழை தேய்த்தான். கசங்கிய பூவிதழ் நிறம் இழந்து அவனின் விரலை விட்டு நழுவியது. பூவின் சாறால் தீட்டப்பட்ட அவளின் இதழ் அவனை அருகில் வர சொல்லி அழைத்தது.

அவளின் கழுத்தை பாதியும் கன்னம் பாதியுமாக பற்றியது அவனின் வலது கரம்.

இதயம் நடுங்கியது அவளுக்கு. 'உன்னால முடியும் தாரணி.. முத்தம் தருவது பெரிய விசயம் இல்ல.‌ இதுக்கு நீ பயப்பட கூடாது..' தன்னைத்தானே தைரியப்படுத்திக் கொண்டவள் அவனை நோக்கி நகர்ந்தாள். இதை யஷ்வந்த் எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக இருந்தது. மில்லி மீட்டர் வேகத்தில் நகர்ந்த அவளின் இதழ்களை புயலின் வேகத்தில் பாய்ந்து சிறை செய்தான்.

தாரணி அதிர்ச்சியில் விழிகள் விரித்தாள். கன்னத்தில் இருந்த அவனின் கரம் அவளின் கூந்தலில் நுழைந்து பின்னந்தலையை நோக்கி நகர்ந்தது.

அன்று உறங்குகையில் அவன் மட்டுமே தந்த அரைகுறை முத்தமாக இல்லாமல் அவளும் எதையோ முயற்சித்ததால் முழுமையான முத்தமாக இருந்தது இது.

நொடிகள் ஓடிக் கொண்டிருந்தது. முத்தத்தில் தன்னை மறந்தவள் மெள்ள விழிகளை மூடினாள். இதயத்தின் துடிப்பு அதுவாக எகிறி சராசரிக்கு வந்து சேர்ந்தது.

அவளாக சாய்ந்தாள்.

'ஆண்டவா.. கடைசி வரைக்கும் இவ இப்படியே இருக்கணும்..' வேண்டிக் கொண்டே அவளின் இதழில் இருந்த தன் உதடுகளை அவளின் கன்னங்களிலும் கழுத்திலும் பதிய வைத்தான்.

"யஷூ.." என்றவளின் உதடுகளை மீண்டும் தீண்டியது அவனின் இதழ்கள்.

யவனா தனது கைபேசியை பார்த்தபடி அமர்ந்திருந்தாள். தாரணியிடம் கேட்டு அவளின் வீட்டு எண்ணை வாங்கி வைத்திருந்தாள். அண்ணியை அவளின் வீட்டோடு சேர்த்து வைத்து விட வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு இருந்தவள் தனது திட்டத்தை மட்டும் வெறும் ஒரு நாளுக்கு தள்ளி போட்டிருக்கலாம்தான். ஆனால் விதி எங்கே விட்டது?

திரையிலிருந்த எண்ணுக்கு அழைப்பு விடுத்தாள்.

ரிங்டோன் அணையும் நேரத்தில் "ஹலோ.." என்றான் வருண்.

"நான் யவனா. யஷ்வந்த் சிஸ்டர்.." அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

"சாரி ராங் நம்பர்.." என்றவன் அழைப்பை துண்டிக்க இருந்த நேரத்தில் "அண்ணி பாவம்.. உங்களை பிரிஞ்ச பீலிங்க்ல அழுதுட்டே இருக்காங்க.‌" என்றாள் அவசரமாக.

எதிர் முனையில் மௌனம் நிலவியது.

"அவங்க பாவம்.. அவங்களோடு பேசுங்க.. அவங்க வீட்டை விட்டு வந்தது தப்புதான். என் அண்ணனும் பொண்ணு கேட்டு வராம நாட்களை தள்ளிப் போட்டது தப்புதான்.. மன்னிக்கலாமே நீங்க.." என்றாள் மென்மையாக.

"நான் கொஞ்சம் டென்சன்ல இருக்கேன். நீங்க போனை வைங்க‌‌.." என்று வருண் சொல்லவும் பதறியவள் "என்னங்க நீங்க.. நானே பயத்தோடு கூப்பிட்டு இருக்கேன். சமாதான வார்த்தை கூட சொல்லாம கட் பண்ணினா எனக்கு மனசு வருந்தாதா.?" எனக் கேட்டாள்.

வருண் உதட்டைக் கடித்தான். படுக்கையிலிருந்த அம்மாவை பார்த்தான். நெற்றியிலும் தோளிலும் கட்டுகள் இருந்தன. அது அவனின் அப்பாவின் கை வண்ணம்தான். வருண் வெளியே சென்றிருந்த நேரத்தில் மனைவியை திட்டி அடித்து தள்ளி விட்டு விட்டார். கதவின் முனையில் நெற்றியையும் தோளையும் தந்து விட்டாள் குணவதி. தோளிலும் நெற்றியிலும் வெட்டி விட்டது. ரத்தம் கொட்டி மயங்கி கிடந்தவளை வருண் வந்துதான் மருத்துவமனை சேர்த்தான். தான் இருந்திருக்கலாம் என்று நினைத்தான். அதே நேரத்தில் தான் இருந்திருந்தாலும் கூட எதுவும் மாறி இருக்காது என்றும் தன்னிடமே சொல்லிக் கொண்டான்.

அம்மாவின் நிலைக்கு காரணமான தங்கையின் மீதுதான் அவனுக்கு கோபம் வந்தது. அப்பாவின் இந்த முகத்தை பார்க்க பிடிக்காமல்தான் வருடத்தில் பாதி நாட்களை ஆதீரனின் வீட்டில் கடத்திக் கொண்டிருந்தான். இப்போது தங்கை காதலனோடு சென்று விடவும்‌ வீட்டை விட்டு நகர முடியாத நிலையில் இருந்தான்.

"பதிலே வரல.. போனை வச்சிட்டிங்களா?" கவலையோடு கேட்டாள் யவனா.

"உங்களுக்கு என்ன வேணும்.?" பெருமூச்சை விட்டபடியே கேட்டான்.

"ஒரு மன்னிப்பு.." என்று குழைந்தவளிடம் "நான் மன்னிக்க எதுவும் இல்லை. இது அவ லைஃப். அவ முடிவு. நான் டிசைட் பண்ண எதுவும் இல்ல. நீங்க போனை வைங்க.." என்றான்.

"யார் டிசைட் பண்ணணும்ன்னு சொல்லுங்க.. நான் அவங்களோடு பேசுறேன்.." என்று அவள் சொன்ன நேரத்தில் அந்த மருத்துவமனை அறையின் கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தார் தனபால்.

மனைவியையும் மகனையும் மாறி மாறி பார்த்தார். குணவதி உறக்கத்தில் இருந்தாள். அருகில் சென்று அமர்ந்தார். அவளின் காயங்களை வெறித்தார்.

"போன்ல யார்.?" என்றார் மகனிடம்.

"நான் அப்புறம் பண்றேன்.." என்று இணைப்பை துண்டித்தவன் "என் பிரெண்ட்‌.." என்றான்.

மேற்கொண்டு கேட்கவில்லை அவர். சிகரெட் ஒன்றை பற்ற வைத்து இழுத்தார்.

"இவளுக்கு ஹாஸ்பிட்டல் செலவு செஞ்சே என் சொத்து கரையுது.." என்றார் எரிச்சலாக.

'நீங்க அடிக்காம இருந்திருந்தா இந்த செலவு வந்திருக்காது..' என்று மனதுக்குள் சொன்னவன் தந்தையை பார்க்காமல் தலையை குனிந்தான்.

சிகரெட்டை முழுதாய் தீர்த்தார். "எப்ப டிஸ்சார்ஜ்.?" எனக் கேட்டார்‌.

"இன்னைக்கு ஈவினிங்.." என்றவன் தாயின் முகத்தை கவலையோடு பார்த்தான். 'ஏன்ம்மா இந்த ராட்சசனை கல்யாணம் பண்ணிங்க.?' என்று தனக்குள் கேட்டான்.

சங்கவி தந்தையின் முகம் பார்த்து நின்றுக் கொண்டிருந்தாள். அவரோ எதிரே இருந்த தொலைக்காட்சியை வெறித்துக் கொண்டிருந்தார். அவரிடம் பேச வேண்டி இருந்தது. ஆனால் அவர் தயாராக இல்லை.

வீட்டின் கதவு இடிக்கப்படும் சத்தத்தில் எழுந்து நின்ற சங்கவி ஓடிச் சென்று கதவை திறந்தாள். எதிரில் ருத்ர மூர்த்தியாக நின்றிருந்தான் ஆதீரன்‌.

தன் கையிலிருந்த காகிதத்தை காட்டியவன் "இதுக்கு என்ன அர்த்தம்.?" எனக் கேட்டான் மனைவியிடம்.

கலங்கிய விழிகளோடு தந்தையை பார்த்த சங்கவி "நான் இல்ல மாமா.. அப்பாதான்.." என்றாள் கேவியபடி.

அவளின் கண்ணீரை கண்டதும் அவளின் கோபம் எங்கு சென்று ஒளிந்தது என்று அவனுக்கே தெரியவில்லை.

"நான் கையெழுத்து போடலன்னா சூஸைட் பண்ணிப்பேன்னு மிரட்டினார் மாமா.." என்றாள் புறங்கையால் கண்களை துடைத்தபடி.

ஆதீரன் ஆத்திரத்தோடு மோகனை முறைத்தார். எழுந்து நின்றவர் இவனை கேலியாக பார்த்தபடியே நெருங்கினார்.

"இது என் வீடு.. கண்ட நாயும் இங்கே வர கூடாது.." என்றார்.

சங்கவிக்கு முகம் வாடி போனது.

"அப்பா.." தயக்கமாக அழைத்தவளின் கையை பற்றி தன்னருகே இழுத்தான் ஆதீரன்.

"என் பொறுமை போயிடுச்சி.. நான் நாயா கூட இருந்துட்டு போறேன். ஆனா என் மனைவியை இங்கே விட்டுட்டுப் போக முடியாது.." என்றவன் அவளை இழுத்துக் கொண்டு வெளியே நடந்தான்.

"மாமா வேணாம்.. அப்புறம் அப்பா ஏதாவது பண்ணிப்பாரு.." பயத்தோடு‌ ‌கெஞ்சினாள்‌ சங்கவி.

அவளின் முகம்‌ பார்த்தவன் "அப்படின்னா நான் ஏதாவது பண்ணிக்கிட்டா உனக்கு ஓகேவா.?" எனக் கேட்டான்.

கையை உதறிக் கொண்டவள் தலையை பிடித்தாள்.

"இப்படி உங்க இரண்டு பேர்கிட்டயும் இடிபடுவதை விட நானே ஏதாவது செஞ்சிக்கலாம்.." என்றாள்.

பதறியபடி அவளை இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டான் ஆதீரன்.

"அப்படி வார்த்தைகளா கூட சொல்லாதே.." என்று மிரட்டினான்.

"எனக்கு நீங்க இரண்டு பேரும் வேணும் மாமா.." என்றவள் தந்தையின் புறம் பார்த்தாள். இவளை முறைத்துக் கொண்டு நின்றார் அவர். அவரை நோக்கி நடக்க இருந்தவளை பிடித்து தன்னோடு ‌இருக்க வைத்தான் ஆதீரன். "அவர் எதுவும் செஞ்சிக்க மாட்டாரு.." என்றான். புரியாமல் பார்த்தாள்.

"நம்பு.." என்றவன் அவளை இழுத்துக் கொண்டு காருக்குச் சென்றான். அவளை வலுக்கட்டாயமாக அமர வைத்தான். காரை கிளப்பினான். சங்கவி கலங்கும் விழிகளோடு தந்தையைப் பார்த்தாள். அவர் சிலையாக நின்றிருந்தார்.

"மாமா அவர் பாவம்.." கெஞ்சினாள்.

அந்த வீட்டை தாண்டியதும் காரை நிறுத்தினான். தன் பாக்கெட்டில் கசங்கி கிடந்த தாளை எடுத்து காட்டியவன் "டைவர்ஸ் நோட்டிஸை பார்த்ததும் செத்துட்டேன் சங்கவி.." என்றான்.

சங்கவி விம்மினாள். அவளின் முகத்தை அள்ளினான்.

"என்னால உன்னை பிரிய முடியாது சங்கவி. உனக்கு டைவர்ஸ் தருவதை விட உன்னை விதவையா விட்டு போவது எனக்கு கம்மியான வலியை தரும்.." என்றான்.

சங்கவியின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது. துடைத்து விட்டான். "இந்த நிலையில் நீ அழுவது கூட எனக்கு கஷ்டமா இருக்கு சங்கவி.. புரிஞ்சிக்க என்னை.." என்றவன் அவளை அணைத்துக் கொண்டான்.

"உன் அப்பா எதுவும் செஞ்சிக்க மாட்டாரு.. என்னை நம்பு.." என்றான்.

வீட்டை நோக்கி காரை ஓட்டினான்.

"அழாதே‌." என்றான் ஒன்றிரண்டு முறை.

வீடு வந்ததும் அவளுக்காக கார் கதவை திறந்து விட்டான். இறங்கியவளின் கைப்பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான்.

புது சமையல்காரியிடம் பால் எடுத்து வர சொன்னான். சங்கவியை அழைத்துச் சென்று முகம் சுத்தம் செய்ய வைத்தான்.

இவனின் மனதை மாற்றி அப்பாவிடம் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தாள் சங்கவி. அவர் அதுவரை எதுவும் செய்துக் கொள்ள கூடாது என்று வேண்டிக் கொண்டாள்.

பால் வந்ததும் சூடு பார்த்து அவளிடம் தந்தான்.

அவள் பால் பருகுவதை ஆவலோடு பார்த்தான்.

அவள் குடித்து விட்டு கொஞ்சமாக மீதி வைத்த பாலை சுவைத்தான். சங்கவிக்கு அந்த கவலையிலும் வெட்கத்தால் முகம் சிவந்தது.

"டம்ளரை விழுங்கிடாதிங்க.." கிண்டல் செய்தவளை முறைத்தவன் "இந்த ஒன்னரை வாரமா நான் பட்ட கஷ்டம் என்னன்னு எனக்குதானே தெரியும்.?" என்றான். "உன்கிட்ட ஓடி வரணும்ன்னு இருந்தது. ஆனா முடியல. நினைச்ச நேரத்துக்கு போன்ல கூட பேச முடியல. உங்க அப்பா சரியான வில்லன் சங்கவி.." என்று குற்றம் சாட்டினான்.

சங்கவி சின்னதாக சிரித்தாள்.

"சார்.." அவளின் சிரிப்பை கலைக்கும் ஒலித்தது வீட்டின் காப்பாளர் குரல்.

ஆதீரன் திரும்பினான்.

"உங்களை பார்க்க வந்திருக்காங்க சார்.." என்று பக்கத்தில் கையை காட்டினான்.

போலிஸ் இன்ஸ்பெக்டர் சக்தியும் வனஜாவும் நின்றுக் கொண்டிருந்தார்கள்.‌ அவர்களோடு மோகன் இருந்தார்.

ஆதீரனை முறைத்தபடியே உள்ளே வந்தாள் சக்தி.

"உங்க மேல கம்ப்ளைண்ட் வந்திருக்கு.." என்றாள்.

ஆதீரன் தன் மாமனாரை முறைத்தபடியே எழுந்து நின்றான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN