அத்தியாயம் 58

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காந்திமதி மௌனமாக அமர்ந்து உணவை உண்டுக் கொண்டிருந்தாள். காத்தவராயன் ஜன்னல் அருகே நின்றபடி வெளியே வெறித்துக் கொண்டிருந்தார்.

காந்திமதி அவரின் முதுகை பார்த்தாள். எவ்வளவோ கெஞ்சி விட்டாள். பேச மறுத்தார் அவர்.

"உன் லைப்ன்னு நீ டிசைட் பண்ணிட்ட. நான் ஏன் உன்னோடு பேசணும்.?" என்றார் ஒருநாள் இவளின் தொல்லையை பொறுக்க முடியாமல்.

இருவரும் ஒரே வீட்டில்தான் இருந்தார்கள். ஆனால் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. இவள் தீண்டினால் வெறுப்போடு பார்த்தபடி விலகி போனார் அவர்.

'எவ்வளவு ஆசைப்பட்டு காதலிச்சேன் இவனை.. எல்லாமே நாசமா போச்சி. எல்லாம் அவனாலதான்..' என்று மனதுக்குள் குமுறினாள் காந்திமதி.

அவள் சாப்பிட்டு முடித்து கிளம்பிய பிறகு உணவை உண்ண ஆரம்பித்தார் காத்தவராயன்.

அவளை விரட்டி அனுப்ப முடியவில்லை அவரால். இல்லையேல் எப்போதோ அதை செய்திருப்பார். அவளை நேரில் பார்க்க பார்க்க ஆத்திரம் தீராமல் இருந்தது.

யவனாவின் அழைப்பை ஏற்றான் யஷ்வந்த்.

"அண்ணா.." என்றவள் சட்டென்று சொல்ல தயங்கினாள்.

"சொல்லு யவனா.." என்றவன் இடது கையை உயர்த்தி நெட்டி முறித்தான். எதிரே இருந்த கண்ணாடியை பார்த்ததில் அவன் மேனியோடு ஒட்டியிருந்த ரோஜா இதழ்கள் தென்பட்டன. வெட்க சிரிப்போடு பூவிதழ்களை உதறி தள்ளினான்.

"குந்தவியை யாரோ அட்டாக் பண்ணிட்டாங்க அண்ணா.."

யஷ்வந்தின் வெட்கம் அப்படியே மறைந்துப் போனது.

"என்ன? அவ இப்ப எப்படி இருக்கா. சேப்தானே?"

"இல்ல அண்ணா.. தலையில ரொம்ப அடி. பிழைக்கிறது கஷ்டம்ன்னு பெரியப்பா சொல்றாரு.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. எனக்கு தெரிஞ்சி அவளுக்கு ஒரு எதிரியும் இல்ல. ஒருவேளை நம்ம பேமிலிக்கே எதிரியோ என்னவோ.. எதுக்கும் நீ சேப்பாவே இரு.." என்றாள்.

யஷ்வந்த் அதிர்ச்சியோடு கட்டிலில் அமர்ந்தான்.

"உங்களை டிஸ்டர்ப் பண்ண நினைக்கல அண்ணா.. என்ன இருந்தாலும் உன் பிரெண்ட். அதான் தகவல் சொன்னேன்.." என்றவள் இணைப்பை துண்டித்துக் கொண்டாள்.

தலையை பிடித்தான் யஷ்வந்த். எப்படி இப்படியொரு அட்டாக் என்று குழம்பினான்.

போன் மீண்டும் ஒலித்தது. மாதவன் அழைத்திருந்தான்.

"ஹலோ மாதவன்.. யார் எங்க எதிரின்னு இன்னும் கண்டுபிடிக்க முடியலையா உங்களால.?" என்று எரிச்சலோடு ஆரம்பித்தவனிடம் "எதிரி உங்க அப்பாதான் யஷூ.." என்றான் எதிர்முனையிலிருந்த டிடெக்டிவ் மாதவன்.

"வாட்.?" அதிர்ச்சியில் கத்தியவனிடம் "உங்க அப்பாதான் குந்தவியை கொலை பண்ண நினைச்சிருக்காரு. இரண்டு அட்டெம்டும் உங்களால பெயில். அதனாலதான் உங்களை ஹனிமூன் அனுப்பிட்டு இன்னைக்கு மூனாவது அட்டெம்டு டிரை பண்ணி அந்த பொண்ணை அடிச்சிருக்காரு.." என்றான் அவன்.

யஷ்வந்துக்கு பேச்சே வரவில்லை. தந்தையின் மீது ஏகப்பட்ட கோபம் வந்தது. குந்தவிக்கு எதுவும் ஆக கூடாது என்று எல்லா கடவுளிடமும் வேண்டிக் கொண்டான்.

"நான் போன் பண்ணது இதை பத்தி சொல்ல மட்டும் இல்ல. வேறொரு முக்கியமான விசயமும் இருக்கு. இந்த திட்டத்துல உங்க மனைவியும் கூட்டு.." என்று அவன் சொல்ல யஷ்வந்த் அதிர்ச்சியோடு இடம் வலமாக தலையசைத்தான். நம்ப முடியவில்லை. குளியலறை கதவை பார்த்தான். வெளியில் அவள் வரும் வேளையில் அவளுக்கு தன் கையால்தான் சாவு என நினைத்தான்.

"ஆனா இப்ப டிவிஸ்ட் என்னன்னா உங்க அப்பா உங்க மனைவியை கொல்லவும் ஆள் அனுப்பி இருக்காரு.. அவரோட தப்புகளுக்கு சாட்சி இருக்க கூடாதுன்னு நினைப்பார் போல.. உங்க மனைவிக்கும் ஆபத்து இப்ப.." என்று அவன் சொல்லிய வேளையில் அவசரமாக சென்று குளியலறை கதவை தட்டினான். கதவு திறந்துக் கொண்டது. ஆனால் உள்ளே அவள் இல்லை.

'தாரு..' இதயம் நடுங்க சுற்றும் முற்றும் பார்த்தான்.

"உங்க மனைவியை பத்திரமா பார்த்துக்கங்க.. மீதியை நாம நேர்ல பேசிக்கலாம்.." என்ற அவன் இணைப்பை துண்டித்துக் கொண்டான்.

அதே நேரத்தில் வந்தது தாரணியிடமிருந்து அழைப்பு. கரங்கள் தானாய் நடுங்க அழைப்பை ஏற்றான்.

"யஷூ.." மூச்சு வாங்கியது அவளுக்கு. அழுகை தென்பட்டது குரலில்.

"தாரணி.." உயிரற்ற குரலில் அழைத்தான். இறந்த காலம் முழுதாக மறந்து போனது.‌ தாரணியை‌ தவிர வேறு நினைவு இல்லை.

"யாரோ துரத்துறாங்க யஷூ.. பயமா இருக்கு. என்னை காப்பாத்து ப்ளீஸ்.." என்றவளிடம் "எங்கே இருக்க நீ.?" எனக் கேட்டான். தாறுமாறாக துடித்த இதயத்தையும் நடுங்க செய்துக் கொண்டிருந்த பயத்தையும் சரிசெய்யும் வழி தெரியவில்லை அவனுக்கு.

"ஹோட்டல் பின்னாடி இருக்கும் பனி சிகரத்தை சுத்தி பார்க்க வந்தேன். இங்கேதான் இருக்கேன் இப்ப.."

போனை துண்டித்துக் கொண்டவன் அவசரமாக உடைகளை அணிந்துக் கொண்டு வெளியே ஓடினான்.

தாரணி ரத்தம் வழியும் கையை மறு கையால் பிடித்தபடி ஓடிக் கொண்டிருந்தாள். முன்பு விழுந்தது போல மீண்டும் கால் தடுக்கி எங்கேயும் விழுந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தாள். பின்னால் திரும்பிப் பார்த்தாள்.

"நில்லு.." என்றபடி துரத்தி வந்தார்கள் நால்வரும். ஒருவனின் கையிலிருந்த கத்தி இவளின் ரத்தத்தால் நனைந்து இருந்தது. முன்பு விழுந்தபோதே வெட்டி விட்டான்.

ஓடிக் கொண்டிருந்தவள் மூச்சு வாங்கவும் ஒரு நொடி நின்றாள். நேராய் ஓடுவதில் பயனில்லை என புரிந்து இடது பக்கமாக ஓடினாள்.

அவர்கள் விடாமல் துரத்தி வந்தார்கள். சிறு வயதில் எப்போதோ ஒருமுறை ஓட்டப் பந்தயத்தில் கலந்துக் கொண்டு மூன்றாம் பரிசு வாங்கியது. அந்த நினைவு இப்போது கால்களுக்கு ‌வலு சேர்த்துக் கொண்டிருந்தது.

இறந்தாலும் தான் யஷ்வந்தின் கையில் மட்டுமே கிடைக்க வேண்டும் என்று எண்ணியவள் ஹோட்டல் இருந்த திசை நோக்கி ஓட ஆரம்பித்தாள்.

ஓடியவள் இரண்டாம் நிமிடத்தில் மனோகரின் ஆள் ஒருவனால் மறிக்கப்பட்டாள். எங்கிருந்து வந்தான் என்றே தெரியவில்லை. திரும்பினாள்‌. அங்கேயும் இருவர் இருந்தனர். நான்கு புறமும் வளைத்து விட்டனர். எந்த பக்கமும் தப்பிக்க முடியவில்லை. பயத்தோடு வெளிறி நின்றிருந்தவளின் மேல் மோதியது உருட்டு கட்டை. வாங்கிய அடியின் விசையில் "அம்மா.." என கத்தியபடி இரண்டடி பறந்து போய் கீழே விழுந்தாள்.

தடுமாறி கையூன்றி எழுந்து அமர்ந்தாள்‌. இடது கை பயங்கரமாக வலித்தது.

"என்னை விட்டுடுங்க.." என்றாள் கெஞ்சலாக. குந்தவிக்கு தீங்கு நினைத்ததற்கு தனக்கு சரியான பதிலடி கிடைத்திருப்பதாக நினைத்தாள். மாமனாரின் மீது கொலை வெறி வந்தது. அது போலவே குந்தவியின் மீதும் ஆத்திரம் வந்தது. அவளால்தான் அத்தனைப் பிரச்சனையும் உண்டானதாக நினைத்தாள்.

எதிரில் இருந்த ஒருவன் கத்தியை ஓங்கினான். தாரணி கண்ணீரோடு கண்களை மூடினாள். அதே நேரத்தில் கத்தியை ஓங்கி இருந்தவனின் நெஞ்சில் வந்து துளைத்தது துப்பாக்கி குண்டு ஒன்று. தாரணி பயத்தோடு கண்களை திறந்தாள். யஷ்வந்தின் பாடிகார்ட்ஸ் ஐவர் தூரத்திலிருந்து ஓடி வந்துக் கொண்டிருந்தனர். அதில் இருவர் துப்பாக்கியை குறி பார்க்க, அடுத்த இரண்டாம் நொடியில் அவளை சுற்றியிருந்த மற்ற மூவரும் உயிரற்று தரையில் விழுந்தனர். தாரணியால் தன் அதிர்ஷ்டத்தை நம்பவே முடியவில்லை.

"தாரு.." எங்கிருந்தோ ஓடி வந்தான் யஷ்வந்த். ரத்தம் ஒழுகும் கையோடு இருந்தவளை கண்டு நடுங்கினான்.

"ஒன்னும் ஆகாது தாரு.. உனக்கு ஒன்னும் ஆகாது.." என்றவன் அவளை கவனத்தோடு கைகளில் தூக்கினான்.

பனியில் குளித்துக் கொண்டிருந்த மரங்களை தாண்டி வேக எட்டு வைத்து நடந்தான் யஷ்வந்த். கண்கள் மறைத்த கண்ணீரை துடைக்கும் வழி தெரியவில்லை அவனுக்கு.

"சார் நான் தூக்கி வரேன்.." என்று ஓடி வந்தான் அவனின் முதன்மை காவல் பணியாள்.

"வேணாம்.." என்றவனின் கரம் தாரணியை தன்னோடு சற்று இறுக்கமாக அணைத்துக் கொண்டது. தாரணி அவனின் கண்ணீர் வழியும் முகத்தை அரை மயக்கத்தோடுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் ஆயிரம் முறை சொல்லியும் நம்ப முடியாத காதல் இந்த கண்ணீரின் வழியே அவள் நெஞ்சில் நிறைந்துக் கொண்டிருந்தது.

யஷ்வந்தின் காப்பான் ஒருவன் வந்து நின்ற ஆம்புலன்ஸின் கதவை திறந்து விட்டான். இறக்கப்பட்ட ஸ்டெச்சரில் மனைவியை படுக்க வைத்தான்.

"உனக்கு ஒன்னும் ஆகாது தாரு.." என்பதை விடாமல் முணுமுணுத்தபடி ஆம்புலன்ஸில் அவளருகே அமர்ந்தான். முதலுதவி நடந்துக் கொண்டிருந்தது. வலது கையால் அவனின் கண்ணீரை துடைத்து விட்டாள். தன் முகம் மோதிய கரத்தை பிடித்துக் கொண்டான். உதட்டின் மீது வைத்தான்.

"நம்பிக்கையை விட்டுட்டாதே தாரு.." என்றான் கெஞ்சலாக. அன்று தனக்கு வெட்டு விழுகையில் கூட இவ்வளவு பயப்படவில்லை அவன். அவளுக்கு கையில்தான் சிறு வெட்டு. அதற்கே அவள் தன்னை விட்டுவிட்டு இறந்து போவாளோ என்று பயந்திருந்தான்.

"எனக்கு ஒன்னும் ஆகாது யஷூ.." என்றவளின் கையில் நெற்றியை முட்டியவன் கண்களை மூடியபடி மௌனமாக அழுதான்.

"ஏன் தாரு இப்படி பண்ண.? எதுக்கு நீ ஹோட்டலை விட்டு வெளியே போன.?" எனக் கேட்டான் ஆதங்கமாக.

கணவனின் அணைப்பில் இருந்தவளுக்கு மனோகர் அழைத்து "நீ பண்ண ஹெல்ப்க்கு நான் உனக்கு ஒரு ஸ்பெஷல் கிஃப்ட் வச்சிருக்கேன். ஹோட்டலோட பின்கேட்டு வழியே வெளியே வா.." என்றார்.

"எதுக்கு.? என்ன கிப்ட்.?" எனக் கேட்டவளிடம் "சூர்யா இனி என் மாப்பிள்ளை. பல ஆயிரம் கோடி அசால்டா கை சேர போகுது.. அத்தனைக்கும் காரணம் நீ‌. உனக்கு நன்றி கடன் செலுத்தணும் இல்லையா.? வெளியே வா.. என் பையனுக்கு ரொம்ப பிடிச்ச ஒன்னை உனக்கு தர போறேன். அவன் அதன் பிறகு உன்னை பைத்தியமா சுத்தி வர போறான்.." என்று சொன்னார்.

'யஷ்வந்துக்கு பிடிச்சதா.?' என்ற எண்ணத்தோடு வெளியே வந்தவள் தன்னை நால்வர் நெருங்குவது கண்டு பயந்து ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தாள். தன் மாமனார் தன்னை ஏமாற்றி உள்ளார் என்பதே தாமதமாகதான் புரிந்தது அவளுக்கு.

யஷ்வந்த் அவளின் தலைமுடியை வருடி விட்டான்.

வெட்டுப்பட்ட அவளின் கையிலிருந்த உடை கிழிக்கப்பட்டது. காயத்தை முழுதாய் கண்ட யஷ்வந்தின் கண்களில் ஜீவனே இல்லை. அவனின் முகத்திலிருந்த பயம் கண்டவள் "ஐ வில் பீ ஆல்ரைட்.." என்றாள்.

"சாரி.. என்னாலதான் இப்படி ஆச்சி. நான்தான் நீ வெளியே போனதை கவனிக்காம போயிட்டேன்.." என்று புலம்பினான்.

கண்ணீர் சிந்திக் கொண்டிருந்த அவளின் கன்னங்களை துடைத்து விட்டான்.

மருத்துவமனை வந்தது.

"நான் இங்கேயே இருப்பேன். உனக்கு ஒன்னும் ஆகாது. பயந்துடாதே தாரு.. ஐ லவ் யூ தாரணிம்மா.." என்று தைரியம் சொல்லி அனுப்பினான்.

அவளுக்கு சிகிச்சை நடக்கும் அறையின் முன்னே இருந்த இருக்கையில் விழுந்தான். சகலமும் அடங்கி போனது போல இருந்தது அவனுக்கு. அவளின் கைக்கு எதுவும் ஆகி விடக் கூடாது என்று ஆசை கொண்டான்.

"சார் வாட்டர்.." பாடிகார்ட் ஒருவன் தண்ணீரை நீட்டினான். அவளின் ரத்தத்தால் நனைந்திருந்த கரங்களை பார்த்தவன் அதையே வெறிக்க, அவனின் தோள் பற்றி எழுப்பினான் அருகில் இருந்தவன். அழைத்துச் சென்று கையை சுத்தம் செய்து கூட்டி வந்தான். தண்ணீரை தந்தான்.

"ரிலாக்ஸ் ப்ளீஸ்.. அவங்களுக்கு ஒன்னும் ஆகாது.." என்றான் அவனே.

சுவற்றில் சாய்ந்தபடி நொந்துப் போய் அமர்ந்திருந்த யஷ்வந்துக்கு தன் பாக்கெட்டில் ஒலித்துக் கொண்டிருந்த கைபேசியை பற்றிய நினைவே இல்லை. போனில் அழைத்துக் கொண்டிருந்த சூர்யா நொடிக்கு நொடி செத்து பிழைத்துக் கொண்டிருக்கிறான் என்பதையும் அவன் அறியவேயில்லை.

அவசர சிகிச்சை பிரிவு அறையில் குந்தவிக்கு அறுவை சிகிச்சை நடந்துக் கொண்டிருந்தது. தலையிலிருந்த காயங்களால் அதிகளவு ரத்தத்தை இழந்து விட்டாள்.

"ரொம்ப கிரிட்டிக்கல்.. உயிர் பிழைச்சாலும் கூட கண்டிப்பா வேறு ஏதாவது பிரச்சனை இருக்கும்.." என்றார் அவளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த மருத்துவர்.

காதலியை காப்பாத்த முடியாத சூர்யா.. காப்பாத்திய யஷ்வந்த்.. இந்த இரண்டு பேர்ல யார் காதல் உங்களுக்கு உயர்வுன்னு தோணுது நட்புக்களே.. யாரோட பீலிங்ஸ் உங்களை யோசிக்க வச்சது.? கமெண்ட்ல சொல்லிட்டு போங்க.😉

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN