காதல் கணவன் 42

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சுந்தரம் தன் மகன் தந்த காப்பியை வாங்கி பருகினார். இனிப்பு குறைவாக இருந்தது.

"இன்னொரு ஸ்பூன் சர்க்கரை போடுடா.." என்று கோப்பையை நீட்டினார்.

"சர்க்கரை வியாதி வந்துடும் அப்பா.." என்ற தியாகராஜன் காப்பி வைத்த பாத்திரத்தை சுத்தம் செய்ய ஆரம்பித்தார்.

"வெற்றிதான் டிரெயினிங் போயிட்டானே.. நீ அந்த வீட்டுக்கு வாயேன்.. தனியா இருந்து ஏன் கஷ்டபடுற.?" எனக் கேட்டார் சுந்தரம்.

பாத்திரத்தை கவிழ்த்து வைத்து விட்டு திரும்பினார் தியாகராஜன்.

"அவன் மூனு நாலு மாசத்துல திரும்பி வந்துடுவான் அப்பா.. வெறும் மூனு மாசத்துக்கு நான் வேற ஏன் அங்கே வரணும்? பாலாவை நல்லா பார்த்துக்கோங்க.. ரொம்ப நாளா அனாதையா இருந்தவன்.." என்றார் வருத்தமாக.

சமையலறை படு சுத்தமாக இருந்தது. மகனை மனதுக்குள் பாராட்டாமல் இருக்க முடியவில்லை சுந்தரத்தால்.

"எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கறது.? நீ வா.. வெற்றியையும் அங்கேயே இழுத்துக்கலாம்.." என்றார் அப்பா.

தியாகராஜன் மறுப்பாக தலையசைத்தார். ஓடிக் கொண்டிருந்த கிரைண்டருக்கு தேவையான அளவு தண்ணீர் விட்டார்.

"இந்த வீடு அவங்க இரண்டு பேருக்கு மட்டுமில்லப்பா எனக்கும் கஷ்டம் தர கூடிய இடம்தான். இரண்டு பசங்களை வச்சிட்டு இருந்தும் கூட அனாதை மாதிரி உணருறேன் அப்பா.. அவ இல்லாத வாழ்க்கை எனக்கு வாழ்க்கை மாதிரியே தெரியல. இத்தனை வருசத்தோட ஒவ்வொரு நாளையும் நானா பிடிச்சி தள்ளிட்டு இருக்கேன். சந்தோசமோ சோகமோ அவ இல்லாம எதையும் உணர முடியல. ரொம்ப தொந்தரவா இருக்கு இந்த லைப்.." என்று புலம்பினார்.

'என் இரண்டு பேரான்டிகளும் கோமுட்டி தலையனுங்களா போயிட்டாங்க.. அவனுங்க உருகி சாகறதும் இல்லாம என் அப்பாவி மகனையும் இந்த பீலிங் கோட்டத்துக்குள்ள இழுத்து விட்டிருக்கானுங்க. ஆக மொத்ததுல அவனுங்க இரண்டு பேரும் அவங்களாவும் நல்லா இருக்க மாட்டாங்க.. மத்தவங்களையும் நல்லா இருக்க விட மாட்டாங்க..' என்று மனதுக்குள் கருவி தீர்த்தவர் "வேணும்ன்னா உனக்கு இரண்டாம் கல்யாணம் பண்ணி வைக்கட்டா.?" எனக் கேட்டார் மகனிடம்.

அதிர்ச்சியில் இதயமே நின்று விட்டது தியாகராஜனுக்கு.

"பேர புள்ளை எடுக்கற வயசுலயா.? அப்பவே மாட்டேன்னுதானே சொல்லிட்டு வந்தேன். இப்ப கல்யாணம் செய்வேனா.? போங்கப்பா.." என்று வெட்கத்தில் முகம் சிவந்தவர் கிரைண்டரிலிருந்த மாவை சேகரிக்க ஆரம்பித்தார்.

"என் லைஃப் இப்படியே போகட்டும்ப்பா. இதான் நல்லா இருக்கு. பையன் சம்பாத்தியம் கை நிறைய இருக்கு. யார் தொந்தரவும் இல்ல. நான் பாட்டுக்கு அவ நினைப்புல அவளோடு நான் வாழ்ந்த அந்த நினைப்பையே திரும்ப திரும்ப நினைச்சி வாழ்ந்துட்டு இருந்துக்கறேன்.." என்றார்.

தாத்தா அந்த வீட்டிலிருந்து கிளம்பி விட்டார். "நான் பெத்ததும் அரை லூசு. அவன் பெத்ததுகளும் அரை லூசுங்க.." என்று புலம்பியபடி போனார்.

மீன் அருங்காட்சியகத்தில் அரை குறையாக மீன்களை ரசித்து விட்டு வெளியே வந்தனர் வெற்றியும் பாரதியும்.

அணைக்கட்டினை ரசித்தனர். பச்சை நிறத்தில் இருந்த தண்ணீரை கண்டு மன அமைதி கொள்ள ஆரம்பித்தான் வெற்றி.

"உங்களுக்கும் அந்த மெக்கானிக்கும் என்னங்க பிரச்சனை.?" என ஆரம்பித்த வெற்றியிடம் "பிரச்சனை எதுவும் இல்ல சார். அப்பப்ப பஞ்சர் போட போவேன் அவ்வளவுதான்.." என்றாள்.

"அவன் அவ்வளவு போட்டோ வச்சிருக்கான். இது உங்களுக்கு முன்னாடியே தெரியாதா.?"

"சத்தியமா தெரியாது சார். எங்க வீட்டுக்கு தெரிஞ்சா என்னை கொன்னே போட்டுடுவாங்க.. எங்க வீட்டுல செம ஸ்டிரிக்ட்.. நான் வேலைக்கு வருவதே பெரிய விசயம்.." என்றாள் பயத்தோடு. அவளின் முக மாற்றங்களை ஆச்சரியத்தோடுப் பார்த்துக் கொண்டிருந்தான் வெற்றி ‌

அவளின் குழி விழுந்த கன்னத்தோடு உரசிக் கொண்டிருந்த முடிகளை ஓரம் ஒதுக்கி ‌விட்டான். பாரதி வெட்கத்தோடு தலை குனிந்தாள். முதல் முறையாக ஒரு வேற்று ஆணின் நெருக்கம். வித்தியாசமாக உணர்ந்தாள். கொஞ்சமா பிடித்திருந்தது.

"நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க.." என்றவனை நிமிர்ந்துப் பார்த்தவள் "நான் பதிலுக்கு அதே போல சொல்ல மாட்டேன்.." என்றாள்.

கலகலவென சிரித்தான். "நான் அவ்வளவு அசிங்கமாவா இருக்கேன்.?"

பாரதி யோசனையோடு இல்லையென தலையசைத்தாள்.

'எங்க பாட்டி ஊருல இருக்கும் போண்டா வாயனோட சாயல் அடிக்குதுன்னு சொன்னா அப்புறம் இவரு கண்டிப்பா பேசவே மாட்டாரு..' என்று தனக்குள் எண்ணி சிரித்தவள் "மீன் சாப்பிடுறிங்களா.? இங்கே டேஸ்டா கிடைக்கும்.." என்றாள்.

"எங்க ஊர்லயும் ஆறு இருக்குங்க.. எங்க வீட்டோட பின்னாடி ஆறு ஓடும். நானும் என் அப்பாவும் ஞாயித்து கிழமைகள்ல தூண்டில் போட்டு பிடிப்போம்.." என்றவன் அவளுக்கு மட்டும் மீனை வாங்கி‌ தந்தான்.

வண்டு நரேஷ் வாங்கி கொடுத்த ஐஸ்கிரீமை சுவைத்தபடியே அந்த கார் ஷோரும் முன்னால் நின்றிருந்தான்.

'அண்ணன் உள்ளே போய் அரை மணி நேரம் ஆச்சி. இன்னும் என்னதான் பண்றாரோ.?' என நினைத்தபடி இருந்தான்.

பத்தாம் நிமிடத்தில் வெளியே வந்தான் நரேஷ்.

"போலாமா வண்டு.?" என கேட்டபடி பைக்கை இயக்கினான்.

"என்ன அண்ணா சொன்னாங்க இவங்க.?"

"என்னை மாதிரி ஒரு சாதாரண மெக்கானிக் உள்ளே வர கூடாதுன்னு சொல்லிட்டாங்க.." என்றான் தோள்களை குலுக்கி.

"அதுக்கே இவ்வளவு நேரமா.?" ஆச்சரியத்தில் வாய் பிளந்த வண்டுவுக்கு வழியில் இன்னொரு ஐஸ்கிரீமை வாங்கி தந்த நரேஷ் "அதெல்லாம் விலாவாரியா திட்டு வாங்கிட்டு வந்தேன்டா.. எல்லாத்தையும் சொல்ல முடியுமா?" எனக் கேட்டான்.

மெக்கானிக் கடை வந்ததும் துள்ளிக் குதித்து இறங்கினான் வண்டு.

"அண்ணியும் நாமம் போட்டுட்டாங்க.. இனி எப்படி டைம் போகுமோ நமக்கு.?" என்று சலித்துக் கொண்டவனின் தலையில் தட்டியவன் "அவளை தப்பா சொல்லாதடா.. நான் என் லவ்வை சொல்லாததுக்கு அவ என்ன செய்வா.?" எனக் கேட்டான்.

"அண்ணிக்காக வந்திங்க.. இனி என்ன செய்ய போறிங்க.? ஊர் பக்கம் கிளம்ப போறிங்களா.?"

நரேஷ் யோசித்தான். "அவ நல்ல வாழ்க்கை வாழ்வதை பார்த்துட்டு போறேன்டா.." என்று ஏக்கமாக சொன்னவன் பழுதாகி நின்றிருந்த பைக்கை சரி செய்ய ஆரம்பித்தான்.

வீட்டின் முன் கார் நின்றதும் "மாமா இன்னைக்கு கிளப்ல நடந்தது பத்தி வீட்டுல சொல்லிடாதிங்க.." என்றாள் கனிமொழி.

சக்தி கோபத்தோடு அவளைப் பார்த்தான்.

"ஏன்டி.?"

"வீட்டுக்கு தெரிஞ்சா பிரச்சனையாகும்.. என் அம்மா என்னை திட்டுவாங்க.." என்றாள்.

முறைத்தபடியே காரிலிருந்து இறங்கினான் சக்தி.

"நான் சொல்வேன். அப்போதான் உனக்கு நல்ல புத்தியா சொல்வாங்க.. நீயும் சூடு சொரணையோடு இருப்ப. யாராவது அடிக்க வந்தாலும் திருப்பி அடிப்ப.." என்றான் அவன்.

'நான் திருப்பி அடிக்கறது இந்த ஜென்மத்துல நடக்காது மாமா..' என நினைத்துக் கொண்டவள் "வீண் பிரச்சனை வேணாம்.." என்றாள் கெஞ்சலாக.

அவளின் கையை பற்றி தன் அருகே இழுத்து நிறுத்தியவன் "வீண் பிரச்சனையா.? அவதானே முதல்ல சண்டைக்கு வந்தா.? வம்புக்கு சண்டைக்கு ஒருத்தங்க வராங்கன்னா அவங்களை பிரிச்சி எடுக்கணும் கனி.." என்றான்.

"ஐ லவ் யூ சொன்னதுக்கே அறை விட்டிங்களே அப்படியா.?" எனக் கேட்டவள் அவன் முறைப்பது கண்டு "யாரோ ஒரு தெரியாத பொண்ணு. அஞ்சி நிமிசத்துல நடந்து முடிஞ்ச பிரச்சனை. இதுக்கு ஏன் சீன் கிரியேட் பண்ணணும்.?" எனக் கேட்டுவிட்டு அவனிடமிருந்த கையை விடுவித்துக் கொண்டு உள்ளே போனாள்.

சக்தி நரநரவென்று பற்களை அரைத்தான். அவளை அப்படியே சுவற்றில் அடித்து தலையை உடைக்க வேண்டும் போல ஆத்திரம் வந்தது.

வெற்றி தன் முன் இருந்த வீட்டை ஆவலோடு பார்த்தான்.

"வாங்க.." கைக்கூப்பி வரவேற்றாள் பாரதியின் அண்ணி.

சுற்றிலும் தோட்டம் இருந்தது. இந்த இடத்தை வந்து சேர்வதற்குள் நடுங்கி விட்டான் வெற்றி. சாலை எப்படி எப்படியோ இருந்தது. அவள் எங்கும் சாய்க்கவில்லை. ஆனால் அவன் விழுந்து விட்டான், அவளிடம்.

வீடு வரை அழைத்து வருவாள் என்று அவன் நினைக்கவேயில்லை.

"இது வெற்றி சார். எங்க பேங்குக்கு டிரெயினிங் வந்திருக்காரு.. சொந்த ஊர் சந்தன கொடிக்கால்.." என்று அறிமுகப்படுத்தி வைத்தாள் பாரதி.

அம்மா அப்பா அண்ணன் அனைவரும் இவனை அன்பாக வரவேற்றனர். அண்ணியும் பாரதியும் அவனை உபசரித்தனர்.

வெற்றியின் கண் முன் தானாய் வந்து போனாள் அம்ருதா. இதுவரை ஒரு முறை கூட தன் பெற்றோரிடம் அறிமுகம் செய்து வைக்காத அவளையும் பழகிய முதல் நாளே வீடு வரை அழைத்து வந்த இவளையும் மனம் ஒப்பிட்டுப் பார்த்தது.

'உன் அம்ருதா கெட்டவளா கூட இருக்கட்டும்.. ஆனா நீ காதலிச்ச. அதுதான் உண்மை. நல்லவ கெட்டவ தனி கணக்கு. உன் காதலை உயிர்ப்பிக்க வச்சது யாருங்கறதுதான் முதல் கணக்கு..' என்று பாடம் சொன்னது அவனின் இதயம்.

'உன்னால ஒரு நாள் ஒரு நிமிசம் அம்முவை நினைக்காம இருக்க முடியாதா.?' என்று தன்னையே திட்டிக் கொண்டான்.

மாலை பொழுதில் அனைவரும் சேர்ந்து சிற்றுண்டி உண்டனர். அவர்கள் அனைவரையும் வெற்றிக்கு பிடித்திருந்தது. அவர்களுக்கும் அவனை பிடித்திருந்தது. தங்களின் மகள் முதல் முறையாக ஒரு ஆணை வீடு வரை அழைத்து வந்துள்ளாள் என்பதே அவர்களுக்கு பெரிய ஆச்சரியத்தை தந்திருந்தது.

"நான் இவரை கொண்டுப் போய் வீட்டுல விட்டுட்டு வரேன் அப்பா‌.." என்று எழுந்தாள் பாரதி.

"லீவு கிடைக்கும்போது வீட்டுக்கு வந்துட்டு போங்க தம்பி.." என்றார் பாரதியின் தந்தை‌.

சரியென்று தலையசைத்து விட்டு நடந்தான். பாதையை கண்டுதான் பயமாக இருந்தது.

"பயப்படாம வாங்க சார்.." என்றவளின் தோளில் இருந்த அவனின் கரம் சற்று இறுகியது. பயத்தில் ஆடாமல் அமர்ந்திருப்பதே பெரிய விசயமாக இருந்தது.

"ஆட்டி விட்டுடாதிங்க. அப்புறம் இரண்டு பேரும் பரலோகம்தான்.." என்றவள் தயக்கத்தோடு "அந்த கைகளை கொஞ்சம் லூஸ் பண்ணிக்கிறிங்களா.? ரொம்ப வலிக்குது.." என்றாள்.

வெற்றி சட்டென்று கையை எடுத்துக் கொண்டான். கம்பியை பிடித்துக் கொண்டான். புடவை விலகியிருந்த அவளின் இடையில் வந்து நின்றது அவனின் பார்வை.

"அம்மு நீ புடவையே கட்டாத.."

"ஏன் வெற்றி.?" அவன் எடுத்து தந்த புடவையை அவன் முன் நின்று கட்டியபடி கேட்டாள்.

"ஏனா எனக்கு உன்னை தவிர வேற பார்க்க முடியல. ரொம்ப அழகா இருக்க.. கொஞ்சமா தெரியற ஹிப் கூட ரொம்ப அழகா இருக்கு. நேத்து நடந்த மீட்டிங்ல உன்னை மட்டும்தான் பார்த்துட்டு இருந்தேன். ராம் என்னை கிண்டல் பண்ணியே சாகடிச்சிட்டான்.." என்று இவன் சொல்லவும் "ஐயோ பாவம்.." என்று உச்சுக் கொட்டியவள் "உங்க அப்பா மறுபடி எப்ப பழனிக்கோ திருப்பதிக்கோ போவார்ன்னு கேட்டுச் சொல்லு. நான் இங்கேயே வந்துடுறேன். நீ ஏங்கினா எனக்கு தாங்காது பேபி.." என்று அவனின் தாடையை பிடித்து கொஞ்சினாள்.

"அம்மு.." அவளின் அழகு கண்களில் தொலைந்தவன் அவளை அணைத்து தூக்கினான்.

"நீ போகாதே.. இங்கேயே இரு. நாம கல்யாணம் பண்ணிக்கலாம்." என்றான்.

"எங்க அப்பா உதைப்பாரு. இன்னும் கொஞ்சம் வருசம் போகட்டும். அப்புறம் இரண்டு பேரும் மேரேஜ் பண்ணிக்கலாம்.."

"நோ. எனக்கு இப்பவே மேரேஜ் வேணும்.." என்றவனின் இதழில் முத்தம் பதித்தவள் "இதை வச்சிக்க. நமக்கு கந்தர்வ முறைப்படி மேரேஜ் ஆச்சின்னு நினைச்சிக்க.." என்றாள்.

அவளை கீழே இறக்கி நிறுத்தியவன் "ஓகே. நமக்கு நடந்த கந்தர்வ மேரேஜை கிஸ் தந்து செலிபிரேட் பண்ணலாம்.." என்றான். அவள் நகைப்போடு மறுத்து தலையசைக்க இருந்த நேரத்தில் அவளின் உதடுகளை சிறை பிடித்தான். அவளும் முத்தத்தில் தன்னை தொலைக்க, அவனும் முத்தத்தின் பிடியிலிருந்த வண்ணமே கைகளை கீழிறக்கி அவளின் இடையை பற்ற, பாரதியின் ஸ்கூட்டி அந்த சரளை கல் பாதையில் சாய்ந்து விழுந்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN