காதல் கணவன் 40

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சக்தி அதிர்ச்சியோடு கனிமொழியின் புறம் பார்த்தான்.

பயத்தில் கண்களை மூடியபடி கன்னத்தை பிடித்து அமர்ந்திருந்தாள் அவள்.

அவளின் பயந்த முகம் கண்டு சக்திக்கு ஏதோ போல இருந்தது.

"ஏன்டி பாப்பா என்னை இப்படி கஷ்டப்படுத்துற.?" எனக் கேட்டான் வருத்தத்தோடு.

விழிகளை மெள்ளத் திறந்தவள் "நீங்கதானே மாமா எப்பவும் என்னை அடிக்கிறிங்க.?" எனக் கேட்டாள்.

அவளின் கன்னத்தோடு இருந்த கரங்களை விலக்கினான்.

"சாரிடி.. நான் காலையில் உன்னை அடிச்சிருக்க கூடாது. தெரியாமதான் உன் கை பட்டுச்சி.. நான்தான் கோபத்துல அடிச்சிட்டேன். சாரி.." என்றான்.

அவனை யோசனையோடு பார்த்தாள். அவனின் வருத்தம் குரலில் நன்றாக தெரிந்தது.

அவளின் காலை பார்த்தான். கால் சட்டை நழுவியிருந்த இடத்தில் காயம் பளிச்சென்று தெரிந்தது.

"அந்த பொண்ணு ப்ளான் பண்ணி இதை பண்ண மாதிரியே தோணுது.. அவளை உனக்கு முன்னவே தெரியுமா.?" எனக் கேட்டான் அவளின் தொடை மீதிருந்த ஐஸ் தண்ணீரை எடுத்தபடி.

"தெ.. தெரியாது மாமா.." பொய்யை சொன்னவள் கால்சட்டையை இருக்கும் இடம் சேர்ப்பித்தாள்.

"இறங்கு.." என்றவன் கிளினிக்கில் இருந்த ஆண் மருத்துவரை கண்டதும் முகம் சுளித்தான்.

"நாம வேற கிளினிக் போகலாம்.." என்றான்.

கனிமொழி உள்ளே நடந்தாள். "ரொம்ப எரியுது மாமா.." என்றாள்.

கிளினிக்கில் இருந்த மருத்துவர் சக்தி சொன்னதை கேட்டு விட்டிருந்தார்.

"என்ன ஆச்சி.?" என்றார் கனிமொழியிடம்.

"குழம்பு தொடையில் கொட்டிடுச்சி டாக்டர்.. கொப்புளம் கூட வந்துடுச்சி.." என்றவள் பேண்டை கழட்ட முயல சட்டென்று அவளின் கையை பற்றி நிறுத்தினான் சக்தி.

"என்னடி பண்ற.? இவர் ஆண் டாக்டர்.." என்றான் அதட்டலாக.

"ஹலோ மிஸ்டர்.. நான் ஒரு டாக்டர்.. இதுவரை ஐம்பது பெண்களுக்கு பிரசவம் பார்த்திருக்கேன். எல்லோரையும் தப்பான கண்ணோட்டத்தோடவே பார்க்காதிங்க.." என்று திட்டினார் மருத்துவர்.

சக்தியின் மனதிற்கு சரியென்று தோன்றவில்லை.

"நீங்க மருந்தை மட்டும் கொடுங்க.. இவ போட்டுக்கட்டும்.." என்றான்.

மருத்துவர் அவனை ஏற இறங்க பார்த்தார். தன் தொழிலை சந்தேகிக்கிறான் என்று அவனை துரத்த நினைத்தார். ஆனால் கலங்கிய விழிகளோடு எரிச்சல் பொறுத்து நின்ற கனிமொழிக்காக அமைதியானார்.

காயத்தை பற்றி விலாவாரியாக கேட்டறிந்தவர் ஊசி ஒன்றை போட்டார். அதற்கும் இடுப்பில் போட கூடாது என்று சொல்லி‌விட்டான் சக்தி. கடைசியில் கையில் ஊசியை போட்டுக் கொண்டாள் கனிமொழி.

மருந்து மாத்திரைகளை தந்தார் மருத்துவர். "இதை காயத்து மேல போட்டுக்கங்க.. இரண்டு நாள்ல எரிச்சலும் காயமும் போயிடும். அப்புறமும் அப்படியே இருந்தா மறுபடி வாங்க.." என்றார்.

சக்தி பணத்தை தந்து விட்டு அவளை அழைத்துக் கொண்டு நடந்தான்.

"கிளினிக்ல உங்களுக்கு என்ன வந்தது.?" குழப்பத்தோடு கேட்டபடியே காயத்திற்கு மருந்து தடவினாள் கனிமொழி.

காரை ஓட்டிக் கொண்டிருந்தவன் அவளின் காயம் கண்டுவிட்டு "இன்னும் கொஞ்சம் நல்லா மருந்து போடு.. மருந்து என்ன உங்க அப்பா வாங்கி தந்ததா.? இவ்வளவு கஞ்சதனமா யூஸ் பண்ற.?" எனக் கேட்டான்.

கனிமொழி மூக்கு சிவக்க அவனை முறைத்தாள்.

"எங்க அப்பாவை பத்தி பேசினா எனக்கு கெட்ட கோபம் வரும்.." என்றவள் இரண்டாம் பூச்சு பூசிக் கொண்டாள்.

"இப்ப கொஞ்சம் பரவால்லன்னுதான் தோணுது.." என்றவள் யோசனையாக நிமிர்ந்தாள்.

"அந்த டாக்டர் என் காயத்தை பார்க்க கூடாதுன்னு ஏன் சொன்னிங்க.?" எனக் கேட்டாள்.

"பின்ன அவர்கிட்ட ஆப் நியூடா நிற்க போறியா.? இவ்வளவு வளர்ந்துட்ட.. ஆனா இந்த சூடு சொரணை எந்த கருமமாவது இருக்கா.?" என திட்டியவன் அவளின் பின்னந்தலையில் அடித்தான்.

மெதுவாக விழுந்தாலும் சுளீரென்றுதான் விழுந்தது அடி. அவனை முறைத்தாள்.

"நான்தான் குழந்தையாச்சே.. நான் ஆஃப் நியூடா நின்னாதான் என்ன போச்சி.?" எனக் கேட்டாள் எரிச்சலாக.

சக்தி விழிகளை உருட்டினான். அப்படி உருட்டுகையிலெல்லாம் அந்த கண்களை தனியே பிரித்து எடுக்க வேண்டும் என்று ஆத்திரம் வந்தது அவளுக்கு.

"நீ எனக்கு மட்டும்தான் குழந்தை.. அந்த டாக்டருக்கு இல்ல.."‌ என்றான் விடாப்பிடியாக.

"டாக்டர் தெய்வத்துக்கு சமம்.." என்றவள் ஹோட்டல் நெருங்குவதை கண்டு உடையை சரி செய்தாள்.

"அந்த தெய்வமும் பெண்ணா இருந்திருந்தா எனக்கு சந்தோசம்.." என்றவன் காரை நிறுத்தினான். தான் சொல்வதில் ஒரு நியாயமும் இல்லை என்று அவனுக்கே தெரிந்தது. ஒரு கல்லூரியின் பேராசிரியராக மாணவிகளை எப்படி பார்க்கிறானோ அதே போலதான் ஒரு மருத்துவரும் தன்னிடம் வரும் நோயாளிகளை பார்ப்பார் என்று தெரிந்திருந்தும் மனம் குறுக்கு சால் ஓட்டிக் கொண்டிருந்தது.

இறங்க இருந்தவளின் கைப்பிடித்து நிறுத்தினான். அவளின் கண்ணீர் உலர்ந்த கன்னங்களை தனது கைக்குட்டையால் துடைத்து விட்டான். கலைந்திருந்த கண் மையை முழுதாய் அழித்தான். பறந்துக் கொண்டிருந்த தலை முடிகளை சரி செய்தான்.

அவனை ஏக்கமாக பார்த்தாள்‌. இந்த பார்வை அறிவிக்காத காதலை அவனிடம் சொல்லி புரிய வைக்க முடியாது என்று புரிந்து கீழே இறங்கினாள்.

இருவரும் காத்திருந்தனர். "நாம ஹாஸ்பிட்டலே போய்ட்டு வந்துட்டோம்.. இவங்க இன்னுமா சாப்பிடுறாங்க.?" என கேட்டபடி கீர்த்தனாவுக்கு அழைத்தான் சக்தி.

கால் நிமிடம் கடந்த பிறகு அழைப்பை ஏற்றாள் அவள். "சக்தி இங்கே செகண்ட் ப்ளோர்ல கிளப்ல இருக்கோம் நாங்க.." என்றாள். போனின் வழியே உயர் சத்தத்தில் பாடல் ஒலித்தது.

"இவங்க விருந்துக்கு வந்து பாழாப் போச்சி.." என்றுச் சலித்துக் கொண்டவன் கனிமொழியை அழைத்துக் கொண்டு உள்ளே நடந்தான்.

"அங்கே ஏதாவது தருவாங்களா மாமா.? அங்கே பில் கட்ட என்கிட்ட காசு இல்ல.." என்று கையை விரித்தாள்.

சக்தி அவளை குறுகுறுவென பார்த்தான். "உங்கண்ணன் அவளுக்கு எவ்வளவு செலவு பண்ணியிருப்பான்.? அதுக்கு இப்ப நீ கணக்கு கழிச்சிடு.." என்றான் தோளை குலுக்கியபடி.

யோசித்துப் பார்த்தவள் "அது அவங்க காதல் கணக்கு. அதுல எதுக்கு எனக்கு பங்கு.? எதையும் சாப்பிடாம இருந்துக்கறேன்.." என்றவள் கிளப்பில் ஆளாளும் வைத்திருந்த பல வண்ண மது பான கோப்பைகளை கண்டு முகம் வெளிறிப் போனாள்.

"மாமா நாம திரும்பி போயிடலாமா?" எனக் கேட்டவளிடம் என்னவென்று புருவம் உயர்த்தி கேட்டான்.

"எனக்கு இன்னும் பதினெட்டு ஆகல. போலிஸ் வந்தா என்னைதான் பிடிப்பாங்க.." என்றாள் பயத்தோடு.

"இங்கே போலிஸ் வர மாட்டாங்க.. வா.." என்று அவளை இழுத்துப் போனான்.

"நான் வரல.." அழாத குறையாக சொன்னவளை கொண்டு வந்து பாலாஜியின் அருகே தள்ளினான் சக்தி. இடமே அரை இருளாய் இருந்தது. ஆங்கில பாடல் ஒன்று சத்தமாக பாடிக் கொண்டிருந்தது. வண்ண விளக்குகள் சுழன்றுக் கொண்டிருந்த இடத்தில் பலர் நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். தான் தவறான இடத்தில் இருப்பது போல தோன்றியது கனிமொழிக்கு. ஆனால் பாலாஜியும் சக்தியும் இருக்கும்போது தன் பாதுகாப்பிற்கு எந்த பங்கமும் ஏற்படாது என்று நம்பினாள். எதிரே இருந்த சோபாவில் அம்ருதா, கவின், ரத்னா மூவரும் இருந்தனர். ரத்னாவை காணும்போதே வயிற்றில் புளியை கரைத்தது போல இருந்தது கனிமொழிக்கு.

கீர்த்தனா சோபாவின் ஓரத்தில் அமர்ந்திருந்தாள்‌ பாலாஜியின் கையில் கருப்பு நிறத்தில் ஏதோ திரவம் இருந்தது.

"அண்ணா நீ நல்லவனாச்சே.. எதுவும் குடிக்க மாட்டியே.." அதிர்ச்சி தாங்காமல் கேட்டாள் கனிமொழி.

"கோக் கனி.." என்றவன் கையிலிருந்ததை அவளிடம் தந்தான். வாங்கி பருகி பார்த்தவளுக்கு அதன் பிறகுதான் உயிரே வந்தது. அதே நேரத்தில் அவள் மேலே வந்து விழுந்தான் சக்தி.

அவனின் தோளில் அடித்தவள் "தள்ளி உட்காரு மாமா.. காயம் வலிக்குது.." என்றாள்.

"சாரிடி கவனிக்கல.." என்றவன் பேரர் கொண்டு வந்த கோப்பையை கையில் எடுத்தபடியே தள்ளி அமர்ந்தான்.

"இது என்ன.?" சக்தியிடம் பயத்தோடு கேட்டாள்.

"உனக்கு தேவையில்லாதது.." என்றவன் அவளுக்கும் எதையோ நீட்டினான்.

"என்னை பழி வாங்குறியா மாமா? நான் குடிச்சிட்டு வீட்டுக்கு போனா எங்க அப்பா என் கழுத்துல சுருக்கு மாட்டி இழுத்துடுவாரு.. அப்புறம் நீ ஹேப்பியா இருக்கலாம்ன்னு நினைச்சிட்ட. அப்படிதானே.?" எனக் கேட்டாள்.

சிரித்தவன் "ச்சீ.. உன் புத்தி ஏன் எப்பவும் இப்படியே இருக்கு.? இது ஸ்ப்ரைட்தான். ஸ்ப்ரிட் இல்ல.." என்றான். சந்தேகமாக வாங்கி அருந்தினாள். எலுமிச்சையும் இனிப்பும்தான் இருந்தது.

குளிர்பானத்தை அருந்தியபடியே நடனம் ஆடிக் கொண்டிருந்தவர்களை நோட்டம் விட்டாள். தன்னை நோட்டம் விட்டுக் கொண்டிருந்த ரத்னாவை கவனிக்காமல் போய்விட்டாள்.

பாலாஜி கீர்த்தனாவை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தான். அவளின் கரங்களில் சறுக்கு மரம் விளையாடிக் கொண்டிருந்த வளையல்களையும், அவளின் வலது கையில் இருந்த கோப்பையில் துள்ளிக் குதித்தபடி அவளின் இதழ்களை அவ்வப்போது ஈரம் செய்த பானத்தையும் மாறி மாறி வெறித்தான். 'அந்த வளையலாய் நான் இருக்கலாம்.. அந்த டிரிங்க்ஸாவாவது நான் அவளோட உதடு தொட்டிருக்கலாம்..' என்று மனம் போன போக்கில் எண்ணினான் பாலாஜி.

கவின் எழுந்து நின்றான். அம்ருதாவை நோக்கி கையை நீட்டினான். கேள்வியாக பார்த்தவளிடம் நடனமாடும் இடத்தை கண் காட்டினான். அம்ருதா எழுந்து நின்று தன் கையை தந்தாள்.

இருவரும் நடனமாடுவதை கண்டு கனிமொழிக்கு விழிகள் கலங்கியது.

முகத்தை திருப்பி கண்களை துடைத்துக் கொண்டாள்.

"டேக் இட் ஈஸி.. அவங்க பிரிஞ்சிட்டாங்க.. அவங்க அவங்களோட புது பார்ட்னரோடு வாழ உரிமை இருக்கு.." என்றான் சக்தி அவளின் காதோரத்தில்.

"ஆனாலும் கஷ்டமா இருக்கு மாமா.. ஒருத்தரை நினைச்ச மனசுல எப்படி வேற ஒருத்தரை நினைக்க முடியும்.?" எனக் கேட்டாள். "அதனாலதான் நீ இன்னும் குழந்தையாவே இருக்க.." என்று கிண்டலடித்தவன் அடுத்த கோப்பையை கையில் எடுத்தான்.

அம்ருதாவின் இடையோடு இருந்தது கவினின் கரம். அவனின் இருபக்க தோளிலும் கை பதித்து இருந்தாள் அம்ருதா. பாடலுக்கு ஏற்றவாறு அவர்கள் நடனமாடினர். பார்ப்போருக்கு அழகாய் இருந்தது. ஆனால் கனிமொழிக்குதான் கடுப்பாக இருந்தது. நான்கைந்து கோப்பைக்களுக்கும் மேல் பானத்தை அருந்தி விட்டாள். அப்போதும் நெஞ்சின் அனல் அணைய மறுத்தது.

சக்தி அவளின் முகத்தை ரசித்தபடியே இருந்தான். நொடி நேரம் கூட அவனால் பார்வையை திருப்பிக் கொள்ள முடியவில்லை.

'எங்க பாப்பாதான் கோபத்துல கூட எவ்வளவு க்யூட்.?' என நினைத்தான். வீட்டிற்கு சென்றதும் அவளுக்கு சுற்றிப் போட சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்தான். தனது கண்ணே எக்கச்சக்கமாக பட்டிருக்கும் என்பது அவனின் எண்ணம்.

அடுத்த பானத்தையும் குடித்து முடித்தவள் வயிற்றில் சலசலப்பு உணர்ந்து எரிச்சலோடு சுற்றும் முற்றும் பார்த்தாள். 'இவ்வளவு நீராகாரம் குடிச்சா இப்படிதான் ஆகும்..' என்று தன்னையே திட்டிக் கொண்டாள்.

"கீர்த்து இங்கே ரெஸ்ட் ரூம் எந்த சைட்.?" எனக் கேட்டாள் எழுந்து நின்றபடி.

கீர்த்தனா கைக் காட்டிய திசையில் நடந்தாள். நீண்ட வராண்டா இருந்தது. வழியில் நிறைய அறைகள் இருந்தன. கடைசியில் இருந்தது ரெஸ்ட் ரூம். உள்ளே நுழைந்தவள் நான்கு நிமிடங்களுக்கு பிறகு வெளியே வந்தாள். கிளப் அறை இருந்த பாதையில் இரண்டு எட்டு எடுத்து வைத்திருந்த நேரத்தில் அவளின் முன்னால் வந்து நின்றாள் ரத்னா.

"ரொம்ப‌ பண்றடி நீ.." என்றாள் நாக்கை சுழட்டியபடி.

கனிமொழி வழக்கமான பயத்தோடு தலை குனிந்தாள். அவளை தாண்டிப் போக முயன்றாள். அவளின் முன் கையை காட்டி நிறுத்தினாள் ரத்னா.

"எ.. எங்க அண்ணா இருக்காரு ரத்னா.. அவருக்கு தெரிஞ்சா உன்னை சும்மா விட மாட்டாரு.. என்னை விட்டுடு.." என்றாள் கெஞ்சலாக.

நக்கலாக சிரித்தவள் "இந்த ஆண் மரத்துக்குதான் எத்தனை பாதுகாவல்..?" எனக் கேட்டாள்.

"குழம்பு கொட்டியவுடனே எல்லோரும் பதறி துடிக்கறாங்க.. பொண்ணான எனக்கு கூட என் வீட்டுல இவ்வளவு சிறப்பு கிடையாது.." என்றாள் அரை வருத்தமும் அரை கிண்டலுமாக.

"நா.. நான் போறேன்.." என்றவளை கைப்பிடித்து நிறுத்திய ரத்னா அவளின் தாடையைப் பற்றினாள்.

"நான் பேச பேச போற.. அவ்வளவு தைரியமா வந்துடுச்சா..?" எனக் கேட்டவள் அவளை பிடித்து பின்னால் தள்ளினாள். சுவரில் தலை மோதி கீழே விழுந்தாள் கனிமொழி. "அம்மா.." என கத்தியபடியே தலையை பிடித்தாள். பயங்கரமாக வலித்தது தலை.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN