அத்தியாயம் 63

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மலை மேடு ஒன்றில் நின்றிருந்தார்கள் சங்கவியும் ஆதீரனும்.

"அழகான இடமா இருக்கு மாமா.." என்றவளின் தலை அவனின் நெஞ்சில் சாய்ந்திருந்தது.

"மனசை லேசா வச்சிக்க சங்கவி.." என்றவன் அவளை அணைத்தபடியே மலை சிகரங்களை ரசித்தான். சோகத்தை மறக்க இயற்கையின் வனப்பில் தொலைந்தான்.

"அந்த பாப்பா என்னவாகியிருக்கும் மாமா?" சோகமாக கேட்டவளை கோபமாக பார்த்தான்.

'அதை மறக்கதான் இவளை இங்கே கூட்டி வந்தேன். இங்கேயும் வந்து அதையே நினைக்கிறாளே.!' என்று வருந்தியவன் "சாமிக்கிட்ட போயிருக்கும். நீ அதை விடு.. அங்கே பாரு. ஜோடி மைனா.." என்று கையை காட்டினான்.

மைனாக்களை ரசித்தவள் "நாமும் அதே மாதிரி பறந்து போனா நல்லாருக்கும்.." என்றாள்.

"நாமும் அதே மாதிரி இணைந்திருந்தால் நல்லாருக்கும். இப்படி சொல்லு.." என்று திருத்தினான்.

"இப்படி உட்காரலாமா?" என்று அருகே இருந்த பாறையை கை காட்டினாள். இருவரும் இணைந்து அமர்ந்தார்கள். அவளை அணைத்திருந்தவன் கொஞ்சமும் அவளை விலகவில்லை. சோகத்தில் கீழே பாய்ந்து விடுவாளோ என்று பயமாக இருந்தது.

"குளிருதா?" எனக் கேட்டவன் தன்னிடமிருந்த போர்வையால் அவளைப் போர்த்தினான்.

காந்திமதி வீட்டின் வாசலில் நின்றிருந்தாள். கிளம்பிக் கொண்டிருந்த காத்தவராயனை ஏக்கமாக பார்த்தாள்‌. அவளின் முகத்தை பார்த்துவிட கூடாது என்பதில் கவனமாக இருந்தார் காத்தவராயன்.

"காத்தவராயா.. நீ பேசவே இல்லன்னா நான் ரொம்ப கஷ்டப்படுவேன். எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. நான் முட்டாளா உன்னை நம்பாதவளா இருந்துட்டு போறேன். ஆனா தயவுசெஞ்சி நீ‌ என்னோடு பேசு. எனக்கு அழுகையா வருது.." அவள் சொல்வதை காதில் வாங்காமல் ஜீப்பில் ஏறி அமர்ந்தார்.

இப்போதெல்லாம் தேயிலை தோட்டத்திற்கு அவளை அழைத்துச் செல்வதில்லை அவர். அவள் அவரோடு செல்ல முயன்றாலும் கூட விட்டுவிட்டு கிளம்பினார்.

இன்றும் கூட அவள் கண்ணீரோடு பார்த்தும் கூட திரும்பிப் பார்க்காமல் ஜீப்பை எடுத்துக் கொண்டு சென்று விட்டார்.

"சாப்பிட வாங்கம்மா.." என்று அழைத்தாள் வீட்டின் சமையல்காரி.

"இல்ல பாப்பா.. நீ உங்க வீட்டுக்கு கிளம்பு.." என்ற காந்திமதி வீட்டின் வாசல்படியிலேயே சாய்ந்து அமர்ந்தாள்.

அவர் திரும்பி வரும்வரை இப்படியே அமர்ந்திருக்கலாம் என்று நினைத்தாள். தினமும் அப்படிதான் இருந்தாள்.

"பசிக்குதா சங்கவி? ஹோட்டல் போலாமா?" எழுந்து நின்றபடியே கேட்டான் ஆதீரன்.

"இல்ல மாமா.. நாம அப்படியே இந்த ரோட்டுல அந்த கடைசி வரை போயிட்டு வரலாமா? கூலிங்கா நல்லா இருக்கு இங்கே.." என்றாள்.

ஆதீரன் அவளின் கையை பிடித்துக் கொண்டு நடந்தான். கைபேசியில் பாடல் ஒன்றை ஒலிக்கவிட்டான். பாடல் ரசித்தபடி, சூழலை ரசித்தபடி நடந்தனர் இருவரும்.

அவ்வப்போது கடந்துச் செல்லும் வாகனங்கள், வானில் வட்டமிட்டு செல்லும் பறவைகள், வெள்ளை நிற காற்றில் வண்ணமாய் ஜொலிக்கும் பூக்கள் என்று அனைத்தும் ரசிக்கும்படிதான் இருந்தது அங்கே.

கணவனின் தோள் உரசியபடி நடந்துக் கொண்டிருந்த சங்கவி சற்று தொலைவில் பூனை ஒன்றின் சத்தத்தில் ஓடினாள். அழகான சின்ன பூனைக்குட்டி. கருப்பு நிறத்தில், மஞ்சள் கண்களோடு இருந்தது.

"ஹேய் மியா குட்டி.." என்று அதை தூக்க ஓடினாள். அவள் அருகில் வந்ததும் பயந்துப் போன பூனைக்குட்டி அங்கிருந்து ஓடியது. துரத்தி ஓடியவள் வழியில் வந்த வாகனத்தை கவனிக்க மறந்து விட்டாள்.

சாலையின் நடுவில் இருந்த பூனைக்குட்டியை தூங்கிவிட்டாள். அதே சமயத்தில் அவளின் மீது மோதி விட்டது ஜீப். அனைத்துமே ஐந்தாறு நொடிகளில் நடந்து விட்டது. ஆதீரன் இதை எதிர்ப்பார்க்கவேயில்லை.

"சங்கவி.." பதறியபடி அருகில் ஓடி வந்த ஆதீரன் காலில் சிறு காயத்தோடு நின்றிருந்த மனைவியை கோபத்தோடு முறைத்தான்.

"வண்டி வருவது கூட தெரியாம என்ன பண்ற?" எனக் கேட்டவன் அவளின் கையிலிருந்த பூனைக்குட்டியை பிடுங்கினான்.

"அதை கொடுங்க‌.." அவள் கை நீட்டிய அதே வேளையில் அருகே இருந்த பள்ளத்தாக்கை நோக்கி பூனைக்குட்டியை விசிறி விட்டான்.

"ஐயோ.." என்றவள் பள்ளத்தாக்கை நோக்கி ஓட முயல, அவளை பிடித்து நிறுத்தியவன் அவளின் காலைப் பார்த்தான். பாதத்தில் காயம் இருந்தது. கணுக்காலுக்கு மேலே புடவையை நனைத்துக் கொண்டிருந்தது ரத்தம்.

வாகனம் ஓட்டி வந்தவரை எந்தவொரு சூழலிலும் தப்பு சொல்ல முடியாது. ஏனெனில் தவறு இவள் மீதுதான் என்று அவனுக்கே தெரியும்.

பறந்து போய் விட்ட பூனைக்குட்டியை நினைத்து அழுகையாக வந்தது சங்கவிக்கு.

"சாரி.." என்ற குரலில் திரும்பினார்கள் இருவரும்.

ஜீப்பின் அருகே நின்றிருந்தவரை கலங்கும் விழிகளோடு பார்த்தாள்‌ சங்கவி. பார்த்தவுடன் அடையாளம் காண முடிந்தது. பயத்தோடு ஆதீரனை பார்த்தாள். இறுகிய முகமாய் காத்தவராயனை முறைத்துக் கொண்டிருந்தான்.

"மாமா போயிடலாமா?" எதிரே இருப்பவன் துப்பாக்கி வைத்திருப்பானோ என்று பயந்து கேட்டாள் சங்கவி.

ஆதீரன் பற்களை கடித்தபடி சங்கவியை அழைத்துக் கொண்டு நடந்தான். வலியில் நொண்டி நடந்தாள் அவள்.

"டேய்.." காத்தவராயனின் அழைப்பில் நின்று திரும்பிப் பார்த்தவன் பதில் பேசாமல் வெறித்தான்.

"அந்த பொண்ணுக்கு காயமாகி இருக்கு. என் வீட்டுக்கு வாங்க. பர்ஸ்ட் எய்ட் பண்ணிட்டு போவிங்க.." என்றார் அவர். என்ன இருந்தாலும் இவன் தான் உயிராய் நேசித்த ஒருத்தியின் மகன். அவனையும் அவனின் மனைவியையும் அப்படியே விட்டுச் செல்ல மனம் வரவில்லை அவருக்கு.

"பரவால்ல.." என்ற சங்கவி அங்கிருந்து செல்ல முயன்றாள்.

"பரவால்ல வாங்க. நான் உங்களை எதுவும் செய்ய மாட்டேன்.." என்றார் அவளின் கண்களில் தெரிந்த பயத்தைக் கண்டு.

ஹோட்டலுக்கு செல்ல இரண்டு கிலோமீட்டர் நடக்க வேண்டும். காலார நடக்கலாம் என்று காரை விட்டுவிட்டு வந்திருந்தான் ஆதீரன். மனைவியை தூக்கிச் செல்வது சிரமமில்லை. ஆனால் அது வரை அவள் அந்த காயத்தின் வலியை பொறுத்துக் கொள்வாளா என்றுக் கவலைப் பட்டான். ஏற்கனவே உடம்பு உடைந்து‌, மனமும் உடைந்துக் கிடக்கும் ஜீவன். அவளை மேலும் கஷ்டப்படுத்த விரும்பவில்லை.

அவளின் கையைப் பிடித்தபடி வந்து ஜீப்பில் ஏறினான். காத்தவராயன் அவனை பார்த்தபடியே ஜீப்பை எடுத்தார்.

தனது கர்ச்சீப்பை எடுத்து அவளின் குதிக்காலில் துடைத்தான் ஆதீரன். ஜீப் மோதவும் தார் சாலையோடு குதிக்காலை தேய்த்து விட்டிருந்தாள். அதனால் உண்டான காயம்தான் அது. ஜீப்பின் முன் பாகம் மோதியதில் உண்டான கணுக்காலின் மேலிருந்த காயத்தை சோதித்தான். கால் முட்டியின் கீழ் நன்றாகவே சிராய்ப்பு தெரிந்தது.

வளைந்துச் சென்ற ஜீப்பை இருவருமே கவனிக்கவில்லை. காத்தவராயனை கண்ட பயத்தில் சங்கவிக்கு வலி அப்போது தெரியவில்லை. ஆனால் இப்போது நன்றாகவே வலி தெரிந்தது. எவ்வளவு கட்டுப்படுத்தியும் கண்ணீர் கொட்டியது. அப்போதும் கூட தன்னால் அநியாயமாக பள்ளத்தாக்கில் விழுந்த பூனைக்குட்டியை நினைத்து அழுகை வந்தது.

"சாரி சங்கவி.. நான்தான் உன்னை சரியா கவனிச்சிக்காம போயிட்டேன்.." என்றவனை முறைத்தவள் "எனக்கு என் பூனைக்குட்டி வேணும்.." என்றாள்.

நிமிர்ந்துப் பார்த்து முறைத்தவன் "உன்னோடதா?" என்றான்.

"ஆமா அது என்னோடதுதான். அதை நான் வளர்த்தலாம்ன்னு இருந்தேன். நீங்க ஏன் அதை பள்ளத்துல வீசினிங்க? அது இன்னேரம் செத்திருக்கும். பாவம். நான் தொட்ட பாவத்துக்கு ஒரு பூனைக்குட்டிக்கு கூட ஆயுள் இல்லாம போச்சி.." என்றாள்.

"விடு பரவால்ல.." அவன் என்ன சொன்னாலும் அவளுக்கு ஆறவில்லை.

வீட்டின் முன் வந்து நின்ற ஜீப்பை கண்டு அவசரமாக எழுந்தாள் காந்திமதி. காத்தவராயன் அதற்குள் வந்து விட்டார் என்பது ஆச்சரியத்தை தந்தது அவளுக்கு.

"இறங்குங்க.." என்ற காத்தவராயன் காந்திமதியை முறைத்தார்.

ஜீப்பின் பின்னாலிருந்து இறங்கிய இருவரையும் அதிர்ச்சியோடு பார்த்தாள் காந்திமதி‌. ஆதீரன் பற்களை அறைத்தான். இங்கே வந்தால் அம்மா இருப்பாள் என்பதை யோசிக்காமல் போய் விட்டான்.

'உண்மையிலேயே இங்கேதான் இருக்காங்களா? நான் எங்கேயெல்லாம் தேடினேன்?' என்று வருந்தியவனுக்கு அங்கே நிற்பது கூட அருவெறுப்பை தந்தது.

"உள்ளே வாங்க.." என்ற காத்தவராயன் முன்னால் நடக்க "ஆதீ.." என்றபடி வந்தாள் காந்திமதி.

கையை காட்டி தடுத்து நிறுத்திய ஆதீரன் "நாம போலாம் சங்கவி‌‌.." என்றான்.

காந்திமதியை கண்டதும் பழைய பயத்தில் நடுங்கிய சங்கவி திரும்பி நடந்தாள்.

"பரவால்ல வாங்க.. அவளை மனுசியா மதிக்காதிங்க." என்ற காத்தவராயன் அவர்களுக்காக கதவை திறந்தார். அவர்கள் திரும்பவில்லை.

"அந்த பொண்ணை கொல்ல போறியா நீ?" ஆதீரனிடம் எரிச்சலாக கேட்டார்.

ஆதீரன் நரம்புகள் புடைக்க ஆத்திரத்தோடு நின்றான்.

"சும்மா மருந்து போட்டுட்டு போறதால ஒன்னும் குடிமுழுகி போயிடாது.. வாங்க‌‌."

சங்கவியின் காலைப் பார்த்தான். ரத்தம் தரையில் சிந்திக் கொண்டிருந்தது.

"பர்ஸ்ட் எய்ட் பாக்ஸை எடுத்து வாங்க. நாங்க இங்கேயே போட்டுக்கறோம்.."

"இந்த குளிர்லயா? அந்த பொண்ணு மேல உண்மையிலேயே அக்கறை இருந்தா உள்ளே வா.." என்றவர் காந்திமதியின் பதறும் முகத்தை பார்த்தார்.

"இது என் வீடுதான். நீங்க தாராளமா வரலாம்.." என்றார்.

ஆதீரன் தயக்கத்தோடு மனைவியை அழைத்துக் கொண்டு நடந்தான். அவள் நடக்க சிரமப்படுவது கண்டு தூக்கிக் கொண்டான்.

"நடந்து வரேன் மாமா.." மாமியாரை கண்டதும் அவளுக்கு பயமும், பதட்டமுமாக வந்து சேர்ந்திருந்தது.

"அமைதியா இரு.." என்றவன் வீட்டினுள் நுழைந்தான். காந்திமதி பின்னால் ஓடி வந்தாள். ஆனால் என்ன பேசுவதென்று தெரியாமல் தயங்கி நின்றாள்‌.

மனைவியை நாற்காலி ஒன்றில் அமர வைத்தான் ஆதீரன். காத்தவராயன் முதலுதவி பெட்டியை நீட்டினார். மனைவியின் காயத்தை கவனித்தவன் மெல்லமாக மருந்தை தடவி விட்டான். அவன் தொட்டதும் முகம் சுளித்தவள் கண்ணீராய் கொட்டினாள்.

"இரண்டு காப்பி கொண்டு வாங்க‌.." சமையலறையை பார்த்துக் குரல் தந்தார் காத்தவராயன்.

"சமையல்கார பாப்பா போயிட்டா.." என்று பதில் தந்தாள் காந்திமதி. "நான்தான் போக சொன்னேன்.." என்று அதையும் சொல்லி விட்டாள்.

காத்தவராயன் காப்பியை வைத்து எடுத்து வந்தார். இருவரிடமும் நீட்டினார்.

"வேணாம்.." என்ற ஆதீரன் எழுந்து நின்றான்.

"ஆக்ஸிடென்ட் பண்ணது நான்தானே? இது சும்மா ஒரு மனதிருப்திக்கு இருக்கட்டும்.." என்றவர் கோப்பையை மேஜையின் மீது வைத்தார்.

"ஆக்ஸிடென்டா? காத்தவராயா உனக்கு எதுவும் ஆச்சா?" பதறியபடி அருகில் வர முயன்றாள் காந்திமதி.

"சாகலடி நான். நடிப்பை நிப்பாட்டிட்டு போய் உன் வேலையை பாரு.." என்று சீறினார்.

ஆதீரனுக்கு ஒன்றும் புரியவில்லை. காதலன் என்றுச் சொல்லி அழைத்து வந்தவன் இன்று இப்படி சீறுகிறானே என்று யோசனையாக இருந்தது.

"காப்பி குடிச்சா உங்களை திருப்பிக் கூட்டிப் போய் விடுறேன்.." என்றபடி கையை கட்டி நின்றார் காத்தவராயன்.

"தலையெழுத்து.." என முனகியபடியே காப்பியை பருகினான் ஆதீரன். சங்கவி தயக்கமாக காப்பி கோப்பையை எடுத்தாள். தயங்கியபடியே குடித்து முடித்தாள்.

"போகலாம்.." என்றவர் வெளியே நடந்தார்.

ஆதீரன் அம்மாவை நிமிர்ந்து கூட பார்க்காமல் கிளம்பினான். ஹாலின் சுவரில் இருந்த புகைப்படம் வெளியேறும் போதுதான் கண்ணில் பட்டது. காத்தவராயனும் காந்திமதியும் இளம் வயதில் எடுத்துக் கொண்ட புகைப்படம் அது. இருவரும் புன்னகையை குத்தகைக்கு எடுத்தது போல பற்களை காட்டி நின்றிருந்தனர்.

ஆனால் அதையும் தாண்டி ஒன்று குழம்பியது ஆதீரனுக்கு. காத்தவராயனின் இளம் வயது புகைப்படத்திற்கும் தனது இப்போதைய தோற்றத்திற்கும் இடையில் நிறைய ஒற்றுமை இருப்பதை அவனால் கவனிக்க முடிந்தது.

குழப்பத்தோடு அங்கிருந்து கிளம்பி போனான்.

ஹோட்டலின் முன்னால் ஜீப்பை நிறுத்தினார் காத்தவராயன்.

"சாரி பாப்பா.." என்றார் சங்கவியிடம்.

"இது என் விசிட்டிங் கார்ட்.." என்று ஆதீரனிடம் அட்டையை நீட்டினார்.

அவன் வாங்க மறுத்தான். அவனின் கையில் வலுக்கட்டாயமாக அட்டையை திணித்தார். அவனின் தலையை வருடி விட்டார். அவன் சட்டென்று பின்னால் நகர்ந்துக் கொண்டான். சிரித்தார் அவர்.

"முன்ன நீங்க வந்ததுதான் என் வீடு. இதே வழியில் ஆறு கிலோமீட்டர் போனா என் டீ தோட்டம் வரும். அந்த பக்கம் இடங்கள் அழகா இருக்கும். சுத்தி பார்க்க விரும்பினா தாராளமா வாங்க.." என்றவர் ஜீப்பில் ஏறினார். வந்த பாதையில் ஜீப்பை ஓட்டினார். சற்று தூரம் வந்த பிறகு ஜீப்பை நிறுத்தியவர் தன் இடது உள்ளங்கையை பார்த்தார். ஆதீரனின் தலைமுடி இருந்தது. பிளாஸ்டிக் கவரை தேடி எடுத்து அந்த முடியை பத்திரப்படுத்திக் கொண்டார்.

"உன்னை இனி எப்பவும் நம்பவே மாட்டேன் காந்தமதி.." என்றவர் தனக்கு தெரிந்த மருத்துவர் ஒருவரை பார்க்க கிளம்பினார்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே‌. எபி எப்படின்னு சொல்லுங்க. ஆதீரனின் தந்தை காத்தவராயன்னு நீங்க நினைக்கிறிங்களா?
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN