காதல் கணவன் 46

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பாரதி அந்த சரளைக்கல் பாதையை தாண்டி வரப்பு மேட்டு பாதைக்குள் நுழையும் வரை பின் தொடர்ந்து சென்றான் நரேஷ்.

அவள் கண்ணிலிருந்து மறையும் வரை அங்கேயே நின்றிருந்தான். இருள் முழுதாய் கவ்விக் கொண்டிருந்தது. அவளின் ஸ்கூட்டி எங்கேயும் அவளை தரை தட்ட வைத்து விட கூடாது என்ற வேண்டுதலோடு அங்கிருந்து கிளம்பினான்.

கீரையை முழுதாய் ஆய்ந்து விட்டிருந்தாள் கனிமொழி.

குழம்பை தாளித்து முடித்த தாயம்மா "அர்ச்சனா.." என்று அழைத்தாள்.

"என்னம்மா.?" என்ற மகளிடம் "என் அக்கா அவளோட பேத்தியை சக்திக்கு தரலாமான்னு யோசிக்கறா.. நீ என்ன நினைக்கற.?" எனக் கேட்டாள்.

சமையல் கட்டில் ஓரத்தில் நின்றபடி கீரை நிரம்பிய பாத்திரத்தை வைத்திருந்த கனிமொழிக்கு உள்ளம் கசந்தது. அந்த சமையலறையின் வாசம் கசந்தது. பாட்டியும் கசந்துப் போனாள். வீடும் உலகமும் கூட கசந்தார் போலாகி விட்டது.

'அக்கா பேத்தியாம்.. உன் பேத்தியை பார்த்தா பொட்டப்புள்ளை மாதிரி தெரியலையா கிழவி?' என்று மனதுக்குள் திட்டிய தேன்மொழிக்கு அழுகை இதோ என்று எட்டிப் பார்க்க இருந்தது.

"அவன்கிட்டதான் கேட்கணும் அம்மா.. ஏற்கனவே ஏதோ காதல் விவகாரம் போல. என்கிட்ட மனசு விட்டு சொன்னாதானே எனக்கும் பிரச்சனை தெரியும்." என்று சோக மடல் வாசித்தாள் அர்ச்சனா.

'மனசு விட்டுதான் உங்க புள்ளைக்கிட்டயும் சொன்னேன் அத்தை. ஆனா புண்ணாக்கு என் பேச்சை கேட்கவே மாட்டேங்குது..' என நினைத்தபடி மூக்கை உறிஞ்சிய கனிமொழி கீரையை பிரிட்ஜில் வைத்து மூடினாள்.

"மாமா வேற பொண்ணை லவ் பண்றார் பாட்டி.." என்ற கனிமொழியை அங்கிருந்த பெண்கள் மூவரும் ஆச்சரியத்தோடுப் பார்த்தனர்‌.

"யாரை பாப்பா லவ் பண்றான்.?" என்று ஆவலாக கேட்டாள் வளர்மதி.

'உன் பொண்ணைதான் அம்மா!' என மனதோடு சொல்லியவள் "தெரியலம்மா. ஆனா ரொம்ப வருசமா அந்த பொண்ணைதான் லவ் பண்றாராம். அந்த பொண்ணோடு சண்டை போட்டுட்டதாலதான் அன்னைக்கு பொண்ணு பார்க்க போனாரு. ஆனா அவர் வேற யாரையாவது மேரேஜ் பண்ண நினைச்சா அந்த பொண்ணு கல்யாண மேடையில் நின்னு தீ குளிப்பாங்கன்னு நினைக்கிறேன்.." என்று அசால்டாக ஒரு பொய்யை அவிழ்த்து விட்டுவிட்டு அங்கிருந்துப் போனாள்.

வளர்மதி அதிர்ச்சியோடு அர்ச்சனாவை பார்த்தாள்.

"நம்ம சக்தியா? நம்பவே முடியல. நல்ல பொண்ணா இருந்தா நாமளே கூட கட்டி வைக்கலாமே. ஏன் இவன் சொல்லாம இருக்கான்?" என்று வருந்தினாள் பாட்டி.

அர்ச்சனாவுக்கு மனம் சங்கடமாக இருந்தது. தன் மகன் தன்னிடமே அன்னியனாக நிற்பதை விரும்பவில்லை அவள். மகனை தேடிப் போனாள்.

கனிமொழி சொன்னதை மகனிடம் சொல்லியவள் "யார் அந்த பொண்ணுன்னு சொல்லு சக்தி. நான் பேசுறேன். அப்பாகிட்ட சம்மதம் வாங்கி தரேன். அந்த பொண்ணு வீட்டுல போய் பேசுறேன். மனசுல நினைச்சி மருகாதடா." என்று கெஞ்சினாள்.

சக்தி வேறு திசை திரும்பி நெற்றியில் அடித்துக் கொண்டான்.

'அந்த குரங்கு குட்டிக்கு திமிர் அதிகமா போய்ட்டு இருக்கு..' என நினைத்தவன் "அப்படி எந்த பொண்ணும் இல்லம்மா. அப்படி யாராவது இருந்தா நானே சொல்லுவேன்.." என்றான்.

அம்மாவுக்கு திருப்தியாக இல்லை. முகம் வாடியபடியே திரும்பிப் போனாள்.

சக்தி பற்களை அரைத்தான். மறுநாள் காலையில் பள்ளிக்கு கிளம்பிய கனிமொழியிடம் "பாப்பா வா நான் உன்னை ஸ்கூல்ல விடுறேன்.." என்று அழைத்தான்.

"அவளோடு நான் போறேன்.." என்றான்‌ பாலாஜி குறுக்கிட்டு. இன்றைக்கும் அவளுக்கு துணையாக போக இருந்தான் அவன். தங்கை கேட்டு இருக்கிறாளே என்று அக்கறை இருந்தது அவனிடம். தான் உடன் இருந்தால் அவளுக்கு பரிட்சை சுலபமாக இருக்கும் என்றால் தினமும் அவளோடு செல்ல தயார் அவன்.

"பரவால்ல.. எனக்கு அந்த பக்கம் கொஞ்சம் வேலை இருக்கு. நானே கூட்டிப் போறேன்.." என்ற சக்தியை முறைத்தான் பாலாஜி.

"எதுக்குடா நீ அவளை கூட்டி போற.?" என்று அவனுக்கு கைபேசியில் செய்தி அனுப்பினான்.

"இன்னைக்கு அவ எழுத போற பரிட்சையில் எந்த கேள்வி முக்கியமா வர போகுதுன்னு எனக்கு தெரியும். அதை சொல்லித் தர போறேன். இஷ்டமா இருந்தா அனுப்பு. கஷ்டமா இருந்தா நீயே கூட்டிப் போ. உன் தங்கச்சிதான் எனக்கு வினை. நான் இல்ல.." என்று செய்தியை பதிலாக அனுப்பி வைத்தான் அவன்.

பாலாஜி பற்களை அரைத்தான். அன்று காரில் அறைந்தது என்ன கணக்கு என்று கோபம் வந்தது.

கனிமொழிக்கு சுப்ரியா கூட்டத்தை நினைத்து பயமாக இருந்தது. ஆனாலும் மாமன் பள்ளி வரை துணை வருகிறானே என நினைத்தபோது சொந்த அக்கறையை விடவும் ஆசை வென்று விட்டது. சுப்ரியா குழுவிடமிருந்து எப்படியாவது தப்பித்துக் கொள்ளலாம் என நினைத்தவள் "நான் மாமா கூடவே போறேன் அண்ணா.." என்றாள்.

பேங்கில் வேலை அதிகமா இருந்தது. ஆனாலும் தங்கைக்காக விடுமுறை எடுக்க இருந்தான். சரி இவளே இப்படி சொல்கிறாளே என நினைத்த பாலாஜி "சரி பாப்பா.." என்றான்.

சக்தி என்றும் போல இயல்பாக இருந்தான்‌. கனிமொழி புத்தகத்தை அணைத்தபடி கழுத்தை சாய்த்து அவனை ரசித்துக் கொண்டிருந்தாள்.

அவளின் பள்ளியை அடைய இரண்டு கிலோமீட்டர் இருந்தபோது சாலையில் காரை ஓரம் கட்டி நிறுத்தினான் சக்தி.

"இது உனக்காக.." என்று காகித தாளை நீட்டினான். ஆவலோடு வாங்கினாள் கனிமொழி. காதல் கடிதத்தை அவள் எதிர்பார்க்கவில்லை என்பதுதான் உண்மை.

உள்ளே வரைபடம் ஒன்று இருந்தது. இரண்டு வழிகள் இருந்தது. ஒரு வழியில் சென்றால் பெயர், புகழ், பதவி, பணம், நிம்மதி என அனைத்தும் கிடைப்பது போல எழுதியிருந்தது. மற்றொரு பாதையில் சென்றால் அங்கே சக்தி என்ற ஒரே ஒரு பெயரும் அந்த பெயரோடு இணைந்து சோகம் கஷ்டம் துன்பம் என்று எழுதியிருந்தது.

கனிமொழி பேனாவை எடுத்தாள். சக்தி என்ற பெயர் இருக்கும் பாதையை டிக் செய்தாள்.

நெற்றியில் அடித்துக் கொண்டவன் "ஏய் முட்டாள்.. நான் சொல்ல வந்தது புரிஞ்சதா இல்லையா? நீ சூஸ் பண்ண வேண்டியது அந்த பாதை. அதுதான் உன்னை உருப்பட வைக்கும்.." என்றான்.

"ஆனா எனக்கு இதுதானே பிடிச்சிருக்கு.." அப்பாவியாக சொன்னாள்.

"நீ எப்ப கனி திருந்துவ?" என்று சோகம் பாடியவன் "நேத்து எதுக்குடி எங்க அம்மாகிட்ட அப்படி சொன்ன?" எனக் கேட்டு அவளின் தலையில் அடித்தான்.

"சும்மா சும்மா அடிக்காதிங்க மாமா.." என்று சீறியவள் "பாட்டி அவங்க அக்கா பேத்திக்கும் உங்களுக்கும் முடிச்சி போட பார்த்தாங்க. அதை தடுத்து நிறுத்ததான் அப்படி சொன்னேன்.." என்றாள்.

பற்களை அரைத்தவன் "எனக்கு மேரேஜ் ஆனா தீக்குளிப்பியோ?" என விசாரித்தான் கடுப்போடு.

இரு கன்னங்களையும் எச்சரிக்கையோடு பற்றிக் கொண்டவள் "ஆமா.." என்றாள்.

நச்சென்று தலையில் கொட்டினான்.

"அம்மா.‌." வலி தாங்காமல் கத்தியபடி தலையை தேய்த்தாள். அவளின் கையிலிருந்த பேனா பென்சில் ஸ்கேல் என்று அனைத்தும் கை தவறி காருக்குள் விழுந்தன. சுத்தியை வைத்து அடித்தது போல வலித்தது. ரத்தம் ஏதும் வருகிறதோ என்று சந்தேகமாக இருந்தது அவளுக்கு.

"லாஸ்ட் வார்னிங்ன்னு சொல்லி சொல்லியே நிறைய வார்னிங் தந்துட்டேன்னு நினைக்கிறேன். இன்னொரு முறை நீ தேவையில்லாம பேசினாலோ, தேவையில்லாத வேலைகளை செய்ய நினைச்சாலோ நான் மனுசனாவே இருக்க மாட்டேன். கொஞ்சமாவது சொரணையோடு இருடி. பிடிக்கலன்னு சொல்றவன் பின்னாடி விடாம துரத்துவது தப்பு தெரியுமா? நம்ம இரண்டு பேருக்கும் நடுவுல அழகான உறவு இருக்கு. உனக்கு அதை கெடுத்துக்க நினைச்சாலும் எனக்கு கெடுத்துக்க ஆசையில்ல. உனக்கு விவரம் வரல. அது எல்லாத்தையும் விட முக்கியம். இன்னும் மூனே மாசம். காலேஜ் போக போற. அங்கே அத்தனை பசங்க இருக்க போறாங்க. நானெல்லாம் உனக்கு சும்மா கூட ஞாபகத்துல இருக்க மாட்டேன். உனக்குன்னு பர்பெக்ட் பார்ட்னர் கிடைப்பான். அவன்தான் உன் மறுபாதி. பார்த்த செகண்ட் பழகிய செகண்ட் உனக்கே புரியும். தயவுசெஞ்சி அப்படி ஒருத்தனை பார்க்கும் வரைக்குமாவது என்னை தொந்தரவு பண்ணாம இருந்து தொலை.." என்றான் பொறுமையாக.

கனிமொழி கண்ணீரோடு மறுப்பாக தலையசைத்தாள்.

"என் ஸ்கூல்ல கூட நிறைய பசங்க இருக்காங்க மாமா‌.. யாரை பார்த்தும் காதல் வரல.."

முகத்தை மூடிக் கொண்டான்.

"உனக்கு இப்ப காதல் வராது பாப்பா. நீ சின்ன பொண்ணு. உனக்கு இன்னும் வயசு இருக்கு.." என்றான் கிளிப்பிள்ளைக்கு புத்திச் சொல்வது போல.

செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்தவள் "பரிட்சைக்கு போகணும் மாமா. டைம் ஆச்சி.." என்றாள் கை கடிகாரத்தை பார்த்தபடி.

"உன்னையெல்லாம்.." பற்களை கடித்தபடி காரை எடுத்தான்.

"எனக்கு உங்களை பிடிச்சிருக்கு. என் காதலுக்கு நிறைய காரணங்கள் இருக்கு. சில உணர்வுபூர்வமான, அந்தரங்கமான காரணங்களும் இருக்கு. உங்ககிட்ட எல்லாத்தையும் சொல்ல முடியல. ஆனா எனக்கு உங்களை தவிர யாரும் வேணாம். நீங்க என் பர்ஸ்ட் கிரஷ்.. பர்ஸ்ட் லவ்‌. நீங்க என்னை திருப்பி லவ் பண்ணலன்னாலும் பரவால்ல. அட்லீஸ்ட் நான் பெரிய பொண்ணா மாறும் வரை மேரேஜ் பண்ணிக்காம இருங்க. அதுவே போதும். என் காதல் பொய் இல்லன்னு எனக்கு தெரியும். அதை நீங்களும் தெரிஞ்சிக்கணும். அதுக்குதான் மேரேஜ் பண்ணிக்க வேணாம்ன்னு சொன்னேன்.." என்றவள் பள்ளி வந்து விட்டதை கண்டு பேனா பென்சில்களை சேகரிக்க ஆரம்பித்தாள்.

அவளை வெறித்தான் சக்தி. அவளின் பின்னங்கழுத்தில் ஓடிக் கொண்டிருந்தது மெல்லிய கருப்பு கயிறு. கொஞ்சமாக கேசம் மறைத்து தெரிந்த அவளின் கழுத்தில் குட்டியாக சிறு மச்சம் இருந்தது. ஒரு முடி மட்டும் பின்னலோடு சேராமல் தனியாக இருந்தது. அந்த ஒரு முடியையும் எடுத்தவன் அவளின் பின்னலை சுற்றி நான்கைந்து முறை வளைத்தான்.

"பெஸ்ட் ஆஃப் லக்.." என்றான் கீழிறங்கியவளிடம்.

"தலையில சம்மட்டி கையால அடிச்சி வச்சிருக்கிங்களே.. அந்த வலியை தாண்டி எந்த பதில் ஞாபகம் வர போகுதோ தெரியல.." என்று முறைத்துவிட்டு பள்ளி கேட்டிற்குள் நுழைந்தான். அவளின் கோபம் அவனுக்கு சிரிப்பைதான் தந்தது.

கல்லூரியை நோக்கி காரை திருப்பியவனுக்கு அவள் சொன்னது நினைவிற்கு வந்தது. "அப்படியென்ன உணர்வுபூர்வமான, அந்தரங்கமான காரணம்?" என தன்னையே கேட்டுக் கொண்டான். "அது சரியான மெண்டல்.. எதையாவது யோசிச்சி நம்மையும் குழப்பி விடுது.." என்று அவள் சொன்னதை அங்கேயே மறந்து விட்டு கிளம்பினான்.

பரிட்சை சுலபமாகதான் இருந்தது. பேப்பர் வாங்கப்பட்டதும் முதல் ஆளாக வெளியே ஓடினாள் கனிமொழி. ஒன்றிரண்டு பிள்ளைகள்தான் வகுப்புகளிலிருந்து வெளியே வந்துக் கொண்டிருந்தனர்.

யாரும் அறியும் முன் கேட்டை தாண்டி விட வேண்டும் என்று ஓடினாள். கேட்டையும் தாண்டி விட்டாள். எதிரில் நின்றிருந்தார்கள் சுப்ரியாவும் அவளின் கூட்டாளிகளும். பயந்தபடி பின்னால் நகர்ந்தவளின் தோளில் கை பதிந்தது. யாரென்றுப் பார்த்தாள். வசந்தகுமார் நின்றிருந்தான்.

"இன்னைக்கு ஸ்கூல் லாஸ்ட் டே.. உனக்கு பார்டி தரலாம்ன்னு இருக்கோம் பாய் ட்ரீ.." என்றான்.

"என்னை விட்டுடு வசந்த்‌‌.." என்றவளை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு முன்னால் நடந்தான்.

கேட்டில் நின்றிருக்கும் வாட்ச்மேனை அழைக்கலாமா என நினைத்தாள். ஆனால் பிரச்சனைகளை கண்டு பயமாக இருந்தது. அவளின் அனுமதி இல்லாமலே நகர்த்திச் செல்லப்பட்டாள்.

சுப்ரியாவும் அவளின் தோழிகளும் அவளின் பின்னால் வந்து சூழ்ந்தபடி நடக்க ஆரம்பித்தார்கள்.

"இன்னைக்கு உன் கொழுப்பு முழுக்க கரைய போகுது கனி.. காய்க்காத மரத்துக்கு கனின்னு பேர் வச்சிருக்காங்க.. உங்க பேமிலியில் எல்லோருமே முட்டாள்தானா?" எனக் கேட்ட மேனகா தனது கூரான நகங்களால் அவளின் கையை பற்றினாள். எங்கே இழுத்துச் செல்லப்படுகிறோம் என்று புரியாமல், வெட்டவெளியிலிருந்தும் யாரையும் உதவிக்கு கூப்பிட முடியாமல் அவர்களோடு நடந்தாள் கனிமொழி.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே (அடுத்த எபிக்கு யாரெல்லாம் வெயிட்டிங்?)
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN