காதல் கணவன் 45

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தியேட்டரில் அருகருகே அமர்ந்திருந்தனர் கவினும் அம்ருதாவும். அவளின் கரத்தை இறுக்க பற்றியிருந்தான் அவன்.

திரையில் ஓடிக் கொண்டிருந்த திரைப்படத்தை கவனித்தபடியே இவனின் நெஞ்சில் சாய்ந்தாள் அம்ருதா. அவனும் அணைத்துக் கொண்டான்.

"ஆர் யூ ஓகே.?" எனக் கேட்டான் அவளின் தலையை வருடியபடி.

நிமிர்ந்து அவன் முகத்தை அரை இருளில் பார்த்தவள் "என்னோடு எப்போதும் இருப்பியா.?" எனக் கேட்டாள்.

அவளின் நெற்றியில் முத்தமிட்டவன் "கண்டிப்பா இருப்பேன்.." என்றான்.

மேலே இரண்டு வரிசை தள்ளி அமர்ந்திருந்த‌ அர்ச்சனாவுக்கும் வளர்மதிக்கும் ஏன் இந்த தியேட்டருக்கு வந்தோம் என்று இருந்தது. வீட்டில் பொழுது போகாமல் இருக்கவும், மாலை நேர பஜனைக்கு செல்வதாக தாயம்மாவிடம் சொல்லிவிட்டு இங்கே வந்திருந்தனர்.

எதேச்சையாகதான் அவர்களின் கண்களில் தென்பட்டிருந்தாள் அம்ருதா.

அவளை இன்னொரு ஆணோடு இவ்வளவு நெருக்கமாக பார்க்கவும் இருவருக்கும் ஏதோ போலாகி விட்டது.

திரைப்படத்தின் பக்கம் பார்வையை திருப்பிக் கொண்டான் கவின். ஆனாலும் அவளை அணைத்திருந்த அவனின் கரம் அவளின் தோளை வருடிக் கொண்டிருந்தது.

மனதில் இருந்தவனை இவனின் சட்டை வாசத்தில் மறக்க முயன்றுக் கொண்டிருந்தாள் அம்ருதா. தன் நினைவை திருடும் கள்வனை‌ இவனின் மேனி கதகதப்பில்‌ தீய்த்து விட நினைத்தாள்.

அவள் கடைசி வரை திரைப்படத்தை பார்க்கவேயில்லை. அவனை விட்டு இம்மியளவு நகரவும் இல்லை.

"கவின்.."

"சொல்லு அம்மு.." அவன் அம்மு என அழைக்கவும் முகம் சுளித்தவள் "அம்ருதான்னு கூப்பிடு. இல்லன்னா வேறு ஏதாவது கூப்பிடு.." என்றான்.

"சரிங்க டார்லிங்.. இப்ப ஏன் என்னை கூப்பிட்டிங்க.?" அவளின் கன்னத்தை பிடித்து கேட்டான்.

"ஐ லவ் யூ.."

அவன் புன்னகைத்தான். அழகாய் வெள்ளை புன்னகை. அவளை அணைத்திருந்த கரத்தை இன்னும் சற்று இறுக்கிக் கொண்டவன் "லவ் யூ டூ.." என்றான்.

தியேட்டரை விட்டு வெளியேறுகையில்தான் வளர்மதியையும் அர்ச்சனாவையும் பார்த்தாள் அம்ருதா. இவரும் இவளை முறைத்தபடி அங்கிருந்து கிளம்பினர்.

கவினை வீட்டில் விட்டுவிட்டு தனது வீட்டுக்கு போனாள் அம்ருதா. ஆரவ் போனில் பேசிக் கொண்டிருந்தான்.

"ஆரவ்.." அழைத்தாள். அவன் கண்டுக்கொள்ளாமல் போனான்.

எரிச்சலோடு தனது அறைக்கு போனாள். மனதுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக எட்டிப் பார்த்தது வெற்றியின் நினைவு.

"நாளைக்கு கவினோட சட்டை ஒன்னை கேட்டு வாங்கி‌ வந்துடணும்.." என்று முனகியபடியே உடையை மாற்ற ஆரம்பித்தாள்.

சக்தி தொலைக்காட்சியில் செய்திப் பார்த்துக் கொண்டிருந்தான். சற்று தள்ளி தரையில் அமர்ந்தபடி நாளைய சமையலுக்கு கீரை ஆய்ந்து தந்துக் கொண்டிருந்த கனிமொழி சக்தியின் முகத்தை ஆராய்ந்துக் கொண்டிருந்தாள். பல்கலைக்கழக தேர்வுகளில் செய்யப்படும் தேர்வு மாற்றம் பற்றி செய்தியில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். புருவம் சுருக்கினான் அவன். கண்கள் கூர்மையானது. அவன் அந்த செய்தி மேல் கொண்ட ஆர்வத்தை காட்டிலும் அவள் அவன் மீது கொண்ட ஆர்வம் அதிகமாக இருந்தது.

"ம்ப்ச்.." சிறு சலிப்போடு தொலைக்காட்சியிலிருந்து பார்வையை திருப்பியவன் தன்னை ரசித்துக் கொண்டிருந்த கனிமொழியை கண்டதும் கடுப்பானான்.

எதிரில் அவனின் அப்பா அமர்ந்திருந்தார். தேன்மொழியும் பாட்டியும் கூட அங்கேயேதான் இருந்தார்கள்.

'இத்தனை ஆள் இருக்கும்போதும் இவ்வளவு பச்சையா சைட் அடிக்கறா.. இவளை கெட்ட வார்த்தையில் திட்டினா கூட தப்பே கிடையாது. உப்பை கொஞ்சமா எடுத்து சாப்பாட்டுல கொட்டி இருக்க கூடாது. இரண்டு பாக்கெட் உப்பை வாங்கி கரைச்சி அவ வாயில் ஊத்தி விடணும்..' என்று மனதுக்குள் கொந்தளித்தான்.

"பாப்பா எக்ஸாமுக்கு படிச்சியா.?" எனக் கேட்ட சக்தியிடம் "நாளைக்கு லீவ். நான் நாளைக்கு படிச்சிப்பேன்.." என்றாள் பற்களை காட்டி.

'நீ உருப்படுவன்னு நினைச்சேன் பார்த்தியா.? நான்தான்டி பைத்தியம்..' என்று உள்ளுக்குள் குமுறியவன் எழுந்து நடந்தான்.

பாலாஜி‌‌ தன் அம்மாவின் அறை வாசல் முன்னால் நின்றான். கதவை திறக்க கூடாது உள்ளே நுழைய கூடாது என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால் உள்ளம் ஏனோ நழுவியது. உள்ளே செல்ல விரும்பியது.

விழிகள் கலங்க ஓரடி எடுத்து வைத்தான். காலில் சுரீரென மின்சாரம் பாய்ந்தது. துள்ளியபடி பின்னால் நகர்ந்தான். மூளை இப்போது கொஞ்சம் கட்டுப்பாட்டுக்கு வந்திருந்தது.

"பாலா.." சக்தியின் குரலில் திரும்பினான். மச்சானிடம் வந்தவன் "உன் தங்கச்சி பார்வையே சரியில்ல. நீயாவது அவளை ஏதாவது நீதி போதனை கிளாஸ்க்கு அனுப்பி வை.." என்றான்.

பாலாஜி அவனை முறைத்தான். 'எல்லாம் கனியை சொல்லணும்.! ஊர் உலகத்துல ஆம்பளையே இல்லாத மாதிரி இந்த டுபாக்கூரை காதலிச்சி வச்சிருக்கா. கூட படிக்கிற பசங்க யாரும் அவ கண்ணுக்கு அழகா தெரியலையா..' என்று நினைத்தவன் அடுத்த நொடியே தன் எண்ணத்திற்காக தன்னையே திட்டிக் கொண்டான். 'என் பாப்பா நல்லா படிச்சி பெரிய ஆளா வரணும்..' என்று எண்ணினான்.

"சரிங்க வாத்தியாரே.. என் தங்கச்சியை நான் ஏதாவது ஒரு சித்தர்கிட்ட கூட சன்னியாச வகுப்பு அனுப்பி வைக்கிறேன் நீ இந்த இரண்டு மாசத்துக்கும் அவ பக்கம் போகாம உன் வேலையை மட்டும் பார்த்துட்டு இரு.." என்றான்.

அன்று இரவு பாலாஜியின் கட்டிலை கொண்டு வந்து அறையில் போட்டனர்.

"யப்பா சாமி.. இன்னைக்குதான்டா நான் நிம்மதியா தூங்க போறேன்.." என்று நெஞ்சில் கை வைத்தபடி கட்டிலில் விழுந்தான் சக்தி.

கீர்த்தனா கூரையை வெறித்தபடி படுத்திருந்தாள். அருகில் இருந்த கனிமொழி அவளின் முகத்தை கவலையோடுப் பார்த்தாள்.

"நான் வேணா நாளைக்கு அவனை வெளியே கூட்டி வரட்டா. நீயும் பிரெண்ட் வீட்டுக்கு போவதா சொல்லிட்டு வா.. நான் என் பிரெண்ட் வீட்டுக்கு போறேன். நீயும் அவனும் ஊர் சுத்திட்டு வருவிங்க. வீட்டுல யாருக்கும் தெரிய வேணாம்.. ஆனா சும்மா மட்டும் சுத்திட்டு வாங்க. சோசியம் பலிக்கும்படி எதுவும் வேணாம்.." என்றாள்.

கீர்த்தனா சத்தம் வராமல் நகைத்தாள். வாழ்க்கையே கசந்திருப்பது போலிருந்தது. என்ன வேண்டும் என்றே புரிந்துக் கொள்ள முடியவில்லை.

ஒருகாலத்தில் அவனின் கடைக்கண் பார்வைக்கு ஏங்கி நின்றவள், தன் காதலை ஏற்றுக் கொள்ள மாட்டானா என்று வேதனையோடு அழுது நின்றவள் இன்று கணவனாய் அவனே கிடைத்தும், அவன் பக்க காதலையும் நியாயத்தையும் அவனே சொல்லியும் கூட மனம் நிறையாமல் இருந்தாள்.

எதிர்பார்ப்புகள் கூடிக் கொண்டே இருந்தது. அவனின் உருக்கமும் நெருக்கமும் போதும் என்று எண்ணும் அளவுக்கு இருக்கவில்லை. அவனிடம் பிரச்சனையில்லை. அவளிடம்தான் அந்த ஏக்கம் இருந்தது. அவளுக்கே அனைத்தும் தெரிந்துதான் இருந்தது. தன் மனதை சரிசெய்யும் வழி தெரியவில்லை அவளுக்கு. அவனும் நலமாக தானும் நலமாக இருக்கும் வழி கிடைக்கவில்லை.

"எதுவும் வேணாம் கனி. மூனு மாசம்தானே.?" என்றவளுக்கு அந்த மூன்று மாதம் முடியவே கூடாது என்று கோபம் வந்தது.

'அவன் பாசம் காட்டுவதாலதான் கொஞ்ச நாள் விலகலையும் தாங்கிக்க முடியாம போகுது. அவன் லவ்வே வேணாம்..' என்று மனதிடம் சொல்லிக் கொண்டாள்.

கனிமொழி அருகில் நெருங்கி அவளின் கழுத்தை சுற்றி அணைத்துக் கொண்டாள். தோளில் முகம் புதைத்தாள்.

'கட்டிப்பிடிக்கறது கூட அவங்க அண்ணனை போலவே பண்றா.. அவனை நினைக்கவே கூடாதுன்னு நினைச்சா கூட ஏன் இந்த விதி என்னை வச்சி செய்யுது.?' என்று சோகமாக கேட்டுக் கொண்டாள்.

வெற்றி தனது இருக்கையை விட்டு எழுந்தான். மணி இரண்டை தொட்டிருந்தது. சாப்பிடுவதற்கு கேன்டின் கிளம்பினான்.

"சார்.." பாரதி அவனின் அறை நோக்கி ஓடி வந்தாள்.

"சாப்பாடு சார்.. உங்களுக்கும் சேர்த்து எங்க அம்மா தந்து விட்டாங்க.." என்றாள். அந்த அறையில் இருந்த மேஜையின் மீதிருந்த காகித கட்டுக்களை ஓரம் நகர்த்தியவன் இரண்டு நாற்காலிகளை கொண்டு வந்து எதிரெதிரே போட்டான்.

"உட்காருங்க.." என்றவன் தனது தண்ணீர் பாட்டிலை கொண்டு வந்து வைத்தான்.

"அம்மா இனி தினமும் சாப்பாடு தந்து விடுவதா சொன்னாங்க.." என்றவளின் கையை கவனித்தான். முட்டியில் காயம் அப்படியே தெரிந்தது. ஆனாலும் இதழில் புன்னகை மாறாமல் இருந்தான்.

இருவருக்குமான உணவை பரிமாறினாள். அம்மா சொன்னது அவளின் நினைவில் வந்தது.

"அந்த பையன் நல்லாருக்கான் பாரதி.. உனக்கு பிடிச்சிருக்கா.? மனசுல பட்டதை தைரியமா சொல்லு. நான் உங்க அப்பாக்கிட்ட சொல்றேன்.." என்றிருந்தாள் அம்மா.

"நா.. நான் அப்படி எதுவும் யோசிக்கலம்மா.." என்று தயங்கினாள் பாரதி.

"லட்சணமான பையனா இருக்கான். நல்ல வேலை. குடும்பமும் பெரிசுன்னு சொல்றான். உனக்கு எல்லா வகையிலும் ஏத்தவன் போலதான் தெரியுது. யோசி பாரதி.."

அம்மா சொன்னதுதான் காலையிலிருந்து மூளைக்குள் சுற்றிக் கொண்டிருந்தது அவளுக்கு.

தன் முன் இருந்தவனை ஓரக்கண்ணால் பார்த்தாள். லட்சணத்தில் எந்த குறையும் சொல்ல முடியாது. அன்பாகதான் நடந்துக் கொண்டான். கண்ணியமாகவும் இருந்தான். கோபம்தான் சற்று பயமுறுத்தியது. ஆனால் அவளின் அப்பாவுக்கு இதை விட அதிகமாக கோபம் வரும்.‌ அவரோடு ஒப்பிடுகையில் இவன் பரவாயில்லை என்றே தோன்றியது.

"இந்த வாரமும் வெளியே போகலாமா சார்.?" தயங்கியபடிதான் கேட்டாள்.

"தேங்க்ஸ் பாரதி.. நானே உங்ககிட்ட கேட்கணும்ன்னு இருந்தேன்.." என்றவன் "ஆனா ஆட்டோவுல போகலாம்.." என்றான்.

பாரதி சரியென்று தலையசைத்தாள்.

அவனுக்கு மாற்றம் தேவைப்பட்டது. அவளை மறக்க வேண்டிய தேவை இருந்தது.

மாலை மங்கும் நேரம். கடையிலிருந்து கிளம்பிக் கொண்டிருந்தான் நரேஷ். பைக்கில் ஏறி அமர்ந்ததும் ஆக்ஸிலேட்டரை முறுக்கினான்.

"பாரதி சீக்கிரம் அந்த சாரை கல்யாணம் பண்ணிப்பா.. நாம கிளம்ப வேண்டியதுதான்.." என்று காற்றோடு புலம்பியவனுக்கு தனக்கு காதலை சொல்ல ஏன் தைரியமே வரவில்லை என்று தன் மீதே கோபம் வந்தது. இப்போதும் கூட கெட்டு விடவில்லை. அவளிடம் காதலை சொல்லிவிடு என்றது மனம். ஆனால் நிராகரிப்பை ஏற்றுக் கொள்ள தயங்கும் மனது அவனின் ஆசைக்கு ஏற்றாற் போல வளைந்து தர மறுத்தது.

பாரதியின் வீட்டிற்கு செல்லும் சரளை கல் பாதை வந்தது. அனிச்சையாக திரும்பியது விழிகள். சாலையை தாண்டி நேராய் போனவன் புருவத்தை நெரித்தபடி வண்டியை திருப்பினான். சரளை கல் சாலைக்குள் நுழைந்தது பைக்‌. முப்பதடி தொலைவில் ஸ்கூட்டியோடு நின்றுக் கொண்டிருந்தாள் பாரதி. கடுப்பும் சோகமுமாக இருந்தவள் தன்னருகே வந்து நின்ற பைக்கை அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக பார்த்தாள்.

"என்னாச்சி பாரதி.?" பைக்கை நிறுத்திவிட்டு இறங்கியபடியே கேட்டான்.

"திடீர்ன்னு ஆஃப் ஆகிடுச்சி. ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது. அரை மணி நேரமா ஸ்டார்ட் பண்ண டிரை பண்ணிட்டு இருக்கேன்.." என்றவளின் குரலில் நூலளவு இடைவெளிதான் இருந்தது அழுகை தென்பட.

"நான் பார்க்கறேன்.." என்றபடி ஸ்கூட்டியை பரிசோதிக்க ஆரம்பித்தான்.

"ஏன் லேட்.?" இயல்பாக வந்தது கேள்வி.

"பேங்க்ல வேலை அதிகமா இருந்தது. முழுசா முடிச்சிட்டு வந்தேன். இங்கே வண்டி ஆஃப் ஆகி அரை மணி நேரம் ஆச்சி.." என்றவளை குழப்பமாக பார்த்தான்.

பைக்கை தட்டி தடவி நடந்தவன் சட்டென்று கீழே குனிந்தான். ஒயர் இரட்டை ஒன்றாக பிணைத்தான். ஸ்விட்சை அழுத்தினான். வண்டி உறுமியது.

"ஏன் எனக்கு போன் பண்ணல.?" அவளிடம் ஸ்கூட்டியை ஒப்படைத்தபடி கேட்டான்.

"பண்ணேன். அரை மணி நேரமா நூறு முறை டிரை பண்ணி இருப்பேன். உங்க போன்தான் ஸ்விட்ச் ஆஃப்.." என்றவள் கவிழும் இருளை பார்த்தபடியே தனது பர்ஸை எடுத்தாள்.

நரேஷ் தன் போனை எடுத்துப் பார்த்தான். ஆஃப் ஆகி இருந்தது. வண்டு செய்த வேலை என புரிந்துக் கொண்டவன் போனை ஆன் செய்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.

"எவ்வளவு ஆச்சி.?"

"இல்ல.. பரவால்ல.. இது எனக்கு பெரிய வேலை இல்ல.. முடிஞ்சா நீங்க‌ புது ஸ்கூட்டி வாங்கிக்கோங்க. இல்லன்னா இந்த ரோட்டை போட்டு தர சொல்லி கவர்மெண்ட்ல கேளுங்க.." என்றான்.

"தேங்க்ஸ்.." என்றபடி பைக்கில் அமர்ந்தவள் இருளின் மீதான பயத்தை மறைத்தபடியே கிளம்பினாள். பத்தடி சென்ற பிறகுதான் அவன் தன்னை பின்தொடர்வதை கவனித்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN