அத்தியாயம் 60

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கதவை தட்டி தட்டி பார்த்தான் ஆதீரன்.

"சங்கவி.." அழைத்தான். எந்த சத்தமும் வரவில்லை. கதவை முட்டி உடைக்க முயன்றான்.

"தம்பி சாவி.." என்று சாவியை எடுத்துக் கொண்டு ஓடி வந்தாள் அந்த வீட்டில் வேலை செய்யும் பெண்.

சாவியை வாங்கி கதவை திறந்தான். உள்ளே பார்த்தவனுக்கு அதன் பிறகே உயிர் வந்திருந்தது. ஏதாவது செய்துக் கொண்டாளோ என்று பயந்து நடுங்கி விட்டான். கட்டிலின் அருகே தரையில் அமர்ந்திருந்தவள் முட்டிக்காலை கட்டி மடியில் முகம் புதைத்து இருந்தாள்.

கதவை தாழிட்டு விட்டு உள்ளே நடந்தான்.

அவள் முன் சென்று மண்டியிட்டு அமர்ந்தவன் "சங்கவி.." என்று கவலையோடு அழைத்தான். நிமிர்ந்தவளின் விழிகளில் அருவியே இருந்தது.

இதயம் மெல்லிய சருகாய் மாறி பாதம் ஒன்றால் மிதிப்பட்டது போலே உடைவதை உணர்ந்தான்.

"அழாதே.." என்று கெஞ்சினான்.

"எனக்கு என் குழந்தை வேணும் மாமா.." அழுகையாக கேட்டாள்.

அணைத்துக் கொண்டான். "அழாதம்மா. இப்ப இல்லன்னா என்ன கொஞ்ச நாள் கழிச்சி குழந்தை பிறக்கும்.." என்று சமாதானம் சொன்னான்.

அழுதுக் கொண்டேதான் இருந்தாள். அவனின் சட்டை ஈரத்தால் நனைந்துக் கொண்டிருந்தது.

"எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு மாமா.."

அதை அவன் சொல்லவில்லை. அவளின் அழுகைதான் அதிக கஷ்டத்தை தந்தது.

"இட்ஸ் ஓகே சங்கவி.. அதை விடு.." என்றான்.

மறுத்து தலையசைத்தவள் "எனக்கு மனசே சரியில்ல.. ரொம்ப ஆசைப்பட்டேன். நான் என்ன பாவம் பண்ணேன் மாமா.? எனக்கு ஏன் இப்படி ஆச்சி.?" என்று அப்பாவியாய் கேட்டாள்..

'நீ பண்ணலன்னா என்ன நான்தான் நிறைய பண்ணியிருக்கேனே..' என நினைத்தவன் அணைத்திருந்த கரத்தை இறுக்கினான்.

அவளை எழுப்பி கட்டிலில் அமர வைத்தான். மடியில் சாய்ந்துக் கொண்டாள். அவனின் மடியையும் கண்ணீராய் நிறைத்தாள்.

அவளின் ஒவ்வொரு துளி கண்ணீரும் அவனுக்கு வலியாகதான் இருந்தது.

"நமக்கென்ன வயசா ஆயிடுச்சி.? விடு. நாம மெதுவா பெத்துக்கலாம்.. இயற்கையா அழிஞ்சதுக்கு நாம என்ன செய்ய முடியும்.?" எனக் கேட்டான்.

அவள் பதில் சொல்லாமல் அழுதாள்.

சாப்பிட மறுத்தாள். அவன் அறைந்து கூட பார்த்தான். அழுதாளே தவிர அவன் பேச்சை கேட்க மறுத்தாள். நாள் முழுக்க அழுது கொண்டே இருந்தாள்.

அவனால் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியவில்லை. ரேகாவிடமே ஓடினான்.

"டாக்டர்.. பேபி கலைஞ்சதுல இருந்து அழுதுட்டே இருக்கா.. இப்படியே விட்டா செத்துடுவாளோன்னு பயமா இருக்கு.. என்ன செய்றதுன்னு சொல்லுங்க.." எனக் கேட்டான்.

"முதல் குழந்தை இல்லையா.? அதனால இப்படிதான் கஷ்டமா இருக்கும். அவங்களை வெளியே எங்காவது கூட்டி போய் வாங்க.. புது இடம் அவங்க மனசை மாத்தலாம்.."

ஆதீரன் வீடு வந்தபோது சங்கவியின் முன்னே நின்றுக் கொண்டிருந்தார் மோகன்.

"அதுதான் குழந்தை கலைஞ்சிடுச்சே. அவனை டைவர்ஸ் பண்ணிட்டு நம்ம வீட்டுக்கே வந்துடு.." என்று அவளை அழைத்துக் கொண்டு இருந்தார்.

ஆதீரனுக்கு ஆத்திரத்தில் அவரை அடித்து வைக்க வேண்டும் போல இருந்தது. சங்கவி அழுத கண்களோடு மறுத்து தலையசைத்தாள்.

"அவரை விட்டு வர முடியாதுப்பா.." என்றாள் சிறு குரலில்.

"நாசமாய் போய் தொலை.." என்று திரும்பியவரை சிவந்த கண்களோடு முறைத்தான் ஆதீரன்.

"என் பொண்டாட்டியை நாசமா போன்னு சொல்ல நீங்க யாரு.?" எனக் கத்தினான்.

"அவளுக்கு அப்பா.." என்றவர் அவனை இளக்காரமாக ‌பார்த்து விட்டு கடந்துப் போனார்.

"சங்கவி.. கிளம்பு.." என்றவனை குழப்பமாக பார்த்தவள் "எங்கே.?" எனக் கேட்டாள்.

"ஊட்டி.." என்றவன் தேவையான உடைகளையும் பொருட்களையும் எடுத்து வைக்க போனான்.

"எதுக்கு மாமா.?" அழுது சலித்து இருந்ததால் தொண்டை கட்டிக் கொண்டு இருந்தது.

"ஹனிமூன்.." என்றவனை சந்தேகமாக பார்த்தாள்.

"இதுவரை ஹனிமூன் போகவே இல்லையே.. வா நாம ஊட்டி போய் வரலாம்.." என்றான்.

"ஆ.. ஆனா என்னால முடியாது மாமா.." தலைகுனிந்து சொன்னவளின் தாடையை பற்றி நிமிர்த்தினான்.

"என்ன முடியாது.?"

"ஹனிமூன் வர அளவுக்கு இல்ல.. மனசும் உடம்பும் சரியில்ல. கொஞ்ச நாள் கழிச்சி போகலாமா.? என்னை கூட்டிப் போனா நிச்சயம் நீங்க ஹனிமூன் போல பீல் பண்ண மாட்டிங்க.." என்றவளை யோசனையாக பார்த்தவன் "வேற யாரையாவது கூட்டி போகணுமா.?" எனக் கேட்டான். கலவரமாக பார்த்தாள் அவள்.

"அமைதியா வா சங்கவி. நான் என்ன மாதிரி பீல் பண்றேன்னு நானே கண்டுபிடிச்சிக்கிறேன்.." என்றவன் அவளின் உடைகளை பைகளில் நிரப்ப ஆரம்பித்தான்.

இந்த ஒரு வாரத்தில் ஒரு சுற்று இளைத்தே விட்டாள். உதடும் முகமும் கூட கறுத்து விட்டிருந்தது.

"நான்‌ ‌‌வரல.." என்றாள் கடைசி நேரத்திலும்.

"மரியாதையா வர.. இல்லன்னா வாயை உடைச்சிடுவேன்.." விரலை நீட்டி மிரட்டினான். வெகுநாளுக்கு பிறகு அவனுக்கு பயந்து காரில் ஏறினாள்.

"சாதாரணமா சொன்னா புரியாது போல.." முனகிக் கொண்டே காரை எடுத்தான்.

திருமண வீடு கோலாகலமாக இருந்தது. மாப்பிள்ளை சூர்யாதான் அனைத்தும் இழந்தவனாக இருந்தான்.

யஷ்வந்திற்கு தந்தை மேல் இருக்கும் கோபத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவ்வளவு வெறுப்பு அவர் மீது.

மொத்த வீடும் கலகலப்பாக இருந்தது.

"அண்ணிக்கு இன்னமும் டிஸ்சார்ஜ் இல்லையா.?" யவனா தன் அண்ணனிடம் விசாரித்தாள்.

"நாளைக்கு.." என்றவனிடம் சரியென தலையசைத்து விட்டு நடந்தாள். முதல் நாள் வெட்டு விழுந்தபோதே அண்ணியின் வீட்டுக்கு அழைத்து விசயத்தை சொல்ல இருந்தாள். ஆனால் பிறகு தன் அண்ணன் மேல் சந்தேகம் கொண்டு அவன் மேல் புகார் தந்து விடுவார்களோ என பயந்து விசயத்தை சொல்லாமல் விட்டு விட்டாள்.

விடிந்தால் திருமணம். ஆனால் அலெக்ஸும் பூங்கொடியும் வந்திருக்கவில்லை.

"அவன் எப்படிப்பா அவளை லவ் பண்ணுவான்.? தங்கச்சி லைப்பையே முழுசா நாசம் பண்றிங்க நீங்க.." மனம் பொறுக்க முடியாமல் சொன்னான் யஷ்வந்த்.

"அவ ஒன்னும் உன்னை போல உதவாக்கரை இல்லை. அதெல்லாம் இரண்டு மூனு மாசத்துல அவனை தன் கைக்குள்ள போட்டுப்பா.." என்றார்.‌

யஷ்வந்துக்கு ஆத்திரமாக வந்தது.

"நம்ம சொத்து போதாதா நாம வாழ.?"

"சொத்து இரண்டாம் பட்சம். நான் நினைச்சது நடக்கணும்.." என்றவரை வெறித்து விட்டு நகர்ந்தான்.

தங்கையிடமாவது பேசி பார்க்கலாமே என்று தர்ஷினியை தேடி வந்தான் யஷ்வந்த்.

இரவில் நடக்க இருக்கும் நலங்கு சடங்கிற்காக தயாராகிக் கொண்டிருந்தாள். பேரழகாய் இருந்தாள்.

"தர்ஷினி உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.."

"பேசு அண்ணா.."

அவளுக்கு அலங்காரம் செய்த பெண்ணை கை சைகை காட்டி வெளியே அனுப்பினான்.

"சூர்யாவுக்கு உன் மேல காதல் இல்ல. அவன் ஒரு பொண்ணை லவ் பண்ணான்னு சொன்னேன் இல்லையா, அது நம்ம வீட்டுல இருந்த குந்தவிதான்‌. அவ மேல அவன் உயிரையே வச்சிருக்கான். உனக்கு இந்த மேரேஜ் வேணாம் தர்ஷினி. அப்பா உன்னை ஏமாத்திட்டு இருக்காரு. குந்தவியை அடிச்சி போட்டுட்டாரு. அவ செத்தாளா பிழைச்சாளான்னு கூட தெரியல.." என்று சோகமாக சொன்னான்.

தர்ஷினி எழுந்து நின்றாள்.

"அண்ணா.. சூர்யா அவளை லவ் பண்ணது எனக்கும் தெரியும்.." என்ற தங்கையை அதிர்ச்சியோடு பார்த்தான் அவன்.

"அப்பாகிட்ட அவளை கொல்ல சொல்லி ஐடியா‌ தந்ததே நான்தான். என் லைஃப் இது. அவ என் லைஃப்ல குறுக்க வருவதை விரும்பல நான்.." என்றாள்.

அப்பாவின் புத்தியை அப்படியே கொண்டு இருக்கிறாளே என்று எரிச்சலடைந்தான்.

"நீ பண்றது தப்புன்னு உனக்கு தெரியுதா.? அவன் மனசை உடைச்சிட்டு நீ பொண்டாட்டியானாலும் என்ன பிரயோஜனம்.?" எனக் கேட்டான் ஆத்திரத்தோடு.

தன் ஜிமிக்கியை ஆசையோடு வருடி விட்டுக் கொண்டவள் "அவன் மனசை என்னால மாத்த முடியும்.. ஒரு ஆம்பளையை கூட கவுக்க முடியாத அளவுக்கு வீக்காவா இருக்கேன் நான்.?" எனக் கேட்டவள் கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தை ரசித்தாள்‌.

யஷ்வந்துக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. 'ஆம்பளன்னா அவ்வளவு கேவலமா, அல்பமா.?' என கேட்க நினைத்தது அவனின் ஆண் மனம். மனுசங்க பீலிங்ஸை கூட புரிஞ்சிக்காதவளை என்ன சொல்லி திருத்த என்றும் கவலைக் கொண்டான். தங்கையின் மனம் இந்த அளவுக்கு கெட்டுக் கிடக்கிறதே என்றும் வருந்தினான்.

அங்கிருக்க பிடிக்காமல் திரும்பியவனின் கண்களில் சூர்யா அறை வாசலில் நிற்பது தெரிந்தது. தர்ஷினி அவனை கவனிக்காமல் தன் அலங்காரத்தை ரசித்துக் கொண்டிருந்தாள். அருகில் வந்து நண்பனை அணைத்து அழைத்தபடி வெளியே நடந்தான் யஷ்வந்த்.

"ஐ யம் சாரி.." என்றான்.

"உன் அப்பா இவளையும் கெடுத்துட்டாரு.." என்ற சூர்யாவிடம் ஆமென்று தலையசைத்தவன்‌ "சாரி.. காணாம போன என் பாடிகார்ட்ஸை பத்தி இப்பதான் தகவல் வந்தது. இவர் அவங்க எல்லோரையும் வேலையை விட்டு அனுப்பி விட்டிருக்காரு. நான் அவங்களை நம்பி போனேன்.‌ என் தப்பு எந்த அளவுக்குன்னு என்னாலயே புரிஞ்சிக்க முடியுது.." என்றான்.

"முடிஞ்சதை விடு.." என்ற சூர்யாவிடம் வந்தாள் ரூபிகா.

"சூர்யா‌ வா நலங்கு வச்சிடலாம்.." என்று அழைத்துப் போனாள்.

"அம்மா காலையில் பிளைட்டுக்கு வந்துடுவாங்களா.?" அவனை மனையில் அமர்த்திவிட்டு சந்தேகமாக கேட்டாள்.

"தெரியல ஆன்டி.." என்றவனின் சட்டையற்ற மேனியில் சந்தனத்தை பூசினார்கள் உறவினர்கள்.

தனது நலங்கு மனையில் அமர்ந்தபடி சூர்யாவை ரசித்துக் கொண்டிருந்தாள் தர்ஷினி.

அவளுக்குள்ளும் ஆசையை தரும் ஆண்மகன். அவனின் நெற்றி முதல் தாடை வரை ரசித்துக் கொண்டு வந்தாள். கழுத்து முதல் கால் வரை ரசித்தாள்.

அவளின் பார்வையை சூர்யாவும் அறிந்தே இருந்தான். அவளின் அப்பட்டமான ரசிப்பு அவனுக்கு குந்தவியை நினைவுக்கு கொண்டு வந்தது. அந்த இருக்கையில் அவள் இருந்திருக்கலாம் என்று ஆசை கொண்டான்.

குந்தவியின் நினைவில் விழிகள் கலங்கியது. மனோகர் போனில் காட்டியபோது பார்த்தது. தலையில் பெரியதாக வெள்ளைக் கட்டுப் போட்டுப் படுத்திருந்தாள். முகத்திலும் கூட காயம் இருந்தது. ஆக்ஸிஜன் மாஸ்க் மறைத்த அவளின் முகத்தில் இருந்த அந்த கண்கள் இரண்டும் திறந்து இந்த உலகம் பார்க்க எதையும் செய்வான் சூர்யா. அவளை நினைத்த மனதோடு இவளை திருமணம் செய்ய போகிறோம் என்பது இதயத்தில் எரிமலையை கொட்டி குவித்தது.

சூர்யாவின் கலங்கிய விழிகளை பார்த்துக் கொண்டிருந்த யஷ்வந்துக்கு மனம் உடைந்தது. தன்னால்தான் சூர்யா இந்த நிலையில் இருக்கிறான் என்பது தாங்கவியலாத துக்கத்தை தந்தது.

"சூர்யா.." பழகிய குரலில் நிமிர்ந்துப் பார்த்தான் சூர்யா. ஜேம்ஸ் நின்றிருந்தார்.

"பெரியப்பா.." நலங்கை மறந்து எழுந்தவன் பெரியப்பாவை கட்டி அணைத்துக் கொண்டான். அவரின் சட்டையில் ஒட்டியது சந்தனம்.

அனாதை குழந்தை போல இருப்பது போலிருந்தது. இப்போதுதான் ஒரு துணை கிடைத்தது போலவே இருந்தது.

"தைரியமா இரு.." என்று அவனுக்கு தோளில் தட்டி தந்தவர் தன்னை தேடி வந்த மனோகரிடம் பேச கிளம்பினார்.

"டீல் அத்தனைக்கும் பேப்பர்ஸ் ரெடி பண்ணிட்டு வந்துட்டிங்களா.?" எனக் கேட்ட மனோகரிடம் தன் பெட்டியை திறந்து பேப்பர்களை எடுத்து தந்தார் அவர்.

சொத்துகளின் பரிமாற்றம் பற்றி தெளிவாக எழுதப்பட்டு இருந்தது.

"மேரேஜ் முடிஞ்சதும் சைன் பண்ணிடுறோம்.." என்றார் ஜேம்ஸ். அவரின் குரலில் இருந்த வலியை அவரை தவிர வேறு யாராலும் புரிந்துக் கொள்ள முடியாது.

மனோகர் சரியென்று தலையசைத்தார். இந்தியாவில் மட்டுமே இருந்த யஷூ நிறுவனம் இனி ஷைனிங் வேர்ல்ட் நிறுவனத்தோடு இணைந்து உலகம் முழுக்க வியாபிக்க போகிறது என்ற பெரும் கனவு அவரை பேயாய் பிடித்து பேராசையாய் ஆட்ட ஆரம்பித்தது. பணம், நிறுவனம் ஈட்ட இருக்கும் பெயரும் புகழும் அவரை இப்போதே கனா காண செய்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN