காதல் கணவன் 43

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பாரதியின் வலது கை முட்டியிலும், வெற்றியின் வலது கால் முட்டியிலும் காயமாகி ரத்தம் கொட்டியது.

"அச்சோ சாரி பாரதி.." அவசரமாக தன் மேலிருந்த ஸ்கூட்டியை தூக்கினான். அவன் எழுவதற்கு நொடிகள் தாமதமானதால் ஸ்கூட்டி அந்த பக்கம் விழுந்தது.

"ஐயோ என் செல்ல குட்டி.." கை காயம் மறந்து எழுந்தோடினாள் பாரதி.

வெற்றி சிரமப்பட்டு எழுந்து நின்றான்.

"ஆர் யூ ஓகே.?" இவன் கேட்டதை காதில் வாங்காமல் ஸ்கூட்டியை தூக்கி நிறுத்தினாள். இரு பக்க இன்டிகேட்டரும் நொறுங்கி விட்டிருந்தது. சீட்டில் கூட அடிப்பட்டு கிழிந்து விட்டது. சைட் ஸ்டேன்ட் வளைந்து விட்டிருந்தது. பைக்கை ஸ்டார்ட் செய்து பார்த்தாள். எந்த சத்தமும் வரவில்லை. எங்கே எந்த ஒயர் விட்டுப் போனது என்று அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை.

"என் ஸ்கூட்டி.." என்று சிறு குரலில் அழ ஆரம்பித்தவளை கவலையாக பார்த்தவன் "சரி பண்ணிக்கலாம் பாரதி.." என்றான்.

அவளின் அழுகை நிற்கவில்லை. தன் கர்ச்சீப்பை எடுத்து அவளின் கை முட்டியின் மீது துடைத்து விட்டான்.

"சாரி. தெரியாம ஹிப்ல கை வச்சிட்டேன்.." என்றான் முகம் சிவக்க.

அவள் என்ன சொல்வாள்.? தெரியாமல் கை பட்டது என்றவனை திட்டவா முடியும்.? என நினைத்தபடி ஸ்கூட்டியை சுற்றி சுற்றி வந்தாள்.

"என் முதல் மாச சம்பளம் வந்த உடனே எங்க அப்பா டீவ்ல இதை வாங்கி தந்தாரு. இரண்டு வருசத்துல ஒருமுறை கூட கீழே விழ விட்டதே இல்ல.. இப்ப கூட எனக்கு அடிப்பட விடாம தனக்கு மட்டும் அடி வாங்கிக்கிச்சி.. மை ஸ்வீட் டார்லிங் வண்டி.." ஸ்கூட்டியை வருடி கொஞ்சியபடி புலம்பிக் கொண்டிருந்தாள்.

"உங்க அப்பாவுக்கு போன் பண்ணுங்க.. வரட்டும்." என்றவனை கலவரமாக பார்த்தவள் "ஏன் சார்.? அப்புறம் அவங்க என்னை வேலைக்கு அனுப்பவே மாட்டாங்க.." என்றாள் பயத்தோடு.

"பின்ன எப்படிங்க ட்ரீட்மெண்ட் பண்ணிக்கறது.? ஏற்கனவே கர்ச்சீப் நனைஞ்சி புடவை நனைஞ்சிட்டு இருக்கு.." என்று அவளின் கை காயத்தை சுட்டிக் காட்டினான்.

"நாம வண்டியை மெக்கானிக்கிட்ட விட்டுட்டு ஆட்டோவுல போகலாம் சார்.." என்றாள்.

சுற்றும் முற்றும் பார்த்தவன் "இந்த ரோட்டுக்கு ஆட்டோ வருமா.?" எனக் கேட்டான் சந்தேகமாக.

அவள் தன் போனை எடுத்தாள். தனக்கு தெரிந்த ஆட்டோக்காரருக்கு அழைத்து வர சொன்னாள். மெக்கானிக்கிற்கு அழைக்க முயன்றவள் தயங்கினாள்.

"முன்னையெல்லாம் பைக் பஞ்சரானா அவனுக்குதான் கூப்பிட்டு சொல்வேன். ரெடி பண்ணி தருவான். இன்னைக்கு சண்டை வேற போட்டுட்டோம். வருவானா.?" என்று வெற்றியிடம் கேட்டாள்.

அவன் யாரென்று தெளிவாக புரிந்தது.‌ சிறு கோபம் வந்தது.

"பரவால்ல பண்ணுங்க. பர்சனலுக்கும் ப்ரொபசனுக்கும் இடையிலிருக்கும் வித்தியாசம் அவனுக்கும் தெரியும்ன்னு நம்புவோம்.." என்றான்.

டெம்பர்ட் கிளாஸ் உடைந்து நொறுங்கியிருந்த போனில் மெக்கானிக் என இருந்ததை தட்டி அழைத்தாள். வண்டி ரிப்பேர் என்று சொல்லி வர சொன்னாள்.

ஆட்டோவும் மெக்கானிக்கும் வரும் வரை அந்த சரளை கல் பாதையில் இருவரும் நடை பழகிக் கொண்டிருந்தனர்.

வேறு எந்த வண்டியும் அந்த பாதையில் போகவில்லை. வெற்றி தன் போனை எடுத்து பார்த்தான். நன்றாக இருந்தது. அவளது போனை நினைத்து வருத்தமாக இருந்தது.

கால் மணி நேரம் கடந்திருந்தது. நரேஷ் க்ரீஸ் அப்பியிருந்த சட்டையோடும் கழுத்தோடும் பைக்கில் வந்தான். கூட வந்த இளைஞன் கீழிறங்கிய மறுநொடியில் இவனும் இவளை கண்டதும் அதிர்ந்து, பைக்கை அப்படியே விட்டுவிட்டு அருகே ஓடி வந்தான். அவனின் பைக் அனாதையாக சாய்ந்து கிடந்தது.

"பாரதி.. என்ன ஆச்சிம்மா.?" எனக் கேட்டவன் காயம் பட்ட அவளின் கையை பிடித்து பார்த்தான்.

பயமும் பதட்டமுமாக இருந்தவனை தூர இழுத்து நிறுத்தினான் வெற்றி.

"பைக் ரிப்பேர். ரெடி பண்ணி கொடுங்க.." என்ற வெற்றி பாரதியின் கையிலிருந்த சாவியை பிடுங்கி அவனிடம் தந்துவிட்டு வந்து நின்ற ஆட்டோவில் ஏறினான்.

பாரதி குழப்பத்தோடு திரும்பிப் பார்த்தாள். நரேஷ் அவளைதான் கவலையாக பார்த்துக் கொண்டிருந்தான். அவனின் கண்களை காண முடியவில்லை அவளால். திரும்பிக் கொண்டாள்.

ஆட்டோ ஹாஸ்பிட்டல் நோக்கி சென்றது.

"அந்த பைக்கை எடுத்துட்டு போ.. நான் ஸ்கூட்டியை தள்ளிட்டு வரேன்.." என்ற நரேஷ் ஸ்கூட்டியை ஆசையோடு வருடி விட்டான்.

"திரும்பி கூட பார்க்க மாட்டேங்கிறா.. நீ ஏன் இவ்வளவு பண்ற.?" என கேட்டபடி உடன் வந்தவன் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

ஸ்கூட்டியின் அருகே பாரதியின் கண்ணாடி வளையல்கள் உடைந்து விழுந்திருந்தன. அனைத்தையும் எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டான் நரேஷ். ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து பார்த்து விட்டு தள்ள ஆரம்பித்தான்.

"உனக்கு வாய் இருந்திருந்தா என் காதலை அவக்கிட்ட சொல்லி இருப்பியா‌.?" என்று ஸ்கூட்டியை பார்த்து ஏக்கமாக கேட்டவன் "ம்ப்ச்.. இனி நான் இதை பத்தி நினைக்க கூடாது. அவளுக்கு அந்த சார்தான் பொருத்தமானவர்.." என்றபடி நடந்தான்.

பாரதிக்கு சிகிச்சை முடித்து ஆட்டோவிலேயே அனுப்பி வைத்தான் வெற்றி‌.‌ கைகளை நெருப்பில் சுட்டுக் கொள்ள வேண்டும் போல இருந்தது.

"ஆனா உன்னால அம்முவோட நினைப்பை சுட்டுக்க முடியாதே.!" என்று புலம்பியபடி தன் வீடு நோக்கி நடந்தான்.

"பைக் பாதி வழியில் பஞ்சர்.. முன்னாடி டியூப் போயிடுச்சிப்பா.. அதனாலதான் ஆட்டோவுல வந்தேன்.." என்று வீட்டில் சொன்ன பாரதி வரப்பில் நடந்துதான் வந்திருந்தாள்.

பாலாஜி தலையை பிடித்தபடி அமர்ந்திருந்தான். வெற்றியின் வீட்டின் பின்னால் இருந்த ஆற்றின் கரையில் அமர்ந்திருந்த கீர்த்தனா ஆற்றின் ஊற்றை போலவே கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள்.

"சாரி கீர்த்து.." நூறாவது முறையாக சொன்னான் பாலாஜி.

தியாகராஜன் கொண்டு வந்து வைத்து சென்றிருந்த காப்பி ஆறி வெகு நேரம் ஆறி விட்டிருந்தது.

மகனும் மருமகளும் வந்திருக்கிறார்களே என்று விருந்து சமைத்துக் கொண்டிருந்தார் தியாகராஜன்.

"அழுகாதே.. எனக்கு செத்துடலாம் போல இருக்கு.." பாலாஜி சொன்னதை கேட்டு கசப்பாக சிரித்தவள் "என்னை ஏமாத்தாதே பாலா.. ஏற்கனவே ரொம்ப வலி‌‌. காதல்ன்னா இந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கும்ன்னு நினைக்கல நான். இல்லன்னா இந்த லவ்வுல விழுந்திருக்கவே மாட்டேன்.." என்றாள்.

பாலாஜி கடுப்போடு எழுந்து நின்றான்.

"நான் இந்த ஆத்துல இறங்கினா என் லவ்வை நம்புவியா.?" எனக் கேட்டவன் அவள் பதில் சொல்லும் முன்பே ஆற்றில் இறங்கி விட்டான்.

கீர்த்தனா முகத்தை மூடியபடி தலை குனிந்தாள். ஆற்றில் ஆழம் இருக்கிறதா இல்லையா என்று அவளுக்கு தெரியவில்லை. ஆனால் அவன் செய்வது சுத்தமான கிறுக்குதனம் என்பது மட்டும் புரிந்தது.

"தயவு செஞ்சி நீயே என்னை சாகடிச்சிடு.." என்றாள் நொடிகள் கடந்த பிறகு. கைகள் விலக்கி நிமிர்ந்தவளின் பார்வையில் பாலாஜி தென்படவில்லை.

அவசரமாக எழுந்தவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். "பாலா‌‌.." பதறி அழைத்தாள்.

அவனை எங்கும் காணவில்லை. நதி சலனமற்று ஓடிக் கொண்டிருந்தது. அழுகை இரு மடங்காகியது. கண்ணீரும் கொட்டியது.

"பாலா‌‌.." அழுதபடி அழைத்தவளுக்கு பாதி உயிரே இல்லை. அலைபாயும் பார்வையோடு ஆற்றுக்குள் பாய ஓடியவளின் கரத்தை பிடித்தது ஒரு ஜீவன். திரும்பிப் பார்த்தாள். ஈர உடைகளோடு பாலாஜி நின்றிருந்தான். அவனிடமிருந்து கையை விடுவித்துக் கொண்டவள் தரையில் அமர்ந்து விட்டாள். முகத்தை மூடிக் கொண்டு விம்ம ஆரம்பித்தாள்.

"கீர்த்தனா.." அவளின் தோளில் கை பதித்தான். விழிகளை திறந்தவள் நிமிர்ந்தாள். எழுந்தவள் அவனின் கன்னத்தில் பளீரென்று ஒரு அறையை தந்தாள்‌.

"நான் இதை விட முட்டாளா பீல் பண்ணதே இல்ல. உன்னை லவ் பண்ணது மட்டும்தான் என் வாழ்க்கையோட ஒரே முட்டாள்தனம்.." என்றவள் அவனை கண்களால் எரித்து விட்டு அவனை தாண்டி நடந்தாள். ஆனால் அவன்தான் விடவில்லை. மறித்து நின்றான்.

"சாரி சொன்னேன் கீர்த்தனா.. தப்பு பண்ணிட்டேன். உனக்காக ரிஸ்க் எடுத்திருக்கணும். அந்த வீட்டுக்கு அப்பவே வந்திருக்கணும். தப்புதான். சாரி.." என்றான் கெஞ்சலாக.

அவளின் பார்வையிலிருந்த இளக்காரமும் நம்பிக்கையில்லா தனமும் அவனை சுட்டது.

"சாரிம்மா.. ரியலி சாரி. நான் கோழை. ஒத்துக்கறேன். முட்டாள். அதையும் ஒத்துக்கறேன். எவ்வளவு வேணாலும் கோபப்படு. ஆனா அழாதே. என்னை அடி.. திட்டு.. கோச்சிக்க. அழாதே. ப்ளீஸ்‌‌.." கெஞ்சினான்.

கீர்த்தனாவால் இப்போது திட்ட கூட முடியவில்லை. பதிலே பேசாமல் அவனை தாண்டி நடந்தாள். அவளின் கரத்தை விடாதவன் அவளின் சுண்டு விரலை தூக்கி முத்தமிட்டான். ஆத்திரத்தோடு திரும்பி வந்தவள் அவனின் மறு கன்னத்திலும் அறையை தந்தாள்.

"என் அனுமதி இல்லாம என்னை கிஸ் பண்ணாத.. என் கஷ்டமும், வருத்தமும் உனக்கு சுத்தமா புரியாது. நான் ஜடம் இல்லன்னு ஏற்கனவே சொல்லிட்டேன். என் பீலிங்ஸோடு விளையாடாதே.. உனக்கு என் உடம்பு மட்டும்தான் வேணும்ன்னா.." அவள் மேற்கொண்டு பேசும் முன் கை காட்டி தடுத்தான்.

"இதே பழியை திருப்பி திருப்பி போடாதே.. ஒருத்தன் கட்டிக்கிட்ட பொண்டாட்டி மேல ஆசையா இல்லாம ஊர்ல இருப்பவளையா கொஞ்சிட்டு இருப்பான்.? நீ ஒவ்வொரு முறை இந்த பழியை போடும்போதும் ‌வலிக்குது கீர்த்தனா. நான் உனக்கு அடிக்ட் ஆகிட்டேன்.. இந்த அளவுக்கு அடிக்ட் ஆவேன்னு தெரிஞ்சிருந்தா மனசு உடைஞ்சி செத்தாலும் பரவால்லன்னு அப்பவே அந்த வீட்டுக்கு வந்திருப்பேன்.‌ என் லவ்வை நான் ரியலைஸ் பண்ணிக்காதது என் தப்புதான். ஓகே? முடிஞ்சா மன்னிச்சிக்கோ. இல்லன்னா எப்படியோ போ.. இதுக்கு மேல என்னால உன்கிட்ட புரிய வைக்க முடியாது.." என்றவன் அவளை விட்டுவிட்டு வீட்டை நோக்கி‌ நடந்தான்.

கீர்த்தனாவுக்கு மறுபடியும் அழுகைதான் வந்தது.

அன்று இரவு உணவை அங்கேயே முடித்து விட்டு வீடு திரும்பினர் இருவரும். இருவருமே பேசிக் கொள்ளவில்லை. இறுகிய முகத்தோடு வீடு வந்து சேர்ந்தனர்.

கனிமொழி மறுநாள் பரிட்சைக்காக விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருந்தாள். கீர்த்தனா வந்ததும் அவளின் முகத்தை பார்த்தவள் "என்னாச்சி கீர்த்தனா.? ஏன் அழுதிருக்க.?" என கேட்டபடி எழுந்து அருகே வந்தாள். கீர்த்தனா மௌனமாக இருந்தாள்.

"கவலைப்படாதே கீர்த்தனா. மூனு மாசம் சீக்கிரம் முடிஞ்சிடும். ஜாதக பிரச்சனை தீர்ந்துடும்.." என்று நம்பிக்கை சொன்னாள்.

"நீ போய் படி‌.." என்றவள் தலையணையை அணைத்த வண்ணம் கட்டிலில் விழுந்தாள்.

பாலாஜிக்கு கடுப்பாக இருந்தது. ஆனாலும் விழிகளை மூடி உறங்க ஆரம்பித்த பிறகு நடந்த சண்டையையெல்லாம் மறந்து விட்டு கனவில் காதலியோடு காதல் செய்ய ஆரம்பித்தான்.

சக்தி நல்ல உறக்கத்தில் இருந்தான்.‌ கனவில் கனிமொழி அழுதுக் கொண்டிருந்தாள். யாரோ சிலர் அவளை அடிக்க வந்தார்கள். மூலை ஒன்றில் ஒடுங்கிப் போய் அமர்ந்தவள் அவர்களிடம் கைக் கூப்பி கெஞ்சிக் கொண்டிருந்தாள். முகம் காட்டாத பையன் ஒருவன் அவள் முன்னே அமர்ந்து அவளின் தாடையை பற்றி உயர்த்தி, அவளை அறைய கையை உயர்த்தவும் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தான் சக்தி.

நெற்றியில் வியர்த்து விட்டிருந்தது‌. கனவு என புரிந்து தன்னையே சமாதானம் செய்து கொண்டவன் தண்ணீரை பருகினான். மூச்சை இழுத்து விட்டபடி படுத்தான். பாலாஜி நெருங்கினான். சக்தியை அணைத்தான். அவனை அந்த பக்கமாக தள்ளி விட்டான் இவன். கண்களை மூடி உறங்க ஆரம்பித்தான். மீண்டும் வந்து அணைத்தான் பாலாஜி. அவனின் வலது கரம் சக்தியின் மேனியை தடவி தீர்த்தது. கடுப்பாக இருந்தது சக்திக்கு. சக்தியின் வயிற்றில் கொண்டு வந்து கையை பதித்த பாலாஜி "உன் தொப்புள் என்ன கட்டி வச்சி தெப்ப குளமா.? நான் தொத்திக் கொள்ள இங்கிருந்து கப்பல் வருமா.?" என பாட்டு பாடியபடியே அவனின் வயிற்றை நோண்டினான்.

சக்தி பற்களை அரைத்தான். எழுந்து அமர்ந்தவன் மச்சானை ஓங்கி ஒரு உதை விட்டான். உருண்டு போய் தரையில் விழுந்து எழுந்த பாலாஜி அரக்க பறக்க அந்த அறையை நோட்டம் விட்டான்.

"எப்படி கீழே விழுந்தேன்.? ரூம்ல யாரோ திருடன் இருக்கான்.." என்றான் சுற்றும் முற்றும் பார்த்தபடி.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN